சமகால ஈழத்துத்தமிழ் இலக்கியப்
போக்கும் அதன் எதிர்காலமும்
புலோலியூர் வேல். நந்தகுமார்
அண்மைக்காலமாக எமது ஈழத்து இலக்கியப் போக்கை அவதானிக்கின்றபோது
தெளிவாகத் தெரிகின்ற ஒரு விடயம் என்னவென்றால் இங்கு படைப்புக்கள்
பெருகிவரும் அளவிற்கு அதைப் படிக்கின்ற வாசகர்கள்
பெருகியிருக்கிறார்களா என்பதும் அந்தப்படைப்புகளின் உருவ,
உள்ளடக்கங்கள் எல்லா நிலை வாசகர்களாலும் புரிந்து கொள்ளக் கூடியதாக
அவர்களுடைய ரசனைக்கேற்றதாக அவர்களின் எரியும் பிரச்சனைகளை
வெளிப்படுதுவனவாக உள்ளனவா என்பதே ஆகும். மறுபுறத்தில் பெருமளவான
மக்கள் கூட்டத்தினரை இலக்கியம், அதனை படித்தல், ரசித்தல் என்ற
திசையை விட்டு விலத்தி தென்னிந்திய தொலைக்காட்சி நாடகத் தொடர்களும்,
நிகழ்சிகளும், சினிமாப்படங்களும் தமக்கு அடிமையாக்கி அதனை ரசித்துப்
பார்க்கப் பழக்கப்படுத்தி விட்டதையும் காண முடிகின்றது. இதனால்
இன்று இன்றைய தலைமுறை மெல்லமெல்ல ஈழத்துப் பேச்சுவழக்கு மொழியைக்
கூடமாற்றவும், மறக்கவும் தொடங்கியிருப்பதையும் ஒரு ஆரம்பமான
அவதானிப்பாக காணமுடிகிறது. இந்த இடத்தில் எமது உண்மையான
இலக்கியப்போக்கு சமூகத்திலிருந்து அன்னியப்படுகிறதா அல்லது
அன்னியப்படுத்தப்படுகிறதா என்ற சிந்தனை மேலெழுவது தவிர்க்க
முடியாததாகின்றது.
இந்தப் போக்கு இவ்வாறு மேலும் வலிமைபெறுமாயின் எதிர்காலத்தில் எமது
இலக்கியங்கள் மக்களைச் சென்றடையாமல் அதன் வட்டம் குறுகி இலக்கியம்
இலக்கியம் பற்றி சிந்திப்பவர்களுக்கே என்ற நிலை ஏற்பட்டாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்துடன் எதிர்காலத்தில் இவ்
இலக்கியங்களைத் தேடிப் படிக்கின்ற இலக்கியத் தாகம் கொண்டவர்கள்
இருப்பார்களா என்பதும் சிந்திக்க வேண்டியதொன்றாகும். எனவே இன்றைய
நிலையில் இது யார் குற்றம் என்பதை நாம் சரியாகச் சிந்திக்க
வேண்டியது அவசியமாகும். உண்மையில் மக்களுக்கான இலக்கியம்
சமூகத்திற்கான இலக்கியம், சமூக மாற்றத்திற்கான ஆயுதமாக இலக்கியம்
என்றெல்லாம் முற்போக்குப் பேசுகின்ற நாம், இன்று அம்
மக்களுக்குரியவை இலக்கியத்தின் வழி சரியாகக் கொடுத்தோமா என்ற கேள்வி
முன் எழுகிறது. அம்மக்களைப் பார்த்து நாம் சினிமா, நாடகங்களைப்
பார்ப்பதால் சமூகம் சீரழிகிறது என குற்றச்சாட்டுகளை அடுக்கின்றோமே
தவிர அவர்கள் ஏன் அங்கு கவரப்படுகிறார்கள், அதற்கு மாற்றீடாக
அவர்களுக்கு வழங்க எம்மிடம் என்ன உள்ளது அவர்கள் ஏன் எங்கள்
இலக்கியப் படைப்புக்களை ரசித்துப் படிக்க மறந்தார்கள் என்பதை
எம்மில் பலர் இன்னமும் சரியாகப் புரிந்து கொள்ளாமலே இலக்கியம்
படைக்கிறார்கள் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
ஒரு சாதாரண குடிமகன் இன்றைய எமது இலக்கியப் படைப்புக்கள் பற்றி
என்ன நினைக்கிறான் என எண்ணிப்பார்க்க நாம் மறந்துவிட்டோம். ஏதோ
சிலர் வந்து ஒன்றுகூடி ஒரு நூலை வெளியிடுகிறார்கள், அதன் குறை
நிறைகள் பற்றிச் சிலர் பேசுகிறார்கள், சிலர் அதை வாங்குகிறார்கள்.
வாங்குபவர்களில் பலர் அதை முழுமையாகப் படிப்பதே இல்லை. பின்னர்
நான்பெரிதா நீ பெரிதா என்ற மனப்பாங்குகள் என அவன் தன்னை
இலக்கியத்தில் இருந்து அந்நியமாகவே உணர்கின்றான். அத்துடன்
இலக்கியப் படைப்பு படைப்பவர் சிலரின் வாழ்வுக்கும் அவர்கள்
இலக்கியதின் வழி கூறவரும் கருத்துக்கும் இடையில்கூட சில
முரண்பாடுகளைக் காண முடிகிறது. எனவே எமது இன்றைய இலக்கியப்
படைப்புக்கள் தமது படைப்புக்கான அனுபவத்தை சமூகத்தில் இருந்தே
பெற்றுக் கொள்ளும்போதும், அவ்வனுபவத்தை இலக்கியத்தின் வழி மீளச்
சமூகத்திற்கு வழங்கும்போதும் எந்தளவிற்கு வலிமையோடும் பரந்த
நோக்கோடும் வழங்குகிறது அல்லது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளபடுகிறது
என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. இந்த இடத்தில் மீண்டும் கேள்வி
வருகிறது. இலக்கியம் யாருக்காக? மக்களுக்காவா? அதைப் புரிந்து
கொள்ளக் கூடிய இலக்கியவாதிகளுக்காகவா?
ஒருபுறம் தொலைக்காட்சித் தொடர்களை, சினிமாப்படங்களை பார்க்காதீர்கள்
என மக்களைப் பார்த்துக் கூறுகின்ற நாம் அதற்கு மாற்றீடாக அவர்களின்
வாழ்வில் அதிர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் அவர்களின் மொழியில்,
வாழ்வில் இலக்கியம் என்ற ஊடகம் மூலம் எதை வழங்கினோம், வழங்குகிறோம்
என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது. இதனால்தான் காட்சியோடு மனங்களைச்
சென்றடையும் வலிமையான அக்காட்சி ஊடகக் கவர்ச்சியில் இருந்து மக்களை
திசைமாற்ற முடியாதுள்ளது. இச்சிந்தனை இலக்கியத்தை முழுமையாக
நிராகரிக்கும் சிந்தனை அல்ல. அதன் இயங்கியலின் இன்றைய யதார்த்தத்தை
புரியவைக்கும் சிந்தனை. இன்று எத்தனையோ கவிதைத் தொகுதிகளை,
சிறுகதைத் தொகுதிகளை நாம் வெளியிடுகிறோம். இதில் எத்தனை மக்கள்
மனங்களில் இடம்பிடித்தன. மக்கள் வாய்களில் உச்சரிக்கப்பட்டன.
மக்களின் வாழ்வை மாற்றின. மீண்டும் கேள்வி வருகிறது. நாம்
யாருக்காக இலக்கியம் படைக்கிறோம்?
இன்றைய எமது இலக்கியச் சூழலில் மேலைத்தேச தத்துவச் சிந்தனைகளான பின்
அமைப்பியல், பின் நவீனத்துவம், பெண்ணியம், கட்டுடைப்புவாதம்,
சோசலிச யதார்த்தம், குறியீடு, படிமம் போன்ற தத்துவார்த்தங்களின்
வழிநின்று இலக்கியங்களைப் படைக்கின்ற சிலர் வடிவங்களைக்
கட்டுடைத்தல், புதியன புனைதல் என்ற போர்வையில் இலக்கியத்தை
முற்றிலும் சமுதாயத்திற்கு விளங்காத ஒரு பொருளாக
மாற்றிவிடுகிறார்கள். அவர்களது இலக்கியம் பற்றிய கருத்து நிலை
யாதெனில் 'எமது உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஏற்கனவே உள்ள நியம
வடிவங்கள் போதவில்லை. அதனால் வடிவங்களை உடைக்கிறோம். எல்லாவற்றையும்
கேள்விக்குள்ளாக்குகிறோம். படைப்பு விளங்குகின்றவர்களுக்கு
விளங்கினால் போதும.; உன்னால் விளங்க முடியவில்லை என்பதற்காக
அப்படைப்பை குறை கூறாதே. அப்படைப்பு அனுபவத்தை புரிய முடியாமை
உன்னுடைய குறையே. நீ அந்த படைப்பு அனுபவத்திற்கு வரவேண்டும்'
என்கின்றனர். எனவே சமூகத்தை நோக்கிப் படைப்புச் சென்ற காலம் போய்
படைப்பபை நோக்கி சமூகம் வரவேண்டும் என்பது இலக்கியத்தை மேலும்
பரந்துபட்ட வாசக வட்டத்தில் இருந்து அந்நியப்படுத்தவே உதவும்.
அதற்காக புதுமை செய்யக்கூடாது. மாற்றங்கள் கூடாது என்று கூறவரவில்லை.
சமூகத்தில் இருந்து அந்நியப்படாத மாற்றங்கள் வேண்டும்.
புதுமைகளும் மாற்றங்களும் நிகழவில்லை என்றால் பண்டிதர்களிடம்
அடைபட்டிருந்த எமது இலக்கியம் பாமரர்களின் சொத்தாகி இருக்க முடியாது.
மரபுக்குள் சிறைப்பட்டிருந்த தமிழ்க்கவிதையை புதுக்கவிதையாக்கி
எல்லார்க்கும் விளங்கும் எளிமையாக்கி, சமூகப் புரட்சியின்
ஆயூதமாக்கி புதுமை செய்த பாரதியும், பாரதிதாசனும், மகாகவியும்,
சிறுகதையூடாக சமூக அவலங்களை வெளிச்சமாக்கிய புதுமைப்பித்தனும்,
இலங்கையர்கோனும் இத்தனை காலம் கடந்தும் அமரத்துவம் மிக்க மக்களின்
மனங்களில் வேரூன்றி (சமூதாயத்தையே மாற்றி அமைத்து) படைப்பாளிகளாய்
சிறப்புற்றிருக்க முடியாது.
எனவே தமிழிலக்கியம் காலத்திற்கு காலம் பல வடிவ கட்டுடைப்பு
மாற்றங்களுக்கு உட்பட்டபோதும் சமூதாயத்திற்கான இலக்கியம், சமூக
மாற்றத்தின் ஆயுதமாக இலக்கியம், சமூக மனங்களில் நிலைக்கும்
இலக்கியம் என்ற சமூகம் தளத்தில் இருந்து விலகவில்லை. அதனால் அது
சமூகத்தின் தாக்கம் மிக்க சக்தியாக இருந்து அதிகளவானோரைச்
சென்றடைந்து பல மாற்றங்களுக்கு வித்திட்டது. ஆனால் அண்மைக்கால
இலக்கியப் போக்குகளை அவதானிக்கின்ற போது இங்கு ஏற்கனவே பல
வருடங்களாக இலக்கியம் படைக்கும் அனுபவம் உள்ளவர்களும், பல புதிய
தலைமுறைப் படைப்பாளிகளும் என இலக்கியக்களம் அமைத்துள்ளதுடன், புல
மூத்த முதுசங்களை எமது ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகம் இடைவெளிகளாய்
இழந்து வருவதையும் காணமுடிகிறது.
இந்த வகையில் இன்று இலக்கியத்தைப் பற்றி படிப்பவர்கள், கேட்பவர்கள்,
சிந்திப்பவர்கள் பற்றிய எண்ணிக்கையை பார்க்கிறபோதும், இன்றைய சில
புதிய படைப்பாளிகளதும், விமர்சகர்களினதும் அவசரமான உச்சநிலைச்
சிந்தனைகளை: பழையன எல்லாம் பொய், ஜனரஞ்சகம் போலியானது, என மறுக்கும்
சிந்தனைகளைப் பார்க்கின்றபோதும், கட்டுடைப்பு என்ற போர்வையில்
செய்யப்படும் முயற்சிகளையும், அவர்களது கருத்து நிலையைப்
பார்க்கிறபோதும், தீவிர பெண்ணியவாதிகளின் இலக்கியக் கோட்பாடுகள்,
மீள் சிந்தனைகளை நோக்குகின்றபோதும் எமது இன்றைய இலக்கியப்போக்கு
படைப்பு, கோட்பாடு என்ற அடிப்படையில் வளர்ச்சியுற்றுள்ளதே அன்றி
சமூகத்திற்கான, மக்களுக்கான இலக்கியம் என்ற போக்கில் இருந்து மெல்ல
அந்நியப்படத் தொடங்குகிறதா, அந்நியப்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி
எம்முன் எழுவது தவிர்க்க முடியாததாகின்றது.
ஆயினும் இதையும் தாண்டி இன்றும் எம்மிடையே பல அற்புதமான
படைப்பாளிகள் இலக்கியத்தின் சமூக நோக்கை விளக்கி அதன் சக்தியாக
நின்று இலக்கியம் மக்களுக்காவே என்ற சமுதாயக் கண்ணோட்டத்துடன்,
சமுதாயத்தை மாற்றும் ஆயுதமாக, சமூகத்திற்கு பிடித்த ரசனைகள்
கலந்தும், சமூகத்தளத்தில் இருந்து தமது படைப்புக்களை
அந்நியப்படுத்தாமல் பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் துணிச்சலுடன்
இலக்கியங்கள் படைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத
உண்மையாகும். அதிலும் சமூக மாற்றங்களை உள்வாங்காமல் இன்னமும் எமது
பழைய சமூக அமைப்பின் குறைகளையே மறக்கப்படும் விடயங்களை மீள்
ஞாபகப்படுத்தும் சில மூத்த படைப்பாளிகளது படைப்புக்களும் இன்றைய
கால சமூகத்தை எந்தளவிற்கு பிரதிபலிக்கின்றன என்ற கேள்வியும் எழாமல்
இல்லை. எனவே மாற்றங்களை உள்வாங்கியபடி சமூக மனச்சாட்சிகளை
உலுக்கக்கூடிய, அவர்ளது அன்றாட அவலங்களுக்கு ஆறுதல் சொல்லக் கூடிய,
அவர்களால் அவர்களின் மொழியில் இலகுவில் விளங்கிக் கொள்ளக்கூடிய
இலக்கியப் போக்கே இன்று சமூகத்தோடு இலக்கியத்தை இணைக்க
அவசியமாகின்றது. இந்தவகையில் ஈழத்தில் இருந்து வெளிவந்து
கொண்டிருக்கின்ற இலக்கியச் சஞ்சிகைகள் இது விடயத்தில் காத்திரமான
பங்களிப்புக்களை ஓரளவிற்கு வழங்கி வருகின்ற போதும் அவையும் இது
விடயத்தில்மேலும் சிந்திக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இன்று
இலக்கியத்தை சமூகத்திற்கு சரியாகக் கொண்டு சேர்க்கக்கூடிய உறவுப்
பாலமாக இச்சஞ்சிகைகளே விளங்குகின்றன என்பது மறக்க முடியாத
உண்மையாகும். இந்த வகையில் உலகெங்கும் சிதறிப் போயுள்ள தமிழ்ச்
சமூகத்தின் மனச்சாட்சியை இலக்கியங்கள் உலும்பாதவரை, இலக்கியம்
யாருக்காக? மக்களுக்காகவா? படித்தவர்களுக்காகவோ?
இலக்கியவாதிகளுக்காகவா? (இலக்கியரசனை உள்ளவர்களுக்காகவா) என்ற
கேள்வி தவிர்க்க முடியாததாகின்றது. காலம் பதில் சொல்லும்.
(நன்றி – ஞானம்)
|