லெமூரியாக் கண்டம் (Lemuria Continent)

கனி விமலநாதன் B.Sc
 

1864ம் ஆண்டு பிலிப் லட்லி ஸ்கிலேட்டர் (Philip Lutley Sclater) என்ற ஆங்கிலேயர் ஓராச்சரியமான முடிவினை உலகினருக்குத் தெரிவிக்கிறார். இந்து மாகடலில் தென்னிந்தியாவிற்குத் தெற்காக அதனுடன் சேர்ந்த ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்திருக்கவேண்டும் என்றவர், அது மேற்கே ஆபிரிக்கா முதல் கிழக்கே அவுஸ்திரேலியா வரையிலுமாகப் பரந்திருந்த ஒரு உபகண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் கூறி அதற்கு லெமூரியா என்ற பெயரும் கொடுக்கின்றார். இதற்கு முன்னராக, 1844ல் ஜெவ்ரி செயிண்ட் என்பவரும் இப்பெருநிலப்பரப்புப் பற்றிக் குறிப்பிட்டிருந்த போதிலும், அவர் அதற்கான உறுதியான காரணத்தைக் கொடுக்காததால் அக்கருத்து வந்த வேகத்திலேயே அடிபட்டுப் போனது. இந்நிலையில்தான் இருபது வருடங்கள் கழித்து ஸ்கிலேட்டரின் இந்த முடிவு, பொருத்தமான காரணங்களுடன் வருகின்றது. ஸ்கிலேட்டரின் இம்முடிவினைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னர் சில விடயங்களைத் தெரிந்திருப்பது நல்லது என்பதால் அவற்றைப் பார்த்துக் கொண்டு தொடருவோம்.


 

 

 

 

 

 


அருகில் பிலிப் லட்லி ஸ்கிலேட்டரின் படம் உள்ளது.

பத்தொன்பதாம் நூற்றாண்டு உலகினருக்குப் பல அறிவியற் புதையல்களைப் பல்துறைகளிலும் தந்து கொண்டிருந்தது. அந்த நூற்றாண்டில்தான் டால்ரன் அணுக் கொள்கையைத் தந்தார், டார்வின் தனது கூர்ப்புத் தத்துவத்தை வெளிப்படுத்தினார், மத்திய கிழக்கின் தொல்பொருள் ஆய்வுகள் மனிதவினத்தின் வரலாற்றையே திரும்ப எழுதப் பண்ணக் கூடியதான அசீரிய, பாபிலோனிய, சுமேரியப் பண்டை நாகரீகங்கள் வெளிக் கொண்டு வரப்படுவதற்கான அத்திவாரங்கள் போடப்பட்டிருந்தன. இன்னமும் கால்ட்வெல் தமிழ்மொழி சமஸ்கிருதத்தின் கிளைமொழி அல்ல எனக் காட்டியதும் அந்த நூற்றாண்டில்தான். இப்படியாகப் பற்பல. இக்காலப்பகுதியில்தான். இந்த வரிசையில் The Quaterly Journal of Science என்ற சஞ்சிகையில் வந்த ஸ்கிலேட்டரின் அக்கட்டுரை அக்காலத்தில் உலகினரையே ஒரு உலுக்கு உலுக்கிப் போட்டது. அது பற்றி இனித் தெரிந்து கொள்வோம்.

மடகஸ்காரின் முலையூட்டிகள் பற்றிய ஆய்வுகள் செய்த ஸ்கிலேட்டரின் கண்களில் லீமர் (LEMUR) என்ற தேவாங்கினக் குரங்குகள் தென்படுகின்றன. இவ்வினம் அருகி வருகின்ற அரிய உயிரினமாகும். இரண்டரை அங்குலம் முதல் இரண்டரை அடி வரையான உயரம் கொண்ட இவ்விலங்கினத்தைப் பற்றி ஆய்வுகள் செய்தவருக்குப் பெரும் ஆச்சரியம் கிடைக்கிறது. இவ்வுயிரினத்தின் எலும்புப் படிமங்கள் (fossils) தென்னிந்தியாவிலும் மடகஸ்காரிலும் மட்டுமே கிடைத்திருந்தன. மேலும் இவ்வகை எலும்புப் படிமங்கள். அவுஸ்திரேலியாவிலும் கிடைத்திருந்தன எனவும் கூறுகின்றார்கள். மடகஸ்கருக்கு அருகில் இருந்த ஆபிரிக்காவிலோ அல்லது மத்திய கிழக்கு நாடுகளிலோ அவ்வெலும்புப் படிமங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இங்கு அவரை ஆச்சரியப்பட வைத்த விடயம் என்னவென்றால், மடகஸ்கார், இந்தியா, அவுஸ்திரேலியா நாடுகளுக்கு இடையில் இருந்த பெரும் கடல்தான். நீரில் நீந்திச் செல்ல முடியாத இந்தக் குட்டிக் குரங்கினம் இவ்விடங்களில் எப்படிப் பரந்து வாழ்ந்திருக்க முடியும்? பதில் சுலபமாக வந்தது. 20 வருடங்களுக்கு முன்னர் ஜெவ்ரி செயிண்ட் குறிப்பிட்ட பெருநிலப்பரப்பிற்கான சான்று இதுதான் என்றிவர் கூற, அந்நிலப்பரப்பிற்கு லெமூரியா எனப் பெயரும் கொடுக்கப்பட்டது.

40 மெய்யிரம் (மில்லியன்) ஆண்டு முன்னர் ஆபிரிக்காவில் வாழ்ந்த பழைய உலகக் குரங்கு (Old World Monkeys) என்ற இனத்தில் இருந்து கூர்ப்படைந்து வந்தவர்கள்தான் மனிதர்கள் என்று கருதப்படுகின்றது. கிட்டத்தட்ட அதேகாலங்களில் ஆபிரிக்கப் பகுதியில் வாழ்ந்த 'புதிய உலகக் குரங்குகள்' (New World Monkeys) என்ற இனத்தின் வழியில் கூர்ப்படைந்து வந்தவையாக லீமர் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவ்வினம், இந்நாட்களில் இந்துமா கடலில், கிழக்காபிரிக்காவில் இருந்து 400 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள மடகஸ்கர் மற்றும் அத்தீவை அடுத்துள்ள வேறு சில தீவுகளிலும் மாத்திரமே வாழ்கின்றது.

(லீமர் இன மிருகம் ஒன்றை அருகில் இருக்கும் படத்தில் பார்க்கலாம்) இவ்வினம் பல சிறப்பான இயல்புகளைக் கொண்டுள்ளது. அதிற் குறிப்பிட்டுக் கூறப்படக் கூடியது, அதன் அழகான நீல நிறமான கண்கள். நீல நிறக் கண்களை உடைய இன்னொரு மிருகம், சிறப்பு விலங்கான மனிதர் மாத்திரமே. ரஜினிகாந்த்; நடித்த தர்மயுத்தம்; படத்தில் மனிதரின் கண்களைத் தேங்காய் சீனிவாசன் Blue Roses எனக் குறிப்பிடுவதை நினைவு படுத்திப் பாருங்கள். சில பூனைகளுக்கும் நீல நிறக் கண்கள் இருப்பதாகக் கூறுகின்றனர். அடுத்த சிறப்பு என்னவெனில் சிறுசிறு குழுக்களாக வாழுகின்ற லீமர் இனத்தின் குழுவொன்றின் தலைமை ஒரு பெண் லீமரிடமே இருக்கும். ஆனாலும் குழுவாக வாழுகின்ற இவ்வினத்தில், இந்தப் பெண் தலைவர் எப்போதும் தன்னைத் தனிமையிலேயே வைத்துக் கொள்ளும் என்பதாகும்.

ஸ்கிலேட்டரின் லெமூரியாக் கண்டம் 19ம் நூற்றாண்டிற் பெரும் பரபரப்புகளின் மத்தியில் பெரும்பாலானவர்களினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அக்காலத்தில் டார்வினின் கூர்ப்புக் கொள்கை பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மனிதவினத்தின் தோற்றத்திற்கான தேடல் பெரும் பரபரப்பாகவும் மும்மரமாகவும் நடந்து கொண்டிருந்தது. அத்தேடலின் வழியாக ஆபிரிக்காவில், அதுவும் கிழக்காபிரிக்காவிலேயே மனிதவினம் சுமார் இருநூறாயிரம் ஆண்டு முன்னர் தோன்றிப் பின்னர் மெதுமெதுவாக அங்கிருந்து மற்ற இடங்களுக்குப் பெயர்ந்து சென்றார்கள் என்றும் முடிவு கொண்டார்கள். அதனை ஆபிரிக்க வெளியேற்றக் கொள்கை (Out of Africa Theory) எனவும் கூறிக் கொண்டார்கள். ஆனாலும் அம்முடிவில் ஒரு சிக்கலும் இருந்தது. அச்சிக்கல் இந்நாள் வரையில் முழுமையாகத் தீர்க்கப்படவில்லை.

ஆதிமனிதர் எனக் கருதப்படும் நிமிர்ந்த இனமான கோமோ இரெக்சசுக்கள் (Homo Erectus)  என்பது அஸ்ரலோபிதிக்கஸ் (Australopithecus) என்ற இனத்தில் இருந்து கூர்ப்படைந்தவை என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆனால் இவ்விரு இனங்களுக்கும் இடையிலான இனத்தின் படிமங்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அதனைத் தவறிய இணைப்பு (Missing Link) எனப் பெயரிட்டு உண்மையில் இன்னமும்தான் தேடச் செய்கிறார்கள். இந்நிலையில் ஏன்ஸ்ர் ஹெக்கெல் (Ernst Heackel)  என்ற ஜெர்மனியர் இந்த Out of Africa  கொள்கையாளர்களுக்கு அதிர்ச்சித் தகவல் ஒன்றினைத் தருகிறார். 'இந்தத் தவறிய இணைப்பினை நீங்கள் கண்டறியப் போவதில்லை. ஏனெனில் மனிதவினம் ஆபிரிக்காக் கண்டத்தில் அல்ல, லெமூரியாக் கண்டத்தில்தான் உண்மையாகத் தோன்றியது. அங்கிருந்துதான் ஆபிரிக்கா முதல் மற்ற இடங்களுக்கெல்லாம் மனிதர்கள் பரவினார்கள். அதனால் எங்களின் தவறிய இணைப்பு இன்று கடலுள் மூழ்கிக் கிடக்கின்றது. அதாவது, அந்தத் தவறிய இணைப்பின் எலும்புப் படிமங்கள் எல்லாம் இந்துமா கடலினுள் உள்ளன' என்ற கருத்தினைக் கூறினார்.

அக்காலத்தில் ஏன்ஸ்ர் ஹெக்கெலின் இக்கொள்கை அத்துறை வல்லுனர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது. ஆனாலும் ஒருசிலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட Out of Lemuria என்ற அக்கொள்கை பல்வேறு காரணங்களினால் நாளடைவில் மறைந்து போயிற்று. அல்லாமலும் இவரது Out of Lemuria என்ற கொள்கையினை மறைக்கவும் செய்கிறார்கள். இப்படியிருக்கையில்தான் கடும் முயற்சிகளின் ஊடாக 1965ல் ஆபிரிக்காவில் அந்தத் தவறிய இணைப்பின் எலும்புப் படிமங்கனைக் கண்டு பிடித்தார்கள். அவ்வினத்திற்குக் கோமோ கபிலிஸ் (Homo habilis) எனப் பெயரிட்டும் கொண்டார்கள். ஆனால் மனிதத்தனமும் குரங்குத்தனமும் கொண்ட இனமாகக் கருதப்படும் கோமோ கபிலிசின் முழுமையான எலும்புப் படிமங்கள் இன்னமும் அகப்படாது மனிதருக்கு 'டிமிக்கி' விட்டுக் கொண்டுதான் இருக்கின்றன எனச் சில ஆய்வாளர்கள் கூறிக் கொள்கிறார்கள்.

இவை இப்படியிருக்க லெமூரியாக் கண்டம் என்ற கொள்கைக்கு இன்னமும் பல இடைஞ்சல்கள் பல கோணங்களில் இருந்தும் வந்தன. குறிப்பாக 'ஆபிரிக்க வெளியேற்றம்' என்ற கொள்கையைத் தக்க வைப்பதற்கான முயற்சியாகவே அவை இருப்பன போன்று இருந்தன, இருக்கின்றன. அக்காலத்திலே புவியியல் அறிவின் வளர்ச்சி புவியின் அமைப்புப் பற்றிய தெளிவினைத் தந்தது. அதன்படி புவியின் மத்தி உயர் வெப்பம் காரணமாகச் சூடான குழம்பாக இருக்க, அதனை மூடிய வண்ணமாக தகடுகள் போன்ற அமைப்புக் கொண்ட புவியின் மேற்பரப்பு உள்ளது என்பது தெரியவந்தது. இத்தகடுகளில்தான் கண்டங்கள், கடல்கள் எல்லாம் இருக்கின்றன. இத்தகடுகள் புவியின் உள்ளேயுள்ள குழம்பின் கொந்தழிப்பினால் அசைந்து கொண்டே இருக்கின்றன. இந்தத் தகடுகளின் அசைவினால் மெதுமெதுவாக கண்டங்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன என்ற விளக்கம் வருகின்றது. அதன் விளைவாக வந்த கருத்துத்தான் 'கண்ட நகர்வு' என்ற கொள்கை. அந்தக் கண்டக் கொள்கையை ஆதாரமாகக் காட்டி, ஒருகாலத்தில் இந்தியாவுடன் ஒட்டியிருந்த ஆபிரிக்காவும் அவுஸ்திரேலியாவும் இந்தக் கண்ட நகர்வினால் பிரிந்து போக அவ்விடத்தைக் கடல் சூழ்ந்து கொண்டது என்றார்கள். இதனால்தான் லீமர் இனத்தின் எலும்புகளின் படிமங்களை இந்தியாவிற் காணக் கூடியதாக இருந்தது என்றொரு விளக்கத்தைக் கொடுத்தார்கள். அங்கு நிலப்பரப்பு ஏதும் கடலுள் மூழ்கிவிடவில்லை என்பது அவர்களின் வாதமாக இருந்தது.

இந்தக் கருத்தின் வழியில் ஒரு சிறு தவறு உள்ளது. இவர்கள் குறிப்பிட்ட, ஒன்றாக இருந்த கண்டங்கள் பிரிந்து போனது 150 மெய்யிரம் (மில்லியன்) வருடங்களின் முன்னராகும். அப்படி ஒன்றாக இருந்த கண்டத்தை ஆங்கிலத்தில் Super Continent Gondwana என்கிறார்கள்.

அருகில் அறிஞர்கள் கருதிய ஒற்றைப் பெருங் கண்டத்தின் எளிய விளக்க அமைப்பு உள்ளது. கண்டங்களின் வடிவினை ஒட்டி வைத்தது போன்ற இத்தனிக் கண்டத்தின் காலத்தில் டைனோசர்கள் கூட உலகிற் தோன்றியிருக்கவில்லை. ஆனால் ஆபிரிக்க, அவுஸ்த்திரேலியக் கண்ட நகர்வுகளுக்கான காலமாக இருநூறாயிரம் வருடங்களைத்தான் காட்ட முடியும். அப்படியாயின் மாத்திரமே மடகஸ்கர் தீவுகளில் மட்டும் லீமர்கள் ஒதுங்கியிருக்க முடியும். எனவே கண்ட நகர்வுக் கொள்கையானது, லீமர்கள் பரவி வாழ்ந்த காலத்தை விளக்குவதாக இருக்க முடியாது. மாறாக ஸ்கிலேட்டர் கூறியபடியேயான லெமூரியா கடலில் மூழ்கியதே என்பது ஏற்புடையதாகும்.

இதேவேளையில் கடைசியாக பன்னீராயிரம் வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கடைசிப் பனிக்காலத்தின் 'துருவப் பன pஉருகல்' காரணமாகக் கடல் மட்டம் சடுதியில் 600 அடி உயர்ந்தது என்ற அண்மைக்காலக் கண்டுபிடிப்பு ஸ்கிலேட்டரின் கொள்கையை வலுப்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

இதனைவிட இன்னொரு இடைஞ்சலும் லெமூரியா என்ற பெயரில் இருந்தது. பசுபிக்கடல் பகுதியில் 'மூ' என்ற பழங்குடியினர் லெமூரியா என்ற பெரும் நிலப்பரப்பில் வாழ்ந்தார்கள் என்றும் அந்த லெமூரியா பின்னர் கடல்கோள் ஒன்றினால் பசுபிக்கடலில் அமிழ்ந்து போக, அந்த இனமும் முற்றாக அழிந்து விட்டது என்ற கதை ஒன்றும் முன்னரே தென்னமரிக்கர்களிடம் உண்டு. இது பிளாட்டோ குறிப்பிட்டிருந்த அல்லாண்டியா என்ற கண்டம் அத்திலாந்திக் கடல்நீரில் அமிழ்கையில் நடந்தது என்றும் கூறுகிறார்கள். இந்த லெமூரியாக் கதையும் ஸ்கிலேட்டரின் இந்து மாகடலின் லெமூரியாவிற்கு இடைஞ்சல் தந்து கொண்டு இருந்தது.

'விமானா' என்ற பிரபலமான புத்தகத்தை எழுதிய டேவிட் சைல்ட்றெஸ் (David Hatcher Childress) என்ற அமெரிக்கர் தனது நூல்கள், கட்டுரைகள் போன்றவற்றில் பசுபிக் மாகடலில் இருந்ததாகக் கருதப்படும் லெமூரியா பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த லெமூரியர்கள் அறிவியலில் மிக்க உயர்ந்த நிலையில் இருந்தார்கள் என்று கூறுகிறார். இவர் இன்னமும் ஒருபடி மேலே போய் பசுபிக்கில் இருந்த இந்த லெமூரியாதான் 'எங்களது இராவணன்' வாழ்ந்த இடம் என்றும் கூறுகின்றார். அதவது இராவணன் பசுபிக்கின் லெமூரியன் என்பது இலரது கருத்து. மேலும் இவரது கண்ணோட்டத்தில் பசுபிக்கில் இருந்த லெமூரியருக்கும் அற்லாண்டின் அற்லாண்டியருக்கும் இடையில் நடந்த போரே இராமாயணக் கதை என்பதுமாகும்.

டேவிட் சைல்றெஸ் போன்றவர்களின் எல்லாவற்றிற்குமே மேலை நாட்டவர்களே காரணம் என்ற கருத்தில் எழுந்ததுதான் இந்த 'மொட்டந்தலைக்கும் முழங்காலுக்குமான தொடர்புக் காட்டல்'. பசுபிக்கின் அந்த லெமூரியாவும் ஸ்கிலேட்டரின் இந்த லெமூரியாவும் பெயர்ச் சிக்கற்பட்டுக் கொண்டிருந்ததும் இந்துமாகடலின் லெமூரியாக் கருத்து இல்லாமற் போகக் காரணமாக அமைந்து விட்டது. இத்தகைய காரணங்களினால் ஸ்கிலேட்டரின் இந்துமாகடலின் லெமூரியா கொள்கை விடுபட்டுப் போயிற்று.

அருகில் டேவிட் சைல்ட்றெஸ்சின் விமானா என்ற நூல் காட்டப்பட்டுள்ளது. மிகவும் சுவாரசியமான இதுபோன்ற பல நூல்களை அவர் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவையிப்படியிருக்க, இது தொடர்பான இன்னொரு பகுதிக்குள் நுழைவோம். நான் பாடசாலை மாணவனாக இருக்கையில் சிறுவர்கள் ஒருவரையொருவர் கிண்டல் செய்வதற்காக 'மந்திக் குரங்கு, மதவடித் தேவாங்கு' என்ற சொற்றொடரைப் பாவிப்பார்கள். ஆனால் தேவாங்கு என்றால் என்னவென்று அப்போது எனக்குத் தெரியாது. ஏதோ குரங்கு போன்ற ஒரு மிருகம் என்று மட்டுமே மனதுள் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தேன். தேவாங்கு என்பதை உடல் இளைத்தது போன்ற மிருகம் எனவும் கூறுவர். இப்போது இந்தத் தேவாங்கு என்ற சொல் எவ்விதம் தமிழரிடையே வந்தது என்பது குறித்து ஆச்சரியப்படுகிறேன். ஒருவேளை ஸ்கிலேட்டரின் லீமர்க் கருத்தின் பின்னராக முளைத்ததோ? ஆனால் லீமர் (Lemur) எனக் கூறப்படும் அந்தத் தேவாங்கு என்ற சொல் எவ்வளவு பெரிய உலகளாவிய உண்மையை வெளிக்கொண்டு வந்தது என்பதை அவ்வேளையில் நான் அறிந்திருக்கவில்லை. இந்த லீமர் என்ற இனத்தை லெமூர் எனவும் சிலர் அழைப்பர்.

இந்த லெமூரியா என்ற கண்டம் பற்றிய கருத்து தமிழர்களாகிய எங்களிடம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முன்னரே இருந்தது. பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிட்ட குமரிதேசம் இருந்த இடத்தைத்தான் ஸ்கிலேட்டரின் லெமூரியா குறிப்பிடுகிறது என்பதைக் கண்ட தமிழர்கள் மத்தியில் குமரிக்கண்டம் என்ற பெயர் பெரிதாக எடுபடத் தொடங்கியது. இது கொடுத்த தென்பினாலே என்னவோ இந்நாட்களில் குமரிக்கண்டம் என்ற பெயரினைக் கேட்டதுமே தமிழர்கள் மனங்களில் ஒருவகையான பெருமித உணர்வொன்று ஏற்படும். இருப்பினும், தமிழரதும் தமிழினதும் பெருமைகளைக் கூறுகின்ற இப்பெயரின் உள்ளேயுள்ள விடயங்களையிட்டு ஐயுறும் பலருள் நம்மவர்களும் உள்ளனர். இவர்களில் ஒருசிலர் குமரிக்கண்டம் என்றொன்று இருந்ததேயில்லை என்கின்றனர். குமரிக்கண்டம் என்பது சில தீவுகளின் தொகுதி என்போரும் உளர். வேறுசிலர் குமரிக்கண்டம் என்பது மெசப்பத்தேமியப் பகுதியில் இருந்த சுமேரியா என்ற நிலப்பரப்பு என்றும் தமிழர்கள் சுமேரியரின் வழித்தோன்றல்கள் என்றும் கூற விழைகின்றனர். ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது கருத்துகளுக்கு ஏற்றது போன்ற சான்றுகளையும் கேள்விகளையும் முன்வைக்கவும் செய்கின்றார்கள். இந்நிலையில்தான் எனக்குக் குமரிக்கண்டம் மேல் ஆழ்ந்த பிடிப்பு ஏற்பட்டு எனது பார்வை அப்பக்கமாகத் திரும்பியது. எனது இப்பார்வையில் எனக்குத் தென்பட்ட தெளிவுகளைக் கூற விரும்புகிறேன்.

குமரிக்கண்டம் பற்றிய எனது பார்வையை அடுத்த தடவையில் உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். சரிதானே!

அன்புடன்,
கனி.

தொடர்புகளுக்கு 647 782 2827.



கனி -  647 782 2827.  
 

 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்