வாழ்வாங்கு வாழ்ந்தவர்..!

முல்லைஅமுதன்

ளவாலை என்றதுமே கல்வியாளர்கள் நினைவுக்கு வருகிறார்கள் .. இளவாலை.அமுது, தாசிசியஸ், ஜேசுரத்தினம் (1931-2010) அவர்களோடு பலரும் சேர்வர்.

இனம் காணப்பட்ட கலைஞர்களுள் ஜேசுரத்தினம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அந்தக் காலத்தில் நம்மிடையே பேசப்பட்ட ஹாஷ்ய நாடகங்கள் கலைஞர்களையும் இனம் காண வைத்தன.

புளுகர் பொன்னையா, புளுகர் பொன்னம்பலம், அடங்காப்பிடாரி, வெளிக்கிடடி விசுவமடுவுக்கு, இண்டைக்குச் சமைக்காதே, சந்தியில் நில்லாதே, அண்ணை றைட் என அந்தக் காலத்து நகைச் சுவை நாடகங்களை தந்திருந்த நமது கலைஞர்கள் சில சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் சொல்லி வந்துள்ளதை மறுக்கமுடியாது.

அதே போல் தான் இலங்கை வானொலியில் சுமார் ஐந்து வருடங்கள் கமத்தொழில் திணைக்களத்தாரின் அனுசரணையுடன் ஒலிபரப்பப் பட்ட முகத்தார் வீட்டில் நாடகம் மூலம் கமத்தொழில் சார்ந்த விஷயங்களை சொல்லி பாமர மக்களும் தெரிந்து கொள்ள வைத்தார்.

அதுவே பின்னாளில் அவருடன் ஒட்டிக்கொண்டு நமக்கு முன் முகத்தார் என்று அறியப்பட்டார். உண்மையில் சாதனையாளர் தான்.

தன் குரல் வளத்துடன், கூடவே திடகாத்திரமான நடையுடன் பார்ப்பவரை ஒரு பண்ணையார் அல்லது பொலிஸ்காரன் என்றே எண்ணத்தோன்றும் . அதனால் தான் மிடுக்கான அவரை 'பாசச்சுமை' நாடகத்தில் பலரையும் 'அப்லாஷ்' வாங்க வைத்தது எனலாம்.

சில வருடங்களுக்கு முன் மணிமேகலை பிரசுரத்தாரின் நூல் அறிமுக விழாவின் போதும், அதற்கு முதல் நாள் 'அமரர்'டாக்டர். இந்திரகுமார் அவர்களின் இரவு விருந்துபசாரத்தின் போதும் அவருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. பாரதியாரை நேரில் பார்த்தது போல் இருந்தது.அவரை அறிமுகப் படுத்திய விதமே அலாதியானது. நகைச் சுவையுடன் பழைய நாடக அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்வாகவே அமைந்திருந்தது.

தான் பார்த்த உத்தியோகம், நாடக அறிமுகம் எல்லாம் சொல்லி தன்னுடன் நம்மையும் ஒன்றிப் போக வைத்தது மறக்க முடியாது.

வாடைக்காற்றின் மூலம் துணை நடிகருக்கான விருது பற்றி பெருமையாகச் சொன்ன போது 'கொடுத்துவைத்தவர்' என்று அனைவரும் சொல்லிக் கொண்டது ஞாபகத்தில் இருக்கிறது.

அவர் நடிக்கத் தொடங்கிய காலப் பகுதி சிரமமானது தான். கிராமத்தில் எவ்வளவு படித்தவர்கள் இருந்தாலும் சமூகம் ஏற்றுக் கொள்ள பழகவில்லை. ஆனாலும் படிப்பில் அதி சிரத்தையுடன் இருந்து உத்தியோகம் பார்க்க வந்த பின்பு தான் சமுகத்தின் அங்கிகாரம் வந்திருக்க வேண்டும்.அவருக்குப் பின்னாளில் வாய்த்த நண்பர்கள் அனேகம்.

வரணியூரான், கே.எஸ்.பாலச்சந்திரன், சிவதாசன்(கமலாலயம்), வேலனையூர்.வீரசிங்கம்(பிரவுண்சன் கோப்பி), ராமதாஸ், பி.ஏச்.அப்துஹமீட்,  பி.விக்னேஸ்வரன், மதியழகன், விமல்.சொக்கநாதன், ராஜகோபால் என தொடங்கி வண்ணை தெய்வம், இரா.குணபாலன் வரை பலரிடம் நட்பு கொள்ள வைத்துள்ளதை பார்க்க முடிந்தது. அவர் கால்த்தில் நாம் வாழ்ந்ததாக பெருமை கொள்ள வைக்கிறது.

அவரின் நாடக பிரதியாக்கத்திற்கு 'முகத்தார் வீடு' நல்ல உதாரணம்.கலைஞர்களை ஒருங்கிணைத்து நடிப்பும் சொல்லிக் கொடுத்து மேடையேற்றுவது என்றாலே எத்தனை சிரமமானது என்பதை அறிவேன்.அத்தனை சிரமங்களையும் தாங்கி இன்றும் பேரோடு வாழமுடிகிறதென்றால் கலைத் தாயின் அருட் கொடை தான்.

பாக்யம் செய்தவர் தான். அனுபவம் தந்த பாடங்கள் அவரை கலைஞராக மிளிர வைத்தது .அவருக்காகவே தரப்பட்ட 'கலை முரசு' 'கலைப்பணிச்செல்வர்' 'கலைவேள்' 'கலைப் பூபதி' 'ஈழவிழி' கலைமாமணி' பட்டங்கள் தாங்களாகவே பெருமையை தட்டிக் கொண்டன எனலாம்.

பிரான்ஸ் அவருக்கு மேலும் வரப்பிரசாதமாக அமைந்தது.ஏனெனில் அதிகமான ஈழத்துக் கலைஞர்களும் வாழுமிடமாக ஆகியது.ஈழத்து நாடக – திரைக்கலைஞர் .திரு.ஏ.இரகுநாதன், திரு.அருமைநாயகம்,'அப்புக்குட்டி' ராஜகோபால், எம்.ஏ.குலசீலநாதன், தயாநிதி, இரா.குணபாலன், வண்ணைதெய்வம், இன்னும் பலர்.

தணியாத தாகம் எப்படி எங்களை குடும்பமாக உட்காரவைத்து அழவைத்ததோ, ஒரு வீடு கோவிலாகிறது எப்படி நமக்கு குணசித்திரநடிகர்களை(பி.ஏச்.அப்துல்ஹமீட், ஆமீனா பேகம் பாறூக்)அறிமுகப் படுத்தியதோ முகத்தார்வீடும் எங்களை வானொலி முன்னால் உட்கார வைத்ததை இன்றும் நினைக்கத் தோன்றுகிறது.புலம் பெயர் உலகில் எத்தனைதான் வானொலிகள் வந்தாலும் அந்த நாளின் இலங்கை வானொலி கிடைத்தது வரப்பிரசாதம் தான்.

கலைஞர்களின் ஆத்மார்த்த அர்ப்பணிப்பு இருந்தது. அப்படித்தான் ஜேசுரத்தினம் வளர்க்கப்பட்டார் .கடமை தவறாதவர். சக கலைஞர்களை நேசித்தவர். ஒழுக்கம் பேணியவர் என நண்பர்கள் சொல்வார்கள். எனக்குள்ள வருத்தம் இதுதான். இத்தனை அனுபவம் கொண்ட கலைஞன் பல நூல்களை தந்திருக்க வேண்டும். ஈழத்து நாடக வரலாற்றுப் பதிவாக இருந்திருக்கும். ஒரு நூலுடன் (முகத்தார் வீட்டுப் பொங்கல்-நாடகம்-1999) நின்றது ஏமாற்றமே! நமது கலைஞர்கள் அவரின் தேடல்களை தொகுத்து தருவரெனின் அடுத்த தலைமுறை எழுதப்போகும் ஈழத்து சரித்திரத்திற்கு அமைவாக இருக்கும்.

இலங்கை முதல் உலகின் எல்லாப் பாகங்களிலும் வாழும் ஈழத்துக் கலைஞர்களுக்குத் தெரியாதவராக முகத்தார் இருந்திருக்க வாய்ப்பில்லை.

ஏமாளிகள், கோமாளிகள் என திரைப்படங்களில் நடித்திருந்தாலும் வாடைக்காற்று படமே பலருக்கு வியப்பைத் தந்தும், பாராட்டையும் தந்த ஈழத்து திரைப்படமாகும்.

பத்திரிகைகளின் ஏகோபித்த பாராட்டையும் பெற்ற திரைப்படமாகும்.அதிக புள்ளிகளை(64) பெற்ற கதாபாத்திரம் பொன்னுக்கிழவர் ஆகும். திரை அனுபவம் வித்தியாசமானது தான்.அதை திறம் படச் செய்தவர்.
மேடையில் கூடப் பிரகாசித்தார்.

நாடகம் மீதான தணியாத இவரின் தாகம் அளப்பரியது.பலரையும் ஒருங்கிணைத்து இவரும் நடித்த 'பாசச் சுமை(பிலஹரியின் கதை) அப்போதே இலங்கையின் பலபாகங்களிலும் மேடையேறியதுடன்இயாழ்ப்பாணத்துத் தமிழை ஹாஸ்யத்துக்கு மாத்திரமின்றி சிறந்த குணசித்திர நடிப்புக்கும் பயன்படுத்தியது பாராட்டத்தக்கது.அங்கும் மிளிர்ந்தார்.

தேசத்தின் மீதும் தேசியத்தின் மீதும் பற்றுக்கொண்டிருந்தார்.அவரின் அந்தப் பற்றுத்தான் கார்த்திகை
27ஐ காலம் தேர்ந்தெடுத்தது.

ஆம்.!
2010 கார்த்திகை 27உம் தன் அசைவை நிறுத்திக்கொண்டது. இவரின் குடும்பத்தாருடன் நாமும் அஞ்சலிப்போம்!!.

 

mullaiamuthan_03@hotmail.co.uk