காடு வளர்ப்போம் / மழை பொழியட்டும்

சட்டத்தரணி மு.சண்முகநாதன்


சோழ மாமன்னன் அரசவை. புலவர்களைப் போற்றும் மன்னன் என்பதால் அவன் அவையில் பல புலவர்கள், அதுவும் தலைசிறந்த புலவர்கள். எல்லோரும் பாடல்கள் மூலம் அரசனைப் புகழ்கிறார்கள்.

அங்கிருந்த புலவர்களில் ஒருவரான ஒளவையாரும் சோழனைப் புகழ்;ந்து பாட எழுந்தார். 'வரப்புயர' என்ற வார்த்தையை மாத்திரம் சொல்லி விட்டு அவர் நிறுத்திக் கொண்டார். சஸ்பென்ஸ் என்றால்தான் தான் சொல்ல வந்த கருத்து மற்றவர் மனதில் ஆழமாகப் பதியும் என ஒளவை நினைத்தாரோ என்னவோ!

அரசனுக்கும் ஏனைய புலவர்களுக்கும் ஒளவையார் என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை. அதனால் அவர்கள் மனதில் ஆயிரம் கேள்விகள். அவர்களின் முகங்களில் இருந்த குழப்பத்தைப் பார்த்த ஒளவையார் பாடலை தொடர்ந்து பாடி முடித்தார்.

வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான்.

நெல் விவசாய நிலத்தின் வரப்பை அதாவது வரம்பினை உயர்த்தினால் வயலில் அதிக நீர் தங்கும். நெல் விளைச்சல் அதிகரிக்கும். நெல் விளைச்சல் நன்றாக இருந்தால், மக்களின் வாழ்க்கை ஆனந்தமாக இருக்கும், எங்கே மக்கள் வறுமைப் பிணி இல்லாது மகிழ்ச்சியாக வாழ்கிறார்களோ அவர்களது அரசே சிறந்ததாக இருக்கும். அவ்வாறான சிறந்த அரசை உடைய மன்னன் மிகவும் உயர்ந்த ஒருவனாகப் போற்றப்படுவான் என ஒளவையார் விளக்கம் அளித்தார்.

மன்னனும் அவையில் இருந்தவர்களும் ஒளவையாரின் பாடல் கேட்டு மகிழ்ந்தனர். பாராட்டினர். வரப்புயர என்ற வார்த்தையின் மூலம் ஒளவையார் ஒரு நாடு செழிப்புடன் இருப்பதற்கு விவசாயம் சிறக்க வேண்டும் என்பதைப் புலப்படுத்தி விட்டார்.

விவசாயம் தண்ணீரில் தான் தங்கியுள்ளது. போதிய அளவு தண்ணீர் இருந்தால்தான் விளைச்சலும் நன்றாக இருக்கும் என்பது ஒளவையார் காலத்;தில் இருந்தது போலவே இன்றும் உண்மையாக உள்ளது.

ஒளவையார் காலத்தில் மாதம் மும்மாரி பொழிந்தது. நிலங்கள் மூன்று போகம் விளைந்தன. ஆனால் இந்தக் காலத்தில் வருடத்துக்கு மும்மாரி - மூன்று தடவைகள் மழை பெய்கிறதா என்பது சந்தேகமாகவுள்ளது. ஒரு போகம் செய்தாலும் கூட அறுவடை நடக்குமா அல்லது மழை பொய்த்து பயிர்கள் கருகி விடுமா என்ற நிலை.

இந்த நிலை ஏற்பட்டதற்கு மனிதன் தான் காரணம். முதலில் காட்டை அழித்து களனியாக்கியவன், வகைதொகையின்றி மழைக்குக் காரணமான காட்டை அழிக்கவே, மழை பெய்வது அருகிவிட்டது. அல்லது காலம் கடந்து பெய்து பேரழிவை உண்டாக்குகிறது.

மழை பொழியக் காரணமே மரங்களும் காடுகளும்தான். பருவ மழைக்காலங்களில் மலைகள் மற்றும் காடுகளில் இருக்கும் மரங்களின் அடர்த்தி மற்றும் விஸ்தீரணத்தைப் பொறுத்தே பெய்யும் மழையின் அளவு தங்கியுள்ளது.

இலங்கையின் பல பாகங்கள் விரைவில் பாலை வனமாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதனை அதிக எண்ணிக்கையில் மரங்களை நட்டு பூமியைக் குளிரச்செய்தால் தான் தடுத்து நிறுத்த முடியும்.

முன்னெல்லாம் மரம் வளர்த்தால், மரங்களை நட்டவனின் பிள்ளைகளும் சந்ததியும் தான் பலன் பெறும். ஆனால் வாழம்போதே பலன் பெறுவதற்கான வழி முறைகள் வந்து விட்டன. அவற்றில் ஒன்று இன்று பிரபலமாகிவிட்ட மியாவாகி காடு வளர்ப்பு (Miyawaki Forest).

சாதாரண காடு வளர்ப்பிலும் பார்க்க, மியவாக்கி காடுகள், 10 மடங்கு வேகமாக வளர்கின்றன. 30 சதவீதம் கூடுதல் அடர்த்தி பெறுகின்றன. பல்லுயிர் பெருக்கம் 100 மடங்காகிறது. காற்றில் உள்ள கரியமில வாயுவி;ல் 30 சதவீதம் உறிஞ்சப்படுகிறது. 30 மடங்கு சத்தமும் மாசும் குறைகிறது. 30 மடங்கு பசுமையான மேற்பரப்பு கிடைக்கிறது. சொல்லப் போனால், 2 வருடம் முதல் 10 வருடங்களுக்குள் 100 சதவீத பூர்வீக, இயற்கை வழியில் உருவான, 100 வருட பழமையான காடு கிடைக்கிறது.

மியவாக்கி முறைக்கு, பெரிய நிலப்பரப்புத்தான் தேவை என்பதல்ல. வீட்டு வளவு போன்ற சிறிய இடங்களில் கூட மிகவேகமாக, அடர்ந்த காடுகளை உருவாக்க முடியும்.

மரங்கள் நடவேண்டிய இடத்தில் 4 அல்லது 5 அடி ஆழத்துக்கு மண்ணை அகற்றி ஓரத்தில் குவிக்க வேண்டும். இரண்டு நாட்கள் தோண்டப்பட்ட கிடங்கை ஆறவிட வேண்டும். காய்கறி சந்தையில் கழித்து விடப்படும் காய்கறி கழிவுகள், வாழை மட்டைகள், சிறு சிறு துண்டுகளாக நறுக்கப்பட்ட தேங்காய் பொச்சு மட்டை, தென்னை ஓலைகள் மற்றும் மாட்டுச் சாணம் ஆகியவை கொண்டு நிரப்ப வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாகப் போடக்கூடாது.

முதலில் தேங்காய் பொச்சு மட்டை அல்லது தென்னோலைகளை இடவேண்டும். அதன் மேல் ஓரத்தில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் மண்ணின் ஒரு பகுதியைப் போட வேண்டும். அதன் மேல் ஒரு அடுக்கு காய்கறி கழ்வுகள் இடவேண்டும், அதன் மீது மீண்டு;ம் மண் போட வேண்டும். பின்னர் இலைகள் போன்ற பசுந்தளைகளையிட வேண்டும். அதன் மீது மீண்டும் மண் போடவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு இயற்கை கழிவுகளுக்கும் மேல் மண்ணைத் தொடர்ந்து போட வேண்டும். கடைசியில் மாட்டுச் சாணம் ஒரு அடுக்கு போட்டதன் பின்னர் மேலும் மண் போட்டு கிடங்கை நிரப்ப வேண்டும். பின்னர் கிடங்கு நிறைந்து வழியும்வரை நிறைய தண்ணீர் விடவேண்டும்.

மாட்டெரு அல்லது ஆட்டெரு மரங்களுக்கு ஊட்டம் அளிக்க நாளாகலாம். ஆனால் இவற்றுடன் மண்புழு உரம் (vermicompost)  சேர்த்தால் மரம் உடனடியாக பலனைப் பெறக் கூடியதாக இருக்கும்.

அப்பகுதியில் காணப்படும் மரங்களையே கூடுதலாகத் தெரிவு செய்ய வேண்டும். அவற்றுடன் காட்டு மரங்களையும் சேர்த்து குறைந்தது 10 வகை மரங்களையாவது நடவு செய்ய வேண்டும்.

பனை, தென்னை, ஆல், அரசு, வேம்பு, மலைவேம்பு, இழுப்பை, பூவரசு, புங்கம், இலந்தை, நாவல், திப்பிலி, அன்னமுன்னா, மாதுளை, முருங்கை, மகோகனி, வாகை, சரக்கொன்றை, அத்தி, மூங்கில், போன்ற மரங்கள் நடுவது சிறப்பு.

புதர், உயரம் அதிகம் இல்லாத மரம், மரம் மற்றும் சடைத்து வளரும் மரங்கள் என வௌ;வேறு அடுக்;குகளாக வளரும் தாவரங்களை நடுவதன் மூலமே காடு போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியும்.

2 அடி இடைவெளி இருக்கும் வகையில் மரக்கன்றுகளை நடவு செய்வது விரும்பத்தக்கது. இன்னும் நெருக்கமானால் அடர் காடு விரைவில் உருவாகும். ஒரே வகை மரங்களை அடுத்தடுத்து நடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

ஹோஸ் பைப்பின் மூலம் தண்ணீர் செடியின் சகல பாகங்களுக்கும் படும் வகையில் விசிறி அடித்தபின் அடியில் தாராளமாக விடவேண்டும். மழையில்லா காலங்களில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள், தண்ணீர் வழங்கினால் போதுமானது. அதன் பின்னர் எவ்வித பரமரிப்பும் தேவைப்படாது. காடு தன்னிறைவு பெற்ற ஒன்;றாகிவிடும். ஏராளமான நுண்ணுயிர்கள் மற்றும் பல்வேறு இன பறவைகள் வாழும் சரணாலயமாகவும் மாறிவிடும். பறவைகளால் நாம் நடாத புதிய வகை மரங்;களும் கூட அங்கு வந்து விடும்.

மரக் கன்றுகளை நட்டபின் அவை வளைந்து போகாமல் இருப்பதற்காக தடிகளை ஊண்ற வேண்டும்.

மரக் கன்றுகளைச் சுற்றி புதர் செடிகள் மற்றும் பல்வேறு கொடி வகைளை நடவு செய்ய வேண்டும். மரக் கன்றுகளைச் சுற்றி வைக்கல் மற்றும் கொக்கோ பீட் (coco peat/ coir pith) மூடாக்காகப் (Mulch) போட வேண்டும். அதன் பின்னர் மரக் கன்றுகளுக்கு இடையில் வைக்கல், இலைச் சருகுகள், மரத்தூள் ஆகியவற்றை மூடாக்காகப் போட வேண்டும். கொக்கோ பீட் என்பது தேங்காய் நார் தூள். மண் இளகி, மரக் கன்றுகள் வேர் விட்டு விரைந்து வளர உதவுவதுடன் நீரையும் பிடித்து வைத்துக் கொள்கிறது. அதனால் மண்ணில் ஈரம் அதிக காலம் நிலைத்து நிற்க உதவுகிறது.

மூடாக்கு பாவிப்பதன் மூலமும் தண்ணீர் பயனை குறைக்க முடியும். மூடாக்கு, நீர் ஆவியாதலைக் குறைக்கும், களைச் செடிகள் வளர்வதை கட்டுப்படுத்தும், மண்ணுயிர்களுக்கு ஆதாரமாயிருந்து மக்கி உரமாகிவிடும். மரக்கன்றுகளுக்கு இடையில் அரை அடி உயரத்தில் வைக்கோல் பரப்பி வைத்தால் மண் சில மாதங்களில் பண்பட்ட ஒன்றாக மாறிவிடும்.

ஜப்பானின் தாவரவியலாளர் அகிரா மியாவாகி உருவாக்கிய அடர் காடுகள் இன்று உலகம் முழுவதிலும் தோற்றம் பெற்றுள்ளன. ஜப்பானின் இன்னும் ஒரு வேளாண்மை அறிஞரான மசனோபு ஃபுக்குவோக்கா (Masanobu Fukuoka) உழவு இல்லாத, மண்வெட்டி தேவைப்படாத இயற்கை விவசாய முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். அவரது தரிசுநில மேம்பாட்டு முறையும் நூறு சதவீத இயற்கை வேளாண்முறையும் இன்று உலகம் முழுவதிலும் போற்றப்படுகிறது. இயல்முறை வேளாண்மை, எதுவும் செய்யாத வேளாண்மை என மாசனோபு ஃபுக்குவோக்கா முறை கொண்டாடப்படுகிறது.

புக்குவோக்காவின் முறையின் கீழ், சரியான சூழல் அமைத்துக்கொடுக்கப்படும்போது விதைகள் உழவு செய்யாமல் முளைக்க வைப்பது சாத்தியமாகிறது.

தன்னுடைய நிலம் இருபத்தைந்து ஆண்டுகளாக உழவு செய்யப்படவே இல்லை என்றும் உரம் போடப்படவில்லை என்றும் அவர் ஒரு தடவை பெருமைப்பட்டுக் கொண்டார்.

மழைக் காலத்தில், நெற்கதிர்கள் முற்றி அறுவடைக்குத்; தயாராகும் போது ரை, மற்றும் பார்லி விதைகளை அவர் அவ்விடத்தில் தூவுவார். சில வாரங்களில் நெல் அறுவடை முடிவடைந்ததும் வைக்கோலை நிலத்தின் மீதே போட்டுப் பரப்பி விடுவார்.

நெற்பயிரிடும் போதும் இவ்வாறான வழியை அவர் பி;ன்பற்றினார். மழைக்காலப் பயிர்களான பார்லி மற்றும் ரை ஆகியவை, மே மாதத்தில் அறுவடை செய்யப்படுகின்றன. இந்தப் பயிர்கள் முதிர்வதற்கு இரு வாரங்களுக்கு முன்னதாக, நெல் விதைகளை அந்த வயலில் வீசி விடுகிறார். பார்லி மற்றும் ரை அறுவடை செய்யப்பட்டு, அவை போரடிக்கப்பட்ட பின், அவற்றின் வைக்கோலை அதே வயலில் பரப்பிவிவார்.

இப்படி ரை, பார்லி, நெல் ஆகியவற்றை மாற்றி மாற்றிப் பயிரிடும் இந்த முறைக்கு உழவு அவசியம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாசனோபு ஃபுக்குவோக்கா, ஜப்பானில் புராதன காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விதைப்பந்து அல்லது விதையுருண்டை (seed dumplings/ seed ball) முறையிக்கு உயிர் கொடுத்தார். மண், உக்கிய உரம் இவற்றை சற்று நீர் கலந்து, சிறிய உருண்டைகளாகப் பிடித்து, உருண்டையினுள் விதையைச் செருகி, நேர்த்தி செய்யப்பட்;ட பின், நடவு செய்யும் போது, பயிர் அடர்த்தியாகவும், செழிப்பாகவும் வளர்வதையும் நல்ல விளைச்சல் கிடைப்பதையும் அவர் அனுபவத்தில் கண்டார்.

விதைப்பந்தின் மூலம் இன்று உலகம் முழுவதும் காடுகள் வளர்க்கப்படுகின்றன. வளமான மண் 5 பங்கு, மாட்டுச் சாணம் 3 பங்கு, கீரை போன்ற சிறுதானிய விதைகளையும் நன்றாகக் கலந்து நீர் சேர்த்து மாவு போன்று பிசைந்து சிறிய உருண்டடைகளைச் செய்து, அவற்றின் நடுவில் மர விதைகளை நுழைத்து, பின்னர் உருண்டைகளை ஒரு நாள் முழுவதும் நிழலில் வைக்க வேண்டும். அப்பொழுதுதான் உருண்டைகள் உதிர்ந்து போகாது கெட்டியாகும். பின்னர் வெய்யிலில் காய வைக்க வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்பட் விதைப் பந்துகளை மரங்கள் எங்கு வளர்க்கப்பட வேண்டும் என விரும்பும் இடங்களில் வீசினால் போதுமானது. மழை பெய்யத் தொடங்கியதும், மண் கரைந்து மர விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். கீரை, மூலிகை விதைகள் வளர்வதால் மர விதைகள் போட்டி போட்டுக் கொண்டு வளர்கின்றன. சிறுதானியங்கள் மூலம் பலனும் கிடைக்கிறது.

கால் நடைகள் காணப்படும் இடங்களில் வீசப்படும் விதை பந்துச் செடிகள் விலங்குகளுக்கு உணவாகக் கூடும் என்பதால் அவற்றின் நடமாட்டம் இல்லாத இடங்களில் அவற்றை வீசவேண்டும். வேம்பு, நொச்சி, ஆமணக்கு போன்ற கால்நடைகள் உண்ணாத மரங்களை விதை பந்து மூலம் உருவாக்க முடியும்.

வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான் என்று கூறிய ஒளவை காலத்தில் மழை தாராளமாகப்
பெய்தது. இன்று மழையை வரவழைப்பதற்காக மரங்களை வளர்ப்பது அவசியமாகிறது.

வீட்டுக்ககொரு மரம் வளர்ப்போம் என்ற கடந்த கால வாசகத்தை, ஆளுக்கு ஒன்றல்ல, பல மரங்களை வளர்க்க வேண்டும் என மாற்றுவதுடன், செயலிலும் காண்பிக்க வேண்டியது அனைவரதும் கடமையாகின்றது. காலம் கடக்குமுன் எம்மை மாத்திரமல்ல, எதிர்கால சந்ததியினரையும் மரங்களை வளர்த்து பாதுகாப்போம்.

மர வளம் பெருகட்டும். அதனால் மழை தாராளமாகப் பொழியட்டும். ஆனந்த வாழ்வு மலரட்டும்.






சட்டத்தரணி மு.சண்முகநாதன்





 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்