சமூக விலக்கம் சமூக
உரிமைகளின் விலக்கமாகிறதா?
பேராசிரியர் இரா.செல்வி
(நீலவிழிகள் காலாண்டிதழ் நடத்திய கட்டுரைப்போட்டியில் மூன்றாம் பரிசு
பெற்ற கட்டுரை.)
முன்னுரை:
உலகவரலாற்றில் கொரானோ தொற்று காரணமாக ஒட்டு மொத்த உலகமே
அடங்கிக்கிடக்கிறது. உயிரைக் காக்க சமூக இடைவெளியைக்
கடைபிடிக்கவேண்டும் என்ற சட்டம் ஒருபுறம். இயல்பு வாழ்வு பாதித்து
உழைபதற்கான வாய்ப்பை இழந்து, சொந்த ஊர் செல்லும் உரிமை இழந்து
அல்லல்படும் மானிட அவலம் ஒரு புறம். இந்நிலையில் சமூக விஞ்ஞானப்படி
சமூக விலக்கத்தை எவ்வாறு நோக்குவது என்பதை ஆராய்கின்றது இக்கட்டுரை.
உரிமை இழக்கும்
உழைப்பாளர்கள்
குரங்கிலிருந்து பரிணாமம் எய்திய மானிடகுலம் ஒருபோதும் தனித்து
இயங்கியது இல்லை. இயங்கவும் முடியாது. அவன் காட்டுமிராண்டியாக வேட்டை
ஆடி வாழ்ந்த காலகட்டத்திலும் சரிஇ கால்நடை பராமரித்து வாழ்ந்த
காலகட்டத்திலும் சரி, விவாசாயம் கண்டறிந்து வேளாண்மை மேற்கொண்ட
காலத்திலும் சரி மானிடகுலம் குழு குழுவாகத்தான் வாழ்ந்தது.
குழுக்களுக்குள் பின்னாளில் பகை ஏற்பட்டு குடும்பம், தனிச்சொத்துஇ அரசு
ஆகியவை தோன்றிய பிறகு சமூகத்தில் வர்க்கமோதல்கள் உருவாகின. ஆண்டான்
அடிமை, முதலாளிவர்க்கம், தொழிலாளி வர்க்கம், கருப்பினத்தவர்
வெளுப்பினத்தவர், மேல்சாதி, கீழ்ச்சாதி என்பதான வேற்றுமைகள்
உருவானபோதும் மானிடகுலத்தை நேசிப்போர் முன்வைக்கும் தாரக மந்திரம்
சமதரமம். உலகம் இறுதியில் உழைப்பாளர் கைகளுக்குள் வரும்போது மானிடகுலம்
ஒன்றுபட்ட குலமாக மாறும். அதுவரை வர்க்கப்போர் நிலவும் என்றார்
காரல்மார்க்ஸ்.
நம் மகாகவி பாரதியும் 'முப்பதுகோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும்
பொதுவுடமை ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக்கு ஒரு புதுமை என்றார்.
'உழைப்பைக்கொடுத்துப் பலனைத்தந்து உலகில் போரை நிறுத்திடுவோம் அண்ணன்
தம்பியாய் இருந்து அருள் விளக்கு ஏற்றிடுவோம்' என்றார் மக்கள் கவிஞர்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்.
ஒன்றுபட்டு வாழ்ந்தும் உழைத்தும் வந்த உழைக்கும் வர்க்கம் ஊரடங்கால்,
சமூக விலக்கத்தால் தன்வர்க்க நலனை இழந்து தவிக்கிறது. ஊரடங்கு
காலங்களில் அரசு உழியர்களுக்குச் சம்பளம் மாதம் மாதம்
விடைத்துவிடுகிறது. ஆனால் தனியார் நிறுவனங்களில், பணியாற்றுவோர்
சம்பளம் இன்றியும், வேலை விலக்கம் செய்யப்பட்டும் அல்லல்படுகின்றனர்.
வசதிபடைத்தோர் வீட்டுக்குள் இருந்தபடி மூன்று வேளை நான்கு வேளை உணவு
உண்டு உடல் பெருத்துவிட்டதாகச் சமூக வலைதளங்களில் மீம்ஸ் வருகின்றன.
பசி கொடுமைத் தாங்காமல் தாய் கைக்குழந்தையுடன் தூக்கு மாற்றி இருந்த
செய்தியும் சமூக அக்கறை கொண்டோரால் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அரசு இலவசமாக அரிசி பருப்பு எண்ணெய் காய்கறி ஆயிரம் ரூபாய் எல்லாம்
தராமல் இல்லை. ஆனால் அவைபோதுமானதா? ஏதேனும் வேலைவெட்டி செய்தால்
குழந்தைகளுக்கு வயிறார கஞ்சி ஊற்றமுடியும் என்று ஏழைபெற்றோர்
பரிதவிக்கின்றனர். ' கொரானோ வந்து குழந்தை செத்தால்கூட விதி என்று
அழுதுவிட்டுப்போகலாம்... ஆனால் பட்டினியால் குழந்தை அணுஅணுவாய் சாவதைக்
காணமுடியுமா என்று ஏழை தாய்மார்கள் கண்ணீர் சிந்துகின்றனர். உழைப்பும்
ஊதியம் பெறும் உரிமையும் இழந்து உலகில் 75மூ மக்கள் அல்லல்படுவது
கண்கூடு. இவர்களில் பெரும்பான்மையோர் உடல் உழைப்பாளர்கள்.
ஆன் லைனும் மாணவர்களும்.
தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் கையில் மடிக்கணினியோ?
ஆன்ரைடு போனோ இருந்தாகவேண்டும். கிராமங்களில் வாழும் ஏழை மாணவர்களுக்கு
' சிக்னல் பிராப்ளம்' மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே நேர்மையாகத்தான்
தேர்வு எழுதுவார்களா என்று கேள்வியும் எழுதுகிறது.
'நாங்கள் உங்கள் மாணவர்கள். நேர்மையுடன்தான் தேர்வு எழுதுகிறோம்.
ஆன்ரைடு போன் இல்லாததால் உறவினரிடம் உதவிகேட்டு எழுதினேன்.
தொழில்நுட்பம் தெரியாததால் அனுப்பச் சிரமம் கொண்டேன்' என்று என்
மாணவர்கள் சொன்னதை இங்குத் தகவலுக்குத் தெரிவிக்கிறேன். மாதா, பிதா,
குரு, தெய்வம் என்பது பழமொழி. குரு அருகில் இருந்து வழிகாட்டும்போதே
ஒரு மாணவன் நல்வழிப்படுவான்... ஆன் லைன் வகுப்பு, ஆன்லைன் தேர்வு
என்பது மாணவனை ஆசிரியரிடம் இருந்து பிரிக்கின்றன. ஆசிரியர்வீட்டில்
இருந்து படித்தால்தான் இராமன் ஆற்றல்மிகு கல்வி பெறுவான் என்று
தசரதசக்கரவர்த்தியும் இராமனை வசிஷ்டர் வீட்டில் தங்கவைத்தார் என்று
இராமயணம் கூறுகிறது. கொரானோ தொற்று ஒழிந்து மானிடவாழ்வு இயல்பு
நிலைக்குத் திரும்பும். அப்போது நேரடி கல்விமுறையும் தேர்வு முறையும்
திரும்பும். ஆனால் ஆதிக்கப் பெருமுதலாளிச்சிந்தனையாளர்கள் 'இனி ஆன்லைன்
கல்வியும் தேர்வும்தான் சிறந்தது என்று நம் காதுபட பேசுவதையும்
கேட்கமுடிகிறது...
'சமூக விஞ்ஞானப்படி மானிடர் ஒருங்கிணைவதை, நேரடி உழைப்பை ஒருபோதும்
தடுத்து நிறுத்திவிடமுடியாது... என்பதை அறியாமல் பேசுவோர் எதையோ
பேசட்டும் என்று கண்டு கொள்ளாமல் இருப்பது நலம்.
குடும்ப உறவுநிலை
'வீட்டில் இருக்கும் ஆண்களைப் பெண்கள் வீட்டு வேலை செய்யச்சொல்லி
பூரிக்கட்டையால் அடிக்கின்றனர் என்று சமூகவலைதளங்களில் மீம்ஸ் வருவதை
எப்படிப்பார்ப்பது? ஆண்கள் பரிதாபம் என்றா? குடும்பப் பெண்கள் வீட்டு
வேலைகளையும் பார்த்து வெளியிலும் வேலை பார்த்து, பிள்ளையும் ஈன்று
மூன்றுவேலைகளைச் செய்வதில்லையா? ஆண் பிள்ளை பெற இயலாது. ஆனால் வீட்டு
வேலைகளை ஆண்கள் பங்கிட்டுக்கொண்டால் என்ன என்று எத்தனையோ
முற்போக்குப்போராளிகள் சொல்லிவருகிறார்கள். எழுதிவருகிறார்கள். ஆனால்
ஆண்கள் வீட்டு வேலை செய்வது கௌரவகுறைச்சலாகவே பார்க்கப்படுகிறது.
இதனால் குடும்பத்துக்கள் கணவன் மனைவி சண்டைகள் அதிகரித்துவிட்டதாகச்
செய்திகள் வருகின்றன.
'முன்பெல்லாம் சீராடிகிட்டு அம்மா வீட்டுக்கு ஓடுவா என்பெண்டாட்டி இப்ப
அப்படி ஓட வழியில்லை... குடும்பத்துக்குள் என் காலடியில்தான்
கிடக்கவேண்டும் என்று எள்ளிநகையாடும் கணவன்மார்கள் அதிகம்.
முடிவு:
உழைக்கும்வர்க்கம், ஏழை மாணவர்கள், குடும்பப்பெண்கள் ஏதோ ஒரு வகையில்
உரிமை இழந்து அல்லல்படுவதை யாரும் மறுக்கமுடியாது
கொரானோ தொற்று ஒழிந்து சமூக விலகல் நீங்கி மீண்டும் மானிடஇனம்
இயல்புவாழ்வு பெறும். மானிடகுல ஒற்றுமை நோக்கி
சமதர்மக்கொள்கையுடன்போராடும்.
பேராசிரியர் இரா.செல்வி
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|