இந்தியா-இலங்கை இணைந்திருந்தனவா?

கனி விமலநாதன் B.Sc


நான் சிறுவனாக இருந்த காலத்தில் குடும்பமாகக் காங்;கேசன்துறைக் கடற்கரைக்குச் செல்லும் வழக்கம் இருந்தது. அவ்வேளைகளில் எல்லாம் ஆர்ப்பரிக்கும் பாக்குநீரிணைக் கடலின் வடக்கே இந்தியா உள்ளதென்றும் அங்கேயும் தமிழ் பேசுகின்ற மக்கள் வசிக்கிறார்கள் என்றும் எனது தாயார் கூறுவார். இன்னமும் இந்தியத் தமிழருக்கும் எங்களுக்கும் இரத்த உறவு உள்ளதென்றும் இந்தியத் தமிழரும் இலங்கைத் தமிழரும் ஒரே ஆட்கள்தான் என்றும் கூறுவர். எனது தகப்பனாரும் தனது பங்கிற்கு அக்காலங்களில் பாக்குநீரிணையை நீந்திக் கடந்த நீச்சல் வீரர்கள், வல்வெட்டித்துறையின் 'ஆழிக்குமரன்'ஆனந்தன், நவரட்ணசாமி, இருவரைப் பற்றியும் கூறிப் பெருமைப்பட்டுக் கொள்வார். எனது பெற்றோர் இருவரும் கூறியதில் இருந்து இந்திய இலங்கைத் தமிழரின் தொப்பிள்க்கொடி உறவு என்பது எனது மனதில் ஆழமாகப் பதிந்து பல தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது. ஆர்வ மிகுதியில் நடுக்கடலுக்குப் போய் அங்கிருந்து பார்த்தால் இந்தியா தெரியுமோ என்று கேட்டதற்கு, சில மீனவர்கள் நடுக்கடலில் நின்று பார்க்கையில் இந்தியக் கரையில் உள்ள சில உயர்ந்த கட்டிடங்கள் தெரியும் என்று கூறுகிறவர்கள் எனக் கூறினார். மேலும் அவர் ஒருபடி மேலே போய் ஒருகாலத்தில் இலங்கையும் இந்தியாவும் ஒன்றாக இணைந்து இருந்தன என்றும் பின்னர் பாக்குநீரிணை இடையில் புகுந்து இரண்டு நாடுகளையும் பிரித்து விட்டது என்றும் கூறியிருந்தார். இந்தியாவும் இலங்கையும் ஒருகாலத்தில் ஒன்றாக இருந்தனவா? என்ற கேள்வி அப்போதே எனது அடிமனதில் எழுந்து பதிந்துவிட்டது.

எனது பட்டப்படிப்பு முடிந்ததும், மன்னாரின் எருக்கலம்பிட்டி மத்திய மகாவித்தியாலத்திற் சிலகாலம் ஆசிரியராகத் தொழில் புரிந்திருந்தேன். அவ்வேளையில் எருக்கலம்பிட்டியின் சில நண்பர்கள், தங்களின் பேரனின் பேரன் காலத்திற் பெண்கள் கூட தலைமன்னாரில் இருந்து இந்தியாவின் தனுசுக்கோடியின் பாம்பன்தீவுக்குக் கோடைகாலங்களில் நடந்து செல்வார்களாம் எனக் கூறுவார்கள். மேலும், இன்றும் கூடக் கடலின் நீரோட்ட மாறுபாடுகளினால், கோடைகாலங்களில் இந்திய-மன்னார் கடலிடையே பெரும் மண்குதிர்கள் (மண்திட்டுகள்) தோன்றிக் காணப்படும் என்றும் கூறுவார்கள். நிலையில்லாத, ஆபத்தான அம்மணற்திட்டுக்கள் களவான இந்திய-இலங்கைப் பயணங்களின் போது மறைவிடங்களாக அமைந்துவிடுகின்றனவெனவும் அந்த நண்பர்கள் கூறினார்கள். இப்படியான தகவல்கள் ஒருகாலத்தில் இந்தியாவும் இலங்கையும் இணைந்துதான் இருந்தனவோ என்ற எனது சிறுவயதுச் சிந்தனையின் உறுதியைப் பலப்படுத்தியிருந்தன.

இப்படியான உரையாடல்களின் விரிவு சிறுவனான எனக்கு குமரிக்கண்டம், முக்கடல்கோள்கள், தமிழரின் முத்தமிழ்ச்சங்கங்கள், தொல்காப்பியம், சங்கப் பாடல்கள், திருக்குறள் என்பவை பற்றிய விபரங்களை ஓரளவுக்குத் தந்ததுடன் அவை பற்றிய தேடல்களுக்கான ஆர்வத்தையும் கொடுத்தன. எனது கல்வியின் விஞ்ஞானக் கற்கைநெறி, விண்வெளித் தேடல்கள் என்பவற்றிகும் அப்பால் இன்றும் மெதுமெதுவாகத் தொடரும் எங்களின் பழைமையின் தேடல்களின் வெளிப்பு ஒன்றுதான் இக்கட்டுரையின் தலைப்பு. இக்கட்டுரையின் தெளிவிற்காக, இந்திய இலங்கைப் புவியியல் அமைப்பினையும் சிறிது தெரிந்து கொள்ளுவோம்.

வட இலங்கையையும் தென்னிந்தியாவையும் பிரிக்கும் பாக்குநீரினை (Palk Strait)  இலங்கையின் வடக்கில் 40முதல் 80 மைல் அகலமானது. 1755–1763 ஆண்டுக் காலப்பகுதியில் மதறாசின் ஆளுனராக இருந்த றொபேர்ட் பாக் என்பவரின் பெயரில் அழைக்கப்படும் இந்த, 100 மீற்றரையும் விட ஆழம் குறைந்த நீரிணையால் பிரிக்கப்பட்ட இந்திய இலங்கையின் இடையேயான மிகக் குறைந்த தூரம் 18 மைல்கள் என்கிறார்கள். இந்தப் பாக்குநீரிணையை Bay of Palk  என்று கூறப்படும் பாக்விரிகுடா என்பதன் தொடர்ச்சி அல்லது அதன் ஒருபகுதி எனலாம். பாக்விரிகுடாவின் தென்பகுதியில் மன்னார் வளைகுடா (Gulf of Mannar)  அமைந்துள்ளது. இந்தப் பாக்விரிகுடாதான் இலங்கையையும் இந்தியாவையும் பிரித்து நிற்கிறது. விளக்கத்திற்காக அருகில் உள்ள படத்தைப் பாருங்கள்.

இலங்கையின் மன்னார்த்தீவின் தலைமன்னாருக்கும் இந்தியாவின் இராமேசுவரம் தீவு என்கிற பாம்பன்தீவிற்கும் இடைப்பட்ட தூரம்தான் 18 மைல்கள். இப்பகுதியில் கடலில் நீரினுள் சுண்ணாம்புக் கற்களாலான இணைப்பு ஒன்று இருப்பதைச் சில வருடங்களுக்கு முன்னர் வந்த நாசாவின் செய்மதிப் படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. இவ்விணைப்பு இயற்கையாக அமைந்ததென விஞ்ஞானியர் சிலர் கூறினாலும் இராமாயணத்தில் கூறப்பட்டபடி சீதையை மீட்டுவருவதற்காக, இலங்கைத்தீவிற்குச் செல்வதற்கு இராமர் கட்டிய இராமர்-சேது (இராமரணை) இதுதானென இந்துக்கள் கூறுகின்றார்கள். ஆனால் இராமயணத்தைப் பற்றி அறியாத, இந்திய-இலங்கைப் பகுதிகளை ஆண்ட வெள்ளையர்கள், கிறிஸ்தவ-இஸ்லாமிய மதங்களின் நம்பிக்கைகளின் அடிப்படையில் இதனை ஆதாமின் பாலம் (Adam Bridge) எனக் குறிப்பிட்டிருந்தார்கள். நாசாவின் படம் வருவதற்கு முன்னரே ஆதாமின் பாலம், இராமரணை என்ற பெயர்கள் வழக்கில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கடலினுள் இருக்கும் சுண்ணாம்புக் கற்களாலான இத்தொடுப்பு 1.7 மில்லியன் வருடங்களுக்கு முன்னராக ஏற்பட்டிருக்கலாம் என நாசாவினர் கணித்துள்ளனர். இதன்படி பார்த்தால் இராமரணை என்பதும் ஆதாமின் பாலம் என்பதும் கேள்விக் குறியாக மாறிவிடுகிறது. ஏனெனில் தற்காலத்திற் பெருமளவினரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட டார்வினின் கூர்ப்புக் கொள்கையின்படி, கோமோ சேப்பியன்கள் என்கிற மனிதவினமே தோன்றி அதிகம் போனால் 300,000 வருடங்கள்தான் ஆகிறது. அதற்கு முன்னர் கோமோ இரக்சசுக்கள் என்று கூறப்படுகின்ற ஆதிமனிதர்கள் தோன்றியிருந்தாலும் பாலங்கள் போடுவதற்கான எந்தவொரு வல்லமையும் அவர்களிடம் இருக்கவில்லை. அப்படியிருக்க எப்படி இராமரோ அல்லது ஆதாமோ இந்தப் பாலத்தை உண்டாக்கியிருக்க முடியும் என்ற கேள்வி எழுகின்றதல்லவா.

அருகில் நாசாவினர் எடுத்த ஆதாமின் பாலம் அல்லது இராமர்-சேது என்கிற இராமரணையைக் காணலாம்.

இவை ஒருபுறமிருக்க, தமிழ்நாட்டிற் பாயும் பல ஆறுகளுள் 'தாமிரபரணி'யும் 'வைகையும்' குறிப்பிடத்தக்க இரண்டு ஆறுகளாகும். இவ்விரு ஆறுகளும் பண்டைத் தமிழர்களின் வாழ்வுடன் இரண்டறக் கலந்திருந்தன என்பது சங்கப் பாடல்களில் இருந்து அறிந்து கொள்கிறோம்.

தாமிரபரணி

தாமிரபரணி வெறும் 80 மைல் நீளமான சிறிய ஆறு ஆகும். பெரணை எனவும் அழைக்கப்படும் இந்த ஆறு, மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி மன்னார் வளைகுடாக் கடலில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 'புன்னைக்காயல்' என்ற இடத்தில் கடலுடன் கலக்கின்றது. இந்த ஆறு பாய்ந்தோடும் இடங்களில் தாமிரம் (செப்பு) மண்ணிற் கலந்திருப்பதால் இவ்வாற்றின் தண்ணீர் செப்பின் மெல்லிய செந்நிறத்துடன் மிகவும் சுவையாகவும் இருக்கின்றது.

தமிழ் இலக்கியங்களிற் சிறப்பாகக் கூறப்பட்டுள்ள தாமிரபரணி, புராணங்களிலும், மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. குமரிக்கண்டம் கடலுள் அமிழ்ந்த பின்னர் தப்பிய தமிழர்களின் முக்கிய இடங்கள் தாமிரபரணி ஆற்றை ஒட்டிய இடங்களிலும் அமைந்திருந்தன என்கிறார்கள். அப்படியான இடங்களாக ஆதிச்சநல்லூரையும் அதனை ஒட்டிய இடங்களையும் அகழ்வாய்வுகளின் வெளிப்புகளில் இருந்து இனங்காட்டுகின்றனர். இந்தத் தாமிரபரணி ஆறு தமிழர்களைப் பொறுத்த வரையில் இன்றும் முக்கியமான ஆறாக உள்ளது.

ஒருகாலத்தில் இலங்கையைத் தாமிரபரணி என்று அழைத்ததற்கான பதிவுகள் உள்ளன. இலங்கையின் மண்ணிலும் தாமிரத்தின் செறிவு அதிகம் இருந்தது, அதனால்தான் அப்பெயரினை இலங்கை கொண்டிருந்து என்போர் இன்றுமுள்ளர். ஆனால் பண்டைக்காலத்தில் இலங்கையும் இந்தியாவும் இணைந்திருந்தன என்றும், அவ்வேளையில் தாமிரபரணி ஆறு இலங்கை வரையிலும் பாய்ந்தது என்றும் பிந்நாட்களில் இலங்கை கடலால் தனியாகப் பிரிக்கப்பட்ட பின்னரும் தாமிரபரணியின் பெயர்ச் செல்வாக்கு இலங்கையில் இருந்ததினால், அக்காலத்தில் இலங்கையைத் தாமிரபரணி என அழைத்தார்கள் என்போரும் உளர். பழங்காலத்தில் கிரேக்கப் பயணிகளும் ஆய்வாளர்களும்; இலங்கையை 'தாம்ரபர்ணே' என்று அழைத்ததற்கான குறிப்புகளும் (கூகுளிலும்) உள்ளன. இன்னமும் இந்தியாவின் தாமிரபரணி போன்று செப்புச் செறிவு கொண்ட 'தாமிரபரணி' என்றொரு 'மழை-வெள்ள-ஆறு' வடக்கில் ஓடி, இப்போதுள்ள முல்லைத்தீவுப் பகுதியில் உள்ள கடலில் விழுந்ததாகவும் சிலர் கூறுகின்றனர். இலங்கையின் பண்டைய ஆறுகள் வரைபடத்தில் இதனைக் காணலாம்.

வைகை ஆறு

வைகையும் தமிழ்நாட்டிற் பாய்கின்ற ஆறுதான். இதிலே வியப்பான விடயம் என்னவெனில் இன்று 258 கிலோமீற்றர் தூரம் மட்டுமே ஓடுகின்ற, அதிலும் கோடைகாலங்களில் கிட்டத்தட்ட முற்றாகவே வறண்டு காணப்படும் வைகையை 'வற்றா வைகை' எனச் சங்கப்பாடல்கள் சிறப்புடன் குறிப்பிடுகின்றன.

அருகில் இன்று வைகை ஆறு பாயும் பாதையைக் காண்கிறீர்கள்.

இந்நதியும் மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகி இராமநாதபுரத்தில் உள்ள பாம்பன் பாலத்திற்கு அண்மையில் உள்ள 'உச்சிப்புளி' என்ற இடத்தில் இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் பாக்குநீரிணைக் கடலிற் கலக்கின்றது. இன்று தொல்லியல் ஆய்வுகளின் ஊடாகத் தமிழர்களின் தொன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கும் கீழடியும் வைகை ஆற்றோரமாக இருப்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். இந்த வைகையும் காவேரிக்கு நிகராகத் தமிழர்கள் அனைவராலுமே விரும்பப்படுகின்ற நதியாகும்.

பொதுவாகவே சிந்துவெளி நாகரீகம், மெசப்பத்தேமிய நாகரீகம், எகிப்திய நாகரீகம், சீன நாகரீகம் போன்ற நாகரிகங்கள் எல்லாம் சீவநதிகள் எனப்படும் நீண்ட நதிக்கரைகளை ஒட்டியே இருந்தன. ஆனால் தமிழர்களாகிய எங்களின் பண்டை நாகரீகங்கள் பற்றிக் கூறுகையில் காவேரி, வைகை, தாமிரபரணி போன்ற சிறிய ஆறுகளே குறிப்பிடப்படுகின்றன. காவேரி ஓரளவு பெரிய ஆறாக இருக்கின்ற போதிலும் இவ்வாறுகள் வட இந்தியாவின் சிந்துநதி, மெசப்பத்தேமியாவின் யூபிரத்தீஸ்-ரைகிறீஸ் ஆறுகள், எகிப்தின் நைல்நதி, சீனாவின் மஞ்சளாறு என்பவை போன்று நீண்ட நதிகள் இல்லை. ஒருவேளை முன்னொரு காலத்தில் காவேரி, வைகை, தாமிரபரணி என்பவையும் கூட, நீண்ட ஆறுகளாக ஓடியிருக்கலாமோ என்ற எண்ணமும் தமிழ் ஆய்வாளர்களிடையே இருந்தது, இருக்கின்றது.

இப்படியாக இருக்கையில் அண்மையில் ஒருநாள் கூகுளில் ஒரு அரிய செய்தியினை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. எனது பல விடை தெரியாக் கேள்விகளுக்கான விடைகளின் ஆரம்பம் இதுவாக இருக்குமோ என்ற பரபரப்புடன் எனது மூளை வேலை செய்ய, என்னுள் உறைந்திருந்த, இதனுடன் தொடர்பான பல விடயங்கள் வெளிக் கிளம்பின. அச்செய்தினை முதலிற் தந்துவிட்டு இக்கட்டுரையின் செறிவுக்குத் தேவையான விடயங்களையும் சுருக்கமாகத் தருகிறேன்.

யூலை 18, 2019ல் கே.எஸ். யெயரட்னம் என்பவர் Submerged river system hint at India-Sri Lanka water links  என்றோர் ஆச்சரியமான கட்டுரையை, செய்தியை யேவரசந ஐனெயை என்ற இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தார். ஆர்வமுள்ளவர்கள் கூகுளில் றறற.யெவரசநயளயை.உழஅ என்ற இணைப்பில் இது பற்றிய விபரங்களைப் பெறலாம். தமிழர்கள் அனைவருமே இச்செய்தியினைப் பார்க்க வேண்டும் என்பது எனது விருப்பம். என்னைப் பரவசப்படுத்திய அச்செய்தி பற்றிய விபரங்களைச் சில முன்தெளிவுகளுடன் தருகின்றேன்.

நு.ளு.இராமசாமி, து.சரவணவேல் இருவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் Department of Remote Sensing  என்ற பகுதியின் ஆய்வாளர்கள். Remote Sensing என்பதன் தமிழ்ப்பதம் தொலையுணர்தல் என்பதாகும். தொலையுணர்தல் என்பது நிகழ்வு ஒன்றின் நடத்தையை அல்லது இயல்பினை அதனைத் தொடாது நுணுகி அறியும் முறையாகும். ஆய்வாளர்கள் இருவரும் செய்மதிப் படங்கள், கணனி, போன்ற உயர் அறிவியற் கருவிகளின் துணை கொண்டு, வைகையும் தாமிரபரணியும் ஓடியிருந்த தடங்களைத் தேடிய வேளையில்தான் இந்த ஆச்சரியமான வெளிப்புத் தெரிந்தது. இரண்டு நதிகளும் முன்னர் ஓடிய பாதைகள் ஆச்சரியப்படும் விதமான தடங்களைக் காட்டின. அத்துடன் அவர்களது ஆய்வின் முடிவுகள் இன்னொரு விடயத்தையும் வெளிக் கொண்டு வந்தன. இவை கூறுகின்ற தார்ப்பரியங்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

ஒருகாலத்தில் வைகை இப்போது கடலில் கலக்கும் உச்சிப்புளிக்கு அப்பாற் தரைப்பகுதி இருந்ததால் இன்னமும் சற்று தென்கிழக்காக ஓடிப் பின்னர் தெற்காகத் திரும்பி அப்போது நிலப்பரப்பாக இருந்த மன்னார் வளைகுடாப் பகுதியின் ஊடாக இன்றுள்ள இலங்கையின் தென்பகுதியான காலி வரையும் பாய்ந்து ஓடியிருக்கின்றது. அக்காலத்தில் இப்பகுதி எல்லாம் கடலாக இல்லாது நிலப்பரப்பாகவே இருந்திருக்கின்றது. வைகை மாத்திரமல்ல, தாமிரபரணியாறும் புன்னக்காயலின் அப்பால் இருந்த நிலப்பரப்பில் தென்கிழக்காகச் சிறிது ஓடிப் பின்னர் தெற்காக ஓடிக் கொண்டிருந்த வைகையுடன் இணைந்து கொண்டது. இவ்விரு நதிகளும் சேர்ந்து இன்றுள்ள இலங்கையின் காலி வரைக்கும் நந்நீரை வழங்கிக் கொண்டிருந்தன. இவ்விரு நதிகளும் ஓடிய பாதைகளின் தடங்களைச் செய்மதிப் படங்களின் ஊடாகக் காட்டித் தங்களின் கருத்துகளுக்கு வலிமை காட்டுகிறார்கள் இவ்விரு ஆய்வாளர்களும். தங்களின் ஆய்வின் தெளிவிற்காக அவர்கள் வெளிப்படுத்தியிருந்த செய்மதிப் படத்தைக் கீழே பாருங்கள்.




இப்படியாக இவ்விரு ஆறுகளும் பாய்ந்திருந்த காலத்தையும் அவர்கள் கணித்துக் குறிப்பிட்டிருந்தார்கள். அதன்படி, 20,000 ஆண்டு முன்னராக இலங்கையும் இந்தியாவும் இணைந்து ஒரே நிலப்பரப்பாக இருந்திருந்தன. அவ்வேளையில் இன்று கடலாக இருக்கும் பாக்குநீரிணை, பாக்விரிகுடா, மன்னார் வளைகுடா எல்லாம் நிலப்பரப்பாக இருந்திருக்கின்றன. இதற்கான ஆதாரமாக திருவாளர்கள் இராமசாமியும், சரவணவேலும் மேலேயுள்ள தெளிவாகச் செய்மதிப் படத்தைக் காட்டுகின்றார்கள். இதுவும் கிட்டத்தட்ட நாசாவினர் எடுத்த இராமரணை போன்றதே.

இவர்களின் இந்த வெளிப்படுத்தலானது ஒருவகையில் குமரிக்கண்டம் இருந்தது உண்மைதான் என்பதை உறுதிப்படுத்துவது போல் இருக்க, அது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலாக, 'இது குமரிக்கண்டம் இருந்தது என்பதற்கான உறுதிப்பாடு இல்லை. 20,000 வருடங்களின் முன்னர் இந்தியாவையும் இலங்கையையும் இணைத்திருந்த நிலப்பகுதி ஒருசில சதுர கிலோமீற்றர் அளவான மிகச்சிறிய பகுதி' என்று கூறியிருந்தார்கள்.

இக்கட்டுரையின் ஊடான எங்களது நோக்கு, அன்றொரு நாள் இணைந்திருந்த இந்தியா-இலங்கை என்பது தெளிவுறுகின்றது. இவ்வாய்வின் ஊடாகப் பண்டைத் தமிழ்ப் பகுதிகள் பற்றிய உண்மைகளைக் வெளிக்கொண்டு வந்த பாரதிதாசன்; பல்;கலைக் கழக ஆய்வாளர்கள் இருவரையும் அவர்களின் இந்த வேலையிற்காக பாராட்டுவோம், உற்சாகப்படுத்துவோம்.

குறிப்பு:

இக்கட்டுரையின் தொடர்ச்சியாக பல உய்த்தறிதல்களை நீங்களும் கண்டு கொள்ளலாம். அதற்கு உதவியாக எனது சிந்தனையில் உதித்த சில விடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

  • 1.
    இந்த ஆய்வானது இந்தியாவும் இலங்கையும் ஒருகாலத்தில் இணைந்துதான் இருந்தன என்ற கருத்திற்கு நல்லதொரு ஆதாரமாக உள்ளது எனலாம். இது 'ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பதம்' என்பது போல் இருந்தாலும் முற்றிலும் போதுமானதல்ல என்றே ஆய்வாளர் உலகம் கூறிக் கொள்ளும். இப்படியான பல ஆய்வுகள் பலதரப்பட்டவர்களாலும் செய்யப்பட்டு நேர்முடிகள் பெறப்பட்டாலே இலங்கையும் இந்தியாலும் முன்னொரு காலத்தில் இணைந்துதான் இருந்தன என்ற முடிவு ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் இப்படியான ஆய்வுகள் தொடருமா என்பது பெரிய கேள்விக்குறிதான். ஏனெனில் இம்முடிவானது உண்மையானது எனக் காட்டப்பட்டால் இன்றுள்ள பல விடயங்களை திருத்த வேண்டியநிலை ஏற்படும். குறிப்பாக இலங்கை இந்தியத் தமிழரிடையேயான உறவின் வலிமையைக் கூறலாம். இது போன்ற பல, தற்போதய உலகப் பல்முனை அரசியல்களுக்கும் ஒவ்வாத விடயங்கள் இருப்பதனால் இம்முடிவின் உண்மையின் ஆழத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளுக்கு பல அரச வலிமையுள்ள இடங்களில் இருந்தும் முட்டுக்கட்டைகள் எழும். 'கிரகம் கான்கொக்'கின் பூம்புகார் ஆய்வுகள் தடுக்கப்பட்டதை நினைத்துப் பாருங்கள்.

    2.
    மதிப்புக்குரிய ஆய்வாளர்கள் இராமசாமி அவர்களும் சரவணவேல் அவர்களும் குறிப்பிட்டபடி, வைகையினதும் தாமிரபரணியினதும் நீட்சிகள் ஓடியது குமரிக்கண்டமாக இருக்க முடியாது. 20,000 ஆண்டு முன்னர் அவற்றின் முடிவிடத்தற் கூடக் கடல் இருந்திருக்கலாம். இன்னமும் 15,000 வருடங்களின் முன்னர் நிகழ்ந்த பனிக்காலத்தின் கடைசி நீர்ப்பெருக்கின் போதே இலங்கையும் இந்தியாவும் பிரிக்கப்பட்டு, இடையில் இப்போதிருக்கும் கடற்பகுதி வந்திருக்கலாம் என எண்ணிட இடமுண்டு. ஆனாலும் எங்கள் இலக்கியங்கள் புராணத்தனமில்லாது கூறிய குமரிக்கண்டம் என்ற கூற்றினை, இவற்றின் அடிப்படையில் தூக்கி எறிந்திட முடியாது. இவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்னராகவே குமரிக்கண்டம் கடலால் கபளீகரம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என எண்ணிட இடமுண்டு. ஏனெனில் கிட்டத்தட்ட மில்லியன் வருடங்களாக இருக்கும் புவியின் கடைசிப் பனிக்காலம் தனியவே 15,000 வருடங்களின் முன்னர் மட'டுமேதான் நீரூழியை ஏற்படுத்தவில்லை. காலத்திற்குக் காலம் பலமுறை தன் கைங்கரியத்தைக் அது காட்டியிருந்தது. அப்படியாக முன்னர் ஏற்பட்ட நீரூழிகளினால் கடலுள் அமிழ்ந்ததுதான் குமரிக்கண்டமாக இருக்க வேண்டும். ஏனெனில் நாங்கள் ஒன்றல்ல, மூன்று கடல்கோள் அழிவுகளை அனுபவித்திருக்கின்றோம் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. இன்னமும் எங்களின் இலக்கியங்கள் கூறிய பஃறுளியாற்றினதும் குமரியாற்றினதும் பன்மலையடுக்குக் குமரிக்கோட்டினதும் தடங்கள், சுவடுகள் என்பன இவர்களது ஆய்வின் தெளிவுப் படங்களில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றிற்கான தடங்களுக்கு இன்னமும் தெற்கில் ஆழமான ஆய்வுகள் நடக்க வேண்டும் என்று எண்ணுவோர் உளர்.



இப்படி இன்னமும் பல உள்ளன. உங்களது ஆய்வுப் பரப்புகளையும் விரித்துப் பாருங்கள். உங்களின் சிந்தனைகளின் நேர் - மறை வெளிப்பாடுகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இடுத்த தடவையில் இன்னொரு சுவையான பார்வையுடன் வருகிறேன். நன்றி!

அன்புடன்,
கனி.
தொடர்பு கொள்ள விரும்புபவர்களுக்கு, : 647 782 2827

 

கனி விமலநாதன் B.Sc                                    


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்