எட்டுக்குள்ள…
ஜெ.மதிவேந்தன், முனைவர் பட்ட ஆய்வாளர்.
மனித வாழ்க்கைத் திட்டமிட்டு அமையாதது போல் தோன்றும். ஆனால்,
இயற்கையின் படைப்பில் அவை பருவ காலங்களுக்கு ஏற்றார் போலவும் பரிணாம
வளர்ச்சிக்கு ஏற்றார் போலவும் மாறிக்கொண்டு இருக்கிறது என்பதே உண்மை.
இதை அறியாது, ஏதேதோ
வலைகளுக்குள் சிக்குண்டு,
திசை அறியாத பறவைபோல அங்குமிங்கும் ஓடிக்கொண்டு, அலைகிறது மனித இனம்.
பயணங்களில் வேகமாக நம்மோடு பயணித்து வரும் மரம், செடி, கொடிகளைப் போல்
வாழ்க்கைப் பயணத்தில் இன்பம், துன்பம், மகிழ்ச்சி, அழுகை போன்றவை
பயணிக்கின்றன. இவையின்றி, பயணம் இனிமையாக அமையாது. இதை உணராது வாழ்வை,
‘கால் போன போக்கில்’ வாழ்வதென்பது, இறகுகளை முறித்துக்கொண்டு
பாறாங்கற்களைத் தூக்கிச் சுமப்பதற்கு சமம்.
இவ்வடிப்படையில், 1995ஆம் ஆண்டு இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில்
வெளிவந்த ‘பாட்ஷா’ படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. அதற்குக்
கதைக்களம், திரைக்கதை அமைப்பு ஒருபுறம் பலம் சேர்த்தது. எனினும்
இசையமைப்பாளர் தேவாவின் பின்னணி இசைக் கூடுதல் பலத்துடன் அமைந்தது.
அப்படத்தின் பாடல்களும் பாடல் வரிகளும் அதற்கானப் பின்னணி இசையும்
மேலும் சிறப்பைக் கூட்டியது. இந்த மூவர் கூட்டணி, பாட்ஷா என்னும்
திரைப்படத்திற்குப் பெரிதும் உதவியது. அதற்கேற்றார்போல், சிறப்பாக
நடித்த தமிழ்த்திரை உலகில் ‘சூப்பர் ஸ்டார்’ எனக் கொண்டாடப்பெறும்
ரஜினியின் நடிப்பும் இப்படத்தை மேலும் மெருகேற்றியது.
இப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதினார். அவற்றில் கூடுதல்
சிறப்பினைப் பெற்ற பாடல் அதுவும் தத்துவப் பாடலாக அமைந்தது. மனித
வாழ்வியலை உளவியல் பாங்கில் பிரித்து, பகுத்து வயதிற்கேற்றவாறு
மனிதர்களின் செயல்பாட்டினை விளக்கி நிற்கும். ‘ரா…ரா…ரா….. ராமையா’
எனும் பாடல் புதிய முயற்சியிலானப் பாடலாக மிளிர்கிறது. குறிப்பாக,
‘எட்டு’ என்னும் எண் அடிப்படையில் மனித வாழ்வை பகுத்துக் கூறுகிறார்.
அவை ஒன்று தொடங்கி, எட்டு எண்களோடு நிறைவடைகிறது. குழந்தைப் பருவம்
தொடங்கி, முதுமைப் பருவம் வரை பட்டியலிட்டு வரையறுத்து அமைந்துள்ளது.
மனிதர்களுக்கு அறிவுறுத்தும் பாங்கில் அமைந்த தத்துவப் பாடல்கள்
மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. அதே அடிப்படையில், அவை அம்மக்களின்
வாழ்வியலோடு இணைந்து பயணிப்பதும் அவசியமாகிறது. இப்பாங்கில், எளிமையான
சொற்களைக் கொண்டு அமைந்த இப்பாடல் எடுப்பு (தொகையறா), தொடுப்பு
(பல்லவி), முடிப்பு (சரணம்) என்னும் அமைப்பில் படைக்கப்பட்டுள்ளது. இது
கதைச்சூழலுக்கேற்ப அமைந்துள்ளது என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
இப்பாடலின் தொகையறா, குறித்து உரையாடுவது இங்கு அவசியமாகிறது.
ஒரே ஒரு சந்திரந்தான் இரவுக்கெல்லாம்
ஒரே ஒரு கதிரவந்தான் பகலுக்கெல்லாம்
ஒரே ஒரு பாட்ஷாதான் ஊருக்கெல்லாம்…
என்னும் வரிகள் நிலவோடும் சூரியனோடும் கதாநாயகன்
ஒப்புமைபடுத்தப்பட்டுள்ளார். சந்திரன் – நிலவு; கதிரவன் – சூரியன்
இவற்றுக்கு இணையாக மக்களுக்குள் சிறந்திருக்கும் மனிதர் தான், ‘பாட்ஷா’
எனும் கதாநாயகன் என்பதை உணர்த்த பாடலாசிரியர் இதனைக் கையாண்டுள்ளார்.
இதனை, ஒப்புமை அணி என்பதோடும் இணைத்துப் பார்க்கலாம். நிலவும்
சூரியனும் என்றும் அழியாத்தன்மை கொண்டவை. அதேபோல் கதாநாயகனும்
மக்களுக்கு இரவில் நிலவாகவும் பகலில் சூரியனாக இருந்தும் காப்பார்
என்பது தொகையறாவின் வழி, கூறப்படும் செய்தியாகும்.
பல்லவி என்னும் பகுதியில், தமிழ்மொழிச் சொற்களைத் தாண்டி, தமிழின்
உதிரத்து உதித்தெழுந்ததாக அறியப்படும் தெலுங்குமொழிச் சொல்லைப்
பாடலாசிரியர் பயன்படுத்தியுள்ளார். அது,
“ரா… ரா… ரா…” எனத் தொடங்கி, பல்லவி இறுதியில் “இக்கட ரா…”, என
முடிகிறது. இதற்குப் பொருள் ரா- வா என்பதாகவும் “இக்கட ரா…” – இங்கே வா
என்பதாகவும் இருக்கிறது. அறிவுக்குப் புரியும்படி சில செய்திகளைக்
கூறுகிறேன்; இங்கே வந்து கேட்டுக்கொள்ளுங்கள் என விளக்குகிறார்.
அதன்நீட்சியாக இரண்டு (முடிப்பு) சரணங்கள் அமைகின்றன. அவை, முன்னர்
கூறியது போலவே, மனித வாழ்க்கையை எட்டு, எட்டாகப் பகுத்துக் கூறுகிறது.
அதன் முதல் சரணத்தில்,
முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல – நீ
ரெண்டாம் எட்டில் கல்லாதது கல்வியுமல்ல…
மூன்றாம் எட்டில் செய்யாதது திருமணமல்ல – நீ
நாலாம் எட்டில் பெறாதது குழந்தையுமல்ல…
எனப் பகுக்குகிறார். இதில் மனிதரின் குழந்தைப் பருவம் தொடங்கி, அம்மனித
இனம் தங்களுக்கானக் குழந்தைப்பேறு பெறுவதுவரை ஒரு பகுப்பாகக்
கூறுகிறார். இது கால வயது பற்றிய உளவியல் கூறுகளோடு நோக்குகிறார்.
முதல் எட்டு வயதில் விளையாட்டு என்பது குழந்தைகளுக்கு உடல்
வளர்ச்சிக்கும் மனவளர்ச்சிக்கும் ஏற்ற பருவம். இதனை உணர்ந்தே
பாடலாசிரியர் முதல் எட்டு வயதில் பெரும்பாலும் விளையாட்டுக்கு
முன்னுரிமை தருதல் வேண்டும் என்கிறார்.
இரண்டாவது எட்டானது பதினாறு வயது ஆகும். இவ்வயதில், கல்வி
என்னும் அறிவுச்செல்வம் இன்றியமையாதது. மொழி, கணிதம், அறிவியல், சமூகம்
போன்ற பாடநூல் அறிவும் சமூகப் புலத்திலிருந்து பெறப்படும் அனுபவ
அறிவினையும் கற்கும் அல்லது கற்றுக்கொள்வதற்கு ஏற்ற பருவமாக இவ்வயது
திகழ்கிறது. கல்விதான் மனிதனின் அடுத்தகட்ட வாழ்விற்கு அடித்தளம்.
இதன்வழிக் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகிறார்.
மூன்றாம் எட்டு அதாவது, இருபத்தி நான்கு வயதில் குழந்தைப்
பருவத்தையும் கல்வியையும் கடந்தநிலையில் இல்லற வாழ்வு என்பதும் மனித
உயிருக்கு அவசியமானதாகும். இது வெறும் இனப்பெருக்க உற்பத்தி
மட்டுமன்று. சமூகம் ஒன்றிணைந்து வாழ்வதின் அடிப்படைச் செயல்பாடாகும்.
இரு மணங்கள் இணையாத திருமணங்கள் மணமற்ற பொருட்களைப் போன்றதே. இன்று,
மூன்றாம் எட்டினைக் கடந்த ஆண்களையும் பெண்களையும் காணலாம்.
இது அவர்களின் இல்லற வாழ்வில்
பல்வேறு பிரச்சனைகளுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்குகிறது. இவ்வயது தான்
ஆண், பெண் இணைவிற்கு ஏற்ற பருவமாக உள்ளது. இப்பருவத்தைக் கடக்கும்போது,
ஆண் – முதிர் கண்ணன்களாகவும் பெண் – முதிர்கண்ணிகளாகவும் நிலை
மாறுகின்றனர். அதன் விளைவாக, குழந்தைப்பேறு என்பது பெரும்
சிக்கலுக்குரியதாக மாறிவிடுகிறது. ஆதலால், மூன்றாம் எட்டு
திருமணத்திற்கு உகந்த பருவமாகத் திகழ்கிறது என்பதை உணர்ந்து
வெளிப்படுத்துகிறார்.
நாலாம் எட்டு, முப்பத்திரண்டு வயதானபோது திருமணத்தின் (இல்லற
வாழ்வின்) நீட்சியாக, குழந்தைப்பேறு என்பதும் மனித இனத்தால்
எதிர்பார்க்கப்படுகிறது. ஆணும் பெண்ணும் இணைந்த வாழ்வின் முழுமையான
பொருளாகக் குழந்தைப்பேறு திகழ்கிறது. ஆனால், இன்றைய சூழலில், காலம்
கடந்து நடக்கும் திருமணங்கள், உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றால்
இக்குழந்தைப்பேற்றில் பல்வேறு சிக்கல்களும் பிரச்சனைகளும் உண்டாகின்றன.
இது உளவியல் ரீதியாக, கணவன் – மனைவி, ஆண், பெண் இடையே முரண்பாடுகள்
எழுவதற்கு வாய்ப்பளிக்கிறது. குழந்தைப்பேறு மட்டுமே மனித வாழ்வை
முழுமையடையச் செய்யும் என்பதும் முட்டாள்களின் நம்பிக்கை. குழந்தை
பெற்ற கணவன் – மனைவி உறவு குழந்தைகளைத் தத்து எடுத்துக்கொள்வதன்
மூலமாகவும் பல குழந்தைகளோடு நேரங்களை / காலங்களைச் செலவிடுவதன்
மூலமாகவும் குழந்தைப்பேற்றின் முழுப் பலனையும் பெறலாம் என்பது பலரும்
கண்டடைந்த உண்மை. எனினும் பருவத்தே பயிர் செய்தல், என்பது நன்மை தரும்.
இவ்வாறு முதல் சரணத்தில் விளையாட்டு, கல்வி, திருமணம்,
குழந்தைப்பேறு போன்ற வாழ்வின் முதற்பகுதியை விளக்குகிறார். அடுத்து,
இரண்டாவது சரணத்தில் மனிதனின் பிற்பகுதி வாழ்வினை எடுத்தியம்புகிறார்.
ஐந்தாம் எட்டில் சேர்க்காதது செல்வமுமல்ல – நீ
ஆறாம் எட்டில் சுற்றாதது உலகமுமல்ல…
ஏழாம் எட்டில் காணாதது ஓய்வுமல்ல- நீ
எட்டாம் எட்டுக்கு மேல் இருந்தா நிம்மதியில்ல…
என்று உரைக்கும் பாடலாசிரியர் கல்வி, குழந்தைச் செல்வங்களோடு
பொருட்செல்வமும் வாழ்வினைச் செம்மையாகப் பயணிப்பதற்கு இன்றியமையாதது
என்கிறார். இதனை, “பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை.” என வள்ளுவரும்
“திரைக்கடல் ஓடி திரவியம்
தேடு” என்று ஒளவையும் முற்கூறியுள்ளதை நினைவில் கொள்க.
ஐந்தாம் எட்டான நாற்பது வயதில் பொருட்செல்வம் கையிருப்பில் இல்லை
என்றால், வாழ்க்கை என்ற தொடர் ஓட்டம் தொய்வாகும். திறமையாகச்
செல்வத்தைச் சேகரிப்பதோடு, நேர்மையான வழிமுறையோடு அவை அமைதல் வேண்டும்.
பொருட்செல்வம் ஆடம்பரமாக இல்லாமல், இன்றியமையாததாக இருத்தல் வேண்டும்.
சேமிப்பு என்பது அடுத்தகட்ட நகர்வுக்கும் இனிமையான வாழ்விற்கும்
அடித்தளமாக அமையும். பொருட்செல்வமானது, மழைநீரில் கரையும் உப்பினைப்
போலில்லாது; மழையையே சேமித்து
வைக்கும் பாத்திரமாக இருக்க வேண்டும். பொருளீட்டுதல் என்பது ஆண்
மையமாகவே இருந்த அடிமைச் சமூகத்தில், இன்று பெண்களும் ஈடுபட்டு
பொருளீட்டி குடும்பம், சமூக வாழ்வை உயர்த்துவது என்பது நல்ல
முன்னேற்றமாகும். இதுமுன்னர், இருந்த தாய்வழிச் சமூகத்தின்
மீட்டெடுப்பாகவே கருத வேண்டியுள்ளது. இந்நிலை மேலும் சிறப்பாகத்
தொடர்ந்து, பெண் தலைமைகள் உருவாகி, தனித்தன்மையுடன் செயல்பட வேண்டும்
என்பது பலரது கனவு. கனவுகள் மெய்ப்பட வேண்டும்.
ஆறாவது எட்டாகக் கூறப்படும் நாற்பத்தி எட்டு வயது என்பது,
பொருட்செல்வத்தின் வழியாக, உலகத்தின் இயற்கை அறிவினையும் அனுபவ
அறிவினையும் ஒருசேரப் பெறுதலின் பொருட்டு நிகழும் செயலாகும். பூமி
தன்னைத் தானே சுற்றிக்கொள்ளுதலும் மனிதன் தன்னைச் சார்ந்தோரோடு,
உலகத்தின் அழகை, மகிழ்ச்சியாக அனுபவித்தல் என்பதும் தான் சுற்றுதல்
என்று உணர்கிறேன். அவ்வடிப்படையில், உலகம் சுற்றும் செயல் என்பதும்
மொழி, பண்பாடு, கலாச்சாரம், பழக்கவழக்கங்களின் அனுபவ அறிவினூடாக,
வருங்காலச் சந்ததியினருக்கான வாழ்வியல் கதைகளின் வழி விளக்குதல்
பொருட்டு, அமைவதே இப்பயணமாகும்.
ஏழாம் எட்டான, ஐம்பத்தி ஆறு வயது மனித இனம் பிறந்தது முதல்,
தொடர்ந்து உடல் உழைப்பு, அறிவு உழைப்பு சார்ந்து இயங்கிக்
கொண்டிருக்கிறது. அதிலிருந்து சற்று குறைந்து மனஅமைதியோடு, இல்லற
வாழ்வின் பயனாய் பெற்ற மகள், மகன்களோடும் பேரக்குழந்தைகளோடும் இனிமையாக
இருப்பதே ஓய்வாகும். வெறுமனே ஏதும் செய்யாமல், இருக்கையில் அமர்ந்து
கொண்டிருப்பதும் கட்டிலில் படுத்துக் கொண்டிருப்பதும் உறங்குவதும்
ஓய்வாகாது. ஓய்வு என்பது,
அடுத்தகட்ட செயலின் தொடர் சங்கிலியாகும். அதாவது, முன்னர் நிகழ்த்திய
வேலையின் அடிப்படை அளவிலிருந்து தன்னுடைய மன, உடல் வலிமைக்கேற்ப,
அளவினைக் குறைத்துக்கொண்டு, அடுத்த வேலையைச் செய்தலே ஓய்வாக இருக்க
முடியும். அதனை, இந்த வயதில் மேற்கொள்ள வேண்டும் என்கிறார்.
எட்டாம் எட்டாக வரையறுக்கும் அறுபத்து நான்கு வயதானது, மனித
இனத்தின் இறுதிக்கட்ட பகுதியாகும். இன்று, உலகளவில் மனிதனின்
இறப்புக்கான காலமாக அறுபது வயது தொடங்கி அறுபத்து ஐந்து வயது என்று
கணக்கிட்டுள்ளனர். இதனைத்தான் பாடலாசிரியார் வைரமுத்துவும்
எடுத்தியம்புகிறார். மனிதனின் சராசரி உயரம் 5.5 செ.மீ. ஆகவும் சராசரி
வாழ்நாள் காலம் 60 – 65 ஆண்டுகளாகவும் இன்றைய சூழலில் உள்ளது. இந்த
இறப்புக் காலமானது பிறருக்குத் துன்பமளிக்கக் கூடியதாகவும் நிம்மதி
இன்றி, மன அமைதியற்று வாழும் பருவ வயதாக அமைகிறது. ஆதலால்,
நிம்மதியின்றி வாழும் இக்காலத்தில் இறப்பை எதிர்நோக்கிக் காத்திருத்தல்
இயல்பான ஒன்றாகும்.
பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டோரும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும்
தாய், தந்தையினரின் இறுதிக்கால வாழ்வு நிம்மதியின்றி தானே இருக்கும்.
‘பழுத்த ஓலையைப் பார்த்து, குருத்து ஓலை சிரித்ததாம்’ என்னும் மக்கள்
வழக்கிற்கிணங்க தாய், தந்தையரை இன்னலுக்கு உட்படுத்தும் பிள்ளைகள்
குருத்து ஓலையாகவே என்று இருப்பதற்கு வாய்ப்பில்லை. இதை மனிதராய்
பிறந்த அனைவரும் உணர வேண்டும். ஆக, இறுதிக்காலம் நிம்மதியோடு,
வாழ்வதற்கு நிகழ்காலத்தினையும் எதிர்காலத்தினையும் கணக்கில் கொண்டு
நற்செயல்களையும் நற்பண்புகளையும் பெற்ற பெற்றோராக, பிள்ளைகளாகத் திகழ
வேண்டும்.
இப்பாடல், எண்ணிக்கையை வரிசைப்படுத்தும் தத்துவப் பாடலாக
அமைகிறது. அதோடு, மக்கள் வழக்குச் சொற்களையும் இலக்கியச் சொற்களையும்
கொண்டு அமைந்துள்ளது. தெலுங்கு, ஆங்கிலம் எனப் பிறமொழிச் சொற்கள்
பயின்று வந்துள்ளது. மோனை, எதுகை, இயைபு போன்ற இலக்கியக் கூறுகள் பல
பெற்று, இப்பாடல் சிறக்க மிளிர்கிறது. திரைப்பாடர்களான எஸ்.பி.
பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா ஆகியோரின் குரல்களின் வழி, இப்பாடல்
மேலும் அழகியல் தன்மையைப் பெற்று, உள்ளக் கிளர்ச்சியை உண்டாக்குகிறது.
இரவுக்கெல்லாம் - பகலுக்கெல்லாம்; பிரிச்சுக்கோ - நெனச்சுக்கோ
போன்ற இயைபுத் தொடைகள் மிளிர அமைந்துள்ளது. சந்திரன் – (நிலவு),
கதிரவன் – (சூரியன்) போன்ற இலக்கியச் சொல்லாட்சிகளும் அமையப்பெற்ற
பாடலாக இப்பாடல் அமைகிறது.
இப்பாடல், மனித வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக உள்ளது.
விளையாட்டு தொடங்கி, இறுதி முடிவு வரை பயணிக்கும் பாடல் பல்வேறு
காலக்கட்டங்களை இயல்பான மொழியில் விளங்க வைக்கிறது. மலை உச்சியில்
தெரியும் நிலவுக்கும் கீழ் இருந்து பார்க்கும் மனிதருக்குமான
உறவாகத்தான் வாழ்க்கைப் பயணம் உள்ளது. இதில் ஒன்றையொன்றைக் கடக்கும்
தொலைவு தான் இடைப்பட்ட வாழ்வியலாகும். இதில் இன்பம், துன்பம்,
மகிழ்ச்சி, அழுகை, ஆசை, கோபம், போன்ற பல்வேறு மனவெழுச்சிகள்
உள்ளடக்கம். இதனைக் கடக்கும் தொலைவில்தான் நட்பு, காதல், போன்ற உறவுகள்
மனிதரைப் பண்படுத்தும் கருவிகளாக அமைகிறது. பண்பட்டுத் தேறுகையில்,
வாழ்வில் இறுதிக்காலம் தொடங்குகிறது அல்லது முடிகிறது. ஆகவே,
பண்படும்போதே செயல்பாடும் இருத்தல் வேண்டும். மகிழ்ச்சிகொள்; பிறரையும்
மகிழ்வி என்பதை மனித அடிப்படையாகக் கைக்கொள்ளுதல் நலம்.
ஜெ.மதிவேந்தன்,
முனைவர் பட்ட ஆய்வாளர்.
சென்னைப் பல்கலைக்கழகம்,
சென்னை – 600 005.
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|