ஈழம் வந்த
கண்ணகி
கலாநிதி
பால.
சிவகடாட்சம்
கண்ணகி என்னும் பாண்டிநாட்டுத் தமிழச்சியின் கதையைச் சேர நாட்டுப்
புலவரான இளங்கோ அடிகள் சிலப்பதிகாரம் என்னும்
காப்பியமாகப் பாடிவைத்தார். இளங்கோவின் சிலப்பதிகாரத்துக்கும் ஈழத்தவர்
ஆக்கிய கண்ணகி கதைக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. சிலப்பதிகாரத்தின்
வஞ்சிக்காண்டம் கூறும் செய்திகள் ஈழத்தவரின் கண்ணகி கதையில் முற்றாகத்
தவிர்க்கப்படுள்ளன. அதேசமயம் சிலப்பதிகாரத்தில் கூறப்படாத பலவிடயங்கள்
ஈழத்தவரின் கண்ணகி அம்மன் கதையில் பேசப்படுகின்றன.
குணமான கண்ணகையைக் கோவலனார்
தான்செய்
மணமாலை தன்னை வகுத்துரைப்பக் - கணபதிதன்
பாதாரவிந்தம் பலநாளும் நெஞ்சிலுன்னிக்
காதாரக் கைதொளு வோங்காண்
கோவலர்கதை ஆறாவது மீட்சிக்காண்டம்
குளிர்ச்சிக்காதை காப்பு வெண்பா (ஏட்டுச்சுவடி)
மதுரையில் பிறந்து பத்தினிப்பெண்ணாக உருவெடுத்த பெண் தெய்வம்
மாமரத்தில் மாம்பழமாகத் தோன்றிய கதை சிங்கள மக்கள் மத்தியில்
பேசப்படுகின்றது. கனிந்திருந்த மாம்பழங்களை ஒரு துணியினால் மூடிப்
பொருத்தமான சுபநேரத்தில் புத்தபிரானுக்குச் சமர்ப்பித்த ஒருபெண்
அப்புனிதமான தர்மத்தின் பலனாகத் தான் ஒரு தங்க மாம்பழமாகப்
பிறக்கவேண்டுமென வேண்டிக்கொண்டதாகப் பத்தினி பதும என்னும் சிங்களக்
காவியம் கூறுகின்றது. பாண்டியன் அரண்மனையில் மாம்பழவடிவில் கண்ணகி
தோன்றியதாகவே ஈழத்தமிழரின் கண்ணகி கதையிலும் பேசப்படுகின்றது.
மதுரையில் பிறந்த கண்ணகியின் பெயர் ஈழத்தமிழர் மத்தியில் கண்ணகையாக
மாற்றம் பெறுகின்றது
திங்கள்முக வம்பிகையாந்
தேமாங் கனிவடிவாம்
எங்குலக் கண்ணகையை எண்ணியே - துங்கமிகு
பொற்பகலாதே புகலும் பேரோங்கு மிக்கதைக்குக்
கற்பகமே முற்களிறே காப்பு
கோவலர்கதை ஆறாவது மீட்சிக்காண்டம்
குளிர்ச்சிக்காதை காப்பு வெண்பா (ஏட்டுச்சுவடி)
கண்ணகியின் தெய்வத்தன்மையை நிலைநிறுத்தும் வகையில் அவளது கதை ஈழத்தில்
மாற்றம் பெறுகின்றது. மாங்கனி வடிவில் தோன்றிய தனது பெண்குழந்தையினால்
மதுரைக்கு ஆபத்துவரும் என்று சோதிடர்கள் கூறியதைக் கேட்ட பாண்டியமன்னன்
அக்குழந்தையை ஒரு பெட்டியில் வைத்துக் கடலிலே விட்டுவிட்டான்.
அப்பெட்டியைக் கண்டெடுத்த கப்பலோட்டிகள் மாநாகன் (மாநாய்கன்) என்னும்
கப்பல் வியாபாரிடம் ஒப்படைத்ததாக ஈழத்தின் கண்ணகி கதை கூறுகின்றது.
கண்ணகி செல்வந்த வணிகனின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த போதும் பிறப்பால்
அவள் ஒரு தெய்வப்பெண் என்பது ஈழத்தவரின் வாதம். மானிடப்
பெண்ணொருத்தியைத் தெய்வமாக வழிபடுவதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
எனவேதான் இங்கு கண்ணகியின் பிறப்பு பற்றிய வித்தியாசமான கதை
புனையப்பட்டுள்ளது. மகாபாரதத்தில் திரௌபதி அம்மன் யாகத்தீயினில்
தோன்றியதாகக் கூறப்படுவதை இவ்விடத்தில் நினைவுகூரலாம்.
கண்ணகியை மணம் முடித்த கோவலன் அவளை நெருங்கும்போதெல்லாம் அவர்கள்
இருவரின் நடுவில் ஒரு தீப்பிழம்பு தோன்றி இருவரையும் சேரவிடாது
தடுத்ததாக ஈழத்தில் வழக்கில் இருக்கும் கண்ணகி கதை கூறுகின்றது.
கண்ணகியைப் புனிதமான ஒரு தெய்வப்பெண்ணாகஇ அம்மனாக மக்கள் மனதில் பதிய
வைக்கப் புனையப்பட்ட கதையாகவே இதனையும் கருதமுடியும்.
கண்ணகியை உமைஅம்மையின் ஒரு அவதாரமாக இலங்கை வாழ் தமிழ்மக்கள் முழுமையாக
ஏற்றுக்கொண்டனர். ஈழத்தவரின் கோவலனார் கதையில் வரும் பாடல் ஒன்று
கண்ணகியைக் கயிலைநாதரின் தேவியாகவே போற்றிநிற்கின்றது.
சீர்கொண்ட கயிலாய வாசரிடமே மருவு தேவியருள் ஓர் பிறப்பிற்
செப்பரிய பாண்டியன் புத்திரிய தான கதை செந்தமிழில் யாம்பாடவே
பேர்கொண்ட முருகேசன் வள்ளிதெய்வானையும் பெருமையுறு வடுகேசனும்
பிரபலம்புரி வீரபத்திரனும் அரிநாதர் பெண் என்னும் இரண்டு திருவும்
கார்கொண்ட குழல்முத்து மாரியும் மகனான காத்தவிராய தேவும்
கருதுங் கறுப்பனா ரொடு குருநாத சாமியுங் கன்னிமார் நாச்சிமாரும்
வேர்விண்ட தெனுமழை பொழிந்தெம்மை பெட்பிணுந் திருப்பாதமே போற்றினேன்
வருதுயர்கள் தீர்த்து நிதமுங் கருணை பொழியு முகிலென வருளதே.
(ஏட்டுச்சுவடி)
சிங்களமக்கள் கண்ணகியைப் பத்தினித் தெய்வமாகவும் கூடவே
பௌத்தமதத்தினதும் ஈழநாட்டினதும் காவற்தெய்வமாகவும் வழிபடுகின்றனர்.
தொற்றுநோய்களில் இருந்து மக்களைக் காப்பாற்றும் தெய்வமாகவும் மழையைத்
தருவிக்கும் தெய்வமாகவும் கண்ணகை அம்மன் என்னும் பெயரில் இலங்கைவாழ்
தமிழ்மக்கள் கண்ணகியை வணங்குகின்றனர்.
நாட்டில் மழைகுறைந்து வரட்சி ஏற்படும்போதும் தொற்றுநோய்கள் பரவி
மக்களையும் பசுக்களையும் வாட்டும்போதும் பாமரமக்கள் கண்ணகை யம்மனிடம்
தங்கள் குறைதீர்க்க சரணடைந்தனர். அம்மனுக்கு நேர்த்திக்கடனாகப் பொங்கல்
பொங்கிப் படையல் இட்டு வணங்கினர். நாளடைவில் கண்ணகை அம்மன் மாரியம்மனாக
வழிபடப்பெற்றாள். மாரி என்பது மழையைக் குறிக்கும். அதுமட்டுமல்லாது
பெரியம்மை, சின்னம்மை, செங்கமாரி, மங்கமாரி, வயிற்றுமாரி, கோமாரி
எனப்படும் தொற்றுநோய்கள் அம்மன் பெயரால் அறியப்படுவதையும்
கவனத்திற்கொள்ளலாம். வட இந்தியாவில் சீதளதேவி (குளிர் அம்மன்) அம்மை
முதலான தொற்று நோய்களில் இருந்து மக்களைக் காக்கும் தெய்வமாகப்
போற்றப்படுவதை இங்கு குறிப்பிடவேண்டும்.
முலையை அறுத்தெறிந்து மதுரையை எரித்துவிட்டு இரத்தம் சொட்டச் சொட்ட
வந்த கண்ணகியைக் கண்ட இடையர்குலப்பெண்கள் பசுவெண்ணெயை எடுத்து அவளது
இருமார்பிலும் பூசி அவளது வேதனயைக்குறைக்க முற்பட்டார்கள். அவர்களுக்கு
மனம் இரங்கிய கண்ணகி அந்த இடையர்குல மக்களைத் தான் என்றும்
காத்துநிற்பதாக உறுதியளித்ததாக இலங்கையில் வழக்கிலிருக்கும் கண்ணகி கதை
ஒன்றில் கூறப்படுகின்றது.
பசுமாடுகளுக்கு ஏற்படும் பசு அம்மை
(cowpox) என்னும் வலு குறைந்த அம்மைநோய்
முதலிலேயே தொற்றிவிடும் சாத்தியக்கூறு அதிகமிருப்பதால் இடையர்களுக்குச்
சின்னம்மை
(smallpox) தொற்று ஏற்படுவதில்லை என்றும்
இதை அறிந்துகொண்டதன் பலனாகவே எட்வார்ட் ஜென்னர்
(Edward Jenner)
1796
ஆம் ஆண்டில் அம்மைக்குத் தடுப்பூசி போடும் நோய்த்தடுப்பு முறையை
வெற்றிகரமாக அறிமுகப்படுத்தினார் என்றும் கூறப்படும் மருத்துவ
வரலாற்றுச் செய்தியை இடையர்களுக்குக் கண்ணகி கொடுத்த வரம் பற்றிய கதை
நினைவூட்டுகின்றது.
இடையர்களைத் தவிர தாழ்த்தப்பட்ட மக்களுள் ஒருசாரார் அம்மன் கொடுத்த
வரத்தினால் தமக்குப் பொக்குளிப்பான், சின்னம்மை போன்ற தொற்று நோய்கள்
ஏற்படுவதில்லை என்று கூறிக்கொள்வதையும் இவ்விடத்தில் நினைவுகூர
வேண்டியுள்ளது.
கண்ணகிக்கு இலங்கையில் கோயில் தோன்றிய வரலாறு ஒவ்வொரு கோயிலிலும்
ஓவ்வொருவிதமாகக் கற்பிக்கப்படுகின்றது.
பாண்டிய நாட்டை விட்டு நீங்கிய கண்ணகி ஐந்து தலை நாகமாக உருமாறி
முதலில் நயினாதீவுக்கு வந்தாள் என்றும் பின்னர் சுருவில்,
வட்டுக்கோட்டை வழியாக நவாலி, களுவோடை, சுதுமலை, சீரணி, அங்கணாமைக்கடவை,
அளவெட்டி, வற்றாப்பளை முதலான ஊர்களில் தங்கினாள் என்றும் கூறப்படும்
செவிவழிச் செய்திகள் பற்றி சுவாமி ஞானப்பிரகாசர் உட்படப் பலரும்
குறிப்பிட்டுள்ளனர். மேற்குறிப்பிட்ட ஊர்களில் எல்லாம் கண்ணகை
அம்மனுக்குக் கோயில்கள் கட்டப்பெற்றிருப்பதை அறியமுடியும். இலங்கையில்
கண்ணகி வந்து தங்கிய பத்தாவது இடமாகப் பத்தாப்பளை என்னும் இடத்தைச்
செவிவழிச்செய்திகள் சில சுட்டுகின்றன. இந்தப் பத்தாப்பளையே பின்னாளில்
வற்றாப்பளை எனமருவிற்று என்பர்.
சி.கணபதிப்பிள்ளை என்பார் தாம் எழுதிய பத்தினி வழிபாடு
என்னும் நூலில் இலங்கையில் கண்ணகிக்குக் கோயில்கள் உருவான வரலாற்றைப்
பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
'பத்தினித்தெய்வமாகிய கண்ணகிக்குக் கோயில் கட்டுவித்த சேரன்
செங்குட்டுவனின் அழைப்பின்பேரில் சேரநாடு வந்த இலங்கை மன்னன்
கயவாகுவிடம் சந்தனமரத்தால் செய்த கண்ணகி சிலையொன்றையும் சிலம்பையும்
சந்தனமரப்பெட்டியில் வைத்துக் கொடுக்கின்றான் சேரன் செங்குட்டுவன்.
வெற்றிவேற்செழியன் என்னும் பாண்டியன் கயவாகுவையும் சந்தனப்பெட்டியையும்
யானைமேல் ஏற்றி வேதாரணியத்தில் கொண்டுவந்துவிடுகின்றான். அங்கிருந்து
கப்பலில் புறப்பட்டு காரைதீவுக்கும் கீரிமலைக்கும் இடையிலுள்ள
திருவடிநிலையில் வந்திறங்கிய அரசனையும் கண்ணகி சிலை தாங்கிய
பெட்டியையும் பொதுமக்கள் வரவேற்று யானைகளில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச்
சென்றனர்.
கண்ணகி சிலை முதலில் மாகியப்பட்டி வழியாக அங்கணாமைக்கடவைக்குக்
கொண்டுவரப்பட்டது. அங்கே முதலாவது வழிபாடு நடத்தப்பெற்றது. பின்னர்
நாவற்குழியை அடுத்துள்ள வேலம்பிறையில் வைகாசிப் பூரணை விழா
நடத்தப்பெற்றது. அங்கிருந்து முல்லைத்தீவு திருகோணமலை மட்டக்களப்பு
ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும் சென்றது. கண்ணகி
சிலை ஊர்வலமாக எடுத்துச் சென்றபோது எதிர்ப்பட்ட ஊர்கள் தோறும்
கண்ணகிக்குக் கோயில்கள் கட்டப்பெற்றன. கண்ணகி உருவம் தாங்கிய சந்தனப்
பேழை இறுதியில் கதிர்காமம் எடுத்துச்செல்லப்பட்டு அங்கிருந்து
கண்டிக்கு வந்து சேர்ந்தது அங்கிருக்கும் கோவிலில் பத்தினித்
தெய்வத்தின் சந்தனப்பேழை வைக்கப்பட்டது'.
ஈழத்தில் கண்ணகியின் கதையை யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்தி
பரம்பரையினர் ஆட்சி செய்த காலத்தில் சகவீரன் என்னும் பெயருடைய ஒருவரே
முதன் முதலாகப் பாடிவைத்தார் என்பதை அறியமுடிகின்றது.
அவனிபுகழ் குடிநயினாப் பணிக்கனெனு மவன்மிகுந்தோன்
கவளமதக் களிற்றண்யல் காங்கேசன் தேவையர்கோன்
தவமென்ன விளங்குபுகட் சகவீரன் தாரணியிற்
சிவனருளா லிக்கதையைச் செந்தமிழ்ப்பா மாலைசெய்தான்
இக்கதை யாழ்ப்பாணத்தில் கோவலனார் கதை என்றும்
மட்டக்களப்பில் கண்ணகி வழக்குரை என்றும்
முல்லைத்தீவில் சிலம்பு கூறல் என்றும் அறியப்பட்டு
வந்துள்ளது.
யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் உள்ள குடாரப்பு என்னும் கிராமத்தைச் சேர்ந்த
கந்தர் வெற்றிவேலு என்பவர் ஆக்கிய கோவலன் காதை
என்னும் நூலிலும் ஈழத்தில் வழக்கில் இருந்த கண்ணகி கதை
கூறப்படுகின்றது.
கண்ணகியின் அடையாளம் சிலம்பு. இளங்கோவடிகள் தமது நூலுக்குச்
சிலப்பதிகாரம் என்றே பெயர் வைத்தார். ஈழத்தில் கூறப்படும்
கண்ணகி கதையில் கண்ணகி அணிந்திருந்த சிலம்புக்கும் ஈழத்துக்கும் மிக
நெருங்கிய தொடர்பு கற்பிக்கப்படுகின்றது. அதுவே ஒரு தனியான கதையாக
வெடிஅரசன் கதை என்னும் பெயரில் வழங்கப்படுகின்றது.
தன் மகள் கண்ணகிக்குச் சீதனமாக விலை உயர்ந்த ஆபரணம் ஒன்றைச்
செய்யவிரும்பிய மாநாய்கன் அவளது கால்களுக்குப் பொற்சிலம்பு செய்யத்
தீர்மானிக்கின்றான். சிலம்பினுள்ளே வைப்பதற்கு அபூர்வமான நாகமணிக்
கற்களை வாங்கி வரும்படி நவரத்தினங்களுக்குப் பெயர்பெற்ற இலங்கைத்
தீவிற்குத் தன் கப்பல் தலைவன் மீகாமனை அனுப்புகின்றான். ஒரு
கப்பற்படையுடன் இலங்கை புறப்பட்ட மீகாமன் வந்து இறங்கிய இடம்
மீகாமன்துறை என அறியப்பட்டது. மீகாமன்துறை நாளடைவில் 'மீகமுவ' என்று
மாறியது என்பர். இன்று நீர்கொழும்பு என்று அறியப்படும் இடமே இதுவாகும்.
அக்காலப்பகுதியில் நெடுந்தீவை ஆட்சிபுரிந்தவனும் முத்துக்குளிப்போரின்
(முக்குவர்) தலைவனுமாகிய வெடியரசனிடம் அபூர்வமான நாகமணிக்கற்கள்
இருப்பதாகக் கேள்விப்பட்ட மீகாமன் அவற்றை எப்படியாவது பெற
முயற்சிக்கின்றான். வெடியரசனுக்கும் மீகாமனுக்கும் இடையிலான போரில்
பெரும் உயிர்ச்சேதம் ஏற்படுகின்றது. மீகாமன் வெற்றிபெற்று
வெடியரசனிடமிருந்து தான் கைப்பற்றிய மாணிக்கக் கற்களுடன்
திரும்புகின்றான். இந்த மாணிக்கக் கற்களே கண்ணகியின் சிலம்புள்ளே
வைக்கப்படுகின்றன. அந்தச் சிலம்புக்கு அன்றுதொட்டு ஒரு தோஷம்
இருந்துகொண்டே வந்துள்ளது என்று கூறுகின்றார்கள் இலங்கை மக்களுள் ஒரு
சாரார்.
மீகாமனால் தோற்கடிக்கப்பட்ட வெடியரசனது குடிமக்களாகிய முக்குவர்
நெடுந்தீவைவிட்டு இலங்கையின் தென்கிழக்கே மட்டக்களப்பில் வந்து
குடியேறினர் என்றும் இதன் காரணமாகவே பிற்காலத்தில் இவர்கள் மத்தியில்
கண்ணகையம்மன் வழிபாடு நிலைத்து நின்றுவிட்டது என்றும் கூறப்படுகின்றது.
இவை அனைத்தும் மரபுவழிக் கதைகளாகவே இன்றும் பேணப்பட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
இன்று நாம் ஈழத்தில் காணக்கூடிய அம்மன் கோயில்களுட் மிகப்பெரும்பாலானவை
ஆதியில் கண்ணகையம்மன் கோயில்களாகவே இருந்திருக்க வாய்ப்புண்டு. ஒரு
காலத்தில் இலங்கையின் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் மேற்கிலும்
கண்ணகிக்குக் கோயில்கள் நிறைந்து காணப்பட்டன. பிற்காலத்தில் இவற்றுட்
பெரும்பாலானவை சைவர்களால் மாரிஅம்மன் கோயில்களாகவும் கத்தோலிக்க
கிறித்தவர்களால் மாதா கோயில்களாகவும் மாற்றம் பெற்றன. பெண்தெய்வமான
பத்தினித்தெய்வத்தை வழிபட்டுவந்த மக்கள் கத்தோலிக்க மதத்துக்கு
மாறியபின்னர் அப்பெண்தெய்வத்தை மேரிமாதாவாகக் கண்டு வணங்குவதில்
சிரமத்தை எதிர்நோக்கியிருக்கமாட்டர்கள் என்கிறார் கணநாத் ஒபயசேகர
என்னும் சிங்கள வரலாற்றாசிரியர்.தென்னிலங்கையில் பௌத்த சிங்களர்
மத்தியிலே பத்தினித் தெய்வத்துக்கு உரிய கோயில்களை இன்றும்
காணக்கூடியதாக உள்ளது.
மட்டக்களப்பில் இன்று ஏறக்குறைய நாற்பத்தாறு கண்ணகை அம்மன் கோயில்கள்
உள்ளன. எனினும் யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்த பெரும்பாலான கண்ணகி
கோயில்கள் பிற்காலத்தில் ராஜராஜேஸ்வரி, புவனேஸ்வரி, நாகேஸ்வரி,
நாகபூஷணி அம்மன் கோயில்களாகவும் முத்துமாரி அம்மன் கோயில்களாகவும்
மாற்றம் பெற்றுவிட்டன. இந்த மாற்றம் பரந்த அளவில் இடம்பெற்றதற்கு
ஆறுமுகநாவலர் காரணமாயிருந்தார் என்று கூறப்படுகின்றது.
உசாத்துணை:
கணபதிப்பிள்ளை.சி. (தொகுப்பாசிரியர்) பத்தினி வழிபாடு, விபுலாநந்த
அச்சகம், யாழ்ப்பாணம் 1978
கனகசபாபதி நாகேஸ்வரன், கண்ணகி வழிபாடும் இராஜராஜேஸ்வரி வழிபாடும்,
கொழும்பு-11, இலங்கை 2007
Gananath Obeyesekare, Between the Portuguese and the Nayakas: the
many faces of the Kandyan kingdom, 1591-1765
https://www.jstor.org/stable/j.ctt 1 qnw8bs.13
Gananath Obeyesekere, Cult of the Goddess Pattini (Chicago: 1984)
கண்டியில்
உள்ள
பத்தினி
அம்மன்
கோயில்
இன்று
இராஜராஜேஸ்வரி
அம்மன்
கோயில்
என்றழைக்கப்
பெறும்
புங்குடுதீவுக்
கண்ணகை
அம்மன்
கோயில்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|