திறமைதான் நமது செல்வம் - நூல் திறனாய்வு

முனைவர் .கோவிந்தராஜூ

டாக்டர் மு.வரதராசன் அவர்களுக்குப் பிறகு இயல் தமிழுக்குப் பெரும் பங்களிப்புச் செய்தவர் பேராசிரியர் இரா.மோகன் என்றால் அது மிகையாகாது. இப்படி உறுதியாகச் சொல்ல எனக்குத் தகுதியுண்டு. பேராசிரியர் இரா.மோகன் அவர்கள் எனக்கு வாய்த்த ஒப்பிலாத் தமிழ்ப் பேராசிரியர். 1976 ஆம் ஆண்டில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அவர் ஆசிரியராகச் சேர்ந்தார்; நான் முதுகலை மாணவராகச் சேர்ந்தேன். இளம் அறிவியல் பட்டம் பெற்று, முதுகலைப் படிப்பில் தமிழைப் பயிலத் தொடங்கியபோது என் அச்சத்தைப் போக்கி ஆதரவாய் நின்று ஆர்வமூட்டியவர் பேராசிரியர் அவர்களே.

எங்கள் ஆசிரியர் மாணவர் தொடர்பு பின்னாளில் நட்பாக மலர்ந்தது. அவரது வளர்ச்சியில் என்னுடைய வளர்ச்சியும் இணைந்தே இருந்தது. நான் பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்கு முயன்றபோது, எனக்குப் பதிவு செய்யப்படாத வழிகாட்டிப் பேராசிரியராக இருந்ததை இன்றும் நன்றிப்பெருக்குடன் நினைத்துப் பார்க்கின்றேன்.

ஒரு கட்டத்தில் எனக்கு நூல் படைக்கும் நுட்பங்களைச் சொல்லித் தந்தார். என்னுடைய பேச்சில் எழுத்தில் அவரது சாயல் இருப்பதாக சில விமர்சகர்கள் சொல்லியதுண்டு. அந்த அளவுக்கு அவரது நூல்களை வாசித்திருக்கிறேன்; சுவாசித்திருக்கிறேன் என்று கூடச் சொல்லலாம். அந்த வகையில் நான் எழுத்தெண்ணி வாசித்த நூல் ஒன்று உண்டு. அது பேராசிரியர் எழுதியுள்ள திறமைதான் நமது செல்வம்.

திறமைதான் நமது செல்வம் என்பது நூலின் பெயர். 2013 மே மாதத்தில் இந்நூலை சென்னை வானதி பதிப்பகம் வெளியிட்டது. நூற்று ஐம்பது பக்கங்கள் கொண்ட நூலை அனைவரும் வாங்கத்தக்க வகையில் எழுபது ரூபாய் என விலை அமைத்தது. நூல் வெளியான அதே ஆண்டில் தமிழக நூலகங்களில் இடம்பெறும் பேற்றினைப் பெற்றது.

பேராசிரியரின் முன்னுரையைப் படித்தால் நூலின் நுவல் பொருள் இன்னதென்று இனிதே விளங்கும். பொருளடக்கம் குறித்த பறவைப் பார்வையாய் இலங்கும். உடனே நூலைப் படிக்கத் தூண்டும். தொடர்ந்து படித்தால் தாமரை மலர் மெல்ல மலர்வது போல் விரியும். நூல் முழுக்க நன்னூலார் குறிப்பிடும் பத்து அழகுகளும் பரவிக் கிடக்கக் காணலாம். நன்னூலை எழுதிய பவணந்தியார் குறிப்பிடும் பத்து வகையான குற்றங்களில் தேடினால்கூட ஒன்றும் கண்ணில் படாது.

யாருடைய அணிந்துரையும் இல்லாமல், ‘சிலசொல்’ என்னும் தலைப்பில் அமைந்த முன்னுரையுடன் இந்த  நூல் தொடங்குகிறது.    வையத்து வாழ்வாங்கு வாழும்  முறையை நுட்பமாய் எடுத்துரைக்கும் பாங்கிலே இந்நூலைப் படைத்திருக்கிறார். எந்த ஒரு கட்டுரையைப் படித்தாலும் பொது நோக்கம் இதுவே என்பது புலப்படும்.

“உலக அரங்கில் இந்திய நாட்டிற்கென்று ஒரு தனிப்பெயரையும் தனிப்பெருமையையும் தேடித் தந்திருப்பது அதன் கட்டுக்கோப்பான குடும்ப அமைப்பே ஆகும். இந்தியப் பண்பாட்டில் – தமிழ் மண்ணில் – குடும்பம் என்னும் நிறுவனம் ஒரு கோயிலாக- ஒரு பல்கலைக்கழகமாக- ஒரு நல்லறமாக காலம் காலமாக மதிக்கப்பெற்று வருகின்றது.” என்று தன் முன்னுரையில் பதிவு செய்கிறார்.  

‘இல்லறமே நல்லறம்’ என்னும் பெருந்தலைப்பில் ஏழு கட்டுரைகள் அமைந்துள்ளன. “‘ஒருவர் பொறை இருவர் நட்பு’ என்னும் நாலடியாரின் பொன்மொழி இல்வாழ்க்கையில் மந்திரமாக விளங்க வேண்டும்.” என்னும் மு.வ.வின் முத்தான முதுமொழியுடன் கட்டுரை தொடங்குகிறது. ஆய கலைகள் அறுபத்து நான்கைவிட அரிய கலை ஒன்று உண்டு என்றால் அது குடும்பக்கலையே ஆகும் என இயம்பும் பேராசிரியர், ‘குடும்பக்கலை போதுமென்று கூறடா கண்ணா’ என்னும் கண்ணதாசனின் ‘காத்திருந்த கண்கள்’ திரைப்படத்தில் இடம்பெறும் திரையிசைப்பாடல் வரிகளை விளக்கும் பாங்கு மிகவும் அருமை.

இயந்திரங்களில் உயவு எண்ணெய்(Lubricant) என்பது மிக முக்கியம். எவ்வளவு முக்கியம் தெரியுமா? எரிபொருளைவிட முக்கியம். கணவன் மனைவி உறவு நன்றாக இருப்பதற்கும் அன்பை வெளிப்படுத்தும் சின்னச் சின்ன சொல்தொடர்கள், சின்னச் சின்னச் செயல்கள் முக்கியம். எடுத்துக்காட்டாக, மனைவியின் தலைமுடி ஒன்று எப்படியோ கணவன் உண்ணும் உணவில் கிடக்க, அதைக் கண்ட கணவன்,” அடடா! இந்த முடி உன் தலையில் இருந்தாலும் நீ சமைத்த சோற்றில் கிடந்தாலும் அழகுதான்” என்று சொன்னால் சண்டை வருமா? இப்படி நயமாகச் சொன்னால் அவள் நாணித் தன் செயலுக்கு வருந்தி அடுத்தமுறை சமைக்கும்போது கவனமாக இருப்பாள் என்று எழுதிச் செல்கிறார் பேராசிரியர். எனவேதான் நான் சொல்கிறேன்: இந்நூல் பொழுது போக்குவதற்கான நூல் அன்று; மக்கள் வாழ்வைப் பழுது பார்ப்பதற்கான நூல்.

பேராசிரியர் அவர்கள் தமது  கட்டுரை ஒன்றின் நிறைவில் ஒரு முற்றுப்புள்ளியென வைத்திருக்கும் பாரதியாரின் பாடல் வரிகள் இங்கே குறிப்பிடத் தகுந்தவை.

“விண்டுரைக்க மாட்டாத விந்தையடா! விந்தையடா! ஆசைக்கடலின் அமுதமடா! அற்புதத்தின் தேசமடா! பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா!”

தொடர்ந்து ஒருவனது வாழ்க்கைப் பயணத்தில் மனைவியின் பங்களிப்பு எவ்வளவு என்பதை எவ்வளவு அழகாய் விளக்குகிறார்!

‘ஒரு மனிதனுக்கு முப்பது வயதில் தன் மனைவியின் இளமை ததும்பும் உடல் அழகு. தெரியும். நாற்பது வயதில் அவளது தூய அன்பு உள்ளம் புரியும். ஐம்பது வயதில் அவளது அருமை புலனாகும். அறுபது வயதில் அவள் இல்லாமல் தான் இல்லை என்ற முடிவுக்கு வருவான். எழுபது வயதில் அவள் தாயாவாள்; அவன் சேயாவான். எழுபது வயதுக்கு மேலேயும் அவர்கள் இருவரும் வாழ்கிறார்கள் என்றால், மனைவி தெய்வம் ஆவாள்; கணவன் அவளது பக்தனாக ஆவான்.”

கணவன் மனைவிக்கிடையில் பிணக்கு ஏன் வருகிறது என ஆராய்ந்து நல்ல தீர்வையும் தருகிறார் இந்த நூலாசிரியர். ஒப்பிடல் என்பது இலக்கியத்தில் இருக்கலாம், நடைமுறை வாழ்வில் இருத்தலாகாது. “என் அம்மா மாதிரி உன்னால் சமைக்க முடியாது” என்று கணவன் மனைவியிடம் சொல்வதைத் தவிர்க்க வேண்டும். “என் அப்பா மாதிரி வியாபாரத்தில் உங்களால் உயர முடியாது” என மனைவி தன் கணவனிடத்துக் கூறுவதையும் தவிர்க்க வேண்டும். உறவினரை ஒப்பிட்டு உயர்வு தாழ்வு பார்த்தால் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. அவ்வளவு ஏன்? “உன் அக்கா மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றாள். அவளைப்போல் உன்னால் பெற முடியுமா?” என்று இளைய மகளிடம் ஒரு தாய் கேட்டால் அந்தப்பெண் தாழ்வு மனப்பான்மையால் கூனிக் குறுகிப்போவாள். ஆக, ‘ஒப்பீட்டு ஆராய்ச்சி வேண்டா’ என்னும் தலைப்பிலான கட்டுரை குடும்ப மகிழ்ச்சிக்குக் கால்கோள் அமைக்கிறது எனக் கூறலாம்.

மணவாழ்வைத் தொடங்கும் ஓர் இளைஞன் பெற்ற தாயின் மடியும் கட்டிய மனைவியின் தோளும் சமம் என உணரவேண்டும் என்று சொல்லும் பேராசிரியர் “தாயை வணங்கு; தாரத்தைப் போற்று” என்னும் நுணுக்கமான அறிவுரையும் தருகின்றார்.

இதுவரை நான் படித்தறியாத கோணத்தில் ஓர் இன்றியமையாத கோட்பாட்டைச் சிந்திக்கிறார் பேராசிரியர் இரா.மோகன். ‘உழைப்பில் உள்ளான் இறைவன்’ என்பது கட்டுரைத் தலைப்பு. தம்பி ஒரு வேலையும் செய்யாமல் ஓய்வின்றி இரவு பகலாக நாள்தோறும் மசூதியில் அமர்ந்து தொழுகை செய்கிறார். அவரது அண்ணன் தொழுகைக்கு நேரமின்றி இரவு பகலாக உழைத்துத் தம்பியின் குடும்பத்திற்கும் சேர்த்துச் சோறு போடுகிறார். இதைப்பார்க்கும் நபிகள் நாயகம் தன் சீடர்களிடம் சொல்கிறார்: “ தொழுகை நடத்தும் தம்பியைவிட உழைத்துச் சோறுபோடும் அண்ணன் ஆயிரம் மடங்கு சிறந்தவர். உழைப்பதுதான் மிகச் சிறந்த தொழுகை என அவரிடம் சொல்லுங்கள்” பேராசிரியர் தான் சொல்ல வந்த கருத்துக்கு மிகப் பொருத்தமாக இந்த நிகழ்வைச் சுட்டுகிறார்.

நம் திருவள்ளுவர் என்ன சொல்கிறார்? வெறுமனே வழிபாடு செய்பவனுக்கு தெய்வம் உதவாது. ஆனால் உழைப்பவனுக்கு தெய்வம் தனது இடுப்பைச் சுற்றிய ஆடையை இறுக்கிக் கட்டிக்கொண்டு உதவிட அவனுக்கு முன்னே செல்லும் என்றல்லவா சொல்கிறார்!.
 

 குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

  மடிதற்றுத் தான்முந் துறும்.

 

என்னும் மணிக்குறளை நம் மனக்கழனியில் மறக்காமல் பதியம் போடுவது நன்று.

இன்றைய கணினியுகத்துக் காதலுக்கும் பொருந்தக்கூடிய  குறுந்தொகை முதலாம் பாடலை எடுத்து ஒரு கட்டுரையின் பேசுபொருளாக வைக்கிறார் பேராசிரியர். கண்டதும் காதல், கைகுலுக்கல், கட்டித் தழுவுதல், கரு தரித்தல் எனத் தொடரும் அவசரக் காதல் காலம் இது. ஆராய்ந்து பார்த்துக் கொள்ளாத காதலால் வரும் ஆபத்தை உணராத பெண்கள் பலராக இருக்கும் இக் காலத்தில் பேராசிரியர் குறிப்பிடும் குறுந்தொகையின் முதல் பாடல் இளையோரிடத்தில் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது உறுதி.

மன்னன் திறம்படத் திட்டமிட்டு ஆட்சி செய்தால்தான் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். குறிப்பாக நீர் மேலாண்மையில் மன்னன் திறமையுடையவனாக இருக்க வேண்டும். இன்றைக்கு அணைகட்டி நீரைத் தேக்குவது இயல்பான ஒன்று. ஆனால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுந்த புறப்பாடல்(புறம் 18) ஒன்று நீர் நிலைகள் அமைக்க நீடித்த  திட்டம் தீட்டுகிறது என்பதை பேராசிரியர் பெருமையுடன் எடுத்துக்காட்டி விளக்குகிறார். திறமைதான் நமது செல்வம் என்னும் நூல் தலைப்புக்கு மிகப் பொருத்தமாக அமைகிறது இக் கட்டுரை.

“மூன்றே பாத்திரங்கள்; குறிப்பிட்ட ஒரே இடம்; ஒரே உணர்ச்சி; அதை ஒட்டிய நம்பக்கூடிய சின்னஞ்சிறு நிகழ்ச்சிகள்; நினைக்க நினைக்க நம் நெஞ்சில் அக் காட்சி வானவில்லாய் விரிகிறது!” என்று அகிலன் வியந்து கூறும் ஒரு பாடலை(குறிஞ்சிக்கலி 15) எடுத்துக்கொண்டு சொற்சிலம்பம் ஆடுகிறார் பேராசிரியர் இரா.மோகன். திறமைதான் நமது செல்வம் என்னும் நூலை முகமாக உருவகம் செய்தால், இந்தக் கட்டுரை நெற்றியில் இட்ட திலகமாக விளங்குகிறது எனலாம். நாடகப் பாங்கில் அமையும் இந்தக் காதல் காட்சி வாசகரின் நெஞ்சில் என்றென்றும் நிலைத்திருக்கும். கபிலரின் திறமையைக் கணக்காய் வெளிப்படுத்தும் பேராசிரியரின் திறமை போற்றுதலுக்கு உரியதாகும்.

சரியான ஒருவரைத் தேர்ந்து நட்பு கொள்வதற்குத் தனித் திறமை வேண்டும். நாடாமல் நட்பு கொள்வது என்பது நஞ்சுண்பதற்குச் சமமாகும். ‘நாடாமல் நட்டலின் கேடில்லை’ என்பார் திருவள்ளுவர்.

பெரிதாகச் செய்ய விரும்பும் ஒருவர் புலியனைய பெருமுயற்சியாளருடன் சேர்ந்தால்தான் சாதிக்க முடியும். எலியனைய சிறு முயற்சியாளருடன் சேர்ந்தால் சீரழிய வேண்டியிருக்கும். இவற்றை எல்லாம் ஆழ்ந்து சிந்தித்த பேராசிரியர் சோழன் நல்லுருத்திரன் பாடிய புறநானூற்றுப் பாடலை(190) எடுத்துக்காட்டி விளக்கும் கட்டுரை நூலுக்குக் கூடுதல் மதிப்பைச் சேர்க்கிறது.

வாசகர்களுக்கு விவேகானந்தரை அறிமுகப்படுத்தும் அழகே அழகு! சுவாமி விவேகானந்தர் கடவுளிடம் என்ன பேசினார் என்பதை அறிந்தால் வாழ்வு குறித்த நமது மதிப்பீட்டை மறு ஆய்வு செய்ய வேண்டியிருக்கும். அப்படி என்ன பேசினார்?

“வலிமையைக் கேட்டேன்; நீ வலியைக் கொடுத்தாய். அறிவைக் கேட்டேன்; அறிதற்கு அரிய புதிரைக் கொடுத்தாய். மகிழ்ச்சியைக் கேட்டேன்; மனம் வாடும் மனிதரைக் காட்டினாய். செல்வம் கேட்டேன்; 'செய்க  பொருளை’ என்றாய். வளத்தைக் கேட்டேன்; வாய்ப்பினைத் தந்தாய். நான் விரும்பியதை நீ கொடுக்கவில்லை; எனக்கு எது தேவையென அறிந்து அதனைக் கொடுத்தாய்.”

ஒவ்வொரு கட்டுரையிலும் பேராசிரியரின் தனித்துவமான சிந்தனைகள் பொலிவுறும் பொன் மொழிகளாகப் பளிச்சிடுகின்றன. அவற்றைத் தொகுத்து “இரா.மோகனின் இனிய சிந்தனைகள்” என்னும் தலைப்பில் ஓர் அழகிய நூலை ஆக்கலாம். பதச் சோறாக ஒன்று:

“நமக்குத் தெரியாததைத் தெரியாது என்று சொல்வதிலே தப்பு எதுவும் இல்லை. ஆனால் நமக்குதான் எல்லாம் தெரியும் என்று நினைப்பதும், அடுத்தவருக்கு எதுவுமே தெரியாது என்று நினைப்பதும் தவறாகும்.”

பேராசிரியரின் சொல்நடையில் சொல்வதென்றால் அவற்றை வழிகாட்டும் வைர வரிகள் எனலாம்.

நிறைவாக, பேராசிரியர் இரா.மோகன் எழுதியுள்ள திறமைதான் நமது செல்வம் என்னும் நூலைப்பற்றி ஒருவரியில் கருத்துக் கூறுங்கள் என்று யாரேனும் என்னிடம் சொன்னால் நான் பின்வருமாறு சொல்வேன்.

‘தாய்ப்பால் போல எளிதில் சீரணிக்கத் தகுந்த பல நல்ல சிந்தனைகளை உள்ளடக்கிய ஓர் ஒப்பற்ற நூல்.”  
        

  

முனைவர் .கோவிந்தராஜூ                            


  

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்