இயற்கையுடன் இசைவுற வாழ்ந்த சங்கத்தமிழர்
கலாநிதி
பால.
சிவகடாட்சம்
இற்றைக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரேயே தாம் வாழும்
பிரதேசத்தை அப்பிரதேசத்துக்கே உரிய நீர்வளம் நிலவளம், தாவரங்கள்,
விலங்குகள் என்பவற்றோடு தாமும் சேரப்பெற்ற ஒரு சூழல்தொகுதியாக
அடையாளப்படுத்தியவர்கள் நம் தமிழ் மூதாதையர்கள். அவ்வாறு அவர்கள்
அடையாளப்படுத்திய ஐந்து சூழல்தொகுதிகளும் குறிஞ்சி, முல்லை. மருதம்,
பாலை, நெய்தல் என அந்தத்தத் தொகுதிகளுக்கே உரிய oru தாவரத்தின் மூலம்
அடையாளப்படுத்தப்பெற்றன.
தாம் வாழும் சூழலையும் இயற்கையையும் பேணிக்காத்து வந்த இம்மக்கள்
இயற்கை தந்த விளைபொருள்களயும் தம் உழைப்பையும் மட்டுமே நம்பி
வாழ்ந்தவர்கள். ஒரு
மரத்தையோ, செடியையோ, கொடியையோ பார்க்கும்போது அவர்களுக்கு ஏதாவது ஒரு
விலங்கின் ஞாபகமோ அல்லது மனித உறுப்பொன்றின் ஞாபகமோ வந்துவிடும்.
குவளைக் கண்களும், முல்லை அரும்புப் பற்களும் காந்தள் மெல்விரல்களும்
தமிழ் இலக்கியங்களில் இடம்பிடித்தமைக்கு இதுவே காரணம். தாவரங்களையும்
விலங்குகளையும் இணைக்கும் அற்புதமான உவமைகள் சங்க இலக்கியங்கள்
அனைத்திலும் பரவிக்கிடப்பதைக் காணலாம்.
சங்க இலக்கியங்களில் கூறப்படும் மரம் செடி கொடிகளை இனங்காணுவதில் சில
சிக்கல்கள் காணப்படுவதுண்டு. ஒரே தாவரம் பல்வேறு பெயர்களால்
அறியப்படுவதில் பிரச்சனை இல்லை. நிகண்டுகள் மூலம் ஒருதாவரத்துக்கு உரிய
பல்வேறு பெயர்களை அறிந்துகொள்ளமுடியும். எனினும் ஒன்றுக்கு மேற்பட்ட
தாவரங்கள் ஒரே பெயரால் அறியப்படும்போது பிரச்சனை ஏற்படுகின்றது.
தொண்ணூற்றாறு தாவரங்களை வரிசைப்படுத்தும் குறிஞ்சிப்பாட்டில்
கூறப்பட்டுள்ள மூன்று பெயர்கள் ஒரே தாவரத்தை அதாவது இப்போது
கார்த்திகைப்பூ என்றறியப்படும் பூவைக் குறிப்பனவாக தமிழ் ஆர்வலர்கள்
சிலர் இனங்கண்டுள்ளனர்.
கபிலரின் தாவரப் பட்டியலில் இடம்பெற்றுள்ள காந்தளும் கோடலும்
தோன்றியும் ஒரே தாவரத்தையே குறிப்பதாகக் கூறப்படுவதை ஏற்றுக்கொள்வது
கடினமாக உள்ளது.
குறுந்தொகையில் மதுரைக்கண்ணனார் தோன்றி எனப்படும் தாவரத்தின்
குவிந்த பூவைச் சேவலின்
கொண்டைக்கு ஒப்பிடுகின்றார்.
குவி இணர்த் தோன்றி ஒண்பூ அன்ன
தொகுசெந் நெற்றிக் கணங்கொள் சேவல்
-
குறுந்தொகை 107
தோன்றி
சேவல் கொண்டை
சேவலின் கொண்டையை ஒத்த பூக்களைக்கொண்ட ஒருவகை முருக்க மரத்தையே தோன்றி
எனக்குறிப்பிடப்படும் தாவரமாக இனங்காண முடிகின்றது. இம்மரத்தின் தாவர
விஞ்ஞானப்பெயர் Butea monosperma என்பதாகும். சுடர்ப்பூந்தோன்றி
என்னும் பெயரும் இத்தாவரத்துக்கே பொருந்துவதாகும். சேவலின் கொண்டையைக்
கார்த்திகைப்பூவுக்கு ஒப்பிடுவது அவ்வளவு பொருத்தமாகத் தெரியவில்லை.
குறுந்தொகையில் வரும் மற்றுமோர் அருமையான உவமை கருவிளைப்பூவையும்
மயிற்பீலியைம் பற்றியதாகும். தற்பொழுது காக்கணான்கொடி என அறியப்படும்
கொடியின் சங்ககாலப்பெயர் கருவிளை. இந்தக்கொடியின் நீலநிறப்பூக்களை
மயிலிறகில் காணப்படும் கண்போன்ற அமைப்புக்கு ஒப்பிடுகின்றார் கிள்ளி
மங்கலங்கிழார் என்னும் புலவர். கருவிளையின் தாவர விஞ்ஞானப்பெயர்
Clitoria terneata என்பதாகும்.
கருவிளை
மயிற்பீலி
நீலப் பைம் போது உளரிப் புதல
பீலி ஒண்பொறிக் கருவிளை
குறுந்தொகை 110
மயிலின் பாதங்களுக்கு நொச்சிமரத்தின் இலைகளை ஒப்பிடும் பாடல்கள்
இரண்டை நற்றிணையில் காணமுடிகின்றது. ஒரு பாடலை கயமனார் என்பவர்
பாடியுள்ளார். மற்றப்பாடலைப் பாடியவரின் பெயர் கிடைக்கவில்லை.
நொச்சி
மயில் அடி
மயில் அடி இலைய மாக்குரல் நொச்சி
பற்றி நற்றிணையின் 115ஆம் பாடலில் கூறப்படுகின்றது.
நற்றிணையின் 305ஆம் பாடலில்
மயில் அடி அன்ன மாக்குரல் நொச்சியும்
என்கிறார் கயமனார்.
சங்க இலக்கியத்தில் அடிக்கடி பேசப்படும் தாவரங்களில் கோங்கம் என்பதும்
ஒன்று. கோங்கின் மொட்டு இளம் பெண்ணின் மார்பகத்துக்கு
ஒப்பிடப்படுவதுண்டு. இந்த உவமை தோற்றத்தை மட்டுமே குறிப்பதாகும்.
“கொங்கு முகைத்தன்ன குவி முலை”
என்று அகநானூறும்
“வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகை வனப்பு ஏந்திய முற்றா இளமுலை”
என்று புறநானூறும்
“இலை இல் அம் சினை வண்டு ஆர்ப்ப முலை ஏர் மென் முகை அவிழ்ந்த
கோங்கின் தலை அலர்”
என்று குறுந்தொகையும் வர்ணிக்கின்றன.
கோங்கின் மொட்டு
கோங்கின் குடைப்பூ
கோங்கின் இலையை குடையோடு ஒப்பிடுகின்றது நற்றிணை. விதையை எலியின்
காதுக்கு ஒப்பிடுகின்றது புறநானூறு.
புல்லிதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப்பூ
நற்றிணை 48
வேனில் கோங்கின் பூம் பொகுட்டன்ன
குடந்தை அம் செவிய கோடு எலி யாட்டக்
புறம் 321
கோங்கு மரத்தின் தாவர விஞ்ஞானப்பெயர் Cochlospermum religiosum
என்பதாகும்.
சங்ககாலத்தில் ‘வாகை’ என்னும் பெயர் இருவேறு தாவரங்களுக்கு
வழங்கப்பட்டிருப்பதை அறியமுடிகின்றது. போரில் வெற்றி பெற்றவர்கள்
பெருமையுடன் சூடிக்கொள்ளும் வாகை பலரும் அறிந்த ஒன்று. அவ்வளவாகப்
புகழ் பெறாத வாகையும் ஒன்று இருந்தது. இதனைப் ‘புகழா வாகை’ என்கிறார்
ஒருபுலவர். இதனையே இன்று நாம் அகத்தி என்கிறோம். இந்த அகத்தியின்
பூக்களைக் காட்டுப்பன்றியின் வளைந்த கொம்புகளுக்கு ஒப்பிடுகின்றார் ஒரு
புலவர். பத்துப்பாட்டில் ஒன்றான கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய
பெரும்பாணாற்றுப்படையில் இடம் பெற்றுள்ளது இந்தப்பாடல்.
வாகைப்பூ (அகத்திப்பூ)
ஏனம் (காட்டுப்பன்றி)
“புகழா வாகைப் பூவின் அன்ன
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும்“
பெரும்பாணாற்றுப்படை
இப்படி எத்தனை எத்தனையோ அற்புதமான உவமைகள்.
இறுதியாக, செங்கால் நாரையைப் பார்த்தால்
பனங்கிழங்கையும் பனையின் கிழங்கைப் பார்த்தால் செங்கால்
நாரையையும் நினைவூட்டும் சத்திமுற்றத்துப் பலவரின் பாடலை இவ்விடத்தில்
குறிப்பிடாமல் விடமுடியுமா?
நாராய்
நாராய்
செங்கால்
நாராய்
பழம்படு
பனையின்
கிழங்கு
பிளந்தன்ன
பவளக்கூர்வாய்ச்
செங்கால்
நாராய்
கலாநிதி
பால.
சிவகடாட்சம்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|