தமிழில் தன் வரலாறுகள்

முனைவர்  அ. குணசேகரன்  

மிழ் இலக்கியப் பரப்பில் தொன்றுதொட்டுப் பெரிதும் ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்காத இலக்கிய வகைமைகளாகப் பயண இலக்கியம், வாழ்க்கை  வரலாறு, தன்வரலாறுகள் போல்வன இருந்து  வந்துள்ளன.  இன்றும் அந்நிலை நீடிக்கவே   செய்கின்றன. அவற்றுள்ளும்  சாகித்திய   அகாதெமி தேசியப் புத்தக நிறுவனம்  (NBT)  இவற்றுடன்  தமிழகப் பதிப்பகங்கள்   சிலவற்றின்   முயற்சிளால்  வாழ்க்கை வரலாற்று  இலக்கியங்கள் ஓரளவு   பரவலாக்கப் பட்டுள்ளன.   தன் வரலாறுகளுக்கு   அத்தகைய நிலை  அமையவில்லை.  அவை குறிப்பிட்ட சிலரின்  வாசிப்புக்குள்ளே முடங்கிவிட்ட  போதிலும்  காலந்தோறும்  சில தன் வரலாறுகள்   தோன்றவே செய்கின்றன.   அதிலும் குறிப்பாக, இந்த நூற்றாண்டில் அவை மீதான பார்வை கூர்மைப்பட்டிருப்பது   குறிப்பிடத்தக்கதாகும்.   எனவே தன்வரலாறுகளின்   சில போக்குகள்  குறித்தும்  அவற்றின் படைப்பு  முறைகள்  குறித்துமான   சில பகிர்தலாக   இக்கட்டுரை   அமைகிறது.

தனி மனிதர்  ஒவ்வொருவரிடமும் தம்மைப் பற்றியும்   தம் அனுபவங்கள்  சார்ந்தும்  பிறருக்குச் சொல்வதற்கு  ஏராளமான  சங்கதிகள்  இருக்கவே  செய்கின்றன.   அவற்றைச் சிலர் துணிந்து  வெளிப்படுத்துகின்றனர்.  சிலர் அச்சம் கூச்சம் இன்னபிற  காரணங்களால் வெளிப்படுத்தாமல்  விட்டுவிடுகின்றனர்.  ஒரு சிலரோ அவற்றை எழுத்தில் கொண்டு வருகின்றனர். அவையே  தன் வரலாறுகளாக  அறியப்படுகின்றன.

‘‘தொன்றுதொட்டு வரும் மரபு  வழியிலான   வகைமைப் பாகுபாடுகளைத் தவிர இலக்கிய  வகைமைப் பற்றிய பிற  சில துணைப் பாகுபாடுகளும்   பிற்காலத்தில் முகிழ்த்தன. அவை நாட்குறிப்பு வாழ்க்கை வரலாறு, தன்  வாழ்க்கை வரலாறு அல்லது சுயசரிதம்  போல்வன’’  (ஒப்பிலக்கியம் :90) என்று குறிப்பிடும்  வை. சச்சிதானந்தன், தன் வரலாற்று  இலக்கிய வகையில்  தம்மைப் பற்றிக்  கூறுமிடத்தில் ஒருவர் எழுதும்   நினைவுக் குறிப்புக்கள் நாட்குறிப்பு  (Dairies   கடிதங்கள்  ((Letters ஆகியன  தன் வரலாற்றில்  அடங்கும்   வகையின’’  (மேலை இலக்கியச் சொல்கராதி:19)  என்று  குறிப்பிடுகிறார்.

தன் வரலாறு, தற்சரிதம், என் சரிதம்,   சுயசரிதம் போன்ற சொற்களோ இவற்றுக்கு இணையாக ஆங்கிலத்தில் வழங்கும் ­Autobiography என்ற சொல்லோ  தொடக்கக் கால  இலக்கிய வழக்கில்  புழக்கத்தில் இல்லை.  குறிப்பாக 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில்  இச்சொல்  வழக்கத்தில் இல்லை.  Memories  என்னும் நினைவுக் குறிப்புகள் என்ற அளவிலேயே  (Encyclopedia of Britannica:P.355)  வழங்கி   வந்துள்ளன.  1793 இல் ஆங்கிலத்தில்   வெளிவந்த The private life என்னும் நூலே உலகின் முதல் தன்வரலாற்று நுலாக   அறியப்படுகிறது.

ஒருவர் தன்னைப் பற்றி, தம் வாழ்க்கையைப் பற்றி, வாழ்வில்  எதிர்கொண்ட அனுபவங்கள், நிகழ்வுகள் பற்றிச் சொல்வதற்குக்  கையாளும் எல்லா வடிவங்களும் தன் வரலாற்றுப் பதிவுகள் தான். இங்கு வாழ்க்கையைப் பற்றி என்று கருத்தில் கொள்ளும்போது ஒருவரைப் பற்றிப்  பிறர் கூறும் வாழ்க்கை  வரலாற்றையும் ஒப்பு நோக்க வேண்டிய தேவை உள்ளது. இவை  இரண்டுக்குமிடையே சில ஒப்புமைக்  கூறுகள்  தோன்றினும் அடிப்படையில் இரண்டும் வேறானவையாகும். வாழ்க்கை வரலாறெழுதியல் என்பது  ஒருவரைப் பற்றிய பிறரின்  செயல்.  அவருடைய உற்று நோக்கல்,   தேடல்கள் நேர்காணல் போன்ற முயற்சிகள்  சார்ந்தது.  தன் வரலாறு  என்பது  அவற்றினின்றும் வேறுபட்டது. அது எழுதப்படுவனின் தன் முயற்சியாலும் அவரிடம் உள்ளொடுங்கிக் கிடக்கும் உணர்வுகள், நினைவுகளின்  ஒழுங்கமைவுகள் அவற்றின்  வெளிப்பாட்டுத் தேவைகள்  ஆகியவற்றால்  உருவாவது. சுருங்கச்  சொன்னால்  தன் அனுபவப் பகிர்வுகளின் வெளிப்பாடே தன் வரலாறு. தாம் வாழ்ந்த வாழ்க்கையை உலகுக்குச் சொல்லுதல் என்ற நோக்கத்தையும் விருப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டது.   

தன் வரலாறுகள் அவரவர் விருப்பத்திற்கும் மொழியாளுகைக்கும் ஏற்ற வடிவத்தில் படைக்கப்படுவதால் அவை குறிப்பிட்ட ஒரு வடிவத்தைக் கொண்டனவாக அல்லாமல் பல்வேறு வடிவங்களில் (Forms)  அமைகின்றன. எனவே தான் தன் வரலாறுகளை தன் வரலாற்றுப் பாடல்கள் ((Autobiographical songs) தன் வரலாற்று   நாட்குறிப்புகள் Autobiographical   dairies­)  வரலாறுகள் (Family  Histories)  வரலாற்று ஆவணங்கள் (Historical  documents) படக்கதைகள், (Comics) புனைகதைகள் (Fictions கட்டுரைகள் என வகைப்படுத்த   முடிகிறது.

தமிழக்கிய வரலாற்றில் தன் வரலாற்றுக்கான அடிப்படைகளைச் சங்க இலக்கியங்களில் குறிப்பாக, புறநானூற்றில் இடம்பெற்றுள்ள  பெருஞ்சித்தரனார், கோவூர்க்கிழார் போன்றோரின் பாடல்களிலேயே  காணமுடிகிறது.  என்றாலும்   இவை தொடர்ச்சியான வரலாற்று விவரிப்புகளாக  இல்லாமலிருப்பதால் இவற்றைத் தன் வரலாற்றுக் கூறுகளைக் கொண்டுள்ளனவாகக் கருதலாமே தவிர தன் வரலாறுகளாகக் கொள்வதற்கில்லை. ஒரு   முழுமையான தன் வரலாறு என்பது இருபதாம் நூற்றாண்டின்  தொடக்கத்திலிருந்து தான் கிடைக்கின்றன. முன்னர் குறிப்பிட்ட தன் வரலாற்று வகைகளுக்கேற்பத் தமிழில் தன் வரலாறுகள்  படைக்கப்பட்டிருப்பது  குறிப்பிடத்தக்கது.

தமிழிலக்கியப் பரப்பில்  பாடப்படும் பாடல்களாக (Songs தன் வரலாறுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனினும் தமிழக  நாட்டுப்புறப் பாடல்களில் தன் வரலாற்றுக்கான அடிப்படைகளைக்   காண முடிகிறது. குறிப்பாக ஒப்பாரி, தாலாட்டுப் போன்ற பாடல்களில் பெண்கள் தங்களின் வாழ்நிலைகளை  வெளிப்படுத்தியுள்ளனர். இவற்றைத் தொகுத்து அவர்களின் வாழ்வியல்  பின்புலங்களோடு  நோக்கினால்  பல பெண்களின்   தன் வரலாற்றுப்  பதிவுகளை வெளிக்கொணரமுடியும்.

நாட்குறிப்பு  வகையிலான  தன் வரலாற்றுக்கான   சான்றுகளாகப்  புதுவை ஆனந்த ரங்கரின் நாட்குறிப்புகளைக் கொள்ளலாம். இவை காலத்தால்   முந்தையவையாக  இருப்பினும் பாரதியின் சுயசரிதை  தான் தன் வரலாற்றுக்கான முழுமையான இலக்கணங்களைக் கொண்டதாக இருக்கிறது. சிறுகதை, வசன கவிதை போன்ற புதிய இலக்கிய ஆக்கங்களுக்கு முன்னோடியாக விளங்கிய பாரதியே தன் சுயசரிதை (1910) மூலம் தன் வரலாற்று இலக்கிய  வகைக்கும்  முன்னோடியாக விளங்குகிறார். காந்தியின் சத்திய சோதனை(1925)  வெளிவருவதற்கு முன்பே பாரதியின் சுயசரிதை வெளிவந்துள்ளது என்பது குறப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து வ.உ.சி.யின் சுயசரிதை வெளிவந்துள்ளது. இது 1916 இல் ஒரு  பகுதியாகவும் 1930 இல் ஒரு பகுதியாகவும் எழுதப்பட்டு 1946 இல் தான்  வெளியிடப்பட்டுள்ளது. (காண்க.  வி.அரசு வ.உ.சி. நூல் திரட்டு) மேற்காட்டிய  இரு சுயசரிதைகளும்  செய்யுள் வடிவின.

வ.உ.சி.யின்  சுயசரிதைக்குப் பிறகு  தமிழில் வெளிவந்த  தன் வரலாறு  ரெட்டைமலை சீனிவாசனின்  ஜீவித  சரிதம்  (1939) .  இது வெளிவந்த  காலத்தைக் காட்டிலும்  பிற்காலத்தில் தான் குறிப்பாகத்  தமிழ்ச் சூழலில்  தலித்திய  சிந்தனை   மேலோங்கியதற்குப் பிறகுதான் மிகுந்த கவனத்தைப் பெற்றது.  தமிழில் மிகுந்த தாக்கத்தையும்  கவனத்தையும் ஏற்படுத்திய தன் வரலாறு என்றால் அது உ.வேசாமிநாதய்யரின் என் சரிதம் (1950)  தான். இது உ.வே. சாவின் அனுபவங்கள் சார்ந்த வாழ்க்கைப்  பதிவாக மட்டுமல்லாமல் தமிழ் இலக்கியங்கள் தொகுக்கப்பட்டு  பதிப்பிக்கப்பட்ட வரலாற்றையும் இங்கு நிலவிய வாசிப்புச் சூழலையும் உலகறியச் செய்யும் வரலாற்றையும்   விளங்குகிறது.

என் சரிதத்திற்குப் பிறகு, திரு.வி.க.-வின் நினைவுக் குறிப்புகள் நாமக்கல்லாரின் என்கதை  போன்ற தன் வரலாறுகள் தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிடத்தக்கக் கவனத்தைப் பெற்ற தன் வரலாறுகளாகும். இந்த வரிசையில் ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் எனது வாழ்க்கை அனுபவங்கள் கண்ணதாசனின் வனவாசம்  கலைஞர் கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி  நெ.து. சுந்தரவடிவேலுவின் நினைவலைகள் போன்றவற்றை  இணைத்து நோக்கலாம்.    

சில தன் வரலாறுகள் குறிப்பிடத்தக்க வரலாற்று ஆவணங்களாக விளங்குகின்றன. இவற்றுள் முதலிடத்தில் வைத்து எண்ணத்தக்கதாக  ம.பொ.சி.யின் எனது  போராட்டங்கள்  (1974)  என்ற தன் வரலாற்றுக் கட்டுரை   நூல் விளங்குகிறது.

 ‘‘வறுமை  நிறைந்த குடும்பத்திலே பிறந்த  ஒருவன் வாலிபப்   பருவத்திலே கடுமையாக உழைக்கும் தொழிலாளியாக வாழ்ந்து  அரசியல் துறையிலும்  ஈடுபட்டு  முன்னேறுவதென்றால் அது  ஒன்றும் முடியாத காரியமல்ல என்பதனை என் மூலம் தொழிலாளி  வர்க்கம்  அறிந்துகொள்ள  வேண்டும் என்பது  என் பேரவா... 

 பாரதம்  முழுவதிலும் நடைபெற்ற   விடுதலைப் போரில்   தொடர்ந்து  20 ஆண்டுகள்  காலம் ஈடுபட்டு   6 முறை  சிறை புகுந்து  அல்லல் பல  அடைந்தேன் என்றாலும், அதெல்லாம்  என்னுடைய சரித்திரத்தின் முன்னுரையாகத்தான்   இருக்க முடியும். இதனால் தான் என் வரலாற்றைப்  புதிய  தமிழகத்தின்  வரலாறாகக் கருதி  அதனை எழுதும்  முயற்சியை நான்  மேற்கொண்டேன்.  நான் எழுதாவிடில்  புதிய தமிழகம்  உருவான  சுவைமிக்க  வரலாறு உலகினரின்  பார்வையிலிருந்தே  மறைந்து  போய்விடவும் கூடும்.’’ (எனது போராட்டம்.ப.4.) என்று ம.பொ.சி   குறிப்பிடுவதற்கிணங்க  இதனுள்  பேசப்படும் வரலாற்றுச்  செய்திகள் தமிழக வரலாறு சமூகம் பற்றிய  ஆவணங்களாகக்  கருதப்படுகின்றன.

இதனைப்போன்று  நாடகக்  கலைத்துறையில் நிலவிய  சூழலை டி.கே.  சண்முகத்தின் எனது நாடக வாழ்க்கை (1972)  என்னும் தன் வரலாற்றுக் கட்டுரை  நூல் ஆவணப்படுத்தியுள்ளது.  இந்த வரிசையில்   செயகாந்தனின்   ஒர் கலை இலக்கிய வாதியின்  அரசியல் அனுபவங்கள்’’ மகேந்திரனின் சினிமாவும்  நானும்  சிவக்குமாரின் இது  ராஜபாட்டை  போன்றவற்றையும்  இணைத்து நோக்கலாம்.

மேற்சுட்டிய இந்தத் தன் வரலாறுகள், பெரும்பாலும்  தாம் தேர்ந்தெடுத்துக் கொண்ட துறைகளில்  சாதித்தவர்களின்  தன் அனுபவ   வெளிப்பாடுகளாகவும் தம் அனுபவங்களை மகிழ்ச்சியோடு   பகிர்ந்து  கொள்ளக் கூடியனவாகவும் வரலாற்றில் தம் பங்கு இத்தகையது என்பதை நிலைநாட்டுவதற்காகவுமான  வரலாறுகளாகும். வருங்காலச்  சந்ததியினரிடமும் தம்மை நிலை நிறுத்திக் கொள்ளும்  முயற்சிகளாகும்.  இவர்களின்  வாழ்க்கை நிகழ்வுகள்  அடுத்தத்  தலைமுறையினருக்கு ஒரளவு  உந்து சக்திகளாக விளங்குகின்றன என்றாலும்  இவர்களில்  பெரும்பாலோருக்குச்  சமூகத்தில் இருந்த வாய்ப்புகளும்  பின்புலங்களும்  எல்லாருக்குமானவையாகக் கொள்ள  முடியாது. இந்தியச் சமூகக் கட்டமைப்பில் இவர்கள் ஏதாவது  ஒரு வகையில்  மேட்டிமைப் பிரிவைச் சார்ந்தோர் என்பதால்  செயல்படுவதற்கும்  சாதிப்பதற்கும் ஏற்புடைய  சூழல்கள்  நிலவின.  அவர்கள்  சாதித்தவற்றைப்  பறைசாற்றிக் கொள்வதற்கும்  காலந்தோறும்  பேசப்படச் செய்வதற்கும்  வாய்ப்பாகத்   தன் வரலாறுகள் துணை செய்தன. இத்தகைய வரலாறுகள்  பலவும் கட்டுரை வடிவிலான  பெருநூல்களாக விளங்குகின்றன. மிகுதியும் தம்பிறப்பு முதல் இறப்பு வரையிலான ஒட்டுமொத்தமான பங்கெடுப்புகளையும் நினைவு கூர்ந்து வெளிப்படுத்திவிடுவது என்ற எண்ணவோட்டத்தில் எழுதப்பட்டனவாகவே தோற்றமளிக்கின்றன.  1990 -களின்   தொடக்கக்  காலம் வரை தமிழ்ச்  சூழலில் இதே நிலைதான்.

1992-க்கு  பிறகு தன் வரலாற்றைச்  சொல்லுகிற  அல்லது எழுதித் செல்கிற  போக்கிலும்   வடிவத்திலும் படைப்பாளிகளின்  மன நிலைகளிலும்   முன்பைக் காட்டிலும்  வேறுபட்ட  தன்மைகள்  நிலவுவதைக் காணமுடிகிறது. இந்த மாற்றத்திற்கு வித்திட்டவர் பாமா.   தம்முடைய  கருக்கு என்னும் புதினத்தின் மூலம்  சொல்லிய தன் வரலாறு இங்கு நிலவிய இலக்கியம் மற்றும் சமூகச் சுழலில் பெரும் கலகத்தை ஏற்படுத்தவே   செய்தது.

இதனால்  தன் வரலாறு என்பது  சாதித்தவற்றைச் சொல்லுதலை மட்டுமே   குறிக்கோளாகக் கொண்டிருந்தது என்பதற்கு மாறாக அமுக்கப்பட்ட   வரலாறுகளைச்  சொல்லுவதற்கேற்ற வடிவமாகவும்  இருக்கிறது என்பது  உணர்த்தப்பட்டது. தன் வரலாறுகளின் இயல்பான போக்குகளையே இது மாற்றியமைத்தது.

தொடர்ந்து வெளிவந்த சங்கதி யும்  அழகிய நாயகி  அம்மாளின் கவலையும் வேறுவேறு தளங்களை  இனங்காட்டின.   தன் வரலாறுகள் ஆண்களை மையப்படுத்தி எழுதப்பட்ட நிலைமாறி பெண்களை மையப்படுத்தி வந்த  இத்தன் வரலாறுகள்  புதிய பார்வைகளையும் படைப்பாக்க  முறைகளையும்  கொண்டு வந்து சேர்த்தன.  நினைவுக் குறிப்புகளின்  தொகுப்புகள்,   மிக நீண்ட  கட்டுரைகள்  என்ற வடிவங்களிலிருந்து  கதையாகச்  சொல்லும்   முறைக்கு மாறியது குறிப்பிடத் தக்கதாகும். 

இந்தப் படைப்பு முறை   முந்தையவற்றை  விடவும் வலிமையானதாகவும்  கலகத்தன்மை  வாய்ந்ததாகவும்  இருந்தது கவனத்தில் கொள்ளத்தக்கது.  இவற்றில் அழகிய நாயகி  அம்மாளின்  கவலை தனியொருவரின்   தன் வரலாறு  என்பதையும் கடந்து  முன்னரே குறிப்பிட்டது போன்று குடும்ப வரலாறாகவும்  ஒர் இனத்தின்  வரலாறாகவும் பரிணமித்து  நிற்பது  இதன் கூடுதல்   சிறப்பாகும். பாமாவின் கருக்கும் சங்கதியும்  ஒருவரின்   தன் வரலாறுகள்  என்ற நிலையைக் கடந்து அடிநிலைச்  சமூக வரலாறாகவும்  சாதி, மத  ஆதிக்கங்களுக்கு எதிரான   கலகச் செயற்பாடாகவும்  நிலைகொண்டுள்ளன.  அந்த வகையில்  தன் வரலாற்றுப்  படைப்புலகில் வடிவ நிலையிலும்  பேசு பொருளிலும்  புதிய போக்குகளைச் சாத்தியப்படுத்தியுள்ளன.

அவமானங்கள், இழிவுகள், கூச்சங்கள் எழுதத் தகாதனவென்று   ஒதுக்கப்பட்ட  இன்னும் பிற அனுபவங்கள் பலவற்றையும்  தன் வரலாறாக எழுதலாம். எழுத முடியும் என்பதற்கான தோற்று வாய்களாக இந்தத் தன்வரலாறுகள் அமைந்தன. இவற்றைத் தொடர்ந்து அமுக்கப்பட்ட, கண்டுகொள்ளப்படாத  விளிம்புநிலைப் பகுதியினர் பலரிடமிருந்தும் தன் வரலாறுகள்  மிகுதியாக  வெளிவரத் தொடங்கியுள்ளதும், அவை   பரவலான   கவனத்திற்கு   உள்ளாவதும்  தன் வரலாற்று  இலக்கிய  வகைமை   வளர்ச்சியின்  புதிய பரிமாணமாகவே  நோக்க முடிகிறது.

 தமிழ்ச் சூலில்  பேசப்படாத  பல அனுபவப் பதிவுகளோடு  வந்த சிலுவைராஜ் சரித்திரம்,  ‘காலச்சுமை  ஆகிய வரவுகளுக்குப் பிறகு,   தமிழ்ப் புதின உலகில் தன் வரலாற்றுப் புதினம் என்ற தனித்த பார்வைகள் உருவாகியுள்ளன.  பின்னை  நவீனத்துவக் குரல்கள்  ஓங்கி  ஒலிக்கின்ற இன்றைய காலச் சூழலில்  தன் வரலாறுகளின்  நாயகர்களும் பேசுபொருள்களும்  மாற்றம் பெற்றுள்ளன. நாடாண்டவர்கள், ஆள்பவர்கள், பெருந்தலைவர்கள்  அவர்களுக்கிணையான  தகுதிப்பாடுகளோடு  விளங்கிய  பெருங்கலைஞர்கள்  இன்னபிற துறைகளில்  புகழ் வாய்ந்தவர்கள் என்போரின் வாழ்ந்து முடித்த  வரலாறுகளே தன் வரலாறுகளாக வந்து கொண்டிருந்த  நிலைமாறி  வாழத்தொடங்கும் போதே பகிர  வேண்டிய அனுபவங்களையும்  செய்திகளையும்  கொண்டிருக்கின்ற  விளிம்பு நிலை மக்களின்  வரலாறாக  இன்றைய தன் வரலாறுகள் வந்து கொண்டிருக்கின்றன.

இவை வரலாற்றைக் கீழிருந்து மேல் நோக்கிச் செலுத்துதலுக்கான  முயற்சிளாகும். எழுதுகிறவர்கள் அனைவரும் அவ்வாறு  எண்ணி எழுதுகிறார்கள் என்று  சொல்ல  இயலாதெனினும்   வெளிவந்த  படைப்புகள்  வாசக உலகுக்குத் தரும் முடிவுகள்  அவ்வாறாகத்  தான் விளங்குகின்றன.

பெண்ணிய தலித்திய எழுச்சியும்   பின்னை நவீனத்துவப் பார்வையும்  உரத்து ஒலிப்பதன்  பயனாகத்தான், இதுவரையில்  பேசப்படாத  அடித்தளச் சமூகத்தினரின் தன் அனுபவங்களும் அடக்குமுறைகளுக்கு  உள்ளான  போராளிகள்  பாலியல்  தொழிலாளிகள், திருநங்கைகள், நோயாளிகள்  போன்றோரின்  தன் அனுபவங்கள்  இன்று தன் வரலாறுகளாக   எவ்விதத்  தடைகளுக்கும் உள்ளாகாமல் வெளிவந்து கொண்டிருக்கின்றன.   இத்தகையோரிடமிருந்து விருது  தன் வரலாற்றுப் படைப்புகளைத்  தந்தவர்களின்  படைப்புகளில்  குறிப்பிடத்தக்கனவாக  கரு. அழ.  குணசேகரனின்  வடு (2005), ரேவதி  தொகுத்த அரவாணிகளின்  வாழ்க்கைக் கதைகளடங்கிய   உணர்வும் உருவமும் (2005)  திருநங்கை லிவிங்ஸ்மைல்  வித்யாவின் நான் சரவணன் வித்யா (2007) தொழு நோயாளியாயிருந்த முத்து மீனாளின் முள் (2008), பிற  மொழிகளிலிருந்து  தமிழுக்குக்  கிடைத்த மொழிபெயர்ப்புத்  தன் வரலாறுகள்,   குறிப்பாக ஆதிவாசிப் போராளி  சி.கே.ஜானு   கொக்கோகோலா  நிறுவனத்தை எதிர்த்துப்  போராட்டங்கள்  பல நடத்திய  மயிலம்மா, பாலியல்  தொழிலாளி  நளினி  ஜமிலா வீட்டுப்  பணிப்பெண்  பேபி  ஹால்டர் பெண் காவலாளியான வினயா  போன்றோரின்  தன் வரலாறுகள்  விளங்குகின்றன.

இந்தத்  தன் வரலாறுகளில்  உன்னதங்களுக்கான  இடம் புறந்தள்ளப்பட்டு, மொழி மற்றம் வடிவப் பிரக்ஞைகளுக்கு அப்பால் உண்மை அனுபவங்கள், சமூகம் தந்த  வலிகள்  இவற்றையே  படைப்புப் பொருளாக்கித் தன்  வரலாற்றின்   போக்கை மாற்றியமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவை  ஒவ்வொன்றும் விரிவான ஆராய்ச்சிக்கும் வாசிப்புக்குமுரியான என்பது குறிப்பிடத் தக்கதாகும். தமிழில் காலந்தோறும் வெளிவந்துள்ள தன் வரலாறுகளும்  அவை உருவான விதம் பற்றியும் முறையே தனித்தனி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் போது தன் வரலாறுகளின்   நிலைப்பாடுகளையும்   அவற்றின் தன்மைகளையும்  அறிந்துகொள்ள இயலும்.       

 

danushrk@yahoo.com