மனிதர்களின் கோர முகம் - தாண்டவமாடும் - ஆடுகளம்

 

வித்யாசாகர

 

ன் தமிழ் படங்களிலிருந்து சிலர் தள்ளிவைத்திருந்த மக்களை; தெருவை; வாழ்தலை எடுத்து திரை படமெல்லாம் தூவிய வெற்றி மாறனின் வெற்றிப்படம் 'ஆடுகளம்!
 

வியக்கும்  பட்ஜட்டோ மயக்கும் ஆடம்பரமோ இன்றி என் சாதாரண மக்களின் கதையை திரையில் இயக்கி, காலத்திற்கும் அவர்களின் வாழ்க்கையை பதிந்துவிட்ட படம். ஒரு திரைப்படத்திற்காக நாலு பேர் வாழ்ந்து சென்ற படம்; ஆடுகளம்.

மனிதனின் தானெனும் செருக்கை திரை சுருள்களில் காட்டி; ஒட்ட நறுக்க வாளெடுத்த கதாப்பாத்திரங்களுக்கு; மறக்க முடியாத நினைவையே பரிசாக பெற்றுக் கொள்ள 'அருகதை 'அதிகமுள்ள படம் ஆடுகளம்!
 

ஒரு சின்ன பொறாமைநெருப்பில் ஊரெரியும் கதை, கதைக்கு நடுவே இதயத்தை உடைத்துக் கொண்டு திரியும் மனிதர்கள், மனிதனின் மனசுக்கும் புத்திக்கும் வரும் போட்டியில் சிதைக்கப் படுகின்ற ஒரு நல்லவனின் வல்லவனின் கதையை இதயம் நடுங்க பார்த்துவிட்டு, கனத்த மனத்தோடு வெளியேற செய்கிறதிந்த; தனுஷின்; ஆடுகளம்!
 

யாத்தே யாத்தே பாடலை முனுமுனுக்கும்போதே எதிரே சுற்றும் உலகம் சற்று மறந்துதான் போகிறதெனலாம். பின் வரும் 'ஒத்த சொல்லால..' எனும் மற்றுமொரு ஒற்றைப் பாடல் லுங்கியின் மீதே ஒரு காதலை ஏற்படுத்திவிடும் போல்; அப்படி 'நம் மனதை எல்லாம் வாரி தன் லுங்கியின் மேல் போட்டுக் கொண்டு ஆடுகிறார் பாருங்கள் தனுஷ்; அப்படி தாங்க ஆடுகிறார். கதாநாயகத்தனம் எனும் கட்டளைகளை யெல்லாம் மீறி; யதார்த்தத்தின் கிரீடத்தை அணிவித்துக் கொள்கிறதிந்த ஆடுகளம்!
 

முறுக்கிய மீசையின் கம்பீரத்தையும், தன்மானத்தின் வலிமையையும், குரு துரோகத்தின் அவுமானத்தையும் மரணிக்கும் நடிப்பு வரை தன் முகத்தினால் காட்டி, பார்வையினால் நம்மை மிரட்டியும் ரசிக்க வைத்தும் நடித்து; இன்னும் பல படங்கள் தன்னை தேடிவருமாறு ஈர்த்துக் கொண்ட ஐயா கவிஞர் ...ஜெயபாலனுக்கு திரை உலகம் தந்த சிவப்புக் கம்பள வரவேற்பிந்த ஆடுகளம்!

 

இப்படத்தில் கதாநாயகன் யார்? பேட்டை காரனா? துரையா? கருப்புவா? கருப்பின் நண்பனா ? அல்லது தன் நடத்தைகளில் கோபத்தில் சுய கௌரவத்தில் அம்மாவின் ஒற்றை ஆசையை தீர்த்துக் கொள்ள கண்ணியமாக போராட துடித்து கடைசியில் கிடைத்த தோல்வியை கூட நிராகரிக்காது ஏற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் துரைசாமியா? என்று படம் பார்க்கும் மனதில் வன்மம் ஒழிக்கும் வகையில் வில்லன்களை கூட; இயன்றவரை நல்லவர்களாகக் காட்ட முயன்ற திரைப்படம்; ஆடுகளம்!
 

நெற்றியில் முத்தம் கேட்கும் ரக கதாநாயகி, கை பிடித்துவிட்டாலோ, உன்னோடு வந்து சுற்றி விட்டாலோ; நாமொன்றும் காதலர்கள் அல்ல என்று சொல்லிவிட்டு, பேட்டை காரன் 'கருப்புவான தனுஷைப் பற்றி தவறாக சொல்கையில், ஒரு சின்ன சந்தேகத்தை கூட அவன் மீது கொள்ளாமல், ஏனைய படத்தின் உத்தி போல் பேட்டை காரனின் மனைவிதான் அழைத்து கதாநாயகியிடம் தொலைபேசியில் கூறிவிட்டாள் என்று கடைசியில் சின்னதாக ஒரு பூ சுற்றாமல், தான் விரும்பியவனின் மேல் இரும்புப்பிடியென நம்பிக்கையை நிரப்பி வைத்திருக்கும் ஓர் அழகு ஓவியத்தை இங்குமங்குமாய் நகர வைத்து, பேச வைத்து, சிரிக்கவைத்து, எம் தலைமீதேறிப் போகத்துடிக்கும் அந்நிய மொழியை கூட; அந்த பெண் பேசுகையில் ரசிக்க வைத்த படம்; ஆடுகளம்!

 

அத்தாச்சியாக வந்த, பேட்டைக்காரனின் மனைவி, மண்ணை வாரி அவர் முகத்தில் இரைத்துவிட்டு ஓடுகையில், நாம் பார்க்காத கண்ணகி கண்ணெதிரே வந்து நிற்கிறாள். அவள் வீட்டைவிட்டே சென்றுவிடுகையில், பேட்டைக்காரன் இருண்டுப்  போன அவர் வீட்டிற்கு வருகிறார், வந்துநின்று அந்த வீட்டை சுற்றிச் சுற்றி பார்க்கிறார். யாருமில்லாத அந்த வீடு தனிமையின் அச்சத்தை அள்ளி அவர் முகத்தின் மீது தெளிக்கிறது. இருண்டவீட்டின் படிக்கட்டுகளின் மேல் அந்த நள்ளிரவில் வந்து நின்று, அமர்ந்து, தனிமையில் நடமாடும் அவரையும், அந்த வீட்டையும் பார்க்கையில் 'ஐயோ மனிதன் இப்படி வாழவே கூடாதடா, வஞ்சம் நிறைந்த இவ் உயிர் குடிக்கும் பிழைப்பு யாருக்கும் வேண்டாமடா' என்று இருட்டிற்குள் அந்த காட்சியை படமெடுத்து நம் இதயத்தில் வெளிச்சம் புகட்டுகிறதிந்த ஆடுகளம்!
 

துரை பற்றி நிறைய சொல்லலாம். துரை மாதிரி நமக்கொரு அண்ணன் இருக்க கூடாதா? துரை மாதிரி ஒரு நண்பன் இருக்க கூடாதா? துரை மாதிரி ஒரு தொண்டன் இருக்கக் கூடாதா? துரை மாதிரி ஒரு கம்பீரமாக, மனசு சுத்தமாக, தெளிவு நிறைந்தவராக நாம் வாழ்ந்திடக் கூடாதா என்று நம்மையும், அவர் வாழ்க்கையின் மேல் ஆசைப் பட வைக்கும் கதாபாத்திரம் துறையின் கதாபாத்திரம்.
 

மூன்று லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிவந்து தனுஷிடம் கொடுத்துவிட்டு 'கருப்பு வாழ்கை எல்லோருக்கும் இப்படி ஒரு நல்ல வாய்ப்பினை தராதுடா, பயன்படுத்திக் கொள்' என்று ஞான போதனை செய்துவிட்டு; அதேநேரம் நம் மனத்திலும் பண ஆசையை மனதிலிருந்து கொத்தாக அறுத்துப் போடத் தவிக்கிறதிந்த; ஆடுகளம்!

பாட்டாக கதையாக வசனமாக கோபமாக காதலாக கூட வாழ்ந்திருக்கிறார் தனுஷ். அண்ணே அண்ணே அண்ணே என்று உயிர் விடும் அன்பில் பேட்டைகாரன் மீது நம்மையே மதிப்புக் கொள்ள செய்துவிடுகிறார். அம்மாவை பற்றி நினைத்து உருகி நிற்கையில், இரவு மூன்று மணிக்கு வந்தாலும் சோறு போட்டு அமர்ந்திருக்கும், இனி எப்போழுதிற்குமாய் இல்லாமல் போயிடுச்சே' என்று அழும் அழையில், பெற்றோரின் அருமை தெரியாது திரிபவர்களின் புத்தியில் கண்ணீரால் சுடுகிறது தனுஷின் நடிப்பு. இரண்டு மூன்று முதியோர் இல்லத்தையாவது இழுத்து மூட மானசீகமாய் சொல்கிறது ஆடுகளம்!
 

'அப்பன்றவன் படுத்துட்டு எழுந்து போறவன் இல்லை,கைபிடித்து இது தான் உலகம்னு ஒவ்வொரு அசைவையும் காட்டுபவன் என்று சொல்லும் போது' யாரது வசனம் எழுதியதோ என்று ஆச்சர்யத்தில் புருவத்தை உயரவைக்கிறது படம்!
 

அனுராதா ஸ்ரீராம் பாடும், தன்னனானே நானே தனனானா என்று துவங்கி  'அய்யய்யோ நெஞ்சு அலையுதடி' என்று வரும் பாட்டுக்கு 'உயிரெல்லாம் சேர்ந்து பாட்டோடு அசைகிறது. அதில் காட்டும் சாதாரண மக்களின் வாழ்க்கையும் அந்த பெண்ணின் சிரிப்பும் மனதில் ஆங்காங்கே பச்  பச்சென்று ஒட்டிக் கொண்டு 'குழம்பித் தவிக்குதடி என் மனசு' என்று நம்மையும் சேர்த்தே புலம்ப வைக்கிறது.
 

அதிலும், நடு இரவில் வண்டி வாங்கிப் போவதும், புகைப்படம் எடுப்பதும், துரை நள்ளிரவு தூக்கம் கூட பார்க்காமல் 'கருப்பு வண்டி கேட்டதும்  கொண்டுவந்து கொடுத்துவிட்டு 'பார்த்து போ' என்று சொல்லியனுப்பும் பக்குவமும், நம்மூரின் நிறைய அண்ணன்களுக்கு இருக்குமானால், நம் மண்ணில் காதலால் தற்கொலை செய்துக் கொண்டு இறக்கும் நிறைய காதலர்களை காப்பாற்றி விடலாம். அதற்கும், பின்னாலேயே வந்து, ஒண்ணா சுற்றுவதாலோ கைபிடித்துவிட்டாலோ காதலாகி விடாதென்று சொல்லி சிரிக்கும் அந்த பெண்ணின் பக்குவமும் நம் மண்ணின் காதலர்களுக்கும் வேண்டும் என்று' பாடம் சொல்கிறார் போல் வெற்றி முருகன்.
 

கடைசிவரை இருப்பேன் என்று சொன்னது போல் கடைசிவரை உடனிருந்து, மாடிவீட்டு பெண் யார் வீட்டு பெண்ணானாலும் காதலி என்றால் இப்படித் தான் இருப்பாள், இருக்கனும் என்பது போல் - அவன் போன இடமெல்லாம் போய், மனதார நம்மை நேசிக்க வைத்து விடுகிற கதாநாயகி பாத்திரத்திலிருந்து; அம்மா, அத்தாச்சி, நண்பன், பேட்டைக்காரன், இன்ஸ்பெக்டர் துரைசாமி மற்றும் பெங்களூர் காரன்வரை ஆட்களை கதாப்பாத்திரத்திற்கு ஒட்டியே தேர்ந்தெடுத்த விதமும்; வெற்றிமாறனை ஒரு சிறந்த இயக்குனர் என்று மெச்சிக் கொள்ளவே செய்கிறதிந்த ஆடுகளம்!

 

கோழிச் சண்டை விடும் ஒரு ஊரின் ஒருசில மனிதர்களின் கதையாகத் தான் படமே நகர்த்துகிறது. இதில், யாரை புகழ்வது கோழியையா, ஒளிப் பதிவாளரையா, இசை அமைத்தவரையா, சண்டை காட்சி அமைத்தோரையா, கட்டிடக் கலை இயக்குனரையா, வசனம் எழுதியவரையா, நடித்தோரையா, இயக்குனரையா..........., யாரைப் பாராட்டுவது? நான்கைந்து கோழி, பத்திருபது மனிதர்கள், மூன்று நான்கு வீடு, ஒரு சந்தை, சில தெருக்கள், அதோடு ஒரு பெரிய மைதானம் போட்டு இப்படியும் ஒரு படம் எடுக்கலாம் என்று சபாஷ் போடவைக்கிறது ஆடுகளம்!

அந்த அத்தாச்சி நினைவில் இருந்து கொண்டே இருப்பது போல்; காலத்திற்கும் நட்பு பிசகாத அயூப் அண்ணனுக்கு இன்ஸ்பெக்டர் துரைசாமியின் ஆட்கள் மது ஊற்றிக் கொடுத்து அவர்கள் பக்கம் வர கேட்க, அதை அவர் மறுத்து பேட்டைக்காரனின் நட்பு பற்றி பேசுகையில்; ஏழைகளின் வீட்டில் இருந்து வளர்ந்த பெரிய ஆலமரம் போல் நிமிர்ந்து தெரிகிறார் நமக்குள்.
 

முடிவில், பேட்டைக்காரன் என்னதான் தனக்கு துரோகம் செய்தாலும், துறைக்கு பேட்டைக்காரன் மேல் இருக்கும் மதிப்பும் குறையாமல், ஊருக்கு அவரின் சமயோசிதமாக மாறிய இறுகிய கொடூர முகத்தையும் காட்டிக் கொடுக்காமல், தன்னை நம்பி வந்த காதலியையும் கைவிடாமல், நண்பனையும் தன்னோடு இழுத்துக் கொண்டு அலையாமல், மாட்டிவிட்டும் போகாமல்தான் வாழ்ந்த ஊரை, விரும்பிய மண்ணை, தன்  வாழ்க்கையாக வெற்றியாக நினைத்த அத்தனையையும் விட்டுவிட்டு கருப்பு அந்த பெண்ணோடு எங்கோ புதிய உலகம் நோக்கிப் போவதாக படம் முடிகையில், 'மனதில் ஒரு தனிமனிதனின் கதையை இத்தனை பேர் வைத்துக் கூறியதாகவே திரைப்படம் நிறைகிறது. என்றாலும், ஒரு நல்ல மனிதனை, சிலநேரத்து ஒன்றுமே செய்ய இயலாது விதிக்கப் பட்டு விடுகிற சூழ்நிலைகளுக்கு மத்தியில் நின்று வாய்விட்டு அழுத ஒரு மனிதனை, கண்முன்னே காட்டி இதயம் முழுக்க அவரின் வாழ்க்கையை நிரப்பி இது தான் சரியான முடிவென்று தலையாட்ட வைக்கிறது.
 

அயூப் இறந்ததும் அவரை சவப் பெட்டியில் வைத்து கொண்டு செல்கையில் 'சூரா' சொல்லிப் போகும் இஸ்லாமிய உறவுகளின் ஏழ்மை குடிகளின் வாழ்வினை படமாக்கிக்கொண்ட ஒரு புத்தகம் நிறைவடைந்தது போல; ஒரு இலக்கியம் மனதில் பதிந்து போன உணர்வு; இயக்குனரையும் இப்படத்திற்கென உழைத்தவர்களையும் எண்ணிப் பாராட்டவே வைக்கிறது.
 

எப்படியோ எல்லா திரைப்படம் போலவே இப்படமும் முடிந்துப் போகையில், யாருடனோ வாழ்ந்துவிட்டு வெளியே வருவது போல் 'தியேட்டர் விட்டு வெளியே வந்தாலும் கேட்கும் அந்த யாத்தே யாத்தே, அந்த முகங்கள், அவர்களின் பேச்சு என எல்லாமே மனதிற்குள் பாடலாக முனுமுனுக்கப் பட்டு, இப் படத்தில் நடித்த அத்தனைப் பேரையும் மறக்காமல் தனக்குள் பதிவு செய்துக் கொண்டு; அவர்களோடு வாழ்ந்த ஒரு உணர்வை யாரிடமேனும் சொல்லித் தீர்க்க அலையவே செய்கிறது மனசு..

இப்போதைக்கு, நான் சொல்லிவிட்டதாக நிறைந்துக் கொள்கிறேன்!!!!!!!!!!!!

 

 

 

vidhyasagar1976@gmail.com