எழுத்தாளர் அகிலாண்டம் எனும் அகிலன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்! (2010-06-27)

திருமதி ஷைலஜா


வ்வொரு தமிழரும் அகிலன் எழுதிய ஏதாவது ஒரு கதையையோ அல்லது சிறுகதையையோ என்றாவது படித்திருப்போம். அவ்வாறு படிக்க வாய்ப்பில்லாதவர்கள் ஒரிருவர் இருந்தால், அவர்களும் அகிலன் எழுதிய 'சித்திரப் பாவை', 'பாவை விளக்கு' என்ற கதைகளைப் பற்றி நிச்சயம் கேள்விப் பட்டிருப்பார்கள். 'சித்திரப் பாவை' ஞானபீடப் பரிசு பெற்றதும், 'பாவை விளக்கு' திரைப்படமாக எடுக்கப்பட்டதும் உலகறிந்த உண்மைகளே. ஆனால் 'கயல் விழி' என்னும் நாவல்தான் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ற திரைப்படமாக ஆனது என்பதைப் பலர் அறியாமலிருக்கலாம்.

அகிலனின் கதைகளில் நம்பத்தகாத கற்பனை மனிதர்கள் வருவதில்லை. நாம் அன்றாடம் காணக்கூடிய சாதாரண மக்களின் தன்மைகளிலிருந்தே சுவையான கதைகளைப் பின்னுகிறார் ஆசிரியர். வெவ்வேறு மனிதர்களுடைய குணங்களும், விருப்பு வெறுப்புகளும் ஒன்றுடன் ஒன்று செயல்புரியும் போது ஏற்படும் உணர்ச்சிகளையும் நிகழ்ச்சிகளையும் நாம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அழகாக சித்தரிக்கிறார். மக்கள் வாழ்க்கையை நன்கு கூர்ந்து கவனித்து அறிந்து அதன் விசித்திரமான குணங்களை எளிமையாகவும் சுவையுடனும் விளக்குகிறார். அகிலன் ஒரு சமூகச் சிந்தனையாளராகவும் விளங்குகிறார். சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும் அநீதிகளையும் எடுத்துக்காட்டி நம்மையும் சிந்திக்கவைக்கிறார்.

ஏறக்குறைய அகிலன் வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர் ஆர்தர் ஹெய்லி (
Arthur Hailey) என்ற அமெரிக்க எழுத்தாளர். (அலெக்ஸ் ஹேலி (Alex Haley) என்பவர் வேறொருவர்.) ஆர்தர் ஹெய்லி ஒரு குறிப்பிட்ட தொழில் துறையை உற்று நோக்கி, அத்துறையின் தனிப் பண்புகளையும், அதிலிருக்கும் இன்னல்களையும், அத்துறையில் ஈடுபட்டிருக்கும் மக்களின் உணர்ச்சிகளையும் உள்ளடக்கி ஒரு புதினம் (novel) படைப்பதில் பெயர் பெற்றவர். அவர் எழுதிய Airport' (1968) திரைப்படமாகவும் வெளிவந்தது. அவருடன் சார்பிலா வகையில் அகிலனும் சில துறைகளின் தொழிலாளிகளைச் சுற்றிக் கதைகள் அமைத்திருப்பது ஒரு வியப்பூட்டும் உண்மை.

'புதுவெள்ளம்' (
1962) என்ற புதினத்தில் நிலக்கரிச் சுரங்கத் தொழில் நடக்கும் விதத்தையும், அத் தொழிலில் உள்ள ஆபத்துகளையும், அதொழிலாளர்களின் வாழ்க்கைமுறைகளையும், அதிகாரிகளின் நோக்கங்களையும் அகிலன் அழகாக விவரிக்கிறார். இக்கதையின் உச்ச கட்டம் சுரங்கத்தில் நிகழும் ஒர் விபத்தின்போது நடைபெறுகிறது. கொள்கைகளால் மாறுபட்ட இருவர் ஒருவருக்கொருவர் உதவுவதால் தங்கள் வேற்றுமைகளை மறந்து ஒன்று சேர்கின்றனர். எழுத்தாளர்கள் பத்திரிகை நிறுவனங்களில் உள்ள தம் குளிர்பதன அலுவலகங்களில் இருந்துகொண்டே எழுதுவதாக நான் எண்ணியதுண்டு. ஆனால் அகிலன் நிலக்கரிச் சுரங்கத்தின் அமைப்பையும் அங்கு தொழில் நடக்கும் விதத்தையும் விவரிப்பதிலிருந்து அவர் சுரங்கத்தினுள் இறங்கிச் சென்று பார்த்திருக்கிறார் எனத் தோன்றுகிறது.

ஞானபீடப் பரிசு பெற்ற 'சித்திரப்பாவை'
(1967) ஒரு சித்திரக் கலைஞரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. அவர் மனநிலைகளையும், எண்ணப்போக்குகளையும் சித்திரமாக வடித்து நம் கண்முன் வைக்கிறார் அகிலன். சித்திரக் கலைஞரின் களங்கமற்ற மனப்போக்குக்கு மாறான வஞ்சக எண்ணங்களுடைய ஒருவரின் சுயநல விருப்பங்களால் அவருக்குத் தீங்கும் துயரமும் விளைய நேரிடுகிறது. எனினும் இறுதியில் அவருடைய உன்னத குணங்களையும் ஆக்கத்திறனையும் அறிந்து போற்றக்கூடிய நல்ல உள்ளங்களும் உலகில் இல்லாமல் போய்விடவில்லை என்ற உண்மை நிலைநாட்டப்படுகிறது.

'பால்மரக் காட்டினிலே'
(1976) என்ற நூலில் மலேசியாவின் ரப்பர் தோட்டங்களில் அப்போதிருந்த ஏழைத் தொழிலாளர்களின் நிலையைப் படம் பிடித்தாற்போல் எடுத்துக் காட்டுகிறார் அகிலன். தோட்ட அதிகாரிகள் குறைந்த செலவில் அதிக உற்பத்தியைப் பெற நினைப்பது பொருளாதாரக் கொள்கைப்படி நியாயமானதுதான். ஆனால் மரங்களின் பட்டைகளைப் பக்குவமாகக் கீறி அவற்றின் பாலை வடித்துப் பதப்படுத்தி ரப்பராக உறையச் செய்பவர்கள் மக்கள், அவர்களும் மரங்களல்லர். அவர்களுக்குக் குடும்பமும், குழந்தைகளும் இருக்கின்றன. அந்த ஏழைச் சமுதாயத்தினரின் கடுமையான உழைப்பினூடேயும் அன்பு, பாசம், காதல் போன்ற மனித உணர்ச்சிகள் இல்லாமல் போகுமா? சில நாட்களே மலேசியா சென்று பார்வையிட்ட அகிலன் அக் குறுகிய காலத்தில் தொழிலாளர்களுடன் பேசிப் பழகி அவர்கள் தொழில் முறைகளையும், வாழ்க்கை நிலைகளையும் நன்றாக அறிந்து அவை வெளிப்படுமாறு எழுதியிருப்பது வியக்கத் தக்கது.

அகிலன் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். குமுதம், ஆனந்த விகடன், கலைமகள், தினமணி போன்ற இதழ்களில்
1950கள் முதல் 80கள் வரை அகிலன் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு இருபாகங்களாக சமீபத்தில் வெளியாகி இருக்கின்றன. தமிழில் அதிகம் வாசித்துப் பழக்கம் இல்லாதவர்களும், முழுநீளக் கதை வாசிக்க நேரமில்லாதவர்களும் அவ்வப்போது ஒரு சிறுகதை படிப்பதற்கு வசதியாக இந்தப் பாகங்கள் அமைந்திருக்கின்றன. முழுநீளக் கதைகளைவிட சில சிறுகதைகள் இலக்கியச் சுவை மிகுந்தவை என்று நான் கருதுகிறேன்.

'பூச்சாண்டி' என்ற சிறுகதையை நாம் பட்டப்பகலில் வீட்டிலிருந்து படிக்கும்போதிலும், அமாவாசை இருளில் காட்டில் சவுக்க மரங்கள் காற்றில் ஓலமிட்டு பிசாசுகள்போல் ஆடுவது நம்கண்முன் தெரிகிறது. 'வெள்ளம் வந்தது' என்ற கதையில் அடைமழையால் வந்த வெள்ளம் குடிசைகளையும் உடமைகளையும் மட்டுமல்லாது ஒரு ஏழைச்சிறுவனின் ஆசைக்கனவையும் அடித்துச் செல்வதைச் சுவையாக விளக்குகிறார் அகிலன். 'கறவையும் காளையும்', 'தாய்ப்பசு', 'காட்டுக் குரங்கு' என்ற கதைகளில் விலங்குகளுக்கும் உணர்ச்சிகள் இருப்பதையும், சில சமயம் அவை மனிதர்களைவிட அதிக அறிவுடன் நடந்துகொள்வதையும் விளக்குகிறார். எழுத்தாளர்களின் படைப்புகள் மக்களுக்குப் பல நன்மைகளை விளைவிக்கக் கூடியவை. சமுதாயச் சீரமைப்புகளையும் விழிப்புணர்ச்சிகளையும் உருவாக்க வல்லன. ஆயினும் பெரும்பாலான எழுத்தாளர்கள் எளிய வாழ்க்கை முறையிலேயே நிறைவு அடைகின்றனர். சில சமயங்களில் நாட்டு நலனில் நாட்டம் கொண்ட எழுத்தாளர் ஒருவர் வீட்டுத் தேவைகளைக் கருதாமல் விடவும் நேரிடுகிறது. அந்நிலையில் அவர் எழுதிய நூல் ஒன்றை இரவல் வாங்கிப் படிக்க ஒருவர் விரும்பும் அவல நிலை அகிலன் எழுதிய 'புகழ்' என்ற சிறுகதையில் அம்பலமாகிறது.

அகிலன் ஒருநாவலாசிரியர்! சிறுகதையாளர்! நாடக ஆசிரியர்! சிறுவர் நூலாசிரியர்! மொழிபெயர்ப்பாளர்! கட்டுரையாளர்! ஞானபீடப்பரிசுபெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் ஆவார்!

1963ல் வேங்கையின் மைந்தன் நாவலுக்கு சாஹித்ய அகாதமி பரிசினைப்பெற்றவர்!1975ல் சித்திரப்பாவை என்னும் அவரது நாவல்தான் ஞானபீடம் வாங்கித் தந்தது! இந்தியமொழிகள் பலவற்றிலும் மற்றும் சீனம் மலாய், ஜெர்மன், ஆங்கிலம், ரஷ்யமொழியிலும் அவரது கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர்களின் சேவையை ஊக்குவிப்பதும் அவர்கள் தேவைகளை நிறைவு செய்வதும் மக்களின் கடமை. நாம் அவர்கள்
புத்தகங்களை இரவல் வாங்காமல் உரிய விலைகொடுத்து வாங்கிப் படிப்பதே நாம் அவர்களுக்குச்செய்யும் நன்றி. முக்கியமாக, வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது மிக அவசியம். அகிலனின் வழித் தோன்றல்கள் இன்னும் எழுத்தாளர்களாகவும் பதிப்பாசிரியர்களாகவும் அவர் பணியைத் தொடர்ந்து வருகிறார்கள். அகிலனின் பேத்தியான அபிராமி தற்கால வாழ்வுக்கு அவசியமான தொழில் நுட்பத்துறைகளிலும் சுயமுன்னேற்றத் துறைகளிலும் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்கள் எல்லாம் அதிகம் படிக்காத மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் ஏழை மக்கள் வாங்கும்படிக் குறைந்த விலையிலும் அமைந்திருக்கின்றன.


தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் -- பாவேந்தர் பாரதிதாசன்.