இயக்குனர் பாலாவின் இன்னொரு திரைக் காவியம் - அவன் இவன்

வித்யாசாகர

 

வ்வொரு மனிதரின் ஒவ்வொரு விதமான வாழ்க்கையின் வெவ்வேறு காட்சிகளை ஒவ்வொன்றாய் தன் ஏட்டில் பதிந்துக்கொண்டுதான் வருகிறது ஒவ்வொரு திரைப்படமும். அதிலும் எளிய மக்களின் வாழ்தலை சமகாலப் பதிவாக்கும்  அரிய திரைப்படங்கள் தமிழரின் கலைத் திறனை மெய்ப்பிக்கும் சான்றாகவே தற்காலங்களில் வந்துக்கொண்டிருக்கின்றன.
 

அவ்வகையில், ஒரு எழில்மிகு கிராமத்தில் வசிக்குமொரு குடும்பத்தின் இரு மகன்களையும், அவர்களின்  யதார்த்த வாழ்க்கையினையும் கல்லுக்குள் துளிர்க்கும் இலைபோல் அவர்களுக்குள்ளும் வரும் காதலையும், அதை ஏற்கும் மனிதம் மிக்க மனிதர்களையும், மனிதம் எதிர்க்கும் மிருகப் பிறப்பொன்றின் இறப்பையும் உணர்ச்சிப் பொங்க பொங்க காட்டி, நம் கண்முன் அவர்களை அழவைத்து அதில் நம்மையும் ஒன்றவைத்து, அவர் செய்ய நினைத்த அத்தனையையும் செய்து, அதற்கும் நம்மை தலையாட்டி ரசிக்கவும் வைக்கும் திரு. பாலாவின் இன்னொரு திரைக் காவியம் இந்தஅவன் இவன்திரைப்படம்.
 

கல்லை எடுத்து கையில் கொடுத்தால் கூட அதில் ஒரு துளி நடிப்புத் தன்மை இருக்குமெனில்  அதையும் வெளியில் கொண்டுவந்து கல்லையும் நடிக்க வைத்து உலகிற்கு ஒரு மாறுபட்ட திரைப்படத்தை கொடுத்துவிடக் கூடிய தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் இந்த பாலா.
 

இவரின் படத்தில் மட்டுமே, நடிக்கும் அத்தனைப் பேரும் சிறந்த நடிகர்களாக கருதப்படும் அளவிற்கு ஒவ்வொருவரின் உழைப்பையும் வாங்கி அவர்களின் முகத்தில் தனித்துவ நடிப்பெனப் பூசிவிடுகிறார். இப்படத்திலும் அத்தகைய உழைப்புத் ஒவ்வொரின் நகர்விலும் தெரிகிறது. குறிப்பாக படம் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் நம் உணர்வுகளையெல்லாம் கதாப்பாத்திரமே ஆட்கொண்டுவிட, நாடி நரம்புகளை இழுத்து சுண்டிவிட்டுச் செல்கிறது அனைத்துக் காட்சிகளும்.
 

பேசும் வசனத்தைக் காட்டிலும், இசை வலிமைமிக்க இடத்தைப் பெற்றிருக்கிறது இப்படத்தில். வார்த்தையின்றி வரிகளின்றி சப்தத்தால் நரம்புகளை மீட்டி, காணும் காட்சிகளுக்கு மத்தியில் ஒரு வாய்; அசையாமல் பேசுமெனில் அதை யுவனின் இசை என்று மெச்சிக் கொள்ளலாம். அப்படி வீரமும் காதலும் கலையும் சிறந்த தமிழரின், ஒருவகை மனிதர்களின் வாழ்வை ஒரு புல்லாங்குழலின் சந்துகளில் புகுந்து வெளிவரும் காற்றின் சப்தமாய் இசைத்துக் கொடுத்திருக்கிறார் இப்படத்திற்கென. நிச்சயம் இந்தஅவன் இவன்திரைப்படத்தின் வெற்றியில் இசையின் பங்கும் நடித்தவர்களின் பங்கினைப் போல் இன்றியமையாத ஒன்று.
 

பொதுவாக, நடிகர்கள் முகப்பூச்சு தடவியோ அல்லது முகபாவம் சற்று மாற்றியோ நடிப்பதென்பது இயல்பு, ஆனால் படம் முழுக்க தன் முகத்தையும் பிறப்பின் குணத்தையும் மாற்றி, இயக்குனர் எண்ணிய ஒரு கதாப்ப்பாத்திரத்தை தன் திறமையின் உச்சம்வரை பயன்படுத்தி, தன்னை வெற்றியென்னும் ஒரு வார்தைக்காய் வருத்தி திரைக் காவியத்தின் பதிவில்; தனக்கான ஒரு தனி இடத்தை பதிவு செய்துக் கொண்டார் விசால்.
 

அவர், அழும்  காட்சியில் நம்மை அழவைத்து, சிரிக்கும் காட்சியில் அவர் சிரிக்காமல் நம்மை சிரிக்கவைத்து, பார்க்கும் பார்வையில் நடிப்பை நிரப்பி, அசையும் வாயின் கோணத்திற்கேற்ப நம்மையும் திரும்ப வைக்கும், வாய்திறந்து மலைப்பாகப் பார்க்கவைக்கும் வினோத நடிப்பும், இதுவரை திரைத்துறையினர் சிந்தித்திராத அல்லது செய்திராத சாதனைக்குரிய பாத்திரமும் தான் விஷாலின் கதாப்பாத்திரம்.
 

உனக்குத் தான் முந்தைய படத்தில் தனியிடம் தந்தேன் இல்லையா இதில் நான் சொல்வதை மட்டும் செய்யென்று சொல்லிவிட்டிருப்பார் போல் இயக்குனர் பாலா நடிகர் ஆர்யாவை. என்றாலும், தன் திறனில் குறையில்லா ஆர்யா விட்டேத்தியாய் திரியும் சில காட்சிகளிலும் சரி, காதலின் ஈர்ப்பில் மதிமயங்கும் இடமும் சரி, கோபமுறும் குடித்து ஆடும், கண்கலங்கி அழும் அண்ணனின் அழையை பார்க்க இயலாமல் கண்நீர்வடிக்கும் காட்சியிலும் சரி; தன்னை முழுமையாய் படத்தில் ஈடுபடுத்தி தானும் ஒரு நிகரற்ற நல்ல கலைஞன் என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.
 

 திரிசா போட்டால் ஓடும்ஐஸ்வர்யா நடித்தால் படம் பெரிதாகப் பேசப்படும் எனும் எண்ணங்களை இயக்குனரின் திறமையினால் உடைத்துக் காட்டும்விதமாய் பெயர்பெற்றுவிடாத நாயகிகளுக்குக் கூட பெரிய கதாநாயகி அந்தஸ்து உண்டு என்பதை தன் படத்தின் மூலம் நிரூபிக்க நினைத்திருப்பார்போல் இயக்குனர். அதை நிறைவாய் தன் நடிப்பினால் காட்டிச் சென்றுள்ளனர் இப்படத்தின் கதாநாயகிகளான தேன்மொழி, மற்றும் பேபி எனும் பாத்திரத்தினர்.
 

உண்மையில், அவர்கள் அசைக்கும் கண்களும் சரி, சிரிக்கும் இதழ்களும் சரி, பேசும் உச்சரிப்பும் சரி, அதை படம் பிடித்த விதமும் சரி; மொத்தமுமே காண காண ரசிக்கத் தக்க அழகு என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை. அதுபோல், அவர்கள் வந்து போகும் ஒவ்வொரு காட்சியிலும் மிக இலகுவாக நம் தேசத்து தமிழச்சியை தமிழ்ப்பெண்களை படத்தில் அடையாளம் காட்டிப் போகின்றனர்.
 

அதிலும் காவல்துறை அதிகாரி கதாநாயகியைப் பார்த்து ஒவ்வொரு முறையும் என்னடா கண்ணு என்னடா கண்ணு என்று அழைக்கையில், ஓடிவந்து நிற்கும் அந்த முட்டைக்கண்ணழகு கதாநாயகியை காணும் போதெல்லாம் அவரை ஒரு சட்டப் பூர்வமாகப் பார்ப்பதைவிட ஒரு படத்திற்கு தேவையான ஒரு பாத்திரமாக மட்டுமே பார்த்து ரசிக்கத் தோன்றுகிறது.

முக்கியமாக, இப்படத்தில் வில்லன் கதாநாயகன் என்று சொல்லுமளவிற்கு யாருமில்லை என்றாலும், முழுக்க முழுக்க சிரிப்பாகவே செல்லும் காட்சிகளுக்கிடையில் மிக சாதாரணமாக ஒரு மாட்டிறைச்சிக்காக மாடுகளை கடத்தி அறுக்கும் ஒரு மனிதமற்ற பாத்திரத்தை காட்டி, அவனின் கோரமுகத்தைப் பல்லிளிக்கவைத்து, அவனை வேண்டுமெனில் வில்லனெ எண்ணிக் கொள்ளலாம் என்று எண்ணவைக்கும் அவர்கூட தன் ஒற்றை கையை பின்னால் கட்டிக் கொண்டு அடிக்கும் காட்சிகளிளும், கீற்று போல் இரு உதடுகளுக்கிடையில் வெற்றிலை பல் தெரிய பார்க்கும் அழகிலும் நடிப்பை துல்லியமாய் இயக்குனர் சொன்னளவிற்கே வெளிப்படுத்தியிருப்பது திறம்தான்.
 

மேலும், இப்படத்தின் ஒற்றை நாயகர் எனில் அது ஐயா அயனஸின் பாத்திரம். படம் முழுக்க அவரை கண்டுவிட்டு வெளியே வருகையில் தன் தாத்தாவோ தனக்கு சொந்தமான தந்தை ஸ்தானத்து யாரோ ஒருவரை அந்த வில்லன் சித்தரவதை செய்து கொன்ற கோபம் படம் பார்க்கும் அத்தனை பேருக்கும் வர, அந்த கோபத்தை காட்சிகளின் நகர்வில் தகிக்கும் விதமாக அமைந்த படத்தின் முடிவே இயக்கத்தின் உச்சம் ஆகும்.
 

அதிலும், வில்லனை ஒற்றை அடியில் கொன்று விடாமல் தான் கொண்டுள்ள அயனஸ் மீதான பாசம் அவ்வளவும் வெளிப்படும் அளவிற்கு விஷால் அடிக்கும் ஒவ்வொரு அடியும் நம்மை பாசம் உணர வைக்கிறது. கடைசியில் வில்லன் அயனஸை சித்ரவதை செய்து நிர்வாணப் படுத்தி மரத்தில் தொங்கவிட, காமிரா திரும்பும் இடமெல்லாம் உடம்பில் பட்டை பட்டையாய் தொலுரிய அடித்திருப்பதை காட்ட; கொதித்துப் போகும் ரசிகர்களுக்கு இவனை இப்படி தாண்டா கொல்லனும் என்று புருவம் உயர்த்தி வெறித்துப் பார்க்கும் அளவிற்கு உணர்ச்சிப் பொங்க முடிகிறது படம்.
 

குறிப்பாக, தனியாக வாழும் ஒரு மனிதரின் வலியையும், சுற்றத்தை அனைத்துக் கொண்ட யாருமே இவ்வுலகில் தனிமைப் படுத்தப் படவில்லை என்கிற கருத்தையும், அன்பு மனதில் நிறைந்திருப்பின், பண்புடன் பழகத் தெரிந்திருப்பின், பிறரின் உணர்வுகளை மதிக்க மனசிருப்பின் யாருமே இவ்வுலகில் அனாதையில்லை எனும் போதனையையுமே மறைமுகமாய் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
 

அதையடுத்து, சூழ்நிலைகளுக்குக் உடன்பட்டுப் போகும் மனத ஜென்மங்கள் யாருமே நிரந்தரமாய் திருந்தாத பிறப்புகளல்ல எனும் உண்மையையும் திருந்தாத மனிதர்கள் உண்டெனில் அவர்களுக்கான முடிவும் அதே விரைவில் அவர்களை தேடி வருகிறதென்பதையும் கதாப் பாத்திரங்களின் வழியே வழியும் சோகப் பாடலின் மனதுருக்கும் இசை போல் சொல்லிப் போகிறது படம்.
 

குறிப்பாக, ஒழுக்கம் இல்லா ஆண்களின் மதிப்பு எப்படி மனைவியின் ஒவ்வொரு வார்த்தையினாலும் சுட்டெரித்து தெருநடுவே வீசப் படுகிறது என்பதையும், வீட்டின் வெளிச்சமாக வாழும் பெண்களின் பண்பு சற்று முறை பிசகிப் போனாலும் அது எப்படி அடுத்து வரும் தலைமுறையையே சீர்குலைத்து விடுகிறது என்பதையும் விஷால் ஆர்யாவின் இரு அம்மாக்களான அம்பிகாவும் அவரின் சக்களத்தியாக வரும் நடிகையும் மிக தத்ரூபமாக காண்பவர் ரசிக்கும் அளவிற்கும், கேட்பவர் காதை மூடிக் கொள்ளுமளற்கும் பேசி நடித்துக் காட்டியுள்ளனர்.
 

அம்பிக்காவிற்கு இது ஒரு புதிய தோரணை அதுபோல் அம்மாவாக இன்னொரு பாத்திர ஆரம்பம் என்றாலும், பேச்சும் பீடியும் கொஞ்சம் உதடு கோண வைத்தாலும், இயக்குனர் இப்படத்தில் காட்ட வருவது அதுபோன்று வாழும் ஒரு குடும்பத்தின் கதையினை மட்டுமே என்பதையும் நாம் புரிந்துக் கொள்ளவேண்டியுள்ளது.
 

கள்ளென்ன இரும்பை கொடுத்தாலும் மென்று துப்பும் ஒரு சிறப்பு எந்திரம் போல், தான் எதை வேண்டுமானாலும் செய்வேன், எதை வேண்டுமானாலும் முயன்றால் செய்யலாம், என்பதைக் காட்டுமொரு படம் இது என்பதற்கு படத்தில் வரும் ஒரு லாரி ஓட்டுனரிலிருந்து, அரங்கம் அதிர்ந்து போக ஆடும் ஆரம்பம் முதல் இறுதி வரையிலான ஆட்டங்களே சாட்சி. வெறும் உணர்ச்சி ததும்பும் ஆட்டங்கள் தான் என்றாலும், அந்நிலையில் தானிருந்தாலும் அப்படித் தான் ஆடியிருப்போமோ என்று ஒவ்வொரு இடத்தையும் நம்பவைக்கிறது படம்.
 

ஐயனஸ், விஷால், ஆர்யா எனும் கதாநாயக வரிசையில் சிறிய பையனாக வரும் இன்னொரு பாத்திரமும் அவனின் நடிப்பும், காட்சிகளை மேலும் நகைக்கத் தக்க உணர்வுகளை கூட்டவும் கதையினை அழுத்தமாக நகர்த்திச் செல்லவும் உதவுகிறது என்பதில் சந்தேகமில்லை என்றாலும் அந்த சிறுவனின் நடிப்பும் பாராட்டத் தக்கது.
 

ஆக, காட்டு இலாக்கா அதிகாரிகளிலிருந்து காவல் துறை அதிகாரியாக நடித்தவர் முதல் காவலாளிகளாக நடித்த கதானாயகியோடு வரும் பத்மாக்கா வரை மிகச் சிறந்த ஆட்கள் தேர்வு இப்படத்தில் கையாளப் பட்டுள்ளது. அம்பிகா மட்டுமே கொஞ்சம் வசதியாக தெரிந்தாலும், நடிப்பினால் அந்த எண்ணமும் மாறியே விடுகிறது.
 

ஓரிடத்தில்; ஆர்யாவிடம் அந்த காவல்துறை அதிகாரி வந்து உன் பேரென்ன என்று கேட்க, என் பெயர் "கும்புடுறேங்க சாமி" என்று ஆர்யா சொல்ல, அவர் வாய் பிளந்து அதென்னயா பெயரென்று பார்க்கையில், 'வேறென்னங்க நாங்களும் இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் உங்களையே பார்த்து 'கும்பிட்றேன் சாமி கும்பிட்றேன் சாமின்னு சொல்றது' என்று கேட்குமிடத்தில் 'மனிதர்களின் வஞ்சகத்தால் பின்னுக்குத் தள்ளப் பட்ட ஒருசார் மக்களின் வலியை, ஒரு தலைமுறையையே தலைதட்டி வைத்து விட்டதன் கொடுமையினை  நாம் உணர்ந்து, புரிந்தேத் தீரவேண்டிய கட்டாயம் அங்கே வலுக கொள்கிறது.
 

இப்படி, படத்தின் நெடுகிலும் யதார்த்தம் எனும் ஒற்றை சிறகே விருந்துப் பறக்க, பெருங்குறையாய் அழுத்திச் சொல்ல அத்தனை ஒன்றும் இப்படத்தில் இல்லை என்றாலும், விஜையும் அஜித்தும் ஆர்யாவும் பூர்யாவும் விசால் நடிப்புக் கண்டால் புர்ரென்று போவார்கள்' எனும் வசனத்தை மட்டும் தவிர்த்திருக்கலாம். இது நல்லதையும் கெட்டதையும் நேராக கொண்டு சென்று காட்டும் இடம் என்பதால் இங்கே யாரொருவரையும் மட்டப் படுத்தாமல் அல்லது வேறுமாதிரி மாற்றியேனும் காட்டி யிருக்கலாம்.
 

படத்தில் இன்னொரு இடை சொருகல் அல்லது திணிப்பு எப்படி வேண்டுமாயினும் எடுத்துக் கொள்ளலாம், ஆனால், படத்தின் கதாப் பாத்திரத்தை மிகை படுத்தி, பார்ப்பவரின் உணர்வுகளை சற்று நேரத்திற்கு உறைய வைத்து, பின் மயிர்க்கால் கூச்செரியச் செய்து, உடல் சிலிர்த்துப் போகும் காட்சியும், இசையால் நம்மைக் கட்டிப் போட்டுவிடும் ஓரிடமும் எனில்படத்தின் வெளிச்சம் மிக்கதொரு காட்சி எனில் அது சூர்யா வந்துபோகுமிடம். முகபாவத்தில், நடிப்பில், திறனில், மனதில், குணத்தில் என எதிலும் குறை அற்றவனாக தன்னை நிரூபித்துக் காட்டியிருக்கும் ஒரு வெற்றியாளன் சூர்யா என்பதே நாம் அவர் மேல் கொண்டிருக்கும் அன்பிற்கும் மதிப்பிற்கும் காரணம் என்பதை உறுதிபடுத்துமொரு காட்சி அக்காட்சி. சூர்யாவின் மனதிற்கானத் தோற்றத்தையே அவர் அங்கே வருகையில் அவர் முகம் காட்டுகிறதென்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
 

அதிலும் குறிப்பாக உலகம் அறிந்துக் கொள்ள வேண்டிய அவரின், அல்லது அவர் தந்தை சிவக்குமாருடைய வழிநடத்தலின், அல்லது அவருடைய குடும்பத்தின் சிறப்பு செய்திட்ட இன்னொரு சாதனையின் நேரடி உதாரணம் ஒன்று இருக்குமாயின், அது தான் 'அகரம் பவுண்டேசன்'.
 

இன்று  தமிழர்கள் விரிந்து வாழும் உலகில் எந்தளவிற்கு அகரம் பவுண்டேசன்' பற்றி தெரியப் பட்டிருக்கும் என்பது கேள்விக்குறியக உள்ளபட்சத்தில்; நம் தமிழர்களின் இமை கிழித்து தான் சொல்ல வந்ததை உணர்வுப் பூர்வமாக சொல்லுமொரு ஊடகம் சினிமா என்பதால் அதன் வழியே அகரத்தை உலகின் பார்வைக்கு திறந்து வைக்கவும், அகரம் குறித்த அனைவரின் சுய விமர்சனத்திற்கு சூர்யாவின் பொதுவான பதிலை சூர்யா மூலமே உலக மக்களுக்கு சொல்லவும் இக்காட்சி பாலாவால் சேர்க்கப் பட்டிருக்கிறது. இருந்தும், சூர்யா இங்கே நடிக்காமல் தன் நேர்மையான உணர்வுகளையே இங்கு படப் பிடிப்பிற்கென காட்டிச் சென்றிருக்கிறார் என்பது நாம் அறியத் தக்க உண்மை.
 

ஆக, இப்படி, காலங் காலமாக நிறைய திரைப்படங்கள் வந்து கொண்டிருந்தாலும், ஒவ்வொரு படமும் நமக்கு ஒவ்வொரு நியாயத்தை சொல்லிச் சென்றாலும், இத்  திரைப்படம்; இப்படியொரு வெளியில் காட்டப் படாத மனிதர்களின் வாழ்க்கையை, எந்த ஒரு ஆடம்பரமும் ஆர்பாட்டக் கலப்புமின்றி பதிவு செய்து வைத்திருக்கிறது.

பொதுவாக, இப்படத்தை பொருத்தவரை, யார் ஒருவரை மெச்சினாலும் அதிகமாகவே மெச்சல் வேண்டும், அல்லது பாரபட்சமின்றி எல்லோரையுமே பாராட்டவேண்டும். சண்டை காட்சி, ஒளிப்பதிவு, ஒப்பனை, கட்டிடக் கலை, காட்சிப் பதிவிற்குத் தக்க இடத் தேர்வு என அனைத்துமே சிறப்பு.
 

அதிலும், குறிப்பாக விருது தரும் மையம் இவ்வருடம் இப்படத்தைப் பார்த்துவிட்டு யாருக்கு விருதைத் தருவது என்று குழம்பிப் போனாலும் போகலாம். இல்லை ஒருவேளை அத்தனையையும் சேர்த்து விஷாலுக்கே கொடுத்தாலும் கொடுக்கலாம். ஒருவேளை விஷாலுக்கும் இயக்குனருக்கும் இவ்வருட விருது மறுக்கப் படுமெனில் அதை அத்தனை பெரிய விருதாக அல்லது அத்தனைப் பெரிய விடயமாக நாம் கருத வேண்டியதேயில்லை. காரணம், உழைப்பிற்கு கிடைத்திடாத மதிப்பு; மதிப்பேயில்லை!!
 

 

 

vidhyasagar1976@gmail.com