சுமேரிய நாகரீகம் அறிமுகம்

சுமேரிய நாகரீகம் அறிமுகம் கனி விமலநாதன் B.Sc  


மண்கிண்டி முன்னோர் மறைதேடும் வல்லவர்
கண்டவுண்மை காற்றிற்கோ நீசொல் - விண்காண்
புகழோர் விரிப்பின் வியப்புகள் நன்றே
இகத்தினில் இன்றும் இருக்கு.

பத்தொன்பதாம் நூற்றாண்டு பல தெளிவுகளை மனிதவினத்திற்குக் கொண்டு வந்திருந்தது. அந்நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் டால்ரன் 'அணுக்கொள்கை'யைக் கொண்டு வந்து பௌதீக, இரசாயன இயல்களின் விரிவிற்கு வித்திட்டு, விஞ்ஞான உலகம் புதுப்பாதையிற் செல்வதற்கான வழியினைச் சமைத்துக் கொடுத்தார். பின்னராக 1850களில் இன்னமும் பல புதுப்புது விடயங்கள் வெளிவந்து, உலகினரை ஆச்சரியப்படுத்திக் கொண்டிருந்தன. தமிழ்நாட்டிற்கு மதம் பரப்ப வந்திருந்த கால்ட்வெல் என்ற இங்கிலாந்தின் மத போதகர், சமஸ்கிருதத்தைச் சாராமல் இருந்த தென்னிந்திய மொழிகளின், குறிப்பாகத் தமிழ்மொழியின் தனித்துவமான தன்மையை உலகினருக்குச் சுட்டிக் காட்டியதும் அப்போதுதான். டார்வினும் உயிரினங்களுக்கான தனது கூர்ப்புக்கொள்கையைத் தந்ததும் அப்போதுதான். மனிதவினக் கூர்ப்புப் பாதையிற்கான ஆய்வுகளில் மனிதரின் சகோதரவினமென உயிரியலாளர் கருதும், கூறும் நியாண்டத்தல்களின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதும் இக்காலத்திலேயேதான். இப்படியான பல தெளிவுகள் பிறந்திருந்த இக்காலத்தில்தான் மனிதவினத்தின் முன்வரலாற்றுக் காலத்தை அறிந்து கொள்வதற்கான ஆரம்பமும் ஏற்பட்டது.

இவ்வகைச் சிறப்புடை அந்நூற்றாண்டின் நடுப்பகுதியில், 1856ம் ஆண்டில் இங்கிலாந்தின் அஸ்ரின் ஹென்றி லயாட் ; (Austen Henry Layard)  என்பவர் பிரித்தானியரின் ஆட்சிக்குட்பட்டிருந்த மத்திய கிழக்கின் மணற்பரப்புகளை ஆய்வுசெய்து கொண்டிருக்கிறார். இலங்கையில் ஆங்கிலேயரின் குடிசார் நிர்வாகத்திற் சிலகாலம் பணிபுரிந்த இவர், அதன் பின்னராக உலக மக்கள் பற்றி அறியும் ஆர்வத்தினால் அதற்கான தேடுதல்களில் பெரிதாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இவ்வேளையில் இன்னொரு விடயத்தையும் தெரிந்து கொள்வோம்.

பழைய நாகரீகங்களைப் பற்றிக் கூறும் நூல்களில் மிகப் பழமையானது கிறிஸ்தவர்களின் பைபிள்தான். பல பழைய மொழிகளில் பலவகையான இலக்கியங்கள் எழுதப்பட்டிருந்தாலும் பல்வேறு காரணங்களினால் அவை இன்று இல்லாது போய்விட்டன. தப்பி நிற்பது பைபிள் மாத்திரமே. எபிரேய நூல்கள் மற்றவர்களிடம் சேராதபடியாலும், 2ம் நூற்றாண்டின் பின்னர் கிறிஸ்தவம் கிட்டத்தட்ட உலகெங்கும் பரவியதாலும் பைபிள் இச்சிறப்பினைப் பெறுகின்றது. இதன்வழியில் மத்திய கிழக்குப் பகுதிகளில் பைபிளில் கூறப்பட்டிருந்த பாபிலோன், நிநிவே, சீனாய் போன்ற இடங்களையே ஐரோப்பியர், உலகினர் தேடிக் கொண்டிருந்தனர். அப்படியாகத் தேடிய வேளையில் முன்பின் அறியாத பல நாகரீகங்கள் மத்திய கிழக்கின் மணற்பரப்புகளில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தன.

அவ்வகையில்தான் பிரித்தனியரின் கட்டுப்பாட்டின் கீழிருந்த மத்திய கிழக்கில் லயாட்டின் ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தன. லயாட் ஒரு புதைபொருள் ஆய்வாளர் அல்லர். புதைபொருள் ஆய்வுகளும் அப்போது பிரபலமானவையாக இருக்கவில்லை. தங்கள் கருத்துகளுக்கான சான்றுகளைத் தேடுபவர்கள் தங்களின் சொந்த விருப்பிலேயே மண்மேடுகளைத் தோண்டிக் கொண்டிருந்தார்கள். இப்படியாக இருக்கையில்தான் மனிதவினத்தின் நல்வாய்ப்பாக ஈராக் பகுதியில் இருந்த மண்மேடொன்று லயாட்டின் கண்களிற் தென்படுகின்றது. அந்த மண்மேடு மனிதவினத்தின் வரலாற்றினைத் திருத்தியெழுதப் போகின்றது என்று அவர் அறிந்திருக்கவில்லை. லயாட் அந்த இம்மண்மேட்டில் ஏறிப்பார்க்கின்றார். அம்மண்மேட்டில் இருந்த ஒரு சிறுகுழி அவரின் கவனத்தை ஈர்க்க, அதனைத் தோண்டிப் பார்க்கத் தொடங்குகின்றார். 'கிணறு வெட்டப் பூதம் கிழம்பிய போல' அக்குழியில் இருந்து ஏராளமான விடயங்கள் வெளிவரத் தொடங்கின.

பைபிளை ஒரு சரித்திரக் குறிப்பேடாகப் பார்ப்பவர்களுக்கு அது உண்மைதான் எனக் கூறுவது போன்று லயாட்டின் இக்கண்டுபிடிப்பு அமைந்து விட்டது. அந்த மண்மேட்டுக்குள் ஒரு பண்டைய நாகரீகத்தின் நகரமே முற்றாக அடங்கியிருந்தது. பைபிளிற் கூறப்பட்டிருந்த கிட்டத்தட்ட 3000 ஆண்டு பழைமையான, அசீரியர்களின் நிநிவே நகரத்தைத்தான் அம்மண்மேடு மூடியிருந்தது. (என்ன! கீழடியின் ஞாபகம் வருகிறதா!) பிரித்தானியரின் அனுசரனையுடன் லயாட்டின் தலைமையில் அவ்விடத்தில் அகழ்வுப்பணி ஏராளமான பொதுமக்களின் உதவியுடன் வேகவேகமாக நடைபெறத் தொடங்கியது. விளைவாக கிறீஸ்தவ வேதாகமத்திற் கூறப்பட்டிருந்த, பாபிலோனியரின் எழுச்சியுடன் கைவிடப்பட்ட நிநிவே பட்டணம், அசீரியரின் பெருமைக்குரிய சென்னசெறிப் (Sennacherib)  அரசரின் மிகப் பெரிய கோட்டையுடனும் அது கொண்டிருந்த இரகசியங்களுடனும் மெல்ல மெல்ல வெளிவந்தது. இது, மனிதவின முன்னவர்களின் வாழ்வினை காணக் கூடியதான புதிய வழியினைத் திறந்து வைத்தது.

சென்னசெரிப்பின் 72 அறைகளைக் கொண்ட அரண்மனையில் ஒருபகுதி நூலகமாக அமைந்திருந்தது. 3000 ஆண்டு பழைமையான அந்த நூலகத்தில் இருந்த இருபத்தீராயித்திற்கும் அதிகமான களிமண் தகடுகளினாலான புத்தகங்கள் மண்ணுள் இருந்து மீட்கப்பட்டன. பண்டைய மக்களின் விபரங்களைப் பற்றிக் கூறும் அக்களிமண் தகட்டுப் புத்தகங்களை அசீரிய மாமன்னர் சென்னசெறிப் தனது காலத்தில், தனது நூலகத்தில் சேமித்து வைத்திருந்தது இன்று எங்களின் நல்வாய்ப்பாகப் போய்விட்டது. பிந்நாட்களில் அசீரியர்களை மேவியவர்கள் அவ்வரண்மனையை இடித்துத் தரைமட்டமாக்காது, பாழடைந்து போக விட்டு வைத்தது எங்களின் நல்வாய்ப்புத்தான். சென்னசெரிப் சேமித்து வைத்த இந்நூல்கள் அசீரிய மொழியில் மாத்திரமல்லாது வேறு பலமொழிகளிலும் இருந்தன. குறிப்பாக அசீரியமொழியின் 'எழுத்து வடிவத் தாய்மொழி' எனக் கருதப்படும் சுமேரிய மொழியில் எழுதப்பட்ட நூல்கள் அதிகம் இருந்தன எனக் கூறுகின்றனர்.

பைபிளில் சுமேரியர் பற்றிய குறிப்புகள் நேரடியாக இல்லாதிருந்ததினால் உலகம் சுமேரியர் பற்றி அறிந்திருக்கவில்லை. முதன் முதலில் 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் சுமேரியா பற்றிய தகவல்கள் மேற்கூறப்பட்ட முறையில் மண்ணுள் இருந்து வெளிக்கிளம்பின.
(அருகில் இருப்பது கிண்டி எடுக்கப்பட்ட சென்னசெறிப்பின் அரண்மனையின் ஒருபகுதி)

லயாட்டின் கண்டுபிடிப்பு பல ஐரோப்பியர்களை உசுப்பி விட, ஈராக்;கிலும் அதனைச் சுற்றியும் இருந்த இடங்களிலும் காணப்பட்ட மண்மேடுகள் பலராலும்; கிளறிப் பார்க்கப்படத் தொடங்கின. அக்கிளறல்களின் விளைவாக அம்மண்மேடுகளில் இருந்து பல பண்டை நாகரீகங்களின் சுவடுகள் வெளிக்கிளம்பத் தொடங்கின. இவ்விதத்தில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (1899–1914) றெபேர்ட் ஜோகான் ரொயிட்வெய் (Robrt Johann Roidewey)  என்ற ஜெர்மனியரால் பாபிலோன் நகரமும் மண்ணுள் இருந்து வெளியே வந்து உலகத்தினரை, குறிப்பாக ஐரோப்பியர்களை ஆச்சரியப்படுத்தியது. அவ்வியப்பின் விளைவாக வெளிவந்த பிரபலமான பாடலான 'பை த றிவரொவ் பாபிலோன்' பாடலை இன்னமும் அனேகர் விருப்புடன் கேட்பதை நாங்கள் அறிவோம். மேலும் அப்போது வெளிக் கொண்டுரப்பட்ட பாபிலோனியரின் 'தொங்கு தோட்டம்' உலக அதிசயம் என்ற தகுதியையும் பெற்றது.

மண்மேடுகளில் இருந்து பாபிலோன் வெளிக்கிளம்பியதுடன் பாபிலோனியர் பற்றிய கிரேக்கக் குறிப்புகள்; மெய்யாக்கப்பட்டன. அத்துடன் மேலும் சில விவிலியக் குறிப்புகளும் சரியாக இருந்தன. இம்மண்மேடுகளில் இருந்து விபரங்கள் வெளியான முறைதான் ஆச்சரியமானது. அக்காலத்தில் அப்பகுதிகயில் வாழ்ந்த மக்கள் தங்களின் விபரங்களை களிமண் தகடுகளில் குறித்து வைத்திருந்தார்கள். பல்லாயிரக்கணக்கான களிமண் தகடுகள் அப்பகுதிகளில் மண்ணுள் இருந்து நாளுக்கு நாள் வெளியே எடுக்கப்பட்டன. இன்று, உலகின் பல நாடுகளிலும் உள்ள அருங்காட்சியகங்களை அக்களிமண் தகடுகள் அலங்கரித்துக் கொண்டு இருக்கின்றன.

இப்படியான தொடர் செயற்பாடுகளின் வெளிப்பாக, ஈராக் பகுதியில் ஐரோப்பியர் செய்த மண்கிண்டல்களின் விளைவாகப் பாபிலோனியருக்கும் முன்னிருந்த இன்னொரு பழைமையான நாகரீகம் வெளிக்கொண்டு வரப்பட்டது. பிந்நாட்களில் உலக வரலாற்றாசிரியர்களைத் திரும்பிப் பார்க்கச் செய்த, கிட்டத்தட்ட ஏழாயிரம் வருடங்களின் முன்னர் சிறப்பாயிருந்த சுமேரிய நாகரீகம்தான் அது. தன்னுள் ஏராளமான இரகசியங்களைக் கொண்டிருந்த, இன்றும் கொண்டிருக்கும் சுமேரிய நாகரீகத்தின் சுவடுகள், களிமண் தகடுகளாக உலகநாடுகள் பலவற்றிக்கும் எடுத்துச் செல்லப்பட்டன. ஒரு மாதிரிக்காகவோ என்னவோ, ஈராக்கின் அருங்காட்சியகத்திலும் சில களிமண்தகடுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

களிமண் தகட்டு நூல்கள்

சுமேரியர் தமது காலத்தில் தொடர்பாடல்களுக்கும் பதிவுகளும் இன்னமும் பல வாழ்வியல் வசதிகளுக்குமாக எழுத்துகளை முதன்முதலில் அறிமுகமாக்குகின்றனர். இந்த எழுத்துகள்தான் அவர்களை நாகரீகத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றன. அவர்கள் தங்களின் எழுத்துகளைப் படங்களாகவே எழுதினர். அப்படியான படவெழுத்துகளைக் களிமண் தகடுகளில் பதித்துப் பின்னர் அக்களிமண் தகடுகளை நெருப்பிற் சுட்டு, பாதுகாப்பாக வைத்துக் கொண்டனர். இப்படியாகக் களிமண் தகடுகளிற் பதிக்கப்பட்டு இருந்த எழுத்துக்களை 'ஆப்பெழுத்து'கள் (cuneiforms)  என்கிறனர். இதுவும் பண்டை எகிப்தியரின் கைரோகிழிவ் (hieroglyphs)  என்கிற படவெழுத்துக்கள் போன்றதே. சுமேரியரின் படவெழுத்துகளினாலான குறிப்புகள், பதிவுகள் என்பன தகடுகளில் மாத்திரமல்லாது, பல்வேறு வடிவங்களில் உள்ள களிமண் பொருட்களிலும் கூட இருந்தன. இவர்களது களிமண் பட எழுத்து முறையையே இவர்களுக்குப் பின்னால் அப்பகுதியில் செல்வாக்குப் பெற்று வந்த அக்காடியர், பாபிலோனியர், அசீரியர், எபிரேயர் போன்றோர்களும் பின்பற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆப்பெழுத்துகளினதும் எகிப்தியரின் பட எழுத்துகளினதும் படிமுறை வளர்ச்சிதான் இன்றுள்ள எழுத்துகளின் வடிவங்களுக்கு வழி சமைத்தது என்கின்றனர்.

எழுத்துகளின் ஆரம்ப வடிவான சுமேரியரின் ப்பெழுத்துகளுடனான களிமண் தகடு ஒன்றின் படத்தினை அருகிற் பார்க்கலாம்.
நான் சிறுவனாக இருக்கையில் 'சுட்டமண்ணும் பச்சை மண்ணும் ஒட்டாது.' என்று எனது தாயார் அடிக்கடி கூறுவார், சுட்ட மண்ணினாலான சட்டி பானை போன்றவை சாதாரணமான மண்ணுடன் ஒட்டாதிருப்பது எனக்கு நன்றாகவே தெரிந்திருந்த போதிலும் எனது தாயார் கூறிய 'சுட்டமண் பச்சைமண்' ஒப்பீட்டுப் பழமொழியின் உண்மையான வலிமை, சுமேரியரின் சுட்ட களிமண் ககடுகள் பற்றிய விபரங்கள் எனக்குத் தெரிய வந்தபோதுதான் தெளிவாக விளங்கியது. ஆயிரக்கணக்கான வருடங்கள் மண்ணுட் கிடந்த போதிலும் பச்சை மண்ணுடன் அவை ஒட்டிக் கொள்ளவேயில்லை. அவை வெளியே வந்த வேளையில் உடைந்து போனவை தவிர, அந்தச் சுட்டமண் தகடுகளில் இருந்த எழுத்துகள் அழியாது, ஊறுபடாது இருந்தன. அவைதான் ஏராளமான பழைய இரகசியங்களை வெளியே கொண்டு வந்தன.
அந்நாட்களில் வலிமையானவர்களாகக் காணப்பட்ட ஐரோப்பியர், வலிமை குன்றியோரின் பழைய பெறுமதி வாய்ந்த உடமைகளைத் தங்களது நாடுகளுக்கு எருத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. அதற்கு ஒரு சிறிய சான்றாக, 1880களில் ஆதிச்சநல்லூரில் இருந்து பல முதுமக்கள் தாழிகளும் அவை கொண்டவையும் தடுப்பார், கேட்பாரின்றி ஜெர்மன் நாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டதைக் கூறலாம். பண்டைத் தமிழரின் வாழ்வியற் தடயங்கனைச் சுமந்து கொண்டிருக்கும் அத்தாழிகள் இன்று பெர்லீன் நகர அருங்காட்சியகங்களை வெறுமனே அலங்கரித்துக் கொண்டு இருக்கின்றன. அதனால் இன்று தமிழர்களின் வரலாற்றை ஆய்வு செய்பவர்கள் அவர்களது ஆய்வு முழுமையடைவதற்கு ஜெர்மனிக்கும் செல்ல வேண்டியுள்ளது. இப்படியான அறிவியற் திருட்டுக்கள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாகத் தமிழர்களின் ஏராளமான, மிகவும் அரிய பழைய ஓலைச்சுவடிகள் பல நம்மவர் என்ற போர்வையில் உள்ளவர்களினால், ஓலைச்சுவடிகளின் பாதுகாப்பு என்ற போர்வையில் கடத்தப்படுவதையும் அறிகிறோம்.
இவை ஒருபுறமிருக்க, சுமேரியரின் விடயத்திற்கு மீண்டும் வருவோம். களிமண் தகடுகள் உலகநாடுகள் எல்லாவற்றிக்கும் எடுத்துச் செல்லப்பட்டாலும் அக்களிமண் தகடுகளில் உள்ளவற்றை வாசிக்கக் கூடியவர்கள் எவருமே அவர்களிடம் இருக்கவில்லை. இன்று முற்றாகவே அழிந்து போன சுமேரிய, பாபிலோனிய, அக்காடியன் மொழிகளிலும், ஆரம்ப அசீரிய, எபிரேய மொழிகளிலும் எழுதப்பட்டு இருந்த அக்களிமண் தகடுகளில் எழுதப்பட்டவைகளில் அதிகமானவை ஆப்பெழுத்து என்ற சித்திர எழுத்துகளிலேயே இருந்தன. இவ்வெழுத்துக்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டு வரையிலும் அப்படி இப்படியாக வழக்கில் இருந்திருந்த போதிலும் கி.பி. 19ம், 20ம் நூற்றாண்டுக் காலப்பகுதிகளில் அவ்வெழுத்துகளை வாசிக்கும் வல்லவர்கள் மேல்நாட்டவரிடம் இருக்கவில்லை. இவ்வெழுத்துக்கள் என்ன கூறுகின்றன என்றறிய இச்சித்தவர்கள் வழியறியாது திகைத்து நின்ற வேளையில் அவர்களுக்கு இவ்விடயத்தில் ஒரு சிறு வெளிச்சம் கிடைத்தது.
ஈராக்கையும் அதனை அண்டிய பகுதிகளிலும் இருந்த பண்டை மக்கள் வலுவிழந்து போனாலும் காலங்காலமாக எப்படியோ ஒருவித தொடர்ச்சித் தன்மையில்தான் வசித்துக் கொண்டு வந்தார்கள். கால ஓட்டத்தில் அந்நியச் செருகல்களால் அவர்களது எழுத்துகளின் வரிவடிவங்கள் மாறுபட்ட போதிலும் சொற்களின் அடிகளுடன் கூடிய 'நெடி' இன்றும் அவர்களிடையே ஊசாடிக் கொண்டுதான் இருக்கின்றது. இதனால், எழுத்து வடிவங்கள் மாறிவிட்ட போதிலும் வல்லுனர்களின் தீவிரமான முயற்சிகளின் விளைவால் மெதுமெதுவாக அவ்வெழுத்துக்கள் ஓரளவுக்கு வாசித்து அறிந்து கொள்ளப்படக் கூடியனவாக வந்துவிட்டன. அவற்றில் இருந்து மனிதகுலத்தின் வரலாறும் அதன் காலமும் மெசப்பத்தேமியப் பகுதிகளுக்கு இன்னமும் பின்னோக்கி நகரத் தொடங்கிப் புதுப்புது விபரங்கள் வெளிவரத் தொடங்கி, இன்றும் வந்து கொண்டே இருக்கின்றன.
இவ்வகையான வெளிப்புகள் பல கோணங்களிலும் தமிழரின் தொன்மையையும் மனித குலத்திற்கான தமிழரின் பங்களிப்புகளையும் காட்டுகின்றன. ஆயினும் உலக மக்களின் காதுகளுக்குத் தமிழ் தெரியாததால் அவர்களின் கண்களில் அவை தென்படவில்லை. இன்னமும் கூறுவதெனில் எங்களிற் பலருக்குக் கூடத் தெரியவில்லை. எனவே ஆய்வாளர் கூறும் மெசப்பத்தேமிய நாகரிகங்கள் பற்றிய பார்வையினை, குறிப்பாகச் சுமேரிய நாகரீகம் பற்றிய தெளிவுகளைப் பலவித ஒப்பீடுகளுடன் சுருக்கமாகக் கூறப் போகின்றேன்.

இன்று அறிஞர் பலர் பண்டைய மெசப்பத்தேமிய நாகரீகங்களையே மனித நாகரீகங்களின் ஆரம்பமெனக் கூறுகின்றனர். மத்திய கிழக்குப் பகுதியில் யூப்பிரத்தீஸ் (Euphrates), ரைகிறீஸ் (Tigriss)  என்ற இரண்டு நதிகளின் இடையே இருக்கின்ற மெசப்பத்தேமியா என்கிற வளமான பகுதியில் இருந்த மனிதர், 7000 ஆண்டு முன்னர் தங்களை நவீனப்படுத்தத் தொடங்க, அச்செயற்பாடு இன்னமும் நடந்து கொண்டே இருக்கின்றது. பண்பட்ட மனிதரின் ஆரம்பத்திற்கான தேடலில் மெசப்பத்தேமியா முக்கிய இடமாக இன்று இருக்கின்றது. இவ்வாய்வுகள் எமது குமரிக்கண்டம் நோக்கியும் நகரக் கூடியதாக இருப்பதால் நாங்களும் அவை பற்றிப் பொருத்தமாகப் பார்த்துக் கொள்வோம்.

இவ்வேளையில் இன்னொரு முக்கியமான விடயத்தினையும் பகிர்ந்து கொள்கிறேன். சிந்துவெளி நாகரீகம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். சுமேரிய எகிப்திய, இன்னமும் மத்திய அமெரிக்காவின் மாயன் நாகரீகம் என்பவற்றிக்கும் மூத்ததாக இருக்கலாம் எனக் கருதப்படும் சிந்துவெளி நாகரீகம் வல்லுனர்களைப் பொறுத்த வரையில் இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது. அம்மக்கள் யார் என்பதுடன், அங்கு காணப்படும் எழுத்துகள், அடையாளங்கள் என்பவை னெ;னவென்பதை அவர்களால் இன்னமும் தெளிவுபடுத்த முடியவில்லை. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, ஈராக் பகுதியில் அமைந்திருந்து போலல்லாது, சிந்துவெளி நாகரீகம் இருந்து பகுதிகளை அண்மித்து இப்போது வாழும் மக்கள் எவரிடமும், அவ்வெழுத்துகளை வாசிக்கக் கூடியதான எழுத்துத் தொடர்ச்சியோ, வேர்ச்சொற்களின் பாவனைத் தொடர்ச்சியோ அல்லது சொற்கட்டமைப்புத் தொடர்ச்சியோ எதுவுமில்லை. இன்னமும் எந்தவொரு பண்பாட்டுத் தொடர்ச்சியையும் கூடக் காண முடியவில்லை. ஆனால் சிந்துவெளி நாகரீகம் கண்டுபிடிக்கும் வரையில் அது பற்றி எதுவுமே தெரியாதிருந்த அப்பகுதியில் இப்போது வாழ்பவர்கள், அந்நாகரீகம் கண்டுபிடிக்கப்பட்ட நாளில் இருந்து சிந்துவின் மக்கள் தமது முன்னவர்கள்தானென வலிந்து கூறிக்கொண்டு வருவது ஆச்சரியமான ஒன்றுதான். அதன் உச்சக்கட்டமாக 'மொகஞ்சதாரா' என்னொரு ஹிந்தித் திரைப்படத்தைப் பெரும் பணச்செலவில் ஒரு பரப்புரையாக 2016ல் எடுத்து வெளியிட்டும் இருக்கிறார்கள்.

இந்நாட்களின் ஆய்வுகளின்படி, கீழடி போன்ற வைகை நதியோர நாகரீகங்கள், ஆதிச்சநல்லூர் போன்ற தாமிரபரணி நதிக்கரை நாகரீகங்கள் என்பவை சிந்துவின் எழுத்துக்களின் முன்-பின் காலத் தொடர்ச்சித் தன்மைகளை காட்டுகின்றன. இன்றுள்ள தமிழரின் வாழ்வியற் செயற்பாடுகளின் தெறிப்புகளும் சிந்துவின் இலச்சனைகளில் வெளிப்படுகின்றன. சில ஆய்வாளர் இதனை எடுத்துக் காட்டுகின்றனர். வடநாட்டு ஆய்வாளர் சிலரும் இதனைப் போடிபோக்காக ஒத்துக் கொண்டாலும் சிந்துவின் பரம்பரையினர் தாங்கள் தானென இன்னமும் விடாப்பிடியாகக் கூறிக் கொள்கிறார்கள். பல்வேறு காரணங்களுக்காக அவர்கள் அப்படிக் கூறுகின்றார்கள், செய்கிறார்கள்; என்பதை எங்களால் ஊகிக்கக் கூடியதாக உள்ளது.

தமிழராகிய எங்களிற் பலருக்கு இன்றுள்ள வாழ்வா சாவா என்ற இழுபாட்டு நிலையால் சுமேரிய, சிந்து நாகரீகங்கள் பற்றிய அக்கறை இல்லாததனால் அவற்றின் விபரங்கள் அதிகம் எங்களுக்குத் தெரியவில்லை. அவை பற்றிய தெளிவுகள் எமக்கு இருக்குமாயின் உலக வரலாற்றில் எமது பெறுமதி எவ்வளவு பெரியது என்பதனை எங்களால் அறிந்து கொள்ள முடியும். அதன் விளைவாகத் தமிழரின் பெருமை உலகத்தவர் மத்தியில் பரவும் என்பதில் ஐயமில்லை. அதன் காரணமாகவே சுமேரிய நாகரீகம் என்ற இப்பகுதியை ஆரம்பிக்கின்றேன்.

அடுத்த தடவையில் இருந்து பொருத்தப்பாடுகளுடனான பல சுவையான வரலாற்று அனுபவங்களைப் பெறப்போகின்றோம், காத்திருங்கள்.

அன்புடன்,
கனி.


விபரத் தெளிவுகளுக்கு, நெறிப்படுத்தல்களுக்கு அல்லது கருத்துப் பகிர்தல்களுக்கு www.tamilauthors.com உடன் அல்லது என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

எனது தொடர்புக்கு: 416 261 1348 அல்லது 647 782 2827.
e-mail: leptons@hotmail.ca

                              


 

 

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்