'அ. முத்துலிங்கம் சிறுகதைகளில் மனிதநேயம், உயிர்நேயம், பிரபஞ்சநேயம்'

முனைவர் ப. சரவணன், இந்தியா.


'ராகுகால' நேரத்தில் என் பேராசிரியர் உயர்திரு. போத்திரெட்டி அவர்களைச் சந்திப்பதற்காக, அவரின் வீட்டுக்குச் சென்று, வரவேற்பு அறையில் காத்திருந்தேன். மேஜையில் அந்த மாதத்துக்கான 'இந்தியாடுடே' இதழ் இருந்தது. அதை எடுத்துப் புரட்டினேன்.

அதில், 'ராகுகாலம்' என்ற தலைப்பில் ஒரு சிறுகதை பிரசுரமாகியிருந்தது. அதை எழுதியவர் 'அ. முத்துலிங்கம்' என்று அச்சிடப்பட்டிருந்தது. என் பேராசிரியர் வருவதற்குள் நான் அந்தக் கதையைப் படித்துவிட்டேன். நான் படித்த அ.முத்துலிங்கத்தின் முதற்கதை அதுதான். அந்தக் கதை என்னை மனத்தளவில் பாதித்துவிட்டது.

பேராசிரியர் வந்ததும் அவரிடம் அந்தச் சிறுகதையைப் பற்றி விவாதித்தேன். அதன் தொடர்ச்சியாகஇ பிற நாட்டுப் பண்பாடுகள் நம் நாட்டு மக்களின் மனத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் இந்தியப் பண்பாடுகள் பிறநாட்டு மக்களின் மனத்தில் எந்த அளவில் பாதிப்பைச் செலுத்தி வருகிறது என்பது பற்றியும் உலக அளவில் 'நேயம் மிகுந்த வாழ்வு' எவ்வாறெல்லாம் செயற்பாட்டில் இருக்கிறது என்பது குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம்.

பேராசிரியர் என்னிடம் உலக அளவில் யாரெல்லாம் நேயத்தை வலியுறுத்தி எழுதுகிறார்கள் என்பது பற்றிக் கூறினார். இறுதியில் என்னிடம் அழுத்தமாக, 'நீ முத்துலிங்கத்தைப் படி' என்றார். நான் அங்கிருந்து புறப்பட்டபோது, ராகுகாலம் முடிந்துவிட்டது. அதன் பின்னர் எனக்கு எல்லாமே நல்லநேரமாகவே அமைந்துவிட்டது.

நான் அ.முத்துலிங்கத்தைத் தொடர்ந்து படிக்கத் தொடங்கினேன். பின்னாளில் என்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்கு அவரின் சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்தேன். அந்த ஆய்வே என்னை இன்றளவும் தமிழ்கூறும் நல்லுலகில் அடையாளப்படுத்தி வருகிறது.

ராகுகால நேரத்தில், 'ராகுகாலம்' என்ற சிறுகதையின் வழியாக எனக்கு அறிமுகமான அ. முத்துலிங்கத்தின் சிறுகதைகளைப் பற்றிய என் கருத்துகளை இந்த நல்ல நேரத்தில் உங்களோடு பகிர்ந்துகொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அ. முத்துலிங்கத்தின் மனிதநேயம் பற்றி நாம் அறிய உதவும் கதைகளில் மிக முக்கியமான சிறுகதை 'கடன்'.

'ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே,
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே,
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே,
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.'
(புறநானூறு - 312)

என்ற பொன்முடியாரின் பாடல், பழந்தமிழருக்கு உரிய கடமைகள் பற்றிப் பட்டியலிட்டுள்ளது. 'முதுமையடைந்த பெற்றோரைப் பேணுதல் யாருக்குக் கடன்?' என்பது பற்றி, அந்தப் பட்டியலில் கூறப்படவில்லை. அதனால்தான், அ.முத்துலிங்கத்தின் 'கடன்' என்ற சிறுகதையில் இடம்பெற்றுள்ள சாந்தன், தன் தந்தை முதுமை அடைந்த பின்னர் அவரைப் பேண மறந்து விட்டானோ?!.

அவன் அவரைத் தன் தந்தையாகவோ அவனின் மனைவி கிருத்திகா அவரை மாமனாராகவோ நினைக்காவிட்டாலும்கூடப் பரவாயில்லை, அவரைச் 'சக மனிதர்' என்றுகூட நினைக்க மறந்துவிடுகின்றனர். ஒரு மனிதர் முதுமையுற்ற பின்னர் அவருக்குத் தேவைகள் இரண்டுதான். கைப்பிடி உணவும் அன்பான சில வார்த்தைகளும்தான்.


அவன் தன் தந்தையை நிலவறையில் கிடத்திவிடுகிறான். ஒருவாரத்திற்கு அவருக்கான உணவுகளை டப்பாக்களில் அடைத்துஇ குளிர்ப்பெட்டியில் அடுக்கிவிடுகிறாள் அவனின் மனைவி. நிலவறையில் அடைக்கப்பட்ட அடிமைபோல அவர் தனக்கான உணவினைக் கிழமையின் அடிப்படையில் வரிசையாகக் குளிர்ப்பெட்டியிலிருந்து எடுத்து உண்கிறார்.


குளிர்ப்பெட்டியிலிருந்து இரண்டு நாட்களாக உணவு எடுக்கப்படாததைக் கண்டுதான், அவர் இறந்துவிட்டதை இருவரும் உணர்கின்றனர். புதிய நாடு, பெரிய வீடு, இருவரும் பணிக்குச் செல்லும் பணிப்பளு ஆகியன அனைத்தும் சேர்ந்து சாந்தனையும் கிருத்திகாவையும் எந்திரங்களாக மாற்றிவிடுகின்றன.

இந்தத் தலைமுறையினர் மனசாட்சியையும் மனிதநேயத்தையும் மழுங்கச் செய்து, தம் புத்தியை மட்டும் நன்றாகக் கூர்த்தீட்டிக்கொண்ட மனித எந்திரங்களே!.

பொன்முடியாரின் புறநானூற்றுப் பாடலின் முதல் இரண்டு அடிகளைச் சாந்தனின் தாயும் தந்தையும் சரியாகத்தான் பின்பற்றியிருந்தார்கள். ஆறாவது அடியைச் சாந்தன் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறான்.

புலவர் பொன்முடியார் ஏழாவது அடியை எழுதியிருக்க வேண்டும். அதில் பெற்றோரைப் பேணுதல் யாருடைய கடன் என்பது பற்றியோ அல்லது சக மனிதரைப் பேணுதல் எப்படி என்பது குறித்தோ கூறியிருக்க வேண்டும். ஆதலால், இந்தப் பெரிய குற்றத்தை நாம் பொன்முடியாரின் மீது சுமத்திவிட்டு, அ. முத்துலிங்கம் சிறுகதைகளில் நாம் உயிர்நேயத்தைத் தேடி நகர்வோம்.

அ.முத்துலிங்கத்தின் உயிர்நேயம் பற்றி நாம் அறிய உதவும் கதைகளில் மிக முக்கியமான சிறுகதை 'ரீ'. இந்துக்களின் புனிதங்களுள் ஒன்று மாடு. அது பசுவானால் லட்சுமி, காளையானால் சிவபெருமானின் வாகனம். எருமையானால் அது எமதர்மராஜாவின் வாகனம். ஆகமொத்தத்தில் இந்துக்களைப் பொறுத்தவரை மாட்டின் உட்பிரிவுகள் அனைத்துமே புனிதமானவையே.

இந்தப் புனிதச் சாயலை நாம் மயிலுக்கும் சேவலுக்கும் (முருகப்பெருமான்) நாய்க்கும் (பைரவர்) சிங்கத்துக்கும் (பராசக்தி) புலிக்கும் (ஐயப்பன்) எலிக்கும் (கணபதி) வழங்கியிருக்கிறோம். இத்தகைய புனிதத்தின் பொருட்டாவது நாம் இவற்றைப் பேணினால் நல்லதுதானே?.

ஆனால், எல்லாப் புனிதங்களையும் நம்மால் ஓரளவுக்குத்தான் சகித்துக்கொள்ள முடியும்போல. 'காலச் சூழலில் இந்தப் புனித விலங்குகளால் நமக்கு ஒரு துளி நன்மைகூடக் கிடைக்காது' என்று தெரிந்துவிட்டால், நாம் துணிந்து இந்தப் புனிதங்களைப் புறக்கணித்து விடுவோம்போல. அதுதான் இந்தச் சிறுகதையிலும் நடந்து விடுகிறது.

தன் உடம்பில் உயிரைத் தவிர ஏதுமற்ற ஒரு மாட்டை வயலுக்கு எருக்கட்ட வாங்கிவருகிறார்கள். அது நோய்வாய்ப்பட்டு இறக்கும் தருவாயில் இருக்கும்போது அதை விற்றுவிடுகிறார்கள். இறந்த மாடு மலிவான விலைக்குத்தான் போகும். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தால்கூட அந்த மாடு சற்றுக் கூடுதலான விலைக்குப் போகும்.

இங்குப் பணம்தான், வணிக உத்திதான் முதன்மையிடம் பெறுகிறது. புனிதமும் புனிதம் சார்ந்த பொருளும் இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. மனிதர்களின் பரந்து, விரிந்த மனத்தில் 'உயிர்நேயம்' எங்கு ஒளிந்திருக்கிறது என்றே தெரியவில்லை.

இந்தச் சிறுகதை இரண்டு சிறார்களின் பார்வையில் நகர்த்தப்படுகிறது. 'இன்னமும் குழந்தைகளிடம் மட்டுமே உயிர்நேயம் ஒட்டியிருக்கிறது' என்பதை நமக்கு உணர்த்தத்தான், எழுத்தாளர் 'இப்படிக் கதையை நகர்த்தியுள்ளார்' என்று நினைக்கிறேன். இந்தக் கதையில், ஓர் அபூர்வமான ராகத்தைப் பற்றி எழுத்தாளர் விரிவாகக் கூறியுள்ளார். அந்த ராகத்தில்,

'ஹே! ராமா, அயோத்தி மன்னா!
ஏன் இந்த உதாசீனம்?
என்னால் இனியும் உன் பிரிவை தாங்கமுடியாது...'
என்ற பாடலையும் கொடுத்திருக்கிறார் எழுத்தாளர். ராமனைப் பிரிந்த அயோத்தி மக்கள்போல, இந்தச் சிறார்களும் 'ராமு' என்ற அந்த மாட்டின் பிரிவினைத் தாங்கிக்கொள்ள முடியாமல் வருந்துகின்றனர்.

'அந்த அபூர்வமான ராகத்தைப் போலவே, 'உயிர்நேயம்' என்ற நல்லெண்ணம் மனிதர்களின் மனத்தில் அருகிவிட்டதுஇ நீங்கிவிட்டது' என்று இந்தக் கதையின் வழியாக எழுத்தாளர் உணர்த்துகிறார்.

அ. முத்துலிங்கத்தின் பிரபஞ்சநேயம் பற்றி நாம் அறிய உதவும் கதைகளில் மிக முக்கியமான சிறுகதை 'பூமாதேவி'.

வெளிநாட்டில் உள்ள சலவையகம் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. அங்கு உள்ள அனைத்துச் சலவை இயந்திரங்களும் மிகுந்த வேகத்தில் சுழன்று சுழன்று துணிகளில் உள்ள அழுக்குகளை நீக்குகின்றன. அவை பூமியைவிட வேகமாகச் சுழல்வதால், அவற்றுக்குப் 'பூமாதேவி' என்று பெயரிடுகிறார், இந்தக் கதையில் இடம்பெற்றுள்ள தந்தை.

அந்தத் தந்தைக்கு நான்கு வயதில் மகள் இருக்கிறாள். அவளை அழைத்துக்கொண்டு, அந்தச் சலவையகத்திற்குச் செல்வதும் 'பூமாதேவி'யைப் பற்றிப் பேசிக் கொள்வதும் அவருக்கு மிகவும் மகிழ்வைத் தருகிறது. மகள் வேகமாக வளர்கிறாள். தந்தை அந்தப் பழைய நினைவுகளில் தேங்கிப் போகிறார்.

மகளுக்கு மணப்பருவம் வருகிறது. அப்போது அவளுடன் தந்தை காரில் செல்ல நேர்கிறது. அவர்களின் கார் அந்தச் சலவையகத்தைக் கடந்துசெல்லும்போது, தந்தை மகிழ்வின் உச்சியில் நின்றபடி, அந்தச் சலவையகத்தைத் தன் மகளுக்குக் காட்டி, 'அதோ பூமாதேவி' என்று கத்துகிறார். மகளுக்குப் புரியவில்லை.

எல்லோருமே இப்படித்தான், வளர வளர பழையவற்றை, பழையன தந்த மகிழ்வை, பழையன செய்த உதவிகளை மறந்துவிடுகிறோம். இந்தப் பூமி பழைய தலைமுறைக்கும் புதிய தலைமுறைக்கும் தொடர்ந்து நன்மைகளைச் செய்துகொண்டே இருக்கிறது. அதைப் புதிய தலைமுறை மறந்துவிடுகிறது. எல்லாத் தலைமுறையும் பூமிக்குக் கேடுகளையே செய்து வருகின்றன. அவற்றையெல்லாம் பூமி வேகமாக மறந்துவிடுகிறது.

புதிய தலைமுறைக்கு இளம்வயதிலேயே 'இயற்கையைப் பேண வேண்டும்' என்ற எண்ணத்தை நாம் விதைத்த போதிலும் அந்தத் தலைமுறை வளர வளர அதை மறந்துவிடுகிறது. எல்லாவற்றிலும் வேகத்தை மட்டுமே காட்டும் புதியதலைமுறை, மறப்பதிலும் வேகத்தைக் காட்டுகிறது.

இந்தக் கதையில், 'பூமாதேவி' என்பது, ஒரு குறியீடுதான். அதாவது வேகத்துக்கும் கால மாற்றத்துக்குமான குறியீடு. வேகமாகக் காலம் மாறிவருகிறது. எதையும் நின்று, நிதானித்து நினைத்துப் பார்க்கவோ, பழையவற்றைத் தன்னுள் மீட்டிப் பார்க்கவோ யாருக்கும் நேரமில்லை. தனக்குத் தற்போது எது தேவையோ, அதை மட்டுமே நினைவில் நிறுத்திக் கொள்ளவும் அது பற்றி மட்டுமே விரிவாகத் தெரிந்துகொள்ளவும் அது தொடர்பாகத் தன் சிந்தனையை வளர்த்துக்கொள்ளவும் விரும்புகின்றனர்.

பூமியின் சுழற்சிக்கு நிகரான வேகம் மட்டுமே இந்தத் தலைமுறைக்கு இருக்கிறது. 'தம்மை அகழ்வாரைத் தாங்கும்' பூமி தன்னகத்தே கொண்டுள்ள பொறுமையையோ, தனக்குக் கேடு புரிபவருக்கும் நன்மையையே செய்யும் உயரிய பண்போ இந்தத் தலைமுறைக்கு இல்லை.

இயற்கையை, இயற்கை தரும் நன்மைகளை மறக்கும் தலைமுறை, இயற்கையை மதிக்கத் தவறும் தலைமுறை, இயற்கைக்கும் தனக்குமான நெருக்கத்தை உணராத தலைமுறை எப்படி உருப்படும்?' என்ற வினாவைத்தான் அ. முத்துலிங்கம் இந்தச் சிறுகதையின் வழியாக எழுப்புகிறார் என்று நான் நினைக்கிறேன்.

இந்த வினாவுக்குரிய பதிலைக் கூறும் பொறுப்பும் கடமையும் நம் தலைமுறைக்கும் இனிவரும் தலைமுறைக்கும் உரியது. இந்த வினாவுக்குரிய பதிலைச் செயலில் காட்டினால்தான் புதிய தலைமுறை தலைநிமிரும்.

அ.முத்துலிங்கம் 'நேயம்' மிகுந்த மனிதர். அந்த 'நேயம்' அவரின் எழுத்துகளில்
100 விழுக்காடுகள் உள்ளன. குறிப்பாக, 'அவரின் ஒட்டுமொத்த சிறுகதைகளில் 'நேயம்' சார்ந்த தன்மை எந்த அளவுக்கு இருக்கிறது?' என்று பார்க்கும்போது, மனிதநேயம் சார்ந்த சிறுகதைகளை அவர் 44 விழுக்காடுகளும் உயிர்நேயம் சார்ந்த சிறுகதைகளை அவர் 36 விழுக்காடுகளும் பிரபஞ்சநேயம் சார்ந்த சிறுகதைகளை அவர் 20 விழுக்காடுகளும் எழுதியிருப்பதாக ஆய்ந்து அறிய முடிந்தது.

ஆதலால், 'இவரின் சிறுகதைகளில் மனிதநேயமும் உயிர்நேயமும் பிரபஞ்ச நேயமும் அடிநாதங்களாக அமைந்துள்ளன' என்பது, கண்கூடாகத் தெரிகிறது. அ. முத்துலிங்கம், தமிழ்க் கதையுலகின் 'முத்து'; தமிழ் இலக்கிய உலகின் 'சொத்து'.

அ.முத்துலிங்கத்தின் கதைகளைப் படித்து, அவற்றின் வழியாக பிரபஞ்சத்தின் மீது, உலக உயிர்களின் மீது, மனித இனத்தின் மீது நாம் நேயம் மிகுந்த பார்வையைச் செலுத்தி வாழ்ந்தால், இந்த நேரம் மட்டுமல்ல, இனிவரும் எல்லா நேரமும் எல்லோருக்கும் நல்ல நேரமாகவே அமையும் என்றும் நல்ல புனைவுகளைப் படித்தால் 'ராகுகாலம்' நெருங்காது.

(இலக்கிய வெளி சஞ்சிகையும் தமிழ் ஆதர்ஸ் டாட் கொம்மும் இணைந்து, 25.10.2020 ஆம் நாள் 'ஜூம்' நேரலைச் சந்திப்பின் வழியாகப் 'படைப்புலகில் அ.முத்துலிங்கம்' என்ற தலைப்பில் நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை.)



முனைவர் ப. சரவணன், இந்தியா.

                         

உங்கள் கருத்து மற்றும் படைப்புக்களை
 
editor@tamilauthors.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்