மரணிக்கின்றதா திருவாதிரை விண்மீன்?

கனி விமலநாதன் B.Sc


திருவாதிரை!

சோதிடத்தால் எங்களிற் பலருக்கு தெரிந்திருக்கும் நட்சத்திரம், அதாவது விண்மீன். தொடர்ந்து வரும் இப்பகுதியில் நட்சத்திரம் என்பதற்குப் பதிலாக விண்மீன் என்றே பாவிக்கிறேன், தமிழில். இந்த விண்மீன் எங்களது வான்மண்டலத்தில் சோதிடம் கூறும் மிதுன இராசியில் உள்ள ஒரு அழகிய, பெரிய விண்மீன் ஆகும். வான்பரப்புகளில் எங்கள் கண்களுக்குத் தெரியும் பத்தாவது வெளிச்சம் கூடிய விண்மீன். அண்மைக் காலங்களில் இந்தத் திருவாதிரை நட்சத்திரத்தைப் பற்றிய பல செய்திகள் பல ஊடகங்களிலும் வருவதை அறிவீர்கள். சில ஊடகங்கள் திருவாதிரை ஒளியிழந்து கொண்டு வருகிறது என்று மெதுமையாகக் கூறுகின்றார்கள்.  சில ஊடகங்கள் இந்த விண்மீன் வெடித்துச் சிதறப் போகுகிறது எனக் கூறுகின்றன. வேறு சிலரோ அந்த விண்மீன் வெடித்துச் சிதறியே விட்டது என்றும் ஊகிக்கிறார்கள். வானவியலாளர்கள், சோதிடர்கள் எனப் பலரது கவனத்தையும் ஈர்த்துக் கொண்ட திருவாதிரை எனது கவனத்தையும் ஈர்த்துக் கொண்டது. அதனால், திருவாதிரை பற்றிய அறிவியல் பார்வை ஒன்றினை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

திருவாதிரை, ஓரையன் என்று கூறுகின்ற, ஒறியன் (Orion) என்கிற விண்மீன் தொகுதியில் உள்ள விண்மீன். ஓறியன் என்பது வில்லேந்தும் போர்வீரனின் ஒருவனின் உருவமான விண்மீன் தொகுதியாகும். (அருகில் உள்ள படத்தைப் பார்த்துத் தெளிந்து கொள்ளலாம்.) பொதுவாகவே வானவெளியிற் தென்படும் வெளிச்சம் கூடிய விண்மீன்களை இணைத்துப் பார்க்ககையில் அவை சில வடிவங்களைக் காட்டும். இப்படியான 88 உருவங்களை வானவியலாளர்கள் காட்டுவர். இந்த உருவ ஒப்பீடுகள், வானவியலாளர்கள் விண்மீன்களை இலகுவாக இனங்காணவும், அவை பற்றிய விபரங்களைத் தம்முள் பகிர்ந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும். அப்படியான ஒரு உருவம்தான் இந்த ஒறியன் விண்மீன் தொகுதியும். இதிற் குறிப்பாக 7 ஒளிர்வான விண்மீன்கள் இருப்பினும் அவற்றில் மூன்று விண்கள் அதிக வெளிச்சமானவை.  அந்த மூன்றிலும் இரண்டாவது வெளிச்சம் கூடிய விண்மீனாக அந்தப் போர்வீரனின் தோட்பட்டையில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் விண்மீன்தான் எங்களின் திருவாதிரை என்கிறார்கள்.

இந்த ஒறியன் விண்மீன்கள் மனிதரின் பழைமையுடன் மிகவும் இணைப்புடையவை. குறிப்பாக இவை எகிப்தியரின் பிரமிட் விடயங்களில் பெரிதாக் கூறப்படுகின்றன. எகிப்தின் மணற்பரப்புகளில் எழுந்து நிற்கும் மூன்று பிரமாண்டமான பிரமிட்களும் ஒறியனின் ஒளிர்வு கூடிய மூன்று விண்மீன்களின் நிலைகளுக்கும் ஒப்பாக இருப்பதை வல்லுனர்கள் காட்டுகின்றார்கள். (அருகில் உள்ள படம் எகிப்தின் முப்பெரும் பிரமிட்களுக்கும் ஒறியன் விண்மீன்களுக்குமான ஒப்பினைத் தெளிவாகக் காட்டுகிறது.) பிரமிட்களின் உள்ளாக ஓடும் சிறிய இரகசியப் பாதைகள் இந்த ஒறியனின் மூன்று விண்மீன்களை நோக்குபவையாக இருப்பதையும் ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள் அந்த வல்லுனர்கள். மேலும் அந்நாளின் எகிப்தியரின் அறிவியல் வெளிப்புகளுக்கு ஒறியன் விண்மீன்களின் கோள்களில் ஒன்றில் இருந்து வந்த வேற்றுக்கிரக மனிதர்கள்தான் காரணர்களாக இருக்க வேண்டும் எனவும் கருதுபவர்கள் உண்டு. இதன் அடிப்படையில் வெளிவந்து சக்கை போடு போட்ட திரைப்படமான Star Gate என்பது பற்றி நீங்களும் கேள்விப்பட்டடிருக்கீர்கள், பார்த்திருப்பீர்கள்.

இப்படியான அடிப்படைச் சிறப்புகளையுடைய திருவாதிரை விண்மீனுக்குத்தான் இப்போது சிக்கல் வந்துள்ளது. நாமறிந்த காலத்தேயிருந்து எங்களது விண்மீன் பரப்பில் பத்தாவது வெளிச்சம் கூடிய விண்மீனாக இருந்தது திருவாதிரை. இன்று ஒளிர்செறிவில்; 24ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த மாற்றம்தான் திருவாதிரை தனது முடிவுகாலத்தில் உள்ளது என்பதைக் காட்டிக் கொடுத்தது. இந்த விபரத்தைப் புரிந்து கொள்வதற்காக விண்மீன்கள் பற்றிய அறிவியல் விடயங்கள் சிலவற்றைத் தெரிந்து கொள்வோம்.

வான்வெளியிலே பல மில்லியன் ஒளியாண்டு நீளக் குறுக்குப் பரப்பளவில் இருக்கும் நெபுலாக்கள் என்கிற மிகவும் பெரியதான தூசுக் கூட்டங்கள் பல இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் தனித்தனியே ஈர்ப்பின் விளைவினால் சிலகாலத்தின் பின்னர் நெருக்கமாகின்றன. இதன் விளைவாக நெபுலா ஒன்று இருந்த இடத்தில் பல விண்மீன்கள் பிறக்கின்றன, தோன்றுகின்றன. இப்படியாகப்; பிறந்த விண்மீன்கள் பலதரப்பட்ட பருமன்களிலும் இருக்கும். சில மிகவும் பருமன் கூடியவையாக, ஒளிர்வு கூடியவையாக இருக்கும் இவை நீல நிறத்திற் காணப்படும். வேறு சில பருமன் சற்றுக் குறைந்து நடுத்தரப் பருமனிற் காணப்படும். இவை ஒளிர்வு சற்றுக் குன்றி, வெண்மை அல்லது மஞ்சள் நிறத்தனவாக இருக்கும். இன்னமும் பருமன் குறைந்த விண்மீன்கள், ஒளிர்வு குன்றிச் சென்னிறமாகத் தெரியும். இவ்வண்ணமாக ஒருகாலத்தில் பருமன் கூடிய விண்மீனாகத் தோன்றியிருந்த விண்மீன்தான் இந்தத் திருவாதிரை. (நடுத்தரப் பருமனில் தோன்றிய விண்மீன்தான் சூரியன் என்கிற எங்களின் கதிரவன்.)

'பிறப்பவை எல்லாம் இறக்க வேண்டும்) என்பது பேரண்டத்தினுள் உள்ள அனைத்துக்குமான பொது நியதி என்பர். இதற்கு விண்மீன்களும் விதிவிலக்கல்ல. வண்மீன்களும் சிலகாலம் ஒளிர்ந்துவிட்டு இறந்து போகின்றன என்பது அறிவியல் உண்மை. இங்குதான் இயற்கையின் அடுத்த தொடரான விளையாட்டுகள் வெளிப்படுகின்றன. பாரம் கூடிய, நீல நிறத்தில் ஒளிர்ந்த விண்மீன்கள் விரைவில் இறக்கத் தொடங்குகின்றன. எப்படியெனில் பிறந்து சில நூறு மில்லியன்; வருடங்களில் இறந்து விடுகின்றன. அப்படி இறப்பதும் இலேசாக நடந்து விடுவதில்லை. முதலில் அவ்விண்மீன் பென்னாம் பெரிய, அதி இராட்சத விண்மீனாகப் பெருத்துவிடும். அத்துடன் சிவந்த நிறமாகவும் மாறிவிடும். இப்படியான விண்மீன்களை 'சிவப்பு அதிஇராட்சத விண்மீன்கள்' என்கிறார்கள். இப்படியாகத் வருகின்ற சிவப்பு அதிஇராட்சத விண்மீன்கள் அதிக காலத்திற்கு இருப்பதில்லை. இன்னமும் சில நூறு மில்லியன் வருடங்கள் வானிலே இருந்த பின்னர் 'சுப்ப நோவா' என்னும் பெருவெடிப்புக்குள்ளாகி, வெடித்துச் சிதறிவிடும். இப்படியாக இறந்து கொண்டிருக்கும் பாரமான விண்மீன் ஒன்றின் சிவப்பு அதிஇராட்சத விண்மீன் ஒன்றுதான் திருவாதிரை விண்மீன்

இனி திருவாதிரையின் எங்களுடனான தொடர்புகளைப் பார்ப்போம். அறிவியல், மனிதருக்கு அதிகம் போனால் 200,000 வருட வரலாறே உள்ளதெனக் கூறுகின்றது. அதன்படி, மனிதர்கள் அறிந்த நாளில் இருந்தே திருவாதிரை விண்மீன் வானில் இருக்கின்றது. அதாவது, எங்களுக்குத் தெரியாமலே இறந்து கொண்டிருக்கின்ற சிவப்பு அதிஇராட்சத விண்மீன்தான் திருவாதிரை. இது கதிரவனைப் போல் 15 மடங்கு பாமானது. ஆத்துடன் கதிரவனைப் போல் 1000 மடங்கு விட்டம் கொண்ட அதி இராட்சத விண்பொருளாகும். புவியில் இருந்து கிட்டத்தட்ட 740 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. இதன் பின்னால் உள்ள சங்கதி என்னவெனில் திருவாதிரை விண்மீனைக் காண்பதற்கு எங்களுக்கு 740 வருடங்கள் எடுக்கும். இன்று நாங்கள் பார்ப்பது 740 வருடங்களின் முன்னர் இருந்த திருவாதிரை விண்மீனையே. (மேலே உள்ள படத்தில் இருந்து திருவாதிரைக்கும் எங்களின் கதிரவனுக்குமான பருமன்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம். சிவப்பு  நிறத்தில் இருப்பது திருவாதிரை, ஒரு குட்டிப் பொட்டுப் போல இருப்பது எங்களின் சூரியன். திருவாதிரையின் ஆங்கிலப் பெயர்  டீநவநடபநரளந ஆகும்.)

இனி, திருவாதிரையின் மரணம் தொடர்பான விடயங்களைப் பார்ப்போம். சிவப்பு அதிஇராட்சத விண்மீன்கள் அடிக்கடி தங்கள் இயல்புகளில் மாற்றங்கள் காட்டும் 'மாறியல்பு விண்மீன்கள்' ஆகும். இந்த மாறும் இயல்பின் முற்றிய நிலையே சுப்பநோவா வெடிப்பாகும். திருவாதிரையும் அவ்வண்ணமே நடந்து கொண்டிருப்பதை வானவியலாளர்கள் அவதானித்துக் கொண்டு வருகிறார்கள். அதன் உச்சம்தான் இப்போது காணப்படும், நான் முன்னர் குறிப்பிட்ட ஒளிர்வு நிலை வேறுபாடு. அடுத்த நிலை சுப்பநோவா வெடிப்பு ஆகும். எனவே புவியினரைப் பொறுத்தவரையில் திருவாதிரை விண்மீன் இறக்கும் நிலைக்கு வந்துவிட்டது. ஆனாலும் இன்னமும் முற்றாக இறந்து விடவில்லை என்றே நம்புவோம். ஏனெனில், திருவாதிரை விண்மீன் இறந்து அதாவது வெடித்துச் சிதறி, 740 வருடங்களின் பின்னரே எங்களுக்குத் தகவல் வந்து சேரும். இன்று வரையிலான தகவல்களின்படி, 740 வருடங்களுக்கு முன்னராக திருவாதிரை விண்மீன் வெடித்திடவில்லை என்பது தெரிகிறது.

விஞ்ஞானிகள் இந்த விடயத்தில் ஏன் அதிக ஆர்வமாக இருக்கிறார்கள் என்று நீங்கள் அதிசயப்படலாம். விஞ்ஞானிகளைப் பொறுத்தவரையில் சிவப்பு அதிஇராட்கத விண்மீனின் சுப்பநோவா நிகழ்வு என்பது இதுவரையில் கொள்கை நிலையறிவாகவே இருக்கின்றது. விஞ்ஞானிகள் சில சுப்பநோவாக்களைக் கண்டிருந்தாலும், அவையெல்லாம சுப்பநோவா நடந்து முடிற்த பின்னரே அறியக் கூடியதாக இருந்தது. ஆனால் திருவாதிரை விண்மீனின் விடயம் வேறு விதமாக உள்ளது. திருவாதிரை விண்மீனின் வெடிப்பு நிகழ்வினைக் காணக் கூடியதாக இருந்தால் விஞ்ஞானிகளுக்கு அது ஒரு பெரும் நல்வாய்ப்பாக இருக்கும். அதனால் வானவியலாளர்கள் ஒவ்வொரு கணமும் திருவாதிரையை அவதானித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

திருவாதிரை விண்மீனின் சுப்பநோவா வெடிப்பாபை 740 வருடங்களில் பின்னர்தான் புவியில் உள்ளவர்கள் தங்களின் வெற்றுக் கண்களால் பார்க்கக் கூடியதாக இருக்கும். அந்நிகழ்வானது குறைந்தது ஒரு மாதத்திற்காயினும் ஒரு முழுநிலவின் பருமனில் வானிலே தெரியும். அதன் பின்னர் மெதுமெதுவாக மறைந்து போயிடும்.

திருவாதிரை விண்மீனின் சுப்பநோவா வெடிப்பின் மாதிரியை விஞ்ஞானிகள் அருகில் உள்ள படத்திற் காட்டுகிறார்கள்.  

எந்தவொரு சுப்பநோவா வெடிப்பின் போதும் பெருமளவு சக்தி வெளிவிடப்படும். அந்த வகையில் 50 ஒளியாண்டு தூரத்துள் உள்ள விண்மீனில் சுப்பநோவா நிகழ்ந்தால் அப்போது வெளிவிடப்படும் நியூற்றினோ, சக்தி என்பவற்றால் புவியின் உயிரினங்கள் அனைத்துமே அழிந்துவிடும் என்பது விஞ்ஞானத்தின் கணிப்பு. நல்லகாலம், திருவாதிரை விண்மீன் 740 ஒளியாண்டு தொலைவில் இருப்பதால் அதன் சுப்பநோவாவின் போது வெளிவீசப்படும் சக்தியால் எங்களுக்கு எந்தவொரு பாதிப்பும் எப்போதும் வராது. இப்படியாகப் பல சுப்பநோவாக்களின் நியூற்றினோக்களும் சக்தியும் எங்களைக் கடந்து போயின என்று விஞ்ஞானக் குறிப்புகள் கூறுகின்றன. அதுமாத்திரமல்ல, சுப்பநோவாவின் பின்னராக, அவ்விடத்தில் ஒரு பெரும் தூசுக் கூட்டம் ஒன்று தோன்றி மெதுமெதுவாக விண்வெளியினுள் பரவும். இத்தூசுக் கூட்டத்தில் வெடித்த சிவப்பு அதிஇராட்சத விண்மீனினுள் உண்டாக்கப்பட்ட பல தனிமங்களும் காணப்படும். இதனால் அந்த விண்மீனின் திணிவினால் ஆன மொத்தத் திணிவின் தாக்கம் பெரிய அளவில் மாற்றங்களைத் தராது என்பதும் குறிப்பிடத் தக்கது. இனி,அறிவியற் பார்வையில் இருந்து கொஞ்சமாய் சற்று விலத்துகின்றேன்.                                      

இதுவொர் அறிவியற் பார்வையாக இருப்பினும், சோதிடத்தின் பக்கமும் மெதுவாக எட்டிப் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில் திருவாதிரை விண்மீன் வெடித்துச் சிதறி இறந்து போனால், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த எங்களின் கதி என்ன? எனப் பயந்து கலங்குவோரையும் கண்டுள்ளேன். நானறிந்த வரையில் அவர்களுக்குத் திருப்தியான பதிலெதையும் இப்போது சோதிடர்களாற் கூற முடியவில்லை என்றே கூற முடிகிறது. ஆனால், திருவாதிரை நட்சத்திரம் இருந்த இடத்தில் கிட்டத்தட்ட அதனது பாரமான தூசுக் கூட்டமொன்று இருக்கும் என்று கூறமுடியும். தன்னொளிர்வில்லா அத் தூசுக் கூட்டம் திருவாதிரை விண்மீன் காட்டிய காரயங்களை எல்லாம் செய்யுமா என்று என்னாலும் கூற முடியவில்லை. ஆனாலும், இவ்விடத்தில் சோதிடம் பற்றிய எனது சில கருத்துக்களையும் பார்ப்போம். 

சோதிடம் என்பது ஞானிகள் சிலர் தங்களின் ஞானத்தால் கூறிய விடயம் என்பார்கள் சிலர். அவர்கள் கூறியபடியே, கிரக நிலைகளுக்குப் பொருத்தமாக மனிதரின் இயல்புகள் அமையும் எனக் கூறுபவர்கள் பலர் உளர். ஆயினும் வானமண்டலத்தின் குறிப்பிட்ட சில விண்மீன்கள், விண்மீன் தொகுதிகள் என்பவற்றின் நிலைகளைப் பார்த்துப் புவியின் சூழல், மனிதர் உட்பட்ட உயிரினங்கள், என்பவற்றின் மாற்றங்களைப் பதிவு செய்து எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் கூறப்பட்ட ஒரு அறிவியல் விடயமதான் சோதிடம் எனலாம். இது கிட்டத்தட்ட இன்று அறிவியலின் புள்ளிவிபரத் தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டும் முடிவுகளுக்கு ஒப்பானது. உலகளாவிய சோதிடங்கள் எல்லாவற்றிக்குமே இதுதான் அடிப்படை. அதனால்தான் உலகின் பிரபலமான தொலமி, கெப்பிளர் போன்ற சோதிடர்களை இந்நாளில், அந்நாளின் பிரபல வானவியலாளர்களாகப் பார்க்கிறார்கள். இப்படியான சில விடயங்களை எங்களின் சங்கப் பாடல்களும் பதிவு செய்திருப்பதையும் நாங்கள் பார்க்கலாம். பங்குனி மாதங்களிற் எங்களுக்குத் தெரிகின்ற எங்களது திருவாதிரை விண்மீன் வட இந்தியாவில் நவம்பர் மாதமளவில்தான் விண்ணிலே தெரியும். அதனால் அதனை அவர்கள் திருவாதிரையை குளிர் விண்மீன் எனப் பொருள்படும்படியான 'ஆதரா' என்ற பெயரில் குறிப்பிடுகிறார்கள்.

எங்களின் சோதிடத்திற்கான கணிப்புகள் 2500 வருடங்களுக்கு முந்தியன. ஆனால் எங்களது நல்வாய்ப்பின்மையால் கடந்த 2500 வருடங்களாக விண்ணறிந்து குறிப்பெடுக்கும் வழக்கு எம்மிடையே அற்றுப் போய்விட்டதால் சேதிட விஞ்ஞான அறிவியல் தனது பாதையில் பட்டுப் போயிற்று என்றேதான் கூற வேண்டும். அதனால்தான் சோதிடத்தின் பல எதிர்வு கூறல்கள் திசை மாறிப் போவனாவக இருக்கலாம் என்பது எனது கருத்து.

சரி, எப்படியிருப்பினும், திருவாதிரை விண்மீன் விடயத்தால் பல அறிவியல் விடயங்களை அறிந்து கொள்ள முடிந்ததல்லவா! இத்துடன் இதனை முடித்துக் கொண்டு அடுத்த தடவையில் இன்னொரு நடைமுறை விடயத்துடன் வருகிறேன்.

நன்றி!

அன்புடன்,

கனி.




 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்