தமிழ் ஊடகத்துறையில் பதிவாகும்
அனுபவப்பகிர்வு
லெ.முருகபூபதி
இலங்கையில்
புதினப்பத்திரிகை வளர்ச்சியின் ஊடாக கலை, இலக்கிய வளர்ச்சியும்
மேம்பட்டிருந்தமையால் பல படைப்பாளிகள் சமகாலத்தில்
ஊடகவியலாளர்களாகவும் படைப்பிலக்கியவாதிகளாகவும்
திகழ்ந்திருக்கிறார்கள். முழுமையாக செய்தி ஊடகங்களுக்கும்
மொழிபெயர்ப்புத்துறைக்குள்ளும் சென்ற பலர் படைப்பிலக்கியத்துறையில்
காணாமல்போய்விட்ட துர்ப்பாக்கியங்களும் நிகழ்ந்துள்ளன.
எமது நாட்டில் புதினப்பத்திரிகை மற்றும் சிற்றிதழ்களின் வளர்ச்சியை
ஆராயப்புகும் எவரும் மேற்குறிப்பிட்ட உண்மையைத் தெரிந்துகொள்வது
சுலபமானது. நீண்ட காலமாக இலங்கை தமிழ்ப்பத்திரிகைத்துறைச் சூழலில்
செய்தியாளராகவோ ஆசிரியராகவோ பணியாற்றிய பலரிடமிருந்து நூலுருவில்
படைப்புகளோ அல்லது அவர்களது தொழில்சார்ந்த அனுபவங்களோ வெளியாகவில்லை.
இதனை நான், ஏககாலத்தில் பத்திரிகை ஊடகத்துறையினுள்ளும் இலக்கிய
உலகத்தினுள்ளும் பிரவேசித்த 1970களிலேயே
அவதானித்தேன்.
வீரகேசரியின் ஆசிரியராக அக்காலப்பகுதியில் பணியாற்றிய கே.வி.எஸ்
வாஸ் அவர்களது ஆசிரியத்தலையங்கங்கள் நூலுருவாகாதபோதிலும் அவர் ரஜனி
என்ற புனைபெயரில் பல மர்மநாவல்களை எழுதித்தள்ளியிருக்கிறார். அவர்
ஒரு திகிலூட்டும் கதைசொல்லி. பத்திரிகை உலக ஜாம்பவான் என்றும் இன்று
ஊடகத்துறையிலிருப்பவர்கள் சிலரின் மானசீகக்குரு என்றும்
சொல்லப்படுபவருமான எஸ். டி. சிவநாயகம், சுதந்திரன், வீரகேசரி,
தினபதி, சிந்தாமணி முதலான தமிழ்த்தேசிய ஏடுகளிலும் மெய்கண்டான்
நிறுவனம் வெளியிட்ட இதழ், மற்றும் மாணிக்கம் முதலானவற்றிலும் கௌரவ
ஆசிரியராகப் பணியாற்றியவர். சுதந்திரனில் பல படைப்பாளிகளுக்குச்
சிறந்த களம் கொடுத்தவர். தாம் பணியாற்றிய இதழ்களில் சில
தொடர்களையும் எழுதியவர். பாரதி நூற்றாண்டு காலத்தில் 'நான் கண்ட
பாரதி' என்ற தலைப்பில் நீண்ட தொடரும் எழுதியிருக்கிறார். எனினும்
ஆவணப்படுத்தக்கூடிய குறிப்பிட்ட தொடரைக்கூட அவர் நூலுருவாக்க
முயற்சிக்கவில்லை.
தினகரனில் கைலாசபதி பணியாற்றிய காலத்தை ஒரு பொற்காலம் என்று
சொல்லும் படைப்பிலக்கியவாதிகள் இன்றும் அந்தக்கருத்தை மேடைகளிலும்
தமது எழுத்துக்களிலும் பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள். அவர்
இலக்கிய விமர்சகராகவும் ஈழத்து இலக்கிய செல்நெறியை வகுக்க
முனைந்தவராகவும் மாறியதனால் இலங்கையில் மட்டுமன்றி தமிழகத்திலும்
கவனிப்புக்கும் விவாதத்திற்குமுரியவர் ஆகின்றார். அவரது நூல்கள்
பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இலக்கியத்திறனாய்வாளர்களுக்கும்
உசாத்துணையாகியுள்ளன.
கார்மேகம் வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் மலையக இலக்கிய
வளர்ச்சிக்காக மேற்கொண்ட பணிகள் விதந்து போற்றக்கூடியவை. அவரிடம்
இலங்கை மற்றும் உலகவரலாறு தொடர்பான தேடலிருந்தமையினால் அவரால்
ஈழத்தமிழர் எழுச்சி மற்றும் கண்டி மன்னர்கள் முதலான நூல்களை
எழுதுவதற்கு முடிந்திருக்கிறது. வீரகேசரியின் தோற்றமும்
வளர்ச்சியும் குறித்து சிறு நூலையும் அவர் எழுதியிருக்கிறார்.
தினகரன் பத்திரிகையில் கால்
நூற்றாண்டுக்கும் அதிகமான காலம் பணியாற்றிய சிவகுருநாதன், தமது
பல்கலைக்கழகப்பட்ட ஆய்வினையே பின்னர் நூலாக்கியிருக்கிறார். நான்
அறிந்தவரையில் நீண்ட காலம் செய்தி ஊடகத்துறையிலிருந்த டேவிட் ராஜூ
வீரகேசரியிலும் பின்னாளில் தினக்குரலிலும் சிறுகுறிப்புப் பாணியில்
பதிவுசெய்த பத்தி எழுத்துக்களைத்தான் எழுதிக்கொண்டிருந்தார்.
அவரிடமிருந்தும் நூலுருவில் படைப்புகள் எதுவும் வரவாகவில்லை.
இந்நிலைமைதான் இன்றும் எம்மத்தியில் மதிப்பிற்குரிய ஆசான்களாக
விளங்கும் நடராஜா, சிவநேசச்செல்வன் ஆகியோரிடமும் நீடிக்கிறது.
இவர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் நான் விடுக்கும்
வேண்டுகோளில் 'உங்கள் அனுபவங்களையாவது நூலுருவில் பதிவுசெய்யுங்கள்'
எனக்கேட்பதும் எனக்கு வழக்கமாகியிருக்கிறது.
அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் வீரகேசரியின்
முன்னாள் பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம் தமது சோவியத் பயணக்கதையை
(சிரித்தன செம்மலர்கள்) வீரகேசரி வாரவெளியீட்டில் தொடராக எழுதிய
பின்பு அதனை நூலாக்கினார். வீரகேசரிப் பிரசுரமாக வெளியானது.
1983 கலவரத்தில் உடைமைகளை இழந்து
அகதியாகிய அனுபவத்தை உட்படுத்தி ஆங்கிலத்திலும் ஒரு நூலை
வரவாக்கியிருக்கிறார். நான் உட்பட பல இலக்கியப் படைப்பாளிகளுக்குச்
சிறந்த களமும் வழங்கி வளர்த்துவிட்ட வீரகேசரி வாரவெளியீட்டுக்குப்
பொறுப்பாக இருந்தவரும் 15
ஆண்டுகளுக்கு முன்னர் தினக்குரல் தோன்றுவதற்கு காரணகர்த்தராக
விளங்கியவருமான பொன். ராஜகோபால் பலருக்கு புனைபெயர்களை சூட்டி
மகிழ்ந்தார். ஆனால் தமது முகம் எந்தவொரு இதழ்களிலும்
வெளியாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அவரிடமிருந்தும்
எந்தவொரு படைப்பும் நூலாக வெளியாகவில்லை. சிறுகதைகளைத்
தேர்வுசெய்வதிலும் நாவல் இலக்கியப்போட்டிகளைச் செம்மையாக
நடத்துவதிலும் அவருக்கு நல்ல அனுபவம் இருந்தது.
வீரகேசரி வெளியீடுகளில் குறிப்பிடத்தகுந்த மாத இதழ் கலைக்கேசரி.
இதன் ஆசிரியர் அன்னலட்சுமி ராஜதுரை நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக
ஊடகத்துறையில் பணியாற்றியவர். இவர் இதுவரையில் தமது அனுபவங்களைப்
பதிவுசெய்யாதபோதிலும் சில சிறுகதைத்தொகுப்புகளையும்
குறுநாவல்களையும் வெளியிட்டிருப்பவர்.
யாழ்ப்பாணத்தில் ஈழநாடு ஆசிரியர் சபாரத்தினம் எழுதிய
ஆசிரியத்தலையங்கங்கள் 'ஊரடங்கு வாழ்வு' என்ற தலைப்பில் நூலாகியது.
பிரபல ஊடகவியலாளர் கோபாலரத்தினம் இந்திய அமைதிப்படையின்
பிரவேசக்காலத்தில் தமக்கு நேர்ந்த அனுபவங்களின் பின்புலத்தில் 'ஈழ
மண்ணில் இந்தியச்சிறை' என்ற தொடரை எழுதினார். இத்தொடரும் பின்னாளில்
நூலுருவானது.
ஒருகாலத்தில் சுதந்திரன் பின்னர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்
ஏடான தேசாபிமானி, சோவியத் தகவல் பிரிவு வெளியிட்ட சோவியத்நாடு
தமிழ்ப்பதிப்;பு ஆகியனவற்றின் ஆசிரியபீடங்களிலிருந்த இலங்கை
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் (தற்போது
கனடாவில்) தாம் முன்னர் எழுதிய கட்டுரைகளை தொகுத்து (பிரேம்ஜி
கட்டுரைகள்) வெளியிட்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு (2010) இறுதியில்,
தினக்குரல் ஆசிரியர் தனபாலசிங்கம் தினக்குரலில் ஏற்கனவே எழுதிய பல
ஆசிரிய தலையங்கங்களின் தொகுப்பு நூல் புரவலர் புத்தகப்பூங்கா
வெளியீடாக வந்துள்ளது.
மேற்குறிப்பிட்ட பின்னணிகளுடன்
15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள
தினக்குரல் பத்திரிகையின் வளர்ச்சியை அவதானிக்கின்றேன். இன்று
தினக்குரலின் பிரதம ஆசிரியராக பதவியிலிருக்கும் தனபாலசிங்கம் ஒரு
ஒப்புநோக்காளராக வீரகேசரியில் பிரவேசித்த 1977
காலப்பகுதியிலேயே நானும் அங்கு ஒப்புநோக்காளராக இணைந்தேன். அதற்கு
முன்னர் 1972 இல் நீர்கொழும்பு
பிரதேச நிருபராக பணியாற்றத்தொடங்கியபொழுது, இதே காலகட்டத்தில்
சிறுகதை எழுத்தாளனாக மல்லிகையில் அறிமுகமானேன். இலக்கியம் - ஊடகம்
என்ற இரண்டு தண்டவாளங்களில் எனது எழுத்து ரயில்
பயணித்துக்கொண்டிருக்கிறது. அதனால் பல நண்பர்களைச் சந்திக்கவும்
சம்பாதிக்கவும் முடிந்திருக்கிறது.
இயல்புகளைப் புரிந்துகொண்டு
நேசம்பாராட்டுவது கைவந்த கலையாக இருந்தால்தான் இலக்கிய,
ஊடகத்துறையின் நெளிவு சுழிவுகளுக்கு மத்தியில் சமரசமின்றி போராடவும்
முடியும்.
வீரகேசரியில் நான் சந்தித்து நண்பர்களாக்கிக்கொண்ட
பத்திரிகையாளர்கள் தியாகராஜா, அஸ்வர், டேவிட்ராஜூ, பயஸ்
பாலவிவேகானந்தா, சூரியகுமாரன், சனூன், பொன். ராஜகோபால், சுபாஷ்,
கனக. அரசரட்ணம் ஆகியோர் நினைவுகளில் பதிவாகிவிட்டவர்கள்.
சேதுபதி, மூர்த்தி, வரதராஜா, க. சிவப்பிரகாசம், து. சிவப்பிரகாசம்
(வீரகேசரியின் விளம்பர, விநியோக முகாமையாளர்) மயில். தவராஜா, அன்டன்
எட்வேர்ட், டி.பி.எஸ் ஜெயராஜ் உட்பட பலர் புலம்பெயர்ந்து விட்டனர்.
இவர்களில் சிலருடன் எனக்கு இப்போதும் தொலைபேசி, மின்னஞ்சல்
தொடர்புகள் நீடிக்கின்றன.
இவர்களில் வரதராஜாவினதும் (ஜெர்மனி) மூர்த்தியினதும் (கனடா)
எழுத்துக்களை அவ்வப்போது பார்க்க, படிக்க முடிகிறது. டீ. பி. எஸ்.
ஜெயராஜின் அரசியல் விமர்சனங்கள் ஆங்கில ஊடகங்களிலும்
இணையத்தளங்களிலும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. இவர் மிகுந்த
கவனிப்புக்குள்ளான ஊடகவியலாளர். இலங்கையில் மூவினத்தவர்களுக்கும்
வெளிநாடுகளில் வதியும் எம்மவர்களுட்பட வெளிநாட்டு ஆங்கில
வாசகர்களுக்கும், இலங்கை அரசியல் தொடர்பான விமர்சன தகவல்
சொல்லியாகவும் ஜெயராஜ் விளங்குகிறார். தமது கருத்துக்களுக்கு
எதிர்வினைகளையும் சம்பாதிப்பவர்.
கனடாவில் வதியும் து. சிவப்பிரகாசம் வீரகேசரியின் கனேடிய
இணையப்பதிப்பு மற்றும்
Monsoon Journal முதலானவற்றுடன்
இணைந்திருக்கிறார்.
வீரகேசரி, தினக்குரலில் முன்பு பணியாற்றிய பூபாலரத்தினம் சீவகன்
லண்டன் பி.பி.ஸி. தமிழோசையில் பணியாற்றுகிறார்.
இலங்கை வனொலியில் செய்திப்பிரிவுகளில் பணியாற்றிய சிலரிடமிருந்து
நூல்கள் வரவாகியுள்ளன. வி.ஏ.திருஞானசுந்தரம், ஜோர்ஜ் சந்திரசேகரன்,
கே.எஸ்.சிவகுமாரன், வி.என். மதியழகன், காவலூர் ராஜதுரை, ஞானம்
இரத்தினம், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் ஆகியோரால் எழுதப்பட்ட
நூல்களைப் படித்திருக்கின்றேன்.
சில்லையூர் செல்வராஜன் முன்பொருகாலத்தில் சுதந்திரனிலும்
வீரகேசரியிலும் ஆசிரிய பீடங்களில் பணியாற்றியவர். பல்கலைவேந்தனாகிய
இவர் வானொலிக் கலையகத்திலும் ஈழத்து தமிழ் சினிமாவிலும் தோன்றியவர்.
ஈழத்து நாவல் இலக்கிய வளர்ச்சியை எழுதியவர். தான்தோன்றிக்கவிராயர்.
அ.செ.முருகானந்தன், அ.ந. கந்தசாமி ஆகியோரும்
படைப்பிலக்கியவாதிகளாகவும் பத்திரிகையாளர்களாகவும் விளங்கியவர்கள்.
இந்தத்தகவல்களை இன்று ஊடகத்துறையில் பிரவேசித்திருப்பவர்கள்
பூரணமாகத் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
இலங்கையில் நடந்த (2011)
முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் அமைப்பாளராக
இயங்கநேர்ந்த சூழலில் இலங்கையிலும் தமிழகத்திலும் எம்மவர்
புலம்பெயர்ந்த நாடுகளிலும் ஊடகவியலாளர்களாக
பணியாற்றிக்கொண்டிருக்கும் பலருடனும் தொடர்புகளை நெருக்கமாகப்
பேணவேண்டியிருந்தது. தொலைக்காட்சிகள், வானொலிகள், பத்திரிகைகள்,
சிற்றிதழ்களில் அவர்களின் பணி தொடர்ந்தமையால் சர்வதேச
ஒன்றுகூடலைப்பற்றிய கவனத்தில் அவர்கள் இருந்தனர். ஏற்கனவே நன்கு
தெரிந்த என்னிடமிருந்து அவர்களால் உண்மை நிலைமைகளை அறிந்துகொள்ளவும்
முடிந்தது.
இலங்கையைப் பொறுத்தமட்டில் பத்திரிகை ஆசிரியர்கள் வௌ;வேறு
நிறுவனங்களின் நிருவாகங்களின் கிழே பணியாற்றியபோதிலும்
புரிந்துணர்வுடன் நேசமனப்பான்மையுடன் பொது நிகழ்வுகளில் ஒன்று
கூடுகின்றனர். இது தமிழகத்திற்கு மட்டுமல்ல உலகநாடுகளுக்கே
முன்னுதாரணமானது.
ஒரே மேடையில் அவர்கள் காட்சிதந்து கருத்துத்தெரிவிக்கின்றனர்.
இலக்கியப்படைப்பாளிகளின்; நூல் வெளியீடுகளில் கலந்துகொள்கின்றனர்.
சக பத்திரிகையாளருக்கு அரசியல் ரீதியான அச்சுறுத்தல் வரும்போது
ஒருமித்த குரலில் தமது ஆட்சேபங்களையும் கண்டனங்களையும்
தெரிவிக்கின்றனர்.
விதிவிலக்காக சில நிகழ்வுகள் நடந்திருந்தாலும் இலங்கை பத்திரிகை
உட்பட ஊடகத்துறைகளில் (தெலைக்காட்சி, வானொலி, இணையத்தளங்கள்)
சுவாரஸ்யங்களுக்கு குறைவில்லை. இன்று ஒரு இடத்தில் பணியாற்றுபவர்
நாளை இன்னுமொரு இடத்தில் பணிக்காக வாய்ப்புத்தேடிச்செல்லக்கூடிய
காலம் உருவாகியிருக்கிறது. ஆனால் இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு
முன்னர் அப்படி இல்லை. புதிய பத்திரிகை நிறுவனங்கள் தோன்றும்போது
மாத்திரம் பழைய பத்திரிகை நிறுவனங்களிலிருந்து அனுபவம் வாய்ந்த
பத்திரிகையாளர்களை உள்வாங்கும் முயற்சிகள் நடந்தேறியிருக்கின்றன.
1987 வரையில் சுமார் பத்து
ஆண்டுகள் வீரகேசரியில் பணியிலிருந்தபோதும் அதற்கு முன்பும் பின்பும்
இலங்கைத் தமிழ்ப்பத்திரிகை உலகில் நான் சம்பாதித்த
நண்பர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட அனுபவங்கள் விரிவான நூலுக்குத்
தரவுகளைத்தரும். செய்திகளை சேகரிப்பது, செம்மைப்படுத்துவது
பிரசுரமானதன் பின்னர் அவற்றின்
Feed back பற்றிய பிரக்ஞையை
வாசகரிடத்தில் உருவாக்குவது, அரசியல் அழுத்தங்களுக்கு தண்ணி
காட்டிக்கொண்டே மக்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்துவது முதலான
சுவாரஸ்யங்கள் ஊடகத்துறையில் பயிற்சிபெற வருகைதரும் இன்றைய
தலைமுறைக்குப் பாடங்களாக அமையலாம்.
கணினி யுகத்தில் பதிவிறக்க இயல்புதான்
(Down
load Journalism)
இப்போது அபரிமிதமாக
வளர்ந்துகொண்டிருக்கிறது. பொது நிகழ்வுகளில் சிறப்புரையாற்றுபவர்கள்
தமது உரையைப் பிரதி எடுத்துக்கொண்டுவந்து பேசமாட்டார்களா - என்ற
எதிர்பார்ப்புடனேயே பல பத்திரிகை நிருபர்கள் மண்டபங்களுக்குள்
பிரவேசிக்கின்றார்கள்.
ஒரு காலத்தில் ஆசிரிய பீடத்துக்கும் அச்சுக்கோப்பாளர் பிரிவுக்கும்
இடையே எழுத்துப்பிரதிகளையும் ஓப்புநோக்கப்பட்ட பக்கங்களையும்
எடுத்துச்சென்ற சாதாரண சிற்றூழியர் (பியோன்) செய்துவந்த வேலையை
தற்போது பொது நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்துக்கும் பத்திரிகை
காரியாலயத்திற்கும் இடையே வாகனத்தில் பயணமாகி
செய்துகொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு வித்தியாசம்.
காரியாலயத்துக்குள் 'பியோன்' காலால் நடந்தார். இவர்கள் வாகனங்களில்
பயணிக்கிறார்கள். தென்னமெரிக்க எழுத்தாளரும் நோபல்பரிசு
பெற்றவருமான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் உலகப்புகழ்பெற்ற
பத்திரிகையாளர். பத்திரிகையாளருக்கான பயிலரங்கில் அவர் தெரிவித்த
கருத்து இங்கு பொருத்தமானது.
அவர் சொன்னார், ' டேப்ரெக்கோடர்தான் ஒரு பத்திரிகையாளனின் முதல்
எதிரி. அது ஒரு சாத்தான். சொன்னதை திருப்பிச்சொல்லும் இயந்திரக்கிளி.
எப்பொழுதும் ஒரு பத்திரிகையாளனுக்குத் தேவையானவை: குறிப்பு
எழுதுவதற்கான சிறிய நோட்டும், எதையும் கூர்மையாகக்கேட்டு
உள்வாங்கிக்கொள்ளும் காதுகளும் செய்திகளின் பின் உள்ள உண்மையை
அறிந்துகொள்வதற்கான விடாப்பிடியான ஆர்வமும்தான்.'
கணினி யுகம் வந்தபின்னர் பத்திரிகையாளர்கள் மடிக்கணினியுடன்
(Laptop) பவனி வருகின்றனர்.
அவர்களுக்கு சுலபமாக கையாளவும் முடிகிறது. சிங்கப்பூரில்
என்னைச்சந்தித்த ஒரு பெண் ஊடகவியலாளர் பேட்டி காணும்போது
மடிக்கணினியில்தான் எழுதினார்.
யாழ்ப்பாணத்தில் நல்லூர் நாவலர் மண்டபத்தில் ஒரு நிகழ்ச்சியில்
பேசிக்கொண்டிருந்தேன். நான் பேசி முடிப்பதற்கு முன்பே, ஒரு
பத்திரிகையாளர் படமும் எடுத்து செய்தியுடன் தமது மடிக்கணினி ஊடாக
கொழும்புக்கு மின்னல் வேகத்தில் செய்தி அனுப்பியிருக்கிறார்.
மறுநாள் பத்திரிகையை பார்த்தபின்பே அவரது வேகம் புரிந்தது. உலகம்
சுருங்கிக்கொண்டிருக்கிறது என்பதற்கு இதுபோன்று பல
உதாரணங்களைக்கூறமுடியும். மின்னல் வேகத்தில் இயங்கவேண்டியுள்ள
இக்காலப்பகுதியில் ஊடகத்துறைக்கு கணினி வரப்பிரசாதமாகியிருக்கிறது.
இயந்திரவேகத்தினால் நிகழ்ச்சிகளை அவசர அவசரமாக தயாரிக்கவேண்டிய
நிலைக்கு ஆளாகின்றவர்களையும் அவதானிக்கமுடிகிறது.
தொலைக்காட்சிகளில் முகத்தை அழகுபடுத்துவதில் (மேக்கப்) காண்பிக்கும்
ஆர்வத்தை, நேர்காணலுக்கு அழைக்கப்பட்டவர் பற்றிய தகவல்களை
அறிந்துகொள்வதில் அல்லது அதற்கான தேடல் முயற்சிகளில்
காண்பிப்பதில்லை.
தயாரிப்பாளருக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பானால் சரி.
இச்சந்தர்ப்பத்தில்தான் அனுபவப்பகிர்வு பற்றி
குறிப்பிடவேண்டியிருக்கிறது. பத்திரிகை, இதழியல் துறைகளில்
எழுத்தையே உயிர்மூச்சாக ஏற்றுக்கொண்டு பல வருட காலம் (மூத்த
தலைமுறையினர்) வாழ்ந்த பலரிடத்தில் காலத்திற்கு ஏற்றவாறு கணினி
பற்றிய இணையத்தளங்கள் தொடர்பான பிரக்ஞை இல்லாதிருப்பதையும்,
இந்தப்பிரக்ஞை சிறப்பாகவுள்ள இளம் தலைமுறையினரிடத்தே பதிவிறக்க
இதழியல் அனுபவம் அதிகரித்திருப்பதையும் காணலாம்.
பக்கம் நிரப்புவதுமட்டும் செய்தியாளரின் பணியல்ல. மக்களின்
சிந்தனையில் ஏற்படும் பள்ளங்களை நிரப்புவதும் பணியாகியிருப்பதனால்
பதிவிறக்க முயற்சிகளில் ஈடுபடுவது பலருக்கு சுலபமானதாகவும் கைவந்த
கலையாகவும் மாறிவிடுகிறது. ஆனால் எங்கே எதிலிருந்து பதிவிறக்கம்
செய்தோம் என்பதைச் சொல்ல மறந்துவிடுகிறார்கள்.
அதனால் குறிப்பட்ட ஆக்கம் படைத்தவருக்குத் தெரியாமலேயே மறுபிரசுர
பதிவிறக்கமாகிவிடுகிறது. அனுபவப்பகிர்வு நிகழ்ச்சிகள் இதழியல்
கல்லூரிகளில் அல்லது ஊடகவியலார் சந்திப்பு அரங்குகளில்
நடைபெறுவதன்மூலம் புதிய தலைமுறையினர் கற்றுக்கொள்வதற்கான
வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கலாம்.
பொது நிகழ்வுகளில் மாற்றுக்கருத்துக்களை புறம்ஒதுக்கி
புரிந்துணர்வுடனும் நேசமனப்பான்மையுடனும் ஒன்றுகூடும்
ஊடகவியலாளர்களும் ஊடகவியலார்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும்
ஊடகத்துறை சார்ந்த அமைப்புகளும் இதுவிடயத்தில் கவனம் செலுத்தலாம்.
அனுபவப்பகிர்வுகள் ஊடகத்துறையின் நுட்பங்களை வெளிப்படுத்தாமல்
பயின்ற கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை பட்டியலிடுவதாக
அமைந்துவிட்டால் அது தேடலை எதிர்பார்த்துவருபவர்களுக்கு ஏமாற்றத்தை
அளித்துவிடும்.
letchumananm@gmail.com
|