மல்லை தமிழச்சியின் சிறுகதையில் சில தேடல்கள்

ப. இரமேஷ், பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

மிழ் இலக்கியச் சமூகத்தளத்தில் ஏற்கனவே பல கவிஞர்களும் எழுத்தாளர்களும் பயணித்துக் கொண்டிருந்தாலும், தமிழ் இலக்கிய உலகம் புதியவர்களை வரவேற்று, தன்னை மேலும் செழுமைப்படுத்திக் கொண்டுதான் உள்ளது. மல்லை தமிழச்சி அவர்கள் ஒரு பள்ளி ஆசிரியராக இருந்தாலும் தமிழ் மீது அவர் கொண்டிருக்கிறக் காதலின் வெளிப்பாடாகச் சிற்பியின் கவிதை மாமல்லபுரம், விழியில் நனையும் உயிர் என்கிற இரண்டுக் கவிதை நூல்களை எழுதியுள்ளார்.  இந்நூல்கள் இரண்டுமே பலரால் பேசப்பட்ட நூல்களாக விளங்குகிறது. ஒன்பதாம் திசை சிறுகதைத் தொகுப்பின் வாயிலாக, கவிஞராக இருந்த இவர் சிறுகதை எழுத்தாளராக புதிய பரிணாமம் எடுத்திருக்கிறார்.

சமூகத்தின் அடித்தளமாக விளங்கக் கூடியவை மனித உறவுகளே.  அத்தகைய மனித உறவுகளுக்குள் இன்றைக்கு மனிதநேயம் என்பது வெறும் பேச்சு அளவிலேயே உள்ளது என்பதை இவரது பெரும்பாலானச் சிறுகதைகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன.  உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் என்று பாரதி பாடிய அந்த வரிகளைப் பிரகடனப்படுத்தும் விதத்தில் இவரது மேய்ச்சல் நிலம் சிறுகதை உள்ளது.  மேலும் ஒரு பெண்ணின் தாய்மைக்கான ஏக்கத்தையும் வலியையும் வெளிப்படுத்தியுள்ள விதம் மனதை நெகிழ வைக்கிறது.  இன்றைய சமூகத்தில் பணம் ஒன்றே வாழ்க்கையின் அச்சாணியாக விளங்குகிறது.  அதையும் தாண்டி குடும்ப உறவுகளோடுக் கலந்து உறவாடுகிற இன்பம் எத்தனை கோடி கொடுத்தாலும் வராது என்பதை நிலாச்சோறுச் சிறுகதையில் குறிப்பிட்டுள்ளார்.  இது இன்றைய சமூகம் குடும்ப உறவுகளுக்கு அப்பால் அந்நியப்படுத்தப்பட்ட ஒரு எந்திரத்தனமான வாழ்க்கைக்குள் பயணித்துக்கொண்டிருப்பதை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

மேலும் ஏமாறுகிறவன் இருக்கும் வரை ஏமாற்றுகிறவன் இருப்பான் என்று சொல்வதைப் போல கரையேறாத தீவுகள் சிறுகதையில் இன்றையச் சமுதாயத்தின் நிலைப்பாட்டை வட்டார வழக்கில் மிகவும் அழகாக கூறியுள்ள விதம் நம்மை கதைக்குள் பயணிக்க வைக்கிறது.  மதத்தைவிட மனிதர்களை நம்புகிறேன் என்று தன்னுடைய முற்போக்கான மனித நேயச் சிந்தனையை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார் உயில் வாசகத்தில் மேலும் உழைப்பே உயர்வு தரும் என்பதை இவரது வியர்வையின் காவியம் வெளிப்படுத்துகிறது.  அறிவுரை கூறுவதை விட அதை பின்பற்றுவது மிக கடினம் என்பதை நிறமிழக்கும் வானவில் சிறுகதை நமக்கு உணர்த்துகின்றப் போக்கு மிகவும் உருக்கமான மனநிலைக்குள் தள்ளுகிறது.

பொதுவாக இவரது சிறுகதைகள் அனைத்தும் வாழ்வியலை மையமிட்ட தன்னுடைய அனுபவப் பகிர்வாகவே உள்ளன. புனை கதைகளில் உயிரோட்டம் என்பது மிகவும் குறைவாக காணப்படும் ஆனால் இவரது சிறுகதைகள் அத்தனையும் உணர்ச்சி பிழம்பாக நம் இதயத்தில் நிற்கிறது.  ஒரு சிறுகதை என்பது வாசிப்பவனை யோசிக்க வைக்க வேண்டும் அந்தளவுக்கு கதையின் போக்கு அழுத்தமாகவும் உயிரோட்டம் மிக்கவையாகவும் இருக்கவேண்டும் கதைக்குள் வருகின்றப் பாத்திரங்கள் நம்முள் சகஜமான மனிதர்களாக வலம் வர வேண்டும் இத்தகைய இயல்புகள் அனைத்தும் மல்லை தமிழச்சியின் சிறுகதையில் முழுவதுமாக இடம் பெற்றுள்ளன.

சமூகத்தின் மீது அக்கறை கொண்டுள்ள ஒரு சமூகச் சிந்தனையாளராகவும் மனித நேயமிக்கவராகவும் இவர் பரிணமித்திருக்கிறார் என்பது இவரது சிறுகதைகள் நமக்குத் தெளிவுப்படுத்துகின்றன.  அதோடு மட்டுமில்லாமல் முற்போக்குச் சிந்தனையும் இவருள் உள்ளதை நாம் அறியமுடிகிறது.  புதுக்கவிதை, சிறுகதை என்று பரந்துபட்ட இலக்கிய வெளியில் கால்தடம் பதிக்கும் இவரது முயற்சி பெரிதும் பாராட்டத்தக்கது.

 

kavithaxeroxspkoil@gmail.com