தொடரும் கீழடி வெளிப்புகள்
கனி விமலநாதன் B.Sc
செப்ரெம்பர் 19, 2019ல் தமிழ்நாடு
தொல்லியல் துறையினர் 2018ம் ஆண்டில் கீழடியில் நடந்த நாலாம் நிலை
அகழ்வுகளின் அறிக்கையை வெளியிட்டிருந்தார்கள். அவ்வறிக்கை வெளியான
நாளில் இருந்து இந்தியா முழுவதுமே பரபரப்பின் அலைகள் பரவத்
தொடங்கியிருந்தன. தமிழர்களின் தொன்மையைப் பல கோணங்களிலும்
வெளிப்படுத்திய அவ்வறிக்கையின் முடிவுகளின் பரபரப்பு உலகின் எல்லாத்
தொல்லியலாளர்களையும் விரைவிற் பற்றிக் கொள்ளும் என்றும் தெரிகின்றது.
இந்த நாலாம் கட்ட அகழ்வாய்வின் அறிக்கையின் வெளிப்புகள், அது தொடர்பான
பரபரப்புகள் பற்றிய சுருக்கமான அலசலைத்தான் இக்கட்டுரையின் ஊடாகப்
பார்க்கப் போகின்றோம். கீழடி பற்றிய எனது பார்வை ஒன்றினை ஏற்கனவே
தமிழ்ஆதெர்ஸ்.கொம்மில் பதிவிட்டிருந்தது உங்களிற் சிலரின் நினைவில்
வரலாம். அதன் தொடர்ச்சியானதாக இக்கட்டுரையைக் காணலாம்.
இதுவரையில்
நடந்த கீழடி அகழ்வாய்வுகள் பற்றிய ஒரு சுருக்கப் பார்வை. இந்தியத்
தொல்லியல் துறையில் பணிபுரியும் அமர்நாத் இராதாக்கிருஷ;ணன் தனது
தேடல்களின் பயனாக கீழடியில் உள்ள 110 ஏக்கர் பரப்பளவுள்ள பள்ளித்திடல்
என்ற மேட்டில் தனது அகழ்வுப் பணியிணை 2015ல் ஆரம்பித்து இரண்டு நிலை
அகழ்வினைச் செய்திருந்தார். 3 ஏக்கர் பரப்பளவில் 102 குழிகளைத் தோண்டி
அவரது குழுவினர் செய்த ஆய்வுகளில் 5800 அரிய தொல்பொருட்களை
தோண்டியெடுத்து, அரப்பா, மெகஞ்சதாரா போன்றவற்றுக்கு ஒத்ததான நகர
நாகரீகம் ஒன்று கி.மு 3ம் நூற்றாண்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள
கீழடியில் இருந்திருக்க வேண்டும் என்பது போன்ற சில விளக்கங்களைக்
கொடுத்திருந்தார். வேந்தன், உதிரன் போன்ற தமிழ்ப் பெயர்கள் பொறித்த
தமிழி எழுத்துக்கள் கொண்ட ஓடுகளையும் அங்கு பெற்றிருந்தார்.
தொடர்ந்து, சில சிக்கல்களின் பின்னராக கீழடியில் 3ம் நிலை அகழ்வுகள்
2017ல் ஸ்ரீராமர் என்பவரால் நடத்தப்பட்டது. அமர்நாத் அவர்கள்
அகழ்வுகளுக்காகத் தெரிந்து கொடுத்திருந்த இடத்திற்கு முற்றிலும் வேறான
ஒரு இடத்தில், வெறும் 10 குழிகளை மட்டும் தோண்டி ஆய்வு செய்த ஸ்ரீராமர்
கீழடி அகழ்வுகள் பெரிதாக ஒன்றையும் காட்டவில்லை எனக் கூறிக் கீழடி
அகழ்வுகள் தேவையில்லாதது என மத்திய தொல்லியல் துறையினருக்குப்
பரிந்துரைத்திருந்தார். ஏற்கனவே கீழடி அகழ்வாய்வின் முக்கியம் பற்றி
அமர்நாத் அவர்கள் கூறியிருந்ததால், தமிழ் நாட்டில் ஸ்ரீராமரின்
முடிவுக்கு எதிரான பலத்த எதிர்ப்புகள் வந்தன. அத்துடன் கீழடி அகழ்வுகள்
தொடர வேண்டும் என்ற நீதிமன்ற வழக்குகளின் காரணமாகவும் மீண்டும்
கீழடியில் அகழ்வுகள் 2018ல் 4ம் நிலையாகத் தொடர்ந்தன.
இம்முறை தமிழ்நாடு தொல்லியல் துறையினரின் கவனிப்பில் கலாநிதி சிவானந்தன்
என்பவரின் தலைமையில் அகழ்வுகள் 2018ல் நடைபெற்றன. இவர்களும் 5800க்கும்
அதிகமான, பெறுமதி மிக்க தொல்பொருட்களைக் கீழடியின் மண்ணுள் இருந்து
வெளிக்கொண்டு வந்தார்கள். கீழடியின் 5ம் நிலை அகழ்வாய்வுகள் நடந்து
கொண்டிருக்கும் இவ்வேளையில், தமிழ்நாட்டின் இந்த நடவடிக்கைகளுக்குப்
பொறுப்பான அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் இந்நடவடிக்கைகளுக்குப்
பொறுப்பான ரி. உதயச்சந்திரன் ஆகியோரின் உற்சாகமான முயற்சியால்,
தென்னிந்தியாவிலே இதுவரை 70 வருடங்களுக்கும் மேலாக நடந்த 110க்கும்
அதிகமான தொல்லியல் ஆய்வுகளின் அறிக்கைகள் வெளிவராது இருந்த போதிலும்
முதல் முறையாக கீழடியின் நாலாம் நிலை அகழ்வுகளின் அறிக்கை வெளிவந்தது,
பல ஆச்சரியமான முடிவுகளுடன். இந்நாட்களின் வரலாற்ராளர், தொல்லியலலளர்,
மொழியியல் வல்லுனர் போன்றவர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துக்
கிட்டத்தட்ட இந்தியா முழுவதையுமே பரபரப்புடன் பேச வைத்துக்
கொண்டிருக்கும் அந்த அறிக்கையின் தொடர்புகளைத்தான் இன்று பார்க்கப்
போகிறோம்.
நாலாம் கட்ட அகழ்வுகளில் பெறப்பட்ட ஏராளமான மட்பாண்ட உடைந்த ஓடுகளில்
எழுத்துகளுடன் கூடிய 56க்கும் அதிகமான ஓடுகள் குறிப்பிடத்தக்கன.
இன்னமும் மண்ணால் சுடப்பட்டுச் செய்யப்பட்ட சிறிய மனிதச் சிலைகள்,
விலங்குகளின் பொம்மைகள் என்பவையும் குறிப்பிடத்தக்கன. கீழடி மக்களின்
வாழ்வியல் முறையினை விளக்கக் கூடியதாக விலங்குகளின் எலும்புகளும்
இம்முறை கிடைத்திருந்தன.
இன்னமும்
எரும்புகளினாலான, கூரிய முனை கொண்ட எழுதுகோல்களும் சிறுவர்களின்
விளையாட்டுப் பொருட்களும் கிடைத்திருந்தன. சிறிய தங்க நகைகள், இரும்பு
செப்புப் பொருட்கள் என்பனவும் வெளிக் கொண்டு வரப்பட்டிருந்தன. செங்கற்
கட்டிடங்கள், நீண்ட மதிற்சுவர்கள், அழுத்தமான பளபளப்பான வீடுகளின்
தளப்பகுதிகள் என்பனவும் அங்கு இனம் காணப்பட்டன. அங்கெடுக்கப்பட்ட
வீட்டுக் கூரைகள் மழை நீர் வழிந்தோடக் கூடிய அமைப்புகளைக் கொண்டிருந்தன.
கழிவுநீர் வடிகால் அமைப்புகளும் சீரான முறையில் கட்டப்பட்டு இருந்தன.
இத்தனை வகையான வெளிப்புகளுடன் வந்த 4ம் நிலை அகழ்வுப் பொருட்களில் சில
பகுப்புக்காக பொருத்தமான இடங்களுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன.
குறிப்பாக, 6 கரிமத் துண்டுகள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில்
உள்ள பீற்றா ஆய்வகத்திற்குக் காலக் கணிப்பிற்காக அனுப்பப்பட்டன.
எடுக்கப்பட ஆழங்களுக்கு ஏற்றதான காலங்களைக் காட்டிய அக்கரிமங்களில் 352
சதமமீற்றர் ஆழத்தில் எடுக்கப்பட்ட கரிமம் கி.மு. 582ம் ஆண்டு, அதாவது
கி.மு. 6ம் நூற்றாண்டு எனக் காலம் காட்டியது. முன்னராக, 2ம் கட்ட
அகழ்வில் அமர்நாத் தெரிந்து கொடுத்த 10 கரிமங்களில் இரண்டினை மாத்திரம்
மத்திய தொல்லியல் துறையினர் தெரிவு செய்து புளோரிடாவுக்கு அனுப்ப,
அதிலொன்று கி.மு. 3ம் நூற்றாண்டைக் காட்டி நின்றது உங்களுக்குத்
தெரிந்திருக்கும்.
தமிழர்கள் தங்களைக் 'குமரிக்கண்டத்தில் முச்சங்கங்கள் அமைத்து அறிவிற்
சிறந்து, நாகரிகமாக வாழ்ந்தவர்கள் நாங்கள்' எனக் கூறுவார்கள். இன்றும்
கூட, ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் கூறுகின்றோம். கடல்கோள்களினால் தமிழர்
நிலம் அழிந்ததினால் இன்று அதற்கான பௌதிகச் சான்றுகள் ஏதுமின்றி, தப்பிப்
பிழைத்த ஒருசில சங்க இலக்கியங்களையே ஆதாரமாகக் காட்டுகிறோம். அவற்றினை
ஏற்காத வரலாற்றாசியர்கள் ஒரு குத்து மதிப்பில் சங்க இலக்கியங்கள்
தோன்றிய சங்க காலத்தை மிகவும் சிக்கற்பட்டு இலக்கிய ஆதாரங்ககை; கொண்டு
கி.மு. 3ம் நூற்றாண்டுக்கும் கி.பி. 3ம் நூற்றாண்டுக்கும் இடையில் என
வேண்ட வெறுப்பாகக் கணித்துத் தந்திருந்தார்கள், தங்களுக்கு வசதியாக.
இவர்களது வரலாற்றுக் கணிப்பின்படி, இந்தியாவிலே எழுத்து வடிவம்
முதன்முதலில் கி.மு. 3ம் நூற்றாண்டுக் காலப்பகுதியில், அசோகன்
காலத்தில்தான் வந்ததென்றும், அசோகன் அறிமுகப்படுத்திய பிராமி
எழுத்துக்களின் செல்வாக்குத்தான் இந்தியா முழுவதிற்குமே வரிவடிவத்தைக்
கொடுத்தது என்பதுமாக இருந்தது. அறிவாளிகள் எனக் கருதப்படும் எம்மவர்
சிலரும் இதனையே வரலாறாகக் கூறிக் கொண்டு, தமிழ் எழுத்துகளை தமிழ்ப்
பராமி என்றும் கூறுகிறார்கள். ஆனாலும் தமிழர்கள் நகர நாகரீகம்
கொண்டவர்களாக இருக்கவில்லை என்றும் கூறிக் கொள்வார்கள்.
இவர்களுக்கு விழுந்த முதலடிதான் கீழடி பற்றிய புளோரிடாவின் பீற்றா
அமைப்புக் காட்டிய காலக் கணிப்பு. இதன்படி, இந்தக் கி.மு. 6ம்
நூற்றாண்டு என்பது தமிழர் தொன்மையை, தற்போது கருதப்படும் சங்ககாலத்தை
கி.மு. 6ம் நூற்றாண்டில் இருந்து பார்க்க வைத்கிறது. ஆனால், இதனை ஒரு
ஆரம்பமாகவே கருத வேண்டும் என்கிறார்கள் தமிழ் ஆர்வலர்கள்,
மகிழ்ச்சியுடன். ஏனெனில் 50 ஆயிரம் ஆண்டு முன் தோற்றுவிக்கப்பட்ட
முச்சங்கங்கள் பற்றிய தேடலின் ஆரம்பம் இதுதான் என அவர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கி.மு. 6ம் நூற்றாண்டின் நாகரீகம் என்பது இன்னொரு வெளிப்பினையும்
தந்தது. அதுதான் தமிழியின் தனித்துவம். அக்காலத்தில் கீழடியில் வாழ்ந்த
தமிழர் எழுதத் தெரிந்த, கல்வியறிவு கொண்டவர்கள் என்பதைக் காட்டியது.
ஏராளமான பானை ஓடுகளில் இருந்த, வௌ;வேறு ஆட்கள் எழுதிய எழுத்துகள் அதற்கு
சான்றாக அமைந்திருந்தன. இவையெல்லாம் பானைகளோ அல்லது மட்பாண்டங்களே
வனையப்பட்ட வேளையில் எழுதப்பட்டவையல்ல. அதனைத் தமது பாவனைக்குப்
பயன்படுத்தியவர்கள் தங்கள் கைப்பட எழுதியிருக்க வேண்டும் என்பது
ஆய்வாளர்களின் கருத்து. ;
இதிலிருந்து
கீழடியில் தமிழ்ப் பெண்களும் எழுத்தறிவு உடையவர்களாக இருந்தனர் என்பது
புலப்படுகிறது. ஓளவை, காக்கைபாடினியர் போன்ற பெண்புலவர் பலர்
சங்ககாலத்தில் இருந்தார்கள் என்பதை இந்த பானை ஓட்டு எழுத்துகளை
எழுதியவர்கள் பெண்கள்தான் என்பதையும் உறுதிப்படுத்துகின்றன. கீழடியில்
எடுத்த பானை ஓடுகள் எழுத்துக்களுடன் இருப்பதை அருகில் உள்ள படத்தற்
காணலாம். அவற்றில் உள்ள ஆதன், குதிரன் போன்ற யெர்களைக் கூட வல்லுனர்கள்
வாசித்து அறிந்துள்ளார்கள். இதன் இன்னொரு முக்கிய வெளிப்பு என்னவெனில்,
அசோகன் பிராமி எழுத்துகள் வருவதற்கு முன்னரே தமிழி எழுத்துகள்
தமிழர்களிடையே சாதாரண எழுத்துக்களாகப் பாவனையில் வந்து விட்டது
என்பதுதான். ஆக இந்தியாவின் முதல் எழுத்துகள் (இன்னமும் கூறுவதெனில்
உலகின் முதல் எழுத்து வடிவமே) தமிழ் என்பது உறுதியாகிறது. அசோகன் கூட,
தமிழியை ஒட்டியே தனது பிராமி எழுத்து வடிவத்தை, முன்னிருந்த
பிராகிதத்துக்குக் கொடுத்திருக்கலாம் என ஐயுறுவோரும் இப்போது உள்ளனர்.
விடயம் இத்துடன் முடியவில்லை. கீழடியில் 4ம் நிலை ஆய்வுகளிற் பெற்ற சில
ஓடுகள் மாதிரிகளாக இந்தியாவின் பூனே ஆய்வுகூடத்தின் உதவியுடன்
இத்தாலியில் உள்ள ஆய்வுகூடம் ஒன்றிக்குப் பகுப்பாய்விற்காக
அனுப்பப்பட்டடிருந்தன. அப்பகுப்பாய்வின்படி, கி.மு. 6ம் நூற்றாண்டைச்
சேர்ந்த அவ்வோடுகள் செய்யப்பட்ட மண் வகைகள், அவை கொண்டுள்ள இரும்பு
சிலிக்கள், சுண்ணாம்பு போன்ற தாதுப் பொருட்களின் அடிப்படையில் கீழடியின்
சுற்றாடலில் உள்ளவை என்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இன்னொரு மிகவும் சுவாரசியமான விடயம் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளில்
இருந்து வெளிப்பட்டது. இவ்வெலும்புகள் 'திமில்' கொண்ட காளை மாடு, பசு,
ஆடு, பன்றி, கோழி, மயில் என்பவற்றினது என்பதை இந்தியாவின் பூனே ஆய்வு
கூடத்தினர் உறுதிப்படுத்தினர். இது கீழடியில் கி.மு. 2600 ஆண்டு முன்னர்
வாழ்ந்த மக்களின் பண்பட்ட சமூக வாழ்வியல் முறையின் ஒரு சில
வெளிப்புகளைத் தருகின்றது என்கிறனர். மாடுகள் விவசாயத்திற்கு
உதவியிருக்கலாம், பசு, கோழி போன்றவை வீட்டு வளர்ப்புப் பிராணிகளாக
இருக்கலாம் எனக் கருதும் ஆய்வாளர்கள், சில எலும்புகளில் இருந்த வெட்டுக்
காயங்கள், அவை உணவிற்காகப் பாவிக்கப்பட்டிருக்லாம் என்று எண்ணவும்
வைக்கின்றது என்கிறார்கள். திமில் கொண்ட காளையின் படங்கள் சிந்துவெளி
நாகரீகப் பகுதிகளில் பரவலாகக் கிடைத்திருந்ததை நீங்களும் அறிவீர்கள்தானே.
அடுத்து இன்னொரு முக்கியமான விடயம். அது எழுத்துக்கள் பற்றியது.
கீழடியில் பெறப்பட்ட எழுத்துகள் சிந்துவெளியின் இன்னமும் வல்லுனர்களால்
வாசிக்கப்படதா, மர்மமான எழுத்துகளை ஒத்திருந்தன. இப்படியாக ஒத்துப்
போகின்ற தன்மை கீழடியையும் சிந்துவெளி நாகரீகத்தையும் ஒப்பிட்டுப்
பார்க்க வைத்தது. குறிப்பாக வடக்கின் பல்தரப்பட்டவர்களையும் மூக்கின்
மேல் விரல் வைக்கச் செய்ததுடன் சில வாயடைப்புகளையும் செய்யச் செய்தது.
அவர்களின் கவனத்தை ஈர்த்த இவ்வெழுத்துக்களின் பின்னனியில் பல
கருத்தரங்குகளை, ஆய்வுகளை அவர்கள் செய்யத் தொடங்கியுள்ளனர்.
சிந்துவெளியில் காணப்பட்ட எழுத்துகளை மலேசியாவின் முனைவர் திருச்செல்வம்
போன்ற சில தமிழறிஞர் வாசித்துக் காட்டிய போதும் உலக அளவில் அவை ஏற்றுக்
கொள்ளப்படவில்லை. இப்படியிருக்கையில்தான் இப்போது கீழடியில்
சிந்துவெளியின் எழுத்துகள் பல பெறப்பட்டுள்ளன. இப்படியான வரிவடிவ
எழுத்துகள் ஈஸ்ரர் தீவிலும் பெறப்பட்டிருந்தன என்பது குறிப்பிடப்பட
வேண்டியது.
அருகில்
உள்ள படம் கீழடியில் பானை ஓடுகளிற் பெறப்பட்ட தமிழி எழுத்துகள்
சிந்துவெளியில் பெறப்பட்டிருந்த எழுத்துக்களுடன் ஒத்திருப்பதைக்
காட்டுகின்றது.
பொதுவாகவே 700 ஆண்டுக்கும் மேலாக, சிறப்புடன் இருந்த சிந்துவெளி
நாகரீகத்தை அழித்தவர்கள், கி.மு. 1500 களில் மேற்கில் இருந்து ஹைபர்
கணவாயின் ஊடாக வந்த ஆரியர்கள்தான் என்ற கருத்தொன்று உலகளவில் உண்டு. 'ஆரியர்
ஆக்கிரமிப்பு' என்ற இக்கொள்கையை வன்மையாக எதிர்த்து, ஆரியர்களும்
இந்தியாவின் தொன்மைக் குடிகள்தான், சிந்துவெளி நாகரீகத்தின் அழிவு
அல்லது முடிவு இஙற்கையின மாற்றத்தால் ஆனது என நிறுவுவதற்கு முனைப்புடன்
செயற்படும் வடபுலத்தறிஞர் பலர் உள்ளனர். இன்னமும் சமஸ்கிருதத்தின்
உற்பத்தி இடமும் சிந்துவெளி நாகரீகம்தான் எனக் கூறும் அவர்கள்,
சிந்துவெளியின் எழுத்துக்கள் கூட சமஸ்கிருதத்திற்கோ சொந்தமானது எனவும்
கூறி வருகின்றனர். இவர்களது பேட்டிகள், கருத்துப் பரிமாறல்கள், வாதங்கள்
என்பன
newsX
என்ற சனலில் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். அண்மைக் காலமாக,
2006ம் ஆண்டில் ராக்கிகார்கி
RAKHIGARHI
என்ற இடத்தில் பெறப்பட்ட 4500 ஆண்டு பழமையான பெண் ஒருவரின்
எலும்புக்கூட்டின் டிஎன்ஏ மாதிரியைக் கொண்டு ஆரியர் ஆக்கிரமிப்பு
என்றொன்றில்லை, ஆரியர்கள் இந்திய மண்ணின் மைந்தர்கள் என வலிந்து கூறிக்
கொண்டு வருகின்றார்கள்.
அருகில்
இருப்பது ராக்கிகர்கியில் எடுக்கப்பட்டிருந்த பெண்ணின் எலும்புக்கூடு.
இவ் எலும்புக் கூட்டின் டீஎன்ஏ ஆய்வுகள், ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையை
ஆதரிக்கிறது என்பதை ஹவேட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஓக்டோபர் 3 2019ல் அவர்கள் கூகிளில் வெளியிட்டிருந்த கட்டுரையின்
தலைப்பு
Rakhigarhi skeleton DNA: Indus Valley people not Rig-Vedic Aryans
இதுதான். இன்னமும் 2016ல் வெளியான ஆண்களின் டீஎன்ஏ
ஆய்வுகள், கி.மு. 1500களின் பின்னர் வடநாட்டில் ஆண்களின் டிஎன்ஏயில்
ஆரியக் கலப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டியிருந்தததை அவர்கள்
மறைத்துக் கொண்டே தங்களின் பிரச்சாரத்தைச் செய்து கொண்டு வருகிறார்கள்
என்பது வேறு கதை.
இவை ஒருபுறமிருக்க, நியூஸ்எக்ஸ் சனல்காரரின் கவனம் இப்போது கீழடியின்
பக்கம் விழுந்திருக்கின்றது. ஒக்டோபர் 2ம் திகதியும், 3ம் திகதியும்
கீழடியின் முடிவுகள் பற்றிய காரசாரமான கலந்துரையாடல்களைச்
செய்திருந்தார்கள். சில தென்னிந்தியக் கல்விமான்களும் அவற்றிற்
கலந்திருந்தனர். சிந்துவெளியின் எழுத்துக்கள் கீழடியில்
பெறப்பட்டதையிட்டு ஆச்சரியப்பட்டும் அவர்கள், சிந்துவெளி மக்கள் பேசிய
மொழி திராவிடர்களின் தமிழ் என்று சாடைமாடையாய் ஒப்புக் கொண்டுள்ளார்கள்.
அத்துடன் இப்போது எழுத்துகளின் வரிவடிவங்கள் மாறினாலும் அதன் ஒலிவடிவம்
அன்றில் இருந்து இன்று வரை தெற்கில் ஒலிப்பதையிட்டு
பெருமையடைகிறார்களாம். கீழடியின் இக்கண்டுபிடிப்பு ஆரியர்களும்
திராவிடர்களும் இந்தியாவின் இரு இனக் குழுக்கள் என்பதைக் காட்டுகிறது
என்பதுடன் இந்தியாவுக்குள் ஆரியர்கள் வரவில்லை, மாறாக இந்தியாவில்
இருந்துதான் வெளியே சென்றார்கள் எனற தங்களின் கருத்திற்கு கீழடி
அகழ்வின் முடிவுகள் வலுச் சேர்க்கின்றன என்கிறார்கள். மேலும் தமிழில்
40 வீதமான சொற்கள் சமஸ்கிருதச் சொற்களாக இருக்கின்றனவாம். அதனால்
சிந்துவெளி மக்கள் பேசிய மொழியில் இருந்துதான் சமஸ்கிருதமும் தமிழும்
தோன்றின எனவும் கருத்துக் கொண்டார்கள் அக்கருத்துப் பரிமாறல்களில்.
கேட்பதற்குச் சிரிப்பாக உள்ளதல்லவா!
இவர்கள் இன்னொரு வேண்டுகோளினையும் வட இந்தியப் பெரும்பெரும்
பணக்காரர்களிடம் கேட்டிருந்தார்கள். கீழடியின் ஆய்வுகளின் ஊடாக
ஆரியத்தின் நிலைப்பாட்டையும் சமஸ்கிருதத்தின் தொன்மையையும் வெளிக்கொண்டு
வருவதற்கு பண உதவியைச் செய்யுமாறும் ஒருவித மறைமுகப் பேச்சில்
கேட்டிருந்தார்கள் என்பதிலும் பார்க்க அழைத்திருந்தார்கள் எனக் கூறலாம்.
இது எனக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் அடுத்துக்
கெடுக்கும் இராசதந்திரம் உள்ளவர்கள் பற்றி முன்னரே கூறியிருந்தேன்
அல்லவா. தமிழ்நாட்டில் பண வலிமையும், அதிகார வலிமையும் (ஒப்பீட்ளவில்
அறிவியல் வலிமையும்) அற்ற தமிழர்களினதும் தமிழின் தொன்மையினதும்
ஆதாரங்கள் வழமை போலவே அழிக்கப்பட்டுவிடுமோ? அல்லது மாற்றப்பட்டுவிடுமோ?
உதவாதினியொரு தாமதம்,
உடனே விழித்தெழு தமிழா!
கனி விமலநாதன் B.Sc
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|