கவிஞர் எழுத்தாளர் திரு.வித்யாசாகர் அவர்களுக்கு கலைமாமணி விருது...

கவிஞர் எழுத்தாளர் திரு.வித்யாசாகர் அவர்களுக்கு கலைமாமணி எனும் அதியுயர் விருது சம்மாந்துறையில் வழ்ங்கப்பட்டது.

தமிழா ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறை மண்ணில் களைகட்டிய மாபெரும் மாணவக் கவியரங்கம் சென்ற 24.02.2020 மாலை 3.00 மணிக்கு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் பாவலர் பசீல் காரியப்பர் நினைவரங்கில் வரலாற்றின் பெருந்தடமாக மாணவர் கவியரங்கம் நடைபெற்றது.

இக்கவியரங்கத்திற்கு தென்னிந்தியக் கவிஞர் எழுதாளர் பன்முக ஆளுமை உயர் திரு வித்யாசாகர் அவர்கள் தலைமை தாங்கி இருந்தமை சிறப்பம்சமாகும். சம்மாந்துறை வலயக்கல்விப் பிரிவுக்குட்பட்ட அனைத்து இடைநிலை, உயர்தரப் பாடசாலைகளையும் உள்வாங்கி கவியரங்கில் மாணவரைப் பங்கேற்கும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டது. மொத்தமாக ஐம்பது மாணவர்கள் கலந்து கொண்டனர். வித்யாசாகர்  நெறிப்படுத்தலில் 13 கவிஞர்கள் தெரிவு செய்யப்பட்டு அதில் 8 பேர் தொனிப் பொருளுக்குத் தக்கவாறு எழுதிய மாணவர்களின் கருத்தாழம், மொழியாட்சி, சமத்துவச் சிந்தனை, சமூகத்தின்பால் அக்கறை போன்றவை கவனத்திற் கொள்ளப்பட்டு அரங்கத்தில் கவிதை வாசிக்கும் தகுதியைப் பெற்று பட்டை தீட்டப்பட்டனர். ஏனைய ஐந்து கவிஞர்களும் சிறப்புக் கவிதைபாடும் தகுதிக்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இக்கவியரங்க நிகழ்வுகள் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசிய கீதத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பின் சர்வமத ஆராதனையுடன் தமிழ்த்தாய் வாழ்த்து, செம்மொழி வாழ்த்து என்பவை பாடசாலை மாணவர்களால் இசைக்கப்பட்டது. தொடக்க உரையை தமிழா ஊடகப் பணிப்பாளர் எஸ். முகம்மது ஜெலீஸ் நிகழ்த்தினார். இந்நிகழ்வின் முன்னிலை வகிபாவத்தை சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா ஆரம்பித்து வைத்தார். வரவேற்புரையை தமிழா ஊடக வலையமைப்பின் ஆலோசகர் மு.இ.அச்சிமுகம்மட் நிகழ்த்தினார். பாவலர் பசீல் காரியப்பர் நினைவுரை கவிஞர் மன்சூர் ஏ காதிர் அவர்களால் உரை நிகழ்த்தப்பட்டது. பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சம்மாந்துறை மண் களைகட்டியது. இதன் பின் சரியாக 5.00 மணிக்கு மாணவர் கவியரங்கம் இடம்பெற்றது. தலைமைக் கவிஞர் வித்யாசாகர் அவர்கள் மாணவர்கள் புடைசூழ அழைத்துவரப்பட்டமை காண்போர் மனதை நெகிழச் செய்தது.

பல்வேறு போட்டிகளிலும் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மூத்த கவிஞர் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் சேர் அவர்கள் நிகழ்வுகள் குறித்து உரை நிகழ்த்தினார். மூன்று கவிதை நூல்கள் அரங்கில் வெளியிட்டு வைக்கப்பட்டமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும். குறிப்பாக 50 மாணவச் செல்வங்களின் கவிதைகள் அடங்கிய 'துளிர்களின் பெருநிலம்' என்ற பெயரில் பணிப்பாளர் எஸ்.எம். ஜெலீஸ் அவர்களால் தொகுக்கப்பட்டு வெளியிட்டமை அனைவரதும் பாராட்டைப் பெற்றது. பன்முக ஆளுமை உயர் திரு வித்யாசாகர் அவர்களால் எழுதப்பட்ட 'ஞானமடா நீ எனக்கு' எனும் கவிதை நூல் மாணவர்களுக்கும் அதிதிகளுக்கும் வழங்கப்பட்டமை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மு.இ.அச்சிமுகம்மட் அவர்களால் 'எனது நிலமும் நிலவும்' எனும் கவிதை நூலின் முதல் பிரதி பன்முக ஆளுமை உயர் திரு வித்யாசாகர் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.


தமிழா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் திரு.செ.மு.ஜெலீஸ் அவர்கள் தனது அமைப்பின் சார்பாக ஏறக்குறைய இருபது வருடங்களுக்கும் மேலாக கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பின் பன்முகத்தன்மையைப் பாராட்டி கலைமாமணி எனும் அதிஉன்னத விருதை பன்முக ஆளுமை உயர் திரு வித்யாசாகர் அவர்களுக்கு சபையோர் முன்னிலையில் இலங்கை தேசத்தின் சார்பாக வழங்கி கௌரவித்தமை எல்லோருக்கும் பெருமிதத்தைத் தந்தது.

தமிழா ஊடகப் பணிப்பாளர் எஸ்.எம்.ஜெலீஸ் அவர்களின் மகத்தான பல வெற்றிப் பணிகளைப் பாராட்டி முகில் பதிப்பகத்தின் சார்பில் அதன் நிறுவனர் 'வெற்றி வேந்தன்' எனும் அதி உன்னத கெரவத்தை சபையோர் முன்னிலையில் வழங்கி கௌரவம் செய்தார். அத்துடன் தமிழின் தொன்மையை வெளிக் கொணரும் வகையில் கவிதைப் படைப்பிலக்கியத்தில் பங்காற்றியமைக்காகவும் பல படைப்புகளின் தமிழாழ தகுதி அறிந்தும் சபையோர் முன்னிலையில் கவிஞர் திரு. மு.இ.அச்சிமுகம்மட் அவர்களுக்கு 'சந்தக்கவி' எனும் நாமத்தைச் சூட்டி சபையோர் முன்னிலையில் கௌரவம் அளிக்கப்பட்டது.