நாலும் நாண்மணிக்கடிகை நூலும்
கவிஞர். மா.உலகநாதன், முனைவர்
பட்ட ஆய்வாளர்
முன்னுரை :
தமிழ்மொழியாம்
தாய்மொழி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோற்றமுற்று இலங்கும் உயர்தனிச்
செம்மொழி, சங்ககாலத்து நல்லிசைப் புலவர்களால் பாடப்பெற்ற நூல்கள்
மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என இரு வகைப்படும். கீழ்க்கணக்கு நூல்களில்
ஒன்றான நாண்மணிக்கடிகை நந்நான்கு பொருள்களை. நமக்கு உணர்த்தும்
தன்மையது.
நாண்மணி என்பது நான்கு வகையான நீதிமணிகளாற் கோக்கப்பட்ட ஒருவகை அணிகலன்
என விரியும். அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி அறம்பொருள் இன்பம்
அடக்கி அவ்வத் திறம்பட உரைப்பது கீழ்க்கணக்காகும் என்று பன்னிரு
பாட்டியற் சூத்திரம் மேற்கோளிடுகிறது. பழம்பாடல் ஒன்றும்
பதிணென்கீழ்க்கணக்கு நூல்களாகச் சொல்லுவது :
நாலடி நாண்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
மெய்ந்நிலைய காஞ்சியோ டேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.
விளம்பிநாகனார் என்னும் நல்லிசைப் புலவர் நாண்மணிக்கடிகையை இயற்றினார்.
கடவுள் வாழ்த்து உட்பட
104 வெண்பாக்களால்
இந்நூல்யாக்கப்பெற்றுள்ளது எனினும். ஈண்டு அனைத்தையும் விரிக்கிற்
பெருகும் என்பதால் ஒரு சிலவற்றை (நான்கு செய்யுள்) மட்டும் காணுவோம்.
கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் மான்வயிற்றின்
ஒள்ளரி தாரம் பிறக்கும் பெருங்கடலுள்
பல்லிலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார்
கல்லாள் பிறக்குங் குடி. நாண் -
6
அகில் எனப்படும் சாம்பிராணி கள்ளி மரத்தின் நடுவில் உண்டாகும். மானின்
வயிற்றில் ஒளிபொருந்திய அரிதாரம் பிறக்கும். விலைமதிப்பிலா முத்துகள்
பெரிய, ஆழக்கடலினுள் தோன்றும். அதுபோல, நல்லமக்கள் பிறக்கும் குடியை யாரே
அறிய வல்லார். எக்குடியினும் நல்லார் பிறத்தலைப் பண்டும் இன்றுங்
காண்கின்றமையால் அவர் பிறக்குங்குடி இதுதானென்று துணிந்தறிவது இயலாது.
நிலத்துக் கணியென்ப நெல்லுங் கரும்பும்
குளத்துக் கணியென்ப தாமரை பெண்மை
நலத்துக் கணியென்ப நாணந் தனக்கணியாம்
தான்செல் உலகத் தறம். நாண் -
11
நெல்லுங் கரும்புங் கழனிக்கு அழகு: தாமரை, குளத்துக்கு அழகு: நாணம்,
பெண்மைக்கு அழகு: அறங்கள். ஆண்மைக்கு அழகு. கழனியில் விளையும் நெல்லும்
கரும்பும், மனிதர்களுக்குப் பயனாகி அழகு பெறுகிறது. தாமரை மலர்கள்
நிறைந்த குளத்தைப் பார்க்கும் யார்க்கும் அதன் அழகு மனங்கொள்ளும்:
பெண்மையின் சிறப்பே நாணமாகும: நாணுதல் தனி அழகு. அறம் செய்தலும:
வினையாற்றலும், பொருளீட்டலும், அப்பொருளால் இன்பம் துய்த்தலும் முடிவில்
வீடுபேறு அடைதலும் ஆண்மையின் அழகாகச் சொல்லப்படுகிறது. இதையே பாரதிதாசன்,
அதிர்ந்திடும் இளமைப்போதில் ஆவன அறங்கள் செய்து
முதிர்ந்திடும் பருவந்தன்னில் மக்கட்கு முடியைச் சூட்டி
எதிர்ந்திடும் துன்பமேதும் இல்லாமல் மக்கள், பேரர்
வதிந்திடல் கண்டுநெஞ்சு மகிழ்வதே வாழ்வின் வீடு என்பார்.
........................................................
ஈகை செல்வத்தால் உண்டாகும்: உறவினர்க்கு
மகிழ்ச்சி, இன்சொல்லால் உண்டாகும்;: குற்றம் ஒன்றையே பார்த்து குறை பேசத்
தொடங்கி விட்டால் சுற்றமென ஏதுமில்லை: சொந்தமென நாதியில்லை: எனவே, இன்சொல்
இனிது பயக்கும். வன்சொல்லும் வஞ்சனையும் கண்ணோடாமையால் உண்டாகும்.
கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம். கண்ணோட்டம் இல்லாதோரிடம் வஞ்சனையும்
வன்சொல்லும் உண்டாகும். இரப்போர் இழிதகையர். உழைப்போர் வறுமையுறார்.
இரத்தல் வறுமையால் உண்டாகும் என்ற கருத்தினை நாண்மணிக்கடிகையின்
இந்தச்செய்யுளில் காணமுடிகிறது.
வளப்பாத்தி யுள்வளரும் வண்மை கிளைக் குழாம்
இன்சொற் குழியுள் இனிதெழூஉம் வன்சொல்
கரவெழூஉங் கண்ணில் குழியுள் இரவெழூஉம்
இன்மைக் குழியுள் விரைந்து.
ஈகையின் சிறப்பை ஒளவையார் சொல்லுகிறார்.
ஈதலறம்: தீவினைவிட் டீட்டல் பொருள் - எஞ்ஞான்றும்
காதலிருவர் கருத்தொருமித் - தாதரவு
பட்டதே யின்பம: பரனைநினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.
...........................................................................
குடிகள் அரசனது ஆட்சியால் உயிர்வாழும்:
குழந்தைகள் தாயினது முலைப்பாலால் உயிர்வாழும: உயிர்கள் மழைத்துளியால்
உயிர் வாழும: கூற்றுவன் உயிர்களின் சாக்காட்டை இன்பமுடன்
எதிர்நோக்கியிருப்பான்.
அரசன் அன்பிற் சிறந்த தாய்போலத் தோன்றி, மன்னுயிர் யாவையும்
தன்னுயிர்போலக் கருதி, தன்னாலும் தன்னைச் சார்ந்தவர்களாலும், மற்ற
உயிர்களாலும் சிறிதும் துன்பம் வராமல் மக்களைக் காப்பவன்.
தாய்ப்பால் எனும் அமுதம் குழந்தைகளின் உயிர் வாழச் செய்வது. விசும்பின்
மழைத்துளியில்லால், பசும்புல் தலை காண்பரிது என்பார் வள்ளுவர்.
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் மற்றவர்க்கு இடமேது? இக்கருத்தை.
கோல்நோக்கி வாழுங் குடியெல்லாங் தாய்முலைப்
பால்நோக்கி வாழுங் குழவிகள் - வானத்
துளிநோக்கி வாழும் உலகம் உலகின்
விளிநோக்கி இன்புறூஉங் கூற்று. நாண் -
29
இப்படி வெண்பாக்களால் பண்பாடிய நாண்மணிக்கடிகை நாட்டுமக்களுக்கு
நல்லறங்களைப் போதித்து, நல்வழி நடக்கத் துணை நிற்கின்றன.
worldnath_131149@yahoo.co.in
|