என் இதயம் தொட்ட கவிதைகள்

அகில் சாம்பசிவம்
 

ரொறன்ரோ தமிழ் சங்கத்தில் 26-102019 அன்று நடந்த இலக்கிய கலந்துரையாடல் நிகழ்வில் என் இதயம் தொட்ட கவிதைகள் என்ற தலைப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை:

ஒரு திறனாய்வாளன், அல்லது ஒரு நல்ல வாசகன் ஒரு கவிதையை வாசிக்கும் போது அந்தக் கவிதை என்ன கருவைக் கொண்டுள்ளது என்று மட்டும் பார்க்கமாட்டான். அந்த கவிதையில் என்ன உத்திகள் கையாளப்பட்டுள்ளன, அந்த கவிதையின் கரு எப்படி வெளிப்படுத்தப்படுகிறது என்பதையும் பார்ப்பான். கவிதைக்கு கவித்துவம் என்பது முக்கிய அம்சம். அது கவிஞன் தான் எடுத்துக்கொண்ட விடயத்தை எப்படிச் சொல்கிறான் என்பதில் தங்கியிருக்கிறது. கவிஞனுக்கு சொற்பஞ்சம் இருக்கக் கூடாது. சொல்லவந்த விடயத்தை அழகாகவும், எளிமையாகவும் சொல்வதே புதுக்கவிதை.

அந்தவகையில் தான் 'என் இதயம் தொட்ட கவிதைகளையும் அவற்றில் பொதிந்துள்ள கவித்துவத்தையும், உத்திகளைப்பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.

கவிஞன் தான் சொல்லவரும் கருத்தை எங்ஙனம் வெளிப்படுத்துகின்றான் என்பதிலுள்ள திறனே 'உத்தி' எனப்படும்.

ஒரு படைப்பு வாசகனைப் போய் சேருவதற்காக படைப்பாளிகள் பல்வேறு உத்திகளை கையாண்டு ஒரு படைப்பை உருவாக்குகிறான்.

பொதுவாக கவிஞர்கள் கையாளுகின்ற உத்திகளாவன: படிமம், குறியீடு,, உவமை, உருவகம், முரண், தொன்மம், அங்கதம். நகைச்சுவை என உத்திகளின் பட்டியல் நீண்டது.

படிம உத்தி:

சொற்களால் நெஞ்சத்தில் வரையும் ஓவியம் படிமம் என்பதாகும்.
இமேஜ் (image) என்னும் ஆங்கில மொழிச் சொல்லிற்கு இணையாகத் தமிழில் வழங்கப் பெற்று வரும் கலைச்சொல்லே 'படிமம்' ஆகும்.

படிமம் புதுக்கவிதைக்கு உரிய தனிச்சிறப்பு வாய்ந்த இலக்கிய உத்தியாகும்.

புதுக்கவிதையின் தொடக்கம் பாரதியிடமிருந்து தொடங்குகின்றது என்பர்.

பாரதியின் கவிதைகளில் படிம உத்தி நிறையவே காணப்படுகிறது. எனினும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல அவரது கவிதைகளில்; இருந்து ஒரு கவிதை:

'சுட்டும்விழிச் சுடர்தான் - கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரியவிழி – கண்ணம்மா!
வானக் கருமைகொல்லோ?
பட்டுக் கருநீலப் - புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் - தெரியும்
நட்சத்திரங்களடீ .
சோலைமல ரொளியோ – உனது
சுந்தரப் புன்னகைதான்?
நீலக் கடலலையே – உனது
நெஞ்சி னலைகளடீ!
கோலக் குயிலோசை – உனது
குரனின் இனிமையடீ!
வாலைக் குமரியடீ - கண்ணம்மா!
மருவக் காதல்கொண்டேன் .

பாரதி, கண்ணம்மாவின் அழகை வர்ணிக்கும் போது அவள் ஒரு தேவதை போன்ற பேரழகி என்று இக்கவிதையை படிப்பவர் அறிந்து கொள்ளும் வண்ணம் காட்சிப்படுத்துகிறார். அவள் தோற்றம் படிப்பவர் மனக்கண்ணில் காட்சிப்படிமமாக விரிகிறது.

படிமக்கவிதையின் தொடர்ச்சியாக மற்றுமொரு கவிதை,
'நாம்' என்ற கவிதைச்சஞ்சிகையில் எஸ்.மதி என்பவர் எழுதிய கவிதை இது,







முற்றத்தில் ஒரு வேப்பமரம் பூப்பூத்து நிற்கிறது. அப்படி வேப்பமரம் பூப்பூத்து நிற்பது ஒரு பெண் தலையில் பூச்சூடி நிற்பது போலவும், அவள் தலையில் சூடியிருக்கும் பூவின் இதழ்கள் நிலத்திலே பரவிக்கிடக்கிறது. அது; வெள்ளைக்கம்பளம் விரித்திருப்பது போலவும் காட்சியளிக்கிறது. அந்த மரத்திற்கு விருந்தினர்கள் பலர் வந்திருக்கின்றார்கள். கவிஞர் யார் அந்த விருந்தினர்கள் என்று சொல்லவில்லை. யார் அந்த விருந்தினர்கள் என்பதை வாசகர்கள் ஊகித்து அறிந்து கொள்ளும்படியாக விட்டுவிடுகின்றார்.

முற்றத்தில் பூத்துக்குலுக்கி நிற்கும் வேப்பமரத்தை ஒரு பெண்ணுக்கு ஒப்பிடுவடுவதுமட்டுமல்லாது அந்தக் காட்சியைப் படிம உத்தியைப் பயன்படுத்;தி படிக்கின்ற வாசகர்கள் மனதில் படியவைக்கிறார்.

புதுக்கவிதை வரலாற்றில் ஹைக்கூ கவிதைகளுக்குத் தனியிடம் உண்டு. இன்று ஹைக்கூ கவிதை எழுதிவருக்கின்றவர்களில் ஒருவரான கவிஞர் இரா.இரவி அவர்கள் எழுதிய ஹைக்கூ கவிதைகளிருந்து நான் இரசித்த இரண்டு கவிதைகள்.

பெண்பார்க்க வந்தார்கள்
அந்த வீட்டு நாய் குறைத்தது
திருடர்கள் என்று நினைத்து

இந்த கவிதையின் பொருள் விளங்குகிறதா?

இந்த கவிதைக்குள் ஆழமாக இறங்கினால்தான் உண்மையான பொருள் புலப்படும். இக்கவிதையில்; உள்ள படிம உத்தியும் புலம்படும்.

காட்சி விரிகிறது,

ஒரு இளைஞன் பெண்பார்க்கப் போகிறான். அவன் கூட இளைஞனின் பெற்றோர், உறவினர்கள் போகின்றார்கள். அவர்களைப்பார்த்து பெண் வீட்டு நாய் குறைக்கிறது.

பெண்வீட்டாரிடம் வரதட்சனை கேட்கும் இளைஞனுக்கும், திருடனுக்கும் வித்தியாசம் இல்லை. இரண்டு பேரும் திருடர்கள் தான் என்னும் கருத்தைப் புலப்படுகிறது அல்லவா? இதுதான் படிமம் என்பது.

கவிஞர் இராவியின் மற்றுமொரு கவிதை:

நிலம் விற்றுப்
பெற்றப் பணத்தில்
அப்பாவின் முகம்

காட்சி விரிகிறது:

ஏழைவிவசாயி விவசாயம் செய்வதற்காக சிறுநிலம் வைத்திருக்கிறான். அவனின் மகன் படிப்பதற்காக காசு கேட்கிறான். பணம் இல்லாத ஏழை விவசாயி இருக்கிற சிறு நிலப்பகுதியை விற்று, அந்த பணத்தை மகனின் படிப்பிற்காக கொடுக்கின்றான். தந்தையிடம் பணத்தை பெற்ற மகன். பணத்தைப் பார்க்கிறான். இந்தியா நாட்டு காசில் மகாத்மா காந்தியின் படம் இருக்கும். ஆனால் ஏழை விவசாயின் மகனின் கண்ணுக்கோ தந்தையின் முகம் தெரிகிறது. தந்தையின் ஏழ்மை தெரிகிறது.

மேலே சொன்ன கவிதைகள் படிம உத்திக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

குறியீட்டு உத்தி:

சொல்லின் அர்த்தத்தை நேரடியாகத் தரும் முயற்சிக்குப் பதிலாக குறியீடுகளைப் பயன்படுத்துவதன்; மூலம் அர்த்தத்தை வாசகன் மனதில் விரியச் செய்யும் முயற்சியே குறியீடு.

பாரதி தனது கவிதைகளில் குறியீட்டு உத்தியை அதிகம் பயன்படுத்தியுள்ளார். உதாரணத்துக்கு:





பாரதியின் இக்;கவிதையில் வரும் 'அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்' என்ற சொற்றொடரே ஒரு குறியீடாகும். அக்கினிக் குஞ்சென்று அவர் சுட்டுவது: சுதந்திரம், விடுதலை, புரட்சி. அவரவர் புரிதலுக்கு ஏற்ப அதன் பொருள் மாறுபடும்.

இலங்கையிலிருந்து வெளிவரும் ஜீவநதி சஞ்சிகையின் ஆறாவது ஆண்டு நிறைவு மலரில் கவிஞர் கா.தவபாலன் அழகான குறியீட்டு கவிதை ஒன்றை எழுதியிருந்தார். குறியீட்டுக்கவிதை என்று சொல்வதை விட குறியீட்டால் கட்டப்பட்ட கவிவையென்று சொல்லலாம்.

கவிதைக்குள் நுளைகிறேன்,





கறையான்கள், கருநாகம் இவ்விரண்டு சொற்களும் சிறந்த குறியீட்டு உத்தியாகும்.

கறையான்கள் - அப்பாவி மக்கள்
கருநாகம் - ஆதிக்கசக்தி

இப்பொழுது இக்கவிதையின் பொருள் மட்டுமல்;லாது. கவிஞர் குறியீட்டு உத்;தியை எப்படி அழகாகப் பயன்படுத்தியுள்ளார் என்பதும் தெரியும்.

குறியீட்டு உத்தியைப் பயன்படுத்தி கவிதை புனைவதில் கவிஞர் அப்துல் ரகுமான் குறிப்பிடத்தக்கவர். 'புதுக்கவிதையில் குறியீடு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். நான் ரசித்த அவருடைய கவிதைகளிலிருந்து ஒரு கவிதை:

புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில்
போலி நளன் களின் கூட்டம்
கையில் மாலையுடன்
குருட்டுத் தமயந்தி

மேலோட்டமாக பார்த்தால் இக்கவிதை புரியாது.

புறத்திணை மண்டபம் என்று அவர் சொல்வது – தேர்தல் களம்.

போலி நளன்களின் கூட்டம் என்று அவர் சொல்;வது – அரசியல்வாதிகளை.

குருட்டுத் தமயந்தி என்று அவர் சொல்வது – அப்பாவிமக்களை.

தேர்தல் நேரத்தில் போலி அரசியல் வாதிகளை நம்பி ஏமாறும் அப்பாவிமக்களைக் குறிப்பிடுகிறார். இக்கவிதையில் குறியீட்டு உத்தி மாத்திரம்மல்லாது தொன்ம உத்தியையும் கவிஞர் பயன்படுத்தியுள்ளார்.

தொன்மம் என்ற சொல் புராணவியலைக் குறிக்கும். இதனை ஆங்கிலத்தில் mythology என வழங்குவர். புராணக்கவிதையை ஆங்கிலத்தில் myth என்பர். புராணம் என்பது வடசொல்லாக இருப்பதால் அதற்கு இணையாக தொன்மம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

முன்னை இட்ட தீ
அடிமை வாழ்விலே
பின்னை இட்ட தீ
தேயிலைத் தோட்டத்திலே
இன்னும் இட்ட தீ
இனவெறுப்பிலே
அன்னை இலங்கையின்
ஆத்மா வெகுதே

வானம்பாடி இதழில் கவிஞர் சிற்பி கண்ணீர் துளித் தீவு என்ற தலைப்பில் எழுதிய கவிதை இது. தொன்ம உத்திக்கு சிறந்த உதாரணமாகக் கூறலாம்.

நான் ரசித்த மற்றுமொரு கவிதை இது இக்கவிதையில் பயன்படுத்பப்பட்டுள்ள உருவகஉத்தி மிகவும் ரசனைக்குரியதாக உள்ளது.

முப்பது நாட்களாய்
அலுவலகத்தில் அடைகாத்திருந்து
ஒரு நாள்
ஊதியக் குஞ்சைப் பொரித்துப்
பார்க்கும் நேரம் பார்த்து
கணக்காய்
கொத்திப் போக பறந்து வரும்
கடன்காரப் பருந்து.

இதில் ஊதியக் குஞ்சு, கடன்காரப் பருந்து உருவக உத்திக்கு நல்ல உதாரணங்களாக உள்ளன. ஓர் அரச ஊழியரின் வறுமையை, கடன் பிரச்சனையை, அவனுடைய இயலாமையை இக்கவிதை அழகாக உணர்த்தி நிற்கின்றது.

அங்கத உத்தி:

அங்கதம் என்பது சமூதாயக் கேடுகளை நையாண்டி செய்து தாக்குவதன் மூலம் சீர்திருத்தும் ஒருவகை இலக்கிய உத்தி.

வாக்காளப் பெருமக்களே
நான் உங்கள் வேட்பாளன்
நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தால்
ஜாதிகளை ஒழிப்பேன்
வீதிகளில் உள்ள ஜாதிகளின் பெயர்களை அழிப்பேன்
ஜாதி என்ற வார்த்தை உள்ள பக்கத்தை அகராதியிலிருந்து கிழிப்பேன்
'நீ அந்த ஜாதி... நான் இந்த ஜாதி...' என்று பேசுவோரால் நம்'
தேசம் கெட்டுவிட்டது
எனவே -
ஜாதியில்லாத சமுதாயத்தை அமைக்க...
எனக்கே ஓட்டுப் போடுங்கள்!
நினைவில் இருக்கட்டும்...
நான் உங்கள் ஜாதிக்காரன்'

இக் கவிதை அங்கத உத்தி மட்டுமல்லாது முரண் உத்தியும் சேர்ந்த கவிதையாக இருக்கிறது.

சொல்லோ, பொருளாளோ மாறுபட்டுக் கூறுவதை முரண் என்பர்.




1990 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதி ஈழத்து கவிதை வரலாற்றில் ஒரு பொற்காலம் என்றே கூறலாம். காரணம் புதியவர்கள் பலர் எழுச்சியுடன் கவிதை எழுதிய காலப்பகுதி அது. யுத்தம், இடப்பெயர்வு, அகதி வாழ்க்கை என பல சொல்லணாத் துன்பங்கள் அவர்களை எழுத வைத்தது. விடுதலை உணர்வோடு கவித்துவத்துவம் நிறைந்த பல கவிதைகளை அவர்கள் படைத்தார்கள். நான் ரசித்த கவிதைகளில் சில.......










ஈழத்துக் கவிதை வரலாற்றில் 2009 க்குப்பின் ஒரு மந்தமான நிலை காணப்படுகிறது. போர்ச்சூழல் தந்த இழப்புக்கள், எதிர்பாராத ஏமாற்றங்கள், வடுக்கள், வலிகள், காணாமல்போதல் என்பன இலக்கியம் படைப்பதில் ஒரு தொய்வை ஏற்படுத்தியது என்றே கூறவேண்டும்.

போர் ஓய்ந்து பதின்ம ஆண்டுகளைக் கடந்துவிட்ட இன்றைய நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்ட தம் உறவுகளை தேடியலைந்து கொண்டிருக்கும் துன்பியல் வாழ்வு இன்னும் முற்றுப்பெறவில்லை. விடைதெரியா ஏக்கத்தோடு தேடல் தொடர்கிறது. இந்த அவலநிலையை அற்புதமாக காட்டுகிறது ஒரு கவிதை.





நன்றி: ரொறன்ரோ தமிழ்ச்சங்கம்


 


அகில் சாம்பசிவம்

 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்