களவழி நாற்பதில் போர்க்களக்காட்சிகள்

முனைவர் நா.அமுதாதேவி


முகவுரை

சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்களின் தொகுதியே பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படும். இவை பல புலவர்களால் பாடப்பட்டுத் தொகுக்கப்பட்ட நூல் ஆகும். அறம்,பொருள்,இன்பம் என்ற மூன்று உறுதிப்பொருள்களின் அடிப்படையில் வாழ்வியலைச் சொல்வதே இதன் பொருண்மையாகும். சங்ககால மக்களின் அனுபவ உண்மையையும் அறிவினையும் பிற்காலப்புலவர்கள் நீதி நூல் கருத்துக்களாகப் போற்றி வந்துள்ளனர் எனலாம். நீதிநூல்களில் மக்களை நல்வழிப்படுத்தும் வாழ்வியல் அறங்களையே பெரும்பாலும் சுட்டிக்காட்டியுள்ளது. போரும் போரியல் வாழ்வும் அக்காலத்தில் தவிர்க்க இயலாதவையாகும். அவ்வகையில் களவழி நாற்பது என்னும் இந்நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள போர்க்களக்காட்சிகளை ஆய்வதாக இக்கட்டுரையின் பொருண்மை அமைகின்றது.

நூல் அறிமுகம்


பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் இலக்கணத்துடன் அமைந்தநூல் களவழிநாற்பதாகும். சோழ மன்னன் கோச்செங்கணானுக்கும் சேரமன்னன் கணைக்கால் இரும்பொறைக்கும் இடையே கழுமலம் என்னும் இடத்தில் நடைபெற்ற போரினை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் எழுந்தது எனலாம். இந்நூலின் ஆசிரியர் பொய்கையார் என்னும் புலவர் ஆவர். இந்நூலில் உள்ள நாற்பது பாடல்களும் அக்காலத்திய போர்க்களக்காட்சியைக் கவித்துவமாகக் காட்சிப்படுத்தியுள்ளார். பெரும்பாண்மையான பாடல்களில் யானைப் படையின் சிறப்பு கூறப்பட்டுள்ளது. நால்வகைப்படைகளுள் யானைப்படை பலம் வாய்ந்தவையாகக் கருதப்படுகிறது. யானைப்படைகளைக் கவனிப்பதில் மன்னர்கள் தனிக்கவனம் செலுத்திவந்துள்ளனர். இந்நூலில் யானைப்படைகளின் சிறப்பு பல பாடல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பல பாடல்களில் சோழநாட்டின் நீர்வளம்(8,7,12,14,32,33,37) குறிப்பிடப்பட்டுள்ளது. சில பாடல்களில் மிதமிஞ்சியக் கற்பனை வளம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நூல் வகை


நெல் முதலான விளைச்சல் தரும் பயிரை சீர் செய்யும் இடத்தைச் சிறப்பித்துப் பாடுவது களவழி நாற்பது என்னும் ஒருவகை. இது ஏரோர்களவழி ஆகும். விளை பொருட்களை சீர் செய்யும் இடத்தினைச் சிறப்பித்துக் கூறும் நூல் இதுவாகும். பகைவர்களைப் போர்க்களத்தில் வெற்றி பெற்ற போர்ச்சிறப்பினைப் பாடுவது தேரோர் களவழி ஆகும்.

களம் என்பது இங்கு போர்க்களத்தினைச் சுட்டுகிறது. போர்களத்தைப் பற்றிய நாற்பது பாடல்களை உள்ளடக்கிய நூல் இது எனலாம். இந்நூலில் 41 வெண்பாக்கள் இருக்கின்றன. வெண்பாவில் நான்கு அடிகள் மட்டுமே இருக்கவேண்டும் என்பது விதி. நான்கு அடிகளுக்கு மேல் வருமாயின் அது பஃறொடை வெண்பா ஆகும். இந்நூலின் பல பாடல்கள் பஃறொடை வெண்பா என்னும் வகைமைகளில் அமைந்துள்ளது. இந்நூலில் உள்ள பாடல்கள் அனைத்தும் களத்து என்னும் சொல்லை இறுதியாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

பொய்கையார்


பொய்கை என்னும் ஊரில் பிறந்தமையால் இவர் பொய்கையார் எனும் பெயர் பெற்றதாகவும் கூறுவர். பொய்கை ஆழ்வார் என்னும் பெயரில் பக்தி இலக்கிய கால கட்டத்தில் ஆழ்வார்களில் ஒருவர் வாழ்ந்தமையை அறியலாம். சங்கஇலக்கியப் பாடல்களில் நற்றினை,புறநானுறு ஆகியவற்றில் பொய்கையார் என்னும் பெயரில் சில பாடல்களைக் காணமுடிகின்றது.

சோழன் சோச்செங்கணான் போரில் தோற்ற சோழ மன்னனைக் குணவாயில் கோட்டத்தில் சிறை வைத்திருந்தான். இதனை அறிந்த சேரனின் அவைகளப் புலவரான பொய்கையார் தன் மன்னனை விடுவிக்க வேண்டி தமது கவிதை வரிகளால் சோழ மன்னனைப் புகழ்ந்து பாடினான். கவிஞரின் பாடல் வரிகளுக்கு மனம் இரங்கிய மன்னன் சிறையில் இருந்த சேரனை விடுவித்தான். இதனைக் குலோத்துங்க சோழன் உலா என்னும் நூலில்

'பொறையனைப் பொய்கைக் கவிக்குக் கொடுத்து
களவழிப்பா கொண்டோனும்.'


என்று சுட்டிக்காட்டியுள்ளது.

போருக்கான காரணம்

மன்னர்கள் பலரும் பல்வேறு வகையான காரணங்களுக்காகப் போரினை மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மன்னர்களுக்குள் ஓற்றுமையின்மை, மண்ணாசை ஆகியவை பெரும்பாலும் காரணமாக அமைகின்றது. தானே சிறந்தவன் என்ற காரணத்தினாலும் தன் படைபலத்தினைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தினாலும் போர்நடைபெறுகின்றது. போரினால் மன்னர்களின் படைபலம் வெளிப்பட்ட போதிலும் மக்கள் பல வாழ்வியல் சிக்கல்களை சந்திக்க நேர்கின்றது. பல மன்னர்கள் தான் போரிட நேர்ந்தாலும் தன் நாட்டு மக்களை எவ்விதபாதிப்பும் ஏற்படதாவாறு மக்களைப் பாதுகாத்து வந்தனர். பாரிமன்னனின் பறம்புமலையைச் சான்றாகக் குறிப்பிடலாம்.

போர்க்கள வருணனைகள்


இன்றைய கால கட்டத்தில் போர் நடைபெறும் இடத்தினை நாம் நேரிடையாகக் காணமுடிவது இல்லை. ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு போர்க்களம் எப்படி இருந்தது. போர்க்களத்தில் போர் புரியும் வீரர்கள், விலங்குகள், படைகளின் நிலை எவ்வாறு இருந்தன என்பதனை மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். உண்மையும் கற்பனையும் கலந்த போர்க்கள நிகழ்வுகளை இங்கு காட்சிப்படுத்தியுள்ளார். நாற்பது பாடல்களில் பல போர்நிகழ்வுகள் சுட்டிக்காட்டப்பட்டு இருப்பினும் அவற்றில் சில பாடல் காட்சிகளைச் சான்றாகக் காணலாம்.

வாளால் குத்துப்பட்டு இறந்த பகைவர்களின் குருதியானது பல இடங்களில் பரவிக்காணப்படுகிறது. யானைகள் இந்தக் குருதிக்குழம்பினை சேறாகக் கருதிக் கொண்டு விளையாடி மகிழ்கின்றது. மாலைப்பொழுதில் இந்தக் குருதிகாய்ந்து தூளாகப் பறக்கின்றது. இதனை

'முற்பகல் எல்லாம் குழம்பு ஆகி,பிற்பகல்
துப்புத்துகளின் கெழுஉம்......' 
 (களவழிநாற்பது -1)


என்ற பாடலடிகள் புலப்படுத்துகிறது.

குருதி நிரம்பிய போர்க்களத்தில் வீரர்கள் நடக்க முடியாமல் தடுமாறும் பொழுது ஊன்றுகோலாகப் போர்க்களத்தில் இறந்து கிடக்கும் யானையின் தந்தங்களைத் துணையாகக் கொண்டு நடத்துகின்றனர்.

போர்களத்தில் இறந்து கிடக்கும் வீரர்களின் உடலில் இருந்து வழியும் குருதியை காகங்கள் தம் அலகினால் குடித்து ருசி பார்க்கிறது. கரிய காக்கையின் நிறம் செம்போத்துப் பறவையின் நிறம் போல மாறியதாகவும், மீன் கொத்திப் பறவையின் சிவந்த மூக்கினைப் போல அதன் அலகுகள் மாறிப் போனதாகவும் கற்பனை செய்கிறார் ஆசிரியர். இயல்பாக நடைபெறும் நிகழ்வில் மேலும் தம் கற்பனை வளத்தைப் புகுத்தி போர்க்களம் மிகக் கொடியதாக இருப்பதனைச் சித்தரிக்க முயல்கிறார்.

'தெரிகணை எஃகம் திறந்த வாயெல்லாம்
குரதிபடிந்துண்ட காக -முரவிழந்து
குக்கிற் புறத்த சிரல்வாய செங்கண்மா
றப்பியா ரட்ட களத்து' 
 (களவழிநாற்பது -5)

என்ற பாடலடிகள் இதனை உணர்த்திநிற்கிறது.

போர்க்களத்தில் காணும் எல்லாத் திசையிலும் படைவீரர்களின் பிணங்கள் பரவிக்காணப்படுகிறது. யானைகள் பலவும்; கொல்லப்பட்டு ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளது. இக்காட்சியினைக் காணும் பொழுது மலைமீது இடி விழுந்து இந்த இடியின் காரணமாக பிடுங்கி எறியப்பட்ட புதர்கள் மலை முழுவதும் பரவிக் கிடப்பது போல போர்களம் காட்சி தருகிறது. இதனை

'நானாற் றிசையும் பிணம் பிறங்க யானை
யடுக்குபு வேற்றிக் கிடந்த -'
 ( களவழிநாற்பது -6)

என்ற பாடலடிகளின் வாயிலாக இக்காட்சியினைக் காணமுடிகிறது.

போரிடுதல்


போர்வீரர்கள் தன் சக படைவீரர்களுடன் போரிடுவர். அவ்வாறு போரிடும் பொழுது அங்கம் குறைவு படுவது போரில் தடுக்க இயலாத நிகழ்வாக மாறிவிடுகிறது. இந்நிலை வீரர்களுக்கு மட்டும் அன்றி நான்கு வகையான படைகளுக்கும் பொருந்தும். போரில் எப்படியாவது வெற்றி பெற்றுவிடவேண்டும் என்ற நோக்கில் நாற்படைவீரர்களும் செயல்படுவர். யானையின் துதிக்கைகள் வெட்டப்பட்டு அவற்றில் இருந்து குருதி வழிகின்றது. யானையின் இந்நிலையைக் காணும் பொழுது பையில் இருந்து பவளம் இடைவிடாது சிந்துவது போல இருப்பதாக காட்சிப்படுத்துகிறார் ஆசிரியர்

'கவளம் கொள் யானையின் கைகள் துணிக்க
பவளம் சொரிதரு பை போல, திவள் ஒளிய
ஒண் செங்குரதி உமிழும்...'
  ( களவழிநாற்பது -14)

என்ற இக்காட்சியியைப் புலப்படுத்துகிறது. நிலமகள் சிவந்த நிறமுள்ள போர்வையை விரும்பிப் போர்த்திக் கொள்வது போல போர்க்களம் முழுவதும் வீரர்களின் இரத்தம் படிந்து காணப்படும் நிலையையை

'மையின் மா மேனி நிலமென்னும் நல்லவன்
செய்யது போர்த்தாள் போற் செவ்வந்தாள்'
 (களவழிநாற்பது -32)

என்ற பாடலடிகளில் நிலமகளை சிறப்பித்துக் கூறும் நிலையைக் காணமுடிகின்றது.

போர்வீரர்களால் வெட்டப்பட்ட யானையின் துதிக்கைகள் கீழே விழுந்து அசைகின்றன அக்காட்சியைக் காணும் பொழுது மலைமீது இடி விழுந்த அதிர்ச்சியில் பாம்புகள் கீழே விழுந்து புரள்வது போலக் காணப்படுகிறது.

'.... வரை புரை யானைக் கை நூற ,வரை மேல்
உரும் அறி பாம்பின் புரளும்''
 (களவழிநாற்பது -13) யானையின் துதிக்கைகள் பகைமன்னின் வெண்கொற்றக் குடைக்கு அருகில் வீழ்ந்து கிடக்கின்றன. இந்நிலையைக் காணும் பொழுது நிலவினைப் பாம்பு தொட்டுச்சுவைப்பது போல காட்சிப்படுத்தியுள்ளனர்.

'ஓடா மறவர் துணிப்ப துணிந்தவை
கோடு கொள் ஒண் மதியை நக்கும் பாம்பு ஒக்குமே' 
 (களவழிநாற்பது -22) என்ற பாடலடிகளின் வாயிலாக யானைகளின் போர்க்கள நிகழ்வுகளைவும் போரில் இறந்துகிடக்கும் யானைகளின் நிலையையும் காட்சிப்படுத்தியுள்ளார்.

மிதமிஞ்சிய கற்பனை


கவிஞர்கள் தம் படைப்புகளில் சுவையைக்கூட்டுவதற்காக பல கற்பனை வரிகளைப் புகட்டுவர். அவற்றில் சில நடைமுறை வாழ்விற்கு ஏற்புடையதாகவும் பல கற்பனை வரிகளுக்கு அப்பாற்பட்டு ஏற்றுக் கொள்ள இயலாதவையாக இருக்கின்றது. அப்படிப்பட்ட பல பாடல்களை இந்நூலிலும் காணமுடிகின்றது. விரர்களின் காயங்களில் இருந்து வழியும் குருதிகார்த்திகை மாதத்தில் பெண்கள் ஏற்றும் விளக்கு போல இருந்ததாகவும்(17) போர்க்களத்தில் இரத்த வெள்ளத்தில் பிணங்கள் அடித்து வரப்படும் காட்சி கடற்கரையில் கட்டுமரங்கள் அலைகளால் இழுத்து வரப்படுவது போல இருந்தது.(18) (37) சோழனுடன் போரிட்டு போர்க்களத்தில் எல்லாத்திசையிலும் பல வீரர்களின் தலைகள் சிதைந்து கிடக்கின்றது. இக்காட்சியைக் காணும் பொழுது புயல் வீசி கரிய பணம் காய்கள் வீழ்ந்து கிடப்பது போலத் தோன்றுகிறது என்கிறார் பொய்கையார்.

'திசைதோறும்
பைந்தலை பாரில் புரள்பவை நன்கு எனைத்தும்
பெண்னை அம் தோட்டம் பெருவளி புக்கற்றே' 
 (களவழிநாற்பது 24)

ஆசிரியர் இயல்பாக நடைபெறும் பல போர்க்களக் காட்சிகளின்; மீது தன் குறிப்பினை ஏற்றிக் கூறியுள்ளார். யானையுடன் யானை மோதுவது மலையுடன் மலை மோதுவது போலவும் யானைமீது கட்டப்பட்டிருந்த மன்னனின் நாட்டுக் கொடிகள் காற்றில் அசைவது வானில் போரினால் ஏற்பட்ட கரையைத் துடைப்பது போல இருப்பதாகக் கூறுகிறார்.

'மலைகலங்கப் பாயும் மலை போல் நிலை கொள்ளாக்
குஞ்சரம் பாய.....
வானம் துடைப்பன போன்ற ..' 
( களவழிநாற்பது – 25)

இது போன்ற பாடல் வரிகளில் மிதமிஞ்சிய கற்பனை வளத்தினைக் காணமுடிகின்றது. போர்க்களத்தில் பல விலங்கினங்கள் நிணத்தினை உண்பதற்காகத் திரிந்து கொண்டிருக்கின்றது. நரி ஒன்று தனக்கான உணவினைத் தேடிக் கொண்டிருக்கும் வேளையில் பகைவர்களின் கேடயத்துடன் கூடிய அறுந்த கைகளைத் தன் வாயில் கவ்விக்கொண்டு செல்கிறது. இக்காட்சியானது கண்ணாடியில் கண்டு மகிழும் மனிதனின் முகம் போலத் தோன்றுகிறது என்கிறார்.

'கேடகத்தோடு அற்ற தடக்கை கொண்டு ஓடி
இகலன் வாய்த் துற்றிய தோற்றம் அயலார்க்குக்
கண்ணாடி காண்பாரின் தோற்றம் '
 (களவழிநாற்பது – 28)

களவழி நாற்பதின் இப்பாடல் வரிகளின் வாயிலாக பல இயற்கை மிஞ்சிய,ஏற்றுக்கொள்ள இயலாத பல உவமைகளை ஆசிரியர் கையாண்டுள்ளார் என்பதனை அறிய முடிகின்றது.

மகளிர் நிலை


போர்க்களத்தில் தம் உறவுகள் பலவற்றையும் பலரும் இழந்து வாடுவர்.போரில் வெற்றியும் தோல்வியும் இயல்பான ஒன்றாகும். அவ்வகையில் போரில் இறந்த வீரர்களின் மனைவியர்கள் தம் கணவனின் உடலைத் தேடி நான்கு திசைகளிலும் ஓடி அலைகின்றனர். இதனை

'நால்திசையும்
கேளிர் இழந்தார் அலமருப – செங்கண்
சிறைமால்பொருத களத்து'   (
களவழிநாற்பது – 29) என்ற பாடல் வரிகள் மூலம் பெண்களின் நிலையைப் பதிவிட்டுள்ளார். நாட்டிற்காக விரமரணம் எய்த போதும் தன் துணைவன் போரில் இறந்துபட்டானே என்று ஏக்கத்துடன் பெண்கள் செல்லும் அவலக்காட்சியையும் காண முடிகின்றது.

நரியின் செயல்


போர்க்களத்தில் பகைவர்கள் குடல் சரிந்து இறந்து கிடக்கின்றனர். அந்தக் குடலினை குள்ளநரிகள் கவ்விக் கொண்டு அங்கும் இங்குமாக இழுத்து விளையாடி மகிழ்கிறது. இச்செயலைக்காணும் பொழுது தூணில் கட்டப்பட்ட நாயானது தனது சங்கிலியை இழுப்பது போல இருப்பதாக நரியின் செயலைக் காட்சிப்படுத்தியுள்ளார்.

'குடக்கொடு வாங்கும் குறு நரி,கந்தில்
தொடரொடு கோள் நாய் புரையும்'
  (களவழிநாற்பது – 34)

என்ற பாடலடிகளின் வாயிலாக இதனை அறியலாம். பருத்த குடல்களைத் தின்ற நரிகள் வெண்கொற்றக்குடையின் அருகில் உறங்குவது முழு நிலவிற்கு அருகில் முயல் வடிவில் களங்கம் இருப்பது போலத் தோன்றுவதாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

'பருஉக் குடக் மாந்திக்
குடைப் புறத்துத் துஞ்சும் இகலன்
திங்களில் தோன்றும் முயல் போலும்...'  
 (களவழிநாற்பது – மிகைப்பாடல்) என்ற மிகைப்பாடலின் வழியாகப்பதிவிட்டுள்ளார்.

புண்பட்ட யானையின் நிலை


தன் மன்னனுக்கு வெற்றியைத் தேடித் தந்த யானையானது பல வீரர்களின் ஆயுதங்களால் தாக்கப்பட்டு புண்பட்டு இறக்கும் நிலையில் இருக்கின்றது. அது தனக்கு ஏற்பட்;ட வலியைத் தாங்கிக் கொள்ள இயலாமல் வருந்தித் துடிக்கின்றது. இதனை இடியின் ஓசை கேட்டு பாம்புகள் உருள்வது போல யானைகள் இரு பக்கங்களிலும் புரண்டு அழுவதைக் காணமுடிகின்றது என்கிறார்.

'பருமப்பணை எருத்தின் பல்யானை புண் கூர்ந்து
உரும் எறி பாம்பின் புரளும்' 
(களவழிநாற்பது – 38) என்ற இவ்வரிகள் யானையின் புண்பட்ட நிலையைச் சுட்டுகிறது. காயம்பட்ட யானைகள் தந்தங்களுடன் கூடிய முகத்தினைத் தரையின்மீது சாய்த்துக் கிடக்கும் காட்சியானது உழவர்கள் தம் நிலத்தை வெள்ளிக் கலப்பையால் உழுவது போல இருந்தது என்கிறார்.

'வெள்ளி வெண் நாஞ்சிலால் ஞாலம் உடுவன போல
எல்லாக் களிறும் நிலம் சேர்ந்த ...' 
   (களவழிநாற்பது -40)

என்ற வரிகளில் யானையின் நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீரர்;களின் வேல்களால் குத்துப்பட்ட யானைகள் தளர்ந்து போய் கலக்கமான நிலையில் தம் காதுகள் நிலத்தில் படும்படியாகச் சாய்ந்து கிடக்கின்றன. இக்காட்சியானது நிலமகள் தமக்குக் கூறும் அறக்கருத்துக்களை யானைகள் பணிவோடு கேட்பது போல இருப்பதாகக் காட்சிப்படுத்துகிறார். இதனை

'வயவரால் ஏறண்டு
கால் நிலை கொள்ளாக் கலங்கி செவி சாய்த்து
மா நிலம் கூறும்மறை கேட்ப...  
   ( களவழிநாற்பது -41)

என்ற இவ்வரிகள் யானையின் துயர்நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளது. களவழி நாற்பது என்னும் இந்நூலின் வாயிலாக அக்காலத்திய மன்னர்களின் யானைப்படைச்சிறப்பும் போர்க்களக் காட்சியின் நிலைப்பாடும் யானைகளின் துயரநிலையையும் பொய்கையார் மிக அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.

நிறைவுரை


போர்க்களக்காட்சிகளை நம் வாழ்வியல் சூழல் சார்ந்து பொய்கையார் களவழிநாற்பது என்னும் இந்நூலின் வாயிலாகப் பதிவிட்ட பாங்கு போற்;றுதலுக்குரியதாகும். யானைப்படைகளின் பலமும் போர்க்களத்தில் அவை போhரிட்ட தன்மையும் போhரிடும் பொழுது ஏற்பட்ட சிக்கல்களும் அவற்றின் துயரநிலையும் யானைப்படையின் பலத்தினை மனக்கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.
 

முனைவர் நா.அமுதாதேவி
தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்
இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி
கோவை-21


 







 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்