பழைய இலக்கியங்கள் எல்லாமுமே பற்பல விடயங்களைக் கூறுகின்றவாக
இருக்கின்றன. பொதுவாகவே இலக்கியங்கள் புனைவுகளால் ஆனவை என்ற
கருத்து இருப்பினும் அவற்றின் ஊடாகப் பண்டைய மக்களைப் படம்
பிடித்துப் பார்க்கக் கூடியதாக இருக்கிறது. அவர்களின் வாழ்வு
முறைகளை, அவர்களின் வதிவிட அமைப்புகளை எல்லாம் ஓரளவுக்கு
இலக்கியங்களின் ஊடாகத் தெரிந்து கொள்ளலாம். இவ்விலக்கியங்கள்
வரலாற்றுச் சான்றுகளாக அமையாவிடினும் வரலாறுகளைத்
தேடிப்பிடிப்பதற்கான துருப்புகளாக இருக்கின்றன. அந்த வகையில்
இலக்கண, இலக்கியச் சுவை மிகைப்புக்கள் கொண்ட எங்களின் பழந்தமிழ்
இலக்கியங்கள் இனம் காட்டிய ஒன்றுதான் குமரிக்கண்டம்.
கி.பி. 2ம் நூற்றாண்டளவில் இளங்கோ அடிகளால் எழுதப்பட்ட
சிலப்பதிகாரம் என்ற காப்பியத்தில்
'அடியில் தன்நல வரசர்க் கிணங்கி வடிவேல் எறிந்த வான்படை பொறாது,
பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல்
கொள்ள வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு........' என்ற
வரிகள் குமரிக்கண்டம் இருந்தது பற்றிய விபரத்தைத் தருகின்றன.
புறநாநூற்றில்
'மலிதிரை ஊர்ந்து தன்மண்
கடல் வெளவலின் மெலிவ இன்றி மேல் சென்று மேவார் நாடு இடம்படப்
புலியொடு வில் நீக்கிப் புகழ் பொறித்த கிளர் கொண்டை....
(புறம் 104) என்ற பாடலும் 'குமரிக்கண்டம்' பற்றிக்
குறிப்பிடுகிறது.
கந்தபுராணம் கி.பி.
800களில்
காஞ்சிபுரத்தில் வாழ்ந்த கச்சியப்ப சிவாச்சாரியர் என்பவரால்
பாடப்பட்ட புராணம். இது சமஸ்கிருதத்தில் உள்ள 'ஸ்கந்த புராண'
என்பதின் தமிழ் வடிவம் என்றும் கூறப்படுகின்றது. பிராமணரான
கச்சியப்பர் எழுதிய (பாடிய) கந்த புராணம் பல்லவத் தமிழில் எனக்
கருதப்படும் கிரந்தத்தில்தான் எழுதப்பட்டது. எப்படியிருப்பினும்
ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டபடியால் கந்தபுராணம் காலத்திற்குக்
காலம் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டது. அப்படியாக வருகையில்
பதினைந்தாம் நூற்றாண்டுப் பதிப்பான கந்தபுராணத்தில்தான்
குமரிக்கண்டம் பற்றி முதன் முதலிற் கூறப்படுகின்றது என வடக்கின்
ஆய்வாளர்கள் சிலர் கூறுகின்றார்கள். இவர்கள் சிலப்பதிகாரம்,
புறநாநூறு, பட்டினப்பாலை போன்ற தமிழ் இலக்கியங்களின்
குறிப்புக்களைப் பற்றிப் பெரிதாகக் குறிப்பிடுவதில்லை.
இவையெல்லாம் ஸ்கிலேற்ரர் லெமூரியாக்கண்டம் பற்றிக்
குறிப்பிடுவதற்கு முன்னரான எங்களின் இலக்கிய வார்ப்புகள்.
ஸ்கிலேற்ரருக்கோ அல்லது லெமூரியாவில்தான் மனிதவினம் தோன்றியது எனக்
கூறிய ஹெக்கேல் மற்றும் ஸ்கோர் எலியர்
(Scott Elliot) என்பவர்களுக்கு இந்த
விடயங்கள் எல்லாம் தெரிந்திருக்குமோ தெரியவில்லை.
இருப்பினும்
ஒருசிலர், குமரிக்கண்டம் என்ற எண்ணப்பாடு ஸ்கிலேற்ரரின்
லெமூரியாவின் பின்னர்தான் தமிழருக்கு எழுந்தது எனக் கூறுவதுமுண்டு,
தமிழர் வரலாற்று உண்மைகளை மறைக்கும் முயற்ச்சிகளில் இதுவும்
முக்கியமான ஒன்றாகும். தமிழறிந்த வேற்றவர்கள் இப்படியான சந்தேகப்
பார்வையை அறிவியல் நோக்கிலே பார்க்கிறோம், என்றெல்லம் பசப்புகள்
காட்டி, ஏமாற்றுகிறார்கள். அவற்றில் மயங்கிய எம்மவர் சிலரும்
உள்ளனர். மேலேயுள்ள மாதிரிப் படத்தில் எங்களின் குமரிக்கண்டமும்
ஸ்கிலேற்ரரின் இலெமூரியாவும் காட்டப்பட்டுள்ளது.
இலக்கியங்களில் கடலுள் மூழ்கிய நிலத்திற்கு குமரிக்கண்டம் என்ற
பெயர் குறிப்பிடப்பட்டதாக எனக்குத் தெரியாது. ஆனால் எப்படி இந்தப்
பெயர் வந்திருக்கலாம் என்பது பற்றிய பல கருத்துக்கள் உண்டு.
இந்தியாவுடன் இணைந்திருந்த அப்பெருநிலப்பரப்பு குமரிதேசம்
எனப்பட்டுப் பின்னர் குமரிக்கண்டமாயிற்று என்போர் உண்டு.
அந்நிலபரப்பில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்றும் அங்கு பாண்டியரின்
பேரரசு ஒன்று இருந்தது எனவும் கூறுவர். அம்மக்களின் தெய்வமாக
இருந்தவர் குமரி என்றும் அதனாலேயே அது குமரிக்கண்டம் எனப் பின்னர்
பெயர் கொண்டதாகவும் சிலர் கூறுகின்றனர். பாண்டியரின் இந்தக் குமரி
என்ற தெய்வமே பின்னர் 'மீனாட்சி' ஆகினார் என அவர்கள்
கூறுகின்றார்கள். இப்பெருநிலப்பரப்பில் ஏராளமான பிள்ளைக்
கற்றாளைகள் (சோற்றுக் கற்றாளை) இருந்ததாகவும் பிள்ளைக் கற்றாளைக்கு
குமரி என்ற பெயரும் இருந்ததால் அந்நிலப்பரப்பினைக் குமரிக்கண்டம்
என அழைத்தார்கள் என்போரும் உண்டு.
எங்களின் தொன்மையின் குறிப்புகளைத் தாங்கி நிற்கின்ற
இலக்கியங்களின் ஆழங்களை எங்களாலேயே சரிவரப் புரிந்து கொள்ள
முடிவதில்லை. 2000 வருடங்களுக்கும் மேலான, அதிலும் குறிப்பாக கடந்த
ஆறு நூற்றாண்டுகளாக, ஒடுக்கப்பட்ட அடிமைகள் போன்ற அவல வாழ்வு
நிலையால் ஏற்பட்ட கல்விப் பஞ்சம் தந்த அறிவியற் குறைப்பாடு நன்றே
தமிழரை இருளிற் தள்ளி விட்டது. இருப்பினும் பழமையான இலக்கியங்களின்
ஊடாகக் கசிந்த உண்மைகள் சில ஒருசில அறிஞர்களினால் வெளியே வந்தன.
அப்படியாக வந்தவை குமரிக்கண்டம் பற்றிய விபரங்களைக் கொடுத்தன.
தென்னிந்தியாவின் கன்னியாகுமரிக்குத் தெற்காக அமைந்திருந்த
இப்பெரும் நிலப்பரப்பில் பெரிய மலைத்தொடர் ஒன்றும் வடக்குத்
தெற்காக இருந்திருக்கிறது. சிலம்பு கூறுகின்ற 'பன்மலையடுக்கத்துக்
குமரிக் கோடு' என்ற இம்மலைத் தொடரில் இருந்து பல ஆறுகள் பாய்ந்து
குமரிக் கண்டத்தை வளப்படுத்திக் கொண்டிருந்தன. அவற்றில் குமரியாறு,
பஃறுளியாறு, பேராறு போன்ற ஆறுகளைக் குறிப்பிடலாம். இவற்றில் குமரி
ஆற்றிற்கும் பஃறுளி ஆற்றிற்கும் இடையிலான தூரம் மட்டுமே
700 காதம் என்கிறார்கள். இது
கிட்டத்தட்ட 770 கிலோமீற்றர் தூரமாகும். இதன்படி, குமரிக்கண்டத்தை
ஒரு துணைக்கண்டமாகவே கருத வேண்டும்.
குமரிக்கண்டத்தில் பாண்டியப் பேரரசின் கீழ்
49 நாடுகள் இருந்திருக்கின்றன.
ஏழ்தெங்கு நாடு, ஏழ்மதுரைநாடு, ஏழ்முன்பாலைநாடு, ஏழ்பின்பாலைநாடு,
ஏழ்குன்றநாடு, ஏழ்குணகரைநாடு, ஏழ்குறும்பனைநாடு, என ஏழேழாக
நாடுகளாக அவற்றை வகைப்படுத்தி வைத்திருந்தனர். இந்நாடுகளில்
எல்லாம் தமிழர்களே வசித்து வந்தார்கள். பல பாண்டிய மன்னர்களின்
ஆட்சியின் கீழ் இருந்த அவையனைத்துமே பாண்டியப் பேரரசின் கீழ்
இயங்கிக் கொண்டிருந்தன. இன்று நாங்கள் பேசுகின்ற, உலகின்
முதல்மொழியாகிய, தமிழ் கூட இங்குதான் தோன்றியது. மனிதவினமே
இங்குதான் தோன்றியிருக்க வேண்டும் என்ற கருத்திற்குக் கூடக்
குமரிக்கண்ட புவியியல் அமைப்பு பொருத்தமாக இருந்திருக்கின்றது.
கால ஓட்டத்தில் தங்களது அறிவினை வளர்த்துக் கொண்டு வந்த
குமரிக்கண்ட மக்கள் ஒருநிலையில் அறிவியல் நிலையில் மிகவும்
மேம்பட்டவர்களாக இருந்தார்கள். இக்கருத்து, பல்லின அறிஞர்களிடையே
இன்றும் உள்ளது. பெரும் கோட்டைகள் அமைத்து வாழக் கூடிய கட்டிட
அறிவியலைக் கொண்டவர்களாக இவர்கள் இருந்திருக்கிறார்கள்.
தரைப்பயணங்களை இலகுவில் செய்யக் கூடியவர்களாகவும்
இருந்திருக்கின்றார்கள். கடற்பயணங்கள் இவர்களுக்கு மிகவும்
அத்துப்படியாக இருந்திருக்கின்றது. விமானங்களின் உதவியுடனான
வான்பயணங்கள் கூட குமரிக்கண்டத்தில் நடந்திருக்கின்றன என்போரும்
உண்டு.
போர்க்கலையில்
வல்லவர்களாக இருந்த இவர்களிடம் பல்வகையான ஆயுதங்களும்
இருந்திருக்கின்றன. உலகம் பெருங்கற்காலத்தில் இருக்கையிலேயே
இரும்பாலான ஆயுதங்களையும் இவர்கள் பாவித்திருந்திருக்கலாம்
என்கிறார்கள். மேலும் தற்காப்புக் கலைகளிலும் குமரியின் தமிழர்கள்
வல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். 'பட்டாஸ்' திரைப்படத்தில் வந்த
'அடிமுறை' என்ற தற்காப்புப் போர்முறை போன்ற தமிழர்களின் பலவகையான
தற்காப்புக்கலைகளும் இங்கேதான் தோன்றியிருக்க வேண்டும் எனக்
கூறுகின்றனர். (படம் தமிழர்களின் தற்காப்புக் கலையான அடிமுறை
ஒழுங்கினைக் காட்டுகின்றது) இன்று மறைந்து கொண்டு வருகின்ற
இக்கலையானது உலகின் மிகப் பழைய தற்காப்புக்கலை எனக்
கூறப்படுகின்றது. தமிழ்நாட்டிலும், வட இலங்கையிலும் பெரிதும்
இருந்த இப் போர்க்கலையானது இன்று அருகி, முற்றாகவே அழிந்து போகின்ற
நிலையில் உள்ளது.
வடஇலங்கையிலும் தென்னிந்தியாவிலும் ஆங்கிலேயரைக் கதிகலங்க வைத்த
ஆயுதம் வளரி. இதுவும் உண்மையில் சிலம்பம் எனப்படும் களரி போன்ற
தற்காப்புகலைக்கான ஆயுதம்தான். சமயத்தில் எதிரிகளைத்
தாக்குவதற்கும் வேட்டையாடுவதற்கும் கூடப் பாவிக்கலாம், பாவிப்பர்.
மருது பாண்டியர் காலத்தில் ஆங்கிலேயருக்குப் பெரும் சிக்கலைக்
கொடுத்த இவ்வாயுதம் பற்றிய இரகசியத்தை அறிய முடியாத ஆங்கிலேயர்
அதனை தமிழ்நாட்டில் தடைசெய்த வரலாறும் உண்டு.
(அருகில்
உள்ள படம் இரண்டு வளரினைளைக் காட்டுகிறது.) வளரிகளின் படங்கள்
பிரமிட் சித்திரங்களிலும் காணப்படுகின்றன. இந்த வளரிகளை பிரமிட்
ஆய்வாளர்கள் என்னவென்று அறியாமல் வெறுமனே எகிப்தியர் பாவித்த
ஒருவகை ஆயுதங்கள் என மட்டுமே கூறினார்கள். பிரமிட் கால
எகிப்தியர்கள் தமிழர்கள்தான் என்பதற்கு, பிரமிட்டின் உள்ளே உள்ள
வளரிகளின் படமும் சான்றாக அமைகின்றது. அவுஸ்திரேலியப்
பழங்குடியினர் பாவிக்கும் பூமரங் என்னும் வேட்டைக்கருவியும்
வளரியும் ஒன்றேதான் என்கின்றனர். இதனையும் குமரிக்கண்டத்தில்
இருந்தே தமிழர்கள் கொண்டு வந்தார்கள். இவை கூட குமரிக்கண்டம்
இருந்ததற்கான சான்றுகளாக அமைகின்றன. இன்னமும் இந்நாளில் உலகத்தவர்
அனைவரும் பெரிதாகக் கூறிக் கொள்ளும் ;யோகம்' (யோகா) என்ற கலையின்
பிறப்பும் வளர்ச்சியும் கூடக் குமரிக்கண்டம்தான்.
குமரிக்கண்டம் கடலினுள் மூழ்கியிருப்பதனால் அதன் காலத்தைக் கூற
முடியாது உள்ளது. சில ஆய்வாளர்களின், 2 மெய்யிரம் (மில்லியன்)
ஆண்டு முன்னர் நடந்த தோன்றிய கோமோ இரெக்சஸ் என்கின்ற ஆதிமனித
இனத்தினரின் கூர்ப்பும், அதற்கு முந்திய மனிதக் கூர்ப்பின்
வழிகளும் குமரிக்கண்டத்தில்தான் நடந்திருக்க வேண்டும் எனக்
கூறுகின்றனர். இங்கிருந்துதான் அக்காலத்தில் தொடுப்பாக இருந்த
நிலப்பரப்பின் வழியாக கிழக்காபிரிக்காவிற்கு அவ்வினங்கள் சென்று
அங்கு இறந்து போக, இந்நாட்களில் ஆபிரிக்கப்பகுதிகளில் அவற்றின்
படிமங்கள் காணப்படுகின்றன என்ற பொருத்தமான விளக்கத்தையும் அவர்கள்
தருகின்றார்கள்.
குமரிக்கண்டத்தில் தோன்றிய மனிதர்கள் தங்களை மெதுமெதுவாக
வளப்படுத்திக் கொண்டு வருகையில் தமிழ்மொழியும், அதனைப் பேசிய
தமிர்களும் குமரிக்கண்டத்தில் துளிர்க்கிறார்கள். அவர்களது பரம்பல்
அக்காலத்தில் நாவலந்தீவு என அழைக்கப்பட்ட இந்தியாவின் விந்திய
மலைப்பகுதி வரையிலும் இருந்திருக்கிறது. அதற்கு அப்பால் கூடத்
தமிழர்கள் பரந்திருக்கலாம் என எண்ணிட இடமுண்டு. இவ்வளர்ச்சியின்
பாதையில் இற்றைக்கு 30 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் குமரிக்கண்டம்
மிகவும் சிறப்புடன் இருந்திருக்கின்றது. இவர்களது எல்லாச்
சிறப்புக்கும் காரணமாக இருந்தது, தொடர்பாடலுக்கான தங்களது மொழியினை
செழிப்புற வைத்ததூன். இன்னமும் அவர்களது வாழ்வியல் முறைகளையும்
கூறலாம். முக்கியமாகத் தங்களது அறிவியல் முன்னேற்றத்திற்காக
குமரிக்கண்டத்தவர் சங்கம் அமைத்து, அறிஞர்களை ஒன்று கூட்டிப்
பல்துறைகளிலும் ஆய்வுகள் செய்திருக்கின்றார்கள். தென்மதுரை என்ற
இடத்தில் மனிதவினத்தின் முதலாவது சங்கத்தை நிறுவிச் செயற்படத்
தொடங்கினார்கள். இங்கேதான் தமிழுக்கு முதன்முதலில் சித்திர
எழுத்துக்கள் வருகின்றன. எழுத்துகளின் பிறப்பு மொழிக்கு இன்னமும்
வளத்தைக் கொடுக்க, இலக்கியங்கள் பிறக்கின்றன. இவ்விலக்கியங்கள்
ஓலைச்சுவடிகளில் பெரும்பாலும் எழுதப்பட்டன. களிமண் தகடுகளும்
எழுத்துக்களுக்காகப் பயன்பட்டன.
இந்நிலையில் தெற்கில் இருந்து பெரும் ஆர்ப்பரிப்புடன் வேகமாகக்
கடல் வந்து குமரிக்கண்டத்தின் பெரும் பகுதியை மூடிக் கொள்கிறது.
இந்தக் 'கடல்கோள்' குமரியரின் பெரும் சொத்துக்களைக் கடலினுள்
கொண்டு சென்றது. பெருமளவு குமரிக்கண்டத் தமிழர்களும் கடலுள்
அமிழ்ந்து போயினர். இதற்கு முன்னரும் கூட இப்படியான நிகழ்வுகள்
பெருங்குமரிக்கண்டத்தில் ஏற்பட்டிருக்கலாம். ஆனாலும் மனிதர்களினால்
அறிந்து கொள்ளக் கூடிய முதற் பேரழிவு இதுதான். இவ்விடரினால்
குமரிக்கண்டத்தின் தென்பகுதி முற்றாகவே நீருள் அமிழ்ந்தாலும்
வடபகுதியின் பெரும்பகுதி தப்பித்து விடுகின்றது. இப்பொழுது
குமரிக்கண்டத்தின் எஞ்சிய பகுதிகளில் பேரழிவில் இருந்து தப்பிய
தமிழர்கள் மீண்டும் எழுகின்றார்கள். கபாடபுரம் என்ற இடத்தைத்
தலைமையாகக் கொண்டு பாண்டியர்கள் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தை
(இடைச்சங்கம்) ஆரம்பித்து புதுமைகள் செய்ய ஆரம்பிக்கின்றனர்.
இடைச்சங்க காலத்தில் தமிழின் சித்திர எழுத்துகள் அடுத்த படிநிலையான
குறியீட்டு வடிவம் பெறுகின்றது. முதற்சங்கத்தில் அறிவியற்
சொத்துகள் சில மீட்கப்பட்டு மெருகூட்டப்படத் தொடங்கின. முதற்சங்கம்
முதல் எழுந்த இலக்கியங்களுக்கு இலக்கணங்கள் பிறக்கின்றன. அவ்ழியில்
தொல்காப்பியம் இடைச்சங்க காலத்திலே கபாடபுரத் தலைமைச் சூழலில்
எழுதப்படுகின்றது.
இது இப்படியாக இருக்க, இடைச்சங்க காலத்தில் முதற் கடல்கோளின்
அழிவுகளைப் பார்த்தப் பயந்த சிலர், பாதுகாப்பிற்காக காலத்திற்குக்
காலம் குழுக்கள் குழுக்களாகக் கபாடபுரத்தில் நின்றும் உலகின்
பல்வேறு பகுதிகளுக்கும் தங்களுக்குத் தெரிந்த அறிவியற்
சொத்துகளுடன் இடம்பெயரத் தொடங்கினர். அப்படியாக அவர்கள் ஓடிப்போன
இடங்கள்தான் சுமேரியா, சிந்துவெளி, எகிப்து, இஸ்ரர்தீவு போன்ற
இடங்கள். மாயன்களையும் பெரு நாட்டவர்களையும் கூட இப்படியாகப்
பார்ப்பவர்கள் உண்டு. ஆபிரிக்கப் பகுதிகளுக்குக் கூடச்
சென்றிருக்கிறார்கள். இதன் காரணமாகத்தான் அவ்விடங்களிலெல்லாம்
தமிழ்ச் செல்வாக்குகள் மருவிய நிலைகளில் இன்று அதிகம்
காணப்படுகின்றன.
இப்படியிருக்க ஆறாயிரம் வருடங்களில் மீண்டும் தெற்கில் இருந்து
கடல் வேகமாகப் பாய்ந்து வந்து கபாடபுரம் முதற்கொண்ட இடங்களை
சடுதியில் வீரியமாக விழுங்கிவிடுகின்றது. இம்முறையும் கடல்
முன்னரைப் போலவே பலரையும், பலதையும் தன்னுள் இழுத்துக் கொள்ள
ஆயிரக்கணக்கானவர்கள் அழிவில் இருந்து தப்புவதற்காக வடதிசையாக
ஓடிவருகின்றார்கள். தப்பியவர்களில் ஒரேயொரு பாண்டிய மன்னனும்
இருந்தான். தப்பி வந்தவர்களுக்கு அங்கிருந்த சேரரும் சோழரும்
அடைக்கலம் கொடுத்து இடமும் கொடுத்து ஆதரிக்கின்றனர். தப்பி வந்த
பாண்டிய மன்னன் தனது பகுதியில் மீண்டும் பாண்டியர்களை மதுரையில்
கடைச் சங்கத்தை நிறுவிப் பாண்டியரை நிலைப்படுத்திக் கொள்கிறான்.
குமரிக்கண்டம் பற்றி மிக மிகச் சுருக்கமாகத் தெரிந்து கொண்டோம்.
ஆனாலும் பலர் நம்பிட மறுக்கின்றனர். ஒருவேளை பெரும் நிலப்பரப்பெனத்
தமிழர்கள் கருதும் குமரிக்கண்டம் என்பது இப்போதுள்ள
கன்னியாகுமரிக்குத் தெற்காகக் கடலுள் இருந்த பல தீவுகளாக
இருக்கலாம் எனக் கூறுகின்றார்கள். வேறு சிலரோ கடல்கோள் என்ற
விடயத்தை நம்ப முடியவில்லை என்கிறார்கள். ஏதோ புராணம் போல உள்ளது
என்கிறார்கள். அதனால் இவை பற்றிய அறிவியற் சான்றுகனைத் தாருங்கள்
எனப் பலரும் கேட்கின்ற நிலையில் அவை பற்றிய தெளிவுகள் மெதுமெதுவாக
வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் கடல்கோள்கள் பற்றிய உண்மைகளும்
தெளிவுகளும் அண்மையில் வெகுவாக அறிவியலாளர்களினால் வெளிக்கொண்டு
வரப்படுகின்றது. இதனிடையில் சுனாமி என்ற ஒரு பதமும் 2004ம் ஆண்டில்
இருந்து நம்மிடையே வந்து நம்மவர்களுக்குக் கடல்கோள் என்பதிலேயே ஒரு
மயக்கத்தைக் கொண்டு வந்துள்ளது. எனவே கடல்கோள்கள் பற்றியும்
சுனாமிகள் பற்றியும் தெளிவான விளக்கத்தைப் பெறவேண்டிய நிலையில்
உள்ளோம்.
அன்புடன்,
கனி
பிற்குறிப்பு:
குமரிக்கண்டம் பற்றிய மிகச் சுருக்கமாகப் பார்த்தோம். இதிலே
கூறப்பட்ட சில விடயங்களுக்கான ஆதாரங்களைக் குறிப்பிடுகின்றேன்.
1903ம் ஆண்டில் வி.ஜி.
சூரியநாராயணசாஸ்திரி அவர்கள் எழுதி வெளியிட்ட தமிழ்மொழியின் வரலாறு
என்ற நூலில் குமரிதேசம் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.
இளம்பூரணனார், நச்சினார்க்கினியன் போன்ற தொல்காப்பிய
உரையாசிரியர்கள் குமரிக்கோடு, குமரிமலை, பஃறுளியாறு, கபாடபுரம்,
தென்மதுரை போன்ற விடயங்களைக் குறிப்பிட்டு இருப்பதைக்
காட்டுவார்கள்.
மு.செ.விக்டர் போன்ற இந்நாள் ஆய்வாளர்கள் கற்றாளையின் குமரி என்ற
பெயரினால் குமரிக்கண்டம் எனப்பட்டதாகக் கூறுகிறார்.
நெல்லை சுவாமிப்பிள்ளை போன்ற அறிஞர்கள் சிலர் குமரிக்கண்டத்திற்கான
விஞ்ஞானச் சான்றுகள் இல்லை என்கிறார்கள்.
தொடரும் காலங்களில் குமரிகண்டத்திற்கான தெளிவுகளைப் பல்கோணத்திலும்
பார்ப்போம்.