மனிதக் கூர்ப்புப் பாதையில் புதிய கிளை
லுசோனென்சியஸ்
கனி விமலநாதன் B.Sc
2019 ஏப்ரலில் பிலிப்பைன்ஸ் விஞ்ஞானிகள் புதியதாக ஒரு
மனிதவினத்தின் சுவடுகளைக் கண்டு பிடித்து உலகினரைப் பரபரப்புக்கு
உள்ளாக்கினார்கள். மனிதக் கூர்ப்புப் பாதையிற் தோன்றி, அழிந்து போன
இன்னொரு 'கோமோ' உயிரினத்தைக் கண்டுபிடித்த அவர்கள், அவ்வினத்திற்கு 'கோமோ
லுசோனென்சிஸ்'
(Homo Luzonensis)
என்று பெயரும் இட்டிருக்கிறார்கள். இங்கு 'கோமோ' என்பது மனிதர்
என்பதைக் குறிக்கின்றது.
உலகிற் பல கோமோ (மனித) இனங்கள் தோன்றியிருந்த போதிலும், 200,000 ஆண்டு
முன்னர் புவியின் ஆபிரிக்கப் பகுதிகளில் தோன்றிய, 'புத்திசாலி மனிதர்'
எனப் பொருள்படும் கோமோ சேப்பியன்கள் என்கிற தற்கால மனிதவினம்தான் இன்று
தப்பி இருக்கின்றது. கூர்ப்பின் வழியிற் கோமோ சேப்பியன்கள் தோன்றுகையில்
வேறுபல மனிதவினங்களும் காலத்திற்குக் காலம் தோன்றியிருந்த போதிலும்
இன்று அவை அழிந்து விட்டன. அவ்வினங்களின் சுவடுகளை எங்களது ஆய்வாளர்கள்
தேடிக் கண்டு பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவ்வழியிற் புதிதாக
இனம் காணப்பட்ட, அழிந்து போன மனித இனம்தான் இந்த கோமோ லுசோனென்சிஸ்
என்கிறார்கள். இவ்வினத்தை அடையாளம் கண்ட விபரத்தை அறிய முன், உயிரினக்
கூர்ப்பு வரலாறினை மிகச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம்.
1859ம் ஆண்டு சாள்ஸ் டார்வின் கூர்ப்புப் பற்றிய தனது கொள்கையைக்
கூறியதில் இருந்து விஞ்ஞானிகள் மனிதத் தோன்றல் பற்றிய ஆய்வுகளைத் தேடத்
தொடங்கினர். அன்றில் இருந்து மனிதரின் கூர்ப்புப் பற்றிய பல தெளிவுகள்
வந்து கொண்N;ட இருக்கின்றன. கூர்ப்புப் பற்றிய ஆய்வுகள் உலகம் முழுவதும்
பரந்து விரிந்து போக, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதான பொதுமை
ஒன்றினை விளைவுகளிற் காண முடியவில்லை. ஆனாலும் ஒரு இறுக்கமான பாதையைக்
கூறுகின்றார்கள்.
4.6 பில்லியன் ஆண்டு முன்னர் தோன்றிய புவியில், உயிரினங்கள் 3800
மில்லியன் (3.8 பில்லியன்) ஆண்டு முன்னர் நுண்ணுயிர்களாகத் தோன்றின.
இந்த நுண்ணுயிர்கள் கால ஓட்டத்தில் சூழலுக்கு ஒப்பக் கூர்ப்படைந்து
பெரிய உயிரினங்கள் ஒவ்வொன்றாகத் தோன்றத் தொடங்கின. கிட்டத்தட்ட 325
மில்லியன் வருடங்களின் முன்னர் முலையூட்டிகள் உலகில் உலவத் தொடங்கின.
இப்படியாகத் தோன்றியவைதான் டைனோசர்கள். 63 மில்லியன் வருடங்களின்
முன்னர், புவியில் ஏற்பட்ட பாரிய சூழல் மாசு காரணமாக டைனோசர்கள் உட்பட,
உலகின் 90 வீதமான உயிரினங்கள் முற்றாகவே அழிந்து போயின. ஆக்காலத்தில்
மனிதவினம் தோன்றியிருக்கவில்லை. அதன் பின்னர் புவியில் இரண்டாம்
கட்டமாகப் புதிய வகையான உயிரினங்கள், புதிய சூழலுக்கு அமைவாக தோன்றத்
தொடங்கிப் புவியெங்கும் பல்கிப் பெருகிக் கொண்டு வந்தன. கிட்டத்தட்ட 20
மில்லியன் ஆண்டு முன்னர் பழைய உலகக் குரங்குகள்
(Old World Monkey)
என்ற உயிரினம் கூர்ப்பின் பாதையில் தோன்றியது.
இந்தப் பழைய உலகக் குரங்கு என்ற உயிரினத்தில் இருந்து மனிதர்
தோன்றுவதற்கான முதலாவது மாற்றம் நடக்கின்றது. அந்த மாற்றத்தின்
காரணமாகப் பிந்நாட்களில் 173க்கும் அதிகமான உயிரினங்கள் இதிலிருந்து
தோன்றின. பழைய உலகக் குரங்குகள் வாழ்ந்த காலத்தில் சூழல் மாற்றத்தின்
காரணமாக, ஆபிரிக்காவின் பெரும் பகுதிகளில் காடுகள் குறைந்து பெரும்
புதர்கள் பெருகின. இதனால் மரங்களில் தாவித்தாவி தங்களின் வாழ்க்கையை
நடத்த வேண்டிய அவசியம் பழைய உலக குரங்குகள் சிலவற்றிக்குத் தேவையற்றுப்
போகின்றது. அதனால், வாலின் அவசியம் அவற்றிக்கு தேவையற்றுப் போக,
மெதுமெதுவாக அவற்றிற்கு வால் இல்லாது போகிறது. மேலும் அவற்றின்
உடல்வாகும் தேவைகளுக்கு ஏற்ப இரண்டு கால்களின் நடக்க, ஓடக் கூடியதாகவும்
அமைந்து விடுகின்றது. இருப்பினும், மரங்களில் வேகமாக ஏறக் கூடிய
தன்மையும் கொப்புக்குகக் கொப்பு இலாவகமாகத் தாவக் கூடியனவாகவும் அவை
இருந்தன. இப்படிப் பழைய உலகக் குரங்குகளில் இருந்து தோன்றிய எல்லா
உயிரினங்களையும் பொதுமையாக 'கோமினோய்டை'
(hominoidea)
என்று கூறுகிறார்கள். இந்தக் கோமினோய்டை குடும்பத்துள் மனிதக்
குரங்குகள், சிம்பன்சிகள், கொரில்லாக்கள் என்பவற்றுடன் மனிதர்களின்
இனக்குடும்பத்தின் ஆரம்பமான 'கோமினிட்'
(hominids)
என்கிற வகுப்பும் சேர்ந்துள்ளது. இதிலிருந்தொரு விடயம்
தெளிவாகின்றது, மனிதர்கள் மனிதக் குரங்குகளில் இருந்து வந்தவர்கள் இல்லை.
உண்மையில் சிம்பன்சிகள் மனிதக் குரங்குகள் என்பவை மனிதரின் சகோதர
வழித்தோன்றல்கள் ஆகும். இந்த கோமினோய்டை குடும்பத்தில் 22 உயிரினங்கள்
இருந்திருக்கின்றன.
இனி அடுத்த கட்டமாக கோமினிட்களில் இருந்து அஸ்றலோபிதிக்கஸ்
(Australopithecus)
என்றொரு இனக்குடும்பம் தோன்றுகிறது. இவை 4.4 – 1.7 மில்லியன்
ஆண்டு முன்னரான காலப் பகுதியில் வாழ்ந்தன என்கிறார்கள். இந்த
அஸ்றலோபிதிக்கஸ் இனத்தில் இருந்து ஒரு முழுமையில்லாத எலும்புக்கூட்டுப்
படிவங்களை ஆய்வாளர்கள் எடுத்திருந்தார்கள். இவ்வெலும்புகள்
இங்கிலாந்தின் லண்டன் இயற்கை அருங்காட்சியகத்தில் பத்திரமாக, சகலரது
பார்வைக்குமாக வைத்திருக்கிறார்கள். மரத்தில் இருந்து விழுந்ததினால்
வந்த காயத்தால்தான் இந்த 3அடி உயரமான எமது முன்னய இனத்தவள்
இறந்திருந்தாள் எனக் கண்டு பிடித்தவர்கள், அவளுக்கு 'லூசி' (டுரஉல)
என்று பெயருமிட்டிருக்கிறார்கள்.
(கிடைத்த
எலும்புகளைக் கொண்டு விஞ்ஞானிகள் வரைந்து கொண்ட 'லூசி'யின் மாதிரிப்
படத்தினை அருகிற் காண்கிறீர்கள்.)
அடுத்த கட்டமாக, லூசியின் இனமாகிய அஸ்றலோபிதிக்கஸ் குடும்பத்தில்
இருந்து மனிதர் என்ற பொருள் கொண்ட கோமோ
(Homo) என்ற இனக் குடும்பம் ஆபிரிக்காவில் பரிணாமமடைகிறது.
முதலில் 1.8 மில்லியன் ஆண்டு முன்னரான காலப்பகுதியில் கோமோ இரெக்சஸ்
என்ற ஆதிமனிதர் தோன்றுகின்றனர். இவர்கள் முற்றாகவே நிமிர்ந்து
விட்டார்கள். இலகுவாக மரங்களில் ஏறக் கூடிய தன்மையையும், மரத்தில்
கொப்பு விட்டுக் கொப்பு தாவும் வல்லமையையும் புதிதாக வந்த, நிமிர்ந்த
உடலப்பால் இழந்து விட்டார்கள். தமது முன்னவர்களை விடவும் நன்கு
உயர்ந்தும் விட்டார்கள். இவர்களின் மூளையின் பருமனும் முன்னவர்களை விடப்
பெரியதாகி விட, மூளைவலுக் கொண்டவர்களாக மாறியதால் சிறிது சிறிதாகப்
புவியினை ஆளத் தொடங்கினார்கள். அதன் முற்படியாக ஆபிரிக்காவை விட்டுச்
சிறு சிறு குழுக்களாக வெளியேறத் தொடங்கினார்கள். ஐநூறுக்கும்
அதிகமானோரைக் கொண்ட குழுக்களாக அவையிருந்தன.
800,000 ஆண்டு முன்னராக ஆபிரிக்காவில் இருந்து சில கோமோ இரெக்சசுக்கள்
அதாவது ஆதிமனிதர்கள் வெளியேறுகிறார்கள். அவர்களிற் சிலர்
ஐரோப்பாவுக்கும் வேறுசிலர் சைபீரியப் பகுதிகளுக்கும் இடம்பெயர்ந்தார்கள்.
காலமும் சூழலும், அவர்களது வாழ்விடத் தேவைகளும் அந்த ஆதிமனிதர்களைச்
செப்பனிட, கிட்டத்தட்ட 300,000 ஆண்டு முன்னராக அவர்கள் புதிய மனித
இனங்களாக மாறுகின்றார்கள். இம்மாற்றங்களின் இறுதியில் ஐரோப்பாவுக்குள்
சென்றவர் 'கோமோ நியாண்டத்தல்' மனிதர்களாக மாற்றிவிடுகின்றனர், சைபீரியப்
பகுதிகளுக்குள் சென்றவர்கள் 'கோமோ டெனிசோவன்' என்ற மனிதர்களாக மாறி
விடுகின்றனர். ஆபிரிக்கப் பகுதிகளில் இருந்தவர்களும் மெதுமெதுவாகக்
கூர்ப்புக்குள்ளாகி 200,000 ஆண்டு முன்னர் கோமோ சேப்பியன்கள் என்கிற 'புத்திசாலி
மனிதர்' ஆகிவிடுகிறார்கள். இந்த கோமோ சேப்பியன்கள் ஆபிரிக்காவில்
இருந்து சிறிது சிறிதாக உலகின் பல பகுதிகளுக்கும் சென்று இன்றுள்ள
மனிதர்களாக இருக்கின்றார்கள். ஆனால் கோமோ நியாண்டத்தல்கள், கோமோ
டெனிசோவன்கள் இரண்டும் கிட்டத்தட்ட 30 ஆயிரம் ஆண்டு முன்னராகப் புவியில்
நின்றும் முற்றாகவே அழிந்து விட்டன. கோமோ நியாண்டத்தல்கள், கோமோ
டெனிசோவன்கள் இரண்டும் எங்களின் முன்னவர்கள் இல்லை. சகோதர மனித
இனத்தவர்களே.
இந்த முடிவுகளை அந்தந்தப் பகுதிகளில் பெற்ற எலும்புக் கூட்டுப்
படிவுகளில் இருந்து எடுத்துக் கொண்டார்கள். ஆனால் ஆச்சரியமான விடயம்
என்னவெனில் மனிதவினம் தோன்றுவதற்கும் வாழ்வதற்கும் மிகப் பொருத்தமான
சூழலைக் கொண்டிருந்த ஆசியப் பகுதிகளில் எலும்புக் கூட்டுப் படிவுகளோ,
அல்லது மனித உடம்பின் கூறுகளோ எதுவும் கிடைக்கவில்லை. இதற்குக் காரணம்
ஆய்வாளர்களின் ஆய்வுகள் உலகம் முழுவதுக்குமான விரிவாக்கத்தைப் பெறாது
இருந்திருக்கலாம். இப்பொழுதுதான் ஆசியர்களும் மற்றவர்களுடன் இணைந்து
தமது பகுதிகளில் ஆய்வுகளைச் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். விளைவாக,
அண்மையில் திபெத்திய மலைக் குகைகளில் டெனிசோவன்களின் எலும்புகள்
கிடைத்து ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தியிருந்தது. அதன் தொடர்ச்சியாக
இப்போது பிலிப்பைன்ஸ்சில் இனம் காணப்பட்ட புதிய மனிதவினத்தின் தடயங்கள்.
இனி, லுசோனென்சியஸ் விடயத்திற்கு வருவோம். பிலிப்பைன்ஸ் தீவுகளில் 'லுசோன்'
என்ற இடத்திலுள்ள 'கால்ஓ' குகைகளில் பிலிப்பைன்ஸ், பிரான்ஸ்,
அவுஸ்திரேலியா ஆய்வுக்குழுவினரின் அகழ்வாய்வின் போது, 2007 மே மாதம்
5ம் திகதி சில எலும்புகளில் புதை வடிவங்கள் (கழளளடைள) அகப்பட்டன.
அதிலொன்று மனிதரின் கால் விரல் எலும்பினை ஒத்திருந்தது. தொடர்ந்த
ஆய்வுகளின் விளைவாக மொத்தம் 7 பற்களும் 6 சிறிய எலும்புகளும்
எடுக்கப்பட்டிருந்தன.
படத்தில்
இருப்பது லுசோனென்சியஸ்சின் எடுக்கப்பட்ட MT3 என இனம் காணப்பட்ட கால்
எலும்பு. பன்றி, மான் போன்ற விலங்குகளின் எலும்புகளுடன் இருந்து
எடுக்கப்பட்ட இந்த ஒற்றை எலும்புதான் தொடர்ந்த ஆய்வுகளின் பயனாக
எங்களுக்கு லுசோனென்னியஸ் என்ற மனிதவினத்தை 2019 ஏப்ரலில் அடையாளம்
காட்டியது. இதுவரையில் எடுக்கப்பட்ட 6 சிறிய எலும்புகளும் 7 சிறிய
பற்களும் மொத்தம் 3 லுசோனென்சியஸ்களின் உறுப்புகளாக இருக்கும்
என்கிறார்கள். ஒரு சிறிய எலும்பினைக் கொண்டு, டிஎனஏயின் உதவியுடன்
இவ்வாய்வின் வெளிபடபாடுகள் சாத்தியமாக இருந்தன. இதுவரையிலான ஆய்வுகளின்
அடிப்படையில் ஆய்வாளர்கள் லுசோனென்சியஸ் மனிதவினம் பற்றிக் கூறும்
விபரங்களைத் தெரிந்து கொள்வோம்.
படத்திற்
காட்டப்பட்டிருப்பவை ஆய்வுகளின் பயனாகப் பெறப்பட்ட லுசோனென்சியஸ்
மனிதர்களின் பற்களில் சில.
இவர்கள் எங்கள் முன்னோர் அல்லாத, மனிதருக்குச் சகோதரமான, 3 அடி உயரமான
மனிதர்கள். கிட்டத்தட்ட 60,000 ஆண்டுக்கும் 55,000 ஆண்டுக்கும் முன்னர்
இருந்த காலப்பகுதியில் வாழ்ந்திருக்கின்றனர். இவர்களின் MT3 என்ற,
கண்டெடுக்கப்பட்ட கால்விரல் எலும்பு, எங்களது கால்விரல்கள் போன்று
நேராக இல்லாமல் சற்று வளைந்து இருந்தது. இவ்வமைப்பு இவர்கள்
அஸ்றலோபிதிக்கஸ் இனத்தினைப் போன்று இலாவகமாக மரங்களில் எறும் வல்லமை
கொண்டவர்கள் எனக் கூறுகின்றது. இவ்வெலும்புகள் கிடைக்கப்பட்ட இடங்களில்
இருந்து பெற்ற மிருகங்களின் எலும்புகளில் இருந்த வெட்டுக் காயங்கள்,
இவர்கள் கூரான ஆயுதங்கள் பாவிக்கத் தெரிந்தவர்கள் என்பதைக் காட்டுகிறது
என்கிறார்கள். கிடைக்கப் பெற்ற இவ்வினத்தின் எலும்புகள், பற்கள்
என்பவற்றில் இருந்து இன்னமும் இவர்களின் உருவ அமைப்பினை ஆய்வாளர்களால்
வரைய முடியவில்லை. பிலிப்பைன்சின் இந்த இடத்திற்கு 60,000 ஆண்டு
முன்னராக ஆபிரிக்காவில் இருந்து புலம் பெயர்ந்து வந்த கோமோ சேப்பியன்களே,
இத்தீவினுள் தனிமையாக்கப்பட்டு, உணவுத் தட்டுப்பாட்டின் காரணமாக
இப்படிச் சின்ன மனிதர்களாக மாறியிருக்கலாம் என்றொரு ஆரம்பக் கருதுகோளினை
இன்று முன்வைக்கிறார்கள்.
இதற்கு ஆதாரமாக இன்னொரு சுவையான ஆதாரத்தையும் கூறுகின்றார்கள். 2003ம்
ஆண்டில் இந்தோனேசியாவின் புளோரஸ் என்ற தீவில் ஒரு முழுமையான எலும்புக்
கூடு உட்பட 9 பேரின் எலும்புகள் சிலவற்றை ஆய்வாளர் கண்டெடுத்தார்கள்.
அதிலிருந்து 'கோமோ புளோறிசின்சிஸ்'
(homo floresiensis)
என்ற 1.1 மீற்றரர் (கிட்டத்தட்ட 3 அடி 7 அங்குலம்) உயரமான
இன்னொரு மனிதவினத்தை அடையாளம் கண்டார்கள். கீழோ நீங்கள் காண்பது
ஆய்வாளர்கள் காட்டும் கோமோ புளொறிசின்சிஸ் மனிதன் ஒருவரின் மாதிரிப்
படம். தேவை கருதி, கோமோ புளோறிசின்ஸ் பற்றியும் சற்றுத் தெரிந்து
கொள்வோம்.
ஆரம்ப
ஆய்வுகளின்படி, இவர்கள் 12,000 ஆண்டு முன்னர் வரை அப்பகுதிகளில்
வாழ்ந்து அழிந்திருக்கலாம் என்றார்கள். பின்னராக, அவர்களின் எலும்புகள்
கிடைத்த இடங்களில் இருந்த கல்லாயுதங்களின் அடிப்படையில் அவர்களின்
காலத்தை 50,000 வருடங்கள் முன்னராகக் கொண்டு போயிருந்தனர். தொடர்ந்த
ஆய்வுகள், உய்த்தறிதல்கள் என்பவற்றின் ஊடாக, இவர்கள் ஆபிரிக்காவில்
இருந்து 700,000 ஆண்டு முன்னராக இந்தோனேசியாவிற்கு வந்த அஸ்றலோபிதிகஸ்
குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் கூர்ப்பால் தோன்றியவர்களாக இருக்கலாம்
என்கிறார்கள். இந்த அஸ்றலோபிதிகஸ் இனத்தவர் இந்தோனேசியப் பகுதிகளுக்கு
வருகையில் ஆபிரிக்காவில் கோமோ சேப்பியன்கள் தோன்றியிருக்கவில்லை எனவும்
கூறுகின்றார்கள்.
ஆக, இதுவரையில் குறிப்பிடத்தக்க அளவில் 6 கோமோ இனங்கள் எனப்படும்
மனிதவினங்கள் புவியில் தோன்றிய போதும் நாங்கள் மட்டுமே இப்போது தப்பி
வாழ்கிறோம் என்பது தெரிகின்றது.
இனி இன்னொரு விடயத்தைப் பற்றிச் சிந்திப்போம். கிடைத்த ஆதாரங்களைக்
கொண்டு மனிதவினம் ஆபிரிக்காவிலேதான் ஆரம்பமாகிறது என்ற முடிவுக்கும்
ஆய்வாளர்கள் வந்திருக்கிறார்கள். உண்மையில் ஆசியப் பகுதிகளில் மனிதச்
சுவடுகளைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் பல்வேறு காரணங்களினால்
குறிப்பிடப்படுமளவுக்கு நடந்ததில்லை என்பதையே காரணமாகக் கூறலாம். ஆனால்,
இந்தோனேசிய மனிதன், பிலிப்பைன் மனிதர்கள், திபெத்தில் கண்டெடுக்கப்பட்ட
டெனிசோவன் எலும்புகள் என்பவை ஆசியப் பகுதிகளுக்கான அந்நாள் மனிதர்
நடமாட்டங்களைக் காட்டத் தொடங்கியுள்ளது. இது, மனிதர்களின் புதிய வரலாறு
ஒன்றினைக் கூறுவதற்கான ஆரம்பம் என எண்ணிட வழியொன்றினைச் சமைக்கின்றது.
ஏனெனில் இப்பொழுதுதான் ஆசியப் பகுதிகளில் மனிதச் சுவடுகள் மெதுமெதுவாகக்
கிடைக்கப் பெறுகின்றன. இதன் தொடர்ச்சியானது, ஒருவேளை மனித இனத்தின்
ஆரம்ப இடமாக ஆசியாவைக் காண வைத்திட வாய்ப்புண்டு.
அப்படியாக வருமாயின், மனித வரலாற்றினையே மாற்றிப் பார்க்க வேண்டிய
கட்டாயத்துக்குள் வர வேண்டிவரும். தென்னிந்தியாவின் பல்லாவரம் பகுதியில்
கண்டெடுக்கப்பட்ட 150,000 ஆண்டு பழமையான கல்லாயுதம், 150,000 ஆண்டு
பழமையாக கூடியம் குகைக் கல்லாயுதத் தொழிற்சாலை, 500 பேருக்கும்
அதிகமானவர்கள் ஒதுங்கித் தங்கி வாழப் போதுமான கூடியங்குகைகள் என்பவை
இருந்த போதிலும் மனிதச் சுவடுகளோ அல்லது புதை வடிவங்களோ இல்லாமையால்
ஆசியாவில் மனிதவினத்தின் தொன்மையகை; காண முடியாமல் இருக்கின்றது,
இருந்தது. ஆனால் நடப்புகள் வேறு விதமாக அமைந்து கொண்டிருப்பதால்,
எதிர்காலத்தில் மனிதர்கள் தோன்றிய இடம் குமரிக்கண்டம் எனவும், அதனூடாக
தமிழரின் தொன்மை என்பவற்றிக்கான ஆதாரங்களையும் கூட அவை திரட்டித் தரலாம்,
தரும் இறுதியில் குறிப்பாக, 'தமிழ்ஆதேர்ஸடெட்கொம்'மில் தொடர்ச்சியாக
வரவிருக்கும் 'மனிதர் வரலாறு' என்ற தொடரில் இன்று கூறியவற்றினைத்
தேவையான அளவில், சற்று விரிவாகக் கூற இருக்கிறேன். இவ்வகை விபர அறிவு
எங்களுக்குத் தேவை என்பதால், எளிய தமிழில் வரப்போகும் அத்தொடர்
உங்களுக்கு அறிவியற் சுவையினைக் கட்டாயம் தரும் என்பது எனது நம்பிக்கை.
புரிதற் தொடர்புகளுக்கும் உற்சாகப்படுத்தல்களுக்கும் தமிழ்ஆதேர்ஸ்.கொம்
உடனோ அல்லது என்னுடனோ (847 782 2827) தொடர்பு கொள்ளலாம்.
நன்றி,
அன்புடன்,
கனி விமலநாதன்.

உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|