இரட்டைக் காப்பியங்களில் உள்ள அறிவியற்
காட்சிகள் சில
கனி விமலநாதன் B.Sc
“Please try to understand the nature of Paradox”
அறிமுகம்:
அறிவியல் என்றதும் பொதுவிலே எமக்கு எழுவது விஞ்ஞானம் என்பதுதான்.
பொதுவாகவே பௌதிகவியல், இரசாயனவியல், உயிரியல் என்ற பிரிவுகளுக்குள்
அடக்கப்படும் விஞ்ஞானத்தின் வளர்ச்சிப் பாதையில் இவை மூன்றினையும்
தன்னுட் கொண்டதான புதியதொரு அறிவியல் பகுதியும் 100 வருடங்களுக்குள்
தோன்றி, இந்நாட்களில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திக் கொண்டு வளர்ந்து
வருகிறது. மனிதரின் அறிவியல், தொழிநுட்பம் என்பவற்றின் பெரும்
வளர்ச்சியின் காரணமாக எழுந்த சிந்தனையின் வெளிப்பாடாக வந்த இப்புதிய
விஞ்ஞானப் பகுதியை
UFOlogy என்பர். பறக்கும் தட்டுகள் என்ற பதத்தின் வளர்ச்சிதான்
யூஎவ்ஓலொயி என்பதால், நான் அதனை 'பறக்கும் தட்டியல்' என்கிறேன்,
வசதியாக.
இந்தப் பறக்கும் தட்டியலினுள் அடங்குபவையாக பறக்கும் தட்டுகள்,
ஏலியன்கள் என்கிற வேற்றுக்கிரக மனிதர்கள், பரிமாணங்கள், பரிணாமங்கள்
போன்ற அறிவியல் விடயங்கள்; உள்ளன. மேலும், வேற்றுக்கிரக மனிதர் பற்றிய
ஆய்வுகளின் விரிவு
Ancient Aliens
என்ற, தமிழில் 'அந்நாள்-அந்நியர்' என்று கூறப்படக் கூடிய புதிய
பகுதியினை அறிமுகப்படுத்தியது. இப்பகுதி, உலக வரலாற்றையே திருத்தித்
திருப்பி எழுத வேண்டுமோ? என்று எண்ண வைக்கக் கூடிய ஆச்சரியமான
கருத்துக்களைக் கொண்டுள்ளது.
அந்நாள்-அந்நியர் ஆய்வாளர்கள் கூறுகின்ற விடயங்களை எளிதில் விளங்கக்
கூடியதாக இருப்பினும் உள்வாங்குவது சற்றுச் சிரமமானது. ஆயினும்
இப்பகுதியிற் தெளிவு பெறுவதற்காக அவற்றினையும் அறிந்து கொள்வோம்.
ஐநூறாயிரம் ஆண்டு முன்னர் நிபுறு என்ற கிரகத்திலிருந்து வேற்றுக்கிரக
மனிதர் புவியிற்குத் தங்கம் எடுப்பதற்காக வருகிறார்கள். அது புவியில்
மனிதர் தோன்றியிராத காலம். புவியில் தங்கச் சுரங்கங்களில் இருந்து
தங்கத்தை எடுப்பதற்கு அவர்களுக்கு உதவிகள் தேவைப்பட, இங்கிருந்த
வலிமையான மிருகங்களைப் பாவிக்கிறார்கள். எப்படியெனில், வலிமையான இரண்டு
மிருகங்களை இணைத்து, ஆங்கிலத்தில்
Hybrid எனக் கூறப்படும் மிருகங்களை உருவாக்கி வேலை
வாங்குகிறார்கள். நீண்ட காலமாக அந்த
Hybrid மிருகங்கள் உழைத்த போதிலும், மூளைவலுக் குறைந்த,
அம்மிருகங்கள் அவர்களுக்குப் பெரிதாக உதவவில்லை. அதனால், அவற்றினைத்
தமது பாதுகாப்பிற்கு வைத்துக் கொண்டு, அக்காலத்தில் இருந்த கோமோ
இரெக்ரஸ் என்ற ஆதிமனித இனத்திற் கைவைக்கிறார்கள்.
கோமோ இரெக்ரஸ்களின் மரபணுக்களில், மரபணுப் பொறிமுறை மூலம் மாற்றங்கள்
செய்து மூளைவலுக் கூடிய கோமோ-சேப்பியன்கள் என்கிற எங்களின்
முன்னோர்களைத் தோற்றுவித்துத் தங்கச் சுரங்கங்களில் அடிமைகளாக வேலை
வாங்கத் தொடங்கினார்கள். மேலும், வானிலே சில பறக்கும் காவல்நிலையங்களை
உண்டாக்கி அங்கிருந்து கொண்டு இச்சுரங்க வேலைகளைக் கண்காணித்தார்கள்.
இந்த கோமோ-சேப்பியன்கள் ஆகிய மனிதர், நிபுறுவினரின் அதிபுத்திசாலித்தனச்
செயற்பாடுகள், பறக்கும் விமானங்கள், வல்லமையான ஆயுதங்கள்,
எல்லாவற்றையும் பார்க்கிறார்கள், கடவுளர்களாக அவர்களைக் காண்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான இந்த நிபுறுவினர் பல்வேறு காரணங்களுக்காக, தங்களின்
செயற்பாட்டு மையத்தினை சந்திரனில் அமைத்து, அங்கிருந்தே காரியங்களை
நடத்திக் கொண்டிருந்தார்கள். இதனையும் நம்மவர்கள் தெரிந்து கொள்கின்றனர்.
இந்த நிபுறுவினர், தங்களது தேவைகள் முடிந்ததும் புவியை விட்டுச் சென்று
விட்டனர். ஆனாலும் மனிதக் கூர்ப்புப் பாதையில், இருநூறாயிரம் ஆண்டு
முன்னர், கோமோ-இரெக்சசுகளில் இருந்து, சிந்தனைவலுக் கூடியவர்களாத்
தோன்றிய கோமோ சேப்பியன்கள் என்கிற, புத்திசாலி மனிதர்களால் தம்மைவிட
வல்லமை மிக்க வேற்றுக் கிரகவாசிகளை மறக்க முடியவில்லை. அவர்களைத்
தேவர்களாகக் கடவுள்களாகத் தொடர்ந்தும் வழிபட்டுக் கொண்டே வந்தார்கள்,
வருகிறார்கள். இப்படியான சிந்தனைகளின் வெளிப்பாடுகள்தான், 4200
வருடங்களின் முன்னர் சுமேரியரின் களிமண் தகடுகளில், அக்கடியன் மொழியில்
எழுதப்பட்ட, ஹில்கமேஸ் என்கிற, மனிதர்கள் எழுதிய முதலாவது
புராணக்கதையில் இருந்து, இன்று வரையில் வந்துள்ள புராணங்கள்,
இதிகாசங்கள், காப்பியங்கள், அவை போன்ற படைப்புகள் எல்லாம் என்கிறார்கள்.
இப்படியாக வந்த தேவர்கள்தான் கிரேக்க, உரோம, மெசப்பத்தேமியாவின்
பாபிலோனிய, அசீரிய, எகிப்திய புராணங்களிற் கூறப்படும் கடவுளர்களான
யுபித்தர், தோர், ஹேக்குலிஸ், சூஸ், இஸ்தர் என்கிற எஸ்தர் போன்றவர்கள்.
இவர்களெல்லாம் வானில் இருந்து புவியிற்கு வந்த வேற்றுக்கிரக மனிதர்கள்
என்றே அந்நாள்-அந்நியர் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கடவுளர் லேசர்,
அணுசக்தி போன்றவற்றைப் பிரயோகிக்கக் கூடிய ஆயுதங்களைக் கைகளில்
வைத்திருந்து வல்லமை காட்டினார்கள் என்றும் கூறுகின்றார்கள். இவர்களது
பார்வையில்; சிவன், முருகன், கொற்றவை, மாயோன்; போன்ற தமிழ்க் கடவுளர்கள்
கூடத் தப்பவில்லை. இவர்களின் கரங்களில் இருந்த திரிசூலம், வேலாயுதம்,
சக்கராயுதம் போன்றவற்றையும் லேசர், அணுசக்தி என்பவற்றைக் கொண்ட,
புரோக்கிராம் செய்யப்பட்ட, ஆயுதங்கள் என்றே இவர்கள் வர்ணிக்கிறார்கள்.
காட்டாக, மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய
காதையில்; 'முருகுபெயர்க் குன்றக் கொன்றோன், அன்னநின்' என்கிற 13ம் வரி
கூறும் கிரவுஞ்சு மலையினைப் பிளந்த குமரனின் வேலாயுதத்தின் வல்லமையைக்
காட்டலாம். இரட்டைக் காப்பியத்தில் கண்ட இது போன்ற அறிவியற்
காட்சிகளுக்குள் நுழையுமுன் அந்நாள்-அந்நியர் ஆய்வாளர்கள் கூறும்
இன்னொரு விடயத்தையும் தெரிந்து கொள்வோம்.
இடைக்கிடை இத்தேவர்கள் புவியின் பெண்களின் அழகில் மயங்கிப் புவியிற்கு
வந்து அவர்களுடன் கூடுவதும் உண்டு. அதனாற் புவியில் வலிமையான மனிதர்கள்
தோன்றுவதுமுண்டு. இது பற்றிய விபரங்கள் எல்லா இன மக்களின்
புராணங்களிலும் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவர்களின்
பைபிளில் ஆதியாகமத்தின் 6ம் அதிகாரத்தில் 2ம், 6ம் வசனங்களை எடுத்துக்
காட்டாகக் கூறலாம்.
தேவகுமாரர் மனுஷகுமாரத்திகள் அதிக சவுந்தரியமுள்ளவர்களென்று கண்டு,
அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண் தெரிந்து கொண்டார்கள். - ஆதி. 6: 2
....பின்பு தேவகுமாரர் மனுஷ குமாரத்திகளொடு கூடுகிறதனால் இவர்கள்
அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது இவர்களும் பூர்வத்தில் பேர் பெற்ற
மனுசராகிய பலவான்களானார்கள். - ஆதி. 6: 7
இத்தகைய தெளிவுகளுடன் இரட்டைக் காப்பியங்களில் நான் கண்ட அறிவியற்
காட்சிகள் சிலவற்றைக் கூறுகின்றேன். முதலில், இக்காப்பியங்கள் பற்றிய
எனது பார்வை. இரண்டுமே கி.பி. 1ம் அல்லது 2ம் நூற்றாண்டுகளில்
எழுதப்பட்டவை என்பது பொதுவான கருத்து. ஆனால் கதை நடந்த காலத்தில்
பூம்புகார் பட்டினம் கடலினுள் மூழ்கவில்லை. கி.மு. 10ம்-12ம்
நூற்றாண்டுகளுக்கு இடையில்தான் பூம்புகாரைக் கடல்கோள் கொண்டிருக்க
வேண்டும். இதனை 2004ல் பிரான்சில் கிரகாம் கான்கொக் வெளியிட்ட
பூம்புகார் பற்றிய தொல்லாய்வுக் காணொளி தெளிவுறுத்துகின்றது. இற்றைக்கு
15 ஆயிரம் ஆண்டு முன்னராகக் கடைசிப் பனிக்காலம் முடிவடைகையில் பனி உருகி
கடல் மட்டம் சடுதியில் உயர்வு அடைந்து புவியின் பல நிலப்பரப்புளை
விழுங்கிக் கொண்டது என்ற கூற்றும் இக்கருத்தினை மேலும்
உறுதிப்படுத்துகின்றது.
இதன்படி பார்த்தால், கி.மு. 6ம் நூற்றாண்டில் தோன்றிய சமணமோ அல்லது
பௌத்தமோ பூம்புகாரின் காலத்தில் இருந்திருக்கக் கூடிய வாய்ப்;பே இல்லை.
எனவே, இவ்விரு காப்பிய ஆசிரியர்களும் கற்பனையாகவோ அல்லது முன்னர்
தொன்றுதொட்டுக் கூறப்பட்டுக் கொண்டு வந்த கதைகளுக்குத் தங்களின் சமயக்
கருத்துக்களைச் சேர்;த்தோ இக்காப்பியங்களைத் தந்திருக்கிறார்கள் என
நம்ப வேண்டியுள்ளது. அதனால் தங்களின் காப்பியங்களிற் காலங்காலமாக வந்து
கொண்டிருந்த அந்நாள்-அந்நியர் பற்றிய விடயங்களைப் பற்பல இடங்களில்
வௌ;வேறு வடிவங்களிற் காட்டியிருக்கிறார்கள். இலக்கிய இலக்கண அழகிலும்
மதக் கொள்கைகளின் பிடிப்பிலும் இருந்த ஆன்றோர், இந்த அறிவியல்
விடயங்களைத் தவற விட்டு விட்டார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது.
இனி, காப்பியங்களுக்குள் வருகிறேன். முதலில் இரண்டு காப்பியங்களிலும்
சிறப்பாகக் கூறப்பட்டுள்ள இந்திரவிழா பற்றிய பார்வை. இரண்டிலுமே சந்திர
மண்டலத்தை ஆளும் அமரர்க்கரசனான இந்திரனை மகிழ்ச்சிப் படுத்துவதற்கான
விழா இது எனப்படுகிறது. இது நிபுறுவினர் சந்திரனில் இருந்து கொண்டே
என்கி என்கிற அவர்களது தலைவனின் தலைமையில் தமது காரியங்களை நடத்தினர்
என்பதுடன் பொருந்தி வருகிறது. இந்த என்கி என்கிற ஏலியனைத்தான்
எம்மவர்கள் வழியே இளங்கோ அடிகளும், சாத்தனாரும் இந்திரன் என்றார்கள்
எனக் கருதலாம். இந்த விழாவினை எடுக்காததாலேயே பிந்நாளில் பூம்புகார்
கடலில் மூழ்கியது என்றும் கூறுவர். இதன் பின்னால் உள்ள அறிவியல்
விடயங்களை அறிந்து கொள்வோம். சந்திரனின் ஈர்ப்பினால் கடல் பொங்குவதையும்
தணிதலையும் நம்மவர்கள் அறிந்திருக்கிறார்கள். புவியில் உயிரினங்கள்
தோன்றிப் பரவி வாழ்வதற்குக் கதிரவனுடன் சந்திரனும் முக்கிய காரணியாக
இருக்கிறது. சந்திரனின் ஈர்ப்பினால் கடலில் ஏற்பட்டும் பொங்குதலும்
தணிதலும் உயிரினத் தோற்றத்தில் முக்கிய பங்களித்தன என்று உயிரியல்
விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதனையும் பூம்புகார் மக்கள்
அறிந்திருக்கின்றனர்.
இந்நிலையில்தான் சந்திரனில் தளமமைத்துப் புவியிற்கு வந்து போன
நிபுறுவினரின் செல்வாக்கு மனிதரிடையே வருகிறது. அவர்களின் தலைவனுக்கு
விழா எடுத்து மதிப்பளித்தால், அவன் கடலால் பெரிய பாதிப்புகளைத்
தரமாட்டான் என்ற நம்பிக்கையின் விளைவே இந்திரவிழா. அந்த விழாவிற்குத்
தேவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களும் வந்தார்கள். அவர்களது
விமானங்கள் தங்குவதற்கான இடங்களும் ஒதுக்கப்பட்டன என்பது இரண்டு
காப்பியங்களிலும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. முதலாம் நூற்றாண்டளவில்
எழுந்த இக்காப்பியத்தில் இப்படியான சிந்தனைக்கு வித்திட்டது நிபுறுவினர்
பற்றிய எம்மவரின் சிந்தனையின் வளர்ச்சி என்று கூறலாம். இப்படியான எண்ண
வளர்ச்சியின் இன்னொரு வடிவம்தான் துர்க்கை அம்மனின் ராகுகால துர்க்கா
அஷ;டகத்தில் வரும் 'நிலவில் நின்றவள், துர்க்கா நித்யை யானவள்' என்ற
வரிகளையும் காணலாம்.
மணிமேகலையில் 'விழாவறை காதையில்' வரும் பாடல்களில் 'தூங்கெயில் எறிந்த
தொடித்தோர் செம்பியன்' என்று கூறும் 4ம் வரி ஆச்சரியமான விடயத்தைக்
கூறுகின்றது. வானவரின், அந்தரத்தில் தொங்கிய அரண்களை, உடைத்தெறிந்த
தொடித்தோர் செம்பியன் என்ற சோழ அரசனை நினைவுபடுத்தும் வரிகளாக
உரையாசிரியர்கள் கூறுகின்றார்கள். இவ்வரிகளின் தெளிவு அன்று நிபுறுவினர்
வானில் அமைத்த காவற் கோபுரங்களை நினைவு படுத்துகின்றது. வானவர்களின்
அந்தரத்தில் மிதக்கும் காவற் கோபுரச் சிந்தனை என்பது நிபுறுவினரின்
காவற் கோபுரங்களின் நினைவுகளினால் வந்த பரம்பரை பரம்பரையான எண்ணம் எனக்
கருத இடமுண்டு. இப்படியான காட்சி வேறு மொழிக் காப்பியங்களிலும் உள்ளனவோ
என்று எனக்குத் தெரியவில்லை.
வாடா மாமலர் மாரி பெய்தங்கு
அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக்
கோநகர் பிழைத்த கோவலன் தன்னோடு
வான வூர்தி ஏறினாள் மாதே
கானமர் புரிகுழற் கண்ணகி தானென. (சிலம்பு: கட்டுரைக்காதை 196 -
200)
கான வேங்கைக் கீழோர் காரிகை
தன்முலை இழந்து தனித்துய ரெய்தி
வானவர் போற்ற மன்னொடுங் கூடி
வானவர் போற்ற வானகம் பெற்றாள். (சிலம்பு: காட்சிக்காதை. 57 –
60)
இவ்விரு பாடல்களிலும் கண்ணகி வான் ஏகிய காட்சியைத்தான் இளங்கோ அடிகள்
கூறுகிறார். இப்பாடல்களில் பல விடயங்கள் என்னைக் கவர்ந்துள்ளன.
குறிப்பாக, இங்கு கூறப்படும் வானவூர்தியைத்தான் தமிழிற் பதிவு
செய்யப்பட்ட முதலாவது வேற்றுக் கிரகிகளின் பறக்கும் தட்டாகக் காண்கிறேன்.
ஆனால் அந்தப் பறக்கும் தட்டைப் பற்றி இளங்கோ அடிகளால் ஒன்றுமே விபரிக்க
முடியவில்லை. அது எப்படிப்பட்டது? எப்படி இறங்கிது? எவ்வண்ணம் பறந்தது?
என்பவை போன்ற விபரங்கள் எதையும் அவர் தரவில்லை. சந்திரனில் இருந்து
இந்திரனின் தமர் கோவலனுடன் வந்து கண்ணகியை அழைத்துச் சென்றனர் என்பதை
மட்டும் மேலோட்டமாகக் கூறியுள்ளார். இது, பலகாலங்களாகச் செவிவழிச்
செய்தியாகக் கூறி வந்தவற்றின் முக்கிய விடயங்கள் மட்டுமே இளங்கோ
அடிகளின் காலத்தில் எஞ்சி விட்டனவோ என எண்ணத் தோன்றுகின்றது.
விவிலியத்தின் எசேக்கியலின் புத்தகத்தில் - 2ம் அதிகாரத்தில் என
எண்ணுகிறேன் - இப்படியான விடயமொன்று உள்ளது. அதில் வானில் இருந்து
வந்திறங்கிய விமானம் எப்படிப்பட்டது, எப்படியாக இறங்கியது, அதில்
வந்தவர்கள் எப்படியிருந்தார்கள், எவ்விதமாக அவ்விமானம் பின்னர்
மேலெழுந்தது போன்ற விபரங்கள் உள்ளன. உலகிலே பதியப்பட்ட முதலாவது யூஎவ்ஓ,
ஏலியன் பதிவு அதுதான் என அந்நாள்-அந்நியர் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
சரி, உலகிலே எத்தனையோ துன்பங்கள் எத்ததையோ பேருக்கு எப்படியோ எல்லாம்
நிகழ, கோவலனும் கண்ணகியும் மட்டும் ஏன் தேவர்களினால் அழைத்துச்
செல்லப்பட வேண்டும்? கண்ணகியை ஏன் தெய்வமாகக் கொண்டாட வேண்டும்?
கண்ணகியின் மனித இயல்புநிலை மாறிய நடத்தையைக் காணுங்கள்! ஆச்சரியப்பட
வைக்கிறது. நம்மவர்களில் பலர் இதனை இப்போது நம்புவதுமில்லை. கோவலனைக்
கூட சாதாரணமாக எண்ணி விட முடியவில்லை. பல்கலை வித்தகனாகத்தான் இளங்கோ
காட்டுகிறார். இப்படியான இயல்புகள் எப்படி இவர்களுக்கு வந்தது என்ற
கேள்வி எழுகையில், இவர்களை நேரடியாக இல்லாவிடினும் கூட, ஏலியன்களின்
வாரிசுகளாகக் கருத வேண்டியுள்ளது. இது பற்றி முன்னரே நான் கூறியிருந்ததை
நினைவுபடுத்துகிறேன்.
மணிமேகலையில் 'மலர்வனம் புக்க காதை'யில் சுதமதியின் அனுபவம் என்று
கூறப்படும், 26ல் இருந்து 43ம் வரி வரையில் சாத்தனார் தரும் விடயத்தைப்
பாருங்கள். இங்கு, மாருத வேகன் என்னும் விஞ்சையன், சண்பை என்ற நகரில்
சுதமதி என்பவளை மயக்கி, வானத்திற்கு எடுத்துச் சென்று, தன்வயப்படுத்தி,
பின்னர் புகார் நகரில் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போனதாக சுதமதி
மணிமேகலைக்குக் கூறியதாக சாத்தனார் கூறுகிறார். இது முழுமையான ஒரு
ஏலியன் அப்டெக்சன்தான். இப்படியாக வேற்றுக்கிரகிகள் பெண்களைக் கடத்திச்
சென்று உறவு கொண்டு விட்டு, வேறு இடங்களில் கொண்டு வந்து விட்டுச்
சென்றதான ஏலியன் அப்டெக்சன் பதிவுகள் உலகம் முழுவதிலும் உள்ளன.
இப்படியான விடயங்களை, தங்களைப் பிரபலப்படுத்துவதற்காகச் சில பெண்கள்
கூறுகிறார்கள் எனக் கூறி, அவற்றைச் சிலர் நம்புவதில்லை. தமிழர்கள்
மத்தியில் இப்படியான பதிவுகள் ஒன்றும் இப்போது இல்லை என்றாலும்
சாத்தனாரின் பதிவு எங்களிடமும் ஏலியன் அப்டெக்சன்; அன்று நடந்துள்ளது
என்பதைக் காட்டுகிறது.
இங்கு ஒரு விடயத்தை மேலதிகமாகப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த
ஏலியன் என்ற ஆங்கிலப் பதத்திற்குச் சரியான, பொருத்தமான தமிழப்
பதமின்றிப் பலநாள் தவித்திருக்கிறேன். ஆங்கிலம் போன்று பொதுமையாக
அந்நியர் எனக் கூறுவது மனதிற்கு இடைஞ்சலாக இருந்தது. இப்போது ஏலியன்
என்பதனை விஞ்சையன் எனத் தமிழ்ப் படுத்தலாமோ என்ற எண்ணம் வருகின்றது.
ஐயம் தெளிதலில் உங்கள் கருத்து வருமென நினைக்கிறேன்.
எனது கருத்துக்களை நிறைவு செய்யு முன்னர் இன்னொரு சுவாரசியமான
விடயத்தைக் கூற விரும்புகிறேன். இவ்விரு காப்பியங்களிலும் சதுக்கபூதம்,
நாளங்காடிப் பூதம், போன்று பல பூதங்கள் பற்றிக் கூறப்படுகிறது. அவை
பற்றிய பார்வை. இப்பூதங்கள், சில ஒழுங்குகள் ஒழுங்காகக்
கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதற்காக, அவ்வவ்விடங்களில் இருந்ததாக,
இளங்கோ அடிகளும் சாத்தனாரும் கூறுகின்றார்கள். அப்பூதங்களைப் பொதுவாகவே
பயங்கர உருவமுள்ளவையாகவும் ஆற்றல் மிக்கவையாகவும் இருவருமே
காட்டியுள்ளார்கள். இந்தப் பூதங்கள் பற்றிய எனது பார்வை சில சமயங்களில்
உங்களையும் ஆச்சரியப்படுத்தலாம்.
பூதங்கள் என உருவகப்படுத்தப்பட்டவை உண்மையில் நிபுறு விஞ்சையர் தங்களின்
தங்கச் சுரங்க வேலைகளுக்காக முதலில் உண்டாக்கிக் கொண்ட ஹைபிரிட்
மிருகங்கள் என்றே கருதகக் கூடியதாக உள்ளது. புத்தி விருத்தி சற்றுக்
குறைந்த, ஆனால் வல்லமைமிக்க, இக்கலப்பு மிருகங்களைப் பிற்காலத்தில்
நிபுறு விஞ்சையர் தங்களின் பாதுகாப்பாளர்களாகப் பாவித்தார்கள் என
அந்நாள்-விஞ்சையர் ஆய்வாளர்கள் கூறியதை நினைவு படுத்துகிறேன்.
இந்த இடத்தில் இன்னொரு விடயத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அது நம்மவர்கள் கூறிக் கொள்ளும் யாளி என்ற மிருகம். பொதுவாகவே யாளி
என்றதும், யானையின் தும்பிக்கை கொண்ட முகமும் சிங்கத்தின் உடலும் கொண்ட
மிருகம்தான் நினைவில் வரும். இது ஒரு ஹைபிரிட் மிருக வடிவம். இப்படியான
பல வகையான யாளிகள் இருந்தன என்கிறார்கள். இந்த யாளிகள் கோயில்களில்
கடவுள்களின் பாதுகாவர்கள் போன்றே காட்டப்படுகிறன. இந்நாட்களில்
கோவில்களில் இவை அரிதாகவே காணப்பட்டாலும் பழைய சைவக் கோயில்கள்
எல்லாவற்றிலும் பல யாளிகளைக் காணலாம். கனடாவில் உள்ள, அமைக்கப்படும்
கோயில்களில் இப்படியான யாளிகளைத் தனியனாக நான் கண்டதில்லை. ஆனால்
யாளிகள் கொண்டு திருமண மேடைகள் இன்றும் அமைக்கப்படுவதைக் காணலாம். இந்த
யாளிகள் என்ற மிருகங்கள் உண்மையில் நிபுறு கோளில் இருந்து வந்த
அந்நாள்-விஞ்சையர் உருவாக்கிய ஹைபிரிட் மிருகங்கள்தான் என்பது எனது
கருத்து. இளங்கோ அடிகளும், சாத்தனாரும் கூறிய பூதங்களும் இந்த யாளிகள்
போன்ற ஹைபிரிட் மிருகங்கள் என்றே நான் காண்கிறேன்.
எங்களின் இரட்டைக் காப்பியங்கள் எனக் கூறப்படும் சிலப்பதிகாரம்,
மணிமேகலை என்ற இருபெருங் காப்பியங்களிலும் நான் கண்ட வித்தியாசமான
அறிவியற் காட்சிகள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். எனது
பார்வையின் தெறிப்புகள், இக்காப்பியங்களைக் கொச்சைப்படுத்துவதாக எண்ண
மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில்தான் மனதில் எழுந்தவற்றை
வெளிப்படுத்தினேன். நான் தமிழிலும் இலக்கியங்களிலும் அதிவிருப்பு
உடையவனாகிலும் முழுமையான இலக்கியவாதி அல்லன். அடிப்படையில்
விஞ்ஞானத்தனப் பார்வை கொண்ட நான், இலக்கியத்தைப் பொறுத்தவரையில் 'கம்பன்
வீட்டுக் கைத்தறி' போன்றவன் மட்டுமே.
ஐயந்தெளிதல் வேளையில் உங்களுக்கு ஏதும் விளக்கம் தேவைப்படின்
தெளிவுபடுத்த முயல்வேன் எனக் கூறிக் கொண்டு நிறைவு செய்கிறேன்.
வணக்கம்.
நன்றி, ரொரன்ரோ தமிழ்ச் சங்கம்.
(யூலை 27, 2019 ல் வாசிக்கப்பட்டது.)
நன்றியுடன்,
கனி விமலநாதன் B.sc
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|