வருவர் தோழி!
அனலை ஆறு இராசேந்திரம்
தலைவன்
பொருள் தேடுதற்காக தூரதேசம் சென்றிருந்தான். அவன் பிரிவால் தலைவி
மனங்குலைந்தாள். இந்நிலையில் அவளைத் தேற்ற வேண்டிய பொறுப்பு தோழியைச்
சேர்ந்தது. இல்வாழ்வு முட்;டின்றி நடைபெற வேண்டிய பொருளின்
இன்றியமையாமையையும், தலைவன் தலைவிபாற் கொண்டுள்ள காதலின் மிகுதியினையும்
எடுத்துச் சொல்லித் தன் பணியினைச் செய்யும் தோழியின் மொழிகளைக் கேளுங்கள்.
'தோழி! பகைவர்களின் செருக்கினை அழித்தலும், தன்னை நாடி வந்தோர்
துன்பமுறுமிடத்துக் கைகொடுக்கும் ஆளுமையும் வீடே தஞ்சமென்று
வீற்றிருக்கும் ஆடவர்க்கு இல்லையாம் என்றெண்ணி நாணமுற்றவராய், பொருள்
தேடிப் புகழ் பெறும் ஆர்வ முடையரானார் தலைவர்.
கொடிய வில்லையுடைய வேடுவர் விடுத்த அம்புக்கு இரையாகி மாண்டோர் கிடந்த
இடத்தில் மயிரோடு கூடிய தலைகளையுடைய புதைகுழிமேல் கற்குவியல்கள்
கள்ளிமரங்கள் வளரும் களர்நிலத்துப் பாழிடங்கள் தோறும் நிறைந்திருக்கும்.
நினைப்போரை நடுங்கச் செய்து, கடந்திட அரிதான காட்டுவழி நடந்து தலைவர்
போயினர்.
எதிர்த்து வரும் பகைவர் தொடுத்த போரினை வெற்றியுடன் முடித்து, அழிந்துவிடா
நற்புகழையும் வானளவு உயர்ந்த வெண்கொற்றக் குடையினையும் உடையவனான பசும்பூண்
பாண்டியன் புலவர் பாடும் சிறப்புடைய மதுரைமா நகர் போலும் நின்னுடைய
வண்டுகள் ஒலிக்கும் உச்சிப் பூக்கள் விளங்கும் கூந்தலிடத்தே அணைந்து
துயின்றவரான அவர் அந்த இன்ப நினைவில் தோய்ந்து உருகியவராய் விரைந்து
வருவார்.... மனங் குலைந்திடா திருப்பாயாக!'
தலைவியின் சிறப்பை உச்சி குளிருமாறு புனைந்துரைத்து கூடலிற் பெற்ற நலத்தை
மறக்க முடியாதவனாய் தலைவன் அவளிடம் விரைந்து வருவான் என நம்பிக்கையூட்டும்
தோழியின் சிந்தனைத்திறம் பாராட்டற்குரியது. இது அகநானூறு 231ஆம் பாடலைத்
தழுவி எழுதப்பட்ட ஒரு சொல்லோவியமாகும். அப்பாடல் இது.
செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு
உறுமிடத்து உவக்கு முதவி ஆண்மையும்,
இல்இருந்து அமைவோர்க்கு இல்என்று எண்ணி,
நல்இசை வலித்த நாணுடை மனத்தர்
கொடுவில் கானவர் கணைஇடத் தொலைந்தோர்,
படுகளத்து உயர்த்த மயிர்தலைப் பதுக்கைக்
கள்ளிஅம் பறந்தலைக் களர்தொறும் குழீஇ,
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கருங் கடத்திடை
வெஞ்சுரம் இறந்தனர் ஆயினும், நெஞ்சுஉருக
வருவர் - வாழி, தோழி! – பொருவர்
செல்சமம் கடந்த செல்லா நல்இசை,
விசும்புஇவர் வெண்குடை, பசும்பூட் பாண்டியன்
பாடுபெறு சிறப்பின் கூடல் அன்னநின்
ஆடுவண்டு அரற்றும் முச்சித்
தோடுஆர் கூந்தல் மரீஇ யோரே.
- ஈழுத்துப் பூதந்தேவனார்.
analaiaraj@hotmail.com
|