தமிழ் இலக்கியங்கள் வெளிக்காட்டும் அறங்கள்

முனைவர் பூ.மு.அன்புசிவா

 

 

            பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கை நெறிமுறைகளைப் படம் பிடித்துக் காட்டுவது சங்க இலக்கியமாகும். எனவேதான் சமூக வராறுகளை ஆராயும் ஆய்வாளர்கள் இலக்கியங்களையும் ஒரு வரலாற்று ஆதாரமாகக் கொள்கின்றனர். தமிழ் இலக்கியங்களைப் பொருத்த வரையில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்பன மிகப் பழமையான இலக்கியங்கள் ஆகும். இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பாடப்பட்டவை அல்ல. பாடிய புலவர்கள் ஓர் ஊரினர், ஒரு நாட்டினர் அல்லர். இவர்கள் தம் பாடல்களில் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய கருத்துக்களையும், எந்நாட்டவரும் போற்றும் கற்பனை வளத்தையும் பதிவு செய்துள்ளனர்.

 

            இலக்கியம் என்பது சமூகம் சார்ந்தது. எனவேதான் அவை மக்களின் பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும், கலை முதலிய பண்பாட்டுக் கூறுகளை எடுத்து இயம்புவனவாக உள்ளன. இலக்கியம் என்பது கடந்த காலத்தை மட்டுமல்ல, நிகழ்காலத்திற்கும் அர்த்தம் கொடுக்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். அவ்வகையில் சங்க இலக்கியங்கள் இன்றும் உயிர் பெற்று வாழ்கின்றன.

பண்பாட்டு மாற்றங்கள்

            சங்க இலக்கியத் தொகுப்பு முழுவதும் பழங்குடிகளின் அறிவும், வேளிர், வேந்தர் எழுச்சியும் கண்ணுக்குத் தெரியும் காட்சிகளாக, அன்றைய அரசியல், பண்பாட்டு மாற்றங்களைக் காட்டும் கண்ணாடியாக அமைந்துள்ளன.  மாறிக் கொண்டிருந்த இந்தக் காலகட்டத்தில் புலவர்கள் சமூகத்தில் இருந்த பண்பாட்டுக் கூறுகளைக் கவிதையாக்கினர்.  கவிதைகள் காதலையும், வீரத்தையும் மட்டுமல்லாது வாழ்விற்குத் தேவையான நிலைகளையும் எடுத்துரைத்தன.  அதில் அறம் தலையாய இடம் பெற்றது.

            அந்த அடிப்படையிலே அறம் என்றால் என்ன, அதன் சொற்பொருள் விளக்கம், அறம் பற்றிய தெளிவான வரையறைகள், சங்க காலந்தொட்டு மக்களும் அறிஞர்களும் அறம் என்ற சொல்லை எவ்வெவ் பொருள்களில் எடுத்தாண்டார்கள், தமிழ்ச் சான்றோர்கள் அறம் என்ற சொல்லை இலக்கியங்களில் எங்கனம் பயன்படுத்தி வந்தார்கள்

அறத்தின் வரையறை

            அறம் என்ற சொல் மிகவும் நெகிழ்வு தன்மை மிக்க பொருளை உடையது. ஒரு மனிதன், தனக்குத் தானே தலைவனாகுவதற்கு (Self  Mastery ஆயளவநசல) உருவாக்கிய நெறிமுறைகள், கொள்கைகள் ஆகியவற்றின் தொகுப்பே அறம்” (Ethic) எனப்படுகிறது. நேர்மையான வாழ்க்கை  வாழ்வதற்குரிய சட்டமாக அறம் விளங்குகிறது என்ற புக்கோவின் கூற்று பொருத்தமாக அமைகிறது. இவ்வறத்தை, வாழ்க்கையில் கடைப்பிடிப்பதன் மூலம் இம்மையில் இன்பமும் மறுமையில் வீடுபேறும் அடைய முடியும் என்று சங்ககால மக்கள் நம்பினார்கள. துனி மனிதனுடைய உரிமைகளும் , கடமைகளும், சமூக பிணைப்பும், குடும்ப இணைப்பும், பழக்க வழக்கங்களும், விருப்பு வெறுப்பு என்னும் இயல்புகளுமாகிய அனைத்தும் அறத்தின் கோட்பாட்டினால் கட்டப்பட்டுள்ளன.  

 

 

வாழ்வியல் நோக்கத்தில் அறம்

            முதற்;கட்டம அறம் என்பதைச் சங்க கால மக்கள் ஒரு கொள்கையாகவோ, கோட்பாடாகவோ, சமயமாகவோ கருதாமல், வாழ்க்கை நெறியாகவே கருதிப் போற்றினார்கள். ஒழுக்க நெறிக்குரிய விதிமுறைகளின் தொகுப்பாகவே அறம் கருதப்பட்டது. சங்க கால மக்கள் கண்ட வாழ்க்கை நெறியாகிய அறம் பழக்கவழக்கங்களாலும், நீதியாலும், கடமையுணர்வாலும், ஒழுக்கத்தாலும், ஈகையாலும், கொடையாலும் வளர்ச்சியடைந்து பரந்துள்ளதை மேற்கூறிய செய்திகளின் வழி அறியமுடிகிறது. இனி, அறவியலின் தன்மையைக் காணலாம்.

அறத்தின் இயல்பு

            மனிதனின் நடத்தையைப் பற்றிய ஆய்வைத் தனக்குரிய பணியாக அமைத்துக் கொண்ட பிரிவுக்கு அறவியல் (Ethic) என்று பெயர். மனிதன் என்பவன் மூன்று பேரியக்கங்களைத் தன்னுள் அமைத்துக் கொண்டு நடமாடும் தொழிற்சாலையாக விளங்குகிறான். அமைந்திருந்தது என்றும் முடிவு செய்யலாம்.

            இத்தகைய வாழ்க்கைப் பாங்கு, சங்ககாலத் தமிழருடைய வாழ்வில் வடமரபுச் சிந்தனைகளின் ஊடுருவல் உண்டாவதற்கு  முன்பு சிறப்புற்று விளங்கியது என்பது  இதுவரையில்  சொல்லப்பட்ட முதல்கட்டத்தின் வழி புலனாகும்.

இரண்டாவது கட்டம்

            வடமரபின் செல்வாக்கு முதலில் நகரங்களிலும், அரச அவைகளிலும், உயர்குடி மக்கள் இடத்தும் பரவலாயிற்று. வைதீகத்தையும், சமண-பௌத்தத்தையும் உள்ளடக்கிய  மரபே இங்கு வடமரபு எனப்படுகிறது. சமயத் துறையில், எளிதில் வடமரபு செல்வாக்குப் பெற்றது. இதற்குக் காரணம்  வைதீக சமயத்தின் காவலர்களான ஆரியப் பார்ப்பனர்கள்  தொடர்ச்சியாக  சிற்றலைகளைப் போலக் குடும்பம் குடும்பமாக வடக்கிலிருந்து வந்து தமிழக மையப் பகுதிகளில் குடியேறத் தொடங்கியதேயாகும்”109 என்பார் ராஜ்கௌதமன். முதலில்  அரசரையும், நகரத்துச் செல்வாக்கு மிக்க மக்களையும் தங்கள் புதுமை நாகரிகத்தை” (வேதம், யாகம்) ஏற்றுக் கொள்ளுமாறு செய்வதற்கு ஆரியர்கள் அரும்பாடுபட்டுள்ளதைச் சங்கப் பாடல்கள் தெரிவிக்கின்றன. மெல்ல மெல்ல அவர்களுடைய பண்பாட்டு ஊடுருவல் வெற்றிபெற்றதன் விளைவினைக் கலித்தொகை, பரிபாடல், பதிற்றுப்பத்து, திருமுருகாற்றுப்படை போன்ற நூல்களில் தெளிவாகக் காணலாம். பிற்சங்க நூல்களில் அருகிய வழக்காக ஒரு சில பாடல்களில் இதற்குச் சான்று உள்ளது.

            சங்ககாலத் தமிழர் வாழ்க்கை ஆரியமயமாக இருந்தது. வேத வேள்விகள், பழக்க வழக்கங்கள் சிறப்பு மிக்கனவாகப் போற்றப்பட்ன. அவற்றை யாரும் எதிர்க்கவில்லை. ஒருவகைக் கலவை நாகரிகமாகவே சங்க கால நாகரிகம் காட்சி தருகிறது என்ற கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி அவர்களின்  கூற்று இங்கு ஆராயத்தக்கதாகும். மேற்கூறப்பட்ட ஆரியருக்கு முற்பட்ட தமிழருடைய வாழ்க்கை முறை இந்த வராற்று அறிஞரின் கருத்து உண்மை அன்று என்பதை விளக்கப்போதிய சான்றாகும். சங்க காலத்தின் கடைப்  பகுதியில் (கி.பி.250 அளவில்) வட ஆரியருடைய செல்வாக்குப் பெருகியது. ஆனால், அது அரசியல், சமய வாழ்வு ஆகிய துறைகளையே பெரிதும் தாக்கியது. சங்கப் பாடல்களில் வைதீக எதிர்ப்புக்குரிய சான்றுகள் காணப்படவில்லை. எனவே, சங்ககாலத் தமிழர்கள் வைதீக சமயத்தையும், வடமொழியின் வழிப்பட்ட பண்பாட்டையும் தயக்கம் இல்லாமல் விருப்பத்தோடு ஏற்றுக்கொண்டனர்.111 என்ற நீலகண்ட சாஸ்திரி அவர்களின் கூற்று முற்றிலும் பொருந்தாது என்பர் வரலாற்றிஞர். இதற்காக அவர்கள் கூறும் காரணங்கள் பின்வருமாறு:

            முதலாவதாகச் சங்க இலக்கியம் நிலப்பிரபுத்துவ சமுhதாய வாழ்க்கையைப் பிரதிபலிப்பது என்றும், ‘அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி  என்னும் பழமொழிக்கேற்ப சமுதாயத்தின் மேல் தட்டில் இருந்தவர்களுடை எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் எதிரொலிக்கும் வகையிலேயே அச்சமுதாய இலக்கியம் அமைந்துள்ளது என்றும், எனவே, சமுதாயத்தின் உறுப்புகளாக இருந்த எல்லா வகையான மக்களுடைய ஒருமித்த உள்ளுணர்வுகளையே கலித்தொகையும், பரிபாடலும், பிற நூல்களும் பிரதிபலிக்கின்றன எனக் கூற இயலாது என்றும் கருத்துரைக்கின்றனர்.112

            அக்காலத்திய சிறப்புமிகு சிந்தனையாளர்கள் சிலர் புதுமைப்போக்குடைய எண்ணங்களையும், நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் தங்களுக்கேயுரிய பெருந்தன்மையுடன் எதிர்த்துள்ளதைச் சங்கப் பாடல்கள் சிலவற்றில் காணமுடிகிறது. எனவே, ‘வைதீக எதிர்ப்பு திட்டமிட்ட ஓர் இயக்கமாக நடத்தப்பெறவில்லை எனக் கூறலாம்.

            உலகம் நிலையில்லாதது; இளமை நிலையில்லாதது;  யாக்கை நிலையில்லாதது; செல்வம் நிலையில்லாதது என்பதைச் சங்ககாலத்து மக்கள் அறிந்திருந்தார்கள்.113  ஆனால், அதற்காக அஞ்சி, அவர்கள் முற்றிலும் துறந்த முனிவர்களாகவோ, துறவிகளாகவோ ஆகிவிடவில்லை.

மன்னா உலகத்து மன்னுதல் குறித்

தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே

புகழ் எனின், உயிரும் கொடுக்குவர்

என்னும்  பாடலடிகளில் நிலையில்லா உலகில், புகழை நிலைநிறுத்திச் செல்லுமாறு சான்றோர்கள் அறிவுறுத்துவதைக் காணலாம். இதில், ‘வாழ்வாவது மாயம் என்னும் கொள்கைக்கு எதிராக, ‘வளமாக நலமாக வாழ்க! இவ்வுலகில் உங்கள் வாழ்க்கையின் பயனாகிய புகழை நிலைநிறுத்திச் செல்லுக! என்னும் எண்ணம் மேலோங்கி நிற்பதை அறிய முடிகிறது. இது தமிழருடைய சிந்தனைப் போக்கின் தனித்தன்மையைக் காட்டுகிறதெனலாம். வைதீக மரபுக்கு இணையாகச் சமண-பௌத்த மரபும் சங்க காலத்தில் தாக்கங்கள் ஏற்படுத்தியதை நிலையாமை மற்றும் ஊழ்வினை குறித்த பாடல்கள் வழி தெளியலாம்.

            அறம் செய்தால்-இப்பிறவியில் புண்ணியம் செய்தால்-அடுத்தப் பிறவியில் உயர்ந்த சுவர்க்க வாழ்வு கிடைக்கும் என்பது வடமரபின் கொள்கையாகும். இதனைத் தமிழ்ச் சான்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்கு,

இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்

பிறரும் சான்றோர் சென்ற நெறி என,

ஆங்குப் பட்டன்று, அவன் கைவண்மையே

என்னும் புறநானூற்றுப் பாடல் சான்றாகின்றன.

            இப்பாடலின் கருத்து, இங்கு ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும் ஒன்றைக் கொடுத்து மற்றொன்றைப் பெறுவது வணிக நோக்கு. இந்தப் பிறவியில் அறம் செய்தால் மறுபிறவியில் பயன்படும் என்னும் எண்ணத்தோடு அறம் செய்வோர் அற்த்தை விலைகூறி விற்கும் வணிகரே யாவர். இவ்வாறு வடமரபு குறித்த எதிர்ப்பு பெருந்தன்மையுடன் வெளிப்பட்டது. இதையே மற்றொரு சான்றோர்,

எத்துணை ஆயினும் ஈத்தல் நன்று என,

மறுமை நோக்கின்றோ அன்றே

பிறர், வறுமை நோக்கின்று, அவன்கை வண்மையே

என்று கூறுகின்றார்.

            வறுமையில் வாடுவோருடைய துன்பத்தைப் போக்க உதவுக! அறம் செய்க கொடுத்து உதவுவதே சிறந்த நெறி!  நம்முடைய பண்டைத் தமிழ்ச் சான்றோர்கள் பன்னெடுங்காலமாகப் போற்றியது  சிறப்பு மிக்க நன்னெறி அதை நாம் பின்பற்றுவோமாக மறுமை எனும் வரவுகருதி அறம் செய்யும் அயலவர் வழக்கம் நமக்கு வேண்டா எனும் கருத்துக்கள் மேற்கண்ட புறநாநூற்றுப் பாடலடிகளில் பொதிந்து கிடக்கின்றன.

            மனிதரிடையே பிறப்பு அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பது சங்ககாலத் தமிழர் அறியாதது. அதாவது, ‘வருணாசிரம நெறி அடிப்படையில் பூணூல் அணிவதற்குரிய தகுதியும் உரிமையும் வாய்ந்தவர்கள் பார்ப்பனர், சத்திரியர், வைசியர் என்னும் மூவகைச் சாதியினராவர், அவர்களே உயர்ந்தோர். மற்றவர்கள் எல்லாம் சூத்திரர் எனும் தாழ்ந்த சாதியினர் எனும் வைதீக சமயத்தினரரின் வருணப்பாகுபாட்டு முறையினைத் தமிழ்ச் சமுதாயத்தில் வடமொழிப் பண்பாட்டினர் சங்ககாலத்தின் பிற்பகுதியில் புகுத்த முயன்றனர்.

            அரசர்களிடம் செல்வாக்குப் பெற்று வேள்விகள் செய்து அவர்களுக்குப் புண்ணியம் தேடித் தருவதற்கு வைதீக சமயத்தினர் முயன்றனர். அதே சயமத்தில், தங்கள் வருணாசிரம தருமத்தையும் புகுத்துவதற்கு அவர்கள் ஆவண செய்தார்கள்.

            இவையாவும், சங்க காலத்தில் இரண்டாவது காலக்கட்டத்தில் (கி.பி.150-250) வைதீக சயமத்தினர் தங்கள் வருணாசிரமச் சாதி முறையையும், வேதவேள்விகளையும், ‘அடுத்த பிறவியில் ஆதாயம் கிடைக்கும் அதற்காக இந்தப் பிறவியில் தருமம் செய்க! எனும் வணிக முறை  அறச்செயலையும் தமிழ் மக்களிடையே புகுத்தியதன் வெளிப்படையாகும்.

            சங்கப் பாடல்களில் வேதத்தை மன்ற”, ‘கேள்வி”, ‘வாய்மொழி”, ‘முதுமொழி”, ‘நான் மறை”, ‘எழுதாக்கற்பு என்னும் தொடர்களால் புலவர்கள் சுட்டியுள்ளனர்.  வேத வேள்விகளைப் பற்றியும், வேள்வித் தூண்பற்றியும், முத்தீ வளர்த்தல் பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன.  மூவேந்தர்கள் இராசசூயம் போன்ற பெரும் வேள்விகளைச் செய்தார்கள் வேற்றுமை தெரிந்த நாற்பால் என்று நால்வகைச் சாதிமுறை பற்றி ஒரு மன்னன் குறிப்பிட்டான்.  பார்ப்பனர் போற்றப்பட்டனர்.   மறுபிறப்பு, துறக்கம், நரகம் பற்றிய பல செய்திகள் பேசப்பட்டன. ஆரியத் தெய்வங்களை தமிழருடைய தெய்வங்களோடு இணைத்தும் ஒன்று படுத்தியும் புலவர்களால் புதுவடிவம் கொடுக்கப்பட்டது.118

            ஆனால், இவை யாவும் சங்க காலத்தின் பிற்பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களாகும்.  அவை நகரத்து உயர்குடியார் வாழ்க்கையின் நாகரிகமாக அமைந்தன. இவற்றைப் பின்பற்றுவது மதிப்பைத் தரும் என்று உயர்குடித் தமிழ் மக்கள் நினைத்தார்கள்;: அதனால் இவற்றைப் பின்பற்ற முயன்றார்கள்.  சமய பழக்க வழக்கங்களையும் நகரவாழ்க்கை முறைகளையும் பாடிய புலவர்கள் அந்தப் புதுமை இயல்புகளைச் சிறப்பித்துப் பாடினார்கள்.  ஆனால், இக்கூற்றுக்கள், அன்றைய தமிழ் நாகரிகத்தின் இயல்புகளில் எத்தனை விழுக்காடாக இருந்திருக்க இயலும் என்பது சிந்தனைக்குரியதாகும்.

            சங்ககாலத் தமிழரின் வாழ்வியல் நோக்கத்தில் அறம் என்னும் தலைப்பில் இதுவரை கண்டவை அனைத்தும் தமிழரின் வாழ்வியல் நோக்கத்தில் அறம் பற்றிய சிறப்பியல்புகளேயாகும்.  அச்சிறப்பியல்புகளோடு, வடமரபின் பண்பாட்டுக் கூறுகளின் தாக்கங்களை ஒப்பிட்டால் மிகவும் சிறிய அளவே என்பது புலனாகும்.

மூன்றாவது கட்டம்

            சங்ககாலச் சமயத்தின் வாழ்வியலில் வடமரபின் சமண, பௌத்த சமயத்தின் தாக்கத்தால் மூவித நிலையாமைகள்”, வினைக் கொள்கை, மறுபிறப்பு, துறவு, உயிர்க்கொலை செய்யாமை முதலிய கருத்தாக்கங்கள் செல்வாக்குப் பெற்றது.  இது மூன்றாவது(கி.பி.250-400)கட்டமாகும்.  வினையின் வந்தது வினைக்கு விளைவாவது என்னும் போக்கில்,

அவலக் கவலை கையாறழுங்கல்,

தவம் உள்ளம் தன்பால் உடையது,

மக்கள் வாழ்க்கை இதுவென உணர்க!

என்னும் எண்ணப்போக்கு சிலப்பதிகாரம், மணிமேகலை காலத்தில் தோன்றியதாகும். துறவு நெறியே சிறந்தது எனும் உணர்வினை ஊட்டுவதற்கு அவர்கள் முயன்றார்கள். ஆனால், இதற்கு வெளிப்படையாக எதிர்ப்பு இயக்கம் தோன்றியதைச் சமய மறுமலர்ச்சிக் காலத்தில் (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) காணமுடிகிறது.

            இம்மூவகைக் காலக்கட்டங்களிலும், ‘சங்ககாலத் தமிழரின் வாழ்வியலும், அவ்வாழ்வியலில் இடம் பெற்ற அறமும் வளர்ந்து சிறந்திருப்பின் என்பதையும் இவற்றின் அடிப்படைப் பண்புகளான இன்ப நாட்டத்தையும் புகழ் வெறியையும் வாழ்க்கையின் உயர்ந்த குறிக்கோள்களாகப் பண்டைத் தமிழர்கள் கொண்டிருந்தார்கள் என்பதையும் இதுவரை கூறிய சான்றுகள் வழி அறியமுடிகிறது. இனி, தமிழ் அற மரபான அறம், பொருள், இன்பம் என்னும் கருத்தாக்கங்கள் இலக்கியங்கள் எங்ஙனம் பதிவு செய்துள்ளன என்பதைக் காணலாம்.

அறவியல் நோக்கு

            சங்க காலத்தில் அறநூலகள் தனித்து இருந்தனவா என நோக்கினால், தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள சில நூற்பாக்களால் அவை இருந்தமை புலனாகின்றது. அறச் செய்திகள் கூறும் பாவகை பற்றித் தொல்காப்பியம் விதந்து கூறுகின்றது. மேலும், முதுமொழி, வாயுறை வாழ்த்து, அங்கதம் என்னும் யாப்பு வகைகள் வெளிப்படையாகவும், குறிப்பாகவும் அறம் உணர்த்துவன் என அறியலாம். அடிவரையில்லாதன எனத் தொல்காப்பியர் குறிப்பனவற்றுள்ளும் மந்திரம், முதுமொழி, குறிப்பு என்பன அறம் உணர்த்தும் திறனுடையனவாகும்.



முனைவர் பூ.மு.அன்புசிவா

இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்

தமிழ்த்துறை

சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

நேரு நகர், கோயம்புத்தூர் - 641014.

பேச:9842495241.                               


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்