மக்கள் பண்பாடு…

ஜெ.மதிவேந்தன், முனைவர் பட்ட ஆய்வாளர்.

னித இனம் தொடக்கத்தில் குரலெழுப்புதல், உடல் அசைவுகள் மூலம் தங்களின் கருத்துகளைப் பரிமாறி வந்தன. வேட்டைச் சமூகத்திலிருந்து அரச உருவாக்கம், நகர நாகரிக போன்ற வளர்ச்சிகளினுடாக, புதிய கண்டுபிடிப்புகளும் உருவாகின. நிலையான குடியிருப்பும் நிரந்தர தொழில்களும் இயற்கையோடு இணைந்து மனிதன் வாழ உதவியது. இப்படியாக வாழ்ந்த மனிதர்கள் இன்று இயற்கையை இரண்டாம் நிலைக்குப் புறந்தள்ளினர். தொழில்நுட்பத்தோடு, சீர்கேடுகளையும் அளவுக்கு மீறி கைக்கொண்டனர். இது மனித இனத்திற்கு மட்டுமின்றி, பல்வேறு உயிரினங்களின் அழிவுக்கும் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

மண், மக்கள் இரண்டிற்குமான உறவு என்பது தாய்க்கும் பிள்ளைக்குமான உறவு போன்றது. மனிதர்கள் எங்கும் வசிக்கலாம்; எதையும் அனுபவிக்கலாம். ஆயினும் தாய்மண், பிறந்த ஊர் என்பது பிறவற்றிலிருந்து வேறானது தான். இதனை, இளையராஜாவின் இசையமைப்பில் அவர் பாடிய, “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போல வருமா?” என்ற வினா பலருக்கும் மெய்சிலிர்ப்பை உண்டாக்கும். ஆயிரந்தான் இருந்தாலும் எங்க ஊரே வேறடா… என்று புளகாங்கிதம் அடையும் பெருமித உணர்வு எதற்கும் ஈடாகாது. மண், மக்கள், பழக்கவழக்கங்கள், சடங்குகள், மருத்துவம் ஆகியவை மாசுபடாது இருப்பது கிராமங்களில் தான். இன்று அது மாசடைந்து வருவது வேதைக்குரியதே.

எனினும் இன்றைய நவீனமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற தொழில்நுட்பக் கொள்கைகளின் விளைவால், கிராமங்கள் சிதைந்துள்ளன. அதன் வயல்வெளிகளில் செல்போன் கோபுரங்கள் வானுயர வளர்ந்து நிற்கின்றன. பல ஆண்டுகளாக வளர்ந்த நெடுமரம் ஒன்றின் மதிப்பை/பாதுகாப்பை விட, கோபுரங்களின் மதிப்பு உயர்வானதாகப் பார்க்கப்படுகிறது. கோயில் கோபுரங்கள் தான் ஊரில் பெரிய அளவில் காணப்படும். இன்றோ அதையும் தாண்டி, சிவப்பு நிறத்தில் செல்போன் கோபுரங்கள் காட்சியளிக்கின்றன. மனிதர்களுக்கும் மட்டுமின்றி விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் பெரிதளவில் பாதிப்பையும் அழிவையும் உண்டாக்குகிறது. மனித உயிர்களுக்கும் பிற உயிர்களுக்கும் துன்பமும் அழிவும் நேராத தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை வரவேற்கலாம். அதேநேரம் இவற்றிற்கெல்லாம் ஊறு விளைவிக்கும் தொழில்நுட்பமும் கண்டுபிடிப்பும் வளர்ச்சி ஆகாது. அது வீழ்ச்சியே எனலாம்.

நினைவுகளின் அடுக்குகளிலிருந்து பழமையையும் புதுமையையும் ஒரு சேர இணைக்கும் பாங்கில், பாடல் ஒன்று உருவாக்கபட்டுள்ளது. அது, 2007ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த, ‘சிவாஜி’ படத்தில் இடம்பெற்ற ‘பல்லேலக்கா… பல்லேலக்கா…’ எனத் தொடங்கும் பாடல் குறிப்பிடத்தக்கது. இப்பாடலை எழுதியவர் பாடலாசிரியர் நா.முத்துக்குமார். இனி, அப்பாடல் குறித்துக் காணலாம்.

“பல்லேலக்கா” எனும் சொல் குறித்துக் கூறும், நா. முத்துக்குமார் “இது இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தந்த சொல். இதை இணைத்துப் பாடல் எழுதச் சொன்னார்; அதுதான் இச்சொல். இச்சொல்லுக்குப் பொருள் எதுவெனக் கூறுகையில், பல்லேலக்கா என்பது ரஷ்யாவின் இசைக்கருவி ஒன்றின் பெயர் என விளக்குகிறார். ‘பல்லேலக்கா’ சொல் தொகையறாவில் 4 முறையும் சரணங்கள் முடியும்போதும் வருகிறது. இது பல்லவியைப் பாடுவதற்குப் பதிலாக, தொகையறாவின் மூன்றாம் பகுப்பான பல்லேலக்காவே பாடப்படுகிறது. இச்சொல், ஏ.ஆர். ரகுமானின் பன்மொழி இசையறிவின் வழி கிடைத்த கொடைச்சொல் ஆகும்.

மனிதர்கள் எல்லோரும் நாகரிகச் சிறைக்குள் சிக்குண்டு மீளவும் முடியாமல்; இருக்கவும் முடியாமல் அல்லல் படுகின்றனர். அவ்வாறு, வாழுபவர்களின் சிந்தைகளில் படிந்திருக்கும் பாசிகளைக் கிளறிவிடும் பாடலாக இது அமைகிறது. இப்பாடல் தொகையறா, பல்லவி, சரணம் என்ற அமைப்பில் அமைந்துள்ளது. நகர வாழ்வுக்கும் கிராமத்து வாழ்வுக்குமான வேறுபாடுகளை, கிராமத்தின் மண் வாசத்தை அணுபவிக்க வைக்கும் உணர்வை இப்பாடல் ஏற்படுத்துகிறது. கிராமப்புற மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்களைக் கவிதையாக வடித்தவர். அம்மக்களின் வாழ்வியலை உள்ளது உள்ளபடியே, நிறம் மாறாது; பூவின் வாசத்தைப் படம்பிடித்து வெளிக்காட்டியவர் நா. முத்துக்குமார்.
தொகையறாவில், என்றும் அழியாது; பல நூறு கோடி ஆண்டுகள் கடந்து இன்றும் காட்சியளிக்கும் சூரியன், சந்திரனை ஒப்பிடுகிறார். தமிழர் மரபில் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வழியில் வந்தவன் இவன் எனப் பெருமை பேசுகிறார். “சேரப் பாண்டிய சூரன் இவனோ” என்னும் வரிகளில் சோழர்களை உள்ளிடையாக வைத்து பாடல் எழுதியுள்ளார். மூவேந்தரை வரிசைப்படுத்தும் அமைப்பினுடாக (சேர, சோழ, பாண்டிய) இதனைக் கவனமாகக் கையாண்டுள்ளார். கதாநாயகனின் செயல்பாட்டு வேகத்தைக் குறித்திடும் வகையில், “சிறுத்தையின் காலடி இவனோ…” என்று உரைக்கிறார். அவற்றைக் கண்டால் எதற்கும் தயங்காமல், உடனடியாக அழித்திடும் ‘சிவனை’ப் போன்றவன் கதாநாயகன் என விவரிக்கிறார்.

தமிழகத்தில் எல்லைப் போராட்டங்கள் என்பது நிலவரையறை, மொழி, இன மக்கள் சார்ந்து அமைந்ததைப் பலரும் அறிவர். மொழிப்போராட்டமும் எல்லைப் போராட்டங்களும் தமிழ் மண்ணில் தொடர்ந்து நடைபெற்று வரும் செயல்பாடாகும். இவ்வடிப்படையில், தமிழகத்தின் முக்கிய எல்லையாக, அல்லது நகரங்களாகச் சிலவற்றைப் பாடலில் குறிப்பிடுகிறார். அது,

“சேலத்துக்கா, மதுரைக்கா, மெட்ராசுக்கா,
திருச்சிக்கா, திருத்தணிக்கா.”

எனத் தமிழகத்தின் வடக்கு, மேற்கு, கிழக்கு, தெற்கு, நடுவம், என ஐந்து முக்கிய நகரங்களைப் பட்டியலிடுகிறார். இதில் ‘மெட்ராசு’ என்னும் ஆங்கிலேய ஆட்சிக் காலத்துச் சொல்லினைப் பயன்படுத்தி பழமையை மீண்டும் கவனப்படுத்துகிறார். மதராஸ், மெட்ராஸ், மதராசு, மெட்ராசு, மதராசப்பட்டினம் என இருந்தது. பின்னர் மெட்ராஸ் (Madras), சென்னை ஆனது.

தமிழ்நாட்டின் தலைநகராக விளங்குகிறது. அதேபோன்று, திருச்சி தமிழகத்தின் நடுவமான நகரமாக அமைந்துள்ளது. வடவெல்லையாகத் திருத்தணியும் மேற்கு எல்லையாகச் சேலத்தையும் கிழக்கு எல்லையாக மதுரையையும் சுட்டுகிறார். கதாநாயகன் தமிழ்நாடு வந்தால், உலகின் வளர்ச்சியடைந்த நாடுகளில் முன்னிலையில் இருக்கும் அமெரிக்கா நாட்டைப்போல, தொழில்நுட்ப வளர்ச்சியிலும் கல்வி, மருத்துவம், பொருளாதாரத்தில் முன்னேறும் என்றுரைக்கிறார். இதைக்கருதியே, “அண்ணன் வந்தா தமிழ்நாடும் அமெரிக்கா” என்று எழுதுகிறார்.

உலக நாகரிகங்கள் தோன்றிய வரலாற்றை நோக்குவோமானால், ஆற்றங்கரை நாகரிகமாகத்தான் பழமையானது. தமிழ் நிலப்பகுதியும் ஆற்றங்கரை நாகரிகத்திலிருந்தே வளர்ச்சி அடைந்துள்ளது. அந்தடிப்படையில், தமிழகத்தில் பல ஆறுகள் உருவாகி, மக்களைப் பயனடையச் செய்தன. பெண்களைத் தெய்வமாக வணங்கும் தாய்வழிச் சமூக மரபு தமிழருடையது. இதன்நீட்சியாக, மனித சமூகம் ஆறுகளுக்குப் பெண்களின் பெயர்களை வைத்து போற்றியது. காவிரி, பொன்னி, கோதாவரி போன்றவை குறிப்பிடத்தக்கது. தமிழகத்திற்குப் பெரும் பயனைத் தரும் காவிரிக்கும் தமிழ் மக்களுக்குமான உறவு, தாய்க்கும் பிள்ளைக்குமான உறவாகும். நிலவெல்லைப் பிரிப்பினூடாக மாநில உருவாக்கம் நிகழ்ந்தது. அதன் நீட்சியாகக் காவிரி நீர் குறித்தான பிரச்சனைகள் இன்றளவும் நீடித்து வருகிறது. இவ்வரசியல் என்பது வேறு. அது இங்கு தவிர்க்கப்படுகிறது.

பெண்கள் உரலில் நெல்லினை இடித்தெடுத்து, காவிரி ஆற்றின் நீரில் சமைத்த உணவின் சுவை அளப்பிரியது. ‘கைக்குத்தல் அரிசி’ என்னும் இந்தப் பண்பாடு இன்று முற்றிலும் மறைந்துள்ளது. நீரும் உணவும் மனிதரின் அடிப்படை. அதோடு, காதலும் வீரமும் முக்கியமானதாக இருந்துள்ளது. இலக்கியங்கள் காதலையும் வீரத்தையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்கிறது. பெண்களின் கடைக்கண் பார்வைக்குப் பொருள் புரிந்துகொள்வது சிரமம் இதனைப் பாரதிதாசன், “கண்ணியரின் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால் காளையர்க்கு மாமலையும் ஓர் கடுகு” என விளக்குகிறார்.

களத்துமேடுகளும் கரிசக்காடுகளும் மக்களின் வாழ்வியலில் பல்வேறு ஊடாட்டங்கள் நிகழ வாய்ப்பளிக்கும் களமாக அமைந்தன. அந்தவகையில், கிராமத்தின் மண் சாலைகள் புதிய உணர்வையும் ஏற்படுத்தவல்லது. இன்று தார்சாலைகளும் காங்கிரீட் சிமெண்ட் சாலைகளும் மழைநீரைப் பூமிக்குள் செல்லவிடாமல் தடுக்கிறது. அதனால் நீரானது பல வழிகளில் வீணாக்கப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதற்கு மழைநீர் சேகரிப்பின்மையும் அதுபற்றிய புரிதலின்மையும் முதன்மைக் காரணியாகத் திகழ்கிறது. கிராமத்து மண்சாலைகள் எவ்வித சேதாரமின்றி, வழியமைத்துத் தந்தன. இன்றோ தார்ச்சாலைகளும் சிமெண்ட் சாலைகளும் ஊரின் அழகினை விகாரப்படுத்துகின்றன. கற்கள் மேல்நோக்கி கிளம்பியும் குண்டுகுழியுமான பள்ளங்கள், விரிசல்கள், உடைப்புகளைக் காணும்போது, அன்றைய மண் சாலைகளே இன்றும் இருந்திருக்கலாம் எண்ணுமளவிற்கு வழிவகுக்கிறது.

கிராமத்து மனிதர்களின் வாழ்வியலில் விளையாட்டின் இடம் முக்கியமானது. கிரிக்கெட் விளையாட்டிற்கு முன்னதான காலங்களில் கபடி (சடுகுடு), பல்லாங்குழி, கிட்டிப்புள்ளு, தாயம், நொண்டியாட்டம் போன்றவை ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளமாக இருந்தது. கிரிக்கெட் விளையாடிய தலைமுறைகளுக்குப் பிறகு தொலைக்காட்சிப் பெட்டியின் பரவலாக்கமும் கைபேசியின் தாராளமயமாக்கமும் திறந்தவெளியில் சென்று விளையாடும் போக்கினை வெகுவாகக் குறைத்துள்ளது. இன்று கைபேசியின் கேம்களும் தொலைக்காட்சியின் கிரிக்கெட் விளையாட்டு ஒளிபரப்புகளும் விளையாட்டாக மாறிய அவலம் கண்முன் நிலவுகிறது. அன்று, ஆலமரங்களும் அரச மரங்களும் ஒன்றுகூடி, விளையாடும் இடங்களாக இருந்தன. இன்றோ, ஒன்றுகூடி விளையாடுதல் என்பதை மறந்து வாழப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு ஒன்றுகூடுதல் தவறு என்று பொதுச்சமூகத்தால் போதிக்கப்படுகிறது.

இதற்கெல்லாம், யார் காரணம்? எனும் வினாவிற்கு பெற்றோர்களா, சமூகமா, அரசாங்களா, பொருளாதாரச் சுரண்டல் நிறுவனங்களா யாரின்மேல் குற்றத்தைச் சுமத்துவது. யார் பொறுப்பேற்பது என்கிற அரசியல் வினாக்கள் எழுவது இயல்பே. எனினும் இவற்றையெல்லாம் தொலைத்துவிட்டு வாழ்கிறோம் என்பதினை உணர்தலுக்குக்கூட நேரமற்ற, இயந்திர மனிதர்களாகத் திரிகிறோம். அடுத்த தலைமுறைக்கு என்ன மிச்சம் வைத்துள்ளோம் அல்லது விட்டுச் செல்கிறோம் என்ற குற்றவுணர்ச்சி ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இயல்பாக எழ வேண்டும். என்றாலும் முகமூடி அணிந்துகொண்டு வாழ்வதில் ஒருவரை ஒருவர் மிஞ்சுகிறோம்.

நீண்டு வளர்ந்த புல்வெளிகள், அதன்மீது சிறிது நேரம் தங்கிச்செல்லும் காலைப் பனித்துளிகள், கிராமத்து ஆயாக்கடைகளில் கிடைக்கும் சூடான இட்லிகள், ஊரைக் கடந்து ஓடும் ரயில்கள், வேகமாகக் கடக்கும் ஆற்றின் நீர், செரிமானத்திற்கு உதவும் வெற்றிலை, தமிழரின் வீரத்தினை எடுத்துரைத்து மார்தட்டிக் கொள்ளும் மீசை என அனைத்தினையும் பட்டியலிட்டுச் செல்கிறார். மனம் என்பது அழமான கிணறு. அவற்றின் அடியில் புதையுண்ட பொருட்களைத் தூர்வாரும் வேலையை என் விருப்பத்திற்கும் போற்றுதலுக்கும் உரிய பாடலாசிரியர் நா. முத்துக்குமார் இப்பாடலை வாழ்வியலின் சிலையாக வடித்துள்ளார்.

இது நகரச் சாலைகளின் நெருக்கடிகளிலும் அடுக்குமாடிகளிலும் வாடகை வீடுகளிலும் தங்கி, வாழும் மாநகரத்து வாசிகளின் வாழ்வியலை எடுத்துரைக்கிறது. அவர்களின் ஆழ்மனத்தின் உணர்வுகளை மீட்டெடுக்கும் போராட்டமாக இப்பாடல் அமைந்துள்ளதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள். கிராமத்துத் தெருக்களில் உண்டு முடித்தபின் படுத்துறங்கும் குழந்தைகள், நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டும் நிலவை வீட்டிற்குள் அடைத்து மகிழ்ச்சிக் கொள்ளுதல் என்பதும் அலாதியானது. நட்சத்திரத்தையும் நிலவையும் எண்ணிக்கொண்டே உறங்கிவிடும் குழந்தைகளின் உலகத்தில் நட்சத்திரங்களையும் நிலவினைத் தவிர யாருக்கும் இடமில்லை. இன்றோ, ஏ.சி அறைகளிலும் மின்விசிறியின் கீழும் உறங்கிக்கொண்டு, செல்போன் உற்றுநோக்கலில் விழிபாதிப்பு ஏற்பட்டு, கண் கண்ணாடி அணிந்து உறங்கும் குழந்தைகள் ஏராளம். இவற்றைத் தவறவிட்டு, குழந்தைகளிலிருந்து வளர்ந்து கொண்டிருந்தவர்களின் வாழ்வும் ஏக்கம் நிறைந்ததாகவே உள்ளது.

செல்போன்கள், இதயத்தின் அருகிருக்கும் மற்றொரு இதயமாகிப் போன சூழலில் அவை நீக்கமற எங்கும் நிறைந்துள்ளன. ஒருவருக்கே இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட செல்போன்கள் தேவை என்கிற நிலையில் வாழ்கிறோம். இதனால், உளவியல் ரீதியாக, மன அமைதியற்று மகிழ்ச்சியை இழந்துகொண்டிருக்கும் தலைமுறையை இன்று காணநேர்கிறது. இதனை உணர்த்தும் பாடலாசிரியர்,

கூவும் செல்போனின் நச்சரிப்பை அனைத்துக் கொஞ்சம்
சில்வண்டின் உச்சரிப்பைக் கேட்போம்

என்கிறார். செல்போனினைப் பலரும் விட்டொழிக்க நினைத்தாலும் சமூகமும் மதிப்பீடுகளும் அவற்றை விடுவதாயில்லை. அதனால்தான் என்னவோ செல்போனிலிருந்து வரும் ஒலியினை, ‘நச்சரிப்பு’ என்று சாடுகிறார். அதேசமயத்தில், சில்வண்டின் ரீங்கார ஒலியினை அதன் உச்சரிப்பு மொழியாகக் கேளுங்கள் என முன்மொழிகிறார்.

கிராமத்துத் தெருக்களில் இறங்கி நடக்கையில், கால்களில் செருப்புகளை அணிந்து கொண்டு மண்ணிலிருந்து விலகி அந்நியப்பட்டு விடுகிறோம். இதனால் சில வேளைகளிலாவது, வெறும் காலில் மண்ணோடு பேசி பேசிடுவோம் என்றும் மழலைகளாகி, கவலைகளைத் துறப்போம் என வாழ்வியலை எடுத்தியம்புகிறார்.

நகரத்தைத் துறந்து, கிராமத்து வாழ்வியலைக் கைக்கொள்ளும் மனிதருக்கு இயல்பை விட மிகைப்படுத்திக் கூறப்படும். இதனை ஆபூத உவமை என்பர். அவ்வடிப்படையில் பாடலாசிரியர்,

ஆலமரத்துக்கு ஜடைகள் பின்னித்தான் பூக்கள்
வைக்கலாம் என்றும்
ஊரோரம் அய்யனாரிடம் கத்தி வாங்கித் தான்
பென்சில் சீவலாமே…

என்றும் முன்மொழிகிறார். குழந்தைகள் ஆலமரத்தின் விழுதுகளில் தொங்கிக்கொண்டு விளையாடுவதின் வழியாகப் பல்வேறு குறும்புகளைச் செய்வார்கள். அதனை மேற்கண்ட வரிகளின் மூலமாக நினைவூட்டுகிறார். அதேவேளையில், கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் கற்பதின் அவசியம் குறித்தான கல்விச்சிந்தனையின் வெளிப்பாடாக, ஊரைக் காக்கும் அய்யனார் சிலைகளின் கத்திகளை வாங்கி, பென்சில்களைச் சீவி கல்வி கற்கலாம் என அறிவுரை புகட்டுகிறார். அதாவது, வன்முறையைத் துறந்து, அறிவாயுதம் ஏந்துவோம் என்கிற டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் கூற்றின் வெளிப்பாடாக இதனைக் காணலாம். கல்வியே ஒருவருக்குப் புதிய வெளிச்சத்தை ஏற்படுத்தவல்லது. ஆழமான கல்வியறிவும் அகன்ற பகுத்தறிவும் ஒருவரது பலமாக அமையும் நேரத்தில் எத்தனை தடைகள் வந்தாலும் சுமந்து செல்லும் துணிவு இயல்பானதாகி விடும்.

அம்மாவின் கை பக்குவத்திற்கும் கிராமத்துச் சமையலின் வாசனைக்கும் என்றுமே எதுவும் ஈடாகாது. நகரத்து உணவகங்களும் நவீன இயந்திரங்களின் சமையல் உணவுகளும் தீமை பயக்கும் என்பது நிதர்சனமே. அஞ்சறைப் பெட்டியிலுள்ள மருத்துவ குணமுள்ள பொருட்கள், அம்மியில் அரைக்கும் பக்குவம், நாட்டுக்கோழிக் குழம்பின் மருத்துவ குணம் / மணம் ஆகியவற்றைத் தமிழரின் உணவியல் சார்ந்தும் பதிவு செய்கிறார்.

சாதி, மதம் கடந்து மனித உயிர்களிடத்து மட்டுமின்றி, விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிர்களிடமும் அன்பு செலுத்துவது கிராமத்து மனிதர்களின் இயல்பு. கறைபடியாத அன்பும் பாசமும் இன்று சற்று மங்கிக் காணப்படுகிறது. இது கிராமம் நகரமாக, மாநகராமாக மாறிக்கொண்டிருப்பதின் விளைவே என எண்ணத் தோன்றுகிறது. ஆயின், முன்னர் கிராமத்து மனிதர்களின் வாழ்வியலில் ஆடு, மாடு, நாய், பூனை போன்ற விலங்குகள் முதன்மை இடத்தைப் பெறும். அதன்மீதான, அன்பின் நீட்சியாகக் குடும்ப உறுப்பினராக, அரசு ஆவணங்களிலும் பதிவாக்கும் வெகுளியான, பாசமிகு வாழ்வு இருந்ததைப் பலரும் அறிந்திருக்கவும் அனுபவித்திருக்கவும் கூடும்.

அதேபோன்று, வெளியில் என்று வீடு திரும்பும் குடும்ப உறுப்பினர்களுக்கும் புதிய விருந்தினருக்கும் வருகை தருவோருக்கும் குடிப்பதற்கு நீர் தருவது தமிழ்ச் சமூகப் பண்பாடாகும். தாகத்திற்கு நீர் கேட்கும் முன்னமே மோர் தருவதினையும் பதிவு செய்கிறார். இவர்கள் கள்ளங்கபடமற்ற, “வெள்ளந்தி மனிதர்களாக” இருந்தனர். இன்றோ இம்மனிதர்களின் எண்ணிக்கை சொற்பத்திலும் சொற்பமாக உள்ளது என்பது வருந்ததக்கது. மனிதநேயம் மறைந்து சடங்கின் எச்சமாக இச்செயல்பாடுகள் அமைகின்றன.

நோய்வாய்ப்படும்போது, பேறுகாலச் சிகிச்சைக்கும் வயதும் அனுபவமும் முதிர்ந்த பெண்கள் மருத்துவம் அளிப்பார். ‘முதுபெண்டிர்’ என இலக்கியங்கள் குறிக்கும் கிழவிகளின் (பாட்டி) கை வைத்தியம் நாட்டு மருந்துக்குக் குணமாகும் நோய்கள் அன்று இருந்தன. பேய் பிடித்தவர்களையும் துரத்திடும் மருத்துவமாகக் ‘கை வைத்தியம்’ இருந்தது. இன்று நாட்டு மருத்துவத்தையும் அதன் பயன்களையும் துறந்துவிட்டோம். புதிய மருத்துவமுறைகளோடு புதுவித நோய்களுக்குச் சிகிச்சை பெற்று வருகிறோம். குழந்தைப்பேறு என்பது, ‘சுகப்பிரசவம்’ என்பதைக் கிழவிகள் எளிதாகவே செய்தனர். இன்றோ, மகப்பேறு மருத்துவமனைகள் பெருகி, அறுவைச் சிகிச்சைக்குப் பல ஆயிரங்களைக் கட்டணங்களாக வாங்குகின்றன. மருத்துவத் தொழில்நுட்ப வளர்ச்சி என்கிற பெயரில் நிகழும் கேடுகள் ஏராளம்.

பக்கத்து வீட்டிற்கும் உணவுத்தேவையைத் தீர்க்கும் அளவுக்கு அம்மனிதர்களின் வீட்டில் உணவு தானியங்களும் மனித மனங்களில் பரந்த அன்பும் பாசமும் நிறைந்திருந்தன. இன்றைய சூழலில் அது முற்றும் மறைந்து, “தன்பெண்டு, தன்பிள்ளை சோறு, வீடு” என வாழும் சூழல் நிலவுகிறது. ஆயின், அக்கால மனிதர்கள் பக்கத்து வீட்டுக்கும் சேர்த்து சமைத்த அன்பினைத் தம் பாடலில் பதிவுசெய்கிறார் நா.முத்துக்குமார்.

கதவடைத்துக் கொண்டு யாருக்கும் எதையும் தராமல் தான் மட்டும் உண்டு, தன் குடும்ப நலனில் மட்டும் அக்கறை செலுத்தும் அவலமான சமூகச் சூழலில் நாம் வாழ்கிறோம். தங்கள் வீட்டில் சமைத்த உணவுகளைத் தருதல் – பகிர்ந்து கொள்ளுதல் போன்றவை தொல்பழங்கால வேட்டைச் சமூகத்தின் பங்கீட்டு உண்ணுதலின் எச்சமாக இருந்தவை இன்று மாறிவிட்டன. அரிசி, மிளகாய்த் தூள், உப்பு, தீப்பெட்டி எனச் சமையல் பொருட்களைக் கடன் கொடுப்பதும் வாங்கியும் திருப்பிச் செலுத்தியும் வாழ்ந்த பாரம்பரிய கிராமத்து மரபு முற்றிலுமாக அழிந்தது நம் கண்முன்னே நிகழ்ந்த வரலாற்று அவலம்.

இதனை நினைவுகளிலிருந்து தூசிதட்டி எடுத்து, தமிழ்ப் பண்பாட்டின் வெளிப்பாட்டுக் கூறுகளை முன்மொழிந்ததில் பாடலாசிரியருக்கு முக்கிய பங்கு உண்டு. அவரும் கிராமத்துச் சூழலில் பிறந்து, நகரத்தில் கல்வி பயின்று, மாநகரத்தில் வாழ்ந்து மறைந்தவர் என்பது வாழ்வியலை எளிதாகப் படம்பிடிக்க உதவியுள்ளது. அவருடன் கைக்குலுக்கிக் கொள்ளுதலில் மனம் பெருமகிழ்ச்சி.


ஜெ.மதிவேந்தன்,
முனைவர் பட்ட ஆய்வாளர்.
சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை – 600 005.

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்