விஞ்ஞானத் துடக்கு (ENTANGLEMENT)
கனி விமலநாதன் B.Sc
தலைப்பு என்ன
விதத்தியாசமாக இருக்கிறதே! விஞ்ஞானத் துடக்கு, மெஞ்ஞானத் துடக்கு என இரு
பிரிவுகள் எங்களது துடக்கில் உள்ளனவா என ஆச்சரியப்படுகிறீர்களா!
துடக்கின் ஆங்கிலப் பதத்தையும் தலைப்பின் கீழே எழுதியுள்ளேன். அந்த 'என்ராங்கில்மென்ர்'
என்பதில் இருந்தே இந்தச் சிந்தனை எழுந்தது, எனக்குள். என்ராங்கிள்மென்ர்
என்ற துடக்குப் பற்றிய ஆர்வம் வந்த கதையைக் கூறிவிட்டு, விடயத்திற்குள்
வருகின்றேன்.
2008ல் ஒரு தடவை குணா அவர்கள் எழுதிய 'தொல்காப்பியத்தின் காலம்' என்ற
ஆய்வு நூலினை ஆர்வமாக வாசித்துக் கொண்டிருந்தேன். குணாவின் ஆய்வு
மிகவும் சுவாரசியமாக இருந்தது. அந்நூலில் ஒரு இடத்தில் துடக்கு
என்பதற்குரிய கருத்துகளாக, குற்றம், ஆரம்பம் (தொடக்கம்), இணைப்பு எனக்
கூறிவிட்டு, அதன் ஆங்கிலப் பதமாக (ENTANGLEMENT) என்று எழுதியிருந்தார்.
அந்த ஆங்கிலப் பதம் என்னை ஆச்சரியப்படுத்தியது. ஏனெனில் பௌதிகத்தில்
இந்த என்ராங்கில்மென்ர் பற்றி அப்பொழுதுதான் ஆச்சரியத்துடன் படித்துக்
கொண்டிருந்ததுடன் அது பற்றிய ஆய்வுகளையும் செய்து கொண்டிருந்தேன். இதன்
பின்னர் எனது ஆய்வுப் பரப்பினை விரிவுபடுத்தினேன். பல ஆச்சரியமான
விடயங்களைக் கண்டுகொள்ளக் கூடியதாக இருந்தது. அதனைத்தான் இம்முறை
உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
தமிழிலே துடக்கு என்பதற்குப் தொடக்கு, குற்றம், இணைப்பு எனப் பொருள்
கொள்ளினும் இவை மூன்றும் கலந்த தன்மையிலேயே துடக்கு என்பதனை பௌதிகத்தில்
காணவேண்டும். அதன்படி துடக்கு என்பதை இன்றும் இயற்பியலின் அதியுயர்
புதிர் என்கிறார்கள். அது பற்றிய ஒரு சுருக்கப் பார்வையைதான் இன்று
பாரக்கப்போகிறோம்.
20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் குவாண்ரவியலும் சார்பியலும், பௌதிகவியல்
என்கிற இயற்பியலினுள் புகுந்து கொள்கின்றன. கோள்கள், விண்மீன்
குடும்பங்கள், கலக்சிகள், போன்ற பெரிய பெரிய விடயங்களின் இரகசியங்களைக்
கூறிக் கொண்டு சார்பியல் வர, அணுக்கள், இலத்திரன்கள் போன்ற குட்டிக்
குட்டித் துகள்களின் இயக்கங்களை விளக்கிக் கொண்டு குவாண்ரவியல் வந்தது.
மார்க்ஸ் பிளாங் என்ற விஞ்ஞானி குவாண்ராவை இனங்காட்ட, நீல்ஸ் போர்,
அல்பேட் ஐன்ஸ்ரைன் இருவரும் குவாண்ரவியலுக்கு அடித்தளமிட, டீ புரோக்லி,
மாக்ஸ் போன், ஸ்ரோடிஞ்சர், கைசன்பேர்க் போன்ற மற்ற விஞ்ஞானிகள் ஒன்று
சேர்ந்து பரபரப்பாக குவாண்ரவியலை வளர்த்து விட்டார்கள். இலத்திரன்கள்
போன்ற சின்னத் துகள்களின் இயக்கம் முழுவதும் நிகழ்தகவு அடிப்படையிலேயே
இருக்கின்றன என்று அவர்கள் காட்டினார்கள். நீல்ஸ் போரின் தலமையில்
பலதரப்பட்ட வகையிலும் இது நிறுவிக் காட்டப்பட்டது. இதன் தொடர்ச்சியாக
பேருலகின் நடவடிக்கைகளும் நிகழ்தகவின் அடிப்பiயிலேயே நிகழ்கின்றன எனவும்
அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். இன்னமும் ஒருபடி மேலே போய் பேரண்டமே
தோன்றியது நிகழ்தகவினால்தான் என நீல்ஸ் போர் கூறினார். இக்கூற்றை
ஐன்ஸ்ரைன் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆண்டவன் தாயக் கட்டைகளை வீசியா
பிரபஞ்சத்தை உண்டாக்கினார்? எனும் பொருள்படும் படியாக நீல்ஸ் போரிடமே
கேட்டார். நீல்ஸ் போரும் ஐன்ஸ்ரைன், நீல்ஸ் போரைச் சந்திக்கும்
வேளைகளில் எல்லாம். குவாண்ரவியலின் நிட்சயமில்லாத் தன்மையைப் பற்றி
விவாதித்துக் கொண்டிருப்பார்கள். அதன் உச்சக் கட்டமாக வந்ததுதான்
துடக்கு. துடக்குப் பற்றிய விபரத்தையும் இலேசாகத் தெரிந்து கொள்வோம்.
இரண்டு இலத்திரன்களை ஒன்றாக பிணைத்து ஒரு தொகுதியாக்குவோம். பின்னர்
இரண்டையும் தனித்தனியாகப் பிரித்து, ஒன்றைச் சந்திரனிலோ அல்லது இன்னமும்
தொலைவான தூரத்திலே வைத்து விடுவோம். இனி அவற்றில் ஒன்றிற்கு ஏதாவது
மாற்றத்தை ஏற்படுத்தினால், அம்மாற்றம் மற்ற இலத்திரனில், அது எவ்வளவு
தொலைவில் இருப்பினும், அதேகணத்தில் ஏற்படும். இதனைத்தான்; சிக்கலான
என்ராங்கில்மென்ர் விளைவாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இங்கென்ன சிக்கல்
எனக் கேட்கிறீர்களா? இருக்கிறது! சார்புத் தத்துவத்தின்படி, எந்;தவொரு
செய்தியோ அல்லது பொருளோ ஒரு செக்கனில் 300,000 கிலோமீற்றர் தூரத்திற்கு
அப்பால் போக முடியாது. ஆனால் என்ராங்கில்மென்ர் என்கிற துடக்கில்
இருக்கும் இலத்திரன்களில் ஒன்று புவியிலும் மற்றது பேரண்டத்தின்
மறுபுறத்தில் இருந்தாலும் கூட ஒன்றினது தாக்கம் மற்றயதில் அக்கணமே
நிகழ்ந்துவிடும். சார்பியல் விதிகளுக்குப் பொருந்தாத இது எப்படிச்
சாத்தியமாகும்?
இதனைத்தன் ஐன்ஸ்ரைன் ஸ்பூக்கி
(Spooky) நிகழ்வு என்று கூறித் தனது வாதமாக எடுத்து வைத்தார்.
ஸ்பூக்கி என்பது நிட்சயமில்லை என்று குறிப்பிடும் ஜெர்மனியச் சொல்.
குவாண்ரத்தில் நிகழ்தகவு சரியான விளைவுகளைக் காட்டுவது போல இருந்தாலும்
உண்மையில் நிகழ்தகவு போன்ற எழுந்தமாறான விளைவுகளின் அடிப்படையில்
குவாண்ரம் இருக்க முடியாது என்றார் ஐன்ஸ்ரைன். குவாண்ரவியல் இன்னமும்
நுட்பமான, வரையறை கொண்ட ஓரமைப்பில் இருக்க வேண்டும் என்பது ஐன்ஸ்ரைனின்
வாதமாக இருந்தது. ஆனால் பிற்காலத்தில் வந்த விஞ்ஞானிகள் குவாண்ரம்
துகள்களின் எழுந்தமாறான விளைவுகளின் அடிப்படையிலான நிகழ்தகவுப்
பொருத்தங்களைகச் சரியானவை எனக் காட்டினாலும் துடக்கிற்கான தார்ப்பரியம்
வெளிக் கசியவில்லை. இன்னமும் மர்மமாகவே உள்ளது.
துடக்கு என்கிற இணைப்புத் தத்துவம் இன்று தொழில் நுட்ப விடயங்களில்
பாவிக்கப்படப் போகிறது என்கிறார்கள். குறிப்பாக, உயர்வலுக் கணனிகளில்
வேகமாக காரியங்களை ஆற்றுவதற்கு இலத்திரனின் என்ராங்கில்மென்ர்
தத்துவத்தைப் பாவிக்கலாம் என்று கூறுகின்றார்கள். நான் இதனை எழுதும்
இக்கணத்தில் அது உண்மையான செயல் வடிவம் பெற்றுமிருக்கலாம். இன்னமும்
கணப் பொழுதில் என்பதிலும் வேகமாக உடனடியாக இடம்விட்டு இடம் மாறக் கூடிய
ரெலிப்போடேசன் வசதியும் இந்தப் பௌதிகத் துடக்கினால் வாய்ப்பாகலாம்
என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
சரி, இவையெல்லாம் விஞ்ஞானிகளின் விடயம்தானே, அவர்களிடமே விட்டுவிடலாமா
என்றால் முடியவில்லை. இந்தத் துடக்குச் சமாச்சாரம் எங்களது அன்றாட
வாழ்வியலில் ஆயிரமாயிரமாய் நடக்கிறது. ஆனால் நாங்கள்; அதனை கண்டு
கொள்வதில்லை. அன்றாட சம்பவங்களை ஆழமாகத் தொகுத்துப் பார்த்தால்
ஆச்சரியப்படுவீர்கள். துடக்கு என்றதும் வெறுமனே குற்றம் எனக் கூறிக்
கொண்டு 'அந்த மூன்று வீடு'களையும் ஒரு மாதத்திற்கு தவிர்த்துக்
கொள்ளுகிறோம். அவ்வளவோடு எல்லாம் சரி. முன்னவர்கள் தந்த இவ்விடயத்தை
அலசிப் பார்ப்பதில்லை. ஆனால், துடக்கு என்பது வெறுமனே பிறப்பு, இறப்பு
போன்ற சம்பவங்களுடன் ஒரு மாதத்துக்கு மாத்திரம் நின்று விடுகிற
ஒன்றில்லை. அது மிகவும் மர்மமானது, புரிந்து கொள்ள முடியாதது. துடக்கின்
தெறிப்பினைக்க காட்டும் ஒன்றிரண்டு சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன். யாரையும் சுட்டிக் காட்டவில்லை. ஆனாலும் தொடர்புடையவர்கள்
இதனை கண்டு கொண்டால் மன்னித்துக் கொள்ளுங்கள்.
இரண்டு குழந்தைகள் இலங்கையின் வடக்கில் ஒரே கிராமத்தில், ஒரே
வைத்தியசாலையில், ஒரே நேரத்தில் வௌ;வேறு தாய் தந்தையருக்குப்
பிறந்தார்கள். இருவரும் ஒரே பாடசாலையில் படித்தும் வந்தார்கள். கால
ஓட்டத்தில் ஒருவர் கொழும்பில் பணிபுரிய மற்றவர் தனது ஊரிலேயே வேலை
செய்கிறார். அடிப்படையில் இருவரது வேலைகளும் ஒரே தன்மையதாக இருந்தன.
ஒருநாள் ஊரில் இருந்தவரை நாகபாம்பு ஒன்று தீண்டி விடுகிறது. அயலர்கள்
ஓடிவந்து நாகபாம்மை அடித்துக் கொன்று எரித்து விட்டு அவருக்கு வைத்தியம்
செய்து குணப்படுத்தி விட்டார்கள். அவரும் வீட்டில் ஓய்வெடுத்துக்
கொண்டிருந்தார். இது சாதாரண விடயம்தான். ஒரு மாதம் கழிய, கொழும்பில்
இருந்தவர் ஊருக்கு வருகிறார், ஓய்வெடுப்பதற்காக. கொழும்பிலே அவரையும்
அதே தினம் அதே நேரத்தில் நாகபாம்பு ஒன்று தீண்டியிருக்கின்றது. அந்த
நாகபாம்பும் அடித்துக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டும் இருக்கிறது.
ஆச்சரியமாக இருக்கிறதல்லவா!. இதுதான் துடக்கு என்கிற entanglement.
இவ்விருவரும் உண்மையில் பிறப்பால் நீண்ட, வெளிப்படையான துடக்கிற்கு
உ;பட்டவர்கள் எனத் தெரிகிறது. இருவரது வாழ்க்கை முழுவதையும் ஒத்துப்
பார்த்தால் இந்தத் துடக்கின் விளைவுகள் பல காணப்படலாம். ஒருவேளை அவ்விரு
நாகபாம்புகளும் கூடத் தம்முள் துடக்குக் கொண்டவையாக இருந்திருக்கலாம்.
இப்படியாக பல துடக்குச் சம்பவங்கள் நமது வாழ்வியலில் அக்கம் பக்கத்தில்
உள்ளன. நாங்கள்தான் அவற்றைப் இனம் கண்டு கொள்வதில்லை. எனது நண்பர்
ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்தவர். இவர் பொலிஸ் சேவையில்
பயிற்சியில் இருந்த போது இவருடன் இவரது உறவினர் ஒருவரும் பொலிஸ்
பயிற்சிக்கு வந்திருந்தார். அவரும் தான் பிறந்த அதே நாளில் அதே
நேரத்தில் பிறந்தவர் என்பதை அறிந்து இருவரும் ஆச்சரியப்பட்டார்களாம்.
பயிற்சியை முடித்துக் கொண்டு இருவரும் தம்வழியே சென்று விட்டார்கள்.
நாட்கள் கடந்துவிட்டன. எனது பொலிஸ் நண்பர் நாட்டின் நிலைமை காரணமாக
கனடாவுக்கு ஓடி வருகிறார். பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில்
வந்திறங்கி நிம்மதிப் பெருமூச்சு விட்டவருக்கு ஒரு அதிர்ச்சி. இவரது 'அந்த'
உறவினரும் அங்கே வந்திறங்கி நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்
கொண்டிருந்தார். இருவரும் சந்தித்து ஒருவரை ஒருவர் குசலம் விசாரித்துக்
கொண்டிருக்கையில் இருவரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். இருவரது திருமண
நாட்களும் ஒன்றாகவே, ஒரே மாதிரியானவையாக இருந்திருக்கின்றன. மேலும்
இருவரது மூன்று குழந்தைகளும் ஒத்த ஒரே நாட்களிலேயே பிறந்திருக்கின்றனர்.
இதனை எனது நண்பர் கூறிய வேளையில் நான் என்ராங்கில்மென்ர் பற்றிய தேடலில்
ஈடுபட்டுக் கொண்டிருந்த காலம். உடனேயே அவருக்கு துடக்குப் பற்றிய
விபரத்தை விளங்கப்படுத்தி, இதுதான் உண்மையான துடக்கு என கூறிய போது
நண்பர் தனது ஆச்சரிய முகத்தில் புதிரையும் இணைத்து என்னைப் பார்த்தார்.
இந்த
entanglement என்கிற துடக்கு ஒரே நேரத்தில் பிறந்தால்தான் வரும்
என நினைத்து விடாதீர்கள். ஏதோ ஒருவகையில் இறுக்கமான பிணைப்பு
இருவருக்கிடையில் ஏற்படின் அங்கு இந்தத் துடக்கு ஏற்பட்டுவிடும்.
இன்னொரு நடைமுறை உதாரணமாக, மன்னாரில் என்னுடன் பணி புரிந்த நண்பர்
ஒருவரின் அனுபவத்தைக் கூறுகிறேன். அவரது திருமணத்தின் பின்னர் வேலைக்கு
இவர் வந்து விட்டார். மனைவி யாழ்ப்பாணத்தில் வீட்டில் தங்கியிருந்தார்.
அந்நாட்களில் வெள்ளிக்கிழமைகளில் வீட்டுக்குச் சென்று திங்கள்
அதிகாலையில் மன்னாருக்கு வந்துவிடுவார். ஒரு வியாழக்கிழமை பின்னேரம்
நாங்கள் கிரிக்கட் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவரது வலதுகைச்
சின்ன விரலில் காயம் ஏற்பட்டுக் கட்டுப் போடவேண்டி வந்தது. கட்டுடனே
வீட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்றார். திங்கட் கிழமை மீண்டும் வேலைக்கு
வந்தவர், ஆச்சரியத்தோடு என்னிடம் ஓடிவந்தார். தனது மனைவிக்கும் அதே
வியாழன் பின்னேரம் வலதுகைச் சின்ன விரலில் காயம் ஏற்பட்டு கட்டுப்
போட்டிருநதார் எனக் கூறினர். அப்பொழுது அவர் முகத்தில் வெளிப்பட்து
மகிழ்ச்சியா அல்லது புதிரா என்பது தெரியவில்லை. அக்கால கட்டத்தில் இது
போன்ற பல ஒன்றிப்பு அனுபவங்களை என்னிடம் அவர் கூறியிருந்தார். அப்பொழுது
அவை குறித்து சிறிது ஆச்சரியப்பட்டாலும் அதிகம் பொருட்படுத்தவில்லை. ஏதோ
இவருக்கு மட்டும்தான் இப்படியாக்கும் என எண்ணிப் பேசாமல் இருந்து
விட்டேன். ஆனால், இயற்பியலின் மர்மங்களில் ஒன்றான துடக்குப் பற்றி
தெரிந்து கொண்ட வேளை இவையெல்லாம் என் நினைவுக்கு வந்து என்னைப்
பிரமிக்கப் பண்ணின.
ஒரு இரகசியம்! திருமணமானவர்கள், உங்களின் ஆரம்ப காலப் பிரிவு நாட்களில்
நடந்தவற்றை ஒரு கணம் நினைவுபடுத்திப் பாருங்கள். என்ன! என்னையும் நினைவு
படுத்திப் பார் என்கிறீர்களா! இந்தக் குசும்புதாவே வேண்டாம் என்கிறது!
இனி, எங்களது துடக்குகள் பற்றிய விடயத்திற்கு வருவோம். முன்னவர்கள் ஏன்
இப்படியான ஒரு விடயத்தை எங்களிடையே ஓட விட்டார்கள் என்பது இன்னமும்
புரியாத விடயம். பிறப்பின் போது உயிர் எங்கிருந்து வருகின்றது?
இறந்ததும் அது எங்கு செல்கிறது? எல்லாவற்றிக்கும் மேலாக உயிரென்றால்
என்ன? இது போன்ற கேள்விகளுக்கு உருப்படியான விடை இன்னமும் இல்லை. இவை
ஒருபுறமிருக்க, துடக்கிற்கு இருக்கக் கூடிய, என்மட்டிலான விளக்கத்தைத்
தருகிறேன்.
பிறக்கும் குழந்தையின் உயிர், வேறு ஒரு சூழலில் இருந்து வருகிறது
என்போம். அப்படியாக அதுவருகையில் என்ராங்கில்மென்ர் என்ற துடக்கின்படி,
தனது முன்பு இணைந்திருந்த சூழலின் செல்வாக்கையும் கொண்டுதான் வரும்.
இச்செல்வாக்குச் சிறிது காலத்திற்கு அக்குழந்தையுடன் ஒட்டியிருக்கும்.
பிறந்த குழந்தைகள் சிரிப்பது போன்ற விளைவுகளைக் காட்டுவதைக் கண்டும்
வருகிறோம், இரசிக்கிறோம், ஆச்சரியப்படுகிறோம். அப்படி இருக்கும்
காலத்தில் குழந்தையின் உயிரின் முன்னிருந்த சூழலில் ஏதாவது பாரிய
மாற்றம் ஏற்பட்டால் அம்மாற்றத்தை குழந்தையின் உயிரின் புதிய சூழலுக்கு
என்ராங்கில்மென்ர் இயல்பினால் கடத்தி விடும். அதனால், புதிதாகப் பிறந்த
குழந்தையுடன் இப்போது தொடர்பு கொண்டவர்களுக்கு அம்மாற்றம் தாக்கத்தை
ஏற்படுத்தி விடவும் வாய்ப்புண்டு. இதைத் தெரிந்து கொண்ட எம்முன்னவர்கள்
அதனால்தான் புதிதாகப் பிறந்த குழந்தையின் வீட்டை துடக்கு என்று கூறி,
ஒருவிதத் தனிமையாக்னினார்களோ என எண்ணுகின்றேன். குழந்தையின் உயிர் தனது
புதிய சூழலுக்குத் தன்னை ஓரளவுக்குப் பக்குவப்படுத்துவதற்கான காலமே
அந்த 31 நாள் ஆக இருக்கலாம். இதேபோலத்தான் இறப்பு வீடுகளில் இது
மறுதலையாக இருக்கலாம். 3ம் வீடு, அறிவு கூர்ந்து பார்க்கையில் ஏதோ
கொண்டாட்ட இடைச் செருகல் என்பது அப்பட்டமாவே தெரிகிறது.
இந்த 31ம் நாட் சடங்குகள் எல்லாம் பின்னராக வந்த,.....எடுபாடுகள் எனலாம்.
இன்று அதனைச் சமயச் சம்பிரதாயமாக்கி, வெவ்வேறு சடங்குகளைச் செய்து வேறு
வடிவத்திற்குக் கொண்டு வந்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இதனைப் பற்றிக் கூறுவதெனில் இன்னமும் கடினமான தத்துவப் பாங்கினிற்
பார்க்க வேண்டும். பொதுவாகவே உயர் விஞ்ஞான தத்துவார்த்த விடயங்கள்
விளங்கிக் கொள்ளப்படாததால், முன்னாளில் நம்பிக்கை என்ற அடைப்புக்குள்
வர, சிலர் அதனை வசதியாகத் தங்களின் சமயப் சம்பிரதாயங்களாக மாறற்றி
விட்டார்கள் என எண்ணத் தோன்றுகின்றது.
சரி, இனி உங்களது நேரம். துடக்குப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
நான் கூறியவை எல்லாம் வெறுமனே காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதை என
எண்ணுகிறீர்களா? இல்லை இதில் ஏதோ இருக்கிறது, நான் இதை இவ்வளவுடன்
விட்டுவிடப் போவதில்லை. இன்னமும் தீர்க்கமாய் ஆய்வு செய்யப் போகிறேன்
என்கிறீர்களா? எனக்குத் தெரியும், நீங்களிதைச் சும்மா விடமாட்டீர்கள்.
ஒருவேளை துடக்கின் மர்மத்தினைக் கண்டு பிடித்தால், இயற்பியல்
விஞ்ஞானிகளுக்கு அறியக் கொடுப்பதோடு தமிழ்ஆதேர்ஸ்.கெம் ஊடாக
எங்களுக்கும் தகவல் தருவீர்கள்தானே? மறந்து விடாதீர்கள்.
நன்றியுடன்,
கனி விமலநாதன் B.sc
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|