கண்ணின் மணி நீயெனக்கு...

அகில்

 (1)

விடிந்து வெகுநேரமாகிவிட்டது. சூரியன் உச்சத்துக்கு வந்திருந்தான். முதல் நாள் இரவு நீண்டநேரம் பேசிக்கொண்டு இருந்ததால் எழும்புவதற்கு மனமில்லாமல் புரண்டு படுத்தான் சேகர். பயணக்களைப்பில் உடல் அலுப்பாக இருந்தது. அவன் கொழும்புக்கு வந்து சேர்ந்து அன்று இரண்டாவது நாள். நிலத்தில் விழுந்து கிடந்த போர்வையை எடுத்து கழுத்துவரை போர்த்திக்கொண்டு, 'இன்னுமொரு குட்டித் தூக்கம் போடுவம்' என்று நினைத்தபோது சமையலறையில் இருந்து கற்பகம் குரல் கொடுத்தாள்.

'என்னடா சேகர் என்னும் எழும்பவில்லையா? நேரம் பதினொன்டு ஆகுது.....'. தாய் கற்பகத்தை குறுக்கிட்டார் அப்பா முருகேசர்.

'பாவம் அவன்ர நித்திரையை ஏன் குழப்பிராய்? அங்க அவன் வேலை, வேலையென்டு இரவு பகல் பாராமல் உழச்சிருப்பான். இங்கயென்டாலும் பிள்ள கொஞ்சம் நிம்மதியா நித்திரை கொள்ளட்டும். அவனுக்கு கரைச்சல் குடுக்காத' என்றவர் தொடர்ந்தார்.

'கனடா நேரத்துக்கும் இலங்கை நேரத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்குது. இப்ப கனடாவில இரவு. அதுதான் அவனால எழும்ப ஏலாமல் இருக்குது' என்றபடி முருகேசர் மெதுவாக சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டார். மகன் வந்த சந்தோசத்தில் முருகேசரின் உடல்நிலை விரைவாகத் தேறியிருந்தது.

'நன்தே...... கிரி'

சிங்கள பால்க்காரப் பையன்; குரல் கொடுத்தான். கற்பகம் வந்து கதவைத் திறந்தாள்.

கதவைத் திறந்ததுதான் தாமதம் கற்பகத்தையும் தள்ளிக்கொண்டு, ஜிம்மி நேராக சேகரின் அறைக்குள் ஓடிவந்தது. கட்டிலில் பாய்ந்து சேகர் மீது தாவி விளையாடியது. அவனை நாக்கால் நக்கியது. நாய் என்றாலே சேகருக்கு கொஞ்சம் 'அலர்ஜி'. ஜிம்மியைக் கண்டதும் போர்வையை உதறியபடி துள்ளியெழுந்தான்.

'டேய் ஜிம்மி, அங்கால போ' சேகர்; விரட்டினான்.

பாலை வாங்கிக்கொண்ட கற்பகம் ஜிம்மியைத் தேடிக்கொண்டு அறைக்குள் வந்தாள்.

'ஜிம்மி இஞ்சால வா!'

அதிகாரமாய் ஒலித்தது கற்பகத்தின் குரல்.

போவதா, நிற்பதா என்ற தயக்கத்துடன் கற்பகத்தையும்;, சேகரையும் மாறிமாறிப் பார்த்த ஜிம்மி, லேசாக அணுங்கியபடி வாலை ஆட்டியது.

'ஏய் ஜிம்மி.... வா இங்கால! வரப்போறியா இல்லையா?'

சற்று கடுமையான  குரலில் கற்பகம் விரட்டவும், தொடர்ந்து அறைக்குள் நிற்கமுடியாமல் ஜிம்மி வெளியேறியது.

இதற்கு அப்புறமும் நித்திரை கொள்ளமுடியாது என்று தீர்மானித்த சேகர் கட்டிலைவிட்டு இறங்கினான்.

'சேகர் முகத்தக் கழுவிப்போட்டு வா....' மேசை மீதிருந்த பால்போத்தலை கையில் எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் நுளைந்தாள் கற்பகம்.

'ஒரேயடியா குளிச்சிட்டு வாரனம்மா. அப்பத்தான் அலுப்புத் தீரும்;'. சேகர் துவாயை  எடுத்துக்கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தான்;. உடம்பு ஒரே அலுப்பாக இருந்தது. முகத்துக்கு நேரே கைகளை நீட்டி, உடம்பை வளைத்து சோம்பல் முறித்தான்.

'ஷவரைத்' திறந்தபோது நீர் சில்லென்று இருந்தது. ஒரு பூக்கூடை நிறைய பூக்களை நிரப்பிக் கொட்டியது போல இதமாக நீர்த்துளிகள்; வந்து விழுந்தன.

குளித்து முடித்து தலையைத் துவட்டியபடி வெளியே வந்தான். மேசைமீது வைத்திருந்த புதுச்சாரத்தை எடுத்து கட்டிக்கொண்டான்.

விறாந்தையில் இருந்த  சாப்பாட்டுமேசையில் அவித்த புட்டையும், சுடச்சுடக் கத்தரிக்காய் குழம்பையும், பச்சைமிளகாய்ச் சம்பலையும் கொண்டுவந்து வைத்தாள் கற்பகம்.

'சேகர், முதல்ல சாப்பிடு. பிறகு ரீ ஊத்தித்தாரன்' சொல்லியபடி அன்புடன் பரிமாறினாள்;.

'அம்மா சமைச்ச சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு காலம்.' சேகர் ஆவலுடன் புட்டைக் குழைத்து வாயில் திணித்துக்கொண்டான். ரசித்துச் சாப்பிட்டான்.

'கொஞ்சம் காரமாக இருந்தாலும் அம்மாவின் கைப்பதமே தனிதான்'.

மகன் சாப்பிடுவதைக் கலங்கிய கண்களுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் கற்பகம்.

'நாட்டு நிலைமை மட்டும் நல்லா இருந்தா என்ர ஒரே செல்வத்தை நான் ஏன் பிரிஞ்சு இருக்க வேணும்' கற்பகத்திடம் இருந்து பெருமூச்சு ஒன்று வெளிவந்தது.

'அம்மா நீங்க சாப்பிட இல்லையா?' 

'இல்லையடா... இன்டைக்கு செவ்வாய்கிழமை'

கை கழுவி விட்டு வந்து சோபாவில் அமர்ந்து டீவியை ஓடவிட்ட மகனை  பாசத்தோடு நோக்கினாள் கற்பகம்.

சேகருக்கு உடம்பு பெருத்திருந்தாலும், கன்னக் கதுப்புகள் ஒட்டிப் போயிருந்தன. கண்களுக்கு அடியில் தசைகள் லேசாக உப்பி தொங்கிக் கொண்டிருந்தன. உதடுகளில் கருமை படிந்திருந்தது. சிகரெட்டுக்கும், மதுவுக்கும் அவன் அடிமை என்பதை அந்த அங்கலட்சணங்கள் பறைசாற்றின

'இங்க இருக்கிற கொஞ்ச நாளுக்குள்ள இவனைப் பழைய நிலைக்குக் கொண்டு வரவேணும். இப்படியே விட்டால் இவன் இன்னும் கெட்டழிஞ்சு நாசமாய் போயிருவான்'

கற்பகத்தின் முகத்தில் கவலையின் ரேகைகள் தோன்றி மறைந்தன. இதுதான் சமயம் என்று பேச்சை ஆரம்பித்தாள்;.

'சேகர்; சமாதானப் பேச்சுவார்த்தையும் இன்னும் எத்தனை நாளுக்கு நீடிக்குமோ தெரியாது. தொடர்ந்து நீ இந்த நாட்டுல இருக்கிறது நல்லதில்ல. உன்ன மாதிரி இளம் பொடியலுக்கு இந்த நாட்டில இப்போதைக்கு பாதுகாப்புக் கிடையாது. எந்த நேரம் என்ன நடக்குமோ தெரியாது. அடிக்கடி ரவுண்டப் என்டு சொல்லி பொடியலப் பிடிச்சுக்கொண்டு போறாங்கள். கண்காணாத இடமென்டாலும் பரவாயில்ல. நீ எங்கயென்டாலும் நல்லாயிருந்தா அது எங்களுக்கு போதும்' என்றாள் மகனின் தலையை பாசத்துடன் வருடியபடி கற்பகம். தாயை நிமிர்ந்து பார்த்து முறுவலித்தான் சேகர். அந்தப் புன்முறுவலையே தன் முகத்திலும் படரவிட்ட கற்பகம்,

'அதுக்குள்ள உன்ர கல்யாணத்தையும் முடிச்சு வைக்கவேண்டும்........' என்றாள் தீர்க்கமான குரலில்.

'உச்'சுக்கொட்டினான் சேகர்.

'அதுக்கு இப்ப என்ன அவசரம் அம்மா. முதல்ல அப்பாவுக்கு நல்ல சுகம் வரட்டும்'.

அவன் மனதில் பழைய நினைவுகள் வந்து நிழலாடின.

'ஏதோ கடவுள் புண்ணியத்தில இந்த முறை 'அற்றாக்கில' அவர் தப்பிப்பிழைச்சிட்டார் தம்பி. இனியும் உன்ர காரியத்த தள்ளிப்போட ஏலாது'

'அப்பாவும் ஆசைப்படுறார். நேற்றிரவு அப்பா உன்னைப் பற்றித்தான் சொல்லிக் கவலைப்பட்டவர். அந்த மனுசனுக்கு நீ தான் ஒரு ஆறுதலக் குடுக்கவேணும். உன்ன நினைச்சு நினைச்சுத்தான் நாங்க இங்க உருகிக்கொண்டிருக்கிறம்'.

கற்பகமும் சேகரை விடுவதாக இல்லை. எப்படியும் அவனை திருமணத்திற்குச் சம்மதிக்கச் செய்வதிலேயே அவள் குறியாக இருந்தாள்.

'அம்மா... உதைப்பற்றி பிறகு கதைக்கலாம் தானே.' சேகர் அலுத்துக்கொண்டான். கலியாணப் பேச்சு அவனுக்கு வேப்பங்காயாகக் கசந்தது.

'தம்பி திரும்பத் திரும்ப இதையே சொல்லிக்கொண்டிருக்காத. அங்கால அப்பாவின்ர காதில விழப்போகுது. எங்களுக்கும் வயசாகுது..... நாங்க கண்ண மூடுறதுக்கு முதல் உனக்கு செய்ய வேண்டியத செய்திட்டம் என்றால் எங்களுக்கும் நிம்மதி.......'

எழுந்து சென்று தாயை அணைத்துக்கொண்டான் சேகர்,

'ஏனம்மா இப்பிடியெல்லாம் பேசுறீங்க. உங்களுக்கு அப்பிடி ஒன்டும் நடக்காது. இந்தா நான் வந்திட்டன் தானே. இனி உங்களோடயே இருக்கிறன்'

தாய்க்கும் மகனுக்கும் இடையில் நடந்த உரையாடலை உள்வாங்கியபடி முருகேசர் வந்து விறாந்தையில் அமர்ந்தார்.

'இங்க நீ எங்களோட இருக்கவேணாம் தம்பி. நீ திரும்பவும் கனடா போக வேணும். உன்ர வாழ்க்கைய நீ பாக்கவேணும். காலாகாலத்தில உனக்கு கலியாணத்தையும் செய்து வச்சிட்டா எங்களுக்கு நிம்மதி. உன்ர வயசுல நான் கலியாணம் கட்டி, நீயும் பிறந்திட்டாய். நீ இன்னும் தனிமரமா இருக்க எங்களால விட ஏலாது'. தொடர்ந்து பேசியது சற்று களைப்பாக இருந்தது முருகேசருக்கு. நெஞ்சை மெதுவாக அழுத்திக்கொண்டார்.

'அப்பா நீங்க ஒன்டும் யோசிக்காதேங்கோ. எல்லாம் நல்லபடியா நடக்கும்' அப்பாவைத்  தேற்றினான் சேகர். அவரை எதிர்த்துப் பேசும் வழக்கம் அவனுக்கு ஒருநாளும் இருந்ததில்லை.

'புரோக்கர் கந்தசாமியரிட்ட தம்பியின்ர குறிப்புக் குடுத்தனாங்கள்  எல்லோ கற்பகம் பின்னேரம் ஒருக்கா, அவரைப் போய் பார்த்துட்டு வரவேணும். ஆட்டோக்காரத் தம்பிக்கு ஒருக்கா போன் பண்ணிச் சொல்லு.'; கதிரையில் சாய்;ந்து அயர்ச்சியுடன் கண்களை மூடிக்கொண்டார் முருகேசர்;.

அர்த்தம் பொதிந்த ஆழமான பார்வையொன்றை மகன் மீது வீசிவிட்டு, எழுந்து சமையலறையை நோக்கி நடந்தாள் கற்பகம்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு முருகேசருக்கு திடீரென்று நெஞ்சுவலி வந்துவிட்டது. ஒரே துணையாய் இருந்த கணவன் நெஞ்சை இறுகப்பற்றிக்கொண்டு வலியால் துடித்ததும் கற்பகம் பதறிப்போனாள்;. அவரை அவசரமாக ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு, கையோடு மகனுக்கு செய்தியனுப்பினாள். சேகர் உடனேயே செயலில் இறங்கிவிட்டான்.

அவனுடைய நண்பன் வசந்தன் சேகர் புறப்படுவதற்கான ஒழுங்குகளைக் கவனித்தான்.

கலியாண 'சீசன்' நெருங்கிக்கொண்டிருந்ததால் விமானச் சீட்டுக்கள் எல்லாம் ஏற்கனவே பயணிகளால் பதிவு செய்யப்பட்டிருந்தன. சேகர் இலங்கை வந்து சேர்வதற்கு ஒருவாரம் எடுத்து விட்;டது.

தன்னைப் பார்க்க மகன் பறந்தோடி வந்திருந்ததைக் கண்டதும் முருகேசருக்கு நோயில் பாதி அப்போதே மறைந்து போனது.

சேகர் முன்பு பார்த்ததை விட முருகேசர் சற்று இளைத்திருந்தார். மருந்தும் கையுமாக இருக்கும் தந்தைக்கு மேலும் மன உளைச்சலைக் கொடுக்க அவன் விரும்பவில்லை.

கடந்த ஐந்து வருடங்களாய் பிடிவாதமாய் ஒதுக்கி வைத்த கௌரியின் நினைவுகள் அவன் இலங்கையில் காலடிவைத்தது முதல் மெல்லத் தலைகாட்டத் தொடங்கின.

கௌரியைப் பார்க்க வேண்டும் போல் ஒரு உந்துதல்.

'கௌரி இப்போது எப்படி இருப்பாள்'. அவனால் அந்த நினைவை அகற்ற முடியவில்லை.

கரையை மறுபடி மறுபடி வந்து தொடும் அலைபோல அந்த நினைவுகள் நெஞ்சில்  முட்டிமோதின.

 

(2)

அன்று காயத்திரிக்கு காரியாலயத்தில் அதிக வேலை இருக்கவில்லை. அடுத்தவாரம் சேவா மன்றம் செய்ய வேண்டிய பணிகளை பட்டியலிட்டு மனேஜரின் கையொப்பத்திற்கு அனுப்பும்போது நேரம் நான்கரை காட்டியது.

அவள் வெள்ளவத்தையில் இருந்த சமூக சேவை அமைப்பொன்றில் எழுதுவினைஞராகப் பணிபுரிந்தாள். அந்த அமைப்பு அனாதைச் சிறுவர்களையும், நிர்க்கதியாகி நிற்கும் பெண்களையும், வயது முதிர்ந்தோரையும் பராமரித்து வந்தது. சமீபகாலமாக சுனாமி மீட்புப் பணியில் அர்ப்பணிப்புடன் பல சேவைகளை வழங்கியது. வேலை என்பதற்கு மேலாக தனது லீவு நாட்களிலும் அவர்களுக்கு தன் சேவையை வழங்கினாள் காயத்தரி.

ஒருவித பதட்டத்துடன் மேசையை ஒழுங்குபடுத்திவிட்டு, வோஷரூமிற்குள் நுளைந்து தன் முகத்தை சரிப்படுத்தினாள். லேசாகக் கலைந்திருந்த கூந்தலை வாரிவிட்டாள். வாடியிருந்த முகத்தைக் கழுவி மறுபடியும் 'பெயாரென் லவ்லி'யை பூசிக்கொண்டாள். உதடுகளுக்கு லிப்ஸ்டிக்கை கொண்டு நிறம் கொடுத்தாள். சற்று கசங்கியிருந்த சேலையின் தலைப்பை நீவி விட்டாள் அவளுக்கு திருப்தியாக இருந்தது.

கண்ணாடியில் கபிலன் வந்து சிரித்துவிட்டுப் போனான்.

அவனுக்காகத் தானே இவ்வளவு ஒப்பனையும்.....

பெண்பார் படலம் முடிந்து புறப்படும்போதே பெண்ணை பிடித்து விட்ட செய்தியை சொல்லிவிட்டுப் போனார்கள். அப்போது சித்திரை என்பதால் வைகாசி பிறந்த பின்னர் நாள் வைக்கலாம் என்று பெரியவர்கள் கூறிவிட கபிலனால் தாங்கமுடியவில்லை. காயத்திரி வேலைசெய்யும் இடத்தின் முகவரியை அறிந்துகொண்டு மறுநாள் முதல் பஸ் நிலையத்தில் அவளுக்காக காத்திருந்தான்;. அவன் வேலை செய்யும் வங்கியும் அந்த வழியில் இருந்தது அவனுக்கு வசதியாக இருந்தது.

முதலில் காயத்திரிக்கு தயக்கமாகத் தான் இருந்தது. அவன் தான் தைரியம் கொடுத்தான். அதுவும் சரியென்றே அவளுக்குப்பட்டது.

'அவர்களுக்குத் தான் கலியாணம் நிச்சயமாகிவிட்டதே. பிறகு ஏன் பயப்பட வேண்டும்?'

பஸ் நிலையத்தில் காத்திருப்பு தொடர்ந்தது. சந்திப்புக்கள் தொடர்ந்தன.

பம்பலப்பிட்டி சந்தியில் இருந்த அந்த சைவ உணவகத்திற்குள் கபிலன் நுளைந்தான். தயக்கத்துடன் அவனைப் பின்தொடர்ந்தாள் காயத்திரி. ஒரு வாரமாய் பார்த்துப் பரிச்சயமாகியிருந்த சர்வர்; பையன் புன்னகையுடன் வரவேற்றான்.

இரண்டு மசாலை வடை, இரண்டு கடலை வடை, தொட்டுக்கொள்ள சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்களில் சம்பலும் வைத்த தட்டை அவர்கள் முன் வைத்துவிட்டுப் போனான் பையன். தொடர்ந்து இரண்டு தேனீருக்கும் ஓடர் கொடுத்துவிட்டு காயத்திரியை ஏற இறங்கப் பார்த்தான்; கபிலன். நாணத்துடன் தலை குனிந்துகொண்டாள் அவள்.

'இன்டைக்காவது கொஞ்சம் வாய் திறந்து பேசலாம் தானே' கபிலன் கேட்க தயக்கமாய் பார்த்தாள் காயத்திரி.

அவளுக்கு பயமாக இருந்தது. 'யாராவது தெரிந்தவர்கள் பார்த்துவிட்டால்....'

'நான் நேரத்துக்கு வீட்ட போகவேணும்.....'

'நான் ஒன்டும் விழுங்கமாட்டன். பயப்படாதையும் பத்திரமா நீர் ;ப்ப இருக்கிறமாதிரி அப்பிடியே வீட்ட கொண்டு போய் விடுறன்' நமட்டுச் சிரிப்புடன் பதில் சொன்னான் கபிலன்.

அவனது குறும்பில் காயத்திரியின் கன்னங்கள் சிவந்தன. தொண்டைக்குள் இறங்க மறுத்த வடையை தேனீரைக் குடித்து முண்டிவிழுங்கினாள். கபிலன் ஏதேதோ பேசினான். ஓன்றிரண்டு வார்த்தைகளில் அவனுக்கு பதில் கொடுத்துவிட்டு அவசரமாக எழுந்தாள் காயத்திரி.

'இவ்வளவு பயமா...?' கிண்டலடித்தான் கபிலன்.

உண்மைதான். அவளுக்கு தாயை நினைக்க பயமாக இருந்தது.

இப்போதெல்லாம் அவள் நேரம் தாழ்த்தி வருவதன் காரணம் தாய் ராஜேஸ்வரிக்குத் தெரியாமலில்லை. இன்னும் கலியாணத்திற்கு நாள் குறிக்கவில்லையே.

'கலியாணம் பேசி முடிக்கிறதுக்குள்ள என்ன அவசரம்?' என்று புறுபுறுப்பாள். அத்தோடு சரி. அதையே தாயின் அங்கீகாரமாக ஏற்றுக்கொண்டாள் காயத்திரி.

எவ்வளவு மறுத்தும் பிடிவாதமாய் அவளைத் தன் மோட்டார் வண்டியிலேயே ஏற்றிவந்து வீட்டுக்கு சற்றுத் தொலைவில் இறக்கிவிட்டுச் சென்றான் கபிலன். வருங்காலக் கணவன் கொடுத்த தைரியம் மெல்ல மெல்ல காற்றில் பறக்க வீட்டை நெருங்கினாள் காயத்திரி.

 

(3)

பொழுது மெதுவாக இருட்டத் தொடங்கியது. மணி ஆறு இருக்கும். கோயில் மணி, ஒலியெலுப்பி எல்லோரையும் அழைத்தது. முகம் கழுவி உடை மாற்றிக்கொண்ட சேகருக்கு வீட்டுக்குள் சும்மா உட்கார்ந்திருந்து அலுத்துவிட்டது. தாயிடம் சொல்லிவிட்டு  வெளியில் நடக்கக்கிளம்பினான்.

'பக்கத்தில தான்; கோயில் இருக்கு. விருப்பமென்டால் பொயிட்டு வாவப்பு' என்றாள் கற்பகம்.

அவர்கள் இந்த புதிய வீட்டுக்கு வந்து இரண்டு வருடங்கள் தான் ஆகிறது. சேகர் வெளிநாட்டில் உழைத்து அனுப்பிய பணத்தில் அவனுக்கு எதிர்காலத்தில் பயன்படட்டுமே என்று முருகேசர் விற்பனைக்கு விடப்பட்டிருந்த அந்த வீட்டை வாங்கினார். முன்பிருந்த தெருவுக்கு பக்கத்து தெருவிலேயே வீடு கிடைத்ததில் அவருக்கு மிகவும் திருப்தி.

இந்திய இராணுவம் யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்டிருந்த அந்த நாட்களில் பிடிக்க வேண்டியவர்களுடைய கால்களையெல்லாம் பிடித்து தனது வேலையை கொழும்புக்கு டிரான்ஸர் வாங்கிக் கொண்டார். கற்பகத்தையும், உயர்தரப் பிரிவில் படித்துக்கொண்டிருந்த சேகரையும் அழைத்துக்கொண்டு  பம்பலப்பிட்டியில் ஒரு வாடகை வீட்டில் குடித்தனம் தொடங்கியவர் தான் அதன் பின் யாழ்ப்பாணப் பக்கம் அவர் தலை காட்டவேயில்லை.

கடற்காற்று இதமாய் வருடிச் செல்ல அந்தச் சாலையில் நடந்து செல்வதே அற்புதமாக இருந்தது சேகருக்கு. தாய் மண்ணின் காற்று என்ற உணர்வில் உடல் சிலிர்க்க நன்றாக மூச்சை இழுத்து விட்டான்.

அவன் கனடாவுக்குப் புறப்பட்ட சமயம் குட்டிக்குட்டி குடிசைகளாக இருந்த வீடுகள் எல்லாம் விண்ணை முட்டும் பிளாட்டுகளாக மாறியிருந்தன.

'கொழும்பு கூட எவ்வளவு முன்னேறிவிட்டுது...'.

சில கடைத்தெருக்களைப் பார்க்கும்போது ஏதோ வெளிநாட்டு சிற்றி ஒன்றில் நிற்பதைப் போல அவனுக்குத் தோன்றியது.

'_ம்.......  ஒரு பக்கம் உடைஞ்சு தரைமட்டமாகிக் கொண்டு போக ஒருபக்கம் நல்லா முன்னேறிக்கொண்டு போகுது'.

பெருமூச்சு ஒன்று வெளிவந்தது சேகரிடமிருந்து. சிந்தனைகள் அவனையும் மீறி எங்கெங்கோ சுழன்றுகொண்டிருந்தது.

யாரையும் நிமிர்ந்து பார்க்கக்கூட நேரமற்று, வீடுகளுக்கு விரைந்து கொண்டிருந்தது அலுவலகங்களில் தமது கடமைகளை முடித்த உழைப்பாளிகள் கூட்டம். சிலர் கண்களில் அவசரத்தோடு, ஏதோ ஒரு இனம்புரியாத அச்சமும் தென்படுவதாக சேகருக்குத் தோன்றியது. 'எந்த ஒரு பயமும் இல்லாமல் இந்த வீதிகளில் நடந்துதிரிகிற காலம் வராதா? 'என்ற ஏக்கம் அவனுள் எழுந்து நெஞ்சை அழுத்தியது.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு கோயில் ரொம்பவும் மாறியிருந்தது. சுத்து மதில் கட்டப்பட்டு மகா மண்டபமும் அழகாக அமைக்கப்பட்டிருந்தது.

முதலில் பிள்ளையார் சன்னதிக்கு முன் சென்று, மூன்று தரம் குட்டிக் கும்பிட்டு விட்டு, மூலஸ்தானத்துக்கு முன் வந்து அம்மனைக் கும்பிட்டான். அம்மனுக்கு அபிசேகம் நடந்துகொண்டிருந்தது.

பூசை முடிய இன்னும் நேரமாகலாம் என்று தோன்றியது. கோயில் உள்வீதியில் மெல்ல நடைபயின்றான் சேகர். அனுபவிக்கத் தவறிய சொர்க்கம் ஒன்றை மீண்டும் அனுபவிப்பதற்காக தன்னை அந்தக் கடவுள்தான் இழுத்து வந்திருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அப்பொழுதுதான் அந்த இனிமையான குரல் சேகரின் காதுகளில் வந்து மோதியது.

'வைன்' கொடுத்த பொம்மையைப் போல ஆலயத்தின் உள்ளே சென்ற சேகர் அங்கு நடந்துகொண்டிருந்த பஜனைக் கூட்டத்தின் முன்னர் அமர்ந்துகொண்டான். சில நிமிடங்களில் அந்த இனிமையான சங்கீத சாகரத்துள் அவன் உள்ளம் கரைந்து போனது.

ஒரு பெண் மிகவும் இனிமையாக பாடிக்கொண்டிருந்தாள்.

'ஆகா... என்ன குரல், என்ன இனிமையான குரல்' என்று தனக்குத் தானே  பலமுறை கூறிக்கொண்டான். குரலைப் போலவே பாடுபவளும் அழகாக இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. சேகருக்கு என்னவோ அந்த அம்மனே வந்து தன் எதிரில் அமர்ந்து பாடிக்கொண்டிருப்பது போல இருந்தது.

நேரம்போவது தெரியாமல் அவளது பாடலையும் அவள் பாடும் அழகையும் இரசித்துக் கொண்டிருந்தான்;.

மணியோசையைத் தொடர்ந்து திரை நீக்கப்பட, அலங்காரம் செய்யப்பட்ட அம்மன் அழகு சொரூபமாகக் காட்சியளித்தாள். கற்பூர ஆரத்தியைத் தொடர்ந்து பூஜை முடிவுக்கு வந்தது.

ஐயர் எல்லோருக்கும் தீர்த்தமும், விபூதியும் கொடுத்தார்;. சேகர்; பவ்வியமாகக் கைகளை நீட்டிப் பெற்றுக் கொண்டான்.

'இந்தாங்க தம்பி பிரசாதம். அம்மாவுக்கு கொண்டுபோய் குடுங்க' ஐயர் தேங்காய் மூடியில் வைத்த சர்க்கரைப் பொங்கல் பிரசாதத்தை அவனிடம் கொடுத்தார். எல்லாம் கனவிலே நடப்பது போல அவனுக்குத் தோன்றியது. அவன் காதுகளில் அந்தப் பெண்ணின் இனியான கானமே நிறைந்திருந்தது.

படுக்கைக்குச் சென்று வெகுநேரம் வரை தூக்கம் வராமல் புறண்டு கொண்டிருந்தான் சேகர். கோயிலில் கேட்ட பாடலின் இனிமை அவனுக்கு கௌரியை நினைவுபடுத்தியது. உறக்கத்தை மறந்து அவன் உதடுகள் 'கௌரி.... கௌரி....' என்று முணுமுணுத்தன.

'கௌரியும் இப்படித்தான் அழகாகப் பாடுவாள். அவள் இனிமையான குரலை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.'

தூக்கம் மறந்த கண்களுக்குள் கௌரி வந்து குடியேறினாள்.

(4)

அன்று கௌரிக்குப் பிறந்தநாள். காலையில் எழுந்ததும் அவசர அவசரமாக தன்னை அழகுபடுத்திக்கொண்டு சேகரைக் காணவேண்டும் என்ற ஆவலில் பல்கலைக்கழகத்திற்குப் புறப்பட்டிருந்தாள். சேகர் வருவதற்குத் தான் தாமதமானது.

'எங்; அவரை இன்னும் காண இல்லை' கௌரியின் விழிகள் அவனை வலைவீசித் தேடின. வழமைபோல் நூல் நிலையம் முன்பாகப் போடப்பட்டிருந்த பெஞ்சின் மீது அமர்ந்திருந்தாள். காத்திருந்து நேரம் தான் போனதே தவிர சேகர் வரவில்லை.

'ஹெப்பி பேர்த்டே ரூ யூ கௌரி.' கவிதா அவளின் கரங்களைப் பற்றிக் குழுக்கினாள்.

'தாங் யூ கவிதா'

'நான் இன்டைக்கு வெயிட் பண்ணுவன் என்டு தெரியும். அப்பிடி இருந்தும் சேகர் ஏன் லேட் பண்ணுறார்.....' யோசனையாய் கவிதாவுடன் அவள் உதடுகள் பேசின. அவள் விழிகள் சேகர் வரும் வழியை நோக்கித் தவமிருந்தன.

கவிதாவுடன் சிறிதுநேரம் நின்று அவன் வரவுக்காக காத்திருந்தாள். சேகர் வரவேயில்லை.

வகுப்புத் தொடங்கும் நேரம் நெருங்கிவிடவே இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

அவளுக்கு வகுப்பில் இருப்புக்கொள்ளவில்லை. அன்று சேகரைப் பார்க்காதது அவளை மிகவும் வாட்டியது. இரண்டு வகுப்புக்கள் முடிந்த இடைவேளையில் மெதுவாக எழுந்து வெளியே வந்துவிட்டாள்.

கன்னத்திற்கு கைகளை முண்டு கொடுத்து, நூல் நிலையத்திற்குப் பின்புறமாக இருந்த 'பென்ச்'சில்; அமரந்திருந்தாள் கௌரி. அவளுக்கு அழுகை வெடித்துக்கொண்டு வந்தது. கட்டுப்படுத்திக்கொண்டாள்.

'எழுந்து போவோமா' என்று நினைத்த வேளை பின்புறமிருந்து குரல் வந்தது.

'கௌரி...' திடீரென சேகரின் குரல் அருகில் கேட்க தன் சிந்தனைகளில் இருந்து விடுபட்டாள் கௌரி.

'ஹெப்பி பேத் டே டூ யூ கௌரி'

தன் கைகளை நீட்டிய சேகரை முறைத்தாள்  கௌரி. கோபத்துடன் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள். புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு நடக்கத்தொடங்கினாள்.

'ஏய் என்ன கௌரி. நில்லும் பிளீஸ்....' கேளாதவள் போல் நடந்தாள் கௌரி. குறுநகையுடன் பின்தொடர்ந்தான் சேகர்.

'கௌரி. இப்படி என்னக் கண்டவுடன ஓடுறதுக்காகவா இவ்வளவு நேரமும் இங்க வெயிட் பண்ணினனீர்? கொஞ்சம் நில்லுமன்'

'இப்பத்தான் உங்களுக்கு என்ர ஞாபகம் வந்ததோ' கௌரி கடுப்பாகக் கேட்டாள்.

'ஓகே.... ஓகே. நான் லேட்டாக வந்ததற்கு சொறி கௌரி' அசடு வழிந்தான் சேகர்.

'என்னோட கதைக்க வேண்டாம்'

'சரி சரி. பிழை என்னில தான். நான் ஒத்துக்கொள்ளுறன்;. வேணுமென்டால்..... பத்துத் தோப்புக்கரணம் போடவா' சேகர் கைகளால் காதைப் பிடித்தபடி தோப்புக்கரணம் போடுவதாக பாவனை செய்தான்.

'இதுக்கொன்டும் குறைச்சல் இல்ல' அவளால் சிரிக்காமல் இருக்கமுடியவில்லை.

'உமக்கு ஒரு கிவ்ற் வாங்கித்தர நினைச்சன்;. அதுதான் கொஞ்சம் லேட்டாகிவிட்டுது. சொறி கௌரி' என்றான் சேகர் மீண்டும் குழைவாக.

அவன் பல நாட்களாகவே போட்ட திட்டம் அது. அறிவிப்புப் பலகையில் மாணவர்களுக்கான அடுத்த கட்ட மானியப்பணக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக போடப்பட்டிருந்தது. அத்தோடு அப்பா செலவுக்குத் தந்த பணம், தன் சேமிப்பு என்று எல்லாவற்றையும் கணக்குப் பார்த்து திட்டமிட்டான்;.

காலையில் வங்கியில் போய் நின்ற சேகர்; அயர்ந்து போனான். நீண்ட மாணவர் வரிசையில் அவனும் சேர்ந்துகொண்டான். நேரம் போகப்;போக கௌரி தனக்காகக் காத்து நிற்பாளே என்று மனம் அடித்துக்கொண்டது. ஆற்றாமையோடு அன்றைய விரிவுரைகளையும்; புறக்கணித்து விட்டு கடமையே கண்ணாக இருந்தான். அதுதான் தாமதத்திற்குக் காரணம்.

 'என்ன கிவ்ற்' ஆவலுடன் கண்களை விரித்தாள் கௌரி.

'அது ரகசியம்;. நீர் முதல்ல என்னோட வாரும்' அவளது கரத்தைப் பற்றி இழுக்காத குறையாக அழைத்துச் சென்றான் சேகர்.

இருவரும் வளாகத்தை விட்டு வெளியேறினர். எதிர்ப்புறமாக ஆட்டோ ஒன்று வர அதை மறித்து ஏறிக்கொண்டார்கள்;.

'எங்க போகவேணும் ஆட்டோக்காரப் பெரியவர் குறுகுறுக்கும் பார்வையை மறைத்தபடி கேட்டார்.

'செட்டி ஸ்ரீட்டுக்கு விடுங்க'

ஆட்டோ பறந்தது.

அவள் கோபமெல்லாம் எங்கோ ஓடி மறைந்துகொண்டது. மனதில் புதுவித உற்சாகம் பிறந்தது. சேகரின் பக்கமாக சாய்ந்து அமர்ந்துகொண்டாள். அவள் முகத்தில் வெட்கப் புன்னகை பரவியது.

 'இதில நிப்பாட்டுங்க' சேகரின் குரல் அவளை நிஜ உலகத்திற்கு அழைத்துவந்தது.

அவர்கள் நகைக்கடை ஒன்றின் முன்பாக நின்றுகொண்டிருந்தனர்.

இருவரும் ஒரு நகைக்கடைக்குள் நுழைந்தனர்.

மத்தியானப் பொழுதாகையால் கடையில் கூட்டம் குறைவாக இருந்தது. அஜானுபாகுவாக கதிரையை நிறைத்து அமர்ந்திருந்தவர் இவர்களைக் கண்டதும் முகம் நிறைந்த புன்னகையுடன் வரவேற்றார். காலையில் கடையைத் திறந்தவுடன் பக்தி சிரத்தையுடன் லெட்சுமி பூஜை செய்து, நெற்றியில் பட்டையாக திருநீறு இட்டிருந்தார். வாய் நிறைய வெற்றிலை போட்டு உதடுகள் சிவந்திருந்தன. முகம் லெட்சுமி கடாட்சமாக ஒரு பொலிவு தெரிந்தது.

சேகர் சொன்னபடி நகைகளை எடுத்து வைத்தான் பையன். ஒவ்வொன்றையும் ஆசையாக எடுத்துப் பார்த்தாள் கௌரி. அப்பொழுது கடைப்பையன் அடுக்கிக்கொண்டிருந்த கைச்சங்கிலி ஒன்றின் மீது அவள் பார்வை விழுந்தது. கௌரி அதை வாங்கித் தன் கைகளில் வைத்து அழகு பார்த்தாள்.

'இந்த டிசைன் புதுசா இருக்குது.....'

'இது இன்டைக்கு விடியத்தான் கடைக்கு புதுசாக வந்தது' கடைப்பையன் பதிலளித்தான்.

கௌரி அதை தன் கைகளில் அணிந்து பார்த்தாள். அவளது உருண்டைக்கைகளுக்கு அது மிகவும் அழகாகத் தான் இருந்தது. ஆனால் அதை வாங்கிக்கொடுக்கும் சக்திதான் சேகருக்கு அப்போது இருக்கவில்லை.

'எப்பிடி இருக்குது சேகர்' தன் கையை நீட்டிக் காண்பித்தாள் கௌரி.

'நல்லா இருக்குது கௌரி............' என்றவன் கௌரி ஏதோ சொல்ல வாயெடுக்க தானே முந்திக்கொண்டான் சேகர்.

'கௌரி நாங்க இந்தச் செயினை எடுப்பம். பிறகு கைச்செயினைப் பற்றி யோசிக்கலாம்' அவள் காதுகளுக்கு அருகே முணுமுணுத்தான். மெதுவாகக் கிசுகிசுத்தாலும் அவன் குரல்; சற்று கடுமையாக ஒலித்தது கௌரிக்கு. சேகரின் முகம் இறுகிப்போயிருந்ததை அவள் கடைக்கண் பார்வையில் கண்டுகொண்டாள். காற்றுப்போன பலூன்போல அவள் உற்சாகம் எல்லாம் வடிந்துபோனது.

சேகர் காட்டிய சங்கிலியையும், 'பென்றனை'யும் ஒரு ஊதா நிறப் பேப்பரில் சுற்றிக் கொடுத்தார் முதலாளி. பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தான் சேகர்.

கௌரி மிகவும் அமைதியாக இருந்தாள். அவள் எண்ணமெல்லாம் அந்த கைச்சங்கிலி மீதே இருந்தது. தான் கேட்டு சேகர் வாங்கித் தராதது அவளுள் வெறுப்பாக இருந்தது. கோபமும், கவலையும் அப்படியே வார்த்தைகளில்; வெளிப்பட்டன.

'வீட்டில ஒரே பிள்ளை என்றதும் நான் தான் பெரிசா கற்பனபண்ணிப் போட்டன்;' கௌரியின் முகம் களை இழந்து தெரிந்தது. சிரிப்பு எங்கோ ஓடி ஒளிந்துகொண்டது.

'என்ன கௌரி இப்படிச் சொல்லுறீர்?' சேகர் அவள் கோபத்தை எதிர்பார்க்கவில்லை. தன் பரிசை ஆவலாய், ஆசையாய் ஏற்றுக்கொள்ளுவாள் என்றுதான் நினைத்திருந்தான்.

'பின்ன என்ன? நான் ஆசப்பட்டுக் கேட்டா அதக்கூட உங்களால வாங்கித்தர ஏலாமல் இருக்குதே'

'கௌரி பிளீஸ் நிலமையப் புரிஞ்சுகொள்ளும்'

'.............................'

'என்னால இப்போதைக்கு உமக்கு ஒரு சின்னக் கிவ்ற்தான் இது' சேகர் கௌரியை சமாதானப்படுத்தினான்.

'பிறகு நேரம் வரும்போது என்ர அழகு தேவதைய நான் தங்கத்தாலேயே குளிப்பாட்ட மாட்டேனா' காதலியை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தவென்றே சினிமா வசனம் பேசினான்.

பிரபலமான குளிர்பானக்கடை ஒன்றுக்குள்; இருவரும் நுளைந்தனர். சேகர் கடைப்பையனிடம் அவளுக்கு விருப்பமான 'ஐஸ்கிறீம்' இரண்டுக்கு ஓடர் கொடுத்து விட்டு காத்திருந்தான்.

கடையில் ஒதுக்குப்புறமான இடமாகப் பார்த்து இருவரும் அமர்ந்துகொண்டனர். உள்ளே அவர்களைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. கௌரியின் கைகளில் இருந்த கவரைப்பிரித்த சேகர் அந்தச் சங்கிலியை அவள் கழுத்தில் தானே மாட்டிவிட்டான்.

கடைப்பையன் ஒரு தட்டில் சேகர் 'ஓடர்' செய்த 'ஐஸ்கிரீமை' ஏந்திவந்தான். அவனிடம் மேலும் சில சிற்றுண்டிகளுக்கு ஓடர் கொடுத்தான் சேகர்.

'கௌரி, இந்தச் சங்கிலி உம்மட கழுத்துக்கு சூப்பரா இருக்குது'

சேகரை நிமிர்ந்து பார்த்தாள் கௌரி. அவன் பார்வை சென்ற இடத்தைப் பார்த்ததும் வெட்கத்துடன் தலை குனிந்தாள். அவளுள் இனம் புரியாத இன்ப உணர்வொன்று உடல் முழுவதும் ஊடுறுவிப் பாய்ந்தது.

'கோபப்பட்டாலும் என்ர கௌரி அழகுதான்' கௌரியை நெகிழவைத்தன அவன் வார்த்தைகள்.

'சரி சரி. ஐஸ்கிரீம் உருகி ஓடப்போகுது' தன் கன்னம் குழிவிழச் சிரித்தபடி ஐஸ்கிரீமை ருசி பார்க்கத்தொடங்கினாள் கௌரி. இயல்பிலேயே கலகலப்பான கௌரி சிரித்துப் பேசவும் நிம்மதியுற்றான் சேகர்.

அன்றும் அவர்கள் வழமையாகச் செல்லும் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு சென்றனர். அடர்ந்த மரங்கள் நிறைந்த அந்தப் பகுதி காதலர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. நிழல்படிந்த பூங்கன்றுகளுக்கு அடியில் இருவரும் தஞ்சமடைந்தனர். சேகரின் தோள்களில் தலைசாய்த்து அமர்ந்திருந்தாள் கௌரி. அவளது மிருதுவான கேசத்தை சேகரின் விரல்கள் வருடிக்கொண்டிருந்தன. சேகர் வற்புறுத்திக் கேட்க கௌரி அவனுக்காக ஒரு சினிமாப்பாடலின் சில வரிகளை மெல்லிய குரலில் பாடிக்காட்டினாள். 'காதோடுதான் நான் பாடுவேன்.... மனதோடுதான் நான் பேசுவேன்......' எல். ஆர். ஈஸ்வரியே தன் அருகில் அமர்ந்து பாடுவது போல இருந்தது. அந்தப் பாடல் இப்போதும் அவன் காதுகளில்; ரீங்காரமிட்டது.

'அப்பவே நான் கௌரிய எடை போட்டிருக்க வேணும். காதலுக்கு கண்ணில்ல என்டுறது எவ்வளவு உண்மை. அவளுன்ர அவாப் பிடிச்ச நெஞ்சு அப்ப என்ர கண்ணுக்கு தெரியாமல் போச்சுது.'

மீண்டும் அவள் பாடிய பாடல் காதுகளில் ஒலித்தது. பக்கத்தில் இருந்து பாடுவது போலவே இருந்தது சேகருக்கு.

அந்தப் பேதையின் குரல் தந்த போதையில்; மெதுவாய் உறங்கிப் போனான் சேகர்.

 (5)

'என்ன ராஜேஸ் பலமான யோசனைபோல' மகாவின் குரல் ராஜேஸ்வரியின் சிந்தனையைக் கலைத்தது.

பெரிய கரைபோட்ட காஞ்சிபுரம் சேலை ஒன்றை சுற்றியிருந்தாள் மகா. வெள்ளையும் சிவப்புமாய் கற்கள் பதித்த பெரிய தோடுகள் அவள் காது மடல்களை மறைத்தன. கறுப்பு மணிகள் போட்ட ஒரு சங்கிலியும், பட்டையாய் சிங்கப்பூர் செயின் ஒன்றும் அவள் கழுத்தை நிறைத்திருந்தது. கைகளில் நான்கைந்து சோடி வளையல்களை அடுக்கியிருந்தாள். வெளிநாட்டு சென்டின் வாசம் அவள் உடல் முழுதும் கமகமத்தது

'இதெல்லாம் இந்த வயதில் தேவைதானா'.

மகாவை ஒரே பார்வையில் அளந்த ராஜேஸ்வரி மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

'வா மகா' வாஞ்சையுடன் அவளைத் தழுவி வரவேற்றாள் ராஜேஸ்வரி.

மகாவுக்காகத்தான் ராஜேஸ்வரி இவ்வளவு நேரமாகக் காத்திருந்தாள். பஞ்சாட்சரம் சாஸ்திரியாரிடம் தன் மகளின் குறிப்பைக் கொடுத்திருந்தாள் மகா. ராஜேஸ்வரிதான் அவளுக்கு சாஸ்திரியாரை அறிமுகப்படுத்தினாள். கனகாலமாக இழுபட்டுக்கொண்டிருந்த காயத்திரியின்ர சாதகத்திற்கு அவர்தான் கபிலன்ர சாதகத்தை தேடிக்கண்டு பிடிச்சுத் தந்தவர்.

மகாவும், ராஜேஸ்வரியும் சாத்திரியாரைப் பார்த்துவரப் புறப்பட்டனர்

மகாலட்சுமியும், ராஜேஸ்வரியும் சிறு வயது முதல் பள்ளித் தோழிகள். ஒரே அயல். பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு மகாவிற்கு அவள் அப்பா கொழும்பில் வியாபாரம் செய்துகொண்டிருந்த ஒருவனுக்கு திருமணம் செய்துகொடுத்து அனுப்பிவிட இவர்கள் நட்பு பாதியில் நின்றுபோனது.

இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரி மார்க்கட்டுக்கு போய்விட்டு வந்துகொண்டிருந்தாள். அவளை மோதிவிடுவது போல் அருகில் வந்து ஆட்டோ ஒன்று நிற்க, அதிலிருந்து இறங்கினாள் மகா.

மகா தான் முதலில் அடையாளம் கண்டிருந்தாள். ராஜேஸ்வரிக்கு ஆள் அடையாளம் தெரியவில்லை. முகத்தில் தெரிந்த பணக்காரக் களை மகாவின் வயதை ஒரு பத்துவயது குறைத்துக்காட்டியது. வயதின் முதிர்ச்சி எதுவும் அவளில் தெரியவில்லை. உடலில் புதிதாய் ஒரு மினுமினுப்புத் தெரிந்தது.

'என்ன அப்படிப் பார்க்கிறாய்? என்னைத் தெரியவில்லையா? நான்தான் மகா'

கையிலே ஒரு 'கேன்பாக்'. உதடுகளில் லேசான லிப்ஸ்டிக். தலைமுடியை குட்டையாக்கி அதற்கு ஒரு கிளிப்பை மாட்டியிருந்தாள். காலில் மாட்டியிருந்த ஹை ஹீல்ஸ் அவளது உயரத்தை அதிகரித்துக்காட்டியது.

'மகாவா இவள்' ராஜேஸால் நம்பமுடியவில்லை. மனம் பொறுக்கவும் இல்லை. தன் கல்வீட்டுக்கு பக்கத்தில் ஓலைக்குடிசையில் வாழ்ந்து, குடித்துவிட்டு வரும் அப்பாவின் தொல்லைகளுக்கு மத்தியில், எப்போதும் எண்ணெய் பிசுக்குத் தலையும், அழுமூஞ்சியுமாய் தன்னுடன் பழகுவதற்கே கூச்சப்பட்டுக்கொண்டிருந்த மகாவா இவள்.

மகா தன் இளையமகளுக்கு மும்முரமாக வரன் தேடிக்கொண்டிருந்தாள். அதற்காகத் தான் லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்திருந்தாள்.

புதிய பிறவி எடுத்தவள் போல் தன் முன்னே வந்துநின்ற மகாவைப் பார்க்க வியப்புத்தான் ராஜேஸ்வரிக்கு. இடையில் முறிந்த நட்பு மீண்டும் புதுப்பொலிவுடன் துளிர்க்கத் தொடங்கியது. சிலோனுக்கு தனியாக வந்திருந்த மகாவுக்கு சகலமும் அவளேயானாள்.

மகாவுக்கு மூன்று பெண்கள். கடைக்குட்டி மகன். இரண்டு பெண்களில்; ஒருத்தி லண்டனில், ஒருத்தி கனடாவில் என்று குடித்தனம் நடத்தினர். தாயை மூத்த மகள் ஸ்பொன்சர் செய்து லண்டனுக்கு எடுத்துவிட மெல்ல மெல்ல ஒவ்வொருவராக வெளிநாட்டில் வந்து குடியேறினர். கடைக்குட்டி லண்டனில் படித்துக்கொண்டிருந்தான். அவளுக்கென்ன மகாராணி போலவே அவள் வாழ்க்கை ஓடியது. அரசாங்கம் ஓய்வூதியம் கொடுத்தது. தாராளமாக செலவு செய்தாள். பிள்ளைகளும் அவ்வப்போது தாயைக் கவனிக்கத் தவறவில்லை. லண்டன், பாரிஸ், சுவிஸ், சிங்கப்பூர் என்று உலகம் சுற்றினாள். புதிய நண்பர்களுடன் சேர்ந்து இரண்டு தடவை இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் போய் வந்தாள். இதையெல்லாம் மகா ராஜேசிடம் பெருமையாய்ச் சொல்லியிருந்தாள்.

மேசையில் மின்விசிறி சுழன்றுகொண்டிருந்தது. அடுக்கடுக்காய் ஏதேதோ நிறையப் புத்தகங்கள். கலண்டர்கள். மஞ்சள் அட்டைபோட்ட பஞ்சாங்கங்கள் நான்கைந்து கைக்கெட்டும் தூரத்தில் சிதறிக்கிடந்தன.

நெற்றியில் பட்டை. ஒரு ரூபாய் குற்றியளவில் சந்தனப் பொட்டு. அதன்நடுவில் குங்குமம். தொந்தி வயிறு. வெற்றிலைக் காவி படிந்த பற்கள். சாஸ்திரியார் அந்த ஆண்டு பஞ்சாங்கத்தைப் புறட்டிக்கொண்டிருந்தார். அரை மணித்தியாலத்தின் பின்னர் காயத்திரியின் திருமணத்திற்கு இரண்டு முகூர்த்த நேரங்களை குறித்துக்கொடுத்தார்.

 'அப்பப்பா என்ன புளுக்கம் எப்பிடித்தான் நீங்களெல்லாம் இந்த நாட்டில சீவிக்கிறீங்களோ தெரியாது' மகா முகத்தைக் கோணியபடி அருகில் கிடந்த மட்டை ஒன்றை எடுத்து விசிறத் தொடங்கினாள்.

'ஏதோ வெளிநாட்டிலேயே பிறந்து வளர்;ந்தவள் போல எல்லோ நடிக்கிறாள்;' ராஜேஸ்வரிக்கு எரிச்சலாக இருந்தது.

சாத்திரியார் காட்டிய இரண்டு வரன்களும் மகாவுக்குப் பிடிக்கவில்லை.

'என்ர பிள்ளையள் எல்லாம் வெளிநாட்டில இருக்குதுகள். அவளும் லண்டன்ல இருக்கிறாள். வெளிநாட்டு மாப்பிள்ளை என்டால் நல்லம். இங்க இருக்கிற பிள்ளையென்டால் மகள் கலியாணம் முடிச்சு, மாப்பிள்ளையை ஸ்பொன்சர் பண்ணி எடுக்கிறதென்டால் நாளெடுக்கும்.' என்றவள் மீண்டும் அந்த மட்டையை எடுத்து விசிறியபடியே பேச்சைத் தொடர்ந்தாள்.

'எல்லாரும் அங்கயே இருந்தால் எனக்கும் நல்லது. நானும் மாறி மாறி ஒவ்வொரு பிள்ளையளிட்ட போய் வருவன். இடையில இந்தியா, இலங்கை என்டு சுத்திப்போட்டு வரலாம்.... மற்றப்படி இந்த நாட்டில மனுசர் சீவிப்பானா. அந்த வசதியான வாழ்க்கையை விட்டுட்டு மகள் ஒருக்காலும் இங்க வரமாட்டாள்.'

மகா கூறியவற்றை உள்வாங்கிக்கொண்ட சாத்திரியார், அவளுக்கு நல்ல வரனாகப் பார்த்துத்தருவதாக உறுதிமொழி கூறினார். இருவரும் விடை பெற்றுக்கொண்டனர்;.

வரும்வழியில் மகா ஆட்டோவை நிறுத்திவிட்டு தாகத்தை தணிக்க இரண்டு இளநீர்களை வாங்கினாள் கொழும்பில் இவ்வளவு காலமாக இருந்தும் இப்படி தாகத்திற்கு ஒரு இளநீர் வாங்கி குடித்ததில்லை ராஜேஸ்வரி. தாகம் தணிந்து, புதுத்தெம்பு  வந்தது. அப்படியே புடவைக் கடையொன்றினுள் புகுந்த மகா நான்கைந்து தரமான பட்டுப்புடவைகள், இரவு உடைகள் என்று வாங்கினாள். மகாவுக்கும் இரண்டு சேலைகளை பரிசாகக் கொடுத்தாள்.

மகா செலவழித்த பணத்தைப் பார்த்தபோது ராஜேசுக்கு மூச்சு முட்டியது. தாராளமாகவே செலவு செய்தாள். ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அலட்சியமாக உருவினாள். எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தாள் ராஜேஸ்வரி. அவள் மனம் எதையெதையோ சிந்தித்துக்கொண்டிருந்தது.

சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி அன்றைய நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்தார் முருகேசர். மகனைக் கண்டதும் எழுந்து சாப்பாட்டு மேசைக்கு வந்தார். இருவருமாக ஊர் நடப்புக்களை அலசியபடி உணவை முடித்துக்கொண்டனர்.

'ஒருவேளைச் சாப்பாடுகூட சந்தோசமாக, எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிட நேரமில்லாத வெளிநாட்டு இயந்திர வாழ்க்கை....' மனதுக்குள் நினைத்துக்கொண்டான் சேகர்.

'தம்பி உன்ர மேசையில ரீ வைச்சிருக்கிறன். எடுத்துக் குடியப்பு, ஆறப்போகுது' என்றாள் வேலையும் கையுமாக இருந்த கற்பகம்.

சாப்பிட்டு விட்டு ஆரஅமர அமர்ந்து தன் பெற்றோருடன் ஊர்ப் புதினங்கள் பேசிக்கொண்டிருந்தான் சேகர். ஊர்க் கதைகள் கற்பகத்திடம் இருந்து வற்றாத நதியாக ஊற்றெடுத்துக்கொண்டே இருந்தது. இனசனம், நண்பர்கள், அயலவர்கள் என்று சேகரிடம் விசாரிப்புகளும் நிறையவே இருந்தது. வெயில் சற்று தாழ்ந்ததும் முருகேசர் 'வோக்கிங்' புறப்படத் தயார் ஆனார். கற்பகம் எல்லோருக்கும் தேனீர் தயாரித்து எடுத்துவந்தாள்.

தாய் தந்த தேனீர் கோப்பையை எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் நுளைந்தான் சேகர். வெளியில் புழுக்கம் அதிகமாக இருந்தது. சேகரின் அறையில் அவன் வந்தபின்னர் புதிதாக குளிரூட்டியொன்று பூட்டப்பட்டிருந்தது.

நாற்காலியை முன்னுக்கு இழுத்து அமர்ந்து கொண்டான் சேகர். முன்பு படிக்கும் காலத்தில் அவனது அறையில் கிடந்த அதே மேசை. அம்மா புதிய மேசை விரிப்பொன்றை அதன்மீது போட்டிருந்தாள். பழைய நினைவில் அவன் கண்கள் புத்தகங்களைத் தேடின. அப்போது எதேச்சையாய் அவன் பார்வை புத்தக அலுமாரியில் அடுக்கியிருந்த அந்த 'கம்பஸ் பைல்' மீது படிந்தது. ஏதோ நினைத்தவனாய் சட்டென்று ஓடிச் சென்று அதை எடுத்து வந்தான். தொடுவாரின்றி அதில் தூசு மண்டிக் கிடந்தது.

உயர்தரப் பரீட்சையில் நல்ல பெறுபேறுகள் கிடைத்ததும், முருகேசர் முதன்முதலில் அவனுக்கு வாங்கிக்கொடுத்த 'பைல்' அது. கம்பஸ் போகும்போது எல்லா மாணவர்களையும் போல குறிப்புக்களை எடுத்துக்கொள்வதற்கும், சில ஆவணங்களை பத்திரப்படுத்தவும் அது பயன்பட்டது அவனுக்கு. பல்கலைக்கழக மாணவர்களின் அடையாளம் அந்த 'கம்பஸ் பைல்'தான்.

அவசரமாய் அதன் கண்ணாடி உறையினுள் மறைவாக வைத்திருந்த அந்தப் புகைப்படத்தை அவன் கைகள் தேடின.

கௌரி  படத்தில் சிரித்துக்கொண்டிருந்தாள்.

அடர்ந்த கருங்கூந்தல் தோள்களில் புறள, அவள் மையிட்ட வண்டு விழிகள் அவனுக்கு எவ்வளவு போதை ஊட்டின. அவள் சிரிப்பில் மயங்கி இந்த உலகையே மறந்து கிடந்தானே. 'கௌரி... கௌரி...' அவன் உதடுகள் முணுமுணுத்தன. உள்ளம் அந்த நினைவுகளில் கசந்தது.

தன்னை அவள் வசம் இழுத்தது எது என்று புரியாமல் இன்னும் அந்த நினைவுகள் புதிராய் அவன் மனதில் நிறைந்து நின்றன. மனம் அவளை முதல் முதலில் சந்தித்த அந்த நாட்களை நினைவு கூரச்சென்றது.

அன்றுதான் புதிய மாணவர்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பமாகியிருந்தன. பல்கலைக்கழக மாணவர்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நின்று புதிய மாணவர்களை  'ராக்கிங்' செய்துகொண்டிருந்தார்கள்.

அப்பொழுது....

அன்று மலர்ந்த ரோஜாப் பூவைப் போல கௌரி பதிவு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்தாள். அவளைக் கண்டு விட்ட சேகரின் கண்கள் இமைக்க மறந்தன.

யாரையும் சலனப்படுத்திவிடாத ஒரு அமைதியான அழகு அவளிடம் குடிகொண்டிருந்தது. நீண்டு நெளிந்த கருங்கூந்தல். நிலவொத்த மருவற்ற வதனம். சிரிக்கையில் குழிவிழும் கன்னங்கள். வண்டென இமைகொட்டும் கருவிழிகள். பசிய சங்கொத்த நீண்டகழுத்து. ஒடிந்து விடுவது போன்ற உடல்வாகு. முதல் பார்வையிலேயே அவன் மனதில் ஆழப்பதிந்துவிட்ட சித்திரப்பாவை அவள்.

'அங்க பாரடா என்ர தேவதை வருகுது' என்றான் சேகர் தன்னை மறந்து.

எல்லோர் பார்வையும் கௌரி மீது பதிந்தது. அன்று முதல் தினமும் கௌரியை வழிமறித்து 'ராகிங்' என்ற போர்வையில் கௌரியைச் சீண்டினர் சேகரும், அவனது நண்பர்களும்.

'என்ர ஆள் வருகுது. கூப்பிடு மச்சி' சேகருக்கு அவளுடன்; பேசாவிட்டால் உறக்கமே வராது. அவளுடன் பேசுவதற்கு ராகிங்தான் கைகொடுத்து உதவியது.

அவன் சீனியர் மாணவன். கீழ்ப்படிந்துபோக வேண்டிய புதிய மாணவியாக அவளிருந்தாள்.

அன்றும் அப்படித்தான் நடந்தது.

மாணவர்களின் பார்வை தங்கள் மீது விழுவதை உணர்ந்த கௌரிக்கும், கவிதாவுக்கும் உள்ளம் படபடக்கத் தொடங்கியது.

'ஏய்.... இஞ்ச வா' கரனின் குரல் கட்டளையிட்டது.

'என்ன கேட்கப்போறாங்களோ' அலுத்துக்கொண்டாள் கவிதா.

'உன்ன யாரடி கூப்பிட்டது?' கௌரியுடன் கூட வந்த கவிதாவை மிரட்டினான் கரன்.

'இல்ல......  நான்.....' நடுங்கும் குரலில் கவிதா.

'சரி சரி விடுமச்சான்' என்ற சேகர் தொடர்ந்தான்.

'உன்ர பெயர் என்ன?' 

'கவிதா'

'உன்ர பெயர்?' சேகர் கேட்டான்.

'சிவகௌரி'

'சிவகௌரியா? என்ன உனக்கு அப்பன் இல்லயா?, அப்பன்; இல்லாமலா பிறந்தனி' சேகரும் நண்பர்களும் சத்தமாகச் சிரித்தனர். சில புதிய மாணவிகள் இவர்களை பயத்துடன் பார்த்தபடி கடந்து சென்றனர்.

'கொப்பற்ற பெயர அம்மா உனக்கு சொல்லித்தர இல்லயா' சேகர் நக்கலாய் கேட்டதும், கோபத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள் கௌரி. அவள் கோபத்தையும், சிவந்த முகத்தையும் பார்க்க உற்சாகம் பீரிட்டது சேகருக்கு. மனதுக்குள் மெல்லிய மழைத்தூரல்.....

'என்னடி முறைக்கிறாய். முழியைத் தோண்டி கருவாடு போட்டிருவன்

'சண்முகம் சிவகௌரி'

'.........   அப்பிடி பதில் சொல்லு. சொந்த ஊர் எது?'

'யாழ்ப்பாணம்'

'நீ....' கவிதாவைப் பார்த்து கரன் கேட்டான்.

'கிளிநொச்சி.....' கவிதாவின் உடலும் குரலும் நடுங்கியது. அவள் விழிகள் நிலம் பார்த்தன.

சேகர் நண்பர்கள் குழாமோடு அந்த மரத்தடியில் காவல் இருப்பான். அந்த இடத்தைத் தாண்டித்தான் புதிய மாணவர்கள் எல்லோரும் வளாகத்துக்குள் நுழைவார்கள்;. அவர்களை கரனும் நண்பர்களும் ராகிங் செய்யும்போது சேகர் சுவாரசியமற்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பான். அவன் கண்கள் கௌரியைத் தேடி வாசலில் தவமிருக்கும். சேகரின் உள்நோக்கம் அவன் நண்பர்களுக்கும் புரிந்திருந்தது. இருவரையும் சேர்த்துவைக்கும் விதமாக அவர்கள் நடந்துகொள்வார்கள். அது அவர்களின்  சுவாரஸ்யமான பொழுதுபோக்கு.

தினமும் தனக்காகவே காத்திருந்து தன்னை 'ராகிங்;' என்ற பெயரில் சீண்டும் சேகரின் சிரிப்பும், வசீகரமும் கௌரியின் மனதிலும் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது.

'நீ யாரையாவது 'லவ் பண்ணுறியா?' கரன்.

'இல்ல' சட்டென பதில் சொன்னாள் கௌரி.

'அப்ப என்ன 'லவ்' பண்ணுரியா?' சேகர் கேட்க பதில் சொல்லத் திணறினாள் கௌரி.

'........................'

'உண்மையாத்தான் கேக்குறன். பதில் சொல்லும். இல்லாட்டி இன்டைக்கு நீர் போக ஏலாது' சேகரின் மனம் தெளிவாகப் புரிந்தது கௌரிக்கு. மனதில் பட்டாம்பூச்சிகள் பறக்க மௌனமாக நின்றாள்.

கௌரியை சேகர் தன் பக்கத்தில் அழைத்துக்கொள்வான். அவனுடைய நண்பர்கள் கவிதாவை வம்புக்கு இழுப்பார்கள்.

சேகரின் கவனமெல்லாம் கௌரியின் மீதே பதிந்திருக்கும். அச்சமும், நாணமுமாய் ஏதும் செய்ய முடியாமல் முள்ளின் மீது உட்கார்ந்திருக்கும் சங்கடத்துடன் நின்றுகொண்டிருப்பாள் கௌரி. தன்னை கண்களால் துளைத்தெடுக்கும் சேகரிடமிருந்து பார்வையைத் திருப்பி அங்குமிங்கும் பராக்குப் பார்ப்பது போல பாசாங்கு செயவாள். இது தினமும் தொடரும்.

'நாளைக்கு எனக்கு ஒரு 'லவ் லெட்டர்' எழுதிக் கொண்டு வாரும். என்ன?'

'எனக்கு எழுதத் தெரியாது'

'எழுதத் தெரியாமல் என்னன்டு யூனிவர்சிட்டி பாஸ் பண்ணினனீர்?'

உதடுகளைக் கடித்தாள் கௌரி. அவளது தவிப்பை சிறிது நேரம் ரசித்துவிட்டு,

'நாளைக்கு லவ் லெட்டர் இல்லாமல் இங்க வரக்கூடாது. என்ன?' மிரட்டினான்.

'எனக்கு அதெல்லாம் எழுதத் தெரியாது'

'தெரியாதா? அப்ப வாரும். நான் எப்படி 'லவ் லெட்டர்' எழுதுறது என்டு சொல்லித்தாரன்'

'..............................'

'எனக்கு வகுப்புக்கு நேரம் ஆகுது, நான் போக வேணும்' தயக்கத்தோடு கௌரி பதிலளித்தாள்.

 'இஞ்ச பாரடா இவவுக்கு நேரம் போகுதாம்' கரன் சொல்ல, குற்றம் சாட்டும் பார்வையொன்றை சேகர் மீது படரவிட்டாள் கௌரி.

தினமும் இப்படி ஏதாவது சொல்லி தனது மனதை அவளிடம் வெளிப்படுத்துவான் சேகர் அவளது சக தோழிகள் மூலம் அவள் நன்றாகப் பாடுவாள் என்பதை அறிந்த பின்னர் சிலசமயங்களில் அவளைப் பாடச் சொல்லி ரசிப்பார்கள். அப்போதெல்லாம் நடுங்கும் குரலில் ஒன்றிரண்டு வரிகளுடன் பாடலை நிறுத்திக்கொள்வாள் கௌரி.

'என்னப்பு தேத்தண்ணி ஆறிக்கிடக்குது. இன்னும் நீ குடிக்க இல்லையா.' கேட்டபடி மகனை நெருங்கினாள் கற்பகம். மகன் ஏதோ யோசனையாய் அமர்ந்திருக்கவும்  அருகில் சென்று அவன் கையில் இருந்த புகைப்படத்தைப் பார்த்து விட்டாள். கற்பகத்தின் இதயம் ஒரு விநாடி நின்று துடித்தது. எரிமலையாய் குமுறியது. மறுபடியும் மகன் பழைய சகதிக்குள் விழப்போகிறானோ என்ற அச்சம் அவளைப் பற்றிக்கொண்டது.

'தம்பி நீ இன்னும் என்ன இவளையா நினைச்சுக்கொண்டிருக்கிறாய்?' அதிர்ச்சியாய் கேட்டாள் கற்பகம்.

'அவள போன மாசம் கண்டனான். உன்ர சினேகிதன் ரமணன் ஒருநாள் காட்டித் தந்தவன். அவளின்ர உடம்பில வெளிநாட்டு வாசம் அப்பிடியே தெரிஞ்சுது. வக்கேசனுக்கு குடும்பத்தோட சிலோன் வந்தவளாம். என்ன துணிச்சல் என்டு பார். துரோகி. நச்சுப் பாம்பு.' வெறுப்பை உமிழ்ந்தன கற்பகத்தின் வார்த்தைகள்

'ரெண்டு சின்னனுகள கையில பிடிச்சு இழுத்துக்கொண்டு போனாள். அவளின்ர பிள்ளையளோ என்னமோ. கட்டைச் சட்டையும் ஆளும் அவளுன்ட ஆட்டத்துக்கு ஏத்த மாப்பிள்ளை தான் கிடைச்சிருக்கிறான் போல. ஆளும் நல்லா ஊதிப்போயிருந்தா. சரியான ஆட்டக்காரி'

மௌனமாய், தாய் பொரிந்து தள்ளுவதைக் கேட்டுக்கொண்டிருந்தான் சேகர்.

'அந்த மோசக்காரியே அப்பிடி நல்லா இருக்கேக்க நீ அவளுக்கு நல்லா வாழ்ந்து காட்டவேணும். அந்த ஏமாத்துக்காரியின்ர படம் உனக்கெதுக்கு' என்ற கற்பகம் அவன் கையிலிருந்த படத்தை சட்டெனப் பறித்தாள். அவன் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லையாயினும் தாயை தடுக்கவும் இல்லை. அதை சுக்கல்சுக்கலாக தன் ஆத்திரம் தீரும் வரை கிழித்து அருகில் கிடந்த குப்பைக் கூடையில் போட்டுவிட்டு நிமிர்ந்தாள். தன்னைத் தடுத்துநிறுத்தாத மகனை திருப்தியுடன் பார்த்தாள்.

'தேத்தண்ணி ஆறிப் போச்சுது. இஞ்ச தா அதை. திரும்ப ஊத்திக்கொண்டு வாரன்.'

'இல்லையம்மா தேத்தண்ணி சூடாகத்தான் இருக்கு. நான் குடிக்கிறன் என்ற சேகர் தேனீரை எடுத்து பருகத் தொடங்கினான். ஆறியிருந்த தேனீர் தொண்டையில் கசத்தது. மீண்டும் அந்த நாட்களை மனம் அசைபோட ஆரம்பித்தது.

'டேய் மச்சான், உன்ர ஆள் வருகுது'

சேகர் நண்பர்கள் சகிதம் நிற்பதைப்; பார்த்த கௌரி அவர்களை பார்க்காதவள் போல் வேறு எங்கேயோ பார்த்தபடி வேகமாக நடந்தாள்.

'துணைக்கு அருகில் கவிதா கூட இல்லையே' அவள் மனம் அடித்துக்கொண்டது.

'மச்சான் அவளைக் கூப்பிடு'; சேகர் கரனின் காதுகளில் கிசுகிசுத்தான்.

'கௌரி இஞ்ச வாரும்'

 தயங்கிய பார்வையுடன் அவர்களை நெருங்கினாள் கௌரி.

'என்ன தள்ளி நிக்கிறீர் கிட்டவாரும்' என்றான் கரன்.

'டேய் மச்சி இவள் என்ர ஆள். ஒருத்தரும் இவளுக்கு கரைச்சல் குடுக்கக்கூடாது' சேகர் குறுக்கிட்டான்.

நண்பர்கள் எல்லோரும் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.

'என்ன கௌரி சேகர் சொல்லுறது உண்மையா? உமக்கு அவனைப் பிடிச்சிருக்கா?' கரன் மெதுவாக அவளிடம் கேட்டான்.

'.....................' வாய்க்குள் சிரித்தபடி மௌனியாக நின்றாள் கௌரி. அவளுக்கு சங்கடமாக இருந்தது.

அப்பொழுது சேகரின் கையில் இருந்த பைக் திறப்பு தவறி நிலத்தில் விழுந்தது.

'கௌரி அதை எடுத்துக் குடுமன், உம்முடைய ஆள் தானே?' கரன் கூறினான்.

அவள் சேகரை நிமிர்ந்து பார்த்தாள். அவன் பார்வையும் இவளை நோக்கி இருந்தது. மெதுவாக குனிந்து திறப்பை எடுத்து சேகரிடம் நீட்டினாள்.

'என்ன அங்கால எட்டி நிண்டு நீட்டினால் எப்படி?, பக்கத்தில வந்து குடும்.' சேகரின் நண்பன் ஒருவன்.

'இன்னும் கொஞ்சம் கிட்ட வாரும்' கரன்.

கரன் சொன்னதைத் தொடர்ந்து இன்னும் கொஞ்சம் முன்னேறினாள் கௌரி.

'ஹலோ என்ன இது. புதுப்பொம்பிளை போல வெட்கப்படுகிறீர். வடிவாக கிட்டவந்து குடும். இல்லாவிட்டால் இன்றைக்கு நீர் வகுப்புக்கு போக ஏலாது.' சேகரின் நண்பன் மிரட்னான். கௌரிக்கு பயத்தில் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. உடல் முழுவதும் வியர்வையில் நனைந்தது. தொண்டை வறண்டு நாக்கு மேலண்ணத்துடன் ஒட்டிக்கொண்டது. இனம்புரியாத பயத்தில் உடல் முழுதும் நடுங்க முன்நோக்கி நகர்ந்தாள்.

'டேய் சும்மா இருங்கடா' வாய் வார்த்தையாக சேகர் சொன்னாலும், அவள் தன்னை நெருங்கி வருவதை ஆவலுடன் எதிர்பார்;த்தான். அவள் பயத்தை, படபடப்பை ரசித்தான்.

'டேய் நீ சும்மா இரு.' நண்பனை அதட்டிவிட்டு, 'இன்னும் கொஞ்சம் கிட்டவாப் போம் கௌரி' என்றான் கரன். நண்பனுக்கு கண்ணைச் சிமிட்டினான்.

' பயப்படாமல் கிட்டப்  போம். சேகர் ஒன்றும் உம்மை விழுங்க மாட்டான்'

மிகவும் நெருங்கி வந்த கௌரி அதற்கு மேல் நகரமுடியாமல் பேசாது நின்றாள். அவள் சேகருக்கு மிக அண்மையில் நின்றாள். சேகரும் அவளை நெருங்கி வந்தான். மெதுவாக ஒரு அடி பின்னோக்கி வைத்த கௌரிக்கு பயத்தில் வியர்த்துக்கொட்டியது. நடுங்கும் விரல்களால் திறப்பை அவனிடம் நீட்டினாள். அதை வாங்குவதற்காக சேகர் கையை நீட்டினான்.

'டேய் மச்சான், அவளின்ர கையை பிடிக்காதயடா' வம்புக்கு கத்தினான் கரன்.

பயத்தில் வெலவெலத்துப் போன கௌரி, திறப்பை கீழே தவறவிட்டு விட்டாள். சூழநின்ற சேகரின் நண்பர்கள் கொக்கலமிட்டுச் சிரித்தனர். பயமும், வெட்கமும் போட்டிபோட அந்த இடத்தை விட்டு வேகமாக நடக்கத்தொடங்கினாள் கௌரி.

'நில்லும். கௌரி நில்லும்' அவர்கள் கூப்பிடவும் கேளாதவள் போல விரிவுரை மண்டபத்தை நோக்கி விரைந்தாள்;. சேகர் அவர்களை அடக்கினான்.

'பாவமடா அவள். சும்மா இருங்கடா'

'என்னடா சேகர், பொதுவா ராக்கிங் என்றாலே ஒதுங்கிப் போகிறவன் நீ. என்ன கௌரியைக் கண்டதும் ஆளே மாறிப்போய் விட்டாய்' கேட்டான்;; கரன்.

'அதுசரி மச்சான் எப்ப தொடக்கம் இந்த விளையாட்டு நடக்குது' வியப்புடன் வேறு ஒரு நண்பன்.

'அதுதானே சொன்னேன். அவள் என்ர ஆள் என்டு' சேகர் கூற, இமைகளை உயர்த்தி ஆச்சரியம் காட்டினான் கரன்.

கீழே கிடந்த திறப்பை எடுத்து, முகத்துக்கு நேரே உயர்த்திப் பிடித்து 'கௌரியின்ர கைபட்ட திறப்பு' என்ற சேகர் அதில் தனது உதடுகளைப் பதித்தான். சுற்றி நின்ற நண்பர் பட்டாளம், '..... ..... ' என்று கூவி, கை தட்டிக் கூச்சலிட்டது. அந்தத் திறப்பை தனது சட்டைப் 'பொக்கற்றினுள்' போட்டு நெஞ்சோடு அழுத்திக்கொண்டு கண்களை மூடிக்கொண்டான். நண்பர்கள் மேலும் கேலியாக கூச்சலிட, அதற்கு மேலும் அங்கு நிற்க முடியாது தனது பாடக் குறிப்புகளை எடுத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு ஓடினான்.

இந்தச் சம்பவத்தை நினைக்கும் போதெல்லாம் சேகரின் உடல் ஒருவித இன்ப உணர்வில் சிலிர்க்கும். ஆனால் இப்போதோ கௌரியை நினைக்கவே வெறுப்பாக இருந்தது அவனுக்கு.

பவிசு வாழ்க்கைக்காக காதலையே காலில் போட்டு மிதித்துவிட்டாள் அவள்.

(6)

'கீக்கீ......' 'கீக்கீ......' கோலிங் பெல் இனிய ஓசை எழுப்பியது.

அலுத்தபடி சென்று கதவைத் திறந்தாள் கற்பகம்.

சேகர் வந்ததிலிருந்து அவளுக்கு வேலை  அதிகமாகிவிட்டது.

கதிர்காமம், கண்டி, நுவரெலியா என்று மகனை அழைத்துக்கொண்டு சிலோனைச் சுற்றிப் பார்க்கவென்று சில நாட்கள் கழிந்தன. இப்போதுதான் நாட்டுச் சூழ்நிலையும் கொஞ்சம் சாதகமாக இருந்தது. ஒவ்வொருநாளும் சேகரைப் பார்க்கவென்று அவனுடைய நண்பர்ளும், உறவினர்களும் வந்துபோனார்கள். எல்லோரையும் வரவேற்று உபசரித்துக் களைத்துப்போனாள் கற்பகம்.

'ராஜேஸ்வரி அன்ரி.... வாங்க வாங்க' வரவேற்றாள் கற்பகம். கற்பகத்திற்கு ஆச்சரியம் தான். வழியில், தெருவில் கண்டால் ஒன்றிரண்டு வார்த்தைகளுடன், அல்லது சிறுமுறுவலுடன் விலகிச் சென்று விடும் ராஜேஸ்வரியின் வரவு கற்பகத்திற்கு ஆச்சரியத்தைத் தந்ததில் வியப்பொன்றும் இல்லை. இருந்தாலும் ராஜேசின் மகள் காயத்திரியின் நட்பும், கடந்த சில வாரங்களாக அவர்கள் செய்த உதவியும் அவளால் மறக்க முடியாது.  

'இவா எங்கட பக்கத்துவீட்டுல இருக்கிற ராஜேஸ்வரி அன்ரி. எங்களுக்கு நல்ல உதவி. இவவின்ற மகள் காயத்திரி நல்ல பிள்ளை. எப்பவும் எங்கட வீட்டையே சுத்திக்கொண்டு திரிவாள். அப்பா வருத்தமாக 'கொஸ்பிரல்ல' இருக்கேக்க எனக்கும், அப்பாவுக்கும் அந்தப் பிள்ளை காயத்திரிதான் சாப்பாடு கொண்டுவந்து தந்தவள். இளைய மகள் யூனிவர்சிற்றி முடிச்சு, இப்ப வேலை செய்யுறா'

மகனுக்கு ராஜேஸ்வரியை அறிமுகம் செய்தாள் கற்பகம்

'எங்க காயத்திரிய இந்தப் பக்கம் காண இல்ல.' அக்கறையுடன் விசாரித்தாள். கற்பகத்திற்கு காயத்திரி மீது எப்போதுமே தனிப்பிரியம்.

'அவளுக்கு வேலை செய்யுற இடத்தில ஏதோ அவசர வேலை என்டு இந்தக் கொஞ்ச நாளும் சரியான 'பிசி'. சுனாமி, நிவாரணம் அது இது என்டு அவள் லீவு நாள் என்டும் பார்க்காமல் ஓடித்திரியுறாள்'. மனமறிந்து பொய் சொன்னாள் ராஜேஸ்வரி.

இரண்டு, மூன்று நாட்களாக, 'கற்பகம் அன்ரி வீட்ட ஒருக்கா பொயிட்டு வாரன் அம்மா' என்று கிளம்பும் காயத்திரியை அடக்கியது அவள்தான். மகள் அந்த வீட்டுக்குச் செல்வதை ஏதாவது சாக்குச் சொல்லித் தடுத்தாள் ராஜேஸ்வரி. நேற்று மாலையும் அவள் கிளம்பவே ஆவேசம்  வந்தவள் போல் கத்தினாள்.

'இளந்தாரிப் பொடியன் இருக்கிற வீட்டுக்கு நீ ஏன் போகிறாய்? அங்க உனக்கு என்ன அலுவல். பிறகு நாலு சனம் பார்த்து நாலுவிதமாக கதைப்பீனம். அப்பன் இல்லாத பிள்ள கண்டபடி திரியக்கூடாது.' அத்தோடு அடங்கிப்போனாள் காயத்திரி.

'மகன் சரியாக அம்மாவின்ற சாயல் தான்' பேச்சை மாற்றினாள் ராஜேஸ்வரி.

'என்ர பிள்ளை ஐந்து வருஷத்துக்கு பிறகு வந்திருக்கிறான். அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சிட்டன்  என்டா என்ர பொறுப்பு தீர்ந்துடும்' என்றார் முருகேசர்.

'ராஜேஸ்வரி அன்ரி உங்களிட்ட தம்பியின்ற குறிப்பு தந்தனான் தானே. இவனுக்கு எங்கயாவது நல்ல பொம்பிளை சந்திச்சால் சொல்லுங்கோ'. என்ற கற்பகம் தொடர்ந்தாள்.

'சேகருக்கு இப்ப கனடா சிற்றிசன் கிடைச்சிட்டுது. அவன் கலியாணம் கட்டிப் போட்டு பொம்பிளையை ஸ்பொன்சர் பண்ணி எடுக்கலாம். நல்லா உழைக்கிறான்'.

'நல்ல உயரமும், உடம்புமாக பொடியன் பார்க்கிறதுக்கு நல்லாத்தான் இருக்கிறான்.....  ஆனால் முகத்தைப் பார்த்தால்....' ராஜேஸ்வரியின் பார்வை சேகரின் மீது படர்ந்தது.

கண்கள் இரண்டுக்கும் கீழே குழிவிழுந்து, கருவளையம் படிந்திருந்தது. கன்னக் கதுப்புகள் ஒட்டிப் போய் இருந்தது. உதடுகளில் கருமை படர்ந்திருந்தது.

'அந்த நாட்டுல கேட்கிறதுக்கும் ஆளில்லை. என்னென்ன கெட்ட பழக்கங்கள் எல்லாம் இருக்குதோ......'

சேகரை கண்களால் அளந்தாள் ராஜேஸ்வரி.

அவர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு விடைபெற்றாள். கிளம்புவதற்கு முன்,

'காயத்திரியின்ற கலியாணத்துக்கு நாள் குறிச்சாச்சு. மாப்பிள்ளை பகுதியோட கதைச்சிட்டு இன்விடேசன் அடிக்கவேணும்;' குரலில் பெருமை பொங்க சொன்ன ராஜேஸ்வரி தொடர்ந்தாள்.

'நான் சாத்திரியாரிட்ட போற நேரம் தம்பியின்ற குறிப்பையும் அவரிட்ட குடுக்கிறன்;. நீங்க யோசிக்காதேங்கோ' என்றபடி விடைபெற்றாள்.

ராஜேஸ்வரிக்கு காயத்திரியின் கலியாணம் முற்றாகிப்; போனதில் பெரும் நிம்மதிதான்.

இளையவள் தேன்மொழி அரச வங்கியொன்றில் கணக்காளராக வேலை செய்துகொண்டிருந்தாள். அவளுக்கு ஏற்கனவே மாப்பிள்ளை நிச்சயமாகி இருந்தது. நல்ல வசதியான குடும்பம். அவளுடன் ஒன்றாக பல்கலைக்கழகத்தில் படித்த பெடியன்தான் தனியார் கம்பனி ஒன்றில் முகாமையாளராக வேலை செய்துகொண்டிருந்தான்.

மாப்பிள்ளையின் அப்பா 'கலியாணத்தை இழுத்தடிக்காமல் சீக்கிரமே முடிச்சுட்டால் நல்லது' என்று நெருக்கிக்கொண்டிருந்தார்.

'முதல்ல காயத்திரியின்ற அலுவல் முடியட்டும். பிறகு கையோட தேன்மொழியின்ற கலியாணத்தையும் முடிச்சிடலாம்' ராஜேஸ்வரி தயக்கமாய் கூறவும் அவர்கள் ஒரு வருடம் அவகாசம் கொடுத்திருந்தனர்.

காயத்திரிக்கு வயதோ முப்பத்தைந்தைத் தாண்டிக்கொண்டிருந்தது.

'பெண்ணுடைய சாதகத்தில எட்டில செவ்வாய் நிற்குது....... பொருந்தி வாரது கொஞ்சம்  ஷ்டம்......'. சாத்திரியார் இழுத்தது போலவே காயத்திரியின் கல்யாணமும் இழுபட்டுக்கொண்டே போனது.

சுந்தரேசன் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் ராஜேசுக்கு இவ்வளவு தூரம் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது.

திடீரென்று ஏற்பட்ட விபத்து ஒன்றில் சுந்தரேசன் இறந்துவிட, இரண்டு குழந்தைகளுடன் விதவையானாள் ராஜேஸ்வரி.

அவர்கள் அந்த சமயம் கிளிநொச்சியில் இருந்தார்கள். சுந்தரேசன் இறந்த பின்னர்  கணவனின் வியாபாரத்தை தானே பொறுப்பேற்று நடத்தத் தொடங்கினாள். இடப்பெயர்வுகள், குண்டுவீச்சு இவைகளுக்கு மத்தியில் குஞ்சும் குருமானாய் இருந்த குழந்தைகளுடன் ஒன்டியாய் வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்துவது அவளுக்குப் பெரும் சிக்கலாக இருந்தது.

இருந்த நில புலன்களையும், வியாபார நிலையத்தையும் விற்று கையில் கிடைத்த பணத்தோடு கொழும்புக்கு வந்து சேர்ந்தாள். பெரிய இரண்டு அடுக்கு மாடி வீடொன்றை வாங்கினாள். மீதிப்பணத்தை வங்கியில் போட ஒரு தொகைப் பணம் வட்டியாகக் கிடைத்தது. போதாததற்கு மேல் மாடியை இரண்டாகப் பிரித்து வாடகைக்கு விட்டாள். அந்த வருமானத்தைக் கொண்டு சிக்கனமாக குடும்பத்தை நடத்திவந்தாள்.

ராஜேஸ்வரி!

அவள் ஒரு இரும்புப் பெண்.

இளம்வயதிலேயே அவள் தலையில் விழுந்த பொறுப்புக்கள், இழப்புகள் அவள் இதயத்தைக் கல்லாக்கி இருந்தது. தன்னைச் சுற்றி ஒரு இறுக்கமான திரையை ஏற்படுத்தியிருந்தாள். உறவினர்கள் வீடுகளுக்கோ, விசேஷங்களுக்கோ செல்வதில் அவளுக்கு அவ்வளவு நாட்டம் இல்லை.

'பிள்ளைகளை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டும். யாரிடமும் போய் கையேந்தக் கூடாது. எல்லோருக்கும் முன்னால் நன்றாக வாழ்ந்து காட்டவேண்டும்.' இந்தச் சிந்தனைகளே அவளுள் ஆழமாகப் புதைந்திருந்தன.

அவள் யாருடனும் அதிகமாக பேச்சுவார்த்தை வைத்துக்கொள்வதில்லை. சிரிப்பு என்பதே அவள் முகத்தில் அரிதாய்ப் போனது. தான், தனது தேவைகள் என்பதைத் தவிர வேறெதையும் பற்றி அவள் மனம் சிந்திக்க மறுத்தது. அன்பு, ஆசை, பாசம் என்பதை எல்லாம் அடியோடு மூட்டைகட்டி வைத்துவிட்டு, தன் கடமையில் கண்ணாக, கருத்தாக இருந்தாள்.

தன் பிள்ளைகளிடம் கூட அவளுடைய மனம் பாசத்தைக் காட்ட மறுத்தது. கண்டிப்பும், கட்டுப்பாடும் அவளிடம் நிறைந்திருந்தது. தனது இயலாமைகளுக்கு வடிகாலாய் எப்பொழுதும் மூத்த பெண் காயத்திரியைத் திட்டிக்கொண்டே இருப்பாள். காயத்திரியும், தாயின் மனநிலையை அறிந்து அடங்கி நடப்பாள்.

இளைய பெண் தேன்மொழி படிப்பிலும் விளையாட்டிலும் கெட்டிக்காரியாக இருந்தாள்.

காயத்திரிக்கோ 'ஏலெவல் பாஸ்' பண்ணுவதே பெரும்பாடாக இருந்தது.

இந்தக் காரணம் மட்டுமல்ல ராஜேஸ்வரி மகள் மீது எப்போதும் ஏறிவிழுவதற்கு இன்னுமொரு காரணம் இருந்தது.

காயத்திரிக்கு பத்து வயது இருக்கும் போதுதான் சுந்தரேசன் விபத்தில் இறந்து போனார். அன்று பாடசாலைக்கு போக முடியாது என்று அடம்பிடித்தாள் காயத்திரி. மண்ணில் விழுந்து புறண்ட மகளை அன்புடன் தூக்கிக் கொண்ட சுந்தரேசன் வேலைக்கு போகும் வழியில் தானே மகளை பாடசாலையில் இறக்கி விடுவதாகக் கூறவும் துள்ளிக் கொண்டு தயாராகினாள். விதி அங்கு தான் சதி செய்தது.

பிரதான வீதியிலிருந்து பாடசாலை செல்லும் பாதையில் சுந்தரேசன் மோட்டார் வண்டியை திருப்பியபோது எதிரே வந்த டிராக்டர் வண்டியுடன் மோதி விட்டார். காயத்திரி ஒருபுறமும், சுந்தரேசன் ஒருபுறமுமாக உருண்டனர். பள்ளத்தில் போய் விழுந்த சுந்தரேசனின் தலை ஒரு கல்லுடன் மோதியதில் தலையில் பலமான அடி. வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னமே அவர் உயிர் பிரிந்துவிட்டது.

அன்றிலிருந்துதான் தாய்க்கு மகள் மீது ஒரு வெறுப்புணர்வு.

இயல்பிலேயே காயத்திரி பொறுமைசாலி. அவளுக்கு தாய் மீது எப்பொழுதுமே ஒரு இரக்கம் உண்டு. தாய் எவ்வளவுதான் திட்டினாலும் அமைதியாக இருப்பாள். மிஞ்சினால் தனிமையில் இருந்து கண்ணீர் வடிப்பாள். பிறகு தானே சமாதானமாகி விடுவாள்.

(7)

இப்போதெல்லாம் ராஜேஸ்வரி சரியான 'பிசி'யாக இருந்தாள். தன்னை வெளியே போவதற்கு தயார்படுத்திக் கொண்டவள் நேரத்தைப் பார்த்தாள். பிள்ளைகள் வேலை முடிந்து வீட்டிற்கு வருவதற்கு இன்னும் நேரம் இருந்தது. கதவைப் பூட்டி திறப்பை வழமையாக மறைத்து வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு விறாந்தையில் கிடந்த கதிரையில் அமர்ந்து கொண்டாள்

பிள்ளைகள் இருவரும் வேலைக்குப் போனபின் வீட்டிற்குள் இருந்து அலுத்துப் போன ராஜேஸ்வரிக்கு மகாவின் வருகை புது வாழ்க்கையைக் காட்டியது. இந்த ஒரு வாரமாக அவளுடன் சேர்ந்து  கோயில், குளம் என்று சுற்றித் திரிந்தாள். மகா வெளியே அழைக்கும்போது மறுக்காமல் அவளுடன் போய் வந்தாள்

'மகாவை விட எந்த வகையில் நான் குறைவு' என்று நினைத்தவள் அவளுடன் போட்டி போட்டு தன்னை மாற்றிக்கொண்டாள். சேலை உடுத்துவதில்;, தன்னை அலங்கரிப்பதில் என்று எல்லாவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்தினாள்.

மகாவைப் போலவே உடைகளை அயன் செய்து, திருத்தமாக உடுத்தினாள்.

கண்ணாடி முன் நின்று தன்னை ஒன்றுக்கு இரண்டு தடவை சரி பார்த்தாள்.

தாயின் மாற்றம் பிள்ளைகளுக்கும் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது.

அன்றைய புரோகிராம் அவர்கள் கோயிலுக்கு போவதாக இருந்தது. அதற்காகவே மகாவை எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள்.

ஆட்டோவுடன் மகா வாசலில் வந்து இவளை அழைக்க அதில் ஏறிக்கொண்டாள். ஆட்டோ பம்பலப்பிட்டி பிள்ளையார் கோயிலை நோக்கிப் பறந்தது.

மகா ஒரு தட்டில் தங்கத்தால் செய்யப்பட்ட வேலை வைத்து ஐயரிடம் நீட்டினாள். பயபக்தியுடன் அதைப் பெற்றுக்கொண்ட ஐயர், கர்ப்பக்கிரகத்துள் நுளைந்து அந்த வேலை முருகன் கைகளில் கொடுத்தார். வழமையைவிடவும் அன்று முருகன் பொலிவுடன் நிமிர்ந்து நிற்பது போல ராஜேஸ்வரிக்குத் தோன்றியது. மகா பக்திப் பரவசமாய் கரம் கூப்பி பெருமைபொங்க நின்றுகொண்டிருந்தாள். கோயிலில் நின்றவர்கள் எல்லாம் மகாவைச் சுட்டிக்காட்டி ஏதோ தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த ராஜேசிற்கு மகாவின் டாம்பீகத்தையும், பகட்டையும் காண உள்ளூர கடுப்பாக இருந்தது. எல்லாவற்றுக்கும் காரணம் வெளிநாட்டுப் பணம் என்பது மட்டும் மனதில் நன்றாகப் பதிவானது.

வெளியில் வெயில் கடுமையாக காய்ந்துகொண்டிருந்தது. அறைக்குள் இருந்த கட்டிலில் படுத்தபடி வானொலியைக் கேட்டுக்கொண்டிருந்தார் முருகேசர்

சேகரால் வெப்பத்தை தாங்கமுடியவில்லை. புதிதாய் அவனுக்கென்று வாங்கியிருந்த '.சி'யையும் நோயால் நலிந்திருந்த தந்தையின் அறையில் ஏற்கனவே கொண்டுபோய் வைத்துவிட்டிருந்தான். அவனுக்கு முதுகுப்புறத்தால் வியர்வை வழிந்து ஓடியது. சேட்டைக் கழற்றி மின்விசிறியை வேகமாக சுழலவிட்டான். நாவறண்டு தாகம் எடுத்தது. குசினிக்குள் சென்று பிரிஜ்ஜைத் திறந்து பார்த்தான். அம்மா அவனுக்கென்று ஒரு போத்தல் நிறைய தண்ணீர் எடுத்து வைத்திருந்தாள். தண்ணீர்ப் போத்தலை எடுத்துக்கொண்டு வெளி விறாந்தையில் வந்து அமர்ந்தான். கடற்காற்று சற்று இதமாக இருந்தது.

பத்திரிகையைப் புறட்டிப் பார்த்த சேகருக்கு அலுப்பாக இருந்தது. முதல் நாள் மாலை நண்பர்கள் வந்து போனது ஞாபகம் வந்தது. சுதனும் அவர்களுடன் வந்திருந்தான்.

சுதன்.........!!!

சுதன் வந்து போனதில் இருந்து கௌரியின் நினைவு மீண்டும் தலைதூக்கி இருந்தது. மனம் ஒரு குரங்கு என்பது உண்மைதான். எதை வேண்டாம் என்று தூக்கியெறிய நினைக்கிறோமோ அந்த நினைவுகள் மீண்டும் மீண்டும் மனதில் வந்து தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருக்கும்.

சுதனை சேகரால் ஒருநாளும் மறக்கமுடியாது. கௌரி சேகர் மீது காதல் கொள்வதற்கு அவனும் ஒரு காரணம். அது நடந்தது கௌரியின் பல்கலைகழக ஆரம்ப நாட்களில் தான்.

புதிய மாணவர்கள் வருகிறார்கள் என்றதுமே சுதனுக்கு எப்போதுமே ஒரு உற்சாகம் ஒன்று வந்து ஒட்டிக் கொள்ளும். மாணவிகளை ராக்கிங் செய்வதும், அவர்களை சீண்டி அழவைப்பதும் அவனது சுவாரஸ்யமான பொழுதுபோக்குகள். தகாத வார்த்தைகள் கூறி மாணவிகளை முகம் சிவக்க வைப்பது அவனுக்கு தனி இன்பம்.

அன்றும் வழமைபோல, புதியதாய் வந்திருந்த மாணவிகள் சிலரை நண்பர்கள் சூழ ராக்கிங் செய்து கொண்டிருந்தான் சுதன்.

பனியில் நனைந்த மலராய் கண்ணில் ஒரு மின்னல். நடையில் ஒரு துள்ளல் என வந்து கொண்டிருந்தாள் கௌரி. அவளது வருகைக்காக காத்து நின்றான் சேகர்.

'டேய் உன்ர ஆள் போறா' கௌரிக்கு கேட்கும்படி உரக்கக் கத்தினான் கரன்.

சேகரை நோக்கி வெட்கப் புன்னகை ஒன்றை உதிர்ந்த கௌரி,

'நேரம் போகுது, கெதியாகப் போனால் தான் முன்னுக்கு இருக்கலாம்' என்று அவர்கள் காதுகளில் விழும்படி கவிதாவை துரிதப்படுத்தினாள்.

சேகர் உதடுகளில் புன்னகை வழிய, கண்களால் அவளைப் பருகியபடி அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

கௌரி ஒருமுறை திரும்பிப் பார்த்து அவனுக்காக புன்னகைத்தாள்.

'டேய் மச்சான் ஓவரா வழியாதயடா.....' கரன் சேகரை வம்பக்கிழுத்தான்.

அவர்களை தாண்டிச் சென்ற கௌரியை சற்றே தள்ளிநின்ற சுதனின் குரல் வழிமறித்தது.

'ஹலோ என்ன புதுப்பொம்பிள மாதிரி வெட்கப்பட்டுக் கொண்டு போறீர், இங்க வாரும்'

தயங்கிபடி நின்றாள் கௌரி.

'...........................' அசிங்கமான வார்த்தைகள் வெளிவந்தன சுதனிடமிருந்து. சுதனும் அவனது நண்பர்களும் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.

சேகரும் நண்பர்களும் நடப்பதைக் கவனித்துக்கொண்டு நின்றனர். சேகர் சிரமப்பட்டு கோபத்தை அடக்கிக்கொண்டான்.

கௌரியும் கவிதாவும் தமது நோட்டுப் புத்தகங்களை தலையில் வைத்தபடி நடந்தனர்.

'.... ..... இப்பிடியே வகுப்புவரை நடந்து போகவேணும். புத்தகங்கள் கீழ விழக்கூடாது' மிரட்டினான் சுதன்.

நடுங்கிக் கொண்டே அவர்கள்; நடக்க முயன்றபோது அவை தவறிக் கீழே விழுந்தன.

உரக்கச் சிரித்தனர் சுதனின் நண்பர்கள். முகம் சிவந்துபோனாள் கௌரி.

'என்னடி .................' காது கொடுத்துக் கேட்க முடியாத பச்சைத் தூசன வார்த்தைகளை உதிர்த்தான் சுதன்.

கௌரியின் கண்களில் இருந்து நீர்துளிகள் வெளியே வருவதற்கு துடித்துக்கொண்டு நின்றன.

கீழே சிதறிக்கிடந்த நோட்டுக்களை சேகரித்தனர் கௌரியும், கவிதாவும்.

மறுபடியும் அவற்றைத் தலையில் வைத்துக்கொண்டு நடக்கும்படி பணித்தான் சுதன். அசையாமல் நின்றனர் இருவரும். அவர்களது நோட்டுப்புத்தகங்களைப் பறித்து அவர்கள் தலையில் வைத்தான் ஒருவன்.

'ஊம் நட... நட...' மிரட்டினார்கள்.

ஒரு புதிய மாணவனிடம் எங்கோ கிடந்த பழைய தகர வாளியைக் கொடுத்து குச்சியொன்றினால் தட்டி தாளம் போடச் சொன்னார்கள்;. மற்றொரு புதிய மாணவனை அவர்கள் நடைக்கு ஏற்ப விசிலடிக்கச் சொன்னான். அந்தப் பிரதேசமே பெரும் பரபரப்பாக இருந்தது. தொலைவில் நின்ற வேறு சில மாணவர்கள் இவர்களை உரத்த குரலில் கேலி செய்தனர். சுதன் உற்சாகத்துடன் தனது ராகிங்கைத் தொடர்ந்தான்.

அச்சத்துடன் தன் கண்களைச் சுழலவிட்டாள் கௌரி. மெல்ல மெல்லக் காலெடுத்து வைத்தாள். இரண்டடி வைக்குமுன் மறுபடியும் நோட்டுக்கள் நழுவிக் கீழே விழுந்தன.

சுதனும் சூழநின்ற மாணவர் குழாமும் கெக்களம் கொட்டிச் சிரித்தனர். கன்னங்களில்; கண்ணீர் கோலமிட, வெட்கமும் வேதனையும் பிடுங்கித்தின்ன, தலை குனிந்தபடி நின்றனர் கவிதாவும் கௌரியும். அதற்கு மேலும் பொறுக்க முடியாத சேகர் அவ்விடத்துக்கு விரைந்தான்.

சேகரின் கைகளைப் பிடித்திழுத்து மறித்தான் கரன். அவனுடைய கைகளைத் தட்டிவிட்டு முன்நகர்ந்தான்  சேகர். நண்பர்கள் பின்தொடர்ந்தனர்.

சிதறிக்கிடந்த நோட்டுக்களை சேகரித்து கௌரியின் கைகளில் திணித்த சேகர்,

'கௌரி என்ன நடக்குது இங்க வகுப்புக்கு போங்க' என்றான்.

புதிய மாணவர்கள் எல்லாம் இதுதான் தருணம் என்று அந்த இடத்தை விட்டு நகரத் தொடங்கினர்.

'எங்கையடி போகிறாய், உன்னை நாங்கள் போகச் சொல்ல இல்லையே? நில்லடி' என்ற சுதன் கோபத்துடன் சேகரின் பக்கம் திரும்பி,

'என்னடா மச்சி? நாங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறம் என்று உனக்கு தெரிய இல்லையா. நீ எப்பிடி அவளைப்; போகச் சொல்லுவாய்?' கோபத்துடன் கத்தினான்.

'இல்லை நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேளடா மச்சி....' அவர்களை நெருங்கினான் சேகர். என்ன நடக்கப் போகிறதோ என்ற கலவரத்துடன் சேகரின் நண்பர்கள் அவனைச் சூழ்ந்துநின்றனர். அவர்களுக்கிடையே வாய்த்தர்க்கம் ஆரம்பமானது. நண்பர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். மெல்ல மெல்ல மோதல் வெடிக்கும் நிலை உருவானது. இரு குழுக்களாக பிரிந்து சண்டை உச்சம் பெற்றது

'நீ யாரடா எங்களுக்கு அட்வைஸ் பண்ணுறதுக்கு. மரியாதையா இந்த இடத்தை விட்டுப் போ. இல்லையென்டால் தம்பி வீண் பிரச்சனைதான் வரும்...'

வாய்த்தர்க்கம் கைகலப்பில் போய் முடிந்தது. தன்னை முரட்டுத்தனமாக தனது கைகளால் தாக்கிய சுதனை ஆத்திரத்துடன் தள்ளிவிட்டான் சேகர். சுதனின் தலை அருகில் இருந்த சீமெந்துச்சுவரில் மோதியது. நெற்றியில் காயம் ஏற்பட்டு இரத்தம் கசியத் தொடங்கியது. அதற்குள் சுதனின் நண்பர்கள் சேகரை அடித்துக் கீழே தள்ள அவனுக்கும் கை, கால்கள், நெற்றி என்று சிராய்ப்புக்களும், கீறல்களுமாய் இரத்தம் கசியத் தொடங்கியது.

நிலலை விபரீதமாகவும் மாணவர் தலைவர், பல்கலைக்கழக துணைவேந்தர் என்று அங்கு கலகம் அடக்க பெருங்கூட்டமே சேர்ந்துவிட்டது

அதன் பின் இருவரும் ஒரு வாரம் 'சஸ்பன்ஸ்'. கைமுறிந்த நிலையில் இரண்டு, மூன்று நாட்கள் சேகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.

அந்த சம்பவத்துக்குப் பின் சேகர், கௌரி காதல் மேலும் வலுப்பெற்றது.

அந்த நாட்கள் எவ்வளவு இனிமையானவை!

அவன் சுவாசித்த மூச்சில் கௌரி நிறைந்திருந்தாள். அவன் உச்சரிக்கும் வார்த்தைகளில் இதமாய் வந்து அமர்ந்துகொண்டாள். எத்தனை பேர் மத்தியிலும் கௌரி மட்டுமே அவன் கண்களில் நிறைந்திருந்தாள். எத்தனை கனவுகள், நினைவுகள். நண்பர்களின் கேலிப் பார்வை, கிண்டல் பேச்சுக்கள் எல்லாம் எவ்வளவு இனித்தன. அவளைச் சந்திப்பதற்காகவே கடவுள் தன்னை படைத்துவிட்டதாக சேகர் நினைத்துக்கொண்டான்.

சுனாமி வந்து எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போனதைப்  போல அவனது இனிய காதலும், அந்தச் சந்தோசங்களும் திடீரென கொள்ளை போனது. ஆனால் அதன் சுவடுகள் மட்டும் இன்னமும் இதயத்தை ரணகளமாக்கிக் கொண்டே இருந்தன அந்த சுனாமியைப் போலவே.

 (8)

ஒருநாளும் இல்லாத பழக்கமாய் சில்வர் பாத்திரத்தில் சுடச்சுட கொழுக்கட்டை செய்து தன்னிடம் தாய் நீட்டியபோது காயத்திரிக்கு அதிசயமாகத் தான் இருந்தது. ஆனாலும்; அதைப் பற்றி தாயிடம் விசாரித்துக்கொண்டிருக்க அவள் விரும்பவில்லை. தாயிடமிருந்து பாத்திரத்தை வாங்கிக்கொண்டு துள்ளல் நடையில் கற்பகம் வீட்டை நோக்கி நடந்தாள்.

கபிலனைப் பற்றி அவள் கற்பகம் அன்ரியிடம் சொல்வதற்கு நிறைய விசயங்கள் இருந்தன. நேற்று அவள் கபிலனுடன் மோட்டபைக்கில்; வந்து இறங்குவதை வீட்டு வாசலில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள் கற்பகம். இவள் வெட்கத்துடன் அன்ரிக்கு கையசைத்து விட்டு ஓடிவந்து விட்டாள்.

வீடு பூட்டியிருந்தது. 'கோளிங்பெல்லை' ஒரு முறை அழுத்திவிட்டு காத்திருந்தாள் காயத்திரி. கூண்டுக்குள் நின்ற ஜிம்மி சினேகமாய் வாலை ஆட்டி, மெல்லிய குரலில் அனுங்கியபடி அவளை வரவேற்றது.

கதவைத் திறந்தவள் கற்பகம் தான்.

' காயத்திரி. வா. வா. என்ன இந்தப் பக்கம் ஆளையே காணயில்ல. எங்களை எல்லாம் மறந்திட்டியா' என்றவள் அவளது கையைப்பற்றி அழைத்துச் சென்றாள்.

விறாந்தையில் அமர்ந்து ரீ.வி பார்த்துக்கொண்டிருந்தார் முருகேசர். காயத்திரியைக் கண்டதும் முகம் மலர்ந்தார். அவரது சுகத்தை விசாரித்து விட்டு கற்பகத்தை தொடர்ந்து சமையலறைக்குள் சென்றாள் காயத்திரி. அவள் நடையில் சிறு தயக்கம் இருந்தது. வீடு முழுவதும் சுழன்று வந்தது அவள் பார்வை.

'இந்தாங்க அன்ரி. கொழுக்கட்டை செய்தனாங்கள்.'  தான் கொண்டு வந்த பாத்திரத்தை  கற்பகத்திடம் நீட்டினாள்.

ஒரு கொழுக்கட்டையை எடுத்து தான் ருசி பார்த்தபடி, இரண்டை முருகேசரிடம் கொடுக்கும்படி காயத்திரியிடம் கொடுத்தனுப்பினாள்.

திரும்பி வரும்போதுதான் அது அவளது கண்களில் பட்டது.

அது சேகரின் அறையாகத்தான் இருக்க வேண்டும். மேசையின் மேல் பாதி குடித்து முடித்த நிலையில் வெளிநாட்டு மதுப் போத்தல் ஒன்று. அருகில் கண்ணாடிக்குவளை ஒன்று  சரிந்து கிடந்தது.

அவளறிந்து முருகேசருக்கு எந்தவிதமான கெட்ட பழக்கமும் இல்லை.

கற்பகத்திற்கு நீண்ட நாட்களின் பின் அங்கு வந்திருந்த காயத்திரியிடம் பேச நிறைய இருந்தன. காயத்திரிக்கும் அவளிடம் கொட்டுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. தன் தாயிடம் அதிகம் பேச்சுவார்த்தை வைக்காத காயத்திரிக்கு கற்பகம் ஒரு தோழி என்றுகூட சொல்லலாம். கபிலன் விசயம் தொடங்கி எல்லாவற்றையும் அவளுடன் பகிர்ந்துகொண்டாள்.

இறுதியாக அன்று சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பார்க்கச் சென்றது பற்றி சொல்லிக்கொண்டிருந்தாள் காயத்திரி. பிறந்து சில நாட்கள் கூட ஆகியிராத பச்சைக் குழந்தைகள் தாயை சுனாமி இழுத்துக்கொண்டு போய்விட்ட சோகத்தையும் அறியாது பரிதவித்ததை மிகுந்த பரிதாபத்துடன் சொல்லிக்கொண்டிருந்தாள்.  

அப்படி தாய்ப்பாலுக்காக கதறியழுது ஓய்ந்து கிடந்த குழந்தை ஒன்றை காயத்திரி தூக்கினாள். குழந்தை வறண்டு விட்ட தன் உதடுகளைத் திறந்து திறந்து மூடியது. அழுது வீங்கியிருந்த தன் கண்களைத் திறந்து அவள் முகத்தில் எதையோ தேடியது. தன் மெல்லிய பிஞ்சுக் கரங்களால் காயத்திரியின் மார்புச் சட்டையைப் பிடித்து இழுத்தது. அவள் சட்டைப் பொத்தான்களை மெலிந்த விரல்களால் இறுகப் பற்றியது. காயத்திரியால் தாங்க முடியவில்லை. குழந்தையின் மொழி அவளுக்குப் புரிந்தது. ஆனால் அதற்கு உரிய பதிலைத்தான் அவளால் கொடுக்க முடியாதே. ஏக்கத்துடன் தொட்டிலில் அதைக் கிடத்தி பால் புட்டியை குழந்தையின் வாயில் திணித்தாள். அவள் சட்டையை இறுகப்பற்றியிருந்த குழந்தை தன் மறுகையால் அதை தட்டிவிட்டு வீறிட்டது

'என்னால அந்தப் பிஞ்சு முகத்தை மறக்க ஏலாமல் இருக்குது அன்ரி. இயற்கைக்கு கொஞ்சம் கூட இரக்கமில்ல'. அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தவள் அப்போதும் கண்ணீர் விட்டாள் கேட்டுக்கொண்டிருந்த கற்பகம் நெகிழ்ந்துபோனாள்.

காலடிச் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்த காயத்திரி சட்டென எழுந்து விட்டாள்.

சமையலறை வாசலில் சேகர் நின்றுகொண்டிருந்தான்.

'நான் கதைச்சதையெல்லாம் கேட்டிருப்பாரோ....'. அவளுக்கு வெட்கமாக இருந்தது.

கற்பகம் அன்ரியின் மகன் தாயைப் போலவே நல்ல சிவந்த நிறம். குளித்துவிட்டு அப்போதுதான் வந்திருப்பான் போல. அவனிடமிருந்து நல்ல சோப்பின் வாசனை வந்தது.

இருவரையும் பரஸ்பரம் அறிமுகம் செய்துவைத்தாள் கற்பகம். பார்வைகள் ஒருமுறை சந்தித்து மீண்டன. தயக்கத்துடன் புன்னகை ஒன்றை உதிர்த்தாள் காயத்திரி.

காயத்திரியை அவன் அதற்கு முன் எங்கேயோ பார்த்த ஞாபகம் வந்தது. 'அன்றைக்கு கோயில்ல பஜனை பாடின கேள் மாதிரி இருக்குது' நினைவு வந்தவனாய் மெதுவாய் தலையசைத்துவிட்டு தாய் தந்த சூடான தேனீரைப் பருகியபடி அவ்விடத்தை விட்டு அகன்றான்;.

மகா இரண்டு வாரங்;களில் மீண்டும் லண்டன் புறப்பட இருந்தாள். மகாவும், ராஜேசும்  காலையில் புறப்படுவார்கள். மதிய உணவை எங்கேயாவது தரமான உணவு விடுதியிலோ அல்லது ஓட்டலிலோ முடித்துக்கொண்டு பொழுது சாயும் நேரம்தான் வீட்டுக்கு திரும்புவார்கள்;.

ராஜேஸால் நம்ப முடியவில்லை. மகாவில் தெரிந்த மாற்றங்கள் அவளை வியக்கவைத்தன. வெளிநாட்டு வாழ்க்கை அவளை மெருகேற்றி, தைரியமூட்டி, சுதந்திர மனுசியாக உலாவ வைத்திருந்தது.

 '_ம்.... எல்லாம் வெளிநாட்டுப் பணம் செய்யுற வேலை.' ராஜேஸ் அடிக்கடி பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.

பணத்தைக் கவலையின்றி செலவழித்தாள். சிலோன் பொருட்களை எல்லாம் தன் பேரக்குழந்தைகளுக்கும், மருமக்களுக்கும், நண்பர்களுக்கும் என்று வாங்கிக்குவித்தாள். அவளுக்கு எல்லாவற்றையும் பார்க்க வியப்பாக இருந்தது.

அவளுள் புதிதாய் ஒரு எண்ணம் தோன்றி நாளுக்கு நாள் வலுவேறிக்கொண்டே வந்தது.

'மகாவைப் போல நானும் இனியாவது வாழ்க்கையை கொஞ்சம் அனுபவிக்க வேணும்'

கொஞ்ச நாட்களாக காயத்திரி கவனித்துக்கொண்டுதான் வருகிறாள். தாயிடம் குடிகொண்டிருந்த சந்தோசம் மறைந்திருந்தது. தேவையில்லாமல் காயத்திரியுடன் அடிக்கடி கோபப்பட்டாள். சத்தம் போட்டாள். பின் ஏதோ ஆழ்ந்த யோசனை...... மௌனம்.....

அந்த மௌனம் தான் அவளை மிரட்டியது. காயத்திரிக்கு கலியாணம் சரிவந்த நாளிலிருந்து தன் சந்தோசத்தை வெளிப்படையாக மகளுடன் பகிர்ந்துகொண்ட ராஜேஸ்வரி மறுபடியும் தன்னைச் சுற்றி அமைதித் திரை ஒன்றை போட்டுக்கொண்டாள்

'ஏன் அம்மா திடீரென்று இப்பிடி இருக்கிறா. மகா அன்ரி லண்டனுக்கு வெளிக்கிடுறா என்டதும் கவலைப் படுறாவா....... ம்...... அப்பிடியிருக்காது'. தாயைப் பார்க்கும் போது அவளுக்கு குழப்பமாகத் தான் இருந்தது.

(9) 

மகா பயணமாகும் நாளும் வந்தது. மகளுக்கு நல்ல வெளிநாட்டுச் சம்மந்தம் ஒன்றும் புரோக்கர் மூலமாக பொருந்தி, அவள் வந்தகாரியம் வெற்றியைத் தந்திருந்தது. மனம் நிறைந்த சந்தோசத்துடன் மீண்டும் லண்டனுக்குப் புறப்படத் தயாரானாள்.

மகாவை 'எயார்போட்' வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தாள் ராஜேஸ்வரி. அன்றுதான் முதல்முதல் காயத்திரியும், ராஜேஸ்வரியும் விமானநிலையம் சென்றிருந்தனர்.

மகா தான் தெரிந்து வைத்திருந்த ஆங்கிலத்தில் உரையாடியபடி உள்ளே நுளைந்து 'செக்கிங்' எல்லாம் முடிந்தபின் இவர்களுக்கு கை அசைத்து விடைபெற்றுக்கொண்டாள். அவள் முகத்தில் ஒருவிதமான பெருமிதம் தெரிந்தது. ராஜேஸ்வரியின் மனம் எரிந்துகொண்டிருந்தது.

வீட்டுக்கு வரும்வழியிலேயே காயத்திரியை பொரிந்து தள்ளத் தொடங்கினாள் ராஜேஸ்வரி.

'எனக்கும் வந்து நீ பிறந்தியே. பார் உலகத்தில பொம்பிளப் பிள்ளையளப் பெத்தாலும் என்ன சவுகரியமா இருக்குதுகள். எப்பிடி இருந்தவள் இன்டைக்கு எப்பிடி இருக்கிறாள்'; 

காயத்திரிக்கு தாய் பேசுவது புரியவில்லை. ஒன்றும் சொல்லத்தோன்றாமல் பேசாமல் இருந்தாள்.

'மகாவின்ட மூத்தவள் பத்தொன்பது வயது இருக்கேக்க ஒருத்தனை காதலிச்சு முடிச்சவளாம். அவன்ட சகோதரங்கள் எல்லாம் வெளிநாட்டில இருந்தபடியால் பெடியனை அவை கூப்பிட்டு விட்டிருக்கீனம். மனுசிய அவன் ஸ்பொன்சர் செய்து எடுத்திருக்கிறான். அவள் நல்ல புளியங்கொம்பாத்தான் பார்த்து பிடிச்சிருக்கிறாள். ஹூம்.....'

'.........................'

'உனக்கும் இப்ப வயது முப்பது, முப்பத்திரண்டு ஆகுது. உன்னை நான் என்ன வீட்டுக்கயே பூட்டி வச்சிருந்தனான்? ஒழுங்காப் படிப்பும் ஏறயில்ல. ரெண்டு, மூன்டு தரம் லெவல் சோதினை எடுத்தும் பாஸ்பண்ண ஏலாமல் போயிற்றுது... என்னத்தத்தான் உனக்கு உருப்படியாய் செய்யத்தெரியும்?......'

தாய் தன் இயலாமையை குத்திக் காட்டவும் காயத்திரிக்கு கண்களில் கண்ணீர் பெருகத் தொடங்கியது.

'படிக்கிற காலத்தில அந்தப் பெட்டையளப் போல நல்ல பெடியனாப் பார்த்திருந்தாலும் நான் இவ்வளவு கஷ;டப்பட்டிருக்கத் தேவையில்ல. ....' வாய்க்குள் முணுமுணுத்தாள் ராஜேஸ்வரி.

தாயின் பேச்சு நம்பமுடியாமல் இருந்தது காயத்திரிக்கு.

'இவ்வளவு காலமும் கட்டுப்பாடாய், கண்ணியமாய்  வளர்த்த அம்மா இன்று என்ன பேசுகிறாள்?'

கூடப்படித்த பெடியன்களை எங்காவது வழியில் தெருவில் கண்டு இவள் சிரித்துப் பேசினாள் கூட வாய்க்கு வந்தபடி திட்டுவாள்.

'என்ன கண்ட பெடியளோட நின்டு பல் இளிக்கிறாய்? இனிமேல் இப்பிடி யாரோடயாவது ரோட்டுல நின்டு கதைச்சுக்கொண்டிருந்தியோ உனக்கு சூடுதான் போடுவன்'

அம்மாவின் திட்டுக்களுக்கு அஞ்சி அவள் அதிகமாக ஒருவருடனும் பேச்சுக்குப் போகமாட்டாள். தானுன்டு தன் வேலையுண்டு என்றிருப்பாள்.

வேலை காரணமாக சற்று தாமதித்து வந்தால்கூட ஆயிரம் கேள்விகளால் துளைப்பாள்  ராஜேஸ்வரி. வீடு வீடாகச் சென்று சுனாமியால் பாதிப்புற்ற மக்களுக்கு நிவாரணங்களைச் சேகரித்தபோது கூட ராஜேஸ்வரி அந்த வேலையை விட்டுவிடு என்று புலம்பிக்கொண்டிருந்தாள். வேலையில் கூட அவள் அதிகமாக ஒருவருடனும் பேச்சு வைத்துக்கொள்ளவில்லை.

அவள் '.லெவல்' படித்துக்கொண்டிருந்த சமயம் தோழி ஒருத்தி யாரோ ஒருவனுடன் ஓடிப்போன செய்தியை மகள் சொல்ல, உஷhராகி விட்டாள் ராஜேஸ்வரி.

'இந்தாப் பார். நீயும் இது மாதிரி காதல் கத்தரிக்காய் அது இது என்று ஏதாவது இழுத்துக்கொண்டு வந்தியோ அடுத்த நிமிஷம் நான் உயிரோட இருக்க மாட்டன்' என்று எச்சரித்திருந்தாள்.

தாயின் திடீர் கோபங்களும், பேச்சுக்களும் புரியாத புதிராக இருந்தது காயத்திரிக்கு. அன்று மட்டுமல்லை. தொடர்ந்து வந்த நாட்களும் ராஜேஸ்வரி மகளை திட்டிக்கொண்டே இருந்தாள்.

கபிலனுக்கும் தனக்கும் கலியாணம் நிச்சயமான நாளில் இருந்து சந்தோசமாக இருந்த தாய் மறுபடி முறுங்கை மரம் ஏறிவிட்டதன் காரணம் புரியாமல் திகைத்தாள் காயத்திரி. மனதிற்குள் ஏதோ நெருடல்.

'இந்தக் கலியாணமும் சரிவராமல் போகப் போகுதோ?' உள்ளூர ஒரு பீதி எழுந்து வயிற்றை ஏதோ செய்தது. வீட்டு வாசல் வரை மோட்டார் வண்டியில் கபிலன் தன்னை கொண்டு வந்து விடுவதைக் கண்டு, ராஜேஸ்வரி அவளை ஒருநாள் நன்றாகவே திட்டிவிட்டாள்.

'கலியாணத்துக்கு முதல் இதென்ன ஆட்டக்காரத்தனம்?' என்ற தாயின் ஆங்காரப் பேச்சிற்குப் பயந்து கபிலனுடன் பழகுவதை தாயின் பார்வையில் இருந்து தவிர்த்துக்கொண்டாள்.

வேலை முடிந்து வீட்டிற்கு வந்தால் போதும் தாயின் நச்சரிப்புத் தொடங்கிவிடும்.

'மகா புத்திசாலி. தன்ர இரண்டாவது மகளுக்கும் வெளிநாட்டு மாப்பிள்ளையாப் பார்த்து முடிச்சுப்போட்டாள்.'

'பாத்தியா மகாவ, எப்பிடி செலவழிக்கிறாள். எல்லாம் வெளிநாட்டுக் காசு. எப்பிடி இருந்தவள் இப்ப இப்பிடி இருக்கிறாள். மாதம் ஒரு நாட்டுக்கு என்டு சுத்திக்கொண்டு திரியுறாள். எனக்கு வயித்தைப் பத்தி எரியுது.'

'அம்மா அது ஒவ்வொருத்தரின்ட அதிஷ;டம். இப்ப எங்களுக்கு என்ன குறை. நாங்களும் நல்லாத்தானே இருக்கிறம். எனக்கும் நீங்க நல்ல இடத்திலதானே கலியாணம் பேசியிருக்கிறீங்க. தேன்மொழிக்கும் என்ன குறை. அவளும் நல்ல இடத்தில கலியாணம் கட்டி சந்தோசமா இருக்கப் போறா'

மகள் சொல்வது ஒன்றும் தன் காதுகளில் விழாதது போல ராஜேஸ்வரி பேசிக்கொண்டு போனாள். அவள் மனதில் உருவாக்கியுள்ள புதிய திட்டத்திற்கு மகளை இசைய வைக்க வேண்டுமே என்ற ஆதங்கம் அவளுக்கு.

காயத்திரியை வார்த்தைகளால் வறுத்தெடுத்தாள் ராஜேஸ்வரி.

காதலிக்க வேண்டிய வயதில் கட்டுப்பாடுகளை போட்டுவிட்டு, வயது எல்லை தாண்டிய பின் தன்னால் முடியாது என்ற கையறு நிலையில் தாயின் பேச்சு விசித்திரமாக இருந்தது காயத்திரிக்கு.

'நாளைக்கு கபிலன் அம்மாவின்ர அனுமதியோட கோல்பேசுக்கு கூட்டிப்போறன்' என்றவர்.

கபிலனின் நினைவு அவளது மனதுக்கு இதமாக இருந்தது. தாய் இவ்வளவு நேரமும் திட்டியது கூட அவளுக்கு உறைக்கவில்லை.

தாயின் திட்டங்களும், மகளின் கற்பனைகளும் இருவேறு திசைகளில் பயணித்துக்கொண்டிருந்தன.

தனது எண்ணத்திற்கு மகளை இசையச் செய்ய அவள் மனதில் அழகான திட்டம் ஒன்று உருவானது.

மறுநாள் காலை அவள் வேலைக்கு தயாராகிக் கொண்டிருந்த சமயம்தான் தாய் அந்த செய்தியை அவளிடம் சொன்னாள். அவளால் நம்பமுடியவில்லை.

'மாப்பிளை வீட்டுக்காரர் சீதனத்தைக் கூடக் கேட்கீனம். கலியாணத்துக்கு நாளும் குறிச்ச பிறகு என்ர தலையில கல்லைத் தூக்கி போட்டிருக்கீனம்;. இப்பிடி பேச்சு மாறுகீனமே. நான் என்ன செய்ய?.....' தாய் உடைந்த குரலில் சொல்ல இடிந்துபோனால் காயத்திரி.

முதல் அவர்கள் கேட்ட சீதனத்தைக் கொடுக்க ராஜேஸ்வரி மறுப்பெதுவும் தெரிவிக்கவில்லையே. இப்போது மேலும் இரண்டு லட்சம் கேட்பது எவ்வளவு அசிங்கம்.

எவ்வளவு ஆசைகளோடும் கற்பனைகளோடும் தனது திருமணநாளை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் காயத்திரி. எல்லாக் கனவுகளும் நொருங்கி தூள் தூளானது.

'அவையள் கேட்கிற சீதனத்தைக் குடுக்க நான் எங்க போறது. இன்னும் ரெண்டு லட்சம் வேணுமென்டால் நான் எங்க போறது? தெருத்தெருவாப் பிச்சையெடுத்தாலும் ரெண்டு லட்சம் சேர்க்க ஏலுமே? இவளோட முடிகிற காரியமா இது. தேன்மொழியும்; இருக்கிறாளே. நான் என்ன செய்ய.... கடவுளே'. தலையில் கை வைத்துப் புலம்பினாள் ராஜேஸ்வரி. தாயைப் பார்க்க காயத்திரிக்கு கவலையாக இருந்தது.

வந்த வருமானத்தில் செலவு போக மிகுதிப் பணத்தை இரண்டு பெண்களின் பெயரிலும் வங்கியில் போட்டு வந்தாள் ராஜேஸ்வரி. இடையிடையே வந்த செலவுகள் போக ஒரு கணிசமான தொகை கணக்கில் சேர்ந்திருந்தது. அத்தோடு வீட்டையும் காயத்திரிக்கே கொடுப்பதாகத்தான் பேச்சு. இன்னும் கொஞ்சம் பணம் குறைவாக இருப்பதை யாரிடமாவது கடன் வாங்கி கொடுக்க வேண்டும் என்று தாய் புலம்பிக்கொண்டிருந்தது அவளுக்குத் தெரியும்.

தேன்மொழியின் பகுதியில் அவர்கள் வசதியானவர்கள் என்பதால் இவர்களிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. என்றாலும் அவளுக்கு தேவையான நகை, நட்டு, ஒரு சிறுதொகைப் பணம் என்று ஒதுக்கியிருந்தாள். அவளும் கௌரவமாக புகுந்த வீட்டில் நுளைய வேண்டாமா?

காயத்திரி பதறிப்போனாள். தாயும், அவளும் காலையிலிருந்து ஒன்றுமே உண்ணாமல் தலையில் கை வைத்தபடி உட்கார்ந்திருந்தனர். இருவரையும் தேற்றி ஆறுதல்படுத்தியது தேன்மொழிதான்.

'எதுக்கும் இன்னொருக்கா அவையளோட கதைச்சுப் பாருங்கம்மா' தேன்மொழி கூற பத்திரகாளியாகக் கத்தினாள் ராஜேஸ்வரி.

'இப்பதானே புரோக்கர் போன் பண்ணி விசயத்தைச் சொன்னவர். அவை இதில தெளிவாய் இருக்கீனமாம். காசு கூடக் குடுத்தால்தான் மிச்சக் காரியங்கள் நடக்குமாம்.'

'நல்ல காலம் இவையள நம்பி இன்னும் காட் அடிக்கிற வேலையில இறங்க இல்ல' என்ற தேன்மொழி தொடர்ந்தாள்.

'ஏன் அம்மா அவை முதல்லயே இவ்வளவு தேவையென்று வடிவாக் கதைச்செல்லோ இருக்கவேணும். இப்ப எல்லாம் முடிஞ்சு, முற்றாக்கின பிறகு என்ன கதைக்கீனம்'

'இந்த நியாயத்தை எல்லாம் நான் யாரிட்ட கேட்கிறது.'

தாயும் தங்கையும் பேசிக்கொள்வது ஏதோ கனவுலகில் நடப்பதுபோல கேட்டுக்கொண்டிருந்தாள் காயத்திரி. அன்று முழுவதும் கண்ணீரிலேயே கரைந்தது பக்கத்துக் கட்டிலில் படுத்திருக்கும் தங்கைக்கு கேட்காதவாறு விம்மி விம்மி அழுதாள்.

அவளுள் சிறு நம்பிக்கை இருந்தது.

'கபிலன் என்னை நேசிக்கிறார். எனக்கு ஆறுதல் தாரமாதிரி ஏதாவது பதில் சொல்லுவார். இதெல்லாம் யாராவது தூண்டிவிட்டுத்தான் இப்பிடியெல்லாம் கேட்கீனம். நான் நாளைக்கு கபிலனோட கதைத்தால் எல்லாம் சரியாகிவிடும்'

அந்த நினைவு தந்த மன அமைதியோடு தூக்கம் கண்களைத் தழுவ உறங்கிப்போனாள் காயத்திரி.

மறுநாள் வேலைக்கு விடுப்பெடுக்கச் செல்வதாகத் தாயிடம் கூறிவிட்டு வெளியே சென்றாள். கையோடு கபிலனை போனில் அழைத்து, அவனை நேரில் சந்தித்து விட்டு வந்தாள். அதன் பிறகுதான் வேதனை இன்னும் அதிகமானது. வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக்கிடந்தாள்.

கபிலனைச் சந்தித்தபோது அவள் நம்பிக்கை சிதைந்து சுக்குநூரானது.

நினைக்க உடம்பெல்லாம் பற்றி எரிந்தது.

அவன் தன் வெண்முத்துப்  பற்கள் பளீரிட சிரிக்கும்போதெல்லாம் அவன் வெள்ளை உள்ளத்தையே கண்டதாக ஆனந்தித்திருந்தாள்; காயத்திரி.

ஒரு வாரப் பழக்கத்தில் கபிலனைப்  பற்றி தான் நிறையவே புரிந்துகொண்டிருப்பதாக கற்பனை செய்தாளே. எல்லாவற்றையும் பொய் என்று நிரூபித்துவிட்டான் கபிலன்.

கபிலன் இப்படி ஈவிரக்கம் இன்றி தன் நெஞ்சில் கொள்ளியைச் சொருகுவான் என்று அவள் நினைக்கவில்லை. கபிலனைச்; சந்தித்தபோது அவனிடம் ஒரு அன்னியப் பார்வை தெரிந்தது. வழமைக்கு மாறாய் முகம் இறுகியிருந்தது. காயத்திரிக்கும் அவனிடம் கோபம் தான்.

'இவர் தன்ர ஆக்களோட கதைக்கலாம் தானே' மனதுக்குள் புலுங்கினாள்.

'நீங்களும் மற்றவையளை மாதிரி காசுக்காக பறக்கிற ஆள் என்று இப்பதான் தெரியுது' தழதழத்த குரலில் காயத்திரிதான் முதலில் பேச்சை ஆரம்பித்தாள்.

'காயா என்ன சொல்லுறீர். கலியாணம் எல்லாம் முற்றாகின பிறகு நீங்கதான் பேச்சு மாறுறியள். உங்கள எப்பிடி நம்புறது'

அந்தச் சொற்கள் மீண்டும் மீண்டும் அவள் காதுகளில் வந்து மோதி, இதயத்தை கசக்கியது.

அவளும் விடவில்லை. தன் பக்க நியாயத்துக்காக வாதாடினாள்.

'உங்கட படிப்புக்கும், வேலைக்கும் எத்தனையோ பொம்பிளையள் கியூவில நிக்கீனம் என்று உங்கட அம்மா சொன்னாவாமே

'ஓம் உண்மைதான். அதுக்கென்ன. பத்து லட்சம் தாறன், இருபது லட்சம் தாறன் என்று எத்தினை பேர் போட்டி போடுகீனம் தெரியுமா. ஏதோ கஷ;டப்பட்ட குடும்பம், தகப்பன் இல்லை. அது இது... என்று புரோக்கர் சொன்னதாலயும், அதோட உம்மைப் பார்த்ததும் எனக்கும் பிடிச்சுப் போச்சுது. ஓம் என்று சொன்னது அதாலதான்'

ஆத்திரத்துடன் குறுக்கிட்டாள் காயத்திரி.

'அப்ப வறுமையில வாடுற எங்களுக்கு பிச்சைபோடுறதுக்காகத் தான் நீங்க என்னை

கலியாணம் கட்டுறதுக்கு ஓம் என்றனீங்களோ' என்றவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை சுண்டிவிட்டாள்.

'நல்ல காலம் தாலிகட்டுறதுக்கு முதல் உங்களைப் பற்றி தெரிஞ்சு கொண்டது.'

'காயா நீரா இப்பிடி எல்லாம் பேசுறீர். என்னால நம்பவே ஏலாமல் இருக்குது. உம்மட அம்மாதான் நேரத்துக்கு ஒரு பேச்சு பேசுறா. இந்தக் கலியாணம் பிடிக்கயில்லையென்றால் நேரடியாகச் சொல்ல வேண்டியது தானே. அதுக்காக இப்பிடியெல்லாம் டிராமா போடக்கூடாது.' வாக்குவாதம் வலுத்துக்கொண்டது. இருவரும் வெறுப்புடன் கிளம்பினர்.

கபிலன் மனந்திருந்தி மறுபடியும் வரமாட்டானா என்ற ஏக்கம் அவளையும் அறியாமல் அவ்வப்போது எட்டிப் பார்க்கும்.

இறுதியாக தாய் அந்த சம்மந்தத்தை அவர்கள் முறித்துக்கொண்டு விட்டார்கள் என்று சொன்னபோது அவளால்; தனிமையில் அழத்தான் முடிந்தது. அவளது கற்பனைகளும் கனவுகளும் யாருக்கு புரியப்போகிறது.

ஒரு வாரமாய் கண்ணீரில் கரையும் மகளை காரியத்தில் இறக்க வேண்டும். ராஜேஸ்வரி மெதுவாக மகளிடம் தன் வலையை விரிக்கத் தொடங்கினாள்.

(10)

அன்று வேளைக்கே உறக்கம் கலைந்து எழுந்திருந்தாள் ராஜேஸ்வரி. இரவு போட்டிருந்த திட்டத்தை செயல்ப்படுத்தத் தொடங்கினாள். காயத்திரியை எழுப்பிக் குளிக்க அனுப்பிவிட்டு, வேலையில் மும்முரமானாள்.

குளித்து முடித்து சமையலறைக்குள் நுளைந்த காயத்திரியை ஏற இறங்கப் பார்த்த ராஜேஸ்வரி, மகளை துரிதப்படுத்தினாள்.

'எத்தனை நாளைக்குத் தான் அதையே நினைச்சு அழுதுகொண்டிருப்பாய். இப்ப என்ன கலியாணமா நடந்து, அவர் விட்டுட்டுப் போனமாதிரி இப்பிடி அழுதுகொண்டிருக்கிறாய். போ. அதுகளையெல்லாம் தூக்கிப் போட்டுட்டு பழைய காயத்திரியா இரு' கடுமையாக தாய் கூறவும் மறுபேச்சின்றி அறையினுள் நுளைந்தாள்.

அவள் அழுவதால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வொன்றும் வரப் போவதில்லையே.

தாய் சொன்னது போல காயத்திரி தலைவாரி, நல்ல சட்டையாக ஒன்றை அணிந்து கொண்டு வந்து நின்றாள். மகளை திருப்தியுடன் பார்த்த ராஜேஸ்வரி,

'இந்தா. இன்றைக்கு தோசை சுட்டனான். இதைக்; கற்பகம் அன்ரியின்ர வீட்டில குடுத்துட்டு வா'

இப்படியெல்லாம் அயலவர்களுடன் நட்புரிமையுடன் பழகுபவள் அல்ல ராஜேஸ்வரி. தாயின் மாற்றம் தன் மன மாற்றத்திற்காகத்தான் என்று நினைத்துக்கொண்டாள்.

கற்பகம் அப்போதுதான் 'சொப்பிங்' போய்விட்டு ஆட்டோவில்; வந்து இறங்கினாள். பைகளை எல்லாம் உடன்வந்த சேகர் தூக்கிக்கொண்டு போக, ஆசுவாசமாய் மூச்சுவிட்டாள்.

'ஸ்......... அப்பாடா. என்ன வெய்யில். மனுசரை போட்டு வறுத்தெடுக்குது.' காயத்திரியைப் பார்த்துவிட்டுச் சொன்ன கற்பகத்திடம் குசலம் விசாரித்தபின் தாய் கொடுத்தனுப்பிய தோசையை அவளிடம் கொடுத்துவிட்டுத் திரும்பினாள்.

ஏற்கனவே நிலைமை தெரிந்திருந்ததால் காயத்திரியின் மனதை கிளறி மேலும் நோகடிக்க கற்பகம் விரும்பவில்லை.

 'என்ன கெதியில வந்திட்டாய்.....' மகளின் முகத்தில் பார்வையைப் பதித்தபடி கேட்டாள் ராஜேஸ்வரி.

எப்பொழுதும் 'இவ்வளவு நேரமா அங்க போய் என்ன கதை' என்று அதட்டும் தாய் இப்படிக் கேட்க ஆச்சரியமாய்ப் பார்த்தாள் காயத்திரி.

'கனடாவில இருந்து வந்திருக்கிறாராம் அன்ரியின்ற மகன். நல்ல தங்கமான குணம். யார் பார்த்தாலும் ஆசைப்படுவீனம். அவ்வளவு வடிவான பொடியன்' என்ற ராஜேஸ்வரி மகளை குறிப்பாய் பார்த்தாள். பதில் எதையும் கூறாமல் உள்ளே நடந்தாள் காயத்திரி.

'எல்லாத்தையும் நான் தான் தீத்தவேணும் போல இருக்குது. தானாய் புரிஞ்சுகொண்டு எப்பதான் நடக்கப்போறாளோ'. ராஜேஸ்வரி மகளின் காதுகளில் கேட்கும்படி  முணுமுணுத்தாள்.

ராஜேஸ்வரியின் பேச்சு பூடகமாக மகளுக்கு எதையோ உணர்த்தியது. புரிந்தும் புரியாதவள்போல் தன் அறையை நோக்கி நடந்தாள்.

காயத்திரி போவதையே பார்த்துக் கொண்டு நின்றான் சேகர். தாய் சொல்லி காயத்திரியின் நல்ல குணங்களை அறிந்திருந்தான் அவளது நிலையை நினைக்கும் போது அவனுக்கும் வருத்தமாகத் தான் இருந்தது.

பக்கத்து வீடு என்பதால் எதேச்சையாய் காயத்திரியை சந்திக்க அவனுக்கு நிறையவே வாய்ப்புக் கிடைத்தது. அப்போதெல்லாம் மெல்லிய ஒரு புன்னகையோடு கடந்து சென்று விடுவாள் காயத்திரி.

'அமைதியான, அடக்கமான பெண்.' தனக்குள் நினைத்துக்கொண்டான்.

குரங்கு மனம் ஏனோ கௌரியின் நினைவுக்குத் தாவியது. கௌரியைத் தன் வாழ்க்கையில் சந்திக்காமலே இருந்திருக்கலாம் போல மனம் வலித்தது.

எப்போது விரிவுரைகள் முடியும், எப்போது கௌரியை மீண்டும் சந்திப்பது என்ற ஆவலுடனேயே அந்த பல்கலைக்கழக நாட்கள் நகர்ந்தன.

கோல்பேஸ் கடற்கரையிலும், பூங்காக்களிலும்....... என்ன இனிமையான சந்திப்புக்கள்......

கச்சான் கொரித்தபடி.....,

ஐஸ்கிரிமை நக்கியபடி அவள் மடியில் சரிந்து கிடப்பதே தனி சுகம்.......

கடைவீதிகளில் அவர்கள் கால் பதிக்காத நாளே இல்லை. தனக்கு விருப்பமானவற்றை எல்லாம் ஆசையுடன் சேகருக்குக் காட்டி வாங்கிக்கொள்வாள் கௌரி. காதலியின் சின்னச் சின்ன தேவைகளையெல்லாம் நிறைவேற்றாத காதலன் இருப்பானா? காதல் போதை தந்தை படிப்புச் செலவுக்கு என்று அவ்வப்போது தருவதையும், அம்மாவிடம் குழந்தையைப் போல அடம்பிடித்து வாங்கிவரும் பணத்தையும் காதலுக்கே தானமாக்கினான்

ஆனால் அவள் தேவைகளும், ஆசைகளும் பெரிதாக இருந்தன. இரண்டு ஆண்டுகள் இனிமையான காதல் தொடர்ந்தது.

தன்னிடமிருந்து கௌரி விலகிச் செல்வதை சேகர் உணர்ந்தபோது எவ்வளவோ விடயங்கள் அவள் வீட்டில் நடந்து முடிந்திருந்தன.

கௌரி முதலில் சேகரைச் சந்திப்பதை தவிர்க்கத் தொடங்கினாள். சேகர் அவளுக்காக பல மணி நேரம் காத்திருந்துவிட்டு வீடு திரும்புவான்.

எதேச்சையாக சந்தித்துக்கொண்டால் இரண்டு வார்த்தைகளிலேயே பேச்சை முடித்துக்கொண்டு கிளம்பிவிடுவாள்.

கௌரியின் மாற்றம் புரியாத புதிராக இருந்தது சேகருக்கு.

அன்று சேகர் லைப்ரரியின் பின்புறம் இருந்த பென்ச்சில் அமர்ந்துகொண்டு கௌரியை நினைத்துக்கொண்டிருந்த வேளை அவளே எதிரில் வந்தாள்.

சேகரால் நம்பமுடியவில்லை.

அவளோ இவனை பார்த்துவிட்டு தெரியாதது போல வேகமாக நடக்கத் தொடங்கினாள்.

'என்ன கௌரி பார்க்காதது போல போகிறீர்? கொஞ்சம் நில்லும். நான் உம்மோட கதைக்கவேணும்'. கௌரியின் வழியை மறித்து நின்றான் சேகர்.

அவனை நிமிர்ந்து பார்க்காது மௌனமாக நின்றாள் கௌரி.

'என்னோட என்ன கதைக்கவேணும். கெதியாச் சொல்லுங்க, நான் அவசரமாக போக வேணும்' பிடி கொடுக்காமல் பேசினாள் கௌரி. அவனுடன் நின்று பேச விருப்பமற்று மெதுவாக நடக்கத் தொடங்கினாள்.

'என்ன கௌரி புதுசா அவசரப்படுகிறீர். முந்தியென்டால் மணிக்கணக்காக என்னோட நின்டு  கதைப்பீர். இப்ப உமக்கு என்ன நடந்தது'

'அப்பிடி ஒன்டும் இல்ல. நான் எப்பவும் போலத்தான் இருக்கிறன்' தோலைக்குலுக்கி முகத்தை திருப்பிக் கொண்டாள்.

'அப்ப வாரும். கொஞ்ச நேரம் இருந்து கதைச்சுட்டுப்; போகலாம்'

தூரத்தில் அவள் வழமையாகச் செல்லும் பேருந்து வந்துகொண்டிருந்தது. கௌரி துரிதமானாள்.

'எனக்கு நேரம் போகுது. உங்களோட நின்டு கதைச்சுக்கொண்டிருக்க எனக்கு நேரமில்ல. பஸ் வருகுது நான் போகவேணும்'

'என்ன கௌரி? நீர் முந்தி மாதிரி இல்ல. என்; 'எவொயிட்' பண்ணப்பாக்குறீர்'

'அப்பிடி ஒன்டும் இல்ல........ எனக்கு அவசரமாப் போகவேணும்'

'இல்ல நீர் எதையோ என்னட்ட மறைக்கிறீர். உமக்கு வீட்டில ஏதும் பிரச்சனையா? எங்கட விசயம் உம்மட வீட்டில தெரிஞ்சு போயிட்டுதா?' அக்கறையாய் நெருங்கினான் சேகர்.

மலுப்பி, ஏதேதோ பேசினாள் கௌரி. எவ்வளவு கதைத்தும் அவள் சரியாக பதிலளிக்கவில்லை. பிரச்சனை என்னவென்று தெரியாமல் தவித்தபடி அவள் பின்னால் நடந்தான்.

'உம்மட மனசுல என்ன இருக்குதென்டு எனக்கு நேரடியாச் சொல்லுமன். ஏன் இப்பிடி என்ன சித்திரவதை செய்யுறீர்'

கௌரி அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. 'பஸ் வந்துட்டுது நான் போறன்' என்றபடி பஸ்ஸைப் பிடிக்க அவசரம் காட்டினாள்

'கௌரி எனக்கு பதில் சொல்லிவிட்டுப் போம்' சேகர் பொறுமையை இழந்தான்.

'எனக்கு உங்களோட இப்ப நின்டு கதைக்க நேரமில்ல. தயவுசெய்து இனிமேல் என்னோட கதைக்க முயற்சி செய்ய வேண்டாம். எனக்கு பிடிக்க இல்ல. நான் போறன்.' என்றபடி சனக்கூட்டத்தில் புகுந்து பஸ்ஸில் தொற்றிக்கொண்டாள். பஸ் புறப்பட்டுப் போவதையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான் சேகர். இதயம் இரண்டாய் பிளந்து விட்ட வேதனையில் சிலையானான்;. கௌரி சொல்லிவிட்டுப் போன சொற்கள் மீண்டும் மீண்டும் காதில் வந்து மோத அசைவற்று நின்றான். அவன் எதிரே கவிதா நின்றுகொண்டிருந்தாள்.

கவிதாதான் சேகரிடம் விசயத்தை தயங்கிய படி சொன்னாள்.        

'சேகர், அவளுக்கு வீட்டில கல்யாணம் பேசுகீனம் என்டு கேள்விப்பட்டனான். எனக்கு இதப்பற்றி சரியாத் தெரியாது.' கவிதா சொன்ன செய்தியில் மின்சாரம் தாக்கியதைப்  போல உணர்ந்தான் சேகர்

'வெளிநாட்டு மாப்பிள்ளையாம். போன கிழமை பொம்பிள பார்க்க வந்தவையாம். இவ்வளவும்தான் கௌரி என்னோட சொன்னவள்.'

மௌனமாய், நின்ற சேகரின் மனதில் சூறாவளி வீசிக்கொண்டிருந்தது. கௌரியின் விலகலுக்கான காரணம் புரிந்தது. அவன் இதயமே வெடித்துவிடும் போல இருந்தது. உலகமே திரண்டு தன் தலையில் விழுந்து விட்டதைப் போல உணர்ந்தான் சேகர்.

ப்போது கூட அந்த நினைவில் அவன் உடல் லேசாக நடுங்கியது.

'சீ. அந்த சனியன நினைக்கவே கூடாது. எப்பிடிப் பட்ட பிசாசு அவள். அவளிட்ட இருந்து கடவுள்தான் என்ன காப்பாத்தியிருக்கிறார்'.

தளர்ந்து போன மனதை வலுவேற்ற, எழுந்து அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்தான்;.  மனதை வேறு பக்கம் திருப்ப முயன்றான். விறாந்தையில் கற்பகமும், முருகேசரும் தொலைக்காட்சியில் அன்றைய செய்திகளைப் பார்த்து கவலையுடன் பேசிக்கொண்டிருந்தனர்.

யன்னல் திரையை நீக்கிவிட்டு வானத்தை வெறித்தான் சேகர். நட்சத்திரங்கள் கண்சிமிட்டிச் சிரித்தன. மெதுவாய் வீசிய தென்றல்க்காற்று மதில் மீது படர்ந்து பூத்திருந்த மல்லிகையின் வாசனையை திருடிவந்து அவன் அறை முழுதும் பரப்பியது சற்று இதமாய் உணர்ந்தான்.

காயத்திரியின் வீட்டில் மின்சார விளக்குகள் ஒளி பரப்பிக்கொண்டிருந்தன. இப்போதெல்லாம் கௌரியின் நினைவால் வேதனைப்படும்போது காயத்திரியின் அமைதியான முகம் நினைவில் வந்து ஆறுதல் தந்தது.

'காயத்திரி இப்போது என்ன செய்துகொண்டிருப்பாள். தூங்கியிருப்பாளா? இல்லையென்றால்  அந்த சுனாமிக் குழந்தைகளை நினைத்து அழுது கொண்டு இருப்பாளா... ?' 

அவனால் காயத்திரியையும், கௌரியையும் ஒப்பு நோக்காமல் இருக்க முடியவில்லை. 'என்ன அமைதியான குணம் காயத்திரிக்கு. பெண்களை குத்துவிளக்குக்கு ஒப்பிட்டது தவறில்லை'. அவளது அமைதியில், அழகில், அடக்கத்தில் ஒரு ஜோதி தெரிந்தது அவனுக்கு.

அவன் மறக்க நினைக்கும் அத்தியாயம் மறுபடி மறுபடி அவன் நினைவுகளில் வந்து ஆறிய புண்ணை கீறிப்பார்த்தது.

(11) 

ராஜேஸ்வரி தன் காரியத்தில் கண்ணாக இருந்தாள். எப்படியாவது சேகரை வலையில் சிக்க வைக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள்.

அப்பம், பின்னர் இளநீர், றம்புட்டான் பழம், பலாப்பழம், மாம்பழம் என்று ஏதாவது ஒன்றை காயத்திரி மூலம் கற்பகம் வீட்டுக்கு கொடுத்தனுப்பினாள். முடிந்தவரை சேகரையும், காயத்திரியையும்; அடிக்கடி சந்திக்க வைத்தாள்.

ஒரு நாள் கற்பகமும், சேகரும் சொப்பிங் சென்றபோது,

'நேற்று ஒரு சாரி வாங்கினனான். அதுக்கு பிளவுஸ் பீஸ் எடுக்கவேணும். எனக்கு நாரிப் பிடிப்பாய் இருக்குது. காயத்திரியையும் உங்களோட கூட்டிக்கொண்டு போங்க' என்று மகளை உடன் அனுப்பிவைத்தாள்.

கற்பகத்திற்கு ஒருநாள் திடீரென்று நெஞ்சுவலி வரவும் மகளிடம் தான் வைத்திருந்த புதிய தைலமொன்றை கொடுத்தனுப்பினாள். பின்னர் சுக்குக்காப்பி, இஞ்சிச் சோடா என்று மிகுந்த அக்கறையுடன் மகளைக் கொண்டு கவனித்தாள். மகளை கற்பகத்திற்கு ஒத்தாசையாய் உடனிருக்கும்படி செய்தாள் அம்மாவின் திடீர் கரிசனையைக் காண மகளுக்குச் சிரிப்புத்தான் வந்தது.

தாயின் திட்டம் அவளுக்குப் புரிந்தது

தாயின் ஜாடையைப் புரிந்து, அவளது கோபத்திற்கு அஞ்சி தாயின் இழுப்புக்கெல்லாம் இசைந்தாள் காயத்திரி.

காயத்திரி  வந்து வீடு கலகலப்பாய் மாற அதுவே கற்பகத்திற்கு மகிழ்ச்சியை கொடுத்தது. எப்போதும் 'உம்'மென்று இருந்த சேகர் முகத்தில்; காயத்திரியின் வரவு மாற்றத்தைக் கொடுத்திருந்ததை அவள் கவனிக்கத் தவறவில்லை.

கற்பகம் எதிர்பார்த்தது போல சேகருக்குப் பொருத்தமாக பெண்  பார்ப்பது என்பது சற்று சிரமமாகத்தான் இருந்தது

'அம்மா இன்னும் ஒரு வாரம்தான் எனக்கு லீவு இருக்கு. நான் கனடாவுக்கு போறேன். நீங்க ஆறுதலா கலியாண அலுவல்களை கவனியுங்க' என்றான் சேகர்

'இவனை ;ப்பிடியே விட ஏலாது. குடிச்சுக் குடிச்சே அழிஞ்சு போயிருவான்.....' சிந்தனையினூடே முணுமுணுத்தாள் கற்பகம்.

சேகருக்கும் வயது முப்பத்தைந்தை நெருங்கிக்கொண்டு இருந்தது. இப்போது தான் கலியாணத்துக்கு சம்மதம் சொல்லியிருந்தான். அவன் வந்து இரண்டு மாதங்கள் முழுதாய் முடிந்து விட்டது என்றால் கற்பகத்தால் நம்பமுடியவில்லை. சேகர் மீண்டும் கனடாவுக்குப் போகும் அலுவல்களைக் கவனிக்கத் தொடங்கினான். கற்பகத்தின் அவசரத்திற்கு பெண் தான் கிடைக்கவில்லை.

'அந்தப் பொடியன் சேகருக்கு அவை பொம்பிள தேடுகீனம். உன்னை அவனுக்கு பிடிச்சுதென்றால் அவை மாட்டன் என்டா சொல்லுவீனம். யாரோட எப்பிடி நடந்து கொள்ள வேணும் என்டு உனக்கு இன்னும் விளங்குதில்ல'.

ராஜேஸ்வரி மகளின் மனதை மாற்ற அரும்பாடு பட்டுக்கொண்டிருந்தாள். அவள் கபிலனை மறந்து, சேகரை வசியப்படுத்த வேண்டும். மகளுக்கு உபதேசப்பதிலேயே அவள் பொழுது கழிந்தது.

'அந்த சேகரப் பாத்தா நல்ல பொடியனாத் தான் தெரியுறான். கற்பகம் அன்ரியும், அங்கிலும் உன்னோட எவ்வளவு பாசமா இருக்கீனம். அறிஞ்சவெ தெரிஞ்சவேட்டத்தான் இந்தக் காலத்தில சம்மந்தம் வைக்கவேணும். எல்லாரையும் நம்ப ஏலாது. கடைசியில நீ அழுதுகொண்டு வந்து என்னட்ட நிக்கக்கூடாது. என்ர கவலையெல்லாம் அதுதான்.'

தாய் அன்பாய் அக்கறையாய் தலையை வருடியபடி சொல்லவும், காயத்திரிக்கும் அதில் ஏதோ உண்மை இருப்பது போலத் தான் தோன்றியது.

'நீ கபிலனோட சுத்தினது எல்லாம் அவையளுக்கு நல்லாத் தெரியும். நான் நேரடியா போய் இந்த விசயத்தைப் பற்றி கதைக்க ஏலாது. நீ சேகரோட பழகிறதில தான் எல்லா முடிவும் இருக்குது. நான் சொல்லச் சொல்ல நீதான் அப்ப கேட்கயில்லை. இனியாவது நான் சொல்லுறதைக் கேட்டு நட' தினமும் மகளுக்கு ராஜேஸ்வரி உபதேசம் செய்தாள்.

'எல்லாம் உன்ர நன்மைக்குத் தான் சொல்லுறன்' அருகில் அமர்ந்து கரிசனையாய்  தாய் கூறவும் நெகிழந்து போவாள் காயத்திரி. அவளையும் அறியாமல் சேகரின் மீது ஒரு பிடிப்பு ஏற்படத் தொடங்கியது. அதற்காக அவனுடன் போய் வலிந்து பழகுவதென்றால் அவளுக்குச் சற்று சிரமமாகத்தான் இருந்தது.

'சேகர் காத்துவாங்க வெளியில வந்து நிற்கிறார் போல. நீ சும்மா போய் அந்தப் பிள்ளையோட கதையென்' மகளைத் தூண்டிவிடுவாள்.

'வேற பெட்டையல் என்டால் என்ன மாதிரி உரசி உரசிக் கதைக்குங்கள். இப்ப பிள்ளையும் வயிறுமாய் எல்லோ வந்து நிக்குங்கள்' மகளின் காதுகளில் விழ வேண்டும் என்றே பேசினாள் ராஜேஸ்வரி.

'அம்மா எப்படிப் பழக வேணும் என்டு சொல்லுறா' நினைக்க உடல் கூசியது காயத்திரிக்கு. 'ஒரு தாய் இப்படியெல்லாம் நினைப்பாளா' என்றிருந்தது. பொங்கி வந்த கண்ணீரை அடக்கியபடி அவ்வப்போது சேகருடன் சிறிது நேரம் பேசிவிட்டு வரத் தொடங்கினாள்.

சேகரும் இயல்பிலேயே உம்மென்று இருப்பவன் அல்ல. கௌரியால் அவன் நெஞ்சில் பதிந்த வடுவுக்கு காயத்திரியின் நட்பை ஒரு நல்ல ஒத்தடமாக உணர்ந்தான். காயத்திரியுடன் சகஜமாக பேசத்தொடங்கியிருந்தான்.

எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தாற்போல அன்று ராஜேஸ்வரி போட்ட திட்டம் தான் காயத்திரிக்கு தாயின் மீது ஒரு வெறுப்பையே உண்டுபண்ணியது.

'ரிங்.....ரிங்......ரிங்'

தபால்காரன் அவர்களுக்குரிய கடிதங்களை எடுத்து நீட்டினார்.

காயத்திரி வெளியே வந்து தபால்காரனிடம் காகிதத்தை வாங்கினாள்.

'என்ன அன்ரி மார்க்கட்டுக்கு போறீங்களா' எதிர்ப்புறமாக கையில் கூடையுடன் வெளியில் கற்பகம் நின்றிருந்தாள்.

'ஓம் பிள்ளை, மார்க்கட்டுக்கு போயிட்டு வருவம் என்று வெளிக்கிட்டனான், 'அங்கிலும் கிளினிக்' போனவர் இன்னும் காண இல்ல' என்று கூறிய கற்பகம் ஆட்டோவில் ஏறிக்கொண்டாள்;. கற்பகம் சொன்ன செய்தி குளித்துவிட்டு ஈரத்துணிகளை வெளியே காயப்போட வந்த ராஜேஸ்வரியின் காதுகளில் விழுந்தது.

உடுப்புகளை அவசரஅவசரமாக காயப்போட்ட ராNஐஸ்வரி குறுக்குக் கட்டுடனேயே சென்று அடுப்பை மூட்டினாள். காயத்திரியை ஒவ்வொரு வேலையாக ஏவியபடி நன்றாக நெய்விட்டு மணக்க மணக்க கேசரியைக் கிண்டினாள்;. தட்டிலே போட்டு கேசரியை ஆறவிட்ட ராஜேஸ்வரி,

'போய் கால் முகத்தை கழுவி, வடிவா வெளிக்கிட்டுக்கொண்டு வா.'

தயாராகி வந்த மகளிடம் 'இந்த கேசரியைக் கொண்டு போய் அந்தப் பிள்ள சேகரிட்ட குடுத்துட்டு வா' மகளுக்கு கட்டளையிட்டாள்.

'அம்மா அன்ரியும், அங்கிளும் வெளிய ..............' காயத்திரியை இடைமறித்தது தாயின் குரல்.

'அதெல்லாம் எனக்குத் தெரியும். நான் சொல்லுறத நீ செய்' அதிர்ந்து போய் நின்ற  மகளின் கைகளில் கேசரியைத் திணித்தாள்.

'பொடியன் தனியத்தானே நிற்கிறான். இருந்து அவனோட கதை. சமயோசிதமாக நடந்து கொள். குடுத்துட்டு ஓடிவராத' என்றாள் ராஜேஸ்வரி.

'சமயோசிதமா....?' சிந்தனையுடன் நடந்தாள் காயத்திரி.

'பக்கத்து வீட்டுப் பிள்ள கீதா அந்தக் கடைக்காரன்ட மகன வளைச்சுப் போட்டு, வாயும் வயிறுமா வந்து நின்டுது. அடுத்த பேச்சில்லாமல் தாய் தகப்பன் கலியாணத்த செய்து வைச்சுதுகள். பெட்டையின்ட ஆக்களுக்கு ஒரு சல்லிக்காசு செலவு இருக்கேல்ல. அவளின்ட கெட்டித்தனத்தில ஒரு பாதியாவது இவளுக்கு இருந்தா எனக்கேன் இவ்வளவு கஸ்டம்' விறாந்தையில் கிடந்த ரப்பர் செறுப்பை கால்களில் மாட்டிக்கொண்டிருந்த காயத்திரியின் காதுகளில் தாய் சொல்வது தெளிவாகவே கேட்டது.

அசிங்கமாய்  இருந்தது காயத்திரிக்கு. தாய் சொன்ன 'சமயோசிதம்' புரிந்தது.

'சீ எப்படிப் பழகச் சொல்கிறா அம்மா'

'வேற தொழிலுக்கு அனுப்புறதும் ஒன்டுதான், இதுவும் ஒன்டுதான்'. ஆனால் அவள் அப்படி வளர்க்கப்படவில்லையே. உடம்பெல்லாம் பற்றியெரிந்தது அவளுக்கு.

காயத்திரி, கற்பகத்தின் வீட்டுக்கு வந்தபோது கதவு லேசாகத் திறந்து கிடந்தது. தயக்கத்துடன் உள்ளே எட்டிப்பார்த்தாள். சேகர் சோபாவில் அமர்ந்து டீபோவின் மீது கால்களைத் தூக்கிப்போட்டபடி தமிழ் திரைப்படம் ஒன்றில் மூழ்கியிருந்தான். காயத்திரி கதவை மெல்லத் தட்டினாள்.

காயத்திரி நிற்பதைக் கண்டதும் 'வாங்க.... வாங்க.....' என்றவன் அவசர அவசரமாக அறைக்குள் சென்று, தனது சேட்டை எடுத்து அணிந்தபடி வெளியே வந்தான்.

அவன் அமர்ந்திருந்த சோபாவின் அடியில் பாதி குடித்து முடித்த மதுப் புட்டியும், வெற்று கண்ணாடிக் குவளையும் இருந்தது.

'அம்மா, அப்பா ஒருத்தரும் இல்லையே.........' சேகர்.

'இந்தாங்க அம்மா குடுக்கச் சொன்னவா' என்றபடி அவனிடம் கிண்ணத்தை நீட்டினாள் காயத்திரி.

சேகரின் கண்கள்; லேசாக சிவந்திருந்தன.

'குடிச்சிருக்கிறாரோ.....?'

'என்ன படம் ஓடுது' ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக காயத்திரி பேச்சை ஆரம்பித்தாள். உடம்பெல்லாம் லேசாக நடுங்கியது. தாய் சொன்ன சமயோசிதம் ஒருமுறை நினைவில் வந்துபோனது.

உடனே திரும்பினால் தாயின் திட்டுக்கு ஆளாக வேண்டும். தானாகவே சென்று சோபாவில் அமர்ந்தாள். காயத்திரிக்கு நெஞ்சு படபடத்தது.

தனியாக ஒரு ஆண்பிள்ளை இருக்கும் வீட்டில்; அமர்ந்து அவனுடன் பேசிக்கொண்டிருப்பது அவளுக்கு அதுதான் முதல்தடவை. சங்கடமாக சோபாவின் நுனியில் அமர்ந்திருந்தாள்.

ராஜேஸ்வரியின் திடீர் வரவுகளும், மகளை வேண்டுமென்றே தன்னுடன் பேச வைப்பதும், காயத்திரி தயங்கியபடி தாயின் குறிப்பறிந்து செயல்ப்படுவதும் கற்பகத்தின் கண்களுக்கு தெரியாவிட்டாலும் சேகர் சிலநாட்களாகவே அவதானித்து வருகிறான்;. அவனுள் ஏதோ ஒருவித சந்தோசம். வேண்டும் என்றே சங்கடப்படும் காயத்திரியை வம்புக்கு இழுக்கத் தொடங்கினான்.

தாய் மாக்கட்டுக்கு புறப்பட்டதும், வாசல் வரை தாயுடன் கூட வந்த சேகரின் கண்களில் ராஜேஸ்வரி அவசர அவசரமாக காயத்திரியை அவர்களது சமையலறைப்பக்கம் இழுத்துச் செல்வது தெரிந்தது. அப்போதே காயத்திரியின் வரவை எதிர்பார்த்தான்.

குறும்பாய் சேகர் சிரிக்கவும், புறப்பட எழுந்தாள் காயத்திரி. சேகர் அவளை அமரச் சொல்லி பேச்சுக்கொடுத்தான். பேசியபடியே தொலைக்காட்சியையும் ஓடவிட்டான். என்ன பேசுவது என்று தெரியாமல் திணறிய காயத்திரியின் கண்களில் விழுந்தது மேசையின் மேல் கிடந்த அன்றைய பத்திரிகை.

உடனேயே அன்று பத்திரிகையில் வெளிவந்திருந்த தனது கவிதையை அவனுக்கு காண்பித்தாள். அதை வாசித்துக் காட்டினாள். அந்தக் கவிதை சுனாமி பற்றியதாக இருந்தது.

மதுவின் போதை சேகரின்; தலையை கிறுகிறுக்க வைத்திருந்தது.

'ரொம்ப முக்கியம் தான்'; காயத்திரிக்கு கேளாமல் முணுமுணுத்தன அவன் உதடுகள். அவள் உற்சாகமாக தனது கவிதையை வாசித்துக் காட்டினாள். சேகரின் விழிகள் இமைக்காமல் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தன.

கடலோடு சில நிமிடம்

கடலே
கடலலையே
!

உன்னை,
சுட்டுவிரல்
கொண்டு
தொட்டுப்பார்க்க
ஆசை

முழங்கால் தொடும் நீருள்
மூழ்கி
எழ ஆசை 

கால்களை நனைத்தபடி
கச்சான்
கொரிக்க ஆசை

நீண்ட தூரம் சென்று
நீச்சலடிக்க
ஆசை

கூட்டமாக சேர்ந்து
பந்து
விளையாட ஆசை

பொங்கி வரும் அலை நுரையை
கைகளில்
ஏந்த ஆசை

கடலே
கடலலையே
!

அப்பொழுது நாம்
வீட்டுக்குள்
இருந்து
கடலுக்கு
வந்தோம்

எப்பொழுது நீ
எங்கள்
வீட்டுக்குள்
வந்தாயோ
அன்றிலிருந்து

உன்னை
தொட்டுப்
பார்க்க அல்ல
தூரத்தே
நின்று
நினைப்பதற்கு
கூட
அச்சப்படுகிறோம்

ஆண்டு தோறும் - நாங்கள்
எங்கள்
ஊர் சாமிகளைத்
தீர்த்தமாட
கடலுக்கு
கொண்டுவருவோம்

எப்பொழுது நீ
எங்கள்
வீட்டு சாமிகளை
கடலுக்குள்
கொண்டு
போனாயோ
அன்றிலிருந்து

உன்னை
தொட்டுப்
பார்க்க அல்ல
தூரத்தே
நின்று - உன்னை
நினைப்பதற்கு
கூட
அச்சப்படுகின்
றோம்.

சுனாமி வந்துபோய் ஆண்டுகள் ஆகலாம், ஆனால் இந்தக் காயங்கள் எப்பொழுதுதான் ஆறப்போகிறதோ.

 'போரின் கோரப் பிடியில் சிக்கி அவல வாழ்க்கை வாழ்ந்த மக்களை இயற்கையும் விட்டுவைக்கவில்லையே.' சேகரின் இதயம் அந்த மக்களுக்காக கண்ணீர் வடித்தது. அந்த போதையிலும் அவன் கவிதையை ரசித்தது காயத்திரிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அவள் கவிதையை வாசித்துக் கொண்டிருக்கும்போதே சேகர் அவள் உட்கார்ந்திருந்த சோபாவின் மறுமுனையில் வந்து அமர்ந்துகொண்டான் ஒருகணம் தயங்கியவள் சுதி குறைந்த நிலையிலேயே கவிதையை வாசித்து முடித்திருந்தாள்.

சேகருக்கு அவளைப் பார்க்க கௌரியே அவன் பக்கத்தில் அமர்ந்திருப்பது போலத் தோன்றியது. தலையை ஒருமுறை சிலிர்த்துக் கொண்டான்.

கண்கள் சிவக்க, தன்னை விழுங்கிவிடுவது போல பார்த்துக்கொண்டிருந்த சேகரைப் பார்க்க அவளுக்கு அச்சமாக இருந்தது. இதயம் லேசாக படபடத்தது.

எழுந்திருக்க முற்பட்ட காயத்திரியின் கைகளை இறுகப்பற்றினான் சேகர்.

'இவ்வளவு சீக்கிரமா வீட்டுக்கு போனால், அம்மா உன்னை திட்டப் போறாவே' கடகடவென்று சிரித்தான் சேகர். அவமானத்தில் தலைகுனிந்தாள் காயத்திரி.

'என்னை உனக்கு பிடிச்சிருக்கா காயத்திரி?' என்றான். அதிர்ச்சியும், பயமுமாய் நிமிர்ந்து பார்த்தாள் காயத்திரி.

'பயப்படாத. எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. உனக்கு என்னை கலியாணம் கட்ட விருப்பம் தானே? ம்;.......' காயத்திரியின் தோள்களை வருடியபடி கேட்டான் சேகர்.

'பதில் சொல்லு காயத்திரி. ம்........ சொல்லு.......'

காயத்திரி அதிர்ந்து போனாள். நெருப்பின் தணலில் நிற்பவள் போல அமர்ந்திருந்தாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ஏதோ கனவில் நடப்பது போல இருந்தது. சேகர் அவளை மிகவும் நெருங்கி உட்கார்ந்தான். அவள் முகத்தில் சேகரின் மூச்சுக்காற்று வந்து மோதியது. கூடவே மதுவின் வாடையும்.....

'நான் போறன். பிளீஸ் என்னை விடுங்க' திமிறிக்கொண்டே விலகி விடுவிடென்று வீட்டை நோக்கி ஓடினாள். வாசலில் நின்று காயத்திரி போவதையே பார்த்துக்கொண்டு நின்றான் சேகர்.

அவனையும் அறியாமல் காயத்திரி அவன் இதயத்தில் வந்து அமர்ந்துகொண்டாள்.

ஆட்டோவுக்கு பணம் கொடுத்து அனுப்பி விட்டு திரும்பிய முருகேசரும், கற்பகமும் திடுக்குற்று, சிலையாய் நின்றனர்.

வீடு திரும்பிய மகளை ஊடுறுவிப் பார்த்தாள் ராஜேஸ்வரி. உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு நொடியில் அவள் பார்வை சென்று மீண்டது.

தாயின் பார்வை அவளுள் தீயை மூட்டியது. தாயை முறைத்தபடி தன் அறைக்குள் புகுந்துகொண்டாள் காயத்திரி. மகளின் பார்வையும், தோற்றமும் ஏமாற்றம் தந்தது ராஜேஸ்வரிக்கு. தனது திட்டப்படி எதுவும் நடக்கவில்லை என்பதை மகளைப் பார்த்தபோதே புரிந்துகொண்டாள்.

(12)

காயத்திரியின் நினைவு அவனுள் ஒரு இன்ப உணர்வை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. முதல்நாள் அவளுடன் தான் நடந்து கொண்ட முறையை நினைத்து தனக்குள் குமைந்து கொண்டிருந்தான். எப்படியாவது அவளைச் சந்தித்து மன்னிப்புக் கேட்க வேண்டும்.

'நான் ஏன் அப்படி நடந்துகொண்டேன் என்று தன்னையே கடிந்துகொண்டான்.

'கௌரியை நான் வாழ்க்கையில் சந்திக்காமலே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அவளால் என் வாழ்க்கையை நானே சீரழித்து விட்டேன். இந்தக் குடிகாரனை கலியாணம் கட்ட காயத்திரி சம்மதிப்பாளா?' அவன் உள்ளம் பல்வேறு நினைவுகளில் சுற்றிச் சுழன்றது.

இடையிடையே கௌரியின் நினைவுகளும் வந்து போனது.

'ராட்சசி, என்னை என்ன மாதிரி தூக்கியெறிஞ்சாள். சீ அவளும் ஒரு பொம்பிளையா'

அவன் நினைவுகள் இறுதியாக கௌரியைச்  சந்தித்த அந்த நாட்களை அசை போட்டன.

கௌரியை எப்படியாவது சந்தித்து, அவளது உண்மை நிலையை தெரிந்துகொள்ள முயற்சி செய்தான் சேகர்.

அப்போதுதான் நண்பன் ஒருவனை சந்திப்பதற்காக கோயிலுக்குச் சென்றபோது அங்கே கௌரியை சந்திக்க நேர்ந்தது. கௌரியும் அங்கே அவனை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

கால்களைக் கழுவி உள்ளே வந்ததும், அவள் கண்கள் சிவாவைத் தேடின. சிவகுமார் அவள் திருமணம் செய்ய நிச்சயித்திருக்கும் சுவிஸ் மாப்பிள்ளை. ஏமாற்றத்துடன் விரைவாக ஒரு முறை கோயிலைச் சுற்றி வலம் வந்தாள்.

சிவாவைத் தேடி அவள் கண்கள் நாலாபுறமும் சுழன்றது. அப்போதுதான் அவளுக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. சுவர் ஓரமாய் நின்றுகொண்டு சேகர் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்;.

சேகரின் தோற்றம் வெகுவாக மாறியிருந்தது.

தேவதாஸைப் போல கன்னக்கதுப்புகளில் முடிகள் முளைத்து, முகத்தின் பாதியை மறைத்திருந்தது. சவரம் செய்து இரண்டு, மூன்று வாரங்கள் இருக்கும் போல் தோன்றியது. சிவந்த கண்கள் அவன் உறங்கமின்மையைப் பறைசாற்றியது. காற்சட்டைக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாமல் அணிந்திருந்த 'சேட்' பாதி வெளியில் தொங்கி கசங்கியிருந்தது. கண்களில் மின்னும் புன்னகை காணாமல் போயிருந்தது.

கௌரி அவனைக் கவனியாதவள் போல முகத்தை திருப்பிக்கொண்டாள்.

அதுவரை அவளுள் பொங்கி நின்ற உற்சாகம் வடிந்து விட்டது. சேகர்; தன்னைக் காணும் முன் புறப்பட வேண்டும் என்று எண்ணியவள், அவன் தன்னைக் குறிவைத்து நடந்துவரவும் அவசரமாக கோயில் பின்வீதியை நோக்கி நடந்தாள். நெஞ்சு திக்திக் என்று அடித்துக் கொண்டது. நெற்றியில் அரும்பிய வியர்வையை கைக்குட்டையால் ஒற்றி எடுத்த கௌரி, எச்சரிக்கை உணர்வுடன் கண்களை சுழல விட்டாள்.

அவளைப் பின்தொடர்ந்து சென்ற சேகர் இரண்டு எட்டில் அவளை அடைந்தான். கௌரியோ அவனுடன் பேசுவதற்கே விருப்பமற்றவளாய் நின்றாள். தனது ஆத்திரத்தை எல்லாம் கொட்டினான் சேகர். தனக்கு ஒன்றும் சம்மந்தம் இல்லாதவள் போல் எங்கோ பறாக்குப் பார்த்தபடி நின்றாள் கௌரி.

இறுதியாய் வெறி பிடித்தவன் போல கத்தத்தொடங்கிவிட்டான் சேகர். அவனால் கௌரியின் உதாசீனத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் எவ்வளவு நம்பியிருந்தான். மோசம் செய்துவிட்டாளே. அவளைப் பார்க்கப் பார்க்க உடம்பெல்லாம் எரிந்தது சேகருக்கு ஒரு பைத்தியக்காரனைப் போல தன்னை நெருங்கி நின்று வசைபாடும் சேகரைக் கண்டு பயந்த கௌரி பழியை தாயின் மீது போட்டாள்.

'அம்மா எனக்கு கல்யாணம் பேசுகிறா. நான் என்ன சொன்னாலும் கேட்கிறா இல்ல. அவவின்ற விருப்பப்படி நடக்க pல்லையென்றால்; மருந்து குடிப்பன் என்டு வெருட்டுறா. நான் என்ன செய்ய ஏலும்' பொய்யாக விசும்பினாள்.

கௌரியின் வார்த்தைகளை நம்ப சேகர் தயாராக இல்லை. தன்னை வஞ்சித்த அவளை தன் மனம் ஆறும்வரை ஆத்திரம் தீரத் திட்டினான். ஏதும் தெரியாதவள் போல் நடித்தாள் கௌரி.

'கௌரி நீர் நடிக்காதயும். உம்மைப்பற்றி எனக்குத் தெரியும். வெளிநாட்டு மாப்பிள்ளை என்றதும் உமக்கு எங்கட காதல் கசந்துவிட்டுது' வெறுப்பை உமிழ்ந்தன சேகரின் வார்த்தைகள்.

 'இல்ல சேகர். நான் சொல்லுறது உண்மை. என்னை நம்புங்க.' பொய்யாக நடித்தாள்.

அவனை ஓரக்கண்களால் பார்த்தபடி,

'பிளீஸ் சேகர், என்னை மறந்துடுங்க. அம்மா, அப்பாவை எதிர்க்கிற சக்தி எனக்கு இல்லை'

'என்னடி சொல்லுகிறாய்' சீறினான் சேகர். அவன் இவ்வளவு கோபப்பட்டு கௌரி பார்த்ததே இல்லை.

'என்னை என்ன இளிச்சவாயன் என்டு நினைச்சியா. என்னை விட்டுட்டு நீ வேற ஒருத்தனை கலியாணம் கட்ட நான் பார்த்துக்கொண்டு இருப்பேன் என்டு நினைச்சியா. பார் உனக்கு நான் நல்ல பாடம் படிப்பிக்கிறன்' குமுறும் நெஞ்சை வார்த்தைகளால் கொட்டினான். வாக்குவாதம் தொடர்ந்துகொண்டே போனது.

';....... சத்தம் போடாதீங்க. ஆக்கள் எல்லாம் எங்களத் தான் பார்க்கீனம்'

 

'காதலிக்கிறது ஒருத்தன, கலியாணம் கட்டுறது இன்னொருத்தன என்டு நடக்கிற உனக்கு வெட்கம், ரோசம் எல்லாம் வருகுதோ' கொதிப்புடன் கேட்டான் சேகர்.

அவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறிப்போனாள் கௌரி.

'பிளீஸ் சேகர், என்னை மன்னிச்சிருங்க, எனக்கு என்ன சொல்லுறது என்று தெரியேல்ல' தடுமாறிளாள் கௌரி.

நேரம் செல்லச் செல்ல கோயிலில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. சிவா வந்துவிட்டால் நிலைமை விபரீதமாக மாறிவிடுமே என்ற அச்சம் அவளுக்கு. அந்த இடத்தை விட்டு விலகுவதற்கு தருணம் பார்த்துக்கொண்டிருந்தாள் கௌரி. சேகரோ அவளை விடுவதாக இல்லை. ஒவ்வொரு சொல்லும் ஈட்டியாய் அவள் நெஞ்சைக் குத்திக் கிளறியது. பின்புறமாக பெண்களின் சந்தடி கேட்கவே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டாள் கௌரி.

'சேகர், நான் உங்களுக்கு சொல்ல வேண்டியதைச் சொல்லிப்போட்டன். இனி என்ர வாழ்க்கையில இப்பிடி குறுக்கிட வேண்டாம். அது உங்களுக்கு நல்லதில்ல. எனக்கு இன்னும் இரண்டு கிழமையில கலியாணம். அடுத்த கிழமையே நான் லண்டன் வெளிக்கிட்டுறுவன். தேவையில்லாமல் உங்கட மனதப் போட்டுக் குழப்பாமல் ஒழுங்கா உங்கட படிப்பைக்கவனியுங்க'

'ஏய் என்ன நீ எனக்கு அட்வைஸ் பண்ணுறியா. என்ர படிப்பைப் பற்றி நீ பேசுறியா......'

அவன் பேசுவதைக்; கேட்பதற்கு கௌரி அங்கே நிற்கவில்லை. வேகமாக நடந்து பின்னால் வந்த பெண்கள் கூட்டத்துடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினாள் சேகரால் அவளை தொடரமுடியவில்லை.

'கௌரி..... கௌரி.... நில்லும். பிளிஸ்....' காற்றில் கரைந்தது அவன் போட்ட சத்தம். கூட்டத்தை விலக்கி கௌரியைத் தேடியபோது அவள் ஆட்டோவில் ஏறிப்போவதைக் கண்டான். பித்துப்பிடித்தவனைப் போல நின்றான் சேகர். எதிர்காலமே சூனியமானதைப் போல உணர்ந்தான்

அதன்பின் நடந்ததை எல்லாம் இப்போது நினைக்கும் போது அவனுக்கு முட்டாள்தனமாகத் தான் பட்டது.

கௌரி தந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் எத்தனை நாள் மூளையில் முடங்கி கண்ணீர் விட்டு அழுதிருப்பான். எத்தனை நாள் பசியை மறந்து, தூக்கத்தை துறந்து அவஸ்தைப்பட்டிருப்பான்.

படிப்பையும் அத்தோடு நிறுத்திக் கொண்டான். வளாகத்தின் ஒவ்வொரு கட்டடமும் அவனுக்கு கௌரியை ஞாபகப்படுத்தியது.

கடைசியில் போதைக்கு அடிமையாகி, தன்னையும் அழித்து, பெற்ற தாய், தகப்பனையும் கண்ணீர் விட வைத்துவிட்டான்.

நல்ல வேளையாக தனது திருமணத்திற்கு என்று கனடாவில் இருந்து வந்திருந்த வசந்தன் மட்டும் அவனை தேற்றி, நல்வழிப்படுத்தியிருக்காவிட்டால், இப்போது சேகர் என்ற ஒருவனை எந்த மனநல மருத்துவமனையில் சேர்த்திருப்பார்களோ. அல்லது தாய், தந்தையையும் இழந்து, தன் வாழ்க்கையையே மறந்து, எங்கு சீரழிந்து உருத்தெரியாமல் போயிருப்பானோ அவனுக்கே தெரியாது.

 (13) 

முருகேசர் 'ஈசிச்செயாரில்' அமர்ந்து குட்டித் தூக்கம் போட்டுக்கொண்டிருந்தார். அவர் நாசியில் இருந்து மெல்லிய குரட்டை ஒலி வந்துகொண்டிருந்தது. சேகர் விறாந்தையில் அமர்ந்து அன்றைய பத்திரிகை ஒன்றைப் புரட்டிக்கொண்டிருந்தான்.

கற்பகம் இரண்டு போட்டோக்களை 'என்வளப்'பிலிருந்து எடுத்துப் பார்ப்பதும், பின்பு திருப்தியற்று வைப்பதுமாக இருந்தாள். புரோக்கர் கொடுத்துவிட்டுப் போயிருந்த படங்கள்  இரண்டும் ஏனோ அவளுக்குக்கூட பிடிக்கவில்லை. சேகரிடம் காண்பித்தாலோ,

'உங்களுக்கு பிடிச்சிருந்தால் சரி' என்று தனக்கு சம்மந்தம் இல்லாதவன் மாதிரிப் பேசுகிறான். வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. சேகர் மறுபடியும் கனடாவுக்குப் புறப்படும் நாளும் நெருங்கிக்கொண்டு இருந்தது.

'உங்களுக்கென்ன கவல. நல்லா கண்ணை மூடி நித்திரை கொள்ளுங்க' முருகேசரை நெருங்கித் தரையில் அமர்ந்த கற்பகம் புறுபுறுத்தாள். அன்று கடைக்கு போய்விட்டு ஆட்டோவில் வந்திறங்கியபோது காயத்திரி அவர்களுடைய வீட்டிற்குள் இருந்து வெளியேறிய விதமும், சேகர் பின்னாலேயே ஓடிவந்து தன்னைக் கண்டு அதிர்ந்துபோய் நின்றதையும் நினைக்கும்போது மனதிற்குள் ஏதோ ஒருவித நெருடல். மரியாதையின் நிமித்தம் மகனிடம் எதையும் வாய்விட்டு அவள் கேட்கவில்லை. சேகரும் ஒன்றும் சொல்லாமலேயே உள்ளே சென்றுவிட்டான்.

'சேகரின்ட கலியாணத்தை கெதியில முடிக்கவேணும்' என்ற அவசரமும் ஆவேசமும் அவளுள் ஏற்பட்டுவிட்டது.

பக்கத்தில் அரவம் கேட்டு சோம்பலுடன் கண்களைத் திறந்த முருகேசர் மனைவியை ஏற இறங்கப்  பார்த்தார்;. மறுபடியும் கண்களை மூடிக்கொண்டே மனைவியிடம் கேள்வியைத் தொடுத்தார்.

'இப்ப என்ன கேட்கிறாய் கோழித்தூக்கம் கலைந்ததில் கோபம் அவருக்கு.

'என்ன....... இவன் சேகருக்கு ஒன்றும் சரிவருகுதில்லயப்பா. ஒன்று சாதகம் பொருந்துதில்ல. இல்லையென்டால் பொம்பிளை நாங்க எதிர்பார்க்கிறமாதிரி திருப்தியாக இருக்குதில்ல.' கூறியபடி கன்னத்தில் கைகொடுத்து கவலையுடன் யோசனையில் ஆழ்ந்தாள்.

'இன்னும் ஒரு கிழமையில அவன் திரும்பவும் வெளிக்கிட வேணும். அதுக்கிடையில எப்பிடியும் கலியாணத்தை முடிச்சுப்போடவேணும் கலங்கிய கண்களுடன் புலம்பினாள் கற்பகம்.

முருகேசரும் பதில் பேசவில்லை. அப்போதுதான் சேகரே முன்வந்து அந்த யோசனையைச் சொன்னான்.

கற்பகத்துக்கு சந்தோசம் பிடிபடவில்லை. முருகேசருக்கும் சேகர் சொன்னது பிடித்துத் தான் இருந்தது. சேகரே விரும்புகிறான் என்றால் பிறகு யார் மறுப்பது. உள்ளூற அவர்கள் மனதிலும் அந்த ஆசை இருந்தது தான். ஆனால் மகன் சம்மதிக்க வேண்டுமே? காயத்திரி, ராஜேஸ்வரி இவர்கள் சம்மதிக்க வேண்டுமே?

'கையில வெண்ணெய வைச்சுக்கொண்டு ஊர் முழுக்க அலைஞ்சிருக்கிறம்' முருகேசரின் குரலில் புதுத்தெம்பு ஒன்று தெரிந்தது. ஒரு பெரிய பிரச்சனைக்கு முடிவு கிட்டிவிட்ட மகிழ்ச்சி அவருக்கு.

'பின்ன என்ன? நாங்கள் பார்த்துப் பார்த்து வளர்ந்த பிள்ள. அவளின்; குணத்துக்கும், நல்ல மனசுக்கும் அவள் எங்களுக்கு மருமகளாகக் கிடைக்க நாங்கள் குடுத்துவைச்சிருக்க வேணும். அந்தப் பிள்ள ஓமென்டு சொன்னா அது சேகரின்ர அதிஷ;டம்தான்.' கற்பகம் சொன்னாள்.

'ஏன் அப்பிடிச் சொல்லுறாய்? எங்கட பிள்ளைக்கும் என்ன குறை அவன் சிங்கக்குட்டி. அவன மாதிரி நல்ல குணமான மனுசன் அமைய எந்தப் பொம்பிள என்டாலும் புண்ணியம் செய்திருக்க வேணும்' உற்சாகமாய் மனைவியை வம்புக்கு இழுத்தார் முருகேசர். மனதில் பிறந்த சந்தோசம் முகங்களில் பிரதிபலித்தன.

'காயத்திரிய எங்களுக்கு தெரியாதா? அவையள் பார்த்த கலியாணமும் சரிவரேல்ல மற்றப்படி அவள் தங்கமான பிள்ளை.' கற்பகம் காயத்திரி புகழ் பாடத் தொடங்கி விட்டாள்.

சேகரின் முடிவில் திருப்தியான கற்பகத்திற்கு விசயத்தை இழுத்துக்கொண்டு போக விருப்பமில்லை. மறுநாளே நல்ல நாளாக இருக்க காலையிலேயே ராஜேஸ்வரியிடம் போனாள்.

கற்பகம் கேட்கவும் ராஜேஸ்வரிக்கு உள்ளூர மகிழ்ச்சிதான். பழம் நழுவிப் பாலில் விழுந்த கதைதான். இதற்காகத்தானே இத்தனை ஆயத்தங்கள் செய்திருந்தாள் அவள். அவள் எதிர் பார்த்ததை விட காரியங்கள் இலகுவில் முடிந்திருந்தன.

'அவர்களே வந்து காயத்திரியை கேட்கிறார்கள். இனி எந்தப் பிரச்சனையும் இல்லை.'என்று உள்ளூர நினைத்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் பிடிகொடுக்காது பேசினாள்.

இரண்டு நாட்களாய் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள் காயத்திரி.

அன்று சேகர் வீட்டுக்கு போனது, அங்கு நடந்த சம்பவம் என்று அவள் மனதுக்குள் ஆயிரம் உணர்வலைகள் வந்து மோதிக்கொண்டிருந்தன. தாயை மீறவும் அவளால் முடியவில்லை. தனக்குள் புழுங்கிக்கொண்டிருந்தாள். வெளியே கற்பகத்தின் குரல் கேட்கவும் காதைக் கூர்மையாக்கினாள். கற்பகம் சொன்ன செய்தியில் காயத்திரியின் மனம் பூரித்துப் போனாள்.

'சேகர் அன்றைக்கு சொன்னது பொய் இல்லை. அவர் என்னை தப்பாக கணக்கு போட்டுட்டார் என்று நினைச்சன். உண்மையான விருப்பத்தோடதான் அன்றைக்கு அப்பிடி என்னக் கேட்டிருக்கிறார். மதுபோதையில அப்பிடி நடந்துகொண்டார் என்று எவ்வளவு வேதனைப்பட்டேன்' பனித்திருந்த கண்களை துடைத்துக்கொண்டாள் காயத்திரி.

எத்தனை வெளிநாடடு மாப்பிள்ளைகளின்; கதைகளை அவள் கேட்டிருக்கிறாள் தாய் தகப்பன் கஷ;டப்பட்டு சேர்த்துவைச்ச சீதனம், நகை நட்டோட பெண்களின்ர உயிரிலும் மேலான கற்பையும் சூரையாடிக்கொண்டு 'பிளைட்' ஏறிப்போன ஆட்கள் எத்தனைபேர்?

கற்பகத்தின் பேச்சு அவளுக்குள் ஆயிரம் பூக்களாய் அர்ச்சித்தன. உலகமே பூவனமாய் அவளுக்குத் தோன்றியது. 'கடவுளே இந்த சந்தோசம் என்றாலும் எனக்கு நிலைக்க வேணும்' மனதிற்குள் அம்மனை வேண்டிக்கொண்டாள்.

காயத்திரி கற்பகத்திற்கும், தாயாருக்கும் குளிர் பானத்தை எடுத்து வந்தாள். அவளுடைய  முகத்தில் பிரதிபலித்த நாணத்தின் சாயல் கற்பகத்திற்கு நம்பிக்கையைத் தந்தது.

'வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் பிறகு காயத்திரியும் வெளிநாட்டுக்குப் போயிருவாள். அவளை அவ்வளவு தூரத்துக்கு அனுப்பிப் போட்டு நான் எப்பிடி நிம்மதியாய் இருக்கிறது?' என்ற ராஜேஸ்வரியின் பார்வை கற்பகத்தின் முகத்தில் பதிந்திருந்தது.

கற்பகம் ராஜேஸ்வரியை அறியாதவள் அல்ல. கற்பகம் பந்தாகாட்டுகிறாள் என்பது அவளுக்குப் புரிந்தது.

'அதுக்கேன் கவலைப்படுகுறீங்க. நேரம் வரேக்க காயத்திரி உங்களை தன்னோட கூப்பிட்டுவிடுவா தானே. தேன்மொழியோட ஒரு ஆறு மாதம், காயத்திரியோட ஒரு ஆறு மாதம் இருக்கலாம்' எப்படியாவது அவள் சம்மதித்தால் போதும் என்றிருந்தது கற்பகத்திற்கு.

ராஜேஸ்வரியைப் பொறுத்தவரை அவளுடைய திட்டத்திற்கு கற்பகம் அடிக்கல் நாட்டிவிட்டாள். சந்தோசத்தை வெளியில் காட்டாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டாள். காயத்திரிக்குத் தான் பெரும் திண்டாட்டமாக இருந்தது. 'அவவின்ர ஆசைப்படி அவையளே விரும்பி வந்து கேட்கீனம். ஏன் அம்மா ஏதோவெல்லாம் கதைக்கிறா.'

கடைசியாக கற்பகம், 'சேகர் காயத்திரியை கனடாவுக்கு எடுத்த கையோட, உங்கள களவா என்டாலும் கூப்பிட்டு விட்டுறுவான். நீங்க யோசிக்காதையுங்கோ' என்று ராஜேஸ்வரியிடம் உறுதிமொழி கூறிய பிறகுதான் அவள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாள்.

ஒருவாராய் ராஜேஸ்வரி சம்மதம் தெரிவித்ததே கற்பகத்திற்கு நிம்மதியாக இருந்தது.

(14) 

வாழ்க்கை எவ்வளவு விசித்திரமானது என்று நினைக்கும் போது சேகருக்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது. எத்தனை விதமான உறவுகள், உணர்வுகள். விரும்பியும், விரும்பாமலும் எத்தனை சம்பவங்கள் மனிதனை புடம்போட்டு, உரம் ஏற்றுகின்றன.

வாழ்க்கையே சூனியமாய், இனி தன் வாழ்க்கையில் பெண் என்பதே கிடையாது என முடிவு செய்திருந்த வேளை காயத்திரியின் உருவில் அவனுக்காக புதியதொரு வாழ்க்கை திறந்திருந்தது. அதன் ஒவ்வொரு படியையும் இன்பத்தின் அடிகளாய் கால்பதித்தான் சேகர்.

ராஜேஸ்வரி திருமணத்திற்கு சம்மதித்தது, காயத்திரிக்கும் தனக்கும் திருமணம் நடந்தது, பின்னர் ஒரு வாரத்தில் தான் கனடாவுக்கு வந்து அவளை ஸ்பொன்சர் செய்து கனடாவுக்கு எடுத்தது எல்லாம் கனவு போல் இருந்தது. இது எல்லாம் எப்படி சாத்தியப்பட்டது என்று நினைக்கும்போது சிலசமயம் சேகருக்கும் ஆச்சரியமாகத் தான் இருந்தது. அதன் பிறகு ராஜேஸ்வரியை நண்பனின் உதவியுடன் களவாக கனடாவுக்கு எடுத்தும்விட்டான்.

விமான நிலையத்தில் கலங்கிய கண்களுடன் காயத்திரி கையசைத்து விடை கொடுத்தது இன்னும் பசுமையாய் நினைவில் இருந்தது.

திருமணம் முடிந்து ஒருவாரம் காயத்திரியுடன் வாழ்ந்த பொன்னான நாட்களை அவனால் மறக்கவே முடியாது. அதன் ஆதாரமாய் காயத்திரி கருவுற்றிருக்கிறாள் என்ற செய்தியைக் கேட்டபோது அவன் வானத்தில் மிதந்துகொண்டிருந்தான்.

ஆனால் கடவுளுக்குத்தான் அவனுக்கு தொடர்ந்து சந்தோசமான விசயங்களைக் கொடுக்க மனம் வரவில்லை. அடுத்த மூன்றாம் மாதமே காயத்திரிக்கு கருச்சிதைவு ஏற்பட்டுவிட்டது. செய்தியை அறிந்ததும் அவன் பட்ட வேதனைக்கு அளவே இல்லை. என்றாலும் மனதைத் திடப்படுத்திக்கொண்டு மனைவியைத் தேற்றினான்.

காயத்திரியை அவன் உயிருக்கு உயிராய் நேசித்தான். அவளைப் பிரிந்திருந்த அந்த காலப்பகுதி அவனுக்கு பெரும் நரக வேதனையாய் இருந்தது. எப்போது காயத்திரி வருவாள் என்று அவள் வரவுக்காக ஒவ்வொரு நிமிடமும் காத்திருந்தான்.

காலங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. திருமணமாகி நான்காம் மாதமே காயத்திரி கனடாவுக்கு வந்து இறங்கியபோது சேகர் மகிழ்ச்சியின் எல்லையில் இருந்தான். வாழ்க்கை பூத்துக் குழுங்கும் நந்தவனமாக அவனுக்குக் காட்சியளித்தது.

இரண்டு வார விடுப்பில் கரீபியன் நாட்டிற்கு சுற்றுப்பயணம் போய் வந்தார்கள். சீ. என் ரவர், நயாகரா நீர்வீழ்ச்சியென்று நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளுடன் சந்தோசமாக பொழுதைக் கழித்தான்.

அவளுக்கு கார் ஓட்டக் கற்றுக்கொடுத்தான்.

காயத்திரிக்கு ஆரம்பத்தில் வெளிநாட்டு வாழ்க்கை இனித்தாலும், மற்ற தமிழ் பெண்களைப் போலவே அந்த வாழ்க்கை போகப்போகக் கசக்கத் தொடங்கியது. வீடு ஒரு சிறைக்கூடம் போலத் தெரிந்தது.

'ஐயோ இந்த நான்கு சுவருக்குள் வாழ என்னால் ஏலாது. வேலைக்கு நீங்க போன பிறகு மணிக்கூட்டையும், உங்கட போட்டோவையும் பார்த்துக்கொண்டு தனிய இருக்க என்னால ஏலாது' என்று தினமும் புலம்பத் தொடங்கினாள்.

'ஆபத்துக்கு கத்தினால்க் கூட உதவுறதுக்கு ஒரு மனுசர் இல்லை' சேகரின் மார்பில் சாய்ந்தபடி முணுமுணுத்தாள் காயத்திரி.

'அதுக்கு 911 அடிச்சால் காணும். உடன பொலீஸ் வந்து நிக்கும். வேற யாரும் வரத் தேவையில்லை' குறும்பாகச் சிரித்தான் சேகர்

'வெளிய வெளிக்கிட்டு வோக்கிங் போனாலும் முகம் பார்த்து சிரிக்கிறதுக்கு ஒரு மனுசர்  இல்லை. அக்கம் பக்கத்தில் இருக்கிற தமிழ் ஆட்களும் முகத்தை திருப்புகீனம். எனக்கு இப்பிடி இருக்க ஏலாது'

சாப்பிட்டு முடித்து தூங்கப் போனதும் காயத்திரியின் நச்சரிப்பு தொடங்கிவிடும்.

மனைவியின் மனநிலையைப் புரிந்துகொண்ட சேகர் தான் முன்பு வேலை செய்த 'பர்பியூம் கம்பனியில்' அவளை சேர்த்துவிட்டான். காயத்திரி வேலைக்குப் போகத் தொடங்கியதும், கையோடு புது வீடொன்றையும் வாங்கியிருந்தான் சேகர். காயத்தரியும் மெல்ல மெல்ல வெளிநாட்டு வாழ்க்கைக்குத் தன்னை பழக்கிக்கொண்டாள்.

காயத்திரி கனடாவுக்கு வந்த புதிதில் தாயுடன் கிழமைக்கு ஒருதடவை என்றாலும் தொலைபேசியில் பேசுவாள். அப்போதெல்லாம் ராஜேஸ்வரி ஒரே அழுகைதான். தேன்மொழியின் வீட்டாரோடு அவளுக்கு ஒத்துவரவில்லையாம்.

'இங்க எனக்கு இருக்க பைத்தியம் பிடிக்குது. என்னை கெதியில எடுத்துவிடு. உன்ர முகத்தைப் பார்த்துட்டு நான் நிம்மதியாக கண்ணை மூடுவன் ' என்பாள்.

'எப்ப பார்த்தாலும் கனவுல நீங்கள் ரெண்டுபோரும் தான் வந்து நிக்கிறீங்கள்;' மருமகனிடம்  உருகுவாள்.

'போன கிழமை எனக்கு சரியான காய்ச்சல். ஒழுங்கான சாப்பாடுமில்ல. என்னைக்  கவனிக்கிறதுக்கு ஆரு இருக்கீனம்? பசியும், காய்ச்சலுமாய் கனநேரமாய்  கவனிப்பார் இல்லாமல் மயங்கிக்கிடந்தனான். மேல் வீட்டில இருந்த பிள்ள பள்ளிக்கூடம் போக வந்தது, என்னைக் கண்டு ஆட்டோவில ஏற்றி ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகா விட்டால் இன்டைக்கு நான் உயிரோட இருப்பேனோ தெரியாது'. தாயின் நிலமை காயத்திரிக்கும் கவலையைக் கொடுத்தது.

ஓரொரு சமயம் காயத்திரி மீது ஆத்திரத்துடன் சீறிப்பாய்ந்தாள்.

'உனக்கென்ன நீ வெளிநாட்டுல மாப்பிள்ளையோட சந்தோசமாய் இருக்கிறாய். என்னைப் பற்றி உனக்கேன் அக்கற வரப்போகுது. இப்பிடியே கிடந்து நான் செத்துப்போறன்.'

தாயின் வார்த்தைகள் மகளைக் குத்திக்கிழிக்கும்.

ராஜேஸ்வரியின் நச்சரிப்பு தாங்கமுடியாமல் இருந்தது. இறுதியில் நண்பன் வசந்தனே மறுபடியும் உதவிக்கரம் நீட்டினான். வசந்தன் அரும்பாடுபட்டு ஏதோ ஒருவிதத்தில் ராஜேஸ்வரியை கனடாவுக்கு கொண்டுவந்து சேர்த்தான். ராஜேஸ்வரியை கனடாவுக்கு கொண்டு வருவதற்கு நிறையவே கஷ;டப்பட்டான் சேகர். தொடர்ந்து ஏற்பட்ட பணச்செலவுகள், கடன்கள் என்று சேகர் பணத்திற்காக கொஞ்சம் அல்லாடிப்போனான். விளைவு கணவன், மனைவி இருவரும் கடுமையாக உழைத்தனர். அவர்களின் உழைப்பின் கடுமையாலும், ராஜேஸ்வரியின் நச்சரிப்பாலுமே காயத்திரி வந்து நான்கு மாதங்களிலேயே ராஜேஸ்வரியையும் கனடாவுக்கு எடுக்கமுடிந்தது. தாய் வந்தபிற்பாடுதான், தம்மைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர் காயத்திரியும், சேகரும்.

(15) 

 'ரிங்......' 'ரிங்......'

 'ரிங் ......'  'ரிங்.......'

மேசை மீதிருந்த டொலிபோன் மணி ஒலியெழுப்பி காயத்திரியை அழைத்தது.

சேகர் வேலையின் இடைவேளையின்போது அவளை போனில் அழைப்பான். அவளது உடல்நிலை பற்றி அவன் அதிகம் அக்கறை காட்டக் காரணம் இருந்தது.

காயத்திரிக்கு இரண்டு, மூன்று தடைவைகள் குழந்தை உருவாகி இல்லாமல் போனதால் டாக்டர் கடினமான வேலைகள் எதையும் செய்யவேண்டாம் என்று எச்சரித்திருந்தார். காயத்திரி கொஞ்சம் பலவீனமாகவும் காணப்பட்டாள். அவளை வேலையில் இருந்து நிறுத்திய சேகர், தான் கூடுதலாக ஒரு பகுதிநேர வேலையிலும் சேர்ந்திருந்தான். அவன் வீட்டில் இருக்கும் நேரங்கள் மிகக் குறைவுதான். காயத்திரிக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து கொடுப்பான்.

'காயத்திரி எப்பிடி இருக்கிறாய்' கனிவாக விசாரித்தது சேகரின் குரல்.

'இருக்கிறன்' சோர்வாக பதிலளித்தாள் மனைவி.

'சாப்பிட்டாச்சா'

'ஓம் நான் சாப்பிட்டாச்சு. நீங்க சாப்பிட்டனீங்களா? ஒன்டும் மிச்சம் விடாமல் எல்லாத்தையும் சாப்பிடவேணும்' அன்புக்கட்டளையிட்டாள் காயத்திரி.

 'சரி அப்ப நான் வைக்கிறன்' என்றவனிடம் வரும்போது 'மோலு'க்கு நடக்கப்போன தாயையும் அழைத்து வரும்படி கூறிவிட்டு ரிசீவரை வைத்தாள்.

ராஜேஸ்வரி கனடாவுக்கு வந்ததும் ரொம்பவே மாறிவிட்டாள். தாய் வந்தால் தனக்கும் உதவிதானே என்று நினைத்திருந்தாள் காயத்திரி. ஆனால் ராஜேஸ்வரியோ மகளது நலனில் கொஞ்சம் கூட அக்கறை காட்டவில்லை. அவளுக்கு அதற்கு நேரமும் இருக்கவில்லை. கனடாவில் அவளுக்கு நிறைய நண்பிகள் சேர்ந்திருந்தனர். முதியோர் சங்கம், மாதர் சங்கம், கூட்டங்கள், விழாக்கள் என்று அவள் சரியான 'பிசி'யாக இருந்தாள்.

ராஜேஸ்வரி வந்த புதிதில்; மகளுக்கு ஒத்தாசையாகத் தான் இருந்தாள். வேலை முடிந்து வரும் கணவன், மனைவி இருவருக்கும் சுடச் சுடத் தேனீர் தயாரித்துக் கொடுத்தாள். விதவிதமான உணவுகளைச் சமைத்து மருமகனை அசத்தினாள். வீட்டை மொப் பண்ணி, பாத்திரங்கள் எல்லாம் கழுவி, அடுக்கி வைப்பாள். காயத்திரிக்கு என்று வீட்டில் ஒரு வேலையும் இருக்காது.

'பாவம். அம்மாவும் நாங்க வேலைக்கு போனபிறகு வீட்டுக்கயே அடைஞ்சு கிடப்பா. அவவை கோயிலுக்கு கூட்டிப் போ'

'இன்டைக்கு ஞாயிற்றுக்கிழமை அம்மாவோட பாக்கில ஒரு வோக்கிங் போவம்'

'நாங்க சொப்பிங் போற நேரம் அம்மா வீட்டில தனிய இருந்து யோசிப்பா. அவவ பக்கத்தில இருக்கிற மோல்ல விட்டுட்டு போவம்' என்று சேகர்தான் ராஜேஸ்வரியை பெரிதும் கவனித்தான்.

வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த ராஜேஸ்வரிக்கும் சேகரின் வாக்கு வேதவாக்காக இருந்தது. அந்த வெளித்தொடர்புகள் அவளுக்கு பல புதிய விடங்களை கற்றுக்கொடுத்தது. புதிய நட்புக்கள் கைகோர்த்தன.

சிலர் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்று ஒதுங்கிக்கொண்டனர்.

'எங்கட பொறுப்புகள் எல்லாம் தீர்ந்து போச்சுது. இன்னும் பிள்ளையள், பேரப்பிள்ளையள் என்டு அதுகளின்ட பிக்கல்பிடுங்கல்களுக்கு தலைய உடைக்க இனி எங்களால ஏலாது' என்ற மகேஸ்வரியின் நட்பு ராஜேஸ்வரிக்கு கனடாவை புரிந்து கொள்ள உதவியது.

'பிள்ளையள் தங்கட தேவையளுக்கும், பிள்ளையளப் பார்க்கிறதுக்கு ஆயா வேணும் என்றதுக்காகவும் தான் எங்கள வைச்சிருக்கீனம்' என்று மகேஸ்வரி சொன்னபோது அதில் உண்மை இருப்பதாகவே அவளுக்குத் தோன்றியது.

'வெளிநாட்டுக்கு வந்து அதுகள் எவ்வளவு கஸ்டப்படுகுதுகள். இனசனத்துன்ட உதவியும் இல்லாமல், மெசின் மாதிரி வேலை செய்துட்டு வருகுதுகள். நாங்க வீட்டில இருந்து ஒரு நேரம், ஒரு தேத்தண்ணி ஊத்திக்குடுத்தாலும் எவ்வளவு சந்தோசப்படுங்கள்' என்று நல்லம்மா சொல்வதில் அவர்களுக்கு உடன்பாடில்லை. நல்லம்மா தன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுடன் சந்தோசமாக இருந்தாள்.

'எனக்கு வயது பொயிட்டுது. ;வ்வளவு காலமும் பிள்ளையள் பிள்ளையள் என்று   கஷ்டப்பட்டு, இனி பேரப்பிள்ளையளையும் கழுவித் துடைக்கிறதென்டால் என்னால ஏலாது. அதுதான் சீனியர் ஹோமுக்கு வந்திட்டன்' மகேஸ்வரி இப்படித்தான் சொல்லுவாள்.

'தனிய வாழ்ந்து பாத்தால்தான் அதுன்ர வேதனை விளங்கும்' நல்லம்மா புறுபுறுப்பாள்.

'ஏதும் பிரச்சனையென்டால் 911க்கு அடிக்க வேணும்.'

'வயதுபோனவைக்கு அரசாங்கம் மாதாந்தம் காசு, தேவைப்பட்டால் தங்க இடம், வைத்தியசெலவு எல்லாம் குடுக்குது. ஒருத்தரிட்டயும் கையேந்தத் தேவையில்ல. எங்கட காசை நாங்கள் எங்கட விருப்பப்படி செலவழிக்கலாம். நாடுகள் சுத்திப்பார்க்கலாம்' கனகத்தின் பேச்சு ராஜேசுக்கு ஒரு கணம் மகாவை நினைவுபடுத்தியது.

'சீனியர் சிட்டிசன் என்டால் நிறைய சலுகைகள்'

எல்லாவற்றையும் புட்டுப் புட்டு வைத்தாள் கனகம். தனக்குத் தேவையான விடயங்களை ஒருவித கிரக்கத்துடன் மனதில் பதித்துக்கொண்டாள் ராஜேஸ்வரி.

'நான் இவ்வளவு காலமும் பட்ட கஸ்டம் எல்லாம் போதும். இனியாவது கொஞ்சம் நிம்மதியாக என்ர ஷ்டப்படி சந்தோசமா இருக்கவேண்டும். நானும் வாழ்க்கையில என்னத்தக் கண்டன?' என்ற எண்ணம் அவளுக்குள் வலுப்பெறத் தொடங்கியது. மகளுக்கு செய்து வந்த உதவிகள் மெல்ல மெல்ல குறைந்துபோனது. கோயில், குளம், பஜனை, கூட்டம் என்று ராஜேஸ்வரியின் காலம் கரைந்தது.

'ஏதோ என்ற கை, கால்ல பெலன் இருக்கிற வரைக்கும் தானே நானும் இப்பிடி எல்லாத்தையும் அனுபவிக்க ஏலும். நினைச்ச மாதிரி ஓடியாட ஏலும்'

அவளுள் புதைந்திருந்த சுயநலம் மெல்லத் தலைகாட்ட ஆரம்பித்தது.

புதிய நண்பிகள் சேர்ந்து கனடாவின் பல பாகங்களையும் சுற்றிப் பார்க்கப் புறப்படுவார்கள். ராஜேஸ்வரியும் அவர்களுடன் புறப்பட்டு விடுவாள்.

காயத்திரியும் போய் வரட்டும் என்று விட்டுவிடுவாள்.

ராஜேஸ்வரிக்கு ரீ.வி சீரியல்களைத் தவறாமல் பார்க்கவேண்டும். காலை ஒன்பது மணிக்கு விறாந்தையில் கிடக்கும் சோபாவில் கால்களை நீட்டி அமர்ந்து ரீ.வியை ஓன் செய்தால் மத்தியானம் ஒரு மணிவரை நாடகங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். ஒன்றையும் அவள் தவறவிடாமல் பார்ப்பாள். சில வேளைகளில் சாப்பாட்டையும் அந்த இடத்திலேயே வைத்து முடித்துவிடுவாள்.

 (16)

வெளியில் மரங்கள் எல்லாம் வெண்ணிறக் கம்பளி போர்த்தியிருந்தன. சிறு வெண் பூக்களாய் பனித்துளிகள் கொட்டிக்கொண்டிருந்தன. சில கீழே விழுவதும், பின் தரையைத் தொடாமல் மேலே எழுந்து பறப்பதுமாக, பஞ்சுத் துகள்களைப் போல காற்றில் அழகாக அலைந்தன. கண்ணாடி யன்னலின் ஊடாக வெறித்துப் பார்த்தபடி கோப்பியை பருகிக்கொண்டிருந்தான் சேகர். சூடான கோப்பி குளிருக்கு இதமாக இருந்தது.

'சரியாக ஸ்னோ கொட்டுது. வழுக்குதோ தெரியாது. கவனமாகக் கார் ஓடுங்கோ' அக்கறையாய் சொன்ன காயத்திரியின் கன்னத்தில் மெல்லக் கிள்ளிவிட்டு, குளோசெட்டில் தொங்கிக்;கொண்டிருந்த ஜக்கட்டை எடுத்து மாட்டிக்கொண்டான். மறக்காமல் கையுறையையும், தலைக்கு தொப்பியையும் எடுத்துக்கொடுத்தாள் காயத்திரி. கார்ச்சாவியையும், 'கான்போனை'யும் எடுத்து பொக்கற்றுக்குள் திணித்துக்கொண்டான். மனைவிக்கு அன்பு முத்தம் ஒன்றைக் கொடுத்து விட்டு வெளியேறினான்.

முன்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்த சேகருக்கும், காயத்திரிக்கும் ஆச்சரியம் காத்திருந்தது. கனடா அன்னை வெள்ளைத் துகிலுடுத்து நிர்மலமாய் காட்சி தந்தாள். ஒரு குழந்தையாய் மாறி அந்த பனிமேடுகளில் புரள வேண்டும் போல ஒரு குழந்தைத்தனம் சேகரின் மனதில் தோன்றி மறைந்தது. இயற்கையின் ஒவ்வொரு  பருவமும், ஒவ்வொரு அழகுதான். காயத்திரிக்கு அப்படியே நின்று பார்த்துக்கொண்டு நிற்க வேண்டும் போல் தோன்றியது. காற்றில் கலந்து வந்த குளிரில் உடல் சிலிர்த்து மெதுவாக நடுங்கத் தொடங்கியது.

'கவனம் சேகர்.'

பளிங்கு போல் உறைந்து போயிருந்த பனியில் கால் சற்று சருக்க காரை நோக்கி நடந்துகொண்டிருந்த கணவனை எச்சரித்தாள் காயத்திரி.

உள்ளே தனது அறையிலிருந்து யன்னலூடாக வெளி நிலைமைகளை அவதானித்துக்கொண்டிருந்த ராஜேஸ்வரி அவசரமாகக் குரல் கொடுத்தாள்.

'தம்பி, உந்த ஸ்னோவை ஒருக்கா வழிச்சுப் போட்டு போங்கோ. யாராவது வழுக்கி விழுந்தால் பிறகு பொலிஸ்கேஸ் ஆகப்போகுது. நான் விழுந்தாலும் என்ர முதுகுத்தண்டு முறிஞ்சுபோயிரும்.........'

ஏற்கனவே வேலைக்குத் தாமதமாகி விட்டிருந்தது சேகருக்கு.

காயத்திரி அவசர அவசரமாக 'கராஜைத்' திறந்தாள்.

காயத்திரியிடமிருந்து 'சவளை' எடுத்து ஸ்னோவை அள்ளி ஒதுக்குப் புறமாகக் கொட்டினான்.

'காயத்திரி நீ தள்ளி நில்லு. இதுக்குள்ள வந்து விழுந்து முறியப்போறியா' உதவி செய்ய முனைந்த மனைவியை அன்பாகக் கடிந்துகொண்டான்.

ஸ்னோவை வழித்து பாதையை துப்புறவு செய்தான். பனி கரைந்து போவதற்கு கொஞ்சம் உப்பைத் தூவி விட்டு காரை நோக்கி நடந்தான்.

குளிரில் கால், கை எல்லாம் விரைத்து, உடல் வலித்தது. சுழன்றடித்த காற்று 'ஸ்னோவை' அள்ளி வந்து அவன் முகத்தில் தெளித்தது. கண்ணை மறைத்த 'ஸ்னோவை'த் தன் புறங்கையினால் தட்டிவிட்டான். காரை ஸ்டாட் செய்தான். திறப்பை செலுத்தியதும் இருமுறை 'உர்... உர்...' என்று இரைந்துவிட்டு அடங்கிப்போனது கார் என்ஜின்.

மீண்டும் திறப்பை சுழற்றியபோது 'கார் ஸ்டாட் ஆகியது. 'என்ஜின்' சூடேறும் வரை பின்புறமாக சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான்;. அந்தக் குளிரிலும் முதுகுப் புறத்தால் வியர்வை வழிந்து ஓடியது. கைக்கடிகாரம் அவன் வேலைக்கு தாமதமாவதைக் காட்டியது. அவனுக்கு சமீபத்தில் வாசித்த கவிதை ஒன்று ஞாபகம் வந்தது.

கனவு கலைந்தது
கவிதை
பிறந்தது - அந்த
சில
நிமிட சந்தோசமும்
சட்டென்று
மறைந்தது

வங்கிக் கடன்
ஞாபகத்துக்கு
வந்தது

மனைவியின் நச்செரிச்சல்
காதைத்
துளைத்தது

குளிரால் வண்டி
ஓட
மறுத்தது

இவைகள் எல்லாவற்றையும் மறந்து
மீண்டும்
ஒரு முறை
கனவு
காண ஆசை தான்

ஆனால்....
வேலைக்குப்
போக
நேரம்
வந்து விட்டதே......!

புலம்பெயர் வாழ்வின் இயந்திரத்தனத்தை வெளிப்படுத்தும் அற்புதமான கவிதை அது.

'இனிமேல் காரை வெளியில விடக் கூடாது. ஸ்னோ கொட்ட வெளிக்கிட்டுது' சேகர் மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

கணவனின் கார் புறப்பட்டுச் செல்லும் வரை கண்ணாடிக்கதவுகளுக்குப் பின்னால் பார்த்துக்கொண்டிருந்த காயத்திரி, மெதுவாய் வந்து கதிரையில் அமர்ந்து கொண்டாள். அவ்வளவு நேரமும் நின்றுகொண்டிருந்ததில் கால்கள் வலியெடுத்தன. கால்கள் இரண்டும் வீங்கிப்போயிருந்தன.

'காயத்திரி எங்க என்ர சுவற்றரக் காண இல்ல' தன் மாடியறையில் இருந்து சத்தமாகக் கேட்டாள் ராஜேஸ்வரி.

எழுந்து நடப்பதே சிரமமாக இருந்தது காயத்திரிக்கு. தாய் போட்ட சத்தம் இன்னும் அருவருப்பாக இருந்தது. அணுங்கியபடியே எழுந்துவந்து தாய் தேடிய சுவற்றரை எடுத்துக்கொடுத்தாள்.

'சரி நான் போயிற்று வாரன். பின்னேரம் நாலு மணிபோல தம்பியக் கோயிலடிக்கு வரச்சொல்லு' கட்டளைகளைப் பிறப்பித்துவிட்டு நகர்ந்தாள் ராஜேஸ்வரி.

அவர்களுடைய வீட்டுக்கு அருகில் ஒரு கடைத்தொகுதி இருந்தது. அதில் ஒன்றிரண்டு தமிழ்க் கடைகளும் இருந்தன. அதுமாதிரியான சில குறிப்பிட்ட பொது இடங்களில்  வைத்துத்தான் தமிழ் வயோதிபர்கள் எல்லாம் எங்கேயாவது செல்வதென்றால் பஸ் ஒழுங்குகளைச் செய்வார்கள். அந்தந்த இடங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கும் நேரத்திற்கு பயணம் செய்ய விரும்புபவர்கள் எல்லாம் ஒன்று கூடிவிடுவார்கள். பயணம் முடிந்ததும் அந்த இடத்திலேயே கொண்டுவந்து வாகனங்களில் இறக்கிவிடுவார்கள். எனவே ராஜேஸ்வரிக்கும் பிரச்சனையில்ல. யாரையும் எதிர்பார்க்காமலேயே தனது தோழிமார்களுடன் நினைத்த இடங்களுக்கு போய் வருவா.

தன் அறையின் கண்ணாடி யன்னல் ஊடாக வெளியே கண்களை ஓடவிட்டாள் காயத்திரி.

தாய் தனது தோள்பையை கைகளில் ஏந்தியபடி எதிர்ப்புறமாக நடப்பது தெரிந்தது.

இப்போதெல்லாம் ராஜேஸ்வரியையும், காயத்திரியையும் ஒன்றாகப் பார்க்கும் புதியவர்கள் யாரும் இருவரையும் அக்கா, தங்கையோ என்று தடுமாறும் அளவுக்கு ராஜேஸ்வரியில் மாற்றம் தெரிந்தது. கவலைகள் அற்ற நிம்மதியான ஆரோக்கியமான, வளமான வாழ்க்கை, மனதுக்கும் உடலுக்கும் புதுத் தெம்பைக் கொடுத்திருந்தது. ராஜேஸ்வரி எப்போதுமே தூய்மையை விரும்புபவள். எனவே எப்போதும் பளிச்சென்று உடை உடுப்பாள். இப்போது இன்னும் தன்னில் ஒருவித அக்கறையுடன் உடுத்திக்கொண்டாள். ஒன்றிரண்டு நரை முடிகள் தலைகாட்டத் தொடங்கியதுமே காயத்திரியின் ஆலோசனையுடன் தலைமுடியை கொஞ்சம் குட்டையாக வெட்டி, இரண்டு வாரத்திற்கு ஒருதடவை 'ஹென்னா' பூசிக்கொள்வாள். அவளது குட்டைத் தலைமுடியை உயர்த்திப் பிடித்து ஒரு கிளிப்பைப் போட்டுக்கொள்வது அவளுக்கு இலகுவாக இருந்தது. முகமும், உதடும்; காயாமல் இருக்க கிரீம் பூசிக்கொள்ளவும் கற்றுக்கொண்டாள். வியர்வை மாறாதிருக்க லேசான வாசனைகொண்ட தைலம் பூசவும் அவள் ஒருநாளும் மறப்பதில்லை. அவை இந்த நாட்டின் அத்தியாவசியத் தேவைகளும் கூட. இந்த மாற்றங்களே ராஜேஸ்வரியின்  தோற்றத்திலும் மாற்றத்தைக் காட்டியது.

காயத்தரியின் பார்வை அப்பால் நகர்ந்தது.

பட்டுச் சேலைகள் சரசரக்க, அந்த வாகனத்தை சுற்றி பத்து பதினைந்து, சற்று வயது முதிர்ந்த பெண்களும், சில ஆண்களும் ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டு நின்றனர்.

அவர்களைப் பார்க்க காயத்திரிக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

பிள்ளைகளின் பொறுப்புக்கள் தீர்ந்த பின்னர் பெற்றோர் தங்கள் தங்கள் வழிகளை தாமே அமைத்துக்கொள்கின்றனர். எது எது தங்களுக்குத் தேவையோ அவற்றையெல்லாம் அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கு யாருடைய கட்டுப்பாடும் இல்லை.

இந்த நாடு முதியோர்களுக்கு எவ்வளவு சலுகை செய்கிறது. வாழ்வதற்கு போதிய பணம், மருத்துவ வசதிகள் என்று அத்தனையும் வழங்குகிறது. பிள்ளைகளை அவர்கள் நம்பியிருக்கத் தேவையில்லை. கை, கால்களில் வலு உள்ளவரை தங்கள் விருப்பம்போல வாழ்க்கையை வாழமுடியும் தமது பிள்ளைகள் இறுதிக்காலத்தில் உடனிருந்து பார்த்துக்கொள்வார்கள் என்று நம்பியிருந்த சில பெற்றோர், தனியாக வாழநேரும் போது அவர்கள் அனுபவிக்கும் தனிமைதான் கொடுமையானது. அதுதவிர அவர்களுக்கு வேறெந்தக் குறையும் இல்லை

ராஜேஸ்வரி அந்தக் கூட்டத்துடன் கலந்துகொண்டாள். சிறிது நேரத்தின் பின்னர் எல்லோரும் ஏறி அமர்ந்துகொள்ள வாகனம் புறப்பட்டது. காயத்திரி மெதுவாக வந்து படுக்கையில் சரிந்தாள். அவள் சிந்தனைகள் அந்த முதியவர்களை நினைத்து அதிசயித்தது.

வீதியில் தற்செயலாக சில முதியவர்களை பார்க்கும்போது அவளுக்கு மிகவும் வேதனையாக இருக்கும். தங்களுக்கு சமீபமாகச்செல்லும் ஒவ்வொரு முகங்களையும் ஏதோ ஒரு எதிர்பார்ப்புடன் கூர்ந்து நோக்கியபடி அவர்கள் உட்கார்ந்திருப்பார்கள். யாராவது எங்களுடன் பேசமாட்டார்களா? என்ற ஏக்கம் முகத்தில் தேங்கி நிற்கும்.

சிலர் இதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல் எங்களாலும் தனித்து வாழ முடியும் என்று தைரியமாய் தனித்துச் செயல்ப்பட்டனர். இறை வழிபாடு, யோகாசனம், இலக்கியக் கூட்டங்கள், கலை இலக்கிய நிகழ்ச்சிகள் என்று பொழுதை நல்ல முறையில் பயனுடையதாய் செலவிட்டு சந்தோசமாகக் கழித்தனர்.

 (17)

இந்தத் தடைவை வைத்தியரிடம்; சென்று வந்த காயத்திரிக்கும், சேகருக்கும் ஆச்சரியம் காத்திருந்தது.

காயத்திரி மீண்டும் கருவுற்றிருந்தாள்.

மறுபடியும்; அவர்கள் வீட்டில் சந்தோசம் வந்து குடியேறியது. வைத்தியர் காயத்திரியை அடிக்கடி 'செக்கப்பிற்கு' அழைத்து பரிசோதித்தார். அவளுக்கு உடல் நிலை அவ்வளவு ஆரோக்கியமாக  இருக்கவில்லை. எனவே இரண்டு கிழமைக்கு ஒருமுறை டாக்டரிடம் போக வேண்டியிருந்தது. காயத்திரி மாத்திரைகளை ஒழுங்காக எடுத்து, தன்னைக் கவனித்துக் கொண்டாள். பாட்டியாகப் போகும் மகிழ்ச்சியில் ராஜேஸ்வரிக்கு ஐந்து வயது குறைந்தது போல் துள்ளித் திரிந்தாள்.

அன்று காயத்திரியும், சேகரும் வைத்தியரிடம் சென்றனர் காயத்திரிதான் காரைச் செலுத்தினாள். முதல் நாள் இரவு கொட்டியிருந்த 'ஸ்னோ' கரைந்து ரோட்டு ஈரமாக இருந்தது. அவள் கனடாவுக்கு வந்து ஒரு வருடத்திலேயே கார் ஓட்டத்தொடங்கி விட்டாள். சேகர் அவளுக்கு ஒரு காரை அவர்களுடைய பிறந்த நாளுக்கு பரிசளித்திருந்தான். அவசர தேவைகளுக்கு மட்டுமே அவள் காரைப் பயன்படுத்துவாள். சிலசமயம் சேகர் பக்கத்தில் இருந்து காயத்திரி காரைச் செலுத்தும் அழகை பார்த்துக்கொண்டு இருப்பான்

'உனக்கு முதல் வந்த சுமதி கூட இன்னும் 'லைசன்ஸ்' எடுக்க இல்ல. என்ர மனுசியின்ர வேகத்துக்கு நான் அவளுக்கு பிளேன்தான் வாங்கிக்குடுக்க வேணும்' என்று அவள் காதுகளில் கிசுகிசுப்பான்.

இரத்தப் பரிசோதனைக்கு இரத்தத்தை கொடுத்துவிட்டு காரை 'பாக்கிங்கில்' இருந்து எடுத்தபோதுதான் அந்த 'பிளேயஸ்ஸை' கவனித்தாள். காரின் முன்பக்கக் கண்ணாடியில் சொருகி அது காற்றில் அசைந்தது. யாரோ பிரபலமான சோதிடர் பற்றிய விளம்பரம் அது. இந்தியாவில் கேரளாவிலிருந்து வந்த மாந்திரீகம் தெரிந்த சோதிடர் அவர். இன்னும் இரண்டு கிழமைகளே அவர் கனடாவில் தங்குவார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

காயத்திரி அந்த விளம்பரத்தை எடுத்துப் பத்திரப்படுத்திக்கொண்டாள். சேகருக்கு இதெல்லாம் பிடிக்காது.

'அவருக்குத் தெரியாமல் அம்மாவோட இன்றைக்கே போய் வரலாம்'.

காயத்திரி சேகரை அவன் வேலை செய்யும் இடத்தில் 'ட்ரொப்' பண்ணிவிட்டாள்.

காரை கராஐpல் பாக் பண்ணிவிட்டு வீட்டினுள் நுழைந்தாள்.

ராஜேஸ்வரி ரீ.வி சீரியலில் கரைந்து போயிருந்தாள். மகள் வந்ததுகூட அவளுக்குத் தெரியவில்லை.

பசி வயிற்றைக் கிள்ள, காலையில் ஒன்றும் சாப்பிடாமலேயே வெளியில் கிளம்பிச் சென்றது ஞாபகம் வந்தது. மேசை மீது அவள் அவித்து வைத்த புட்டு மீதமாகி இருந்தது. சூடாக்கிச் சாப்பிட்டுவிட்டு, தாய்க்கும் தனக்கும் தேனீர் தயாரித்து எடுத்துவந்தாள். தாயிடம் ஒரு கப்பை கொடுத்துவிட்டு அருகிலிருந்த சோபாவில் அமர்ந்து, சீரியலைப் பார்த்தபடி தேனீரைச் சுவைத்தாள்.

'சீரியல் முடியும் வரை அம்மாவை வெளியே கிளப்பமுடியாது.' பொறுமையாகக் காத்திருந்தாள்.

காலை முதல் ரீ.வியின் முன் குந்தியிருந்த ராஜேஸ்வரிக்கு ரீ.வியை 'ஓவ்ப்'; செய்த பின்னர்தான் கால்கள் விரைத்து வலியெடுப்பது புரிந்தது.

'ஐயோ......... ரெண்டு காலும் விரைச்சுப் போச்சுது' என்றபடி கால்களை மெதுவாக நீவி விட்டாள்.

காயத்திரி மெல்ல பேச்சை ஆரம்பித்தாள்.

'அம்மா இந்தியாவில இருந்து ஒரு சாமியார் வந்திருக்கிறார். அவர் சொல்லுறது எல்லாம் உண்மையாம். எங்கட குறிப்பையும் கொண்டுபோய் ஒருக்கா இந்த சாமியாரிட்ட காட்டிப்பார்த்தால் என்ன?. பிள்ளையின்ர பலன், எங்கட எதிர்காலப் பலன் எல்லாம் என்ன மாதிரி என்று கேட்டுவரலாம்....'

மகள் சொல்லவும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ராஜேஸ்வரி.

'சீச்சீ...... இந்த சாத்திரிமாரை நம்பாத. அவையள் காசுக்காக சும்மா இல்லாதது, பொல்லாதது எல்லாம் சொல்லுவாங்கள். நீ இந்தக் காலத்திலயும் உந்த சாத்திரங்களை நம்பிக்கொண்டிருக்கிறாய். பிறகு அவை சொல்லுற பரிகாரங்களுக்கு செலவழிக்க வேணும். உதுகளை விட்டுட்டு வேற அலுவல் இருந்தால் பார்' ராஜேஸ்வரி ஒரேயடியாய் அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

தாய் கூறுவதிலும் உண்மை இருப்பதுபோல் தோன்றவே, பேசாமல் தனது அறையை நோக்கி நடந்தாள்.

நாட்கள் விரைந்து சென்றன.

பனிமழை கொட்டிய காலம் முடிந்து, இலேசான வெப்பம் பரவத் தொடங்கியிருந்தது. மரங்கள் எல்லாம் துளிர்க்க ஆரம்பித்திருந்தது. புல்வெளிகள் எங்கும் பசுமை தொடரத் தொடங்கியது. வீதியின் இரு மருங்கிலும் பற்றையாக மஞ்சள் நிற மலர்கள் மலர்ந்து தலை அசைத்தன.

காயத்திரியின் வயிறு சற்று உப்பியிருந்தது. ஆசையுடன் வயிற்றை அடிக்கடி தடவிக்கொடுத்தபடி இருந்தாள். சேகர் மனைவியின் மீது தன் அன்பு முழுவதையும் அள்ளிச் சொறிந்தான். கண்ணின் மணியாக காயத்திரியைப் பாதுகாத்தான். விட்டால் தரையில் கூட நடக்க விடமாட்டான் போல அவளைத் தாங்கினான்.

அன்று வெள்ளிக் கிழமை. சேகர் வேலைக்குப் புறப்பட்டுப் போயிருந்தான். காயத்திரி நேரம் தாழ்த்தித்தான் கண்விழித்தாள். எழுந்து குளித்துவிட்டு வந்தபோது டெலிபோன் மணி விடாமல் ஒலித்தது.

காயத்திரியின் அரவம் கேட்டதும் முணுமுணுத்தபடி ரிசீவரைத் தூக்கினாள் ராஜேஸ்வரி.

பூசையறையில் தீபத்தை ஏற்றி, கண்ணை மூடிக்கொண்டாள். அதற்குள் இரண்டு, மூன்று முறை டெலிபோன் அடித்து ஓய்ந்திருந்தது.

'ஆரம்மா போனில' காயத்திரி கேட்டாள்.

'ஆரென்று தெரிய இல்ல. ஏதோ ரோங் நம்பர். திரும்பத் திரும்ப அடிக்கிறாங்கள்' என்று சினந்தபடி மேலே ஏறிச் சென்றாள்.

'இந்த 'ரெலிமாக்கட்டிங்' காரரால பெரிய கரைச்சல். ஒரே போன் அடிச்சடிச்சு, அந்த இன்சூரன்ஸ் வேணுமா, இந்த கிரிட்டிகல் இன்சூரன்ஸ் வேணுமா, குறைஞ்ச காசுக்கு போன் லைன் எடுத்துத் தரவா என்று ஒரே நச்சரிப்பு.' மனதுக்குள் நினைத்துக்கொண்டாள் காயத்திரி.

அலுப்புடன் நடந்து தாய் தயாரித்து வைத்த சூப்பை எடுத்து சுவை பார்த்தாள். வயிறு குமட்டிக் கொண்டு வந்தது. அப்படியே வைத்துவிட்டு வோஷ;ரூமுக்குள் நுளைந்தாள்.

(18) 

நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்து விட்டாள் காயத்திரி. சேகருக்கு அவளைப் பார்க்கச் சிரிப்பாக இருந்தது. காயத்திரியால் கொஞ்சத் தூரம் கூட நடக்க முடியவில்லை. மூசுமூசு என்று மூச்சை உள்ளிழுத்து விட்டாள். ஏழுமாத வயிறு வெளியே தெரிந்தது.

சேகர் தன் நாரியில் கைகளை ஊன்றி, வயிற்றை சற்று வெளியே தள்ளி, முதுகை வளைத்தபடி,

'அம்மாடி.....  ஏலாமல் இருக்குது என்றபடி குறும்பாக அவளைப் பார்த்துச் சிரித்தான்.

'உங்களுக்கு என்னைப் பார்க்க நக்கலாத்தான் இருக்குது' உள்ளூற அவனது அபிநயத்தை ரசித்துக்கொண்டு வெளியே கோபத்தைக் காட்டினாள்.

'இந்த நேரம் நீ கோவிக்கக் கூடாது. பிறகு நல்ல சண்டியன் தான் வந்து பிறப்பான்.'

'போங்க. இனி உங்களோட நான் வோக்கிங் வரமாட்டேன்' சிணுங்கினாள் காயத்திரி.

அவர்களுடைய வீட்டிற்கு அருகில் இருந்த மோலுக்கு அப்பால் ஒரு சிறிய பாக் ஒன்றும் இருந்தது. காயத்திரிக்கு கவலையில்லாமல் பொழுதுபோகும். தினமும் காலைப் பொழுதுகளில் மோலினுள்ளும், பாக்கைச் சுற்றியும் உடல் நிலைக்கு ஏற்ப மெதுவாக நடந்துவிட்டு வருவாள். சேகர் வீட்டிலிருக்கும் சமயங்களில் காயத்திரியுடன் தானும் கூட நடக்கப் புறப்பட்டு விடுவான்.

சேகர் மாடிக்குச் செல்ல, அவனுக்கு தேனீர் தயாரித்தாள் காயத்திரி. தேனீரைக் குடித்து விட்டு சேகர் நண்பனைச் சந்திக்கவென்று புறப்பட்டுவிட்டான்.

காயத்திரியின் கவனம் தாயின் மீது பதிந்தது. அவள் கிச்சனில் தேனீர் தயாரித்துக்கொண்டிருந்த சமயம் ராஜேஸ்வரி இரண்டு முறை தொலைபேசியில் யாருடனோ பேசுவது கேட்டது.

'அம்மா, ஆரு போன் எடுத்தவை.'

'... அது..... யாரின்டயோ சப்பட்டையின்ட போரைச் சொல்லி கேட்டாங்கள். அதுதான் ரோங் நம்பர் என்று வைச்சிட்டன்'

பதிலளித்த தாயை ஆச்சரியமாய்ப் பார்த்தாள் காயத்திரி.

'யாரோடயோ தமிழ்ல கதைச்ச மாதிரி கேட்டுதே....'

'ம்.... அதுவும் ரோங் நம்பர்தான் அவை கேட்ட ஆள் இங்க இல்லையென்று சொன்னனான். போன வைச்சிட்டீனம். நேற்றும் இப்பிடித்தான் ஒரே கரைச்சல்.'

காயத்திரியுடன் நின்று பேச மனமற்று அவசரமாக மாடிக்கு ஏறினாள்.

 'நான் குளிக்கப் போறன்' போகும் போது தன்பாட்டில் ராஜேஸ்வரி சொல்லிக்கொண்டாள்.

'விடிஞ்சதில இருந்து ஒரே போன் ரிங் பண்ணினபடி. யாரும் அடிச்சால் எடுக்காத. அவங்கள் தான் திரும்பத் திரும்ப எடுக்கிறாங்கள்' என்றபடி குளியல் அறைக்குள் நுளைந்தாள்.

காயத்திரிக்கு தெரியாதா என்ன? இப்படித்தான் தொலைபேசியின் தொல்லை. சிலவேளைகளில் வயரை அறுத்து எறிந்துவிட்டால் என்ன என்றிருக்கும் அவளுக்கு.

திரும்பத் திரும்ப அலறிக்;கொண்டே இருக்கும். இவள் எழுந்து வந்து பார்த்தால் பெயர்தெரியாத நபர் என்று டிஸ்பிளே காட்டும்.

'டிரிங்...... டிரிங்;......'

'டிரிங்...... டிரிங்.....'

தொலைபேசி மணி ஒலிக்கத் தொடங்கியது. சமையலில் மும்முரமாக இருந்தாள் காயத்திரி. தொலைபேசி தானாகவே ஒலித்து ஓய்ந்து போனது.

சில மணித்துளி இடைவெளிகளின் பின் மறுபடியும் தொலைபேசி அலறத் தொடங்கியது.

அம்மா இன்னமும் குளித்துக்கொண்டிருந்தாள்.

காயத்திரிக்குள் சந்தேகம் எழுந்தது.

'யாராவது தெரிஞ்ச ஆட்கள் தான் அடிக்கீனம் போல இருக்குது. ஏதாவது முக்கியமான செய்தியாகத் தான் இருக்கும். திரும்பத் திரும்ப அடிக்கீனம்...... சிலோனில இருந்து தேன்மொழிதான் எடுக்கிறாளோ...........'

சிந்தனைகள் ஓட கைகளை அலசிக்கொண்டு 'பமிலி ரூமு'க்குள் வந்தாள். 'லோங் டிஸ்டன்ஸ்' என்று டிஸ்பிளே காட்டியது.

கைகளில் இருந்த ஈரத்தை பேப்பர் ரவலால் ஒற்றியெடுத்தாள். ரீசீவரை எடுத்தாள்..

'ஹலோ!.....'

'ஹலோ நான் மகா கதைக்கிறன். லண்டன்ல இருந்து. ராஜேஸ்வரி இருக்கிறாவோ....'

'மகா அன்ரி நான் காயத்திரி கதைக்கிறன். எப்பிடி இருக்கிறீங்கள். பிள்ளையள் எல்லாரும் சுகமா இருக்கீனமா?'

'காயத்திரியா, நாங்கள் எல்லாரும் இங்க சுகமாய் இருக்கிறம். நீர் எப்பிடி இருக்கிறீர்?'

'நாங்களும் இங்க சுகமாய் இருக்கிறம் அன்ரி. அம்மாவோட கதைக்கவா போன் பண்ணினனீங்கள்? அவா குளிச்சுக்கொண்டு இருக்கிறா'

'ஓம் பிள்ளை நான் ராஜேசோட கதைக்கத்தான் போன் பண்ணினனான். அப்போத ரீசிவரை எடுத்தது அவதானே. என்ர குரலக் கேட்டதும் அவுக்கென்டு போன வைச்சிட்டா'

'... அப்பிடியொன்டும் இல்ல அன்ரி. என்ன விசயம் சொல்லுங்க. நான் அம்மாவோட சொல்லுறன் அன்ரி'

'பிள்ளை உங்களுக்குத் தெரியும்தானே. நீங்க கலியாணம் முடிச்சு வந்தாப் பிறகு நான் திரும்பவும் சிலோனுக்கு போனனான். அப்ப ராஜேஸை நீங்கள் கனடாவுக்கு எடுக்க ஸ்பொன்சர் பண்ணுறீங்கள் என்டு என்னோட சொன்னவா. அந்த அலுவலா ஓடுப்பட்டு திரிஞ்சவா. நானும் அவவுக்கு 'கெல்ப்' பண்ணினனான் பிள்ள. அந்தநேரம் அவசரத்துக்கு கைமாத்தாக ராஜேசுக்கு நான் ஒன்று, ஒன்றரை லட்சம் ரூபாய் சிலோன் காசு கடனாகக் குடுத்தனான். நான் வார கிழமை சிலோனுக்கு போறன் பிள்ளை. எனக்கு அந்தக் காசு அவசரமாத் தேவைப்படுகுது....... '

'ஓம் அன்ரி. அம்மா என்னோட சொன்னவா. இவர் கடன் வைச்சிருக்கக் கூடாது என்டு  தன்ர காசில எடுத்துக் குடுத்து உடன கடனை குடுக்கச்சொன்னவர். உங்களுக்கு அம்மா இன்னும் அந்தக் காசை அனுப்ப இல்லையோ'

'இல்ல பிள்ள. காசும் தர இல்ல. அவாவும் என்னோட இப்ப கதைக்கிறதில்ல. ரெண்டு நாளா போன் பண்ணுறன். ஆரோ போன் எடுக்கீனம். பிறகு என்ர குரலைக் கேட்டதும் கட் பண்ணுகீனம். வேற ஆரு ராஜேஸாகத் தான் இருக்கும்.'

'......................'

காயத்திரியால் நம்பமுடியவில்லை. 'சேகர் குடுத்த காசை அம்மா என்ன செய்தவா?. அம்மா கையில காசை வைச்சுக்கொண்டு வேணும் என்டே மகா அன்ரிக்கு விளையாட்டுக் காட்டுறாவோ'

'நான் உங்கட அம்மாவை நம்பித்தான் காசு குடுத்தனான். இப்பிடி ஏமாத்துவா என்டு நான் நினைக்க இல்ல. என்ர பிள்ளையளுக்கு தெரிஞ்சால் நல்லதில்ல பிள்ள' மகாவின் குரல் தளதளத்தது.

'அன்ரி நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்காதேங்கோ. இன்னும் ஒரு கிழமைக்குள்ள உங்கட காசு கைக்கு வரும் அம்மா ஏதோ யோசனையில மறந்திட்டா போல' என்றாள் தாயின் குற்றத்தை மறைக்க நினைத்தபடி.

காயத்திரி தாய்க்காக பரிந்து பேசவும் மகாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

'நீ நல்ல பிள்ள. எனக்குத் தெரியும். ஆனா உங்கட அம்மாவைப் பற்றி உனக்கு சரியாத் தெரியாது. அவா உனக்கு செய்திருக்கிற வேலை என்னென்டு தெரிஞ்சால்; நீ  சரியாகக் கவலைப்படுவாய் பிள்ள'

'அன்ரி, என்ர அம்மாவைப் பற்றி என்னட்டையே குற்றம் சொல்ல வாரீங்களா. உங்கட காசை அம்மா குடுக்க மறந்திட்டா பிழைதான். அது விரைவில உங்களிட்; வந்து சேரும்.' தொலைபேசியைக் கட் பண்ணத்தான் நினைத்தாள். மகா அதற்குள் முந்திக்கொண்டாள்.

'உன்ர அம்மா உனக்கு எவ்வளவு அநியாயம் செய்துபோட்டா பார். உனக்கு முதல்ல பேசின சம்மந்தம் எவ்வளவு நல்ல இடம். கபிலன் எவ்வளவு நல்ல பொடியன். உன்ர உள் மனசிலயும் அந்தப் பொடியனைச் செய்யுற ஆசை இருந்தது எனக்குத் தெரியும்.'

'அதெல்லாம் பழைய கதை அன்ரி. அதுகளைப் பற்றி இப்ப கதைச்சு என்ன பிரியோசனம். அம்மா ஏதாவது செய்தால் அது என்ர நன்மைக்காகத்தான் இருக்கும்'

'அப்பிடி நீ நினைச்சால் நீயொரு ஏமாளி. அந்தப் பொடியன் கபிலன் என்ர மூத்தவளின்ர சம்பந்த பகுதிக்கு நெருங்கின சொந்தம். மாப்பிள்ளைக்கு ஒன்றுவிட்ட சகோதரன் முறை. கபிலன் கலியாணம் நின்டு போச்சுது என்று சொன்னவன். என்னால நம்ப ஏலாமல் இருந்துது. உன்ர அம்மாவுக்கு வெளிநாட்டு மோகம் வந்திட்டுது. ஆதால அநியாயமா அந்த சம்பந்தத்தை பாதியிலயே முறிச்சுப் போட்டா'

'வெளிநாட்டு மோகம்.....?'

ஒரு முறை கபிலனின் முகம் நினைவில் நிழலாடியது. அவள் மறந்தே போயிருந்த பழைய கதையை மகா கிளறியது அருவருப்பாக இருந்தது.

கபிலனை இப்போது அவள் நினைப்பதே இல்லை.

ஒரு வாரகால தொடர்பு.... கசப்பான முடிவில் அறுந்துபோக, சில வாரங்கள் அழுததோடு அவள் தன்னைத் தானே தேற்றி, சகஜ வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தாள்.

கபிலனின் முகம் கூட இப்பொழுது அவளுக்கு சரியாக ஞாபகம் இல்லை.

'அன்ரி, அதெல்லாம் முடிஞ்சுபோன கதை. இப்ப என்னத்துக்கு அதைப் பற்றி கதைக்கிறியள். எரியுற வீட்டில புடிங்கினது லாபம் என்று எங்களுட்ட சுரண்டப் பாத்தவை. எங்களுட்டயும் இருந்திருந்தால் அம்மா தாராளமா குடுத்திருப்பா. கலியாணத்துக்கு நாளும் குறிச்சாப் பிறகு அவை சீதனத்தை கூடக்கேட்டால் அம்மாவும் காசுக்கு எங்க போவா? '

'இல்லைப் பிள்ளை நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேள். நான் சொல்லுறது பொய்யா இல்லையா என்று உன்ர அம்மாவையே கேள். அவையள் ஒன்டும் உங்களிட்ட காசு கூடக்கேட்க இல்லை. உங்கட அம்மாதான் முதல் தாரம் என்று சொன்ன தொகையை தரஏலாது என்று சொல்லியிருக்கிறா. எல்லாம் பேசி முடிவாகின பிறகு பேச்சு மாறினால் ஆருக்குத்தான் கோபம் வராது. அதுவும் நீங்கள் கொஞ்சம் தணிஞ்சு கதைச்சிருந்தால் அவை காசைப் பெருசா நினைக்கிற ஆக்கள் இல்ல. கபிலனுக்கும் உன்னை நல்லாப் பிடிச்சிருந்ததுதானே....'

'என்ன அன்ரி சொல்லுறீங்க.......' காயத்திரிக்கு குரல் நடுங்கியது.

'அதுதான் கபிலன் உங்கட அம்மா பேச்சு மாறுரா என்று அன்றைக்கு சொன்னவரோ'

'ரெண்டு பேரும் மனசுக்குள்ள ஒன்றை வச்சுக்கொண்டு, சரியான விளக்கம் இல்லாமல் சண்டை பிடிச்சிருக்கிறியள். அது ராஜேசுக்கு வாச்சுப்போச்சு.' மகா சொன்ன செய்தி இடியாய் நெஞ்சில் இறங்க நிலைகுலைந்து போனாள் காயத்திரி.

'நீயும் கபிலன சந்திச்சு கதைக்கேக்க தெளிவாக் கதைக்கயில்லை. ரெண்டு போரும் ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சாட்டினனீங்களே தவிர உண்மை என்ன என்று சிந்திக்க இல்லை. எல்லாம் ராஜேஸ் திட்டம் போட்டுத்தான் செய்திருக்கிறாள். அவளுக்கு உன்னை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு, அதுவும் அந்த சேகருக்கு குடுக்க வேணும் என்ற எண்ணம் வந்துட்டுது'

'என்ர அம்மாவா இப்பிடிச் செய்தவா.....?'

தொடர்ந்து மகா என்ன பேசினாள். அவள் எப்போது தொலைபேசி அழைப்பைத் துண்டித்தாள் என்று அவளுக்கே தெரியாது.

'ஆசையாய் கபிலனோட வாழப்போகிற நாட்களை கற்பனை பண்ணிக்கொண்டிருந்தன். அம்மாவா என்ர ஆசையில மண்ணை அள்ளிக் கொட்டினது ........'

'உண்மைதான் பிள்ள. ராஜேஸ் உனக்கு சேகரையே கலியாணம் செய்து வைப்பாள் என்டு நான் நம்ப இல்ல. நல்ல சம்மந்தம் உனக்கு கைகூடி வந்தது. நீயும் கபிலனும் எப்பிடிப் பழகினனீங்கள் என்று அவவுக்கு நல்லாத் தெரியும். உன்ர மனதில ஆசைய விதைச்சிட்டு அவவே அறுவடையும் செய்துபோட்டா. பெத்த பிள்ளையின்ர சந்தோசத்தை விட அவவுக்கு வெளிநாட்டுக்கு போக வேணும். சுகமா வாழ வேணும் என்ட வந்திட்டுது'

மகா சொன்னது மறுபடி மறுபடி வந்து காதில் ஒலித்தது.

அதிர்ச்சியில் உறைந்துபோனாள் காயத்திரி.

'என்ர அம்மாவா இப்படி?'

'அவையள் காசு கொஞ்சம் கூடுதலாகக் கேட்கீனம். நான் அவ்வளவு காசுக்கு எங்க போறது' தலையில் கை வைத்தபடி கண்ணீருடன் ராஜேஸ்வரி அழுத கோலம் அவள் கண் முன் வந்து போனது.

'மகளின் ஆசைகளை நிராசையாக்குகிறேனே என்று கொஞ்சம் கூட அந்தத் தாய்க்கு வலிக்கவில்லையா?'

ஒவ்வொன்றாக நினைக்க நினைக்க வேதனையும் வெறுப்பும் கூடியது.

'கபிலனை நினைத்து உருகிக்கொண்டிருந்த என்ர மனதை திசை திருப்ப எத்தனை திட்டங்கள் போட்டா. வெட்க துக்கமில்லாமல், வலியச் சென்று சேகரோட பழக வைச்சா. கீழ்த்தரமாக நடக்கத் தூண்டினா.'

தாயை நினைக்க அவளுக்கு கொதிப்பாக இருந்தது. வெறுப்பாக இருந்தது.

'குடியும் சிகரெட்டுமாக தேவதாஸ் கோலத்தில இருந்த சேகரை மாத்த நான் எவ்வளவு  கஷ்டப்பட்டேன். ஏதோ என்ர நல்ல காலம். அவரும் நல்ல மனுசன் என்றபடியால் இப்ப அந்தப் பழக்கங்கள் எல்லாம் கொஞ்சம் கொன்றோல் பண்ணீட்டார்.'  

'வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைச்சால் காணும் என்று நினைச்சாவே தவிர, அவரின்ட குண நடைகளைப் பற்றி அம்மா கொஞ்சம் கூட யோசிக்க இல்லையே'

'வெளிநாட்டில எல்லாருந்தான் குடிக்கீனம். அங்க போய் குடிக்காமல் இருக்கிறதென்டால் அது சரியான கஷ;டம். நீ அந்தப் பொடியனை திருத்தப் பார். அது நல்ல பொடியன். உன்ர கொன்ரோல்ல பொடியன் வந்துடும்' அன்று அம்மா சமாதானம் சொன்னதன் நோக்கம் அப்போது புரியவில்லை அவளுக்கு.

'பொடியனுக்கு கொஞ்சம் குடிப்பழக்கம் இருக்குதுதான். ஆனால் பார். எல்லாம் வீட்டுக்க தான். தாய் தகப்பனை, பெரியவையள மதிக்கத் தெரியுது. உன்னோட, தங்கச்சியோட எல்லாம் நல்லாத்தானே பழகிறான்.'

'குடிப்பழக்கத்தைத் தவிர அந்தப் பொடியனுக்கு வேற எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. நீயே பார்க்கிறாய்தானே.'

'உனக்கு அந்தப் பொடியன்ற சாதகம் நல்ல பொருத்தமாய் இருக்குது. உனக்குப் பிறகு நான் தேன்மொழியின்ர காரியங்களைப் பாக்கவேணும்.'

தாய் உபதேசங்களை அடுக்கிக்கொண்டே போனாள். அப்பொழுது தாய் சொல்வதெல்லாம்  சரியென்றே பட்டது காயத்திரிக்கு.

'நீ எப்ப கரைசேருவாய் என்று நான்; பார்த்துக் கொண்டு இருக்கிறன். உனக்கு மட்டுமா தேன்மொழிக்கும் வயது போய்க்கொண்டு இருக்குது. தேன்மொழியைப் பற்றி எனக்கு கவலையில்லை. அவளோட படிச்ச பொடியன், தாய் தகப்பனே விரும்பி வந்து கேட்டதுகள். நல்ல வசதி வேற. உன்னை கரைசேத்த கையோட அவளின்ட அலுவலையும் பார்த்திருவன். நீ அந்த சேகரைச் செய்தியென்டால் பிறகு அவளின்ர அலுவலையும் பார்க்கலாம் . நான் என்ர பாட்டில கவலையில்லாமல் கண்ணை மூடலாம்' கண்ணைக் கசக்கினாள் தாய்.

வயதுக்கு மீறின உழைப்பினாலும், மனம் நிறைந்த கவலைகளாலும் ஐம்பதுகளின் இறுதிப்படிகளில் இருந்தாலும் எழுபது வயதாய் தோற்றமளித்தாள் ராஜேஸ்வரி. அல்லும்பகலும் தங்களுக்காக கஷ;டப்பட்ட அன்னை தன்னிடம் கையேந்தவும் மறுக்க முடியாமல் தலையசைத்தாள் காயத்திரி.

குடியில் தன்னை அழித்திருந்த சேகருக்கு அவள் வலை வீசினாள் என்று தான் சொல்லவேண்டும். பிறகு திருமணத்தின் பின் அவனை ஓரளவாவது குடியிலிருந்து கட்டுப்படுத்த அவள் பட்ட சிரமம். அவள் கபிலனை மணந்திருந்தால் அவளுக்கு இந்தச் சிரமங்களும், வேதனைகளும் இருந்திருக்காதே.

'மாப்பிள்ளை வீட்டார் கூடச் சீதனம் கேட்கீனம். இந்தச் சம்மந்தம் நடக்காது என்று அவையள் சொல்லுகீனம்'. தாய் சொன்னபோது நாள் முழுவதும் பச்சைத் தண்ணீர் கூட வாயில் படாமல் அழுதுகொண்டு கிடந்தாளே.

'என்ர வேதனையைக் கண்ணால பார்த்துக்கொண்டும் அம்மா தன்னை கல்லாக்கிக் கொண்டு இருந்திருக்கிறா. எல்லாம் வெளிநாட்டு மாப்பிள்ளையப் பிடிக்க வேணும் என்றதுக்காக'

'அந்த நேரம் நான் பட்ட வேதனை எல்லாத்தையும் பக்கத்தில நின்று பார்த்தவா. கொஞ்சம் கூட எனக்காக இரங்க இல்லையே'.

அவள் இதயம் கபிலனை நினைத்துத் துடித்தது.

'அம்மாவின்ட சதி தெரியாமல் அநியாயமா அவரை நான் அன்றைக்கு கண்டபாட்டுக்கு பேசிப்போட்டனே. அவர் அன்றைக்கு பேசினதில நியாயம் இருக்கு. நான் தான் அம்மாவின்ர சூது தெரியாமல் கபிலனோட கத்தியிருக்கிறன்'.

'அம்மா நல்லாவே நாடகம் போட்டிருக்கிறா. எல்லாம் திட்டம்போட்டு செய்திருக்கிறா'

'தேவையில்லாமல் கபிலனோட பிரச்சனைப்பட்டு, அவரை வெறுக்க வைக்க அம்மா எவ்வளவு அழகாக திட்டம் போட்டிருக்கிறா. அது தெரியாமல் நானும்.... சீ' தன் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள் காயத்திரி. தாயை நினைக்க வெறுப்பாக இருந்தது அவளுக்கு.

ஏதேதோ நினைவுகள் அவளைச் சூழ்ந்துகொண்டன. தன்னைப் பற்றி நினைக்க அவளுக்கே வெறுப்பாகவும், அருவருப்பாகவும் இருந்தது.

'சேகருக்கு வலைவீசி அவனை மயக்கியல்லவா அவள் மணந்திருக்கிறாள்'.

'அம்மாவுக்கு ஏன் இவ்வளவு கீழ்தரமான புத்தி'.

'வெளிநாட்டுக்கு போகாதவை என்ன வாழ இல்லையா.'

'தன்ர வசதிக்காக அம்மா என்னை பகடைக்காய் ஆக்கிப்போட்டா. ஏதோ என்னில அக்கறையிருக்கிற மாதிரி நாடகம் போட்டு இந்தக் கலியாணத்தை முடிச்சு வைச்சிருக்கிறா'

'கபிலனோட நான் வெளிப்படையாகப் பேசியிருந்தால் இவ்வளவு பிரச்சனையும் வந்திருக்காது. இல்லாட்டில் அப்பவும் அம்மா வேற ஏதாவது பிளான் போட்டு, எங்களை பிரிச்சிருப்பாவோ?'

கண்கள் ஆறாகி பிரவாகிக்க சோபாவில் அமர்ந்து குசனை அணைத்தபடி இருந்தாள்.

'இவ்வளவு காலமும் இதை மறைத்து எப்பிடி நடிக்கிறா அம்மா. நல்ல மனுசி மாதிரி வேசம் போடுறா'

ராஜேஸ்வரி குளித்து விட்டு வந்தாள். வீடு முழுவதும் நிசப்தம் குடிகொண்டிருந்தது.

மகள் விறாந்தையில் டெலிபோனுக்கு அருகில் தலையில் கையை வைத்தபடி, கண்களில் கண்ணீர் வடிய அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். என்னமோ ஏதோ என்று பயந்து போனாள். காயத்திரியோ தாயை ஆத்திரத்துடன் முறைத்தாள்.

'என்ன பிள்ளை.......  என்ன... என்ன நடந்தது...... என்ன ஒரு மாதிரி இருக்கிறாய்?' படபடப்பானாள் ராஜேஸ்வரி.

'இன்னும் என்ன நடக்க வேணும்' ஆத்திரத்துடன் பேச்சை ஆரம்பித்த காயத்திரி சற்று நிதானமானாள்.

'அதுசரி, மகா அன்ரியின்ர கடனைக் குடுக்கச்சொல்லி சேகர் தந்த காசை என்ன செய்தனீங்க.....?'

 ' மகா திரும்பவும் போன் எடுத்திருக்கிறாள். காசு தர இல்ல என்டு சொல்லியிருப்பாள்' மகளின் கோபத்திற்கான காரணம் புரிந்தது ராஜேஸ்வரிக்கு.

'ஏன் அந்தக் காசு என்னட்ட பத்திரமா இருக்குது'

'அவா காசு கேட்டு போன் பண்ணுறா. நீங்க காசை வைச்சுக்கொண்டு என்ன செய்யுறீங்க' ஆத்திரத்துடன் கத்தினாள் மகள்.

மகளிடம் குழைந்தாள் ராஜேஸ்வரி.

'இல்ல பிள்ள. நான் வார கிழமை எங்கட முதியோர் சங்கத்தால 'கியூபெக் சிற்றியை' சுத்திப் பார்க்கப்போறதுக்கு பதிஞ்சு இருக்கிறன். அதுக்கு அவசரமா காசு தேவைப்படுகுது. எல்லாத்துக்கும் மருமகனிட்ட கேட்க ஏலுமா. அதுதான் அந்தக் காசை எடுத்துட்டு பிறகு......' குறுக்கிட்டாள் மகள். அவளால் பொறுக்க முடியவில்லை.

'எப்பிடியம்மா நீங்க இப்படி மாறினீங்க? என்னால நம்பமுடியாமல் இருக்கு' கண்களில் நீர்  பெருகியது காயத்திரிக்கு.

'உங்கள அம்மா என்டு கூப்பிடவே எனக்கு நாக்கு கூசுது... சீ...' என்றாள் அருவருப்பும், கோபமுமாக.

என்னவென்று தெரியாமல் திருதிருவென்று விளித்தாள் ராஜேஸ்வரி.

'எங்களுக்காக நீங்க எவ்வளவு கஷ;டப்பட்டனீங்க. எங்களுக்காகவே வாழ்ந்தனீங்க. எப்படியம்மா இப்படி சுயநலமா மாறினீங்க......'

'இப்ப என்ன செய்துபோட்டன் என்று இந்தக் காட்டுக் கத்தல் கத்துறாய்'

'கபிலனில என்ன குறை கண்டனீங்கள்? நானும் கபிலனும் எவ்வளவு ஆசையும் எதிர்பார்ப்புமாக இருந்தம் என்று உங்களுக்கு தெரியும். ஏன் அம்மா எங்களப் பிரிச்சனீங்க.'

'மகா எல்லாத்தையும் போட்டுக் குடுத்துட்டாள் போல'.

எதிர்பாராத விதமாய் மகள் உண்மையைத் தெரிந்துகொண்ட அதிர்ச்சியில் பேசுவதற்கு நா எழாமல் வாயடைத்துப் போனாள் ராஜேஸ்வரி.

எப்பவோ ஒருநாள் இது நடக்கும் என்று அவள் எதிர்ப்பார்த்ததுதான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் அவள் எதிர்பார்க்கவில்லை.

'கபிலனோட நான் அங்க வாழ்ந்திருந்தாலும் இப்பிடித்தானே சந்தோசமா இருந்திருப்பன். உங்களையும் பார்த்துக்கொண்டு சிலவேளை இன்னும்கூடுதலாக சந்தோசமாக இருந்திருக்கலாம்'

ராஜேஸ்வரியின் இதழ்களில் ஏளனப் புன்னகை விரிந்தது.

'இங்கயென்டால்........

நினைச்ச மாதிரி கோயில் குளம் என்று போய் வரலாம்.

முதியோர் சங்கம் அடிக்கடி ஒழுங்கு செய்கிற கூட்டங்களுக்கு போய் வரலாம்.

ரெண்டு வருஷத்துக்கு ஒருக்கா என்டாலும் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஏன் கரிபியன் நாடுகளையும் சுத்திப்பாத்திட்டு வரலாம்.

அரசாங்கம் மாதா மாதம் எங்களுக்கென்று காசு தருகுது. இவை தருவீனமா? அல்லது இவையலிட்ட கையேந்திக்கொண்டு நிக்கவேணும்.

அரசாங்கம்; தார காசை நான் என்ர  விருப்பம் போல செலவழிக்கலாம்.

நல்ல வைத்தியம், ஆரோக்கியமான சாப்பாடுகள் அது இது.....

எவ்வளவு நல்ல விசயங்கள் இங்க இருக்கு.

மகாவைப் போல நானும் என்ர இஷ;டப்படி கடைசிக்காலத்தில என்றாலும் சீவிக்கக் கூடியதாய் இருக்குது.

'இருந்தத விட இன்னும் பத்து வருஷம் இளமையாய் இருக்கிறீங்க' என்று போனமுறை இந்தியாவுக்கு போன நேரம் ஒரு சொந்தக்காரப் பிள்ளை பார்த்தவுடன சொல்ல இல்லையா.

இதெல்லாம் அங்க கிடைக்குமா?

'தலையில சுமந்த பாரங்களை எல்லாம் இறக்கி வைச்சிட்டு சுதந்திரமா, சந்தோசமா, என்ர தேவைகள், என்ர வாழ்க்கை என்டு இனியாவது நான் வாழ வேண்டாமா?'

'இவையள் எல்லாம்  கலியாணம் முடிச்சு போனாப்பிறகு என்னை எப்பிடி பார்ப்பீனமோ தெரியாது. கிடைச்ச சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நானும் கொஞ்சமாவது வாழ்க்கையை அனுபவிச்சா என்ன பிழை?'

ராஜேஸ்வரியின் நியாயம் இதுதான். ஆனால் மகளிடம் இந்த நியாயங்களைச் சொல்ல முடியுமா?

'பிள்ளை அதெல்லாம் முடிஞ்ச கதை. இப்ப என்னத்துக்கு அதுகளைக் கிளறுறாய்....' வந்த வழியே திரும்பி மாடிப்படிகளில் கால் வைத்தாள்;.

'எனக்கு வந்த நல்ல வாழ்க்கைய கெடுத்து, கபிலன் குடும்பத்தில அநியாயமாய் பழியப் போட்டு, என்னை இன்னொருத்தனுக்கு வலைவீசத் தூண்டிவிட்டு, .........'

'எப்பிடி........?  எப்பிடி அம்மா உங்களால இதையெல்லாம் திட்டம் போட முடிஞ்சுது....?'

தாயின்  குறுக்கே வந்துநின்று பத்திரகாளியாய் மகள் கேட்கவும்தான் விசயத்தின் சீரியஸ் அவளுக்குப் புரிந்தது.

'என்ன சொல்லி மகளை சமாதானப்படுத்துவது.......'

'வாயும் வயிறுமாய் இருக்கிற இந்த நேரத்தில இவள் என்ன இப்பிடி பத்திரகாளியாட்டம் ஆடுறாளே' என்று உள்ளூர ஒரு பயமும் தொத்திக்கொண்டது.

'இஞ்சபார் இந்த நேரத்தில இப்பிடி கத்திக்.... குழறி..... எல்லாத்தையும் கெடுக்கப்போறாய். அதெல்லாம் நடந்து முடிஞ்சிட்டுது. இப்ப அதுகள என்னத்துக்கு கிளருறா? ஆவள் மகாவுக்கு விசர்.' மகளின் கோபத்தைக் கண்டதும் அவளை சமாதானம் செய்ய ஏதேதோ சொல்லத் தொடங்கினாள் ராஜேஸ்வரி.

'இப்ப உனக்கு என்ன கெட்டுப் போச்சுது. சேகர் நல்ல பெடியன். உன்னை தன்ர கண்ணுக்குள்ள வைச்சு காப்பாத்துறார் தானே.'

'பேசாதீங்க அம்மா. எல்லாம் நீங்க என்ர சந்தோசத்துக்காகவா செய்தனீங்க. ஒருவேள சேகர் உங்கள வெளிநாட்டுக்கு எடுக்கிறது கஸ்டம். அப்படி இப்பிடி என்டு ஏதாவது சொல்லியிருந்தால் நீங்கள் இந்தக் கலியாணத்துக்கு சம்மதிச்சிருப்;பீங்;களா? பிறகு இன்னொரு வெளிநாட்டு மாப்பிள்ளை தேடியிருப்பீங்க.'

'கடைசியா கபிலனும் இல்லாமல், சேகராலயும் நான் ஏமாத்தப்பட்டு இருந்தால் என்ர நிலைமை எப்பிடி இருந்திருக்கும்?'

மகளின் கேள்விகளில்; அசைவற்று நின்றாள் ராஜேஸ்வரி.

'வெளிநாடு என்றால் சும்மாவா? உங்களை எடுக்க நானும் அவரும் எவ்வளவு   கஷ்டப்பட்டனாங்கள் என்டு உங்களுக்குத் தெரியுமா? இங்க வந்த பிறகு நான் படுகிற பாடு எனக்குத்தானே தெரியும்'

'ஏன் உனக்கென்ன குறை. இங்க ராணி மாதிரித்தானே இருக்கிறாய். உனக்கு நான் சந்தோசமாக இருக்கிறது பிடிக்க இல்ல. அதுதான் இப்பிடிக் கதைக்கிறாய் என்ற ராஜேஸ்வரி நீலிக்கண்ணீர் வடிக்கத் தொடங்கினாள்.

'நானும் தன்னந்தனியனாக உங்களை வளர்க்க எவ்வளவு கஷ;டப்பட்டனான். அந்த நன்றி கூட இல்லாமல் இப்பிடிக் கதைக்காத. என்ர கடைசிக் காலத்தில எனக்கு நீ தான் ஆறுதல் என்டு நம்பியிருந்தனான்.................'

'நல்ல வீடும் வாங்கித் தந்து, உனக்கு ஏலாது என்டதும் வேலைக்கும் அனுப்பாமல் எப்பிடி கவனிக்கிறார் பார். அவரைப் போல ஒரு நல்ல மாப்பிள்ளை கிடைக்குமா சொல்லு. எல்லாம் உன்ர நன்மைக்காகத்தான் செய்தனான்'

'அம்மா மனச்சாட்சியே இல்லாமல் பிழைசெய்துட்டு இப்ப அதை மூடிமறைக்கப் பார்க்காதீங்க'

'இப்ப உங்களுக்கென்ன. நினைச்ச மாதிரி வாழ்க்கை கிடைச்சிருக்குது. ஒரு கவலையும் இல்லாமல் நல்லா ஊரச் சுத்திக்கொண்டு திரியுறீங்க ஆத்திரத்தில் காயத்திரி வாயில் வந்தபடி தாயைத் திட்டினாள்.

'ஏய் மரியாதையாய் பேசு' ராஜேஸ்வரி அதட்டினாள்.

'பாருங்க வேற தாய்மார் பிள்ளையளுக்கு எவ்வளவு அனுசரணையாய் இருக்குகீனம். மக்கள் மருமக்களோட, பேரப்பிள்ளையளையும் பார்த்துக்கொண்டு எவ்வளவு சந்தோசமா இருக்கீனம். ஆனால் நீங்க வெளிநாட்டுக்கு வந்தவுடன அடியோட மாறீட்டீங்க'

'சில வயதுபோனவையள் பிள்ளையளின்ட ஆறுதல் கிடைக்காமல் அனாதையள் மாதிரி சீனியர் கோமுக்குள்ள அடைப்பட்டுக்கொண்டு எவ்வளவு மன உளைச்சளோட இருக்கீனம். இதுகள் எல்லாம் உங்கட கண்ணுக்கு தெரிய இல்லையா?. உங்கள நாங்கள் எவ்வளவு நல்லா வைச்சுப் பார்க்கிறம். ஆனால் நீங்க......'

'கண்ணீரும் சோறுமா நானிருக்க, எப்பிடியம்மா உங்களால ஒரு குறுகுறுப்பும் இல்லாமல் இப்பிடி நடக்க ஏலுது'. தாய் மகள் தர்க்கம் முற்றிக்கொண்டே போனது.

திடீரென ஆவேசம் வந்தவள் போல் கத்தினாள் காயத்திரி.

'காணும். எனக்கு நீங்க செய்ததெல்லாம் காணும். என்னப் பற்றி உங்களுக்கு துளி கூட அக்கறையில்ல. இனி ஒரு நிமிஷம் கூட நீங்க இங்க இருக்கக் கூடாது. எங்கயாவது வெளிக்கிட்டுப் போங்க. நீங்க ஆசைப்பட்ட வெளிநாட்டு வாழ்க்கையை சுதந்திரமா அனுபவியுங்க. இங்க ஒரு மகள் இருக்கிறாள். அவள் எப்பிடி இருக்கிறாள் என்றெல்லாம் நீங்க கவலைப்படத்தேவையில்லை'

காயத்திரி இப்படிக் கோபப்பட்டு ராஜேஸ்வரி இதற்கு முன் பார்த்ததே இல்ல.

'காயத்திரி.... என்னம்மா இது...'காயத்திரி பத்திரகாளியாக நின்றாள். அவளுக்கு எப்போதாவது உண்மை தெரியவந்தால் ஏதாவது சொல்லி சமாதானப்படுத்திவிடலாம் என்று நினைத்திருந்தாள். ஆனால் காயத்திரி நிதானத்தை இழந்திருந்தாள். கோபத்தின் உச்சியில் நின்றிருந்தாள். மகளை எப்படி சமாதானப்படுத்துவது என்று திணறிப்போனாள் ராஜேஸ்வரி.

'வயித்தில பிள்ளையையும் வைச்சுக்கொண்டு, இப்பிடிக் கத்தாதபிள்ளை. நான் சொல்லுறதைக்......' காயத்திரி எதையும் கேட்கும் நிலையில் இல்லை.

'தயவு செய்து என்ர முகத்தில முழிக்காதையுங்கோ. என்னில அக்கறை மாதிரி இன்னும் நடிக்காதேங்க. முதல்ல இந்த வீட்ட விட்டு வெளிக்கிடுங்க. உங்கட உடுப்புகளையும் 'பாக்'குகளையும் எடுத்துக்கொண்டு கிளம்புங்க' காயத்திரியைப் பார்க்க அவளுக்கே பயமாக இருந்தது.

தான் நிற்க நிற்க மகளின் ஆத்திரம் அதிகமாவதை உணர்ந்து மாடியில் இருக்கும் தன் அறையை நோக்கி நடந்;தாள்.

'போங்க. இங்க இருந்து வெளிக்கிட்டு எங்கயாவது போங்க. என்ர முகத்திலயும் முழிக்க வேணாம். என்ன நிம்மதியா இருக்க விடுங்க

'உங்களப் பார்க்கப் பார்க்க எனக்கு பைத்தியம் பிடிக்குது' வெறி பிடித்தவள் போல் கத்தினாள் காயத்திரி. தாயையும் முந்திக்கொண்டு அவளது அறைக்குச் சென்று தாயின் உடுப்புக்களை சுருட்டி  அவள் 'ரூர்' போகப் பயன்படுத்தும் ரவலின்பாக்குகளில் திணித்தாள். என்ன செய்வதென்று புரியாமல் ராஜேஸ்வரி சிலையாக நின்றாள்.

'இவள் உண்மையாகத் தான் என்னை வீட்ட விட்டு களைக்கிறாளோ?....'

மகளை நிமிர்ந்துபார்க்கும் திராணியற்று, அவள் தூக்கிப்போட்ட 'பாக்'குகளில் ஒன்றைத் தூக்கிக்கொண்டு மாடிப்படிகளில் இறங்கி கீழே வந்தாள். தாயின் பெரிய பை ஒன்றை ஒரு கையிலும், கைத்தொலைபேசி இன்னொரு கையிலுமாக மாடிப்படிகளில் காயத்திரி இறங்கியபோதுதான் சற்றும் எதிர்பாராமல் அவள் கால் சறுக்கி படிகளில் உருளத் தொடங்கினாள்

(19)

காயத்திரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றுடன் மூன்று நாட்கள் கடந்து விட்டிருந்தன. இன்று அநேகமாய் காயத்திரி கண் விழிக்கலாம் என்று டாக்டர் கூறியிருந்தார். சேகருக்கு எல்லாம் கனவு போல் இருந்தது.

காயத்திரி மாடிப்படிகளில் உருளவும் பதைபதைத்து ஓடிவந்த ராஜேஸ்வரிக்கு பயத்தில் உடல் நடுங்கியது. இரத்த வெள்ளத்தில் கிடந்த மகளைக் கணடதும் ஒருகணம் தடுமாறினாள். ஓடோடிப் போய் 911 அழுத்தினாள். அதன்பின் கண் இமைக்கும் நொடியில் கிரீச்சிட்டபடி வந்து நின்ற 'ஆம்புளன்ஸ்' காயத்திரியை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலையை நோக்கிப் பறந்தது.

அவசரசிகிச்சைப் பிரிவிலிருந்து இன்றுதான் காயத்திரியை சாதாரண வாட்டிற்கு மாற்றியிருந்தார்கள்.

காயத்திரியின் தலை மாட்டிற்கு அருகில் வந்து அமர்ந்தான் சேகர். காயத்திரி சுய உணர்வின்றிக் கிடந்தாள். தலையில், கழுத்தில், கையில் கட்டுக்கள் போடப்பட்டிருந்தன

அவளது வலது கை வயிற்றை அணைத்திருந்தது. வயிறு ஒட்டிப்போயிருந்தது. சேகருக்கு 'ஐயோ' என்று தலையில் அடித்து அழ வேண்டும் போல இருந்தது.

அவளுக்கு எப்படிச் சொல்லப் போகிறான். டாக்டர் சொன்னபோது அவனுக்கு தலையில் இடியே விழுந்தது போல இருந்தது. அவர்களது ஆசைக் கனவுகள் எல்லாம் சிதைந்து போய் விட்டது. எதிர்காலமே வறண்ட சூனியமாய்த்; தெரிந்தது. குமுறும் நெஞ்சுடன் காயத்திரியைப் பார்த்தபடி சேகர் அமர்ந்திருந்தான்.

911க்கு அடித்த மறுநிமிடமே சேகருக்கும் விசயத்தை தெரியப்படுத்தியிருந்தாள் ராஜேஸ்வரி.

இந்த இரண்டு நாட்களும் காயத்திரியை விட்டு ராஜேஸ்வரி விலகவே இல்லை. மகளின் நிலையை அறிந்தபின் அங்கு யாரையும் நிமிர்ந்து பார்க்கும் துணிவு அவளுக்கு ஏற்படவில்லை குற்ற உணர்வு குறுகுறுக்க, மகள் மருத்துவமனையில் இருக்கும்போதே ராஜேஸ்வரி வீட்டிலிருந்து புறப்பட்டு விட்டாள். மாமியாரின்; செய்கைகள் அன்று வீட்டில் என்ன நடந்திருக்கும் என்பதை சேகருக்கு உணர்த்தியது. மாமியார் தன்னைக் காணக்கூசுவதை வைத்து இந்த இழப்புக்களுக்கெல்லாம் அவள்தான் ஏதோவகையில் காரணம் என்பதைப் புரிந்துகொண்டான். மாமியாரிடம் எதையும் வற்புறுத்திக் கேட்க அவன் விரும்பவில்லை. மனதில் ஏதோ வெறுப்பு சூழ்ந்துகொண்டது. அவனுக்கிருந்த மனநிலையில் எதையும் கிண்டிக்கிளற அவன் விரும்பவில்லை.

ராஜேஸ்வரி ஏதோ ஒரு சீனியர் கோமுக்கு தன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார். அதைப் பற்றி சேகர் விசாரித்தும் பதில் எதையும் சொல்ல ராஜேஸ்வரி மறுத்துவிட்டார் பிறகு இரண்டு, மூன்றுதரம் வைத்தியசாலையில் வந்து மகளை பார்த்துவிட்டுப் போனதோடு சரி.

சீனியர் ஹோமிற்கு வந்து இரண்டு நாட்களுக்குள்ளாகவே அந்த வாழ்க்கை நகர வேதனையாக இருந்தது ராஜேஸ்வரிக்கு. பத்து ஆண்டுகளை ஒரே நாளில் கடந்து விட்டது போல இயலாமை அவளைச் சூழ்ந்துகொண்டது. தனிமையும், இயலாமையும், மகளுக்கு அவள் செய்த துரோகமும் ராஜேஸ்வரியின் மனதை அரிக்கத் தொடங்கியது. சரியாக உண்ண, உறங்க முடியாமல் தவித்தாள். இவ்வளவு காலமும் மகளுடன் வாழ்ந்த அந்த ராஜபோக வாழ்க்கையை நினைத்துப் பார்த்தாள். இனி தன்னால் அப்படியொரு வாழ்க்கையை வாழ முடியுமா என்று சந்தேகமாக இருந்தது. இந்த சில நாட்களுக்குள்ளேயே பெரிய நோயாளியைப் போல உணர்ந்தாள்.

பதினாறு அடுக்குகள் கொண்ட அந்த வயோதிபர் விடுதியில் பதினான்காம் மாடியில் ஒரு அறையில் ராஜேஸ்வரியின் வாசம். சமையலறை, கூடம் இரண்டையும் ஒரு ஒற்றைச் சுவர் பிரிக்க, அந்த கூடத்தை கட்டில் நிறைத்திருந்தது. வந்து இரண்டே நாட்கள் என்பதால் ராஜேஸ்வரியின் அறையில் பொருட்கள் அவ்வளவாக இருக்கவில்லை. தனது துணிமணிகள் கொண்ட பெரிய டிரவலிங்க் பாக்கை கட்டிலுக்கு அடியில் தள்ளியிருந்தாள். கட்டிலை ஒட்டியிருந்த சிறிய மேசையில் தமிழ் அலைவரிசைகள் கொண்ட வானொலிப் பெட்டி இருந்தது. அவள் மட்டுமே நடமாட போதுமான மிகவும் குறுகிய ஒரு சிறிய அறை அது. மேலேயிருந்து பார்க்கும் போது கீழே சிறிய சிறிய உருவங்கள் நடமாடுவது தெரிந்தது. முழு உலகத்திலிருந்தும் தான் தனிமைப்பட்டதைப் போல உணர்ந்தாள் ராஜேஸ்வரி.

காலையில் அவித்த பிட்டு தொண்டைக்குள் இறங்க மறுத்தது. அதையே சூடாக்கி இரவுச் சாப்பாட்டையும் முடித்துக்கொண்டாள். விடிந்தது முதல் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. அதன் இரைச்சலைக் கூட இப்போது அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

அன்று காலை அவள் மருத்துவமனைக்குச் சென்றபோது காயத்திரிக்கு சுயநினைவு வந்துவிடும் என்று டாக்டர் கூறியிருந்தார். அவசரமாக அங்கிருந்து வெளியேறினாள் ராஜேஸ்வரி. அதன்பிறகு அவள் மருத்துவமனைக்குச் செல்லவில்லை. நினைவுச் சுமைகள் நெஞ்சை அடைக்க ராஜேஸ்வரி 'காயத்திரி.... காயத்திரி...' என்று அரற்றத் தொடங்கினாள். மெல்ல கட்டிலில் வந்து சாய்ந்து கொண்டாள் திடீர் திடீர் என்று அவளுக்கு வலக்கையும், காலும் நோவது போலவும், விரைப்பதுபோலவும் இருந்தது. அடுத்தநாள் காலை வைத்தியரிடம் செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். முணுமுணுத்தபடி உறக்கநிலைக்குச் சென்றுகொண்டிருந்தாள். அவள் உதடுகள் அவளது சக்தியையும் மீறி ஒரு பக்கமாக கோணிக்கொண்டு வந்தது. மருமகன் எவ்வளவு கேட்டும் தான் தங்கியிருக்கும் சீனியர் ஹோம் முகவரியை சொல்லாமல் வந்துவிட்டது அந்த நேரத்திலும் அவளுக்கு ஞாபகம் வந்தது.

காயத்திரியிடம் மெல்ல அசைவு தெரிந்தது. கண்களைத் திறந்து சுற்றுமுற்றும் பார்த்தாள், மின்குமிழ் வெளிச்சம் கண்ணைக் கூச வைக்க இரண்டு, மூன்று முறை கண்களை மூடித்திறந்தாள். மீண்டும் கண்களை விளித்துப் பார்த்தாள். தான் வைத்தியசாலையில் இருப்பதை உணர்ந்து கொண்டாள். உடம்பெல்லாம் வலிப்பது போல இருந்தது அவளுக்கு. வேதனையுடன் முனகினாள்.

'என்னம்மா.......' மனைவியின் தலையை இதமாக வருடினான் சேகர். கண்களில் நீர் நிறைந்து குளமானது.

'எப்பிடியம்மா இருக்குது?.... உடம்பெல்லாம் வலிக்குதா?' அன்பாய் உருகும் கணவனின் கைகளைப் பற்றிக் கண்ணீர் வடித்தாள் காயத்திரி. அவளுக்கு அன்று நடந்தது எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. கூடவே அம்மாவின் துரோகச் செயலும் தான். வலியும், வேதனையும் நெஞ்சை அடைப்பது போல இருந்தது. வேகவேகமாக மூச்சை எடுத்து விட்டாள். அவசரமாக அறை முழுவதும் கண்களை ஓட விட்டாள். தாய் அங்கு இல்லை என்றதும் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.

'காயத்திரி, எப்படியம்மா இருக்கிறாய்?'

'எனக்கு ஒன்டும் இல்ல. நீங்க யோசிக்காதேங்க' என்றவள் தன் வயிற்றில் கைகளை வைத்துப் பார்த்தாள். வித்தியாசமாய் உணர்ந்தாள். உடல் லேசாய் இருப்பது போல இருந்தது. மழங்க மழங்க  விழித்தாள்.

'என்னங்க என்ர குழந்தை........'

'.......................' சேகர் எப்படிச் சொல்லுவான்.

'என்ர குழந்தைக்கு என்ன ஆச்சு?...... சொல்லுங்க சேகர். என்ன நடந்தது?.....' படபடத்தாள் காயத்திரி.

'அமைதியாய் இரு காயத்திரி. பிறகு அதைப் பற்றிக் கதைக்கலாம்'

காயத்திரி கேட்பதாய் இல்லை. கட்டிலில் எழுந்து உட்கார்ந்து விட்டாள். 'சொல்லுங்க என்ர குழந்தை எங்க?'

அதற்கு மேலும் அடக்க முடியாமல் கதறினான் சேகர்.

'எல்லாம் முடிஞ்சுபோச்சுது காயத்திரி.' மனைவியை கட்டிக்கொண்டு அழுதான் சேகர். இந்த குழந்தையாவது தங்களுக்கு நிலைக்க வேண்டுமே என்று எத்தனை ஆவலாய் இருந்தார்கள்.

'எனக்கு என்ர பிள்ளை வேணும். எனக்கு பிள்ளை வேணும்' வயிற்றை இறுகப் பற்றியபடி கத்தனாள் காயத்திரி. ஏதோ ஆவேசம் வந்தவள் போல சேகரை உதறிவிட்டு கட்டிலில் இருந்து கீழே இறங்கினாள்.

'காயத்திரி... நில்லு காயத்திரி....' அவளுக்குப் பின்னால் சேகர் ஓடிவந்தான்.

'எனக்கு என்ர பிள்ளை வேணும்...' அரட்டிக்கொண்டே ஓடமுற்பட்ட காயத்திரி  அப்படியே மயங்கிச் சரிந்தாள். சேகரும், உதவிக்கு நின்ற தாதிமாரும் காயத்திரியை அணைத்துப் பிடித்தனர். டாக்டர்கள் காயத்திரியைச் சூழ்ந்துகொண்டனர்.

(20)

காயத்திரிக்கு நடந்த விபத்து சாதாரணமானது அல்ல. அவளது கருவை மட்டும் அழித்துவிட்டுப் போகவில்லை அந்த விபத்து. அவள் வாழ்க்கையையே அழித்துவிட்டது. ஆமாம். காயத்திரியால் இனி கருத்தரிக்க முடியாது. மாடிப்படிகளில் உருண்ட போது வயிற்றில் பலமாக அடிபட்டிருந்தது. கூடவே திடீர் அதிர்ச்சியின் தாக்கம்..... கர்ப்பிணியாக இருந்த அவளது கர்ப்பப்பை சிதைவடைந்து விட்டது. இனி அவளால் கருத்தரிக்கவே முடியாது என்று டாக்டர் கூறிவிட்டார்.

'பச்சைத் தண்ணீர் கூட வாயில் வைக்க மாட்டேன்' என்று அடம்பிடித்தாள் காயத்திரி. சேகருக்கும் வேதனைதான். என்றாலும் காயத்திரியையும் அவன் தேற்றவேண்டி இருந்தது. சிலவேளை துக்கம் தாங்காது கணவன், மனைவி இருவருமே ஒருவரை ஒருவர் கட்டிக்கொண்டு அழுவார்கள். பிறகு சேகர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, காயத்திரியை ஆறுதல்ப்படுத்துவான்.

காயத்திரிக்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கவே அவள் வைத்தியசாலையிலேயே சில நாட்கள் தங்க வைக்கப்பட்டாள்.

சேகர் வேலையில் சிலவாரங்கள்; விடுப்பு எடுத்துவிட்டு மனைவியின் கூடவே இருந்தான். சேகருக்கு ஒரே உதவி அவன் நண்பன் வசந்தன் தான். வசந்தனும் அவனுடைய மனைவி சுமதியும் இந்த இரண்டு வாரமாக காயத்திரியை வந்து பார்த்து, ஆறுதல் கூறிவிட்டுப் போவார்கள். சுமதியைக் கண்டதும் முதலில் அழுது ஆர்ப்பாட்டம் செய்த காயத்திரி பின்னர் மெதுவாகத் தன்னை சமாளிக்கத் தொடங்கினாள்.

அன்று காயத்திரியைப் பார்க்க சுமதி வந்தபோது கூடவே தன் இரண்டு குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தாள். குழந்தைகளைக் கண்டதும் அவர்களை அள்ளியெடுத்து அணைத்துக்கொண்டாள் காயத்திரி. அவர்களைக் கண்ட மகிழ்வில் அன்று முழுவதும் உற்சாகமாகவே காணப்பட்டாள். அவளைப் பரிசோதிக்க டாக்டர் வந்தபோது,

''ம் .கே டொக்டர்' என்றாள் புன்னகையுடன். அவளைப் பரிசோதித்தார் டாக்டர். மாலையே வீட்டுக்குச் செல்லலாம் என்று அனுமதியும் வழங்கினார்.

மாலையில் மருத்துவமனைக்கு வந்த சேகருக்கு ஆச்சரியம்தான். மனைவியின் முகத்தில் தெரிந்த தெளிவு அவனுக்கு தைரியத்தைக் கொடுக்க அவளை அழைத்துக்கொண்டு புறப்பட்டான். வழியெல்லாம் சுமதியின் குழந்தைகளின் அழகைப் பற்றியும், அவர்களின் துடுக்குத்தனத்தையும் வாயோயாமல் சொல்லிக்கொண்டு வந்தாள் காயத்திரி. காரை கராச்சினுள் பாக் செய்து விட்டு இறங்கினான் சேகர். காயத்திரி இறங்கி வருவதற்காக குனிந்து காரைத் திறந்தவன் அதிர்ந்து போனான். காயத்திரி கண்களில் இருந்து கண்ணீர் வடிந்துகொண்டிருந்தது. சட்டென்று அவள் பக்கத்தில் அமர்ந்துகொண்ட சேகர் அவளைத் தேற்றினான்.

'என்ன காயத்திரி இது. இப்பிடியே அழுதுகொண்டிருந்தால் எப்படியம்மா' அவளது தோள்களை அழுத்தினான். அவள் அழுது ஓயும் வரை அணைத்தபடி அமர்ந்திருந்தான்.

'எனக்கு குழந்தை வேணும் சேகர். எனக்கு ஒரு பிள்ளை வேணும் சேகர்' அவள் உதடுகள் முணுமுணுத்தன. மெல்ல அவளை காரிலிருந்து வெளியே இறக்கி வீட்டினுள் அழைத்துச் சென்றான்.

'சரி, சரி அதைப் பற்றி பிறகு கதைப்பம். உன்னோட நிறைய கதைக்கவேணும். முதல்ல உள்ளுக்கு வா' என்று அணைத்தபடி அவளை நடத்திச் சென்றான்.

சோபாவில் அவளை அமரச் செய்த சேகர், 'இப்பிடி கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் எப்பிடி காயத்திரி? உன்னை நீ திடப்படுத்திக்கொள். எங்களுக்கு கொடுத்துவைத்தது அவ்வளவுதான். நடந்ததைப் பற்றிக் கவலைப்படாமல், அதுக்கு என்ன தீர்வு காணலாம் என்டு யோசிக்கவேணும். அதையே நினைச்சு மனசைக் குழப்பிக்கொள்ளக்கூடாது' கூறிவிட்டு சேகர் சமையலறைக்குள் சென்றான்.

சிறிதுநேரம் சோபாவில் கவலையாய் அமர்ந்திருந்த காயாத்திரியின் கண்களில் பட்டது அந்தக் கவர். அதற்குள் இருந்து இரண்டு மூன்று கடிதங்கள் விழுந்தன. கடிதத்துடன் ஒரு விண்ணப்பப்படிவமும், ஒரு போட்டோவும் வந்து விழுந்தது.

கடிதத்தை வாசிக்க வாசிக்க காயத்திரியால் நம்பமுடியாமல் இருந்தது. இது உண்மைதானா? சேகர் எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்திருந்தான்.

'சூடாய் ஒரு கப் கோப்பி குடி. கொஞ்சம் தெம்பு வரும்'.

இரண்டு கைகளிலும் கோப்பிக் கப்களை ஏந்திவந்த சேகர் காயத்திரி அந்த போட்டோவையே வைத்த கண் வாங்காமல் பார்ப்பதைக் கண்டான்.

'என்ன காயத்திரி பிடிச்சிருக்குதா....?' என்றபடி அருகில் வந்து அமர்ந்தான்.

படத்திற்கு அழுந்த முத்தமிட்டாள் காயத்திரி. தாய்மை உணர்வில் அவள் நெஞ்சு விம்மியது.

'சேகர்.......' அவளால் சந்தோசத்தில் பேச முடியவில்லை. ஆனந்தக் கண்ணீர் அருவியாய்க் கொட்டியது. சேகர் அவளுடைய கண்களைத் துடைத்து விட்டான்.

'காயத்திரி எங்களுக்குத்தான் குழந்தையே பிறக்காது என்று முடிவாகி விட்டுது. நீ மயக்கமாகி ஆஸ்பத்திரியில கிடந்தாய். தனிய் வீட்டில இருந்த எனக்கு பிள்ளையின்ர நினைவு அணு அணுவாய் சித்திரவதை செய்தது. நீயும் இந்தத் துயரத்தை தாங்கமாட்டாய் என்டு எனக்குத் தெரியும். இந்த ஒரு வருஷத்துக்குள்ள கடவுள் எனக்கு எவ்வளவு சந்தோசத்தைக் கொடுத்தாரோ அதையெல்லாம் ஒரே நொடியில பறிச்சிட்டார்' உணர்ச்சி வேகத்தில் தொண்டை கரகரக்க பேச்சை நிறுத்தினான்;. சேகர் சொல்லச் சொல்ல அவன் மீது பாசத்தையும் கடந்து ஒரு மதிப்பு உயர்ந்துகொண்டு போனது காயத்திரிக்கு.

'நான் சிலோனுக்கு வந்த சமயம் நீ சுனாமியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கப் போனதைப் பற்றி அம்மாவோட சொல்லிக்கொண்டிருந்தாய். சுனாமியில் தாயை இழந்த  குழந்தையொன்றைப் பற்றி நீ அன்றைக்கு எவ்வளவு உருக்கமாகச் சொன்னாய். அந்தக் குழந்தை பாலுக்காக உன்ர முகத்தப் பாத்து ஏங்கின சம்பவத்த நீ அம்மாவோட சொல்லும்போது எனக்கே கவலையாக இருந்தது. அந்த வயதிலயே உனக்கிருந்த தாய்மை உணர்வைப்  பார்த்து நான் அதிசயப்பட்டன்;. அப்போதே நீ என்ர நெஞ்சில குடிவந்து விட்டாய் காயத்திரி'

'தாய்மை உணர்வு பொதுவாக எல்லாப் பெண்களுக்கும் பிறக்கும்போதே கூடப் பிறக்கிறது. அந்த உணர்வு உன்னட்ட அதிகமாகவே இருக்குது. எங்களுக்கு இனி குழந்தை பிறக்க வாய்ப்பே இல்ல என்று டொக்டர் சொன்னதும் என்ர மனம் உடைஞ்சு சுக்கல் சுக்கலா வெடிச்சுப் போச்சுது.'

'பிறகு எடுத்த முடிவுதான் இது. அதுதான்; அம்மாவக்கொண்டு எல்லா ஏற்பாடுகளையும் செய்தனான். இந்தக் குழந்தைக்கு நீ நிச்சயம் நல்ல ஒரு தாயாக இருப்பாய் என்டு எனக்குத் தெரியும்.'

'காப்பகத்தில் இருந்து அந்தக் குழந்தையை நாங்கள் எங்கள் குழந்தையாக எடுக்கிறதுக்கு எல்லா ஏற்பாடுகளையும் அம்மா செய்து முடிச்சுட்டா. அடுத்த கிழமை நாங்க அந்தக் குழந்தையப் பொறுப்பேற்க சிலோன் போகப்போகிறம்' சேகர் எல்லாவற்றையும் சுருக்கமாகக் கூறிமுடித்தான்.

காயத்திரியின் உள்ளம் மகிழ்ச்சியில் பூரித்தது கையில் இருந்த குழந்தையின் படத்தை எடுத்து ஒருவித பரவசத்துடன் பார்த்தாள் காயத்திரி.

'என்ன அப்பிடிப் பார்க்கிறாய். சுனாமியில தாயைப் பறிகொடுத்துட்டு பறிதவிச்ச அதே குழந்தைதான். நீ வேலைசெய்த அதே ஹோமில விசாரிச்சு அம்மா எல்லா ஏற்பாட்டையும் செய்திட்டா...' என்றான் அன்பெழுக மனைவியின் தோள்களை வருடியபடி.

'ஆம் அந்தக் குழந்தையே தான்.' சேகரைத் திருமணம் முடிந்த பின்னரும், அவன் அனுமதியோடு அந்தக் காப்பகத்திற்குச் சென்று இலவசமாகவே அந்தக் குழந்தைகளுக்கு சேவை செய்தது ஞாபகம் வந்தது அவளுக்கு. குழந்தையின் படத்தை ஆவலுடன் வருடினாள் காயத்திரி.

'இப்போ இந்தக் குழந்தைக்கு எப்படியும் இரண்டு அல்லது இரண்டரை வயதிருக்கும். குண்டுக்கன்னங்களுடன் குழந்தை சிரித்துக்கொண்டிருந்தது. ஆனால் அதன் கண்களுக்குள் இன்னும் அதே சோகம்.....' காயத்திரியின் உதடுகள் படத்தை முத்தமிட்டன.

'அன்றைக்கு பசியால தவிச்சு, பாலுக்காக தன்ர தாயை என்ர முகத்தில தேடிய அந்தக்  குழந்தைதான் இது. கொஞ்சம் வளர்ந்திருக்கிறாள். என்ர மனம் அடிக்கடி வேதனைப்பட்டுது. அந்தக் குழந்தைய அனாதையாக விட்டுட்டு வந்துட்டேனே என்று  மனம் தவியாய் தவிச்சுது. இனி அந்தக் கவலை எனக்கு இல்ல. இனி இது என்ர குழந்தைதான்' காயத்திரியின் உதடுகள் முணுமுணுத்தன.

'என்ர செல்லம். என்ர கண்மணி' பழைய நினைவுகளில்; நெஞ்சு ஈரமானது அவளுக்கு.

அன்று சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை பராமரிக்கச் சென்றிருந்தாள் காயத்திரி. பிறந்து சில நாட்கள் கூட ஆகியிராத பச்சிளம் பாலகர்கள் தாயை சுனாமி இழுத்துக்கொண்டு போய்விட்ட சோகத்தையும் அறியாது பரிதவித்ததை மிகுந்த பரிதாபத்துடன் பார்த்தாள்;. தாய்ப்பாலுக்காக கதறியழுது ஓய்ந்து கிடந்த குழந்தை ஒன்று காயத்திரியைக் கண்டதும் தன் பிஞ்சுக்கால்களை உதைத்து மெல்லச் சிணுங்கியது. குழந்தையின் அருகில் சென்ற காயத்திரி குழந்தையை மெதுவாகத் தூக்கினாள். குழந்தை வறண்டு விட்ட தன் உதடுகளைத் திறந்து திறந்து மூடியது. அழுது வீங்கியிருந்த தன் கண்களைத் திறந்து அவள் முகத்தில் தன் தாயைத் தேடியது. தன் பிஞ்சுக் கரங்களால் அவளது மார்புச் சட்டையைப் பிடித்து இழுத்தது. அவள் சட்டைப் பொத்தான்களை தன் மெல்லிய விரல்களால் இறுகப் பற்றியது.

குழந்தையின் நினைவில் காயத்திரியின் மார்புகள் மீண்டும் விம்மித் தனிந்தன. அந்தக் குழந்தையை அள்ளியெடுத்து பாலூட்ட வேண்டும் போன்ற ஒருவித பரிதவிப்பு அவளுள் எழுந்தது.

'என்ர கண்மணி, என்ர செல்லம்' அவள் உதடுகள் மீண்டும் மீண்டும் முணுமுணுத்தன. குழந்தையின் இனிய நினைவுகளுடன் சேகரின் மடியில் தலையைச் சாய்த்து கண்களை மூடிக்கொண்டாள்; காயத்திரி.

 

முற்றும்.