ஆராக்
காதல், தீரா அவத்தை!
(பிரிவு நனி இரங்கல்)
கவிஞர். மா.உலகநாதன்,
(முனைவர் பட்ட ஆய்வாளர்)
அன்பு என்பதற்கு இலக்கணம் கூற வந்த இறையனார் களவியல் உரைகாரர் நக்கீரர்,
அது, சாவிற்சாதல், நோவில் நோதல், ஒண்பொருள் கொடுத்தல், நன்னினிது மொழிதல்,
புணர்வு நனிவேட்டல், பிரிவு நனி இரங்கல் இவற்றால் அறியப்படும் என்பார்.
தமிழர் தம் பண்பாட்டைப் பறைசாற்றும் தமிழிலக்கியங்களில் கற்பும் களவும்
உடன்போக்கும் பேசப்படுகின்றன. களவொழுக்கம் என்பது நேர்ந்த வழிக் கூடி
தீர்ந்த வழி மறக்கும் கந்தர்வ வழக்கம் எனவும், கற்பொழுக்கம் என்பது
பிரியாது உடன் வாழ்தல்! இன்றேல் தரியாது உயிர்நீத்தல் எனவும்
வழங்கப்படுகிறது.
களவொழுக்கத்தில் ஈடுபடுவோரிடையே பிரிவு நேர்ந்தால் நிலவு சுடுகிறது. நீர்
கொதிக்கிறது தென்றல் உறுத்துகிறது இயற்கையே இயல்புகளுக்கு எதிர்மறையாகிறது.
குறுந்தொகை
பிரிவாற்றாது தலைவியர் படும் அவத்தைகளை (அவஸ்தைகளை) சங்க இலக்கியங்கள்
எப்படிப் பேசுகிறது என்பதைப் பார்க்கலாம். குறுந்தொகையில் தலைவியின்
அவத்தையைப் பார்த்து பறவைகளும் புலம்பினவாம், மலர்களெல்லாம் கூம்பினவாம்.
இன்னும் நான் உயிருடன் இருக்கின்றேனே என்று புலம்பும் நிலை. எனவே,
யாரேனும் என் துயர் நிலையைத் தலைவனுக்கு உரையுங்களேன் என்கிறாள் தலைவி.
புள்ளும் புலம்பின பூவும் கூம்பின!
கானலும் புலம்நனி உடைத்தே! வானமும்
நம்மே போலும் மம்மர்த்து ஆகி,
எல்லை, கழியப் புல்லென் றன்றே!
இன்னும் உளனே தோழி! இந்நிலை
தண்ணிய கமழும் ஞாழல்
தண்ணம் துறைவற்கு உரைக்குநர்ப் பெறினே!
- குறுந் -
310
ஸ்ரீமத் பாகவதம்
கண்ணனை எண்ணிய தாபத்தால், ஆயர்குடிப் பெண்களின் நெஞ்சம் தீயைப் போல்
கொதிக்கவும், காமத்தில் உழன்றனர். கண்ணனின் புல்லாங்குழல் இசையைக்
கேட்டதும், மேனியில் நெருப்புப்ம படர்ந்தது போல் மேலும் தவித்தனர்.
வெட்கத்தை விலக்கினர். மார்பில் தவழ்ந்த முத்துமாலை விரகதாபத்தால் கரிந்து
போகவும், உடம்பு வெளுத்து சருகுபோல் உலர்ந்தனர் கண்களால் கண்ணனின் அழகை
வாரிவாரிப் பருகினர் என்று ஸ்ரீமத் பாகவதம் பகர்கிறது.
உருகினர் நிறையும் நாணும் உகுத்தனர் நெகிழ்ந்து
வீழும்
குருகினர் கொங்கை முத்தம் கொதித்திட கரிந்த தண்பூம்
சருகினர் விளர்க்கும் மேனித் தளிரினர் கரும்கண் கையால்
பருகினர் வாரிவாரிப் பசும்புயல் அழகின் வெள்ளம்.
திருக்குறள்
திருக்குறளும், பிரிவாற்றாமையைச் சொல்லும் போது, தலைவா! நீ எம்மை விட்டுப்
பிரியாமை உண்டானால் அதை மட்டும் எனக்குச் சொல். பிரிந்து போய் விரைந்து
வருதல் பற்றிச் சொல்வதானால், அதை நீ வரும் வரை பொறுத்திருந்து உயிர்
வாழ்பவருக்குச் சொல் என்கிறது.
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்றுநின்.
வல்வரவு வாழ்வார்க்கு உரை.
- குறள் -
1151
கம்ப இராமாயணம்
அரக்கியர்கள் சூழ, இராவணனால் சிறைவைக்கப்பட்டிருந்து சீதை, தன் நிலைக்கு
இரங்கியதை கம்பன் பேசுகிறார் இப்படி.
விழுதல் விம்முதல் மெய்யுற விதும்புதல் வெருவல்
எழுதல் ஏங்குதல் இரங்குதல் இராமனை எண்ணித்
தொழுதல் சோருதல் துளங்குதல் துயருழந்து உயிர்த்தல்
அழுதல் அன்றி மற்றுஅயலொன்றும் செய்குவது அறியாள்.
தொல்காப்பியம்
களவில் ஈடுபடும் தலைவியிடம், அகத்திலும் புறத்திலும் ஏற்படும்
மெய்ப்பாடுகளை தொல்காப்பியம் வகைப்படுத்துவதைப் பார்ப்போம்.
வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல்
ஆக்கம் செப்பல், நாணுவரை இறத்தல்
நோக்குவ எல்லாம் அவையே போறல்
மறுத்தல் மயக்கம் சாக்காடு என்று அச்
சிறப்புடைய மரபின் அவை களவு என மொழிப.
தலைவனின் நினைவால், குறையாத விருப்பு, இடைவிடா நினைப்பு, உடல்மெலித்தல்,
ஆவது அறிந்து கூறல், வெட்கத்தின் எல்லையைக் கடந்து நிற்றல், காணும் பொருள்
யாவும் தன் விருப்பப் பொருளாகத் தோன்றுதல். தமது செயல்களை மறத்தல், மயக்க
நிலையில் நிற்றல், நினைவு நிறைவேறா நிலையில் இறந்து போகலாம் என்ற நினைவு!
அப்பப்பா...... எத்தனை அவத்தைகள்?
பெரியபுராணம்
அவத்தையின் நிலை ஆண்டவனின் அடியார்களைக் கூட விட்டு வைக்கவில்லை போலும்!
மாதொரு பாகனை வணங்க வந்த பரவையாரைக் கண்டு காமுற்றுக் காதலித்தார் சுந்தர்.
சுந்தரரின் பேரழகைக் கண்ட பரவையாரும், எண்கொள்ளாக் காதலின் முன்பு
எய்தாதொரு வேட்கை மண்கொள்ளா நாணம், மடம், அச்சம், பயிர்ப்பை வலிந்தெழலும்
என்றானாள். பரவையாரின் பெண்மை இதுவரை அறியாத ஒரு புது உணர்வை அடைந்ததாம்.
அது பெண்மைக் குணங்களையெல்லாம் பேதலிக்கச் செய்ததாம். அவர் தாகத்தைச்
சுந்தரரிடம் வைத்தால் தேகம் தூக்கமிழந்ததாம். சேக்கிழார் பாடுகிறார்.
மலரமளித் துயிலாற்றாள்! வருந்தென்றல்
மங்காற்றாள்! மங்குல் வானில்
நிலவுமிழும் தழலாற்றாள்! நிறையாற்றும்
பொறையாற்றா நீர்மையோடும்
கலவமயில் என எழுந்து கருங்குழலின்
பரம் ஆற்றாக் கையாளகி
இலவ இதழிச் செந்துவர் வாய்நெகிழ்ந்து
ஆற்றாமையின் வறிதே இன்ன கொள்ள.
- தடுத்தாட்கொண்ட படலம் 320
பரவையாருக்கு உறக்கம் வரவில்லை, தென்றல் இதமாயில்லை. நிலவு குளிரவில்லை.
கூந்தலின் பாரத்தைக் கூட அவரால் தாங்க முடியவில்லை.
இலக்கியங்களில் ஆணின் அவத்தையை விட, பெண்களின் அவத்தையே அதிகம்
பேசப்படுகிறது. தாமுறும் காமத் தன்மையை தாமே உரைக்கலாகாத பெண்மையின்
உள்ளக் கிடக்கைகளை, தாமே உணர்ந்து அனுபவித்து போல் எழுதும் இலக்கியப்
பெரும் புலவர்களின் கவித்திறனை நினைத்து நினைத்து, வியந்து வியந்து,
மகிழ்ந்து மகிழ்ந்து உச்சி மீது வைத்து மெச்சிப் புகழலாம்.
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
என்பார் வள்ளுவர்.
காமத்திற்கு மட்டுமல்ல இலக்கியத்திற்கும் இது பொருந்தும் என்றால் அது
மிகையல்ல!
worldnath_131149@yahoo.co.in
|