காலத்தை வென்ற காவியம் சிலப்பதிகாரம்

ப. இரமேஷ், (பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்)

காலத்தால் அழியாத செல்வாக்குப் பெற்றுள்ள இலக்கியங்களின் வரிசையில் சிலப்பதிகாரம் முக்கிய இடத்தைத் தன்னுள் தக்க வைத்துக் கொண்டு, இன்றளவும் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ளது. தமிழில் எண்ணற்ற இலக்கியங்கள் தோன்றியிருந்தாலும் மற்ற நூல்களுக்கு இல்லாத சிறப்புக் கூறுகள் சிலப்பதிகாரத்திற்கே உண்டு. இந்நூலின் சிறப்பையும் பொருண்மையையும் உணர்ந்து முத்தமிழ்க் காப்பியம், நாடகக் காப்பியம்,  குடிமக்கள் காப்பியம் என்று பலர் போற்றுகின்றனர்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் பண்பாட்டையும் வாழ்க்கை நெறிமுறைகளையும் கலாச்சாரத்தையும் விளக்கும் வரலாற்று நூலாக விளங்குவதில், சிலப்பதிகாரத்திற்கு நிகர் வேறு எந்த நூலும் தோன்றவில்லை. கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியதாக, நாம் காலத்தை வரையறுத்துக் கூறினாலும் அவற்றின் நேர்த்தியான வடிவம் நம்மை வியப்பில் அல்லவா ஆழ்த்துகிறது.

சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று எல்லோராலும் அழைக்கப்படுவதைக் காண்கிறோம். ஆனால், சிலப்பதிகாரத்தைப் போலவே ஒத்த பண்போடும் நயத்தோடும் மணிமேகலை விளங்கினாலும் சிலப்பதிகாரமே குடிமக்கள் காப்பியம் என்ற செல்வாக்கைப் பெற்றுள்ளது.

காவியத்தின் கதை மாந்தர்களாக முடியுடை வேந்தர்களையும் உயர்ந்த வர்க்கத்தினரையும் கற்பனை வயப்பட்ட பாத்திரங்களையும் கொள்ளாமல் சாதாரண வணிக குல மாந்தர்களான கோவலன் கண்ணகி வரலாற்றை எடுத்துக் கூறும் உண்மை நிகழ்ச்சியாகப் படைத்திருப்பது மக்கள் இலக்கியம் என்ற சிறப்பைப் பெறுவதற்குக் காரணமாக அமைகின்றன.

சிலப்பதிகாரத்தின் கருப்பொருள்களாக

'அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்'
'உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்'
'ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்'


என்ற மூன்று முக்கிய உண்மைகளை உலகிற்கு உணர்த்துவதிலும் பெண்ணின் கற்புத் திறத்தை பெருமையை உலக அரங்கில் மக்களிடத்தில் வெளிப்படுத்துவதிலும் சிலப்பதிகாரம் வெற்றி பெற்றுள்ளது.

ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி என்ற மூன்று காப்பியங்களே நமக்கு முழுமையாகக் கிடைத்துள்ளது. அவற்றில் சிலப்பதிகாரமே அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு பேசப்பட்ட காப்பியமாக விளங்குகிறது. ஏனென்றால் சொற்சுவையும் பொருட்சுவையும் எத்தனை முறை படித்தாலும் காவிய இன்பத்தை வாரி வழங்குகிறதென்றால் அது மிகையாகாது. அதனால் தான் பாரதி 'நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு' என்று குறிப்பிடுகிறார். ஏன் காவிய இன்பத்தை மணிமேகலையும் சீவக சிந்தாமணியும் அளிக்கவில்லையா என்றால், இந்த இரண்டு காப்பியங்களும் காவிய இன்பத்தை அளித்தாலும், ஒரு இலக்கியம் மக்களிடம் சென்று சேர்வதற்கான அத்தனைப் பண்புகளையும் சிலப்பதிகாரமே பெற்றுள்ளது.

ஒரு மொழியின் அழகை முழுவதுமாகப் படைக்கப்பட்ட பாத்திரங்கள் வாயிலாக வெளிப்படுத்துவது என்பது பெரும்பாலான இலக்கியங்களில் காண்பது அரிது. ஆனால் சிலப்பதிகாரம் வாழ்நாள் முழுக்க வாசகனால் வாசித்து இன்புறும் வகையில் அமைந்துள்ள மாபெரும் காவியமாக விளங்குகின்றது. எந்த ஒரு இலக்கியமும் அது தோன்றிய காலத்தில் நீதிகளைக் கூறுவதோடு நில்லாமல் பிற்காலத்திற்கு தேவைப்படும் நீதிகளைப் போதிப்பதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய சிறப்பை சிலப்பதிகாரம் பெற்று காலத்தை வென்ற காவியமாக உள்ளது. உலக இலக்கிய அரங்கிலும் தமிழ் இலக்கிய அரங்கிலும் தனிச்சிறப்பு பெற்ற காவியமாக சிலப்பதிகாரம் விளங்குவதற்கு இரண்டு காரணங்களை முன் வைக்கலாம்.

ஒன்று மக்கள் இலக்கியமாக இருப்பது. மற்றொன்று தமிழில் தோன்றிய முதல் காப்பியம் என்ற பெருமையையும் இலக்கிய வரலாற்றிற்கும் வளர்ச்சி நெறிக்கும் ஒரு திருப்புமையமாய் விளங்குவதையும் கூறலாம்.

சேர, சோழ, பாண்டிய நாடுகளையும் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற நான்கு வகையான வர்ணத்தாரையும் பாத்திரங்களாக அறிமுகப்படுத்தி இலக்கண முறைப்படி குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என ஐவகையான நிலங்களைப் பிரித்துக் காட்டியுள்ளார் இளங்கோவடிகள். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய தெய்வங்களைக் குறிப்பிட்டும் அதற்கு வழிபாடு செய்யும் முறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். பன்னிரெண்டு வயதுடைய கண்ணகி முதல் முதியோளான இடைக்குல மாதரி வரையிலும் பல்வேறு பருவத்தினரையும் சிலப்பதிகாரத்தில் பார்க்கின்றோம். இப்படி நாடுமுழுவதையும் தன்னகத்தே காட்டும் தலைசிறந்த நாடகக் காப்பியமான சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் வெளிப்படையாக கூறியுள்ளவற்றை விட இலைமறை காயென மறைத்து வைத்துள்ளவையே இலக்கிய நயம் மிகுந்த சுவையை அளிக்கின்றன.

இளங்கோவின் பாட்டுத்திறத்தைக் கண்ட பாரதி,

'யாமறிந்த புலவரிலே
கம்பனைப்போல் வள்ளுவன்போல்
இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே
பிறந்ததில்லை, உண்மை வெறும்
புகழ்ச்சி இல்லை'


என்று பாடுவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை ஏனென்றால், அமிழ்தினும் இனிய தமிழ் விருந்தாய், ஒன்பான் சுவையும் ஒருங்கே பொருந்திய இலக்கியமாக சிலப்பதிகாரம் விளங்கியதற்கு இளங்கோவின் பாட்டுத்திறமே காரணமாக அமைகிறது.





rkavithaxeroxspkoil@gmail.com