கண்களால்...காதல் கண்களால்...!

(பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா, அவுஸ்திரேலியா)

-குறள் காட்டும் காதலர் பார்வை-

உலகெங்கும் இப்போது காதலர்தினம் என்று ஒருநாள் ஆண்டுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகின்றது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை காதல் என்பது புதியதொன்றல்ல. இன்று நேற்று வழக்கத்தில் ஏற்பட்டதல்லை. காதலும் வீரமும் பண்டைத்தமிழ் மக்களின் பண்பாடாகவே இருந்திருக்கின்றன. கருத்தொருமித்த காதலர்கள் சேர்ந்து வாழும் வாழ்க்கைமுறை வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்தே தமிழ் மக்களிடையே நிலவி வந்திருக்கின்றது. சங்கத்தமிழ் இலக்கியங்கள் அதற்குச் சான்றாக உள்ளன. வாழ்க்கை நெறி முறைகளை வகுத்துரைத்து உலகத்தோர் அனைவருக்கும் வழிகாட்டும் திருக்குறளும்கூட, முப்பாலில் ஒருபாலான காமத்துப்பாலைக் காதல் வாழ்விற்குக் காணிக்கையாக்குகின்றது. ஒப்பற்ற நூலாகத் திகழும் திருக்குறள் படம்பிடித்துக்காட்டுகின்ற காதல் உணர்வுகளில் காதலர்களின் கண்பார்வைபற்றிச் சில குறள்கள் தருகின்ற சித்திரங்களை இக்கட்டுரையில் இரசிப்போம்.

------ ------ ------

ஒருவனுக்கும் ஒருத்திக்கும் காதல் கனிந்துவிட்டது. ஒருவர் மனதை ஒருவர் அறிந்துகொண்டார்கள். இந்தநிலையில் பலர் கூடியுள்ள இடத்திலே காண நேரம்போது, அந்தக் காதலர்கள் நடந்துகொள்ளும் விதம் மிகவும் விசித்திரமானது. ஆனால் அவர்களுக்கு அது இன்பமயமானது. அவன் அவளுக்குத் தெரியாமல் அவளைப் பார்ப்பான். ஓளித்திருந்து நோக்குவான். அவளும் அப்படித்தான். அவனுக்குத் தெரியாமல் அவனைப் பார்ப்பாள். நெஞ்சிலே ஓர் அச்சம் நிலவும். ஆனாலும், ஆசை அந்த அச்சத்தை வருடும். இவ்வாறு களவாகப்பார்ப்பதிலிருந்து அந்தக் காதலைக் குறைவாக நினைத்துவிடக்கூடாது. அதுதான் நிறைவான காதலுக்க அடையாளம். இதனை வள்ளுவர் எப்படிச்சொல்கிறார் தெரியுமா?


கண்களவுகொள்ளும் சிறுநோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று பெரிது
(1092)

நான் அவளைப்பாராதபோது அவள் திருட்டுத்தனமாக என்னைப் பார்க்கிறாள். அவளின் அந்தப்பார்வை, எனது காதலை அவள் அரைகுறையாக ஏற்றமைக்கான அறிகுறியல்ல, முழுமையாக ஏற்றமைக்கான அறிகுறியாகும் என்பது இதன் கருத்து.

கண்களவு கொள்ளும் என்றால் கண்கள் களவு செய்கின்ற என்பது பொருள். அவளது கண்கள் திருட்டுத்தனம் புரிகின்றன. திருடுவது என்றால் என்ன? உடையவருக்குத் தெரியாமல் ஒருவரது உடைமையைக் கவர்வதுதானே?. இங்கே அவளது கண்கள் அவனுக்கும் தெரியாமல் அவனைப் பார்க்கின்றன. அதனால் கண்கள் திருடுவதாக எவ்வளவு இலக்கிய நயத்துடன் சொல்லியிருக்கிறார் வள்ளுவப் பெருந்தகை! கள்ளப்பார்வை பார்த்ததாகக் காதலர்கள் ஒருவரையொருவர் சுட்டிச்சொல்லி இன்புறுவது காதல்வாழ்வில் பொதுவானது.

இதற்கு அடுத்த நிலை சிறிது வித்தியாசமானது. அவன் பார்த்தாலும் பார்க்கட்டும், ஆனாலும் பார்க்கக்கூடாது என்ற நிலை. அதனால் அவன் அவளைப் பார்க்கும்போதெல்லாம் குனிந்த தலை நிமிராது அவள் தரையைப் பார்த்துக்கொண்டு நிற்பாள். அவன் பாராதபோது அவனைப் பார்க்கிறாள். தான் பார்ப்பதை அவன் கண்டுகொள்ளக்கூடிய கணத்தில், சட்டென்று தன் பார்வையை விலக்கி மீண்டும் தரையைப் பார்க்கிறாள். இத்தகைய இரம்மியமான உணர்வுகளில் நீந்தித் திளைக்கும் காதலர்களின் உள்ளக்கிடக்கை பற்றி, ஒரு காதலன் சொல்வதுபோல வள்ளுவர் இப்படிச் சொல்கிறார்.

யான் நோக்கும் காலை நிலன் நோக்கும், நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்
(1094)

நான் அவளை உற்றுப் பார்க்கும்போதெல்லாம் அவள் நிலத்தைப் பார்த்துக்கொண்டு நிற்பாள். நேருக்கு நேர் என்னைப் பார்க்கவே மாட்டாள். ஆனால் நான் அவளை உற்றுப்பார்க்காதபோது, அவள் என்னை முழுமையாகப் பார்ப்பாள். இரசிப்பாள். புன்முறுவல் செய்வாள் என்பது இந்தக் குறளின் கருத்து.

நான் அவளைப் பார்க்கும்போதெல்லாம் அவள் நிலத்தைப்பார்த்துக்கொண்டு நிற்பாள். நேருக்கு நேர் என்னைப் பார்க்கவே மாட்டாள். ஆனால் நான் அவளை உற்றுப்பார்க்காதபோது, அவள் என்னை முழுமையாகப் பார்ப்பாள். இரசிப்பாள். புன்முறுவல் செய்வாள் என்பது கருத்து. அதுசரி, ஒருவன் ஒருத்தியைப் பார்க்காத போது அவள், அவனைப்பார்த்ததும், இரசித்ததும், சிரித்ததும் அவனுக்கு எப்படித்தெரிந்தது? அங்குதான் பொய்யாமொழிப் புலவரின் புலமைத்திறனை நாம் கண்டு வியந்து இன்புறுகிறோம் பார்த்தல் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. 'நோக்குதல்' என்றே குறிப்பிடுகிறார். நோக்குதல் என்றால் உற்றுப்பார்த்தல் என்று பொருள். நோக்காக்கால் என்றால் உற்றுப்பார்க்காத வேளைகளில் என்பது பொருள். அதாவது பார்க்காததுபோலப் பார்த்தவேளைகளில் என்று சொல்லாம். ஆகவே, அவளை அவன் பார்ப்பதை அவள் காண்கின்றபோது தலைகவிழ்ந்து நிலத்தைப் பார்க்கிறாள். அவள் காணாதவகையில் அவன் பாராமல் பார்க்கும்போது, அவள் பார்க்கிறாள், மெல்லச் சிரிக்கிறாள் என்று நாம் விரிவான பொருள்கொள்ளல்வேண்டும்.

இதைத்தான் அடுத்த குறளிலே வள்ளுவர் இன்னும் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.


குறிக்கொண்டு நோக்காமை அல்லால், ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
(1095)

நேருக்கு நேர் என்னை முழுமையாகப் பார்க்காமல், கடைக்கண்ணால் என்னைப் பார்த்துத் தனக்குள் சிரித்துக்கொள்வாள் என்பது இந்தக் குறளின் நேரடிக் கருத்து.

இங்கே அவள் பார்ப்பதை அவன் பார்க்கின்றான் என்பது அவளுக்குத் தெரியும். அவ்வாறு அவன் தன்னைப் பார்க்கவேண்டும் என்பதுதான் அவளது ஆசை. ஆனால் அவன் பார்க்கும்போது, முழுமையாக அவனை நிமிர்ந்துபார்க்க முடியாதவாறு ஆசைக்கு அவளது நாணம் தடைபோடுகிறது. அதனால், ஓரக்கண்ணால் பார்த்து, திருப்தியடைந்து, உள்ளம் மகிழ்கின்றாள். அப்போது ஆசை நாணத்தை ஏமாற்றி விடுகிறது. பொங்கியெழும் காதல் உணர்விலே அங்கமெல்லாம் பூரித்து விடுகின்றது. அவனைப் பார்ப்பதிலே அவளுக்கு இன்பம். அதேவேளை நான் தன்னைப் பார்க்கின்றேனா என்பதை உறுதிசெய்துகொள்வதிலே இரட்டிப்பு இன்பம். பார்ப்பது என்னவோ ஓரக்கண்ணால்தான். ஆனால் அவளது எண்ணம் முழுவதிலுமே அவனே நிறைந்திருப்பான். அதைத்தான் 'நகும்' என்ற சொல் உணர்த்திநிற்கிறது.

------ ------ ------

அவனும் அவளும் கருத்தொருமித்த காதலர்கள். யாரும் இல்லாத தனிமையிலே இருவரும் நேரம் போவது தெரியாமல் கதைத்துக்கொண்டிருப்பார்கள். கையோடு கைகோர்த்துக் களித்திருப்பார்கள். மெய்யோடு மெய் அணைத்து இன்புறுவார்கள்.

ஆனால், பொது இடங்களில் சந்திக்க நேரும்போதெல்லாம், ஒருவரையொருவர் அறியாதவர்போல நடந்துகொள்வார்கள். முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள்போல முகம்பார்க்காது இருப்பார்கள். எங்கோ பார்ப்பதுபோலப் பார்த்து ஒருவர் முகத்தை மற்றவர் காணாததுபோல ஒருகணம் காண்பார்கள். மற்றவர்களுக்குத் தெரியாமல் கடைக்கண்ணால் கவனிப்பார்கள். இருவரின் கண்களும் நேருக்குநேர் சந்தித்துவிட்டால் எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் இருப்பார்கள். அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் சந்திக்கும்போது இயல்பாகச் சிந்துகின்ற புன்னகைகூடப் பொது இடங்களில் சந்திக்கும்போது இவர்களிடம் பிறக்காது.

அவளின் நண்பிகளோடு அவன் பேசுவான். பகிடிகள் விடுவான். அவர்களோடு நிற்கும் அவளோடு மட்டும் பேசவே மாட்டான். அதைப்போலவே, அவனின் நண்பர்களோடு அவள் சர்வசாதாரணமாகக் கதைப்பாள். சிரிப்பாள். அவர்களோடு நின்றுகொண்டிருக்கும் அவனைக் கண்டுகொள்ளவே மாட்டாள்.

ஊரிலே கோயில் திருவிழா. ஊர்மக்கள் எல்லாம் அங்கே கூடியிருப்பார்கள். தன்பெற்றோருடன் அவ்வது உறவினர்களுடன் அவளும் அங்கே ஓரிடத்தில் அமர்ந்திருப்பாள். அவன் அங்கே வரமாட்டானா, அவனைக் காணமாட்டோமா என்று அவள் மனம் ஏங்கும். யாருடன் எதைக் கதைத்துக்கொண்டிருந்தாலும், அதிலெல்லாம் அவளது முழுக்கவனம் இராது. செவிகள் கேட்கும், வாய் கதைக்கும். அவளது கண்கள் மட்டும் அங்கும் இங்கும் அவனைத் தேடிக்கொண்டேயிருக்கும். ஆனால், அவன் வரும்போது, அவனைக் கண்டவுடன் அவளது நெஞ்சிலே இனம் புரியாததோர் உணர்வு சட்டென்று எழும். ஒருவித பயம் வரும். அச்சமும், மகிழ்ச்சியும் கலந்த அந்த உணர்வை என்னென்று சொல்வது? அவனோ அவளை எங்கே எங்கே என்று கோயில் வீதிகளெல்லாம் தேடித் தேடி அலைவான். இறுதியில் கண்டபோது அவளைக் காணாதவன் போலவும், அதேவேளை அவள் தன்னைக் காணவேண்டும் என்று அதற்கு வசதியாக அவளின் பார்வைக்குள் படக்கூடியவிதமாகவும் நடந்து செல்வான். அல்லது இசைவான ஓரிடத்தில் அமர்ந்து கொள்வான். இரவரும் மற்றவர்களின் பார்வைக்குத் தப்பிக்கொண்டு, ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வார்கள். அந்தப்பார்வைகூட ஓர் அன்னியப் பார்வையாகவே இருக்கும். ஆனால், உள்ளங்களில் அன்னியோன்யம் நிறைந்திருக்கும். இதயங்கள் இடம்மாறிக் குளிர்ந்திருக்கும்.

ஆம்! அதுதான் காதல். அதுதான் காதலர்களுக்கிடையேயான நளினமான உறவு. நம்மிடையே பலர் அந்தச் சுகந்தமான இன்பத்தை அனுபவித்திருப்போம். அந்தக் காதல்கண்ணாம்பூச்சி விளையாட்டிலே களித்திருப்போம். இதனை, இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் மிகவும் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் என்றால், அந்த வள்ளுவப் பெருந்தகையின் பெருமையைப் பேசுதற்கு வார்த்தைகள் ஏது? பண்டைத்தமிழ் மக்களின் வாழ்க்கை முறையில் காதலுக்கு அத்தகைய முக்கியமான இடம் இருந்திருக்கிறது என்பதாலும், காதல் ஒழுக்கம் அவர்களது பண்பாடாகவே இருந்திருக்கிறது என்பதாலும்தான் அதனையெல்லாம், கண்ணாரக் கண்டும், காதாரக்கேட்டும், தானாக அனுபவித்து உணர்ந்தும் வள்ளுவர் வாய்மொழிந்திருக்கிறார்.


ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள
(1099)

பொது இடங்களிலே ஒருவரையொருவர் காணநேரும்போது முன்பின் அறிமுகமற்ற அயலாரைப் பார்ப்பதுபோல் நடந்துகொள்வது உண்மையான காதலர்களிடமே உள்ள குணமாகும் என்பது இந்தக் குறளின் நேரடிக் கருத்து.
இரண்டே வரிகளில் காதலர்களின் உணர்வலைகளையும், ஒழுக்க முறையினையும் தௌ;ளத் தெளிவாக இந்தக்குறளில் வள்ளுவப் பெருந்தகை காட்டியிருப்பதை அறியும்போது பண்டைத்தமிழ் மக்களின் பண்பாடுமிக்க காதல் வாழ்வு நம் மனதுள் புகுந்து பரவசமூட்டுகின்றது.




srisuppiah@hotmail.com