வருவது உரைக்கும் குறிகளும் குணங்களும்

கவிஞர் மா.உலகநாதன்., எம்.ஏ


முன்னுரை :
நாம் உணவு அருந்திக்கொண்டிருப்போம். திடீரென்று புரையேறும். அருகிலிருப்பவர்கள் நம் தலையில் தட்டி, பிறந்த ஊர் இன்னது என்று கூறுவதுண்டு. சில நேரம் 'உரிமையுடைவர்கள் யாரோ நினைக்கிறார்கள'; என்பாரும் உண்டு. புரையேறுதலுக்கும், யாரோ நினைப்பதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. (சுஜாதாவின் ஏன்? எதற்கு? எப்படி?) ஏனெனில், உணவுக் குழலுக்குச் செல்லும் உணவு, மூச்சுக் குழலுக்குச் சென்று விடுவதால் புரையேறுதல் நிகழ்கிறது என்பது அறிவியல் உண்மை. ஆனால், உலகியல் உண்மை வேறாக இருக்கிறது.

திருக்குறள் :
திருவள்ளுவப் பெருந்தகை 1203-ஆவது குறளில் தும்மல் வருவது போலிருந்து வராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ? என்று தலைவி ஐயுறுவதாகக் காட்டுகிறார்.

'நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்'. குறள்
-
1203

தும்மல் வந்து அடங்கினால், யாரோ நினைப்பதாக என்னும் பண்டைப் பழக்கம் இங்கு சுட்டப்பெறுகிறது. அவ்வாறாயின், திருவள்ளுவருக்கு இந்த அறிவியல் உண்மை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று எண்ண இடமுண்டு. அல்லது, உரிமையுடைய ஒருவரை நினையுங்கால், தும்மலும் புரையேறுதலும் இயல்பு, வளமை என்று எண்ணுதற்கும் இடமுண்டு.

சிலப்பதிகாரம் :
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்திலும் இத்தகைய காட்சி ஒன்றைக் காணலாம். சிலம்பு விற்கப்போன, கோவலன் கொலையுண்ட வேளையில், கண்ணகி தங்கியிருந்த புறச்சேரி (துயர்சேரி) உற்பாதங்கள் (தீக்குறி) ஏற்பட்டதாம். அதனால், தீமை நேரும் என்று அஞ்சிய ஆய மகளிர்கள், தம் குலதெய்வமான கண்ணனை வேண்டிக் குரவைக் கூத்து ஆடுகின்றனர்.

'குடத்துப்பால் உறையாமையும்
குவி இமில் ஏற்றின்
மடக்கண் நீர் சோர்தலும்
உறியில் வெண்ணெய் உருகாமையும்
மறி முடங்கி ஆடாமையும்
மான்மணி நிலத்து அற்று வீழ்தலும்
வருவது ஓர் துன்பம் உண்டு'.
(ஆய்ச் - குரவை)

குடத்துப்பால் உறையவில்லை, வெண்ணெய் உருகவில்லை, கன்றுக் குட்டிகள் துள்ளியாடவில்லை, பட்டியில் திரண்ட திமில்களையுடைய எருதுகள் கண்ணீர் சொரிந்தன. பசுக்களின் கழுத்தில் கட்டியிருந்த மணிகள் தாமாகவே அறுந்து விழுந்தனவாம். இதனைக் கண்ட மாதரியும் மற்றோரும் பெருங்கவலை உற்றனராம். பண்டைய அரசவைகளில். 'நிமித்திகப் புலவன்' இருந்ததாகக் குறிப்புகள் காணப்படுகின்றன.

கம்பராமாயணம் :

கம்பராமாயணத்தில் நற்குறியாகக் கம்பர் காட்டும் காட்சி ஒன்று.

அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதைக்கு உற்ற அன்பு செய்பவனாக, வீபீடண் மகள் திரிசடை விளங்குகிறாள். அன்பில் தாயினும் இனியள் என்கிறான் கம்பன். காவல் அரக்கியர் அனைவரும் கள் உண்டு உறங்கும் ஒரு நாளில், தன் புருவமும் கண்ணும் இடது பக்கம் துடிப்பதாகக் கூறி ஏன், எனத் திரிசடையிடம் வினவுகிறாள். அவள் சீதைக்கு மங்கல வாழ்த்துக் கூறி, 'உள் துணைக் கணவனை உறுதல் உண்மையால்' உன் இடது கண் துடிக்கிறது என்றாள். நல்ல செய்தியோடு ஒரு தூதுவன் வருவான் என்கிறாள்.

ஆயது தேரின் உன் ஆவி நாயகன்
ஏயது தூது வந்து எதிரும் என்னுமால்
தீயது தீயவர்க்கு எய்தல் திண்ணம் என்
வாயது கேள் என மறித்தும் கூறுவாள்

வலது கண் துடித்தால் கெடுதல் என்றும், இடது கண் துடிப்பது நன்மைக்கு எனவும் ஒரு நம்பிக்கை இன்றும் இருப்பது இதனால் தானோ?

முடிவுரை :
நாட்டுக்கு நாடு போர் ஏற்படுமுன்னர் போர்மேகங்கள் சூழ்ந்தன என்பர்.
2006இல் ஏற்பட்ட ஆழிப் பேரலை தோன்றுவதற்கு முன் கடற்கரைகளிலிருந்து மான், நாய், ஆடு, மாடு போன்ற விலங்குகள் பேரலை தோன்றும் அறிகுறி தெரிந்து அவை காட்டுக்குள்ளிருந்து நாட்டுக்குள் புகலிடம் தேடின. இவையெல்லாம் நற்குறியோ, தீக்குறியோ அவை நமக்கு எதிர்வரும் இன்பங்களையும், துன்பங்களையும் அறிவிக்கும் குறிகளாகத் தோன்றுகின்றன.






worldnath_131149@yahoo.co.in