கங்காரு நாட்டு காகிதம்

லெ.
முருகபூபதி

உழைப்புக்கு மரியாதை

நீர்கொழும்பில் அல்ஹிலால் மகா வித்தியாலயத்தில் படித்த காலத்தில் எங்கள் அதிபர் ஜப்பார் அவர்கள் காலையில் நடைபெறும் அசெம்பிளியில் புனித திருக்குர் ஆனிலிருந்து சில வாசகங்களை குறிப்பிட்டு உரையாற்றுவார். எனக்கு இன்றும் சில வாசகங்கள் நினைவில் தங்கியிருக்கின்றன.

'உழைப்பவனின் வியர்வை காயுமுன்பே அவனுக்குரிய கூலியை கொடுத்துவிடு' என்று ஒரு வாசகம். அந்த இளமைப்பருவத்தில் அதன் உள்ளார்ந்த அர்த்தம் குறித்து நான் ஆராயவில்லை. அதற்கு அப்பா, அம்மாவின் உழைப்பில் வாழ்ந்ததும் வேலைக்குச்செல்லாத பருவமும் காரணமாக இருக்கலாம்.

ஆனால் வயது சக்கரம்பூட்டிக்கொண்டு வேகமாக ஓடும்போது உழைப்பின் மகிமை புலப்படுகிறது. உழைத்தால்தான் வீடும் நாடும் முன்னேறும். உழைப்புக்கு முக்கியத்துவம் தராமல் மொழி, இனம், சாதி, சமயம் என்று சதா சிந்தித்து அதற்காகவே போராடிக்கொண்டிருக்கும் தேசங்கள் பின்தங்கிப்போய்விடும்.

அகன்ற வீதியிலே வாகனத்தில் பயணிக்கும்போது அந்த வீதியை அமைத்து செப்பனிடுவதற்காக இரவு, பகல் என்று பாராமல் வியர்வையும் சில சமயங்களில் விபத்தினால் காயப்பட்டு இரத்தம் சிந்தியும் உயிரையும் இழந்த வீதி நிர்மாண தொழிலாளர்களைப்பற்றி நினைத்துக்கூட பார்க்க மாட்டோம்.

ஆனால் வீதியில் எங்காவது பள்ளமும் திட்டியும் தோன்றி பயணத்தை தாமதப்படுத்தினால், 'என்ன... ரோட்டு போட்டிருக்கிறான்... ' என்று அந்த முகம் தெரியாத தொழிலாளர்களை திட்டிக்கொண்டே செல்வோம். மழை வெள்ளம் வீதியை சேதப்படுத்தியிருந்தாலும் மழையை எவரும் வையமாட்டார்கள்.

1972-74 காலப்பகுதியில் கொழும்பு காலிமுகத்திடலில் வீதி அகலப்படுத்தி நிர்மாணித்தபொழுது நான் அங்கே தொழிலாளர்களுடன் ஓவஸீயராக வேலை செய்திருக்கிறேன். அந்த வெய்யிலில் காய்ந்து கறுத்துப்போயிருக்கின்றேன். வெயிலுக்கு ஒதுங்க மரம்கூட அங்கில்லை. அந்தத்தொழிலாளர்களுடன் ஆடிப்பாடி வேலைசெய்த அலுப்பில்லாத அக்காலம் என்னைப்பொறுத்தவரையில் ஒரு பொற்காலம்தான். மூவினத்து தொழிலார்களும் ஒற்றுமையாக வேலை செய்தார்கள் தற்காலிக ஒப்பந்தத்தில். அந்த வீதி நிர்மாணிப்பு வேலை முடிந்ததும், எங்கள் வேலையும் முடிந்துவிடும்.

இப்பொழுது, இலங்கையில் வீதிகளை நிர்மாணிக்க, புனரமைக்க இந்தியாவும் சீனாவும் வந்திருப்பதாக அறிகின்றோம். எல்லாம் ஒப்பந்த அடிப்படையில்தான்.

அவுஸ்திரேலியாவில் கணவனும் மனைவியும் உழைத்தால்தான் வீட்டுக்காக வங்கியில் பெற்றகடனை வட்டியுடன் உரிய காலத்தில் செலுத்தி வீட்டை மீட்கமுடியும். திங்கள் முதல் வெள்ளி வரையில் உழைப்பதுடன் நில்லாமல் சனி, ஞாயிறு தினங்களிலும் வேலைகள் கிடைக்காதா என்று எதிர்பார்த்திருக்கும் எம்மவர் இங்கு ஏராளம். வீட்டுக்கடன், மற்றும் பிள்ளைகளின் படிப்புச்செலவுகளுடன் ஊரிலிருக்கும் இனசனத்துக்கு உதவும் நல்லெண்ணமும் சேர்ந்துகொள்ளும்.

வெளியே சென்று இயந்திரமாக உழைக்கின்ற அதே சமயம் வீட்டு வேலைகளை பங்கு போட்டுக்கொள்ளவும் வேண்டும். இந்த வார விடுமுறையில் வீட்டை, மலகூடத்தை, குளியல் அறையை சுத்தம் செய்தல் உட்பட உடைகளை துவைத்து உலரவைத்து எடுக்கும் பணியை மனைவி செய்தால் அடுத்த வாரம் அதே பணிகளை கணவன் செய்யவேண்டும். வளர்ந்த பிள்ளைகள் இருந்தால் அவர்கள் செய்யவேண்டும். முறைவைத்து மேற்கொள்ளப்படும் இந்நடைமுறை பிசகினால் யாராவது ஒருவர் பட்டினி கிடக்கவும் தயாராகவேண்டும்.

இலங்கை, இந்தியா போன்ற ஆசியநாடுகளில் சமையலறை என்பது ஏதோ மனைவிக்கு மாத்திரமே சொந்தமானது என்ற சிந்தனையிருப்பதனால் பல கணவன்மார்கள் இன்னமும் தேநீர் கோப்பி தயாரிக்கவும் தெரியாமல் இருக்கின்றனர். நாம் அதிக தூரம் செல்லவேண்டாம். தங்கள் மனைவி, குழந்தைகளுக்கு தேநீர், கோப்பி, உணவு தயாரித்து கொடுத்த எழுத்தாள பிரம்மாக்கள் எம்மத்தியில் எத்தனைபேர் இருக்கிறார்கள்?
கறியில் உப்பு, புளி, சுவை இல்லையென்று மனைவிமாரை அடித்து விரட்டிய கல்லானாலும் புல்லானாலும் அன்றும் இருக்கிறார்கள். இன்றும் இருக்கிறார்கள். கல்லையும் புல்லையும் சமைத்துக் கொடுத்து கொழுப்பை அடக்கவேண்டும் என்கிறாள் ஒரு பாதிக்கப்பட்ட பெண்.

ஏனென்று கேட்டபோது, 'அரிசியில் கல்லும் கீரையில் புல்லும் இருக்கிறது' என்றாளாம்.

இந்த இலட்சணத்தில் இன்றைக்கும் ' ஒரு கணவனின் வெற்றிக்குப்பின்னால் ஒரு மனைவி இருக்கிறாள்' என்று எம்மவர்கள் புலுடா விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

சென்ற இடமெல்லாம் கிடைத்த பொன்னாடைகளை ஒரு எழுத்தாளர் மனைவிக்கு கொடுத்து ரவிக்கை தைத்துக்கொள்ளச்சொன்னாராம்..

தமிழகத்திலிருந்து இலங்கை வந்து தமிழர் வாழும் ஊர்களில் பேசச்சென்றபோது கிடைத்த ஏராளமான பொன்னாடைகளையெல்லாம் விற்று காசாக்கித்தருமாறு தம்மை அழைத்த பிரமுகரைக்கேட்டுக்கொண்டாராம் ஒரு பேச்சாளர்.

இப்படி பொன்னாடைகள் பன்னாடைகளான கதைகள் ஏராளம். பொன்னாடைகளை பூமாலைகளை நிராகரிக்கும் கலாசாரம் உருவாகவேண்டும் என்று நாம் கடந்த ஜனவரியில் நடத்திய சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பகிரங்கமாகப்பேசியோ எழுதியோ தீர்மானிக்காது போனாலும் அவை இரண்டையும் மாநாடு நடந்த மண்டபங்களின் பக்கம் எட்டியும் பார்க்க அனுமதிக்கவில்லை.

இது எமது மாநாட்டுக்கு ஒரு பிளஸ்பொயின்ற்தான்.

இவ்வாறு நீங்கள் பொன்னாடையையும் பூமாலையையும் நிராகரித்தால் இந்த நிராகரிப்பு அவற்றை தயாரிக்கும் உழைப்பாளிகளின் வயிற்றில் அடிக்கும் செயல் அல்லவா? என்று ஒரு விமர்சனம் எனது செவிக்கு எட்டியது. அந்த உழைப்பினை நம்பி வாழும் தொழிலாளர்களை பற்றி சற்று சிந்திக்கவும் என்றது செவியை நாடிய குரல்.

ஏம்மவர்கள் கோயில்கள் கட்டிக்கொண்டும், இருப்பதை இடித்து புனரமைத்து புதுப்பித்தும்கொண்டுமிருக்கிறார்கள். புனரமைப்பு முடிந்ததும் கும்பாபிஷேகம் நடக்கும். அங்கெல்லாம் பொன்னாடைகளுக்கும் பூமாலைகளுக்கும் நிறைய தேவைகள் இருக்கும். அதனால் அவற்றை தயாரிக்கும் உழைப்பாளரின் வயிற்றில் அடி விழாது என்று ஆறுதல் சொன்னேன்.

மாநாட்டில் மொழிபெயர்ப்பு அரங்கு நடத்தி அதிலே அவுஸ்திரேலிய தமிழ்ச்சிறுகதைகளின் ஆங்கில மொழி பெயர்ப்பு
Being Alive நூலை வெளியிட்டிருந்தோம். ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்னர் இருபது அவுஸ்திரேலிய எழுத்தாளர்களின் 20 சிறுகதைகளை தொகுத்து உயிர்ப்பு என்ற தொகுப்பை வெளியிட்டேன். அதில் எனது கதை இல்லை. கனடாவிலிருந்து இங்கு வந்திருந்த மொழிபெயர்ப்பாளர் திருமதி சியாமளா நவரட்ணம் அவர்களிடம் அதனைக்கொடுத்து அதிலிருக்கும் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தருமாறு கேட்டிருந்தேன். எனது கதை அதிலில்லாதமையினால் எனது கதையொன்றையும் கேட்டுப்பபெற்று சுமார் ஆறு மாத காலத்தில் மொழிபெயர்த்து தந்தார்.

குறிப்பிட்ட ஆங்கில மொழிபெயரப்;பு கிடைத்ததும் எழுதியவர்களின் பார்வைக்கு அனுப்பி கருத்துக்கேட்டிருந்தேன். அவர்களது அனுமதியுடன் வெளியிடும் நல்லெண்ணத்திலேயே தபாலிலும் மின்னஞ்சலிலும் உரியவர்களுக்கு அனுப்பினேன். சிலர் சில சில திருத்தங்களுடன் தந்தனர். ஆனால் சிலர் தமது கதைகளை வெளியிட உடன்படவில்லை.

மாநாட்டுக்கு எதிராக சில புலன்பெயர்ந்தவர்கள் கூப்பாடு போட்டதனால் எங்கே தம்மையும் இந்த புலன்பெயர்கும்பல் புறக்கணித்துவிடுமோ என்று அஞ்சி கொழும்பில் மாநாடு நடைபெறுவதனால் தமது கதைகளை வெளியிட வேண்டாம் என்று சந்தர்ப்பவாத சூழ்நிலை கைதிகளாகிவிட்டனர்.

எனினும் மொழிபெயர்ப்பாளர்கள் சியாமளா நவரட்ணம், மற்றும் அத்தொகுப்பில் ஒரு சிறுகதையை மொழிபெயர்த்திருந்த நவீனன் ராஜதுரையினதும் உழைப்பை மதித்து நாம் நூலை வெளியிட்டோம். அதனால்
15 கதைகளே ஆங்கில தொகுப்பில் இடம்பெற்றன.

மொழிபெயர்ப்பதற்கு தனி ஆற்றல் வேண்டும். கடின உழைப்பு வேண்டும்.

ஊக்கமும் உள்வலியும் உண்மைப்பற்றும் வேண்டும்.

ஒரு படைப்பை மொழிபெயர்ப்பதற்குப் பின்னாலிருக்கும் உழைப்பு மகத்தானது. மரியாதைக்குரியது. உழைப்புக்கு மரியாதை செலுத்தத்தெரியாதவர்களை நாம் எப்படி அழைப்பது.?

நடிப்புச்சுதேசிகள் கவிதையில் பாரதி இப்படியும் சொல்லியிருக்கிறார்:

"ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றுமில்லா மாக்களுக்கோர் கணமும் - கிளியே வாழத்தகுதியுண்டோ?".

letchumananm@gmail.com