சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடலின் செயற்திட்டம்
முருகபூபதி
முரண்பாடுகளுக்கு அப்பால்
தூரநோக்கப்பார்வையுடன் இயங்குவதற்கான களம் உருவாக்கப்படும்.
தமிழ் கலை,இலக்கியம், ஊடகம்,மொழிபெயர்ப்பு, பதிப்புத்துறை, ஆவணமாக்கல்
சார்ந்து 2011 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ள
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல் தொடர்பாக மேலும் சில விளக்கங்களை
தரவேண்டிய சூழலில் இந்த ஆக்கத்தை எழுதுகின்றேன்.
ஏற்கனவே இந்த ஓன்றுகூடலுக்காக 12 அம்சங்கள்கொண்ட
யோசனைகளை முன்வைத்து கலந்துரையாடியிருக்கின்றோம். எனினும் சில
மயக்கங்களும் சந்தேகங்களும் தொடர்ந்தவண்ணமிருக்கின்றன.
தமிழகத்திலிருந்து இலங்கை வரும் படைப்பாளிகள் சிலர், சர்வதேச ஒன்றுகூடல்
தமிழகத்தில்தான் நடத்தப்பட்டிருக்கவேண்டும் என்று நேர்காணல்களில்
கருத்துக் கூறுமளவுக்கும் படைப்பு நூல்களை ஆவணமாக்கும் பணிகளில்
நீண்டகாலமாக ஈடுபட்டிருப்பவர்களை ஆக்க இலக்கியவாதிகள் கண்டுகொள்வதில்லை
என்று சொல்லுமளவுக்கும், இலக்கியப்பிரக்ஞையும் தேர்ந்த ரஸனையுமுள்ள ஆக்க
இலக்கியத்துறைகளில் தீவிரமாக ஈடுபடாத கல்விப்பீட பேராசிரியர்கள், தாம்
இந்த ஒன்றுகூடலில் உள்வாங்கப்படவில்லை என்று சொல்லாடல்களின் மூலம்
வருத்தம் தெரிவிக்குமளவுக்கும் உத்தேச சர்வதேச ஒன்றுகூடல் பற்றிய சிந்தனை
பரவலாகியிருக்கிறது.
எந்தவொரு புதிய முயற்சியுமே 'பூனைக்கு யார் மணி கட்டுவது?' என்ற
விவாதத்திலேயே முடிந்திருப்பது நாம் அறிந்ததே.
கருத்து முரண்பாடுகள், அரசியல் சித்தாந்த வேறுபாடுகள் முதலானவற்றைக்கடந்த
நிலையில் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் அறிந்ததை பகிர்தல்
அறியாததை அறிந்துகொள்ள முயல்தல் என்ற நோக்கத்துடன்தான் இச்சர்வதேச
ஒன்றுகூடல் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கிறது.
இதனை தமிழர்கள் வாழும் எந்த ஒரு தேசத்திலும் நடத்தலாம். அதற்கு
மாற்றுக்கருத்து இருக்க முடியாது. தனிநாயகம் அடிகளார் தொடக்கிவைத்த
உலகத்தமிழாராய்ச்சி மகாநாடு, பின்னர் தொடர்ந்த உலகப்பண்பாட்டு மகாநாடுகள்
முதலானவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சிந்தனையுடன்தான் கலை, இலக்கியம்,
ஊடகம், மொழிபெயர்ப்பு, பதிப்புத்துறை சார்ந்த கருத்தரங்கு,
காட்சிப்படுத்தல், ஆவணப்படுத்தல், பயிற்சிப்பட்டறை உட்பட்ட நிகழ்ச்சி
நிரலுடன்தான் 2011 இல் ஒன்றுகூடல் நடைபெற
ஒழுங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆக்க இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் மாத்திரம்தான் இதில்
பங்கேற்பார்கள் என்று எந்த ஒரு பத்தியிலும் நாம் குறிப்பிடவில்லை.
இந்தப்பணியில் சிறுகதை, நாவல், கவிதை, விமர்சனம், புனைவு இலக்கியம்,
மொழிபெயர்ப்பு, நாடகம், கூத்து, இசை, நடனம், ஓவியம், நூலகவியல்,
ஆவணமாக்கல், பதிப்பு, சிற்றிதழ், அறிவியல், வலைப்பதிவு, சிறுவர் இலக்கியம்,
கல்வி முதலான தமிழின் சிந்தனைகள் உள்வாங்கப்பட்ட அனைத்து துறைகளிலும்
ஈடுபடுபவர்கள் பங்கேற்கும் ஆரோக்கியமான ஒன்றுகூடலாகத்தான் நிகழ்ச்சி நிரல்
வடிவமைக்கப்படும்.
நூலகம் மற்றும் கல்விப்பீடங்களில் பணியாற்றுபவர்களும் இதில் பங்கேற்பர்.
இந்தத்துறைகளில் ஈடுபாடுள்ளவர்களின் அனுபவங்கள் பகிரப்படும்போது
பயன்பாட்டின் கனதி புரிந்துகொள்ளப்படும். எழுத்துத்துறைக்கு வந்து
மாற்றுக்கருத்துக்களினால் முரண்பட்டு பகைமை
பாராட்டிக்கொண்டிருப்பவர்களிடம் இறுக்கம் தளர்ந்து குறைந்தபட்ச
புரிந்துணர்வும் ஏற்படும் என்பதும் எமது நம்பிக்கை.
உரையாடல் இடைவெளி தவிர்க்கப்படுவதன் மூலம் தப்பபிப்பிராயங்கள்
களையப்படலாம்.
தற்காலத்தில் நாம் கணனி யுகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதனால் மூத்த, இளம்
தலைமுறையினர் நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து துறைகளிலும் தீவிரமாக
இயங்குவதையும் அறியமுடிகிறது.
குறிப்பாக மின் புத்தகங்களின் வரிசையில் ஏராளமான தமிழ் நூல்களை
பதிவுசெய்திருப்பவர்கள், வலைப்பதிவுகளை இயக்குபவர்கள், நூலகம் பவுண்டேசன்
ஊடாக தீவிரமாக செயல்படுபவர்கள், சிற்றிதழ்களை நடத்துபவர்கள்,
வருடக்கணக்காக பல்வேறு சிரமங்களுக்கும் மத்தியில் நூல்களைப்பற்றிய
விபரங்களை தனித்தனி தொகுதிகளாக பதிவுசெய்து நூல் தேட்டம் தொகுப்புகளை
வெளியிட்டுவரும் லண்டன் நூலகர் செல்வராஜா, இவர்கள் எம்மவர் என்ற வரிசையில்
ஏராளமானவர்களைப்பற்றிய விபரங்களை ஆவணமாக்கிவரும் புன்னியாமீன்
போன்றவர்களின் பணிகள் பற்றியும் சர்வதேச ஒன்றுகூடலில் விவாதிக்கப்படும்,
உரையாடப்படும்.
எனவே ஆக்க இலக்கியவாதிகள் மாத்திரம் பங்கேற்கும் ஒன்றுகூடல் அல்ல என்ற
தெளிவை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
அங்கீகாரங்கள் குறித்து நிறைய விவாதங்கள் தொடருகின்றன. பட்டியல்
விமர்சனங்களினால் மனம் நொந்துள்ளவர்கள் மௌனமாக குமுறுகிறார்கள்.
அளவுகோள்களை வைத்துக்கொண்டு புறக்கணிப்புக்கள் நீடிப்பதனால்
அங்கீகாரத்துக்கு ஏங்குபவர்களும் வாடுகிறார்கள். இந்தச்சூழலுக்குள்
குளிர்காயும் சில பதிப்பகங்கள் செம்மைப்படுத்தல் ஏதும் இன்றி படைப்பாளிகள்
மீது சவாரி செய்கின்றன.
இந்தியாவில் தமிழகத்தில்தான் இந்த ஓன்றுகூடல் நடத்தப்பட்டிருக்கவேண்டும்
என்று சிந்திப்பவர்கள், முதலில் கண்ணீரும் இரத்தமும் சிந்தி தமிழை
வளர்த்துவருபவர்களையும் சொந்தத் தாய்மண்ணில் வாழமுடியாமல் உலகெங்கும்
ஏதிலிகளாகி முகவரி தேடியவாறு தமிழ் கலை, இலக்கியத்தை பனிக்குளிருக்கும்
கோடைவெப்பத்துக்குள்ளுமிருந்து வெளிப்படுத்திக்கொண்டுமிருப்பவர்களையும்
சற்று விழியுயர்த்திப்பார்க்க வேண்டும்.
நாம் மேலே சுட்டிக்காண்பித்த தமிழ் சார்ந்த துறைகளில் ஈடுபடுபவர்களின்
மானசீகமான ஆதரவு மற்றும் பொருளாதார பங்களிப்புடன்தான் சர்வதேச ஒன்று கூடல்
நடைபெறவிருக்கிறது. எந்தவொரு அரசு சார்பு நிறுவனத்திடமிருந்தும் நிதிவளம்
பெறாமலேயே இந்தப்பணி முன்னெடுக்கப்படுகிறது.
இலங்கையில் வெளியாகும் தமிழ் ஊடகங்கள் மற்றும் இலக்கிய சிற்றிதழ்கள்
இதற்கு அனுசரணை வழங்கும் என்ற நம்பிக்கையுடனேயே செயலில் இறங்கியுள்ளோம்.
ஏழுநாட்கள் கொழும்பில் நடைபெறவுள்ள இந்த ஓன்றுகூடலின்
நிருவாகப்பணிகளுக்காக பின்வருவோர் தெரிவாகியுள்ளனர். அவர்களின் விபரம்
வருமாறு:- ஞானம் ஆசிரியர் டொக்டர் தி. ஞானசேகரன், மல்லிகை ஆசிரியர்
டொமினிக் ஜீவா, பூபாலசிங்கம் ஸ்ரீதரசிங், தெளிவத்தை ஜோசப், செங்கை ஆழியான்,
சட்டத்தரணி சோ.தேவராஜா, வசந்தி தயாபரன், திக்குவல்லை கமால், பேராசிரியர்
மௌனகுரு, மேமன்கவி, சட்டத்தரணி ராஜகுலேந்திரன், லெ.முருகபூபதி.
இந்த சர்வதேச ஒன்றுகூடலின் பிரதான அமைப்பாளர் முருகபூபதியினால் கடந்த
ஜனவரி மாதம் குறிப்பிட்ட நிருவாகக்குழு தற்காலிகமாக அமைக்கப்பட்டது.
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்
(International Tamil Writers Forum)
என்ற
பெயரில் இயங்கும் இந்த அமைப்பின் அமைப்புவிதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
விரைவில் வங்கிக் கணக்கு விபரங்கள் அறியத்தரப்படும். இலங்கை மற்றும்
வெளிநாடுகளிலிருந்து ஒன்றுகூடலில் ஆர்வமுள்ள அன்பர்களிடமிருந்து நிதியுதவி
பெறப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்படும்.
பச்சைத்தண்ணீரில் பலகாரம் பொறிக்கும் வித்தை தெரியாத நாம், பலரதும் ஆதரவு,
அனுசரணையுடனேயே செயல்படுவோம். எந்தவொரு பொதுவேலைத்திட்டமும் முறையான
நிருவாகத்தின் அடிப்படையிலேயே உருப்படியாக இயங்கும். தற்போது
இடப்பட்டுள்ளது அத்திவாரமே. இதிலிருந்து புரிந்துணர்வு மிக்க தமிழ் கலை,
இலக்கியம் சார்ந்த பணிகளை சர்வதேச தூரநோக்குப்பார்வையுடன் முன்னெடுப்போம்.
கருத்துக்கள், பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன.
ஓன்றியத்தில் உறுப்புரிமை, அங்கத்துவம் பற்றிய விபரங்களை ஒன்றியத்தின்
தற்போதைய நிருவாகக்குழு விரைவில் அறியத்தரும். இலங்கையில் 2011
ஆம் ஆண்டு நடைபெறும் ஒன்றுகூடலின் பின்னர், காலத்துக்குக்காலம் தெரிவாகும்
சர்வதேசக்குழு மற்றும் தேசியக்குழுக்கள் பற்றிய தீர்மானங்கள் ஆராயப்படும்.
தற்சமயம் ஒன்றியத்தின் தொடர்பாளராக டொக்டர் தி.ஞானசேகரன் இயங்குகின்றார்.
நடைபெறவுள்ள ஒன்றுகூடலில் சில நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வடிவமைக்கும்
பணிகளில் ஈடுபடுவதற்கு சிலர் முன்வந்துள்ளனர்
அவர்களின் விபரம் வருமாறு:
1. டொக்டர் தி. ஞானசேகரன் - செவ்விதாக்கம் ( படைப்புகளில்
செம்மைப்படுத்தல்)
2. மேமன் கவி - வலைப்பதிவுகள்
3. நூலகர். என்.செல்வராஜா - ஆவணமாக்கல்.
4. சிறுவர் இலக்கியம் - ஓ.கே.குணநாதன்
5. கூத்து - பேராசிரியர் மௌனகுரு.
6. இலக்கிய சிற்றிதழ்கள் - அந்தனிஜீவா
7. பிரதேச இலக்கியம் - தெளிவத்தை ஜோசப்.
8. தமிழ்-சிங்கள இலக்கியப்பரிவர்த்தனை. – திக்குவல்லை கமால்.
மேலும் சில நிகழ்ச்சிகளை வடிவமைக்கவேண்டியிருப்பதனால் தாம்
ஆர்வம்காண்பிக்கும் துறைகள் சார்ந்தவர்கள் தொடர்புகொள்ளலாம். தனிப்பட்ட
விருப்பு வெறுப்புகளை புறம் ஒதுக்கிவிட்டு, நிகழ்ச்சிகளில் கட்டுரை
சமர்ப்பிக்க அல்லது பயிற்சிப்பட்டறைகள் நடத்த விரும்புவோர் இவர்களுடன்
அல்லது தொடர்பாளருடன் உரையாடலாம். மேலதிக விபரங்களுக்கு: 011
2586013 (இலங்கை)
அல்லது 0061393081484 (அவுஸ்திரேலியா) ஆகிய
தொலைபேசி இலக்கங்களில் தொடர்புகொள்ளலாம். மின்னஞ்சல்:
international.twfes@yahoo.com.au
சர்வதேச ஒன்றுகூடலில் பங்கேற்கவும், கருத்தரங்குகளில் கட்டுரை
சமர்ப்பிக்கவும் விரும்புவோர் தபாலில் தொடர்பு கொள்ள முகவரிகள்:
3 B, 46th Lane, Colombo-06
அல்லது,
P.O.Box 350,
Craigieburn, Victoria-3064, Australia
ஊடகம், படைப்பிலக்கியத்துறைகளில்
செவ்விதாக்கம் செய்தியாளர்களும் எழுத்தாளர்களும் கவனிக்கவேண்டிய பக்கம்
செவ்விதாக்கம் பல்கலைக்கழகங்களில் பாடநெறியாகுமா? 2011 சர்வதேச தமிழ்
எழுத்தாளர் ஒன்றுகூடலில் இடம்பெறும் முதல் நிகழ்ச்சி
ஊடகத்துறையில் செம்மைப்படுத்தும் (Editing)
பணியானது இந்தத்துறையின் தொடக்க காலத்திலிருந்தே முக்கியத்துவம்
பெற்றிருக்கிறது. அத்துடன் மேலைத்தேய நாடுகளில் படைப்பு இலக்கிய
வெளியீட்டுத்துறையில் பதி;ப்பாளருக்கும் படைப்பாளிக்கும் இடையே கொப்பி
எடிட்டர் (Copy Editor) பணியாற்றுவார்.
இவரது பணி நூலுருவில் வெளியிடப்படவுள்ள படைப்பின் மூலத்தை சிதைக்காமல்
செம்மைப்படுத்துவது.
இங்கு பதிப்பாளர்-படைப்பாளர்- கொப்பி எடிட்டர் மூவருக்கும் இடையே
ஆரோக்கியமான உறவு இருப்பின் வெளியாகும் நூலும் தரமாக அமைந்துவிடும்.
இந்தக்கலாசாரம் எமது தமிழ்ச்சூழலில் முறையாக வளர்த்தெடுக்கப்படவில்லை.
தமிழ் ஊடகங்களைப்பொறுத்தமட்டில் செய்திகளை சேகரித்து எழுதியனுப்பும்
நிருபர், அதனை எடிட்செய்யும் ஆசிரியர் அல்லது துணை ஆசிரியர்
ஆகியோருக்கிடையில் தொடர்பு நெருக்கமாகவிருக்கும். நிருபர் அனுப்பும்
செய்தியை அப்படியே பிரசுரித்தால், ஒலி-ஒளிபரப்பினால் அதனால் எந்தத்தவறும்
இல்லை. ஆனால் குறிப்பிட்ட செய்தியின் உண்மைத்தன்மை குறித்து பிரச்சினை
எழுந்து விவகாரமாகும்போது ஊடகத்தின் ஆசிரியரோ அல்லது நிருவாகமோ நீதிமன்ற
படிக்கட்டுகளில் ஏறவேண்டி துர்ப்பாக்கியம் வந்துவிடும்.
அதனாலேயே ஆசிரிய பீடங்களில் துணை ஆசிரியர் குழாம் ஒன்று
இயங்கிக்கொண்டிருக்கும். அச்சில் வந்த எழுத்துப்பிழைகளே கருத்துப்பிழையாகி
விவகாரமாகிய சுவாரஸ்யங்களும் உண்டு. அறிந்தவற்றை பட்டியலிட்டால் நிலத்தில்
விழாதகுறையாக சிரிக்கலாம்.
தமிழ் இலக்கியச்சூழலில் செம்மைப்படுத்தும் கலை தொடர்பாக சில மாதங்களுக்கு
முன்னர் கொழும்பிலிருந்து வெளியாகும் ஞானம் இதழில் எழுதியிருந்தேன்.
அதுதொடர்பாக சில எதிர்வினைகளும் எழுந்தன. நாம் எதிர்வரும் 2011
ஜனவரியில் கொழும்பில் நடத்தவிருக்கும் சர்வதேச தமிழ் எழுத்தாளர்
ஒன்றுகூடலில் ஒழுங்குசெய்யவிருக்கும் கருத்தரங்கு அமர்வுகளில் இந்த
செம்மைப்படுத்தும் கலை தொடர்பாகவும் விரிவாக ஆராயவிருக்கின்றோம்.
சர்வதேச ஒன்றுகூடல் தொடர்பாக கடந்த ஜனவரி 3 ஆம்
திகதி கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் தகைமைசார்
பேராசிரியர் கா.சிவத்தம்பி, செம்மைப்படுத்தலை செவ்விதாக்கம் என்றும்
அழைக்கலாம் என்று சிறுதிருத்தம் கூறி விரிவாக உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் கொழும்பிலிருந்து வெளியாகும் பத்திரிகைகளினதும் இலக்கிய
இதழ்களினதும் ஆசிரியர்களும் நூல் பதிப்புத்துறையில் ஈடுபட்டிருப்பவர்களும்
கலந்துகொண்டு ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவித்தனர்.
இலத்திரணியல் ஊடகங்களின் பெருக்கத்தினாலும் படைப்புகளை கணனியில் வேகமாக
பதிவுசெய்யக்கூடிய வாய்ப்பு அதிகரித்திருப்பதனாலும் செம்மைப்படுத்துவது
இலகுவானதாகியிருக்கிறது. ஆனால் இதுபற்றிய சிந்தனை தொடர்ச்சியாக
வளர்க்கப்படவில்லை.
பெரும்பாலான தமிழ்ப்படைப்பாளிகள் தாம் எழுதியது அப்படியே ஊடகங்களில்
மாற்றம் திருத்தமின்றி வெளியாகவேண்டும் என்றே விரும்புகிறார்கள்.
தப்பித்தவறி ஆசிரியர் அதில் கைவைத்துவிட்டால் உறவு குலைந்துவிடும்.
வெளியீட்டு முயற்சி கூட ஒருவகையில் குழுப்பணிதான் (Team Work)
என்பதை புரிந்துகொள்ள மறுப்பதனால்தான் இத்தகைய சங்கடங்களும் தோன்றுகின்றன.
சில வாசகர் கடிதங்களை அல்லது படைப்புகளை இதழாசிரியர் அதன் உள்ளடக்கம்
தெரிந்தோ தெரியாமலோ பிரசுரித்துவிட்டால் அதனால் பாதிக்கப்படும் அல்லது
இதழுக்கு பொருத்தமற்றது எனக்கருதும் வாசகர் தாமதமின்றி தொலைபேசி,
மின்னஞ்சல் அல்லது கடிதம் ஊடாக தமது எதிர்வினையை சமர்ப்பித்துவிடுவார்.
அதில், 'ஏனைய்யா உங்கள் அலுவலகத்தில் குப்பைக்கூடை இல்லையா? குப்பையில்
போடவேண்டியதையெல்லாம் பிரசுரித்து பக்கங்களை வீணடிக்கிறீரே....!' என்று
தெரிவிப்பார்.
இந்த அனுபவத்தை பல இதழாசிரியர்கள் சந்தித்திருக்கிறார்கள். சில
வருடங்களுக்கு முன்னர் லண்டன் சென்றிருந்தபோது தீபம் தொலைக்காட்சியில்
நான் பங்கேற்ற ஒரு நேர்காணல் நிகழ்ச்சியில் அனஸ். இளைய அப்துல்லா,
செம்மைப்படுத்தும் விடயத்தில் இலக்கிய இதழ்கள் போதிய கவனம் எடுப்பதில்லை
என்று தமது வருத்தத்தை தெரிவித்தார்.
ஈழத்து இலக்கிய உலகில் முன்னர் சில எழுத்தாளர்களின் படைப்புகளை எஸ்.பொ.
செம்மைப்படுத்திக்கொடுத்திருப்பதாகத்தகவல் உண்டு. ஆனால், எஸ்.பொ.
குறிப்பிட்ட எழுத்தாளர்களுடன் முரண்பட்டவுடன் தாம்தான் அவர்களுக்கு
எழுதிக்கொடுத்ததாகவும் பல சந்தர்ப்பங்களில் அவர்களின் பெயரையே
புனைபெயராக்கி எழுதியிருப்பதாகவும் குசும்புத்தனம் புரிந்திருக்கிறார்.
மேலைத்தேய நாடுகளில் பல புகழ்பெற்ற படைப்பாளிகளின் படைப்புகளை
பதிப்பாளரின் வேண்டுகோளுக்கு ஏற்ப செம்மைப்படுத்தியிருப்பவர்களிடம்
இத்தகைய குசும்புத்தனம் இருந்திருக்குமா என்பது சந்தேகமே.
விக்ரம்சேத்தின் Suitable Boy என்ற நாவல்
ஆறு பதிப்பாசிரியர்களிடம் சென்றிருப்பதாகவும் அவர்களின் ஆலோசனைகளின்
பின்னர்தான் அதற்கு நேர்த்தியான வடிவம் கிடைத்ததாகவும் தகவல் இருக்கிறது.
இலக்கிய படைப்புகளை செம்மைப்படுத்துவதன் தேவை அவசியமானது என்ற காலத்தில்
நாம் வாழ்கின்றோம்.
பத்திரிகை ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் வாசகர்களின் கவனத்தையும்
கருத்தையும் ஈர்ப்பதற்கு அவற்றின் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெறும்
அதேதருணம் அவற்றின் தலைப்புகளும் சிந்தனையில் ஊடுருவும்.
தலைப்பைப்பார்த்துவிட்டே குறிப்பிட்ட செய்தியை படிக்கலாமா தவிர்க்கலாமா
என்றும் வாசகர்கள் தீர்மானிப்பதுண்டு. அதனால் தலைப்பும் ஊடகத்தில்
முக்கியத்துவம் பெறுகின்றது.
தொலைக்காட்சி, வானொலிகளில் தலைப்புச்செய்திகள் சொல்லப்படுவதன்
தாற்பரியமும் அதுதான். நான் சிலவருடங்கள் வீரகேசரியில் ஆசிரியபீடத்திலும்
அதற்குமுன்னர் அங்கே ஒப்புநோக்காளர் பிரிவிலும் பணியாற்றியிருக்கின்றேன்.
அச்சமயம் செய்தி ஆசிரியர்களாக பணியாற்றிய திருவாளர்கள் டேவிட் ராஜூ,
நடராஜா ஆகியோர் பத்திரிகையாளர்களான அலுவலக நிருபர்களுக்கும் வெளியூர்
நிருபர்களுக்கும் தெரிவிக்கும் ஒரு முக்கியமான ஆலோசனை எக்காலத்துக்கும்
பொருத்தமானது.
அவர்கள் சொல்வார்கள்: 'நீங்கள் எழுதிக்கொடுக்கும் செய்தி பத்திரிகையில்
என்ன வடிவத்தில் வெளியாகிறது என்பதை கவனியுங்கள்'
இந்த ஆலோசனை பின்பற்றப்படும்போது செய்தி எழுத்துப்பயிற்சி நிச்சயமாக
செம்மையுறும்.
ரயில் கடவை இல்லாத இடத்தில் ஒரு பாதசாரி ரயிலால் மோதுண்டு இறந்தார்
என்றால் அந்தச்செய்தியின் தலைப்பிலும் உள்ளடக்கத்திலும் அங்கே கடவை
இல்லையென்பதும் அதுவே விபத்துக்கான காரணம் என்பதும் அழுத்தமாக
பதிவாகவேண்டும். எனச்சொல்வார் டேவிட்ராஜூ.
நடராஜா கவித்துவமான தலைப்புகளை இடுவார். ஒருசமயம் கொழும்பிலிருந்து
புறப்பட்ட யாழ்தேவி ரயிலில் பாதுகாப்பு படையினர் பொதுமக்களை
பணயமாகவைத்துக்கொண்டு கிளிநொச்சிக்கும் ஆனையிறவுக்கும் இடையே பயணித்து
தமது முகாம்களுக்கு சென்றனர். தமது பாதுகாப்புக்காக அவ்வாறு நடந்துகொண்ட
படையினர் பொதுமக்கள் அதனால் எதிர்நோக்கிய அசௌகரியத்தையிட்டு ஊடகம் ஊடாக
செய்தியை வெளியிட்டபோது அதற்கு நடராஜா இட்ட தலைப்பு ' யாழ்தேவி, நீ யார்
தேவி? நிற்பதும் ஓடுவதும் யாருக்காக?'
இப்படியாக பல உதாரணங்களை அடுக்கிக்கொண்டேபோகலாம்.
ஆக்க இலக்கியத்தில் செவ்விதாக்கம்.
இன்று தமிழ் இலக்கிய உலகில் பிரதான பேசுபொருளாக இருப்பதும் இந்த
செவ்விதாக்கம்தான். அதற்குக்காரணமாகியிருக்கும் அம்சங்கள் பல.
இலத்திரணியல் ஊடகங்களின் அபரிமிதமான வளர்ச்சி. புதிய தலைமுறை
படைப்பாளிகளின் பங்களிப்பு, சிற்றிதழ்கள் மற்றும் இலக்கிய அமைப்புகள்
நடத்தும் சிறுகதை, கவிதைப்போட்டிகள். அவற்றில் பங்கேற்க துடிப்போடு
எழுதும் இளம்படைப்பாளிகள். புலம்பெயர்ந்தவர்களிடம் நிதிவளம் இருக்கிறது
என நம்பிக்கொண்டு தமிழகத்தில் புத்தக பதிப்புத்துறையை தொழிற்சாலையாக்கி
அச்சடித்துக்குவிக்கும் சில பதிப்பகங்கள் அவற்றின் உள்ளடக்கத்தின்
தரம்பற்றிய பிரக்ஞையின்றி இயங்கும்தன்மைகள். குறிப்பிட்ட
அம்சங்களாகியிருக்கின்றன.
அதனால் ஒரு படைப்பு அச்சுக்குச்செல்லும் முன்னர் அல்லது நூலுருவாகும்
முன்னர் நம்பிக்கைக்குரிய ஒரு தேர்ந்த வாசகரிடம் அல்லது எழுத்தாளரிடம்
பார்வைக்கு அனுப்பி செம்மைப்படுத்துதல் நல்லது என்ற கருத்து
வளர்ந்துவருகிறது.
தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் யுகமாயினி மாத இதழில் ஆர்.வெங்கடேஷ் என்ற
எழுத்தாளர் தமது ஆதங்கத்தை இப்படி வெளிப்படுத்தியிருந்தார்.
'நம்ம ஊரில், 'ப்ரூஃப் ரீடர்'களை எடிட்டர்களாக நினைக்கிறார்கள்.
பதிப்பாசிரியர்கள் என்ற சாதி இங்கே 'மைனாரிட்டி கம்யூனிட்டி'.
பல்கலைக்கழகங்களில் ஆங்கிலம் மற்றும் தமிழ் முதுகலைப்பட்டப்படிப்புகளில்
எடிட்டிங்கை ஒரு பாடமாகவேனும் வைத்து இதற்கு உயிர் கொடுக்கலாம்.
எழுத்தாளர்களின் வளரச்சிக்கேற்ப நுண்ணுணர்வு கொண்ட எடிட்டர்களின்
எண்ணிக்கை வளரவில்லை என்பது வருத்தமான விஷயம்.'
அவரது யோசனையை நாமும் பல மட்டங்களில் விவாதித்து ஏற்றுக்கொள்ளலாம்.
இலங்கையில் ஊடகத்துறை பயிற்சிக்கல்லூரிகளில் எடிட்டிங் என்பது முக்கிய
பாடத்திட்டமாக இருப்பதுபோன்று இலக்கிய அமைப்புகளும் தமது நிகழ்ச்சிகளில்
செவ்விதாக்கம் தொடர்பான பயிற்சிப்பட்டறைகளையும் இணைத்துக்கொள்ளலாம்.
அதற்கு கால்கோள் இடுமாப்போன்றுதான் எதிர்வரும் 2011
ஆம் ஆண்டு கொழும்பில் நாம் நடத்தவுள்ள சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்று
கூடலின் நிகழ்ச்சி நிரலில் படைப்பு இலக்கியத்துறையில் செவ்விதாக்கம் என்ற
தலைப்பில் ஒரு முழுநாள் கருத்தரங்கை நடத்த எண்ணியுள்ளோம்.
இதில் கலந்துகொண்டு கட்டுரை சமர்ப்பிக்க விரும்புபவர்கள் அல்லது
இதுவிடயத்தில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை தெரிவிக்க விரும்புபவர்கள்
தாமதமின்றி பின்வரும் முகவரியில் எழுத்துமூலம் தொடர்புகொண்டு தங்கள்
பெயர்களை பதிவுசெய்துகொள்ளலாம். மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.
E.Mail:
international.twfes@yahoo.com.au
முகவரி:
சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்
(International Tamil
Writers Forum)
3 B, 46th
Lane, Wellawatte, Colombo-06
|