"காதலிக்கிறேன் உன்னை எப்போதும்" -
முன்னுரை
அன்புடன் புகாரி
காதல்
வயதோடு சம்பந்தப்பட்டதா? ஆம் என்றால், காதல் உடம்போடு சம்பந்தப்பட்டதா
என்ற அடுத்த கேள்வி எனக்கு உடனே எழுகிறது!
காதல் உடம்போடு மட்டுமே சம்பந்தப்பட்டது என்று கூறுவோருக்கு காதல் வயதோடு
மட்டுமே சம்பந்தப்பட்டது என்றுதான் ஆகிறது.
ஆனால் காதல் மனதோடு சம்பந்தப்பட்டது என்ற தெளிவினைப் பெற்றவர்களுக்கு
காதல் வயதோடு சம்பந்தப்பட்டது என்ற தவறான கருத்து எழுவதே இல்லை.
இளமை வயதோடு சமந்தப்பட்டதா? ஆம் என்றால், இளமை உடம்போடு மட்டுமே
சம்பந்தப்பட்டது என்றாகிறது. இங்கே மனதை மறந்துவிட்ட கோணம் ஒரு கோணல்
என்பது எத்தனை பேருக்குப் புரிகிறது?
என்றும் இளமையாக இருப்பது என்றால் எப்படி? இளமை என்பது மனதோடு
சம்பந்தப்பட்டது என்று ஆகும்போதுதானே அது நிகழக்கூடும்?
இந்தப் பிரபஞ்சம் பிறந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன? என்றால் அது
முதுமையானதா? இயற்கை என்றென்றும் இளமையானதல்லவா?
தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் ஒவ்வொன்றும் என்றென்றும் இளமையானதல்லவா?
காதல் மனித மனங்களைப் புதுப்பிக்கவில்லையா? என்றால் அங்கே இளமை எப்படி
இல்லாமல் போகும்?
காதல் என்பது உடலும் உடலும் சேரும் சில நிமிடக் கூத்தா? அல்லது
காலமெல்லாம் உள்ளக் காட்டில் உதிராமல் வாசம் வீசிப் பூத்துக்கிடக்கும்
மல்லிகைக் கூட்டமா?
நான் கவிதை எழுதவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டு என்றுமே எழுத
அமர்ந்ததில்லை. என் கவிதைகள்தாம் இவனைக் கவிதை எழுத வைக்கவேண்டும் என்று
முடிவெடுத்து என்னை இழுத்துக்கொண்டுபோய் எழுத வைக்கின்றன.
அப்படி எழுதப்பட்டவைதாம் உண்மையான கவிதைகள் என்ற கர்வம் கொண்டவன் நான்.
ஆகவே காமத்துப்பால் எழுதுவதும் பொருட்பால் வடிப்பதும் அறத்துப்பால்
இயற்றுவதும் என் கையில் இல்லை. எழுதி முடித்த கவிதைகளைத் தனித்தனியே
பிரித்துத் தொகுத்து நூலாய் வெளியிடுவதுதான் என் கையில் இருக்கிறது.
அப்படி எழுதப்பட்ட காதல் கவிதைகளைத் தொகுத்து 'காதலிக்கிறேன் உன்னை
எப்போதும்' என்ற தலைப்பில் காதலோடு வெளியிடுகிறேன்.
இந்தத் தொகுப்பின் கவிதைகளை நான் எழுத எழுத இணையத்தின் உடனடிப் பிணைப்பால்
எழுதிய பொழுதிலேயே வாசித்து நேசித்த இளமை மிகு காதல் உள்ளங்கள் இப்படி ஒரு
தொகுப்பை நான் உடனே வெளியிடவேண்டும் என்று அடிக்கடி அடிக்கடி என்னை
அன்போடும் அவசரத்தோடும் கேட்டுக்கொண்டன.
அவர்களுக்கும் இந்த நூலை இத்தனை சிறப்பாகத் தொகுத்து வெளியிட பாசத்தோடும்
ஆர்வத்தோடும் முன்வந்த திரிசக்தி பதிப்பகத்தின் பெருஞ்சக்தி ஆசிரியர்
கவிஞர் ரமணன் அண்ணா அவர்களுக்கும் என் நன்றிகள் ஆயிரமாய் ஆயிரமாய்....
என் ஒவ்வொரு கவிதையிலும் உள்ளத்தோடும் உணர்வுகளோடும் உட்கார்ந்து
தேனுறிஞ்சிச் சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சி ரசிகர்களுக்கு என் கவிதைகளின்
உயிர் நிறைக்கும் நன்றிகள்.
anbudanbuhari@gmail.com
|