யாரும் இல்லைத் தானே கள்வன்
ப. இரமேஷ்,
(பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர்)
தமிழரின்
வாழ்வியல் விழுமியங்களை வெளிப்படுத்துவதில் சங்கஇலக்கியங்கள் தன்னிகரற்று
விளங்குகின்றன. காதலும்,
வீரமும்
பாடுபொருளாக இருந்தாலும் அவற்றைப் பாடல்களில் வெளிப்படுத்துகின்ற அழகு
சங்க இலக்கியத்திற்கே தனிச் சிறப்பையும் பெருமையையும் தேடித்தருகின்றன.
குறுந்தொகையில் தோழியிடம் தலைவி உரைப்பதாக உள்ள கபிலரின் பாடலில்,
“தோழி,
தலைவர்
என்னைக் கனவில் வந்து மணந்து கொண்டபோது சாட்சியாக அங்கு யாருமே இல்லை.
அவர் ஒருவர் தான் அங்கு இருந்தார் அப்போது அவர் கூறிய சூளுரையைப்
பொய்த்துப் போகச் செய்வாரானால் நான் என்ன செய்வேனோ?
தினையின் தாளைப் போல எங்கும் பசுமை நிறைந்த கால்களைக் கொண்ட நாரைகளுமே
அங்கு இருந்தன. அவை ஓடை நீரில் ஆரல் மீனை எதிர்பார்த்து அங்கே நின்றன
என்று தலைவி சொல்கிறாள்.
இங்கே கனவு
முக்கியப்பங்கு வகிக்கிறது. எதையாவது ஒன்றைப்பற்றி நாம் நினைத்துக்
கொண்டே இருந்தால் அவை ஆழ்மனதில் பதிந்து கனவிலே வருவது என்பது இயல்பானதே
அவற்றைக் கபிலர்,
தலைவனைப்பற்றியும் திருமணத்தைப் பற்றியும் எந்நேரம் நினைத்துக்
கொண்டிருந்த தலைவி கனவு காண்பது போலவும் கனவில் தலைவன் அவளை களவு மணம்
புரிந்து கொண்டதற்குச் சாட்சியாக அங்கு ஆரல் மீனை எதிர்நோக்கும் நாரைகளே
இருந்தன என்றும் கவிநயத்துடன் வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு இன்புறும்
வகையில் உள்ளது. மேலும் திருமணம் என்பது ஆன்றோரும்,
சான்றோரும் சாட்சியாக முன்னிருந்து நடத்திவைப்பது என்ற குறிப்புப்
பொருளையும் வெளிப்படுத்தியுள்ளார் மேலும் காதல் மயக்கத்தில் தலைவன்
சூளுரைப்பதும்,
அவற்றைத் தலைவன் நிறைவேற்றாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று தலைவி
வருந்துவதும் இன்றைக்கும் காதலர்களிடம் நடக்கும் நிகழ்வாக உள்ளதை
நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது.
கபிலரின் அந்தப் பாடல் இதுதான்
“யாரும்
இல்லைத் தானே கள்வன்
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங்கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு,
தான் மணந்த ஞான்றே (குறு-25)
rkavithaxeroxspkoil@gmail.com
|