பதினெண்கீழ்க்கணக்கு அகநூல்களில் தலைவன் கூற்றாடல் திறன்கள்

முனைவர் பூ.மு.அன்புசிவா


பதினெண்கீழ்க்கணக்கு அகநூல்களில் தலைவன் கூற்றில் அமைந்த கற்புப் பாடல்கள் பத்தொன்பது ஆகும். அவை 'ஐந்திணை ஐம்பதில் மூன்றும்' (ஐந்.ஐம்.10, 39, 40) திணைமாலை நூற்றைம்பதில் எட்டும்' (தி.மா.நூற்.ஐம்.68, 70, 77, 117, 141, 150) கார் நாற்;பதில் எட்டும்' (கார்.நாற். 24, 48, 29, 30-33, 36) அமைந்துள்ளன. அவற்றைப் பொருண்மை அடிப்படையில்,

 பரத்தையிற் பிரிவு
 பிரியுமிடம்
 இடைச்சுரத்து அழுங்கல்
 வினைமுற்றி மீளல்

எனப்பகுத்து விளக்க முடியும்.

பரத்தையிற் பிரிவு

தலைவன் கற்பு வாழ்வில் தலைவியை விடுத்து வேறொடு பெண்ணின் காரணமாகப் பிரியும் பிரிவே பரத்தையற்பிரிவு. 'அன்பு வாழ்வின் ஒரு குறையாகவே பரத்தையற் பிரிவு அமைந்திருத்தலைச் சான்றோர் கூறியுள்ளனர்.' (வ.சு.ப.மாணிக்கம், தமிழ் காதல், பக். 26:4) இதுகுறித்து டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் 'பலவகையானும் உயர் பெறியாகிய அன்புடைய வாழ்க்கை, பூவிற்குப் புல்லிகழ் வாய்த்தாற் போலவும், மதிக்குமறு வாய்த்தாற் போலவும் பரத்தையர் பிரிவு எனும் இழிந்த ஒழுக்கத்தினால் சிறிது கலக்கமடைகிறது' (உ.வே.சாமிநாத ஐயர், குறுந்தொகை நூலாராய்ச்சி, பக்.73) என்பர். தொல்காப்பியர் இவ்வொழுக்கத்தினை 'கொடுமை ஒழுக்கம்' (தொல். பொருள். இளம்பூரணர், 145:28) 'அடங்கா ஒழுக்கம்' (தொல். பொருள். இளம்பூரணர், 148:6) 'பேணா ஒழுக்கம்' (தொல். பொருள். இளம்பூரணர், 148:14) என்று சுட்டிச் சொல்வர். 'தங்கிய ஒழுக்கத்துக் கிழவன்' (தொல். பொருள். இளம்பூரணர், 145:15) 'பிழைத்து வந்திருந்த கிழவன்' (தொல். பொருள். இளம்பூரணர், 148:8) எனத் தலைவனின் ஒழுக்கச் சீர்கேடும் அவரால் குறிக்கப்படுகிறது. இத்தகைய குறைபாடுடைய பரத்தையர் பிரிவுக்குரிய கூற்றுகளாகத் தொல்காப்பியர்,

'பரத்தையின் அகற்சியின் பிரிந்தோள் குறுகி இரத்தலும் தெளிதலும்
பயங்கெழு துணையணை புல்லிய புல்லாது உயங்குவள் கிடந்த
கிழத்திணைக் குறுகிப் புல்கென முன்னிய நிறையழி பொழுதின்
மெல்லன் சீறடி புல்லிய இரவினும் ஏனை வாயில் எதிரொடு'

             (தொல். பொருள். அகத். 44, 22) ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்.

ஏனைவாயில் எதிரொடு

தலைவி, தலைவன் பால் கொண்ட ஊடலைத் தனிப்பது குறித்து வாயில்களோடு உரையாடுமிடத்தும் தலைவன்பால் கூற்றுத் தோன்றுவது ஏனைவாயில் எதிரொடு என்று தொல்காப்பியர் கூறுவர். இதற்கு இளம்பூரணர் 'பெண்டிகுமல்லாத வாயில்களினார் எதிர்கூறும்; கூற்றும் தலைவன் மாட்டு நிகழும் என்றவாறு' (க.வெள்ளைவாரணன், தொல்காப்பியம், பொருள். கற்பு. உரைவளம், ப.32) என்பார் நச்சினார்க்கினியர். 'சிறந்த மொழியை ஒழிந்து நின்ற வாயில்கட்கு எதிரே கூறுங்கூற்றோடே முற்கூறியவற்றைத் தொகுத்து' (க.வெள்ளைவாரணன், தொல்காப்பியம், பொருள். கற்பு. உரைவளம், ப.57) என்பதால் ஏனைய வாயிலாகிய பாணனுக்கு உரைத்ததுப் பெறப்பெறும். இதன் அடிப்படையில் கீழ்க்கணக்கு அகநூலான திணைமாலை நூற்றைம்பதில் இரண்டு செய்யுள்கள் அமைந்து காணப்பெறுகின்றன. அவற்றை,

 பாணன் வாயிலாகச் செல்ல வேண்டும்
 தலைவியைப் புணர்ந்து மகிழ்ந்து கூறியது

எனப்பகுத்து விளக்க வாய்ப்புண்டு.

பாணன் வாயிலாகச் செல்ல வேண்டும்


மகனைப்பெற்று நெய்தலாடிய தலைவியிடம் தோழி முதலிய வாயில்களைத் தலைவன் ஊடல் தீர்க்கும் பொருட்டு அனுப்பினான். அது இயலாத நிலையில் பாணனைத் தலைவியிடம் தூதுசெல்ல வேண்டுமென்றான். அந்நிலையில், தலைவன் பாணனிடம் கூறுவதைக் கணிமேதாவியார்,

'அணிக்குரன்மேல் நல்லாரோ டாடினேன் என்ன
மணிக்குரன்மேன் மாதார ளுடி – மணிச்சிறல்
பாட்டை இருந்தயரும் பாய்நீர்க் கழனித்தே
ஆட்டை யிருந்துறையு மூர்'
    (தி.மா.நூற்.141)

என உணர்த்துவர். பரத்தையுடன் யான் விளையாடினேனெத் தலைவி தன்னுடன் ஊடல் கொண்டாள்ளூ அவளின் ஊடலைத் தகர்த்து அவளுடன் தன்னைச் சேர்த்து வைக்க வேண்டுமெனப் பாணனிடம் தலைவன் கூற்று நிகழ்த்துகிறான். பரத்தைகளின் ஒழுக்கத்தைக் காரணம் காட்டி தலைவி ஊடல் கொண்டாள். அவ்ஊடல் நீடித்ததன்றுளூ அவனது தவற்றைச் சுட்டிக்காட்டும் வகையிலேயே அது அமைகிறது. பரத்தையொழுக்கத்தைக் காரணம் காட்டி தலைவி தலைவனை ஊடிய செய்தி சங்க இலக்கியத்தில் உண்டு.

தலைவியைப் புணர்ந்து மகிழ்ந்து கூறியது


தலைவன் பாணனை வாயிலாகக் கொண்டு தலைவியின் ஊடலைத் தணித்துப் புணர்ந்து மகிழ்ந்தான். அதனைக் கணிமேதாவியார்,

'கண்ணுங்கா லென்கொல் கலவையாழ்ப் பாண்மகளே
எண்ணுங்கால் மற்றின் றிவளொடுதே – ரெண்ணின
கடல் வட்டத் தில்லையால் கற்பெயர் சேராள்
அடல்வட்டத் தாருளரேல் ஆம்'
   (தி.மா.நூற்.150)

எனக்கூறுவர். பல பண்களைப் பாடும் பாணனே! எனக்கு இன்பம் பல தருபவள் தலைவி. அவளுக்கு ஒப்பானவர் இவ்வுலகிலுமில்லைளூ விண்ணுலகிலுமில்லை எனத் தலைவியின் பெருமையினை முதன்மைப்படுத்துகிறான் தலைவன். தலைவியிடத்துத் தலைவன் கொண்டுள்ள ஆழ்ந்த காதலை இக்கருத்து வெளிப்படுத்துகிறது. சங்கஇலக்கியத்தில் பாணனிடம் தலைவன் கூற்று நிகழ்த்தும் செய்தி உள்ளது.

பாணனே வருக! தலைவி புதல்வனை ஈன்று நெய்யாடிய போது அவளை அணுகினேன். புதல்வனை ஈன்றதனால் வேறு பெயர் பெற்று முதுபெண்டாகித் துயில்கின்றனையோ என்று வினவியபடி அவளது வயற்றிடைக் குவளை மலர் கொண்டு ஒற்றினேன். அது கண்டு அவள் உவந்து மெல்ல நகைத்து நாணிக்கண் புதைத்தாள். அதைக்கூறி நகுவோடு மன்றான் தலைவன். அதனை,

'வாராய் பான நகுகம் நேரிழை
கடும்புடைக் கடுஞ்சூல் நம்குடிக்கு உதவி
நெய்யோடு இமைக்கும் ஐயவித் திறள்காழ்
விளங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிப்
புதல் வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து அவ்வரித்
திதலை அல்குல் முது பெண்டு ஆகித்
துஞ்சுதியோ மெல் அம்சில் ஓதி
பல்மாண் அகட்டில் குவளை ஒற்றி
உள்ளினென் உறையும் எற்உண்கு மெல்ல
முகை நான் முறுவல் தோற்றித்
தகைமலர் உண்கண் கை புதைத் ததுவே'
  (நற். 370)

என்ற பாடல் மெய்ப்படுத்தும். தலைவன் தன் இன்ப, துன்ப உணர்வுகளைப் பாணனிடம் பகிர்ந்து கொண்டமையை இதனால் உணரமுடிகிறது.

பிரியுமிடம்

தலைவன் தலைவியை விடுத்து ஓதல், பகை, வேந்தற்குற்றுழி, தூது, காவல், பொருள் ஆகிய அதன் காரணமாகப் பிரிவான். இப்பிரிவுகளை மேற்கொள்ளும்போது அவன் பால் நிகழும் கூற்றுகளாகத் தொல்காப்பியர் பதினேழு என்பர். அவை இரண்டு நிலைகளில் அமைகின்றன. அவை,

1. ஓதல் முதலான ஐந்து பிரிவுகளுக்குள் அடங்குபவை
2. பொருள் வயிற் பிரிவிற்குள் அடங்குபவை

என்பனவாகும்.

ஓதல் முதலான ஐந்து பிரிவுகளுக்குள் அடங்கும் கூற்றுக்கள்

ஓதல், பகை, வேந்தற்குற்றுழி, தூது, காவல் ஆகிய ஐந்து பிரிவுகளுக்குள் அடங்கும் தலைவன் கூற்றுக்களாக,

 வாயினும் கையினும் வகுத்த பக்கமொடு ஊதிய கருதிய ஒரு திறத்தானும்
 புகழு மானமு மெருத்துவற் புறத்தலும்
 மூன்றன் பகுதியும்
 மண்டிலத் தருமையும்
 தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும்
 ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும்
 தூதிடையிட்ட வகையினாலும்
 காவற் பாங்கினால் நேர் பாங்கினும்
 ஆகியன அமைகின்றன. அவற்றில் எந்ததொரு கூற்றிற்கும், கீழ்க்கணக்கு அக நூல்களில் பாடல்களில்வை

பொருள் வயற்பிரிவு

தலைவன், தலைவியை விடுத்துப் பொருள்வயிற் பிரியும் போது நிகழ்த்தும் கூற்றுக்களைத் தொல்காப்பியர்,

 பிரிவறிவுறுத்தல்
 நெஞ்சிற்குக் கூறிச்செலவழுங்கல்

எனக் கூறுவர்.

பிரிவறிவுறுத்தல்

பிரிவறிவுறுத்தல் எனும் நிலையில் தொல்காப்பியர் மொழிவன இரண்டு கூற்றுக்கள். அவை,

 'பிரிவின் எச்சத்துப் புலம்பிய இருவரைப் பிரிவின் நீக்கிய
பகுதிக்கண்ணும்

 உடன்சேறல் செய்கையோடு அன்னவை பிறவும் மேம்பட வந்த
தோழிக் கண்ணும்' (தொல். பொருள். களவு. 5:37, 43)

என்பனவாகும். இக்கூற்றுக்களுக்குரிய அகப்பாடல்கள் பதினென் கீழ்க்கணக்கு அகநூல்களில் இல்லை.

நெஞ்சிற்குக் கூறிச் செலவழுங்குதல்


நெஞ்சிற்குக் கூறிச் செலவழுங்குதல் பொருள்வயின் பிரிவின்போது நிகழும் ஏனைத்தூது, காவல், வேந்தற்குற்றுழி ஆகிய பிரிவுகள் வேந்தன் பொருட்டுப் பிரிபவை. அவற்றில் தலைவன் செலவழுங்கினான் என்று பாடுதல் அவனுடைய உரனுக்கும், பெருமைக்கும் இழுக்காகும். ஆதலின், செலவழுங்குக் கிளவிகள் பெரிதும் பொருள்வயிற் பிரிவில் அமையும். செலவழுங்கலில் தலைவன் மாட்டு நிகழும் கூற்றுக்களாகத் தொல்காப்பியர் மொழிவன,

கைவிடின் அச்சம்


தலைவியை விடுத்துத் தலைவன் பிரிதல் உண்டு. அக்காலங்களில் அவளது நிலை என்னாகுமோ? எனத் தலைவன் இரங்கி வருந்துவதாக நான்குப் பாடல்கள் உள. அவை 'ஐந்திணை ஐம்பதில் இரண்டும்', 'திணைமாலை நூற்றைம்பதில் இரண்டுமாக' அமைந்துள்ளன. அவை அனைத்தும் தலைவன் நெஞ்சிடம் கூற்று நிகழ்த்துவதாக அமைந்துள்ளன.

தலைவன் தலைவியை விடுத்துப் பொருள்வயிற் பிரிய எண்ணினான். அந்நிலையில் அவனது உள்ளம் பொருள் கருதியும், தலைவியின் நலன் கருதியும் இருநிலைப்பட்டது. இவ்விரு நிலைப்பட்ட நெஞ்சத்தை உளவியலாளர் 'கவைபடு நெஞ்சம்' என்பர் 'சுவை' என்பதற்குப் 'பிளவு' என்று பொருள். எண்ணத்தால் தலைவனது உள்ளம் ஒருநிலைப்பட்ட முடிவு எடுக்கவியலாது பிளவுபட்டிருக்கிறது. அவ்விரு எண்ணங்கயில் தலைவி குறித்த சிந்தனையே மிகுந்துள்ளது. அதனை மாறன் பொறையனார்,

'மடவைகா ணன்னெஞ்சே மாண் பொருண் மாட்டோடப்
புடைபெயர் போழ்தந்தும் ஆற்றாள் - படர்கூர்ந்து
விம்மி வுயிர்க்கும் விளங்கிழையா ளாற்றுமோ
நம்மிற் பிரிந்த இடத்து'  
 (ஐந்.ஐம். 39)

எனக் கூறுவர். நாம் தலைவியைத் தழுவிச் சிறிது விலகும் காலத்தும் பொறுக்க மாட்டாதவளாய்த் துன்பம் மிகுந்து ஏங்கிப் பெருமூச்சு விடுவாள். இந்நிலையில் அவளை விடுத்து பொருள் தேடிச் சென்றால் அவள் அப்பிரிவைப் பொறுப்பாளோ? பொறுக்கமாட்டாள். அதனை நீ அறியாதிருக்கிறாய் என நெஞ்சிடம் தலைவன் கூற்று நிகழ்த்துகிறான். தலைவிக்கு ஏதாவது துன்பம் நேர்ந்துவிடுமோ? என்ற அச்ச உணர்வே அவன் உள்ளத்தில் மேலிடுகிறது. அதனால் அவன் உள்ளம் போராட்டத்திற்குள்ளாகி செலவைத் தடுத்து விடுகிறது. அதனை 'ஆற்றாள்' என்ற சொல் புலப்படுத்தும். தலைவிமீது கொண்ட அன்பே அவனது செலவைத் தடுத்து நிறுத்தியது.

நல்ல உள்ளமே! இன்று இரவு தலைவியின் தோள்கள் துணையாய் இருக்க நன்றாகத் தங்கியிருக்கின்றாய் நாளை யாம் சிறு மலைகளுக்கு இடையே அரிய வழியில் துணை ஏதும் இல்லாமல் போய்த் தங்குமிடம் யாதோ? எனத் தலைவன் கூறுவதனை மாறன் பொறையனார்,

'இன்றல்க லீர்ம்படையு ளீர்ங்கோதை தோடுணையா
நன்கு வதிந்தனை நன்னெஞ்னே நாளை நான்
குன்றத ரத்தம் இறந்து தமியமாய்
என் கொலோ சேக்கு மாடம்'  
(ஐந்.ஐம். 40)

என விளக்குவர். நிகழ்கால இன்பத்தையும் எதிர்காலத் துன்பத்தையும் எண்ணுகிறது தலைவனது உள்ளம். இன்பத்திற்கும், துன்பத்திற்கும் இடையே நடக்கும் உள்ளப் போராட்டத்தை ஈண்டு காணமுடிகிறது. அவற்றில் எதுவென்றது என்பதற்கான குறிப்புப் பாடலில் இல்லை.

எனது பொருள் தேடும் முயற்சியினைத் தலைவியின் கண்ணொளியால் தடுக்க இயலுமா? எனத் தலைவன் இரங்குகிறான். அதனைக் கணிமேதாவியார்,

'சென்றக்கால் செல்லும்வாய் என்னோ இருஞ்சுரத்து
நின்றக்கா னீடி யொளிவிடா - நின்ற
விழைக்கமர்ந்த வேயேர் இளமுலையால் ஈடில்
குழைக்கமர்ந்த நோக்கின் குறிப்பு' 
 (தி.மா.நூற். 68)

என மொழிவர். இக்கருத்துடைய பாடல்கள் சங்க நூல்களில் பயின்று வந்துள்ளன.

வினைமுற்றி மீளல்

தலைவன் போர் காரணமாகத் தலைவியைப் பிரிந்து போர் முடிந்த நிலையில் மீண்டு வருவது வினைமுற்றி மீளல் எனப்படும். இச்சூழலில் தலைவன் கூற்று நிகழ்வதாகத் தொல்காப்பியர் மொழிவன. என்பனவாகும். இதில் 'பேரிசை யூர்திப் பாகர் பாங்கினும்' மீட்டுவர வாய்த்த வகையின் கண்ணும் எனும் கூற்றுகளுக்கு மட்டும் கீழ்க்கணக்கு அகநூல்களில் செய்யுள்கள் அமைந்துள்ளன.

பேரிசை ஊர்திப் பாங்கர் பாங்கினும்

வினைமுற்றி மீண்டு வரும் தலைவன் தேர்ப்பாகனோடு உரையாடுவது பேரிசை ஊர்திப் பாகர் பாங்கினும் எனப்படும். அந்நிலையில் 'ஐந்திணை ஐம்பதில் ஒரு செய்யுளும்' (ஐந்.ஐம்.10) 'கார் நாற்பதில் நான்கு செய்யுளும் அமைந்துள்ளன.' (கார்.நாற். 31-33, 36) அவற்றை,

 மேகமாய்ச் செல்க
 குறியுடைய காலம் செல்க
 நல்விருந்து பெற விரைக
 கற்புடையாளைக் காண

எனப்பகுத்து உணர்த்த வாய்ப்புண்டு.

மேகமாய்ச் செல்க


வினைமுற்றிய தலைமகன் பாகனிடம் பாகனே புகழை விரும்பும் செல்வரின் உள்ளத்தைப் போல கெடாத கொண்ட வண்டுகள் காட்டில் பிடவத்தின் மீது நன்றாக இசை பாடும். அதனைக் கண்ணுற்ற தலைவன் பாகனிடம் மொழிவதை மதுரைக் கண்ணங்கூத்தனார்,

' கடாஅவுக பாகதேர் காரோடக் கண்டே
கெடாஅய் புகழ்வேட்கைச் செல்வர் மனம்போல்
படாஅ மகிழ்வண்டு பாண்முரலும் கானம்
பிடாஅப் பெருந்தகை நன்கு'
  (கார்.நாற். 32)

என உணர்த்துவர். பாகனே! உன் தேரினை நிறுத்திவிடாதே. அது மேகம் போல விரைந்து செல்லட்டுமென மொழிகின்றான். தலைவன் தலைவியை விரைந்து காணவேண்டும் என்ற உள்ள வேட்கை தலைவனிடம் இருந்ததாலே பாகனிடம் இக்கூற்று நிகழ்ந்தது. நீண்ட நாள் தலைவியைப் பிரிந்திருந்தவர்க்கு அவள்மீது ஏக்கம் வருதல் இயல்பு. அவ் ஏக்க உணர்வே ஈண்டு அவனது வேட்கை உணர்வைத் தூண்டியது. இக்கருத்தினை,

'புன்புறப் பேடை சேவல் இன்புரை
மன்னர் இயவரின் இரங்கும் காலம்
வல்லை நெடுந்தேர் கடலின்
அல்லல் அகுநோய் ஒழித்தல் எமக்கு எளிதே'
  (ஐங். 425)

என்ற சங்க இலக்கியப் பாடலுடன் ஒப்பிட்டு நோக்க வாய்ப்புண்டு.

குறியுடைய காலம் செல்க

கார்முந்துமுன் தேர்முந்தும் எனத் தலைவியிடம் தலைவன் கூறிப் பிரிந்தான். அக்கார்காலத்தின் வரவுணர்ந்த தலைவன் பாங்கனிடம் 'யான் தலைவியிடத்து கூறி வந்த காலம் வந்தது.' ஆகவே அக்குறித்த காலத்தே தலைவியைக் காணவேண்டுமெனக் கூறுவதே குறியுடைய காலம் செல்க என்பதாகும். இதனைக் கார் நாற்பது தலைவன் கூற்றுப் பாடல்களில் காணமுடியும். அதனை, மதுரைக் கண்ணங்கூத்தனார்,

'கார்ச்சேன் இகந்த கரைமருங்கின் நீர்ச்சேர்ந்து
எருமை எழிலேறு எறிபவர்ச் சூடிச்
செருமிகு மள்ளரில் செம்மாக்குஞ் செவ்வி
திருநுதற்கு யாம்செய் குறி'
  (கார்.நாற். 31)

என்ற பாடல் தெளிவுபடுத்தும். நீர்நிலை புகுந்த ஆண் எருமை அங்குள்ள கொடிகளைக் கொம்பில் சூடி போர் மறவர்போல நிற்கும் காலமே தலைவிக்கு நாம் கூறிய காலம். ஆதலின் தேரை விரைந்து செலுத்துக எனத் தலைவன் தேர்ப்பாகனிடம்; உரைக்கிறான். தலைவனின் ஏக்க உணர்வே அவனது உள்ள வேட்கையை மிகுதிப்படுத்தியது. அவ்வேட்கை அன்பின் பொருட்டு அமைந்திலங்குகிறது என்பதை ஈண்டு அறியமுடிகிறது. இப்பொருண்மையில் கார் நாற்பதில் மதுரைக் கண்ணங்கூத்தனார்,

'கடல்நீர் முகந்த கமஞ்சூல் எழ்லி
குடமலை யாகத்துக் கொள்ளப்பு இறைக்கும்
இடமென ஆங்கே குறிசெய்தோம் பேதை
மடாமொழி எவ்வங் கெட்' (கார்.நாற். 33)

என்ற பாடல் தெளிவுபடுத்தும். சங்க இலக்கியங்களில் முல்லைத் திணையிலேயே கார்கால வருணனை முதன்மை பெறுகிறது. அதில் தலைவியின் எழில் நலம், இயற்கையின் மலர்ச்சி, தலைவனின் ஏக்க உணர்வு ஆகியன இடம் பெறுகின்றன.

நல்விருந்து பெற விரைக


கார்காலத்தில் முல்லை மலர்கள் மலர்ந்து மணம் பரப்பி நிற்பதைக் கண்டான் தலைவன். உடனே தேர்ப்பாகனிடம் கார்காலத்தின் வரவை முன்னிலைப்படுத்துகிறான். சிறந்த செல்வத்தையும், மழைக்கண்களையும் அளவான மொழிகளையுமுடைய தலைவியின் ஊர் இக்கார்காலத்தில் எமக்கு நல்விருந்து செய்யும். ஆகவே தேரை விரைந்து செலுத்துவாயாக என்கிறான். அதனை மதுரைக் கணண்ணங்கூத்தனார்,

'சிரல்வாய் வனப்பின் ஆகி நிரலொப்ப
ஈர்ந்தன் தளவம் தகைந்தன - சீர்த்தக்க
செல்ல மழைமதர்கண் சின்மொழிப் பேதையூர்
நல் விருந்தாக நமக்கு'
  (கார்.நாற். 36)

என்பர். இதில் தலைவனின் உள்ளத்து வேட்கையையும், உள்ளத் துடிப்பையும் காண முடிகிறது. தலைவி இனிமையாகப் பேசுபவள் அதனை 'சின்மொழிப்பேதை' என்ற தொடர் விளக்கும். தலைவன் அவள்பால் விரைந்து செல்லத் துடிப்பதற்குக் காரணம் தலைவியின் இனிமையான பேச்சேயாகும். இக்கருத்து 'தெரிதீம் கிளவி தெருமரல் உயவே' (குறுந். 250) என்ற குறுந்தொகை கருத்துடன் ஒப்பு நோக்கற்பாலது. தலைவியின் உடலழகினால் தலைவன் ஈர்க்கப்படவில்லை. அவளது இனிய பேச்சுத்திறனிலே ஈர்க்கப்பட்டுள்ளான் என்பது கருத்து.

கற்புடையாளைக் காண

வினைமுடித்த தலைவன் பாகனிடம்; கூறுவதை மாறன் பொறையனார்,

'நூனவின்ற பாகதேர் நொவ்விதாச் சென்றீக
தேனவின்ற கானத்து எழினோக்கித் - தானவின்ற
கற்புத்தான் வீழ்த்துக் கவுன்மிசைக் கையூன்றி
நிற்பாள் நிலையுணர்கம் யாம்'
  (ஐந்.ஐம்.10)

எனப் புலப்படுத்துவர். கார்காலத்தில் பெய்யும் மழைக் காண்பாருக்கு இனிமை பயப்பது போல என் வரவும் தலைவிக்கு இனிமை பயக்கும். இக்கருத்தினை மனத்திலிறுத்தியவளாய்க் கற்புக்கடம் பூண்டு உயிரை நிறுத்தி வாழும் தலைவியைக் காணத் தேரை விரைந்து செலுத்துவாயாக எனப் பாகனிடம் தலைவன் கூறுகிறான். தலைவனிடத்துத் தலைவிக்குள்ள ஆழ்ந்த நம்பிக்கையையும், தலைவியிடத்துத் தலைவனுக்குள்ள ஆழ்ந்த நம்பிக்கையையும் இக்கருத்;துப் புலப்படுத்துகிறது. கணவன், மனைவி இருவரும் தங்கள் இல்லற வாழ்வில் புரிதல் உணர்வுடன் செயல்பட வேண்டும். ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கை கொண்டு நடத்தல் வேண்டும். அவ்விதம் செயல்பட்டால் அவர்களது வாழ்க்கை இனிமையாகும் என்ற கருத்து, ஈண்டு உணர்த்தப்பட்டுள்ளது. இத்தலைவியின்; உயரிய பண்பினை,

'முல்லை சான்ற கற்பின்
மெல்லியல் குறுமகள் உறைவின் ஊரே'   
(நற். 142:10-11)

என்ற நற்றிணைத் தலைவியின் பண்புடன் ஒப்புநோக்கற்பாலது.

மீட்டுவர வாய்த்த வகையின் கண்ணும்


இக்கூற்று இரட்டுற மொழிதல் என்னும் உத்தியால் அமைந்துள்ளது. தலைவியைப் பிரிந்து சுரத்திடையே தலைவன் செல்லும் போது அவளது நினைவு வர வருத்தம் மிகுந்த நிலையில் மீண்டு வருதலைக் கருதுமிடத்தும், தலைவன் பேசும்சூழல் இடைச்சுரத்து அழுங்களாகும். இச்சூழலில் தலைவன் பேசுவதற்குரிய கூற்றும் வினைமுற்றி மீண்டு வருங்கால் தலைவன் நெஞ்சொடு வருந்திக் கூறுவதற்கும் இடம் தந்து நிற்கும் கூற்று மீட்டுவர வாய்த்த வகையின் கண்ணும் என்பதாகும்.

வினைமுற்றித் தலைவன் மீண்ட நிலையில் நெஞ்சொடு வருந்துவதற்குத் திணைமாலை நூற்றைம்பதிலும், கார்நாற்பதிலும் பாடல்கள் அமைந்துள்ளன. அவை அனைத்தும் தலைவன் தன் நெஞ்சிடம் கூற்று நிகழ்த்துவதாக உள்ளன. அவற்றை,

 வினைமுடிவும் கார்கால வரவும்
 பேதைப் பெருமடம் உரைத்தல்
 தலைவன் மனதில் தலைவியின் உருவெளி

எனப்பகுத்து உணர்த்த முடியும்.

வினைமுடிவும் கார்கால வரவும்


தலைவன் தான் மேற்கொண்ட வினைமுடித்தான். அந்நிலையில் தன் உள்ளத்திடம் உரைப்பதை மதுரைக் கண்ணங்கூத்தனார்,

'எல்லா வினையும் இடப்ப எழுநெஞ்சே
கல்லோங்கு கானம் களிற்றின் மதநாறும்
பல்லிருங் கூந்தல் பணி நோனாள் கார்வானம்
மெல்லவும் தோன்றும் பெயல்' (கார்.நாற். 24)

என விளக்குவர்.

மலைகளிலும், காடுகளிலும் யானையின் மத நாற்றம் வீசும்ளூ கரிய வானத்தில்; மழை மெல்லத்தோன்றும்ளூ அதனால் தலைவி துயர் மிகப் பெறுவாள்ளூ தன் உள்ளத்தை ஆற்றியிருக்கும் செயலினைக் கைவிடக்கூடும். ஆகவே மனமே விரைந்து அவள்பால் செல்லுதற்கு முற்படுவாயாக எனத் தலைவன் தன் உள்ளத்திடம் கூறுகிறான். கார்முந்துமுன், தேர்முந்துமுன் எனக்கூறிப் பிரிந்தான் தலைவன். அக்கார்காலம் வந்தது. அதன் வரவை தலைவி கண்ணுற்றாள். ஆகவே, அவள் வருத்தமெய்துமுன் அவ்விடம் தாம் விரைய வேண்டுமெனத் தலைவன் எண்ணுகிறான். தலைவியைத்; துன்பப்படுத்தக்கூடாது எனத் தலைவனின் உள்ளம் விரும்புவதை ஈண்டு உணரமுடிகிறது.

பேதைப் பெருமடம் உரைத்தல்

நெஞ்சமே! காற்றானது காதலியின் மடப்பத்தை நமக்கு அறிவித்தது. ஆகவே, தலைவி வரைந்துள்ள இடம்நோக்கி விரைந்து எழுவோமெனத் தலைவன் நெஞ்சை நோக்கி கூறுவதனை மதுரைக் கண்ணங்கூத்தனார்,

'வரைமல்க வானம் சிறப்ப உறைபோழ்ந்து
இருநிலம் தீம்பெயல் தாழ - விரை நாற
ஊதை உளரும் நறுந்தன்கா பேதை
பெருமடம் நம்மாட்டு உரைத்து'
  (கார்.நாற். 30)

என்பர். தலைவியின் துயரினை நீக்கித் தலைவனது உள்ளம் வேட்கை- யுறுவதையும், தலைவன் தலைவியிடத்துக் கொண்டுள்ள அன்பின் மேன்மையையும் இக்கருத்து உணர்த்துகிறது.

தலைவன் மனதில் தலைவியின் உருவொளி


வினைமேற்கொண்டு தலைவியைப் பிரிந்து சென்றான் தலைவன். அங்கு வினைமுடிந்த பின் தலைமகளை நினைத்தான். அவளது தோற்றம் அவன் மனத்திரையில் தோன்றியது. அத்தோற்றத்தை நோக்கித் தலைவன் கூறுவதைக் கணிமேதாவியார்,

'வந்தாற்றான் செல்லாமோ ஆரிடையாய் வார்கதிரால்
வெந்தாற் போற்றோன்று நீள் வேயத்தந் - தந்தார்
தகரக் குழல் புரளத் தாழ்துகில்கை ஏந்தி
மகரக் குழைமறித்த நோக்கு' 
 (தி.மா.நூற். 77)

என உணர்த்துவர். உடுக்குப் போன்ற குறுக்கு உடையவளே! மயிற்சாந்துடைய கூந்தல் அவிழ்ந்து தொங்க மகரமீன் போல் காதணியுடன் காட்சி தருபவள் தலைவி. அவள் எதிரில் வந்தால் நீளமான மூங்கில்கள் நிரம்பிய இப்பாலை வழியில் உன்னிடம் செலவைக் கழிப்பேன் என தன் முன் தோன்ற தலைவியின் அழகினை வியக்கிறான்.
 

முனைவர் பூ.மு.அன்புசிவா
தமிழ்த்துறைத்தலைவர்
சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
சரவணம்பட்டி, கோவை-641 035

 

 




 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்