மதுரைப் பேராசிரியர்களின் 'என் பார்வை'க் கட்டுரைகளின் தொகுப்பிற்குத் திருப்பூர் தமிழ்ச் சங்க விருது

திருப்பூர் தமிழ்ச் சங்கம் தனது வெள்ளி விழா ஆண்டு நிறைவினை ஒட்டி கட்டுரை, கவிதை, நாவல், சிறுகதை, சிறுவர் இலக்கியம், ஆய்வு நூல் ஆகிய பிரிவுகளைச் சார்ந்த நூல்களுக்கு 05.02.2019 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி அளவில் புத்தகக் கண்காட்சி அரங்கில் இலக்கிய விருதுகளை வழங்கிச் சிறப்பித்தது. நிகழ்ச்சிக்குத் தலைமை விருந்தினராக வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் கல்விக் கோ டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக குன்றக்குடி ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு உரையாற்றினார். தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கோ.விசயராகவனும் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் அவ்வை அருளும் நடுவர்களாக இருந்து பரிசுக்குரிய நூல்களைத் தேர்வு செய்திருந்தனர்.

கட்டுரைப் பிரிவில் மதுரைப் பேராசிரியர்கள் இலக்கிய இணையர் இரா.மோகனும் நிர்மலா மோகனும் இணைந்து எழுதிய 'நல்லவை நாற்பது' என்ற நூல் பரிசினைப் பெற்றது. வானதி பதிப்பக வெளியீடான இந்நூல் 'தினமலர்' நாளிதழில் 'என் பார்வை' பகுதியில் பேராசிரியர்கள் இருவரும் எழுதிய 40 கட்டுரைகளின் தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.