இயல் தமிழ் இமயம்  இரா.மோகன்

 

முனைவர் அ.கோவிந்தராஜூ, தேசிய விருதாளர்

 


பேராசிரியர் இரா.மோகனின் வலக்கரத்தில் ஆறாம் விரலாகத் திகழ்ந்த எழுதுகோல் தன் பணியை நிறுத்திக்கொண்டது சென்ற ஜூன் மாதம் பன்னிரண்டாம் நாள். இறுதி மூச்சுவரை இயங்கிக் கொண்டிருந்த மாமனிதரைத் தமிழ் கூறும் நல்லுலகம் என்றென்றும் நினைத்துப் பார்க்கும்.

அவரது ஆய்வுப் பரப்பு என்பது பரந்து விரிந்த ஒன்றாகும். “எல்லாத் தளங்களிலும் முத்திரை பதித்த மோகன் அவர்களை எந்த ஒரு கூண்டுக்குள்ளும் அடைத்துவிட முடியாது” என்னும் வைரமுத்து அவர்களின் கூற்று ஈண்டு மனத்தில் கொள்ளத் தக்கதாகும்.

பேராசிரியர் ஒரு கட்டுரையை எழுதுவதற்குச் செய்யும் முன்தயாரிப்பு மிகவும் குறிப்பிடத் தகுந்ததாகும். ஏட்டை எடுத்தோம் எழுதினோம் என்று போகிற போக்கில் எழுதமாட்டார். முதலில் மூல நூலை மும்முறையும் படிப்பார். அதன் பிறகு தொடர்புடைய பார்வை நூல்களைத் தொகுப்பார்; அவற்றை ஆழ்ந்து படிப்பார்; தரவுகளை நிரல்பட வகுப்பார். பின்னர் கட்டுரையை எழுதி முடிப்பார். அதைத் தம் எழுத்துக்கு முதல் வாசகராய்த் திகழும் துணைவியார் முனைவர் நிர்மலா அவர்களிடம் கொடுத்துக் கருத்தினைக் கேட்பார். மீண்டும் அதைச் செம்மைப் படுத்துவார். . இப்படி ஒரு வழக்கம் அவரிடத்தே படிந்திருந்ததால் அவரது படைப்புகளில் முரண்படக் கூறல், கூறியது கூறல், வெற்றெனத் தொடுத்தல் போன்ற குற்றங்களைக் காண இயலாது.

பேராசிரியர் எழுதிய ‘சங்க இலக்கியச் செல்வி’ என்னும் நூலுக்கு மூதறிஞர் தமிழண்ணல் வழங்கியுள்ள அணிந்துரையில் அவர் தந்துள்ள வாக்குமூலமே மேலே யான் நவின்ற கருத்துக்குச் சான்றாக அமையும். தமிழண்ணலின் கூற்று பின்வருமாறு:

“ஒரு சிறு கட்டுரையானாலும் அதற்கானத் தரவுகளைத் தொகுத்தும் வகுத்தும் சிந்தித்துக்கொண்டு எழுதுகின்றமையால், இது ‘மோகன் பாணி” போல்வது என எண்ண வைக்கிறது. கட்டுரையைப் படிக்கும்போது அதிலொரு கட்டுக்கோப்புப் புலனாகிறது”

“ஒரு பொருளை எடுத்துக் கொண்டால் அப்பொருள் தொடர்பான தகவல்களை நீங்கள் எப்பொழுதுமே முழுமையாகச் சேகரிப்பீர்கள். அதனால் உங்கள் படைப்பில் ஆழமும் இருக்கிறது; அகலமும் இருக்கிறது” என்னும் வா.செ.குழந்தைசாமி அவர்களின் கூற்றும் பேராசிரியர் குறித்த என் கருத்துக்கு அரணாக அமையும் என நம்புகிறேன்.

சிறு கட்டுரை எழுதுவதற்கே இத்தனை முயற்சி என்றால் அரிய பெரிய நூல்களைப் படைப்பதற்கு எத்துணை பாடு படுவார்! நூல் இயற்றலை ஒரு தவம் போலச் செய்வார். ஒரு பொருள் குறித்துப் பல கட்டுரைகளை எழுதினாலும் அந்த நூல் முழுவதும் மணியிடை இழையாக அவர் வாசகருக்குத் தெரிவிக்க விரும்பும் ஒரு செய்தி தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். நான் அவருடைய நூல்களில் ஆழங்கால் பாட்டவன் என்ற முறையில் இக்கருத்தை உரக்கச் சொல்கிறேன்.

வேறு ஆளுமைகளில் யாரேனும் இப்படிச் சொல்லியிருக்கிறார்களா என்றுதானே கேட்கிறீர்கள்?

பேராசிரியரின் ‘கம்பன் கவியமுதம்’ என்னும் நூலைப் படித்துவிட்டுப் பேராசிரியர் தெ.ஞானசுந்தரம் இப்படிப் பதிவிடுகிறார்:

“எத்தனை உழைப்பு, எத்தனை நுட்பமான பார்வை, எத்தனை அக்கறையான தேடல் இந்த நூலின் பின்னே இருக்கின்றன என்பதனை எண்ணும்போது நூலாசிரியரின் வித்தக விரல்களுக்குத் தங்க மோதிரங்கள் போடலாம் என்று தோன்றுகிறது.”

ஐயா அவர்கள் முனைவர் பட்டம் பெற்ற கையோடு, 1976 ஆம் ஆண்டு மதுரைக் காமராசர் பல்கலைக்கழக அஞ்சல் வழிக்கல்வித் துறையில் தமிழ் விரிவுரையாளராகச் சேர்ந்தார். நானும் அதே ஆண்டில் அஞ்சல்வழிக் கல்வியில் தமிழ் முதுகலை மாணவனாகச் சேர்ந்து அவரிடத்தில் பயின்றேன். மாணவர்களிடத்தில் தினையளவு திறன் இருந்தாலும் அதைப் பனையளவாக மாற்றிக் காட்டிவிடுவார். இதன் காரணமாக தேன்படு மலர்களை நாடும் வண்டுகளைப் போல மாணாக்கச் செல்வங்கள் அவரை வலம் வந்துகொண்டே இருப்பார்கள்.

நான்கு வரிகள் நல்லவிதமாக எழுதத் தெரியாத என்னை தினமணியில் நடுப்பக்கக் கட்டுரைகள் எழுதும் அளவிற்குச் செதுக்கினார். பல மேடைகளில் என்னை ஏற்றினார்; போற்றினார்; நூலாசிரியராக மாற்றினார். எனது நூல்களுக்கு அவர் அளித்த அணிந்துரைகளைத் தொகுத்தாலே ஒரு தனி நூலாகும். என் சிற்றறிவில் தோன்றிய சரக்கினை மதிப்புக்கூட்டி இலக்கிய வட்டத்தில் ஏற்கச் செய்ததே அவரது அணிந்துரைகள்தாம் என்று சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

நான் பேராசிரியர்கள் பலரிடத்தில் படித்திருக்கிறேன்; பழகியிருக்கிறேன். அவர்களுள் சிலர் நூல்களைப் படிப்பார்கள். ஆனால் பேச்சிலோ எழுத்திலோ பகிர மாட்டார்கள். இன்னும் சிலர் படித்ததை மேடையில் பேசுவார்கள். ஆனால் கட்டுரையாக எழுதமாட்டார்கள். ஆனால், படிப்பது, பேசுவது, எழுதுவது என்பதை திருக்குறளின் முப்பால் போல மூன்று தளங்களிலும் நின்று மூச்சு அடங்கும்வரை முழுமையாகச் செயல்பட்டவர் பேராசிரியர் மோகன் என்பது என் கணிப்பாகும். இலக்கியவாதிகளின் ஒன்றுபட்டக் கருத்தும் இதுவாகத்தான் இருக்கும்.

எனக்கு வாய்ப்பு நேரும்போதெல்லாம் பேராசிரியரின் இல்லத்திற்குச் செல்வேன். அப்படி ஒருநாள் சென்றபோது பேராசிரியர் இல்லத்திலே இல்லை. அவருக்காகக் காத்திருந்த நேரத்தில் இலக்கிய இணையரின் இல்ல நூலகத்திற்குள் நுழைந்தேன்,

“நூல்களெல்லாம் ஒழுங்கின்றிக் கிடக்கும்” என்றார் பேராசிரியரின் துணைவியார். ஒளவையாரின் பாடல்தான் என் நினைவுக்கு வந்தது. “தொண்டைமானே! உன் படைக் கருவிகள் நெய்தடவி அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதியமானின் படைக்கருவிகள் கூர் உடைந்து கிடக்கின்றன” என்று அதியன் போர்மேல் செல்வதில் பெருவிருப்பு உடையவன் என்பதை சொல்லாமல் சொல்லும் வகையில் அவனை இகழ்வதுபோல புகழ்ந்துப் பேசுவார். சிலர் நூல்களைச் சேகரித்து அடுக்கில் அழகுற அடுக்கி வைத்திருப்பர். அவற்றை வாசித்திருக்கமாட்டார்கள். இத்தகைய தொண்டைமான் நூலகத்தால் ஒரு பயனும் இல்லை.

பேராசிரியர் மோகனின் இல்ல நூலகம் அதியன் நூலகமாகும். அடிக்கடி எடுத்துப் படிப்பதால் நூல்கள் மேசை மீது கலைந்து கிடக்கின்றன. பரண்மீது காணப்படும் நூல்கள் படுத்துக் கிடக்கின்றன.
மூன்று அறைகளில் பன்னிரண்டாயிரம் நூல்களைத் தொகுத்து வைத்துள்ளார்கள். நூறாண்டு பழமையுடைய நூல்களோடு, அண்மையில் வெளியான பல நூல்களும் ஒருங்கே காணப்படுகின்றன. விடை பெற்றபோது, பேராசிரியர் அவர்கள் தன்னுடைய கனவெல்லாம் கலாம் என்னும் நூலின் முகப்புப் பக்கத்தில் வாழ்த்துக் கையொப்பம் இட்டு எனக்களித்தார்.

நிலா நூலகம் என்னும் பெயர் தாங்கிய இலக்கிய இணையரின் நூலகம் ஆய்வாளர்க்கு ஓர் கலங்கரை விளக்கம் என்றால் அது மிகையாகாது..

இப்படி எழுதிக்கொண்டே போனால் கட்டுரைக்கு ஒரு முடிவிருக்காது.

நம்மிடையே இருந்த மோகன் இப்போது இரா மோகன் ஆகிவிட்டார். பல ஆண்டுகளுக்கு முன்னால் பேராசிரியர் மோகனைப்பற்றி அப்துல் ரகுமான் எழுதியிருந்தது இப்போது என் நினைவில் தோன்றி கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

“இரா மோகன் என உன்னை
யார் சொன்னார்?
இனியவர் இதயங்களில்
என்றும் இருக்கின்ற மோகன் நீ”

ஆம். பேராசிரியர் மோகன் அவர்கள் இலக்கிய ஆர்வலர்களின் நெஞ்சத்தில் விதையாய் விழுந்துள்ளார். ஒரு நெல் மணி ஓராயிரம் நெல்மணிகளை விளைவித்தல் போல, ஒரு மோகன் ஓராயிரம் மோகன்களாய் உருவாகி உயிர்த்தமிழுக்கு உரம் சேர்ப்பார்கள். வாழ்க தமிழ்! வளர்க பேராசிரியரின் புகழ்!



 

 

(முனைவர் அ.கோவிந்தராஜூ, தேசிய விருதாளர்)

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்