தமிழ் கூத்துக்கலையின்
தனித்துவத்தை உலகறியச் செய்தவர் பேராசிரியர் மௌனகுரு
ஏ.பீர் முகம்மது
(இலங்கை)
மௌனகுரு
அவர்கள் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியிலே1966ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியராக
தனது அரசபணியை ஆரம்பித்து இளைஞராக எங்கள் வகுப்புக்குள் நுழைந்தவர்
கவர்ச்சியான தோற்றமும் கலையைச் சுமந்த விழிகளும் மௌனகுரு என்ற பெயரும்
எங்களை ஒரு கை பார்த்தது. மழையிருட்டிலும் கொப்பிழக்கப் பாயாத அவரின்
கற்பித்தல் நுட்பம் இன்றுவரை அவரை எம்மோடு கட்டி வைத்திருக்கிறது.
பேராசிரியர் மௌனகுரு அவர்கள் தொடர்பில் வசதி கருதி மூன்று சிறு
தலைப்புகளாக இக்கட்டுரை எழுதப்படுகின்றது.|
1.மௌனகுரு அவர்களின் வாழ்க்கைச் சிறுகுறிப்பு
2. கல்விப் புலத்தில் அவரின் பங்கும் பணியும்
3. கலை இலக்கியம் மற்றும் பண்பாட்டுவெளியில் அவர் நிகழ்த்;திய
சாதனைகள்.
மட்டக்களப்பு அமிர்தகழியின் முகப்பில் சீலாமுனை என்ற கிராமம்
அமைந்துள்ளது. சிறிய நிலப்பரப்பு. இயற்கைச் சூழலும் நகர்ப்புறப்
பண்புகளும் பின்னிப்பிணைந்த மண். வடமோடிக் கூத்தின் தொட்டில் என
கற்றவர்களாலும் கலையறிந்தவர்களாலும் அழைக்கப்படும் இச்சின்னக்
கிராமத்தில் பெரிய வைத்தியர் சின்னையா அவர்களுக்கும் முத்தம்மா
அவர்களுக்கும் மௌனகுரு அவர்கள்
09.06.1943 இல் பிறந்தார். இவருடைய
தந்தை வைத்தியம், சோதிடம், மந்திரம் ஆகிய துறைகளில் ஊரில் மிகவும்
பிரசித்தமானவர். பலராலும் மதிக்கப்படுபவர். வீண்சண்டை போட்டதுமில்லை.
வீணாக வந்ததை விட்டதுமில்லை என்ற கொள்கையுடையவர். கிராமப்புறக்
கலைகளில் பாண்டித்தியமும் நாட்டமுடையவர். ஜீவப்பிரமைக்ய வேதாந்த
ரகசியம் இபகவத்கீதை ஆகிய நூல்கள்மீதான தொடர் வாசிப்பாளர்.
தாயுமானசுவாமிகள் இகுணங்குடி மஸ்தான் சாஹிபு பாடல்கள், ஹபீர்தாஸ்
சரித்திரம், சித்தர் பாடல்கள் என்று வாசிப்பால் தன்னை வளர்த்துக்
கொண்டவர். அத்வைத தத்துவம் சார்ந்த நூல்களை வாசிக்கும் அதேவேளை
இடதுசாரிக் கோட்பாட்டுப் பத்திரிகையான தேசாபிமானி பத்திரிகையை
வாசிப்பவர் என்ற தகவலும் உண்டு.
இவரின் தாய் முத்தம்மா பரந்த மனம் கொண்வர். மாரிஅம்மாள் மீதும்
மகாநரசிங்ஹ வைரவ சுவாமிகள்மீதும் அதீத பக்தி உடையவர். தனது சக்தியை
மீறி மற்றவர்களுக்கு உதவும் மனப்பாங்கு உள்ளவர். விருந்தோம்பல் அவரின்
விருப்பத்துக்குரிய பணி. முஸ்லிம் பிரதேசங்களில் இருந்து பொதிகளோடும்
பொட்டணிகளோடும் காலையில் இவ்வூருக்கு வருகைதரும் வியாபாரிகள் தங்களின்;
மொத்தப் பொருட்களையும் இவரின் வீட்டில் வைத்துவிட்டு சிறு சிறு
தொகைகளாக வெளியில் கொண்டு சென்று விற்பனை செய்துவிட்டு மாலையில் வீடு
திரும்பும் வழமையைக் கொண்டிருந்தனர். மௌனகுரு அவர்களின் தாய்வீடு
நம்பிக்கைக்குரிய இடம் என்பதே இதன் பொருள் கோடலாகும்
மௌனகுரு அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை அமிர்தகழி மெதடிஸ்த மிசன்
பாடசாலையில் கற்றார். ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பெற்று இடைநிலைக்
கல்வியை வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் தொடர்ந்தார் தமிழ் எம்.ஏ.
பட்டத்தை பேராதனை பல்கலைக்கழகத்திலும் கலாநிதிப் பட்டத்தை யாழ்ப்பாணம்
பல்கலைக்கழகத்திலும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை டிப்ளோமா
பட்டமும் பெற்றார்.
பேராசிரியர்
மௌனகுரு அவர்களின் துணைவியார் சித்திரலேகா. மட்டக்களப்பில் வாழ்ந்த
தமிழறிஞர் கணபதிப்பிள்ளையின் சிரேட்ட புதல்வி. மட்டக்களப்பு
பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் பெண்ணியவாதிகள் பலருடனும் நெருக்கமான
தொடர்புடன் இருப்பவர்.பெண்ணியம் சார்ந்த இலக்கியமும் எழுத்துகளும்
பணிகளுமாக இன்றுவரை ஓயாது இருப்பவர். சித்தார்த்தன் இவரது மகன்.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் மானுடவியல்துறையில்
பேராசிரியராகப் பணிபுரிகின்றார். கலைத்துவப் போக்கும் எண்ணமும்
உடையவர். மொத்தத்தில் மௌனகுரு அவர்களின் குடும்பமே ஒரு பல்கலைக்கழகம்
எனலாம்.
கல்விப் புலத்தில் அவரின் பங்கும் பணியும் என்ற அவரது வாழ்வின்
இரண்டாம் கட்டம் கல்முனை சாஹிறாக் கல்லூரியில் தொடங்குகின்றது.இவரின்
வருகையினால் இக்கல்லூரி 1969
இல் தனது முதல் தொகுதி மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பியது என்று ஒரு
கிராமத்துச் சிறுவனின் பயணம் எஸ்.எச்.எம்.ஜெமீலின் வாழ்வியல் என்ற எனது
தொகுப்பு நூலில் குறிப்பட்டுள்ளேன்.
தொடர்ந்து வெஸ்லி உயர்தரப் பாடசாலை, வந்தாறுமூலை மத்திய கல்லூரி,
யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி என்பவற்றில் ஆசிரியராகப்
பணியாற்றுகின்றார். இப்பாடசாலைகளிலிருந்து பல மாணவர்கள் பல்கலைக்கழகம்
செல்ல இவரின் ஆசிரியப் பணி உதவியுள்ளது. மூன்றாண்டுகள் பலாலி ஆசிரிய
பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகவும் கடமையாற்றியவர். சிலகாலம்
பாடநூற்சபையில் இருந்து கொண்டு பாடசாலைப் பிள்ளைகளுக்கான நூல்களை
ஆக்கினார்.
1983
இல் இருந்து யாழ் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத் துறை விரிவுரையாளராக
இணைந்ததன்மூலம் பல்கலைக்கழக வெளியில் உலாவரத் தொடங்கினார்.
பத்தாண்டுகள் அங்கு பணிபுரிந்தநிலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட
கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலை துறையின் தலைமைப் பதவியை
பொறுப்பெடுக்குமாறு அவரைக் கேட்டபோது தனது மண்ணின்மீது கொண்டிருந்த
பற்றுதலினால் அப்பதவியை 1992
இல் பொறுப்பெடுத்து அரும்பணி புரி;ந்தவர். கலைப் பீடாதிபதியாகவும்
பேராசிரியராகவும் பதவி உயர்வு பெற்று தனது அறுபத்தைந்தாவது வயதில்
2008
இல் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
42
வருடஅரச பணி அன்றுடன முடிவுக்கு வந்தது.
கலை இலக்கியம் மற்றும் பண்பாட்டுவெளியில்
அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி சிறிது நோக்குவோம்.
செல்லையா அண்ணாவியாரின் பாசுபதாஸ்திரம் என்ற வடமோடிக் கூத்தின்
அனுபவத்துடன் மௌனகுரு அவர்கள்
1961
இல் பல்கலைக் கழகம் செல்கிறார்.
அன்றிலிருந்து இன்றுவரையான அவரின் நாடகப் பயணத்தை பின்வருமாறு
ஒழுங்கமைக்கலாம் என்று நினைக்கிறேன்.
பேராசிரியர் சு.வித்தியானந்தனிடமும் மற்றும் கைலாசபதி, கா.சிவத்தம்பி
ஆகியோரிடமும் 1960களின்
முன்னரைப் பகுதியில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வைத்து அவர் பெற்றுக்
கொண்ட கூத்துக் கலைப் பயிற்சி அவரின் நாடகப் பயணத்தின்
முதற்கட்டமாகும். கர்ணன் போர், நொண்டி நாடகம், இராவணேஸ்வரன், வாலிவதை
ஆகிய நாடகங்களில் முக்கிய பாத்திரமேற்று நடிக்கிறார்.
இரண்டாம் கட்டமாக 1970களில்
தமிழ் நாடக அரங்கியல் வெளியில் மாற்றம் இடம்பெறுகிறது. எதையும்
சமூகவியல் நோக்கில் அணுகும் இடதுசாரியான பேராசிரியர் க.கைலாசபதியின்
வழிகாட்டலில் சமூகத்தின் சமகாலப் பிரச்சினைகளை முன்வைக்கும் ஊடகமாக
நாடக அரங்கியல் வளர்ச்சி பெறுகின்றது.
1980களில்
சிங்கள நாடகக் கலைஞர்களின் உறவும் உலக நாடக அறிமுகமும் மௌனகுரு
அவர்களுக்கு கிடைத்ததன் பயனாக 3ம்
கட்டம் ஆரம்பமாகின்றது. இங்கே மௌனகுரு அவர்கள் கூத்துக் கலையை நவீன
நாடகங்களுக்குப் பயன்படுத்துகின்றார்.
கூத்துக்கலையினை செந்நெறி வடிவத்துக்குள் கொண்டுவரும் முயற்சிதான்
தமிழ் நாடக அரங்கியலின் 4ம் கட்டமாகும். ஜப்பான் தேசத்து கபுகி மற்றும்
நோ நாடக வடிவங்கள் நவீனமயப்படுத்தப்பட்டு ஜப்பானின் தேசிய நாடக வடிவமாக
ஏற்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பாராட்டுப் பெறும்
நாடக வடிவமாகவும் அது மாற்றம் பெற்றுள்ளது. இதனை முன்னோடியாகக்
கொண்டுதான் இராவணேசனை உலகத் தரத்துடன் செந்நெறி வலயத்துக்குள் கொண்டு
வரும் முயற்சி மௌனகுருவால் மேற்கொள்ளப்பட்டது. இராவணேஸ்வரன் நாடகம்
சிங்கப்பூர், அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகளில் வீடியோ வடிவில்
காண்பிக்கப்பட்டது.
தமிழ் கூத்துமுறைகளின் அளிக்கைமுறையில் மாற்றம் செய்தவர் பேராசிரியர்
சு.வித்தியானந்தன் ஆனால் மௌனகுரு அவர்களோ அளிக்கை முறையிலும்
உள்ளடக்கத்திலும் மாற்றம் செய்தவர் அதன்மூலம் தமிழ் நாடக அரங்கியலை
புதிய திசையில் முன்நோக்கி நகர்த்தியவர். சிங்கள மக்களுக்கு மத்தியில்
இன்றுவரை பெரிதாகப் பேசப்படும் மனமே, சிங்கபாகு போன்ற நாடகங்களை
அளிக்கை செய்த பேராசிரியர் சரத் சந்திரவின் அரங்கியல் எல்லைகளை
மேவியவர் மௌனகுரு என்பது எலலோராலும் ஏற்கப்பட்டுள்ளது.
வடமோடி, தென்மோடி ஆட்டமுறைகளையும் பறைமேளம், வசந்தன், மகுடி ஆகிய
முறைகளை ஒன்று சேர்த்து கிழக்கு இசை தோற்றுவித்த மௌனகுரு அவர்கள்
தமிழருக்கென இன்னிய அணி
Tamil cultural Band
ஒன்றையும் உருவாக்கினார்.
மௌனகுரு அவர்களின் அரங்கியல் தொடர்பான புத்தாக்க வெளிப்பாடுதான்
அரங்கியல் ஆய்வுகூடம் ஆகும். வாண்மைமிக்க கலைஞர்களை அறிமுகம் செய்வதும்
அவர்களின் ஊடாக சிந்தனைமிக்க சிறந்த நவீன அரங்கப் படைப்புகளை தேடிக்
கண்டடையும் நோக்கிலும் மட்டக்களப்பில் 2011ம் ஆண்டு அரங்கியல் ஆய்வு
கூடம் ஒன்றினை நிறுவியவர். இந்த ஆய்வுகூடம் வரலாறு உள்ளவரை இவர்பற்றிப்
பேசிக் கொண்டேயிருக்கும்.
தமிழர் பண்பாட்டின் தொன்மை, கூத்துக் கலையின் வரலாறு, நவீன அரங்க
வரலாறு போன்றவற்றிலான அவரின் ஆய்வு முயற்சிகளும் சாதாரணமானது அல்ல.
எடுத்துக்காட்டாக இவர் எழுதிய 'மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்'
என்பதைக் கூறலாம். இவர் எழுதிய இருபத்தாறுக்கு மேற்பட்ட நூல்களுள் மிக
முக்கியமான நூலாக இது கருதப்படுகின்றது. 600 பக்கங்களைக் கொண்ட இந்நூல்
புலமையாளர்கள் பலராலும் பாராட்டப்படுகின்றது.
இவர் எழுதிய 'கூத்துக் கலை' என்ற நூல் பரதநாட்டியத்தில் பயிற்சி
வழங்குவதுபோலவே தமிழ்க்கூத்திலும் பயிற்சி வழங்கலாம் என்பதை
விளக்குகின்றது. இவரால்தான் தமிழ் கூத்துக்கலையின் தனித்துவம் உலகக்
கருத்தரங்குகளில் உச்சரிக்கப்படுகின்றது. தப்பி வந்த தாடிஆடு சிறுவர்
உலகத்துக்காக அவர் தந்த பரிசு ஆகும்.
இனநல்லுறவுக்கான இவரின் ஈடுபாடுகள்பற்றியும் பேசவேண்டியுள்ளது. மௌனகுரு
அவர்கள் கலையும் இலக்கியமும் இனநல்லுறவை பேணத்தக்க முறையில் அமைய
வேண்டும் என்ற கொள்கையுடையவர். 2010ம்
ஆண்டு எழுதப்பட்ட சாய்ந்தமருது வரலாறு என்ற நூலில்கூட அவர்பற்றிய
குறிப்பு உள்ளது. முழுக்க முழுக்க முஸ்லிம்கள் வாழும் ஒரு ஊரின்
சரித்திரத்தில் இவர்பற்றி எழுதப்படுவது என்பது சாதாரண விடயமல்ல.
சுவாமி விபுலாநந்தர் அழகியற் கற்கை நிறுவகத்தின் தொடக்க காலங்களில்
முஸ்லிம் மாணவர்களை அங்குள்ள துறைகளுக்கு உள்ளீர்ப்புச்
செய்யப்படுவதற்கும் கற்கை நெறிகளை அவர்கள் செவ்வனே பூர்த்தி செய்து
வெளியேறுவதற்கும் மௌனகுரு அவர்கள் ஆற்ற்pய பணிகள் இன்றுவரை முஸ்லிம்
மாணவர்களின் மனங்களில் செப்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2002
இற்குப் பின்னரான காலகட்டத்தில் மட்டக்களப்பு தேவநாயகம் அரங்கிலே
தர்மஸ்ரீ பண்டாரநாயகாவின் றோஜன் நகரத்துப் பெண்கள் என்னும் சிங்கள
நாடகம் அரங்கேற்றப்பட்டது. சிங்கள தமிழ் கலைஞர்களுக்கிடையிலான உறவும்
நல்லெண்ணமும் இதன்மூலம் மீண்டும் துளிர்விட மௌனகுரு அவர்கள்
காரணமாயிருந்தர்ர்.
2015ஆம்
ஆண்டு 'தேச நேத்துரு' (தேசத்தின் கண்) என்ற பட்டம் வழங்கிக்
கௌரவிக்கப்பட்டவர்.
கலைகளின் ஊடான இனஒற்றுமைக்காக ஜனாதிபதி விருது பெற்றவர். இவரது இரண்டு
ஆய்வு நூல்கள் கிழக்கு மாகாணப் பரிசு பெற்றது நான்கு நூல்கள் சாகித்ய
மண்டலப் பரிசு வென்றது. மூன்று தடவைகள் வாழ்நாள் சாதனையாளர் விருது
வென்றவர்.
ஆசிரியராக, பேராசிரியராக, கவிஞனாக, கலைஞனாக, நூற்றிமுப்பதுக்கு
மேற்பட்ட நாடகங்களையும் ஆற்றுகைகளையும் தந்தவராக, அரங்கியல் ஆய்வாளராக,
பொன்மணி திரைப்படத்தின் நடிகனாக, இருபத்தைந்துக்கு மேற்பட்ட நூல்களின்
ஆசிரியனாக இவ்வாறு பன்முக ஆளுமை கொண்டவர் பேராசிரியர் மௌனகுரு அவர்கள்.
கிராமப்புறத்து மக்களின் கரங்களில் இருந்த நாட்டுக்கூத்து இவரால்தான்
மத்தியதர வகுப்பினரின் மனதை வெல்லத் தொடங்கியது. இராவணேசன் இன்றுவரை
ஆறு தலைமுறைகளைக் கடந்து வந்து தமிழ் மக்களின் மனங்களில் அரியாசனம்
போட்டு அமர்ந்திருக்கிறது
(கல்முனையில் 07.03.2020ஆம்
திகதி கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஏற்பாடு
செய்யப்பட்ட 'பண்பாட்டியமும் கிழக்குப் பண்பாடும் என்ற தலைப்பிலான
நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஓய்வுநிலைப் பேராசிரியர்
சி.மௌனகுரு பற்றியதான எனது அறிமுக உரையின் செவ்விதாக்கம் செய்யப்பட்ட
கட்டுரை வடிவம். )
apeermohamed@gmail.com
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|