''அடி
உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவார்.''
திருத்தம்
பொன்.சரவணன்.
பழமொழி:
''அடி
உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவார்.''
பொருள்:
சிக்கலான நேரங்களில் அடி (உதை) உதவுவது போல உடன்பிறந்த அண்ணன் தம்பிகள்
உதவி செய்ய மாட்டார்கள்.
தவறு:
இந்தப் பொருள் தவறானது என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இதை
நாம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம். சிக்கலான நேரத்தில்
அடிப்பது தான் சிக்கலைத் தீர்ப்பதாகச் சொல்வது சரியான கருத்து ஆகாது.
ஏனென்றால் சிக்கலான நேரத்தில் அண்ணன் தம்பி போன்ற உறவுகள் தான்
கைகொடுப்பார்களே தவிர 'அடியும் உதையும்' கைகொடுக்காது. பல நேரங்களில்
இந்த அடியும் உதையும் சிக்கலை மேலும் பெரிதாக்கி விடும். இதை நாம் நடைமுறை
வாழ்க்கையில் நன்கு அறிவோம். எனவே இந்தக் கருத்து தவறாகும் என்பது
தெளிவாகிறது.
அன்றியும் ஒரு சிக்கலைத் தீர்க்க அடிதடி இல்லாமல் சமாதானமான முறையில்
நடந்துகொள்ள வேண்டும் என்று தானே பெரியவர்கள் அறிவுரை கூறுவார்கள். அப்படி
இருக்க இப் பழமொழி ஏன் தவறாக வழிநடத்துகிறது?. சிந்தித்துப் பார்த்ததில்
பழமொழியில் ஏற்பட்ட எழுத்துப் பிழைகளே காரணம் என்பது அறியப்பட்டது. இப்
பழமொழியில் வரும் 'அடி உதவுற' என்ற சொற்களில் தான் பிழை உள்ளது. இச்
சொற்கள் தான் தவறான பொருள் கோளுக்கு வழி வகுத்து விட்டன. இவை இரண்டும்
வேறு ஒரு பொருளை உணர்த்தி நிற்கின்றன.
திருத்தம்:
வழக்கம் போல தூய செந்தமிழ்ச் சொற்கள் இப்பழமொழியில் கொச்சை வழக்காகத்
திரிந்து வேறு பொருளைத் தந்து நிற்கின்றன. 'அடி உதவுற' என்பதற்கு 'அடிபுதைஉறை'
என்பதே திருத்தம் ஆகும். அடி என்றால் பாதம்; புதைத்தல் என்றால் மூடுதல்
அல்லது மறைத்தல்; உறை என்றால் கவசம். மொத்தத்தில் 'அடிபுதைஉறை' என்றால் 'பாதத்தை
மூடும் கவசம் அதாவது செருப்பு' என்று பொருள்.
நிறுவுதல்:
நாம் அன்றாடம் பயன்படுத்தும் செருப்பின் மூலம் அண்ணன்-தம்பி உறவின்
மதிப்பை உணர்த்த வந்த பழமொழி இது. சங்க இலக்கியத்தில் செருப்பினை 'அடிபுதைஅரணம்'
என்று குறிப்பிட்டுள்ளனர். அரணம் என்றாலும் உறை என்றாலும் கவசத்தையே
குறிக்கும். விலங்குகளின் தோலினால் ஆன செருப்பினை சங்க கால வேட்டுவர்கள்
அணிந்தனர். இதற்கு 'தொடுதோல்' என்றும் பெயர். சரி, செருப்பிற்கும்
அண்ணன்-தம்பிக்கும் என்ன தொடர்பு? ஏன் இவற்றை ஒப்பிடவேண்டும்?. அதைப்
பற்றிக் கீழே காணலாம்.
வெளியில் சுற்றித் திரியும் நேரமெல்லாம் நம்மோடு இருந்து நமது பாதங்களைப்
பாதுகாக்கிறது செருப்பு. ஆனால் அதை நாம் எப்போதும் வீட்டுக்கு வெளியில்
தானே விடுகிறோம். தேவைப்பட்டால் அணிந்துகொள்வதும் தேவை இல்லாவிடில் கழற்றி
விடுவதும் செருப்புக்குத் தான் ஒக்கும். நம்முடன் பிறந்த
அண்ணன்-தம்பியரின் உறவினை இப்படிச் செருப்பு போலப் பயன்படுத்த முடியாது.
தேவைப்பட்டால் அண்ணன் என்றும் தம்பி என்றும் உறவு கொண்டாடி விட்டு தேவை
தீர்ந்தவுடன் உறவினை அறுத்துக் கொள்வது இந்த உறவின் முறையில்
சாத்தியமில்லை. செருப்பு அறுந்துவிட்டால் புதிய செருப்பு வாங்கிப்
போட்டுக் கொள்வது மாதிரி புதிய உடன்பிறப்புக்களை நாம் பெறமுடியாது.
செருப்பு அறுந்துவிட்டால் நாம் அதைப் பயன்படுத்தாமல் இருக்கலாம்; தைத்தும்
பயன்படுத்தலாம்; தூக்கியும் போட்டு விடலாம். ஆனால் அண்ணன்-தம்பியருக்குள்
விரிசல் ஏற்பட்டால் விரிசலை சரிசெய்யலாம்; பழகாமல் இருக்கலாம்; ஆனால்
உறவினை ஒரேயடியாக அறுத்துக் கொண்டுவிட முடியாது. என்ன தான் செருப்பு தன்னை
அணிபவருக்காகத் தேய்ந்து சருகாய்ப் போனாலும் ஒரு கட்டத்தில் அதைத் தூக்கி
எறிந்துவிட்டு புதிய செருப்பைப் பயன்படுத்தித் தான் ஆகவேண்டும். செருப்பு
மாதிரி தனக்காக அண்ணன்-தம்பியர் தேய்ந்து சருகாய் ஆகாவிட்டாலும் அவர்களைத்
தூக்கி எறிய முடியாது. அன்றியும் பல்வேறு உறவின் முறைகளுள் அண்ணன்-தம்பி
உறவு மிக முக்கியமானது. உதவி என்று தேவைப்பட்டால் அண்ணன்-தம்பியர் தான்
முன்வருவார்களே ஒழிய அக்காள்-தங்கையோ மாமன்-மச்சானோ வருவதில்லை. உதவி
செய்யும் உறவுகளுள் அண்ணன்-தம்பி உறவே முதன்மையானது என்பதால் தான்
செருப்பையும் அண்ணன்-தம்பி உறவினையும் ஒப்பிடுகிறது இப்பழமொழி. ஒற்றுமையே
இல்லாத இரண்டு பொருட்களை ஒப்பிட்டுக் கூறுவதன் மூலம் ஒன்றின் மதிப்பை
உயர்த்திக் கூறலாம் என்பதற்கு இப்பழமொழி ஒரு எடுத்துக்காட்டாகும்.
இப்பழமொழி உணர்த்தும் சரியான பொருள் இதுதான்: ' அண்ணன்-தம்பியரின் உதவி
செருப்பு போன்றதல்ல.' இனி 'அடிபுதைஉறை' என்ற சொற்கள் எவ்வாறு கொச்சை
வழக்கில் திரிபுற்றன என்று பார்ப்போம். 'புதையல்' என்பது கொச்சை வழக்கில்
'புதயல்' என்று ஆவதுபோல 'உறைமோர்' என்பது கொச்சை வழக்கில் 'உறமோரு' என்று
ஆவதைப் போல 'அடிபுதைஉறை' என்பது கீழ்க்கண்டவாறு ஆனது.
அடிபுதைஉறை > அடிபுதஉற > அடிபுதவுற > அடிஉதவுற
சரியான பழமொழி:
''அடி
புதைஉறை மாதிரி அண்ணன் தம்பி உதவார்.''
|