இது பேய்க்கதை அல்ல, ஒரு பெண்ணின் கதை
கலாநிதி பால. சிவகடாட்சம்
கதை கேட்பதில் எல்லோருக்குமே ஒரு விருப்பம் உண்டு. அதுவும் பேய்க்கதை
என்றால் சொல்லத் தேவையில்லை. தாம் சொல்லவந்த செய்தியை ஒரு
பேய்க்கதையுடன் சேர்த்துச் சொன்னால் அது கேட்பவர் மனதில் கேட்கும்
ஆர்வத்தை தூண்டும்இ அத்துடன் பலரையும் சென்றடையும் என்பது ஒரு நல்ல
கதைசொல்லிக்கு நன்றாகவே தெரியும்.
பழந்தமிழகத்தில் நன்கு அறியப்பட்ட ஒரு சிறுகதையும் பேய்க்கதைதான்.
பழையனூர் நீலி என்பது பேயின் பெயர். ஹஆடினார் காளிகாண ஆலங்காட்டு
அடிகளாரேஹ என்னும் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமான
திருவாலங்காட்டுக்கு அருகில் உள்ளது பழையனூர். இந்த ஊரைச்
சேர்ந்தவள்தான் நீலி. இவள் பேயாக மாறி அவ்வூரையே ஆட்டிவைத்தமை பற்றிய
கதைகள் ஒன்றல்ல பல. ஒரே கதை சில மாற்றங்களுடனும் சேர்க்கைகளுடனும்
நெடுங்காலமாகப் பேசப்பட்டு வந்துள்ளது.
சங்ககாலத்தில் திருவாலங்காட்டில் பிரசித்தி பெற்ற கொற்றவை கோயில் ஒன்று
இருந்தது. பேய்களே கண்டு நடுங்கும் சர்வவல்லமை படைத்த தெய்வமாகத்
திருவாலங்காட்டுக் காளி திகழ்ந்தாள்.
'எல்லம் வல் எல்லா
பெரும் காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு'
என்று
எல்லாம் வல்ல பெரும் காட்டுக் காளியையே நொடிசொல்லி மடக்க நினைக்கும்
ஒரு பேயின் மடத்தனம் பற்றிப் பேசுகின்றது சங்க இலக்கியங்களுள் ஒன்றான
கலித்தொகை (பாடல் 89). அக்காலப்பகுதியில்
திருவாலங்காட்டில் புகழ்பெற்ற கொற்றவை கோவில் ஒன்று இருந்தமைக்கு
இக்கலித்தொகைப் பாடலை ஓர் ஆதாரமாகக் கொள்ளலாம். திருவாலங்காட்டுக்
காளியையும் பழையனூர் நீலியையும் தொடர்புபடுத்திப் பல்வேறு கதைகள்
சைவர்களாலும் சமணர்களாலும் சொல்லப்பட்டு வந்துள்ளன.
திருவாலங்காட்டுத் தலபுராணத்தில் காளியின் கதை பின்வருமாறு
கூறப்படுகின்றது. முன்னொரு காலத்தில் ஆலமரங்கள் நிறைந்திருந்த
திருஆலங்காட்டில் அட்டகாசம் புரிந்த அசுரர்கள் இருவரை அழிக்கவந்த
பார்வதியின் அவதாரமான நீலி என்னும் காளி அசுரர்களை அழித்தபின் அங்கேயே
தங்கிவிடுகின்றாள். நாளடைவில் பொதுமக்களுக்கும் தேவர்களுக்கும் பெரும்
அச்சத்தைக் கொடுக்கும் பயங்கரமான ஆற்றல் பெற்றவளாக உருவெடுக்கின்றாள்.
இவளைக்கண்டு அஞ்சிய தேவர்கள் காளியை அடக்கிவைக்கும்படி சிவபிரானைக்
கேட்டுக்கொண்டனர். காளியோடு யுத்தம் செய்யவிரும்பாத சிவபிரான் அவளைத்
தன்னோடு நடனப்போட்டிக்கு வருமாறு அழைக்கின்றார். இருவரும் ஊர்த்துவ
தாண்டவம் ஆடுகின்றனர். இருவர் ஆட்டத்தையும் பார்த்த முனிவர்களும்
தேவர்களும் வென்றது யார் என்று தீர்மானிக்க முடியாது தடுமாறினர்.
ஆட்டத்தின் இறுதியில் சிவபிரான் தன் காதில் இருந்த தோட்டைக் கீழே
விழவைத்து, பின்னர் அதனைத் தன் கால் பெருவிரலால் எடுத்து மீண்டும்
காதில் பொருத்தினார். இவ்வாறு செய்யத் தயங்கிய காளி இறைவனிடம் தன்
தோல்வியை ஒப்புக்கொண்டாள். அப்போது சிவபிரான் எனக்குச் சமமானவர்
உன்னைவிட வேறு எவரும் இல்லை. இனிமேல் இத்தலத்திலேயே உனக்குத்
தனிக்கோயில் இருக்கும். என்னை வழிபடவருவோர் முதலில் உன்னை
வழிபட்டபின்னரேயே என்னிடம் வருவார்கள் என்று அருள் புரிகின்றார்.
திருவாலங்காட்டுக் காளிகோயில் இவ்வாறுதான் உருவாகிற்று. சங்ககாலத்துக்
'கொற்றி' காளியாக மாறியகதை இதுவாக இருக்கலாமோ என்று எண்ணத்
தோன்றுகின்றது.
பேயுருவம் வேண்டிப்பெற்று சிவபிரானைப் பாடித் திருவாலங்காட்டில்
அவனிடமே அடைக்கலமான காரைக்கால் அம்மையார் தன்னைப்பேய் என்று
கூறிக்கொள்கின்றார்.
காடுமலிந்த
கனல்வாய் எயிற்று காரைக்காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடி ஆடப் பாவம் நாசமே
காரைக்கால் அம்மைக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்வந்த
சுந்தரமூர்த்தி நாயனார் தாம் பாடிய திருத்தொண்டர்தொகையில்
'பெருமிழலைக்குறும்பர்க்கும் பேயர்க்கும் அடியேன்' என்று அம்மையாரைப்
பேயர் என்றே குறிப்பிடுகின்றார். எனினும் இந்தக் காரைக்கால்
அம்மைக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவள் பழையனூர் நீலி.
பழையனூர்ப் பேய் பற்றி முதன்முதலில் அறியத்தருபவர் சைவ நாயன்மார்களுள்
ஒருவரான திருஞானசம்பந்தர்.
துஞ்ச
வருவாரும் தொழுவிப்பாரும் வழுவிப்போய்
நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும்
முனைநட்பாய்
வஞ்சப் படுத்தொருத்தி வாணாள்கொள்ளும் வகைகேட்டு
அஞ்சும் பழையனூர்
ஆலங்காட்டு எம்அடிகளே
முன்னொருநாள் வஞ்சிக்கப்பட்ட பெண்ணொருத்தி நட்பாய்ப்பேசி உயிர்ப்பலி
வாங்கிய கதைகேட்டுப் பயப்படும் பழையனூர் ஆலங்காட்டில் கோயில்
கொண்டருளும் அடிகளே என்று சிவபிரானைப் பாடுகின்றார் சம்பந்தப்பெருமான்.
பழையனூர் நீலி என்னும் பேய் பற்றிய பலகதைகள் இன்று கிடைக்கின்றன.
இவற்றுள் ஒன்று வேளாண் குடிமக்களின் பெருமையைப் பேசுவதற்காகக்
கற்பிக்கப்பட்டது. இக்கதையின் விரிவைச் சேக்கிழார்புராணத்தில்
காணமுடிகின்றது.
மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வந்த பிராமணன் ஒருவன்
விலைமாதின் வலையில் விழுந்து சொத்து முழுவதும் இழந்தான். அவனால்
கைவிடப்பட்ட அவனுடைய மனைவி நீலி என்பாள் தன் பெற்றோர் வீட்டுக்குச்
சென்றுவிட்டாள். சொத்துக்களை இழந்த பிராமணன் மனைவியின் நகைகளை
எப்படியாவது பறித்துவிடத் திட்டம் தீட்டினான். 'என்னோடு வா.
பழையதெல்லாவற்றையும் மறந்துவிட்டு நமது கிராமத்துக்குப் போய் அமைதியாக
வாழலாம்' என்று மனைவியைச் சமாதானப்படுத்தி அவளைக்
கூட்டிச்செல்கின்றான். போகும் வழியில் அவளுடைய நகைகளையெல்லாம்
பிடுங்கிவிட்டு அவளை ஒரு கிணற்றுக்குள் தள்ளிக் கொன்றுவிடுகின்றான்.
மறுபிறப்பில் இந்தப் பிராமணன் ஒரு வணிகனாகப் பிறந்து பெரும் சொத்து
சேர்க்கின்றான். அவனுக்கு ஓர் ஆபத்து காத்திருக்கின்றது என்பதை உணர்ந்த
ஒரு முனிவர் அவனை வடக்குப்பக்கம் பயணம் செய்யாதே என்று எச்சரித்ததுடன்
அப்படிப் பயணிக்க நேர்ந்தால் இந்தக் கத்தியைத் தவறாமல் எடுத்துச் செல்
என்று அவனிடம் ஒரு கத்தியையும் கொடுக்கின்றார்.
ஒருமுறை அந்த வணிகன் வியாபார நோக்கமாகப் பழையனூர் வழியாகப் போக
நேர்ந்தது. அவனது முந்தைய பிறவி மனைவி, நீலி அவனைப் பழிவாங்கும்
நோக்கத்தில் பேயாகக் காத்திருந்தாள். பெண்வடிவில் குழந்தையொன்றைக்
கையில் ஏந்தியபடி அந்தப்பேய் அவனைப் பின் தொடர்ந்தது. அவனது கையில்
கத்தி இருந்ததால் பேயால் அவனை நெருங்க முடியவில்லை. தன்னைப் பின்
தொடர்வது பேய் என்று அறிந்த வணிகன் ஊருக்குள் விரைவாகச்
சென்றுவிட்டான். பெண்வடிவில் இருந்த பேயோ ஊராரைக் கூட்டி ஓலமிட்டது.
கட்டிய புருடன் தன்னைக் கைவிடப்போவதாகக் கூறிக் கண்ணீர் வடித்தது.
(நீலிக்கண்ணீர் என்பார்களே அது இதுதான்) பேயின் கையில் இருந்த
பேய்க்குழந்தை அப்பா என்றபடி வணிகனிடம் தாவியது.
இரக்கமனம்கொண்ட அவ்வூர் வேளாண் குடியினர் எழுபதுபேர் வணிகனிடம் பேசி
குழந்தையுடன் அழுதுகொண்டிருந்தவளுடன் சேர்ந்து வாழுமாறு
வற்புறுத்தினர். அவனோ அது பெண் அல்ல பேய் என்று பலமுறை கூறியும்
அவர்கள் நம்பவில்லை. வேறு வழியின்றி அந்தப்பேயுடன் செல்லத் துணிந்த
வணிகன் கத்தியைப் பத்திரமாக எடுத்துவைத்துக்கொண்டான். பேயோ இவர்
கத்தியால் என்னைக் கொன்றுவிடப்போகின்றார் என்று கூறி அழுதது. அவனோ பேய்
கத்தி இல்லாவிட்டல் தன்னைக் கொன்றுவிடும் என்று எவ்வளவோ கெஞ்சியும்
அந்த வேளாளர் அவனை நம்பாமல் உனக்கு ஏதாவது நடந்தால் நாங்கள் எழுபது
பேரும் தீக்குளிப்போம் என்று சபதம் செய்துகொடுத்துவிட்டு அவனது
கத்தியையும் வாங்கிவிட்டனர். அன்றிரவே நீலி என்னும் அந்தப்பேய்
வணிகனைக் கொன்று பழிவாங்கி விட்டது. மறுநாள் வணிகன் இறந்துகிடப்பதைக்
கண்ட வேளாளர் எழுபது பேரும் தாம் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றத்
தீக்குளித்து இறந்தனர்.
நற்றிறம்புரி
பழையனூர்ச் சிறுத்தொண்டர்
நவை வந்து
உற்ற போது தம் உயிரையும் வணிகனுக்கு ஒரு கால்
சொற்ற மெய்ம்மையும் தூக்கி அச் சொல்லையே காக்கப்
பெற்ற மேன்மையில்
நிகழ்ந்தது பெரும் தொண்டை நாடு
என்று வாக்குத் தவறாத வேளாண்குடியினரின் சிறப்பை சேக்கிழார்
பாடுகின்றார். இது தான் சேக்கிழார் கூறும் பழையனூர் நீலியின் கதை.
இக்கதையைச் சற்று விரிவுபடுத்திக் கூறுகின்றது உமாபதிசிவத்தின்
சேக்கிழார் புராணம்.
மாறுகொடு பழையனூர் நீலி செய்த
வஞ்சனையால் வணிகன் உயிர்
இழப்பத் தாங்கள்
கூறஉயசொல் பிழையாது துணிந்து செந்திக்
குழியிலெழு பதுபேரும்
முழ்கிக்
கங்கை
ஆறணிசெஞ் சடைதிருவா லாங்காட் டப்பர்
அண்டமுற நிமிந்தாடுமட
அடியின்மின்கீழ்மெய்ப்
பேறுபெறும் வேளாளர் பெருமை எம்மால்
பிரிந்தளவிட்
டிவளவெனப் பேசலாமோ
சமணச்சார்புக் காப்பியமான நீலகேசியின் காவியத்தலைவி
பழையனூர்க் காளியாகத்தான் அறிமுகமாகின்றாள். உயிர்ப்பலி வாங்கும்
தெய்வமாக விளங்கும் காளியைத் திருப்திப்படுத்த பழையனூர்மக்கள்
ஆடுமாடுகளை வெட்டிப் பலிகொடுத்து வருகின்றனர். இக்காளியின் புகழ்
இந்தியாவின் வடக்கிலும் தெற்கிலும் பரவியிருந்தது. வடநாட்டில் பலாலயம்
என்னும் நகர்ப்புற மயானத்தில் உயிர்ப்பலி கொடுக்கப் படுவதைத் தடுத்து
நிறுத்த முனிசந்திரன் என்னும் சமணமுனிவர் முயற்சிக்கின்றார். அப்பாவி
மிருகங்களைக் கொல்லாமல் களிமண்ணில் அவற்றின் உருவங்களைச் செய்து அவற்றை
வெட்டிக் காளிக்குப் பலிகொடுக்கலாமே என்று ஊர்மக்களுக்குச் சமணமுனிவர்
புத்தி புகட்டுகின்றார். பொதுமக்களும் அவரின் பேச்சைக்கேட்டு காளிக்கு
உயிர்ப்பலி கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள்.
தனக்குப் பலி கிடைக்காமையினால் மனம் நொந்த பலாலயத்துக் காளி
சமணமுனிவனோடு நேரடியாக மோதப் பயந்து தன்னிலும் ஆற்றல் மிக்க காளியான
பழையனூர் நீலியிடம் உதவிகோரினாள். பழையனோர் நீலி சமணமுனிவனுடன்
பலவழிகளில் போராடித் தோற்றுவிட்டாள். பின்னர் அந்தச் சமணனிடமே சரண்
அடைந்து அவரது மாணவியாகி சமணமதக் கருத்துக்களைப் பயின்றாள்.
நாடுமுழுவதும் பயணித்து பல்வேறு மதங்களைச் சார்ந்த அறிஞர்களோடு
வாதிட்டு அவர்களையெல்லாம் வென்று சமணத்தின் பெருமையை நிலை நாட்டினாள்.
இதுதான் சமணர் கூறும் நீலகேசியின் கதை.
ஊர்த்துவதாண்டவம்
கொடுத்த
வாக்கைக் காப்பாற்ற
வேளாளர் தீக்குளித்த நினைவிடம்
பெண்ணின் பெருந்தக்க யாவுள
கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்
(குறள் எண்:54)
என்னும் குறளுக்குச் சாட்சியாக விளங்கிய ஒரு சாதாரணப் பெண்ணின் கதையை
எழுத விரும்பினார் இளங்கோ அடிகள் என்னும் ஒரு சமணத்துறவி.
அந்தப்பெண்ணின் பெருமையை உலகம் அறியவேண்டுமானால் அரசன் முதற்கொண்டு ஊர்
மக்கள் அனைவரையும் அக்கதையுடன் சம்பந்தப்படுத்த வேண்டும். பாண்டிய
மன்னனையும் மதுரை மாநகரையும் கதையுடன் தொடர்புபடுத்தினார். பாண்டியன்
இறந்தான். பாண்டிமாதேவியும் இறந்தாள். மதுரை நகர் எரியுண்டது.
அப்பெண்ணின் கற்பின் திண்மையை உலகமே அறிந்துகொள்வதற்கு இதைவிட வேறு
என்ன வேண்டும். ஆயினும் இக்கதையில் பலமரணங்கள் இடம்பெறுவதற்குச்
சந்தர்ப்பம் ஏற்படுத்தியதால் சமணரான இளங்கோ அடிகளுக்கு இக்கதை
முழுமையான வெற்றியாக அமையுமா என்னும் கேள்வி எழுகின்றது.
ஒருவரது இரத்தமேனும் சிந்தப்படாமல் பெண்ணொருத்தியின் கற்பின் வலிமையை
எடுத்துக்காட்டும் கதையொன்றைப் படைத்தார் மற்றுமொரு சமணப்புலவர்.
அக்கற்புக்கரசியின் பெயரும் நீலிதான்.
சமணரின் இல்லறவாழ்க்கை பற்றிக்கூறும் சமந்தபத்திரரின்
இரத்தினகண்டகம் என்னும் நூலின் உரையில் இந்த நீலியின் கதை
கூறப்படுகின்றது.
இக்கதையின்படி நீலி என்பவள் ஜினதத்தன் என்னும் வணிகனின் மகள். அழகு
மிக்க மங்கையான நீலியைக்கண்ட சாகரதத்தன் என்னும் இளைஞன் நீலியின் மேல்
காதல் கொண்டு அவளை மணம் முடிக்க விரும்பினான். இந்த இளைஞனின்
குடும்பத்தவர் புத்தசமயத்தவராதலின் சமணரான நீலியின் பெற்றோர் அவனுக்கு
நீலியைக்கொடுக்க மறுத்தனர். சாகரதத்தனோ நீலியை மணப்பதில் பிடிவாதமாய்
இருந்தான். இந்நிலையில் சாகரதத்தனும் அவனது பெற்றோரும் சமணர் போல்
நடித்து நீலியைப் பெற்றனர். திருமணத்தின் பின்னர் உண்மையை அறிந்து நீலி
வருந்தினாள். எனினும் மதம் மாறாமல் இல்லறதர்மத்தைப் பேணிக் கணவனுக்கும்
அவனது பெற்றொருக்கும் வேண்டிய பணிவிடைகளைக் குறைபடாமல் செய்துவந்தாள்.
எனினும் நீலியின் கணவனும் அவனது பெற்றோரும் நீலியைப் புத்தசமயத்துக்கு
மாறும்படி தொடர்ந்து வற்புறுத்திவந்தனர்.
ஒருநாள் புத்தபிக்கு ஒருவர் நீலியின் வீட்டுக்கு வருகின்றார். அவரை
வரவேற்று உணவளிப்பது பௌத்தரான நீலியின் புகுந்த வீட்டாருக்கு உரிய
கடமை. எப்போதும் தோலினால் செய்யப்பட்ட செருப்புக்களுடன் நடந்து
திரியும் வழக்கமுள்ள பிக்கு தனது செருப்புக்களை வெளித்திண்ணையில்
வைத்துவிட்டு உள்ளே வருகின்றார். அவருக்கு மாமிசக்கறி
சமைத்துக்கொடுக்கும் பணி நீலியிடம் கொடுக்கப்படுகின்றது.
என்னசெய்வதென்று தெரியாமல் முதலில் தடுமாறிய நீலி பின்னர் பிக்கு
வெளியே விட்டுவைத்திருந்த செருப்பு ஒன்றை எடுத்துத் தன் திறமையினால்
அதனைக் கறியாக்கிப் பிக்குவுக்குப் பரிமாறினாள்.
நீலியின் சாப்பாடு அற்புதமாக இருந்தது என்று பாராட்டிவிட்டு வெளியே
வந்த பிக்குவின் ஒரு செருப்பைக் காணவில்லை. நீலியை விசாரித்தபோது அவள்
நடந்த உண்மை முழுவதையும் கூறிவிட்டாள். அவள் கூறியதைக் கேட்ட நீலியின்
கணவனும் அவனது பெற்றோரும் கடும் கோபம் கொண்டனர். நீலியைப்பற்றி
இல்லாததும் பொல்லாததும் கூறி ஊரார் மத்தியில் அவளது நடத்தை குறித்து
சந்தேகத்தைப் பரப்பினர். மனங்கலங்கிய நீலிக்கு உதவிபுரிய ஒரு தெய்வம்
முடிவெடுத்தது. அதன் செயலால் நகரின் கோட்டைக் கதவுகள் அடைபட்டன.
கதவுகளை எவராலும் திறக்க முடியாமல் போயிற்று. அக்காலத்து மக்கள்
கற்பின் திறனில் நம்பிக்கை கொண்டவர்கள். நகரப்பெண்கள் அனைவரும் அரசனால்
அழைக்கப்பட்டுக் கதவைத் திறக்கும்படி கேட்கப்பட்டனர். எவருக்கும்
கதவுகள் அசைந்துகொடுக்கவில்லை. இறுதியில் நீலி வந்தாள். அவள்
தொட்டவுடன் கதவுகள் திறந்துகொண்டன. நீலியின் கற்புக்குக் களங்கம்
கற்பிக்க நினைத்த அவளது கணவனும் அவனது பெற்றோரும் வெட்கித்
தலைகுனிந்தனர். அரசன் முதற்கொண்டு அந்நாட்டு மக்கள் அனைவருமே நீலியின்
கற்பின் திண்மையை அறிந்துகொண்டனர்.
கலாநிதி பால.சிவகடாட்சம்
உங்கள்
கருத்து மற்றும் படைப்புக்களை
editor@tamilauthors.com
என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
|