ழுத்தாளர் சாயாவனம் கந்தசாமி (1940-2020)

த.சிவபாலு
B.Ed.Hons,  M.A.


மூத்த எழுத்தாளர்கள் வரிசையில் இலக்கியம் படைத்த எழுத்தாளர் சா.கந்தசாமி அவர்கள். தன்னடக்கத்தோடு ஆசரியப்பணியில் ஈடுபாடும், இயற்கையின் பால் ஈர்ப்பும்கொண்டவர். சாயாவனம் என்னும் நாவலின் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர். காவிரிக்கரையில் வியாபித்திருந்த காடுகள் அழிக்கப்பட்டு கரும்புச் செய்கைக்கும் தொழிலாலைகள் நிறுவுவதற்குமான முயற்சிகளை இளவதிலிருந்து அவதானித்து வந்தவர். இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பை மனதிருத்தி நீண்டகாலமாக சிந்தித்துச் செயற்படுத்தப்பட்டதே அவரது 'சாயாவனம்' ஆகும். வெட்டி வீழ்த்தப்படாத வனமாகவே இருக்கக் கனவு கண்டு எழுதப்பட்ட நாவல் அது. அது அவரை இலக்கிய உலகம் அறிந்துகொள்ள வைத்தது. அதனால் அவரது பெயரோடு ஒட்டிக்கொண்டது நாவலின் பெயரான 'சாயாவனம்.' இதன்பின்னர் அனைவரம் அவரைச் சாயாவனம் கந்தசாமி என்றே அழைத்தனர். அவரது எழுத்தாற்றலை வியந்து 1998ல் அவரது இன்னொரு நாவலான 'விசாரணைக் கமிஷனுக்குச் சாகித்திய அகடமி விருது கிடைத்தது. 'சென்னையில் கூவம் ஆற்றின் கரையில் இருந்த இல்லத்தில் அமர்ந்து கொண்டு காவிரிக்கரை ஊரான சாயாவனம் குறித்து நாவல் எழுதினேன். சாயாவனம் என்றால் கதிரவன் ஒளிக்கதிர்கள் உள்ளே நுழைய முடியாத வனம் என்பது பொருள். சாயாவனத்தை ஒட்டிச் செல்லும் ராஜபாட்டையில் கோவலனும் கண்ணகியும் கால் பதித்து மதுரைக்கு நடந்து சென்றதன் சுவடுகள் பதிந்திருக்கும் ஊர்'. என இயற்கையின் மீதும் வரலாற்றின் மீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் வைத்துள்ள அளவிற்கு மீறிய பற்றை வெளிக்காட்டுகின்றார். அவர் சாயாவனம் என்பதற்கு மிக அடர்ந்த காடு அல்லது வனாந்தரம் எனப் பொருள் கொள்கின்றார். அது சாய்ந்துவிடாது தொடர்ந்து நிலைத்திருக்கும் வனம் எனக் கொள்ளலாம்.

இலங்கைக்கு 250 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயரால் தேயிலை, இறப்பர், கோப்பித் தோட்டங்ளை ஆக்குவதற்காகக் தமிழகத்தில் செயற்கையாகவே விளைபயிர்களை அழித்து அவர்களைப் பட்டினிப்பிடில் தவிக்கவைத்து இலங்கைக்கு வாருங்கள் அங்கு தேனும் பாலும் ஆறாகப் பெருக்கெடுக்கின்றது, உணவு இலவசமாகக் கிடைக்கின்றது என ஏமாற்றி மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு பாணைக் காட்டி ஏமாற்றிக் கொண்டுவரப்பட்ட தமிழ் உறவுகள் தோட்டக்காட்டான் கள்ளத்தோணி எனப் பெயர்பொறிக்கப்பட்டுத் தோட்டங்களிலேயே வெள்ளைத் துரைகள் என்னும் அட்டைகளால் இரத்தம் உறிஞ்சப்பட்டவர்கள். சிங்கள அரசினால் தமிழர் என்பதற்காகவே குடியுரிமை பறிக்கப்பட்டவர்கள். அவர்கள் ஶ்ரீலங்கா அரசினால் ஶ்ரீமாவோ-சாஸ்திரி உடன்பாட்டின்படி 1964இன் பின்னர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட கூலித் தொழிலாளர்கள் வீதிகளில் அநாதரவாகக் கிடந்து இறந்ததைக் கண்டும்இ கேட்டும், அறிந்தும் அனுபவம் நிறைந்தவர் கந்தசாமி அவர்கள். இத்துயர்மிகு எண்ண அலையில் முகுழ்ந்து பிரவாகித்ததுதான் 'சாயாவனம்' என்னும் இயற்கைகைப் போற்றும் காவியம். தாயின் தொப்பிள் கொடி உறவினால் சாயாவனத்திற்கு வந்த சிதம்பரம் கொஞ்சங் கொஞ்சமாக சாயாவனத்துள் புகுந்து கரும்பாலை கட்டுவதே அவரது கதைக்களம். இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த அந்த ஊரவர்களுக்குத் தங்க வீடும் விவசாயத்திற்கான நிலமும் உண்டுஇ அனால் வந்தேறு குடியாகப் பார்க்கப்பட்ட சிதம்பரத்திற்கு முதுசமோ நெருங்கிய உறவுகளோ இருந்திருக்க வாய்ப்பில்லை. அவன் தனது வாழ்வை நிலை நிறுத்த ஆங்கிலேயரால் அறிமுகப் படுத்தப்பட்டுப் பழக்கப்பட்ட காடழித்தலும் கரும்பு நாட்டி வளர்த்தலும் அவனுக்கொன்றும் புதிதல்லவே. அவனது சிந்தனை ஓட்டம் காலங்காலமாக அங்கு வாழும் மக்களின் வாழ்வியலில் இருந்து வேறுபடுத்தப்படுகின்றது. பெருந்தோட்டச் செய்கைக்கான காடழித்தலுக்கு இலங்யைில் இருந்த சிங்களவர்களை வேலைக்கு அமர்த்த முடியவில்லை. அவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்ய விரும்பாதவர்கள். 'ஒரு ஈரப்பலா மரமும் நான்கு தென்னை மரங்களும் நின்றால் போதும்' என வாழ்வை ஓட்டிப்பழக்கப்பட்டவர்கள். இவர்களை ஒத்தவர்களாக சாயாவனப் பகுதியில் வாழ்ந்தவர்களும் கடின உழைப்பை விரும்பாத சோம்பேறிகள் எனக் குறிப்பிடுகின்றார் படைப்பாளர் சா.கந்தசாமி அவர்கள். கிடைத்ததைக் கொண்டு மனத்திருப்தியோடு கொண்டும் கொடுத்தும் வாழ்ந்து வந்த சமுதாயம் அது. பரம்பரை பரம்பரையாக பேணப்பட்டு வந்த தொழில் முறைகள் அரச அதிகாரம் பறிபோனபின்னர் அங்கு வாழ்ந்த குடிகள் அநாதரவாக்கப்பட்ட நிலையில் மாற்றானுக்கு உழைக்கவேண்டி நிலையில் இருந்தவர்கள். தெலுங்கர்., மொகலாயர், டெல்லி சுல்தான்கள், ஐரோப்பியர் என அன்னியர் ஆட்சிக்கு உட்பட்டு வாழ்வைத் தொலைத்தவர்கள். தமிழகத் தமிழர் என்பதனை அவர்கள் தேட்டத்திற்காக அல்ல வாழ்விற்காக உழைத்தவர்கள். அவர்களின் வாழ்வியலை படம்போட்டுக்காட்டுகின்றார் சாயாவனம் கந்தசாமி அவர்கள்.

இதே கதைப்போக்கினை ஈழத்து அதுவும் வன்னியின் மைந்தனாகத் தன்னை வரைத்துக்கொண்ட பாலமனோகரனின் 'நிலக்கிளி' மற்றும் 'குமரபுரத்தில்' காணமுடிகின்றது. காடுமண்டிக்கிடந்த தண்ணிமுறிப்பு குழம் அக்கபோதி மன்னனால் கட்டப்பட்டு விவசாயம் செய்யப்பட்ட பிரதேசமாகும். 'ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்' என வரும் பட்டினப்பாலை நூலில் ஈழத்து உணவு இந்தியாவில் இறக்குமதி செயய்படப்டமை வெளிப்படை. நெல் உற்பத்தியில் வன்னிப் பிரதேசம் முதன்மை பெற்று விளங்கியது. இன்றும் அழிந்து காடுமண்டிக் கிடக்கும் நூற்றுக்கணக்கான குழங்கள் வன்னிப் பிரதேசததில் உள்ளன. தமிழர் ஆட்சியின் வீழ்ச்சியின் பின்னர் வன்னிப் பிரதேசம் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனது இளமைப்பராயத்தில் சிங்கள வன்னிக்கு மாடுவாங்கப் போனகதைகள் எனது காதிற்கு எட்டப்பட்டவை. ஐரோப்பியரின் வருகைக்குப்பின்னர் பண்டைய நீர்ப்பாசனமுறைகள் கவனிக்கப்படாமலும் நிலவரி. உற்பத்தி வரி, தலைவரி போன்றவற்றால் நெற்செய்கை நிலங்கள் கைவிடப்பட்டன. இதனால் தண்ணிமுறிப்பு, வவனிக்குளும், முத்து ஐன்கட்டு, அக்கராயன் குளம். இரணைமடுக்குளம் போன்றன அழிந்து காடாகின. 1948 களின் பின்னர் இலங்கை ஆங்கில ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற பின்னர் நீர்ப்பாசனத் திணைக்களம். நிலஅபிவிருதத்தித் திணைக்களம் அரம்பிக்கப்பட்டு குடியேற்றத்திறட்டங்களும் ஏற்படுத்தப்பட்மையால் வன்னியில் வாழ்வியல் முறையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. இதனால் பெருந்தொகையான காடுகள் அழிக்கப்பட்டு விவசாய உற்பத்திக்கு உட்படுத்தப்ட்டன. இத்தகைய நிலைமைகளைச் சா. கந்தசாமி அவர்களின் சாயாவனத்திலும் காணமுடிகின்றது. சாயாவனத்தில் காட்டப்படும் கிராமியச் சூழலுகுக்கும் இலங்கை வன்னிக் கிராமங்களின் சூழலுக்கும் உள்ள நிலைமை ஒரேமாதிரியானவைதான். கிராமமக்கள் பொருளை வாங்கிவிட்டு செட்டியாருக்குத் தானியங்களை விளைந்தபின்னர் ஏற்றி அனுப்பி வைக்கும் நிலை வன்னியிலும் இருந்துள்ளது, கொம்பறைகளில் இட்டு வைக்கப்பட்டுச் சேமிக்கப்படும் குரக்கன், சாமை, தினை, நெல் போன்ற தானியங்களை நிலமற்ற ஏழை விவசாயிகளுக்குக்குக் கொடுத்து வாரக்கூலிகளாக வைத்திருந்த வரலாறு 1960 வரை வன்னியில் தொடர்ந்தது. எனது தந்தையார் நெல்லியடிக்குச் சென்று அங்கு பிடவைக் கடைவைத்திருந்த தமிழ் நாட்டு வர்த்தகர் சீனிவாசகம் செட்டியாரிடம் துணிகளை வாங்கிவந்து வீட்டில் வைத்து புத்தாண்டு, தைப்பொங்கல், தீபாவளி போன்ற தினங்களில் பரப்பி விற்பனை செய்ததைக் கண்டிருக்கின்றேன். அவ்வாறே அயல் கிராமமான செம்மலையில் உள்ள தென்னந் தோட்டங்களில் தேங்காய் வாங்கிவந்து அவற்றோடு துணியையும் கொண்டு சென்று பழம்பாசி, மருதோடை, நெடுங்கேணி போன்ற ஊர்களில் விற்றுவிட்டுப் பின்னர் அறுவடை முடிந்ததும் சென்று நெல்மூட்டைகளை வண்டிலில் ஏற்றி வருவது வழக்கம். இது 1955 வரை இடம்பெற்றதாக நினைவிருக்கின்றது. சா.கந்தசாமி அவர்களின் 'சாகாவனம்' இவற்றையெல்லாம் உள்வாங்கி தனது கதையைப் படைத்திருந்ததைக் காணமுடிகின்றது.

'சாயாவனத்தின் முன்னே புகார் செல்லும் நெடுஞ்சாலை. பின்னால் காவிரி ஆறு பாய்ந்தோடுகிறது. இரண்டிற்கும் இடையில் வனமொத்த பெருந்தோட்டம். செம்போத்துகள் கூவிக்கொண்டு தாழப் பறந்து போகின்றன. பச்சைக் கிளிகள், சிறகடித்தபடி செல்கின்றன'. என அவர் குறிப்பிடும் செம்போத்துக்கள் எவை என என்மனம் கேள்வி எழுப்பியது. நாம் இலங்கையில் செண்பம் என அழைக்கும் அழகிய செம்மை நிறமும் கருமை நிறமும் தீ போலப் ஒளிரும் கண்களும் கொண்ட எனது முற்றத்திலும் பலாமரத்திலும் வேலியோரமாக நிண்ட நாவல் மரத்திலும் தாவித்தாவித திரிந்த பறவை என்பதை உறுதிப்படுத்துவதாக 'செண்பகமே செண்பகமே' திரை இசைப்பாடலில் குறிப்பிடப்படும் பறவையும் ஒன்றேதான் என அறியமுடிந்தது.

'உயரமான இலுப்பை மரங்கள் கிளைகளைப் பரப்பிக்கொண்டு இருக்கும் புன்னை மரங்கள். சாய்ந்த மூங்கில்கள். குறிஞ்சா செடிகள், ஓணான் கொடிகள் படர்ந்த கள்ளிச் சப்பாத்திகள். அதன் கீழே ஊர்ந்து போகும் பாம்புகள், இனிப்பும் புளிப்புமாகப் பழங்கள் கொண்ட புளிய மரங்கள். நெல் விளையும் கழனிகள். குளங்கள். நீரோடும் ஓடைகள் இவற்றோடு இணைந்து வாழும் மக்கள் அமைதியான வாழ்க்கை தன் போக்கில் போய்க் கொண்டிருக்கிறது'. என அவர் விபரிக்கும் தன்மை நம் முன்னோடிகளில் வாழ்வியலைப் படம் போட்டுக் காட்டுகின்றது. இலுப்பை மரம் என அவர் குறறிப்பிடும் மரங்களும் வன்னியில் நிறையவே உண்டு. அதன் மருத்துவக் குணத்திற்காக அதன் பட்டை, பூ, விதை என்பன சேகரிக்கப்பட்டன். இலுப்பைப் பூவை இரவில் பாய்விரித்து விடியச் சேர்த்து சர்க்கரை செய்வார்கள். அதனால்தான் ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை' என்னும் பழமொழி இடம்பெற்றிருக்க வேண்டும் என ஊகிக்க முடிகின்றது.

நடிகர் கமலகாசன் இலங்கைத் தமிழைத் தெனாலி படத்தில் பேசியதுபோன்று இலங்கைத் தமிழையும் தனது சாகாவனத்தில் ஊசாட விட்டிருப்பது அவரது எழுத்திற்கு மெருகூட்டியுள்ளது. தஞ்சைத் தமிழும் இலங்கைத் தமிழும் முட்டி மோதுகின்றன. இயல்பான உரையாடல். யாழ்ப்பாணத்துத் தமிழ் வேறு மலையகத்தில் வாழும் தமிழர்களின் பேச்சுத்தமிழ் வேறு என்பது அனைவரும் அறிந்த உண்மை.

அவர் தனது நூலை மறுவாசிப்புச் செய்துள்ளார் என்பதனைப் பின்வருமாறு விபரிக்கின்றார். 'மிகச்சிறிய வயதிலிருந்தே வாசிப்புலகில் ஆழ்ந்துவிட்ட எனக்கு இலக்கியங்கள் காண்பிக்கும் கனவுலகும் தரிசனங்களும் நுண்மைகளும் என்றென்றுமான மனவுலகு. ஒரு விதத்தில் புத்தகங்கள் மட்டுமே நான் வாழும் முழுமை என்று எண்ணுவதுண்டு. தீவிர வாசிப்புலகிற்குள் நான் வந்தபோது வாசித்த முக்கிய புத்தகங்களில் சாயாவனமும் ஒன்று. கானகமும் செடிகளும் என்னை மூழ்கடித்து என்னுள் பரவசத்தை உண்டாக்கிய நூல் இது'. என அவர் பரவசப்பட வைத்து உலகறியச் செய்த நூல் சாயாவனம்.

அவரது படைப்புகக்ளில் இன்னுமொரு நாவல் 'விசாரையைக் கமிசன்' போக்கு வரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றும் தங்கராசுவையும் அசிரியையான அவரது மனைவி ருக்மணியையும் மையமாக வைத்து பிள்ளைகளற்ற குடும்பத்தின் ஊரவர்களில் அலர், சமகால அதற்கு முந்தைய அரசியல் சூழல்களைப் படம்பிடித்துக் காட்டுகினறது நாவல். போக்குவரத்துக் கழக ஊழியர்களின் உரையாடல் தத்துவார்த்தமாகப பின்னிப் பிணையப்பட்டுள்ளது. சா.கந்தசாமி அங்கு பணியாற்றினாரோ என்னும் வினாவை எழுப்பக்கூடி அளவிற்கு அழகிய உரையாடலாகப் பதிவாகியிருக்கின்றது. அவர்கள் வாழம் சூழலுக்கேற்ப அவர்கள் உபயோகிக்கும் சொல்லாடல்கள் அமைந்து விடுகின்றது. தங்கராசுவும் அவரது சகாக்களுக்குமிடையே இடம்பெறும் உரையாடலைத் தத்துரூபமாகத் தந்துள்ளார். கெட்ட வார்த்தைப் பிரயோகங்கள் உணர்ச்சியின் உச்சத்தில் இடம்பெற்றாலும் தங்கராசு குடும்பத்திற்கிடையே நிலவும் அன்னியோன்னியம் இன்று உழைக்கும் அல்லது உத்தியோகம் பார்க்கும் பெண்களைவிட பண்பாடு நிறைந்தவராக ருக்குமணி ரீச்சரைக் காட்டியுள்ளார்.

கதாபாத்திரங்களின் பேசுகளுக்கு நடுவேயே காலத்தைப் பதிவு செய்யும் சா.கந்தசாமி அவரகளின் எழுத்து நுணுக்கம், நம்மை கதையினுள் ஈர்த்துவிடுகிறது. உதாரணத்திற்கு, பாரதிவாணன் ருக்குமணி டீச்சரை பாராட்டும் போது 'உங்க கலை திறமை வச்சு தான் அறிஞர் அண்ணா கிட்ட கையெழுத்து வாங்க போறேன்' என்பதும், டெப்போவில் இரண்டு போக்குவரத்து ஊழியர்கள் எம்.ஜி.ஆரைக் கட்சிய விட்டு நீக்கிட்டாங்க என்பதும், 'இந்திரா காந்தியை சுட்டு கொன்னுடாங்க' என்று சரோஜா டீச்சர் ருக்குமணியிடம் தெரிவிப்பதும், இறுதியில் கட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது 'ராஜீவ் காந்திக்கு ஆதரவு தாரீர்' என்று பேசுவது எந்த காலக்கட்டத்தில் கதை நடக்கிறது என்பதை உணர்த்துகிறார். எனினும் கதையின் பின்னணிக் காலத்தைதத் தீர்மானிக்க முடியாத ஒரு குழப்பத்தைத் தருகின்றது என்ற விமர்சனமும் எழாமலில்லை.

'நாவலின் கடைசியாக வரும் அத்தியாயங்களில்தான் தலைப்பிற்குள் நுழைய முடிகிறது. காவல்துறைக்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் நடக்கும் சாதாரண சண்டை எப்படி பெரிய போராட்டமாக மாறுகிறது, அதனால் தங்கராசு குடும்பம் எப்படி பாதிக்கிறது என்று நாவல் முடிகிறது. அந்த போராட்டத்தில் பலர் இறக்கிறார்கள். அதற்கு மாவட்ட ஆட்சியாளர் 'விசாரணை கமிஷன்' வைக்கிறார். ஒரு சமூக போராட்டம் எப்படி ஒரு குடும்பத்தில் நிம்மதியை கெடுக்கிறது என்று இறுதியில் சொல்லும் போது எல்லோர் மனதிலும் இந்த நாவல் நிற்கிறது' என அகரம் பவுண்டேசன் பதிப்பகத்தாரின் பதிப்புரை தெளிவுறுத்துகின்றது.

எழுத்துத்துறையோடு மட்டுமன்றி குறும் படங்களையும் தயாரித்து வெளிட்ட படத்தயாரிப்புப் பணி அவரது இன்னொரு பரிமானம். எழுத்தர்களான ஜெயகாந்தன், அசோகமித்திரன், சிற்பி தனபால் போன்ற எழுத்தாளர்களின் வாழ்விலைப் படமாக்கியது பற்றிய அவரது கருத்துக்களைப் பகிர்வது பொருத்தமாக அமையும் என்பது எனது எண்ணம்.

'நான் செய்கின்ற இந்த டாக்கமட்டரிப் படங்கள் ஒரு அவசியம் என்றே கருதுகின்றேன். இதில் மற்றவர்களுடைய பங்களிப்பை விட என் பங்களிப்புத்தான் எனக்கு அதிகம்.' எனக் குறிப்பிட்டுள்ள அவர் மேலும் எழுத்துத்துறை சார்ந்து 'எனக்கு ஒரே ஒரு கொள்கைதான் இருக்கிறது. அது சங்க இலக்கியத்தில் சொல்லப்படுகிற ஒரு கொள்கைதான். சிறந்த முறையில் எழுதவேண்டும் என்பதுதான் அந்தக் கொள்கை. இந்தக் கொள்கை எவ்வளவு தூரம் என் எழுத்துக்குள் வந்திருக்கிறது என்பதை முழுமையாக செல்வதற்கு முடிவதில்லை. இந்தக் கொள்கையில் எனது மக்களை என் எழுத்து மாற்றிவிடும் என்று நான் நம்பவில்லை. படிக்கிறவர்கள் தங்களைப்பற்றி யோசிப்பதற்கு தூண்டுதலாக என் எழுத்து அமையுமென்று கருதுகிறேன். அது சில நேரங்களில் சாத்தியப்படலாம். முதல் நாவலிலேயே சாத்தியப்படலாம். முதல் வாசகத்திலேயே கூட அது சாத்தியப்படலாம். சில பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அது சாத்தியப்படலாம். ஒரு பொழுதும் சாத்தியம் இல்லாமலும் போகலாம். அது எழுத்தில் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். நான் சொல்வது நான் கதைகள் எழுதுவதில்லை. படிக்கிறவர்களுடைய கதையைத்தான் நான் எழுதுகிறேன். நான் எழுதும் கதை என்பது எல்லோருக்குமான கதை. காற்று பற்றி, ஆறுபற்றி, வறுமை பற்றி நான் எழுதக்கூடியவன் அல்ல. வாழ்க்கையை எவ்வாறு மக்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பற்றியே நான் எழுதுகிறேன். இதுவே என் இலக்கியக் கொள்கை என்று நான் கருதுகிறேன்'. என்று தனது கொள்கைபற்றி விளக்கமளித்துள்ளார். அத்தோடு தமிழில் இலக்கியத்தில் மிகுநந்த ஈடுபாடு கொண்ட அவர் சங்க இலக்கியம் பற்றிய மிக உயர்வான கருத்தைத் தன்னகத்தே கொண்டுள்ளார் என்பது அவரது உள்ளக்கிடக்கையாகும். அதனை 'அதை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. இது எழுத்தாளன் சம்மந்தப்பட்ட விடயம் அல்ல. ஒரு எழுத்து எல்லோரும் அறிந்துகொள்ளவில்லை என்றால் அதற்கு எழுத்தாளன் ஒன்றும் செய்யமுடியாது. அதைக் கொண்டு செல்கின்ற காரியம் வேறு வேறு தளத்தில் இருக்கிறது. அதற்கு மொழிபெயர்ப்பாளர்கள் செயல்ப் படுகிறார்கள். அதை எடுத்துச் சொல்வதற்கு கற்று அறிந்தவர்கள் தேவைப்படுகிறார்கள். அது இல்லாதவரையில் அது வெறும் புத்தகமாகவே இருக்கும். சங்க இலக்கியம் 2000 ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுதுதான் உலக இலக்கியம் என்று வெகு சிலர் அறிந்துகொண்டு இருக்கிறார்கள். ஏ.கே.ராமானுஜர் என்கின்ற ஒரு தமிழர் ஆங்கிலத்தில் அதை மொழிபெயர்க்கின்ற வரையில் அந்த சங்க இலக்கியம் அதாவது மதம் சாராத சங்க இலக்கியம் என்பது தெரியாமல் இருந்தது. திருக்குறள்இ நாலடியாரைத் தெரிந்து வைத்திருந்தார்கள். ஏனென்றால் தமிழ் நாட்டிற்கு மதத்தைப் பரப்புவதற்கு வந்த கிறிஸ்தவர்களுக்கு அவை தேவைப்பட்டன. 16 ஆம் நூற்றாண்டில் மதம் பரப்ப வந்த ரோபட் நொபிலி (Robert D Nobilii) 'தமிழ்' என்று ஒரு மொழியிருப்பதாக ஐரோப்பியர்களுக்குச் சொன்னார். பிறகு புரட்டஸ்தாந்து மதத்தைப் பரப்ப ஒல்லாந்து நாட்டின் சார்பாக ஜி.எல்.போப் என்ற ஜேர்மனியர் வந்தார். அவர் ஒளவையாருடைய கொன்றைவேந்தன், மூதுரை, ஆத்திசூடி ஆகியவற்றைப் படித்துவிட்டு முதன் முதலில் ஒளவையாரை மொழிபெயர்த்தார். அது 'ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம்' என்பது. அதுபற்றி செக்கொஸ்லாவாக்கிய தமிழறிஞர் டாக்டர் கமில்சுலபில் 'இந்திய மொழியில் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்ட மொழி தமிழ்' என்று குறிப்பிட்டுள்ளார். ஆகஇ ஒரு மொழிபெயர்ப்பாளன் வருகின்றவரை எந்தவொரு படைப்பும் காத்துக் கொண்டிருக்கும். அது எழுத்தாளனுடைய பிரச்சினையே கிடையாது. எழுத்தளன் எப்பொழுதும் எழுதிச் செல்கிறான். அவனுடைய மொழியைப் படிக்கத் தெரிந்தவர்கள் குறைந்த பட்சமாக படிக்கிறார்கள்.'

தமிழகத்திலே படைப்பிலக்கியம் கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் கற்றுக்கொடுப்பதில்லை. ஆகவே ஆசிரியர்களுக்கு தமிழ் இலக்கியம் தெரிவதில்லை. மாணவர்களுக்கு அதுபற்றியும் போவதில்லை. ஆகையால் முதலில் ஐரோப்பியர்களுக்கு, வெளிநாட்டவர்களுக்கு, அமெரிக்கர்களுக்கு, கனேடியர்களுக்கு தமிழ் இலக்கியத்தைச் சொல்லிக்கொடுப்பதைப் போல தமிழர்களுக்கு தமிழ் இலக்கியத்தை சொல்லிக்கொடுக்க வேண்டும். ஏனென்றால் படிப்பிலே படைப்பிலக்கியம் இல்லை. இவர்கள் பாரதியாருடன் நிறுத்திவிடுகிறார்கள். அதுகூட ரசனையடிப்படையில் அல்ல. சரித்திரபூர்வமாகப் படிக்கிறார்கள். பாரதியார் இங்கே பிறந்தார். இதையிதை எல்லாம் எழுதினார் என்று அவருடைய சரித்திரத்தைப் படிக்கிறார்கள். அது இலக்கியத்தை தெரிந்துகொள்வதற்கான முறையல்ல எனக்குறிப்பிடும் சா.கந்தசாமி அவர்கள் இலங்கையர்கள் தமிழ் மீது கொண்டுள்ள தாக்கத்தையம் கரத்தூன்றிக் கவனிக்கத்தவறவில்லை என்பதனை அவரது கூற்றுக்கள் மெய்ப்பிக்கின்றன.

ஐரோப்பியர்கள் மதம் பரப்புவதற்கா வந்து தமிழைக் கற்றபின்னர் அதனை உரைநடையில் எழுதத்தொடங்கினர் என்ற அவர் 'இதே நேரத்தில் இலங்கையிலும் தமிழில் உரைநடை புழங்கத்தொடங்கியது. ஆறுமுகநாவலர் பைபிளை மொழிபெயர்த்தார். பின்னர் அவர் தனியாக தமிழில் உரைநடை நூல்கள் எழுத ஆரம்பித்தார். பழைய புராண நூல்களை உரைநடையில் எழுதினார். அதுதவிர கட்டுரைகள் பலவும் எழுதியிருக்கிறார். தமிழில் அவர் ஒரு மிகச்சிறந்த உரைநடை எழுத்தாளர் என்று சொல்லவேண்டும். தமிழகத்திற்கு வெளியில் இருந்துகொண்டு உரைநடையை மிகவும் செழுமைப்படுத்தியவர் என்று அவரைச் சொல்லலாம். அவர் சிறந்த சொற்களைக்கொண்டு தெளிவான முறையில் ஒரு இலக்கிய மரபுடன் எழுதினார். அவருடைய உரைநடை ஒருமுறை திரு வி.கவுக்கு முன்னுதாரணமாக இருந்தது. திரு.விக. எழுதிய உரைநடை என்பது ஆறுமுகநாவலரை பின்பற்றி எழுதப்பட்ட உரைநடைதான். இந்த உரைநடைக்குப் பிறகுதான் பாரதியார் அவருடைய இலக்கியத்தையும் கற்பனையையும் கலந்து ஒரு உரைநடையை எழுதிக்கொண்டு வந்தார். பிறகு மக்களுக்கு அதிகமாக புரியக்கூடிய விதத்தில் நாவல், சிறுகதைகளுக்கான உரைநடை வந்தது. இந்த உரைநடை என்பது ஒரு இலக்கியத் தகுதியைப் பெற வேண்டும் என்று படைப்பு எழுத்தாளர்கள் கருதினார்கள். இந்த படைப்பு எழுத்தாளர்களுடைய உரைநடை என்பது பத்திரிகையின் உரைநடை அல்ல. ஒவ்வொரு படைப்பாளனும் தத்தமக்கு என்று ஒரு உரைநடையை தமிழ்மொழியின் உள்ளாகவே உருவாக்கிக் கொண்டார்கள். இந்த உரைநடையில்தான் நான் எழுதுவதாகக் கருதுகிறேன். நான் எழுதுகிற தமிழ் என்பது வெளிப்படையாகத் தெரியும் தமிழுக்கு உள்ளே இன்னுமொரு மொழி இருக்கிறது. அது வாசிக்கிறவனுடைய மொழியாக தன்னைத்தானே மாற்றிக்கொள்கிறது. அதன் அடிப்படையிலேயே அது அறியப்படுகிறது. இதுதான் உரைநடை வளர்ச்சி என்று குறிப்பிடவேண்டும்.' எனத் தமிழ் உரைநடை வளர்ச்சிபற்றிக் குறிப்பிடுவதனைக் காணலாம். அவர் படைப் பிலக்கியப்பரப்பில் மட்டுமல்ல தமிழ் இலக்கியப் பரப்பின் ஆய்விலும் கால் பதித்துள்ளமைக் காட்டுகின்றது,

சாகாவனம் கந்தசாமி அவர்களின் மறைவுகுறித்து அரசியல் வாதிகள் தொடக்கம் இலக்கியவாதிகளும் கவலைதெரிவித்து இரங்கல் செய்திகளை தந்துள்ளனர். கவிஞர் வைரமுத்து அவர்கள்

"மறைந்தாரே கந்தசாமி
சாயவனம் சாய்ந்துவிட்டதே!
தன்முனைப்பு தனி அடையாளமென்று
மெய்வெளியில் இயங்கிய கலைஞன் அல்லனோ!
சதை அழிவுறும். அவர் கதை அழிவுறாது"
எனத் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைர் ஸ்ராலின் மற்றும் மதிமுக தலைவர் தினகரன் உட்படப் பலர் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
காவல் தெய்வங்கள் என்னும் ஆவணப்படம், சைப்ரஸ் விழாவில் முதல் பரிசு பெற்றது.சா.கந்தசாமி அவர்கள் படைப்பிலக்கியத் துறையில் பிரபல எழுத்தாளர்களை குறும்படமாக்கியதனால் படத் தயாரிப்பாளர், திரை கதை எழுத்தாளர் என்னும் பரிமாணத்தையும் தனதாக்கிக் கொண்டார்.

''இப்பொழுது நான் புதுச்சேரியில் துபாஷியாக இருந்த ஆனந்தரங்கப்பிள்ளையின் கதையை குறும்படமாக எடுத்துக்கொண்டு இருக்கிறேன். அவருடைய காலம் 1709 – 1761. பிரெஞ்சுக்காரர்கள் ஆண்டகாலத்தில் வாழ்ந்தவர். அவர் தனது நாட்குறிப்பில் எழுதியவை
3500 க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட நூலாக வெளிவந்துள்ளது. 18 ஆம் நூற்றாண்டில் தமிழ்மொழி எவ்வாறு பேசப்பட்டது என்பதை தெரிந்துகொள்வதற்கு ஒரு ஆவணமாக அது உள்ளது. அத்தோடு தமிழ்மொழி எப்போது எழுத்துவடிவில் வந்தது என்பதைப் பற்றியும் அறியக்கூடியதாக உள்ளது.

அதுமட்டுமல்லாது தமிழ்மொழி எப்போது எழுத்துமொழியானது, தமிழ் என்பது எப்போது எழுதப்பட்டது, அந்த எழுத்திற்கு என்ன பெயர் வந்தது என்பது பற்றி ஒரு சிறிய அளவில் ஒரு படிப்பு ஆய்வு செய்து டாக்குமண்டரி படம் எடுத்தேன். பெரும்பாலும் கல்வி சம்மந்தப்பட்ட படங்களையே எடுக்கிறேன். மாணவர்களுக்கு கல்வியை போதிப்பதற்காக மத்திய அரசாங்கத்தினுடைய நிதியுதவியின் கீழ் இந்தப் படங்கள் எடுக்கப்படுகின்றன. படம் எடுக்கின்றபோது நானே நிறைய விடயங்களை கற்றுக்கொள்கிறேன். பலருக்கும் கற்றுக்கொடுக்கிறேன்' என அவர் தனது மனதைத் திறந்து காட்டுவதனை அவதானிக்கலாம்.
.
சா.கந்தசாமி எழுதிய நூல்கள்:
 
அவன் ஆனது
ஆறுமுகசாமியின் ஆடுகள்
தக்கையின் மீது நான்கு கண்கள்.

குறும் படங்கள்:

காவல் தெய்வங்கள்
சிற்பி தனபால்
ஜெயகாந்தன்
அசோகமித்திரன்
ஆனந்தரங்கப்பிள்ளை





                           
 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்