காஞ்சித் திணை: தமிழர் வாழ்வியல் விழுமியம்.
முர். ப.
கொழந்தசாமி
தனக்கெனத் தனி மரபினை உருவாக்கிப் போற்றிய தமிழ்ப் பண்பாட்டுத்
தொன்மரபினையறியத் தலைநாட் காலத்தே தோன்றிய தொல்காப்பியமும் இலக்கியங்
களும் துணையாகின்றன. தொல்காப்பியத்தின் மூன்றாவது அதிகாரமாகிய
இலக்கணப் புதுமையான, பொருளதிகாரம் இலக்கியத் திறனாய்வாக அமைந்து
இலக்கியப் பாடுபொருள், வகைமை, வடிவம், உணர்ச்சிகள், மரபுகள் போன்றவற்றை
எடுத்துரைக்கின்றது. பாடுபொருள் அடிப்படையில் தொல்காப்பியம் இலக்கியங்களை
வகைமைப்படுத்தி அகம், புறம் என்று பாகுபடுத்தியுள்ளது. புறப்பொருளின்
இலக்கணம் கூறும் புறத்திணையியலில் தொல்காப்பியர் ஏழு புறத்திணைகளை
எடுத்துரைத்துள்ளார். குறிக்கோள் சார்ந்த காமவியல் பாடல்களை அகம் என்றும்
பிற எல்லாவற்றையும் புறம் என்றும் அடையாளப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு
புறத்திணையையும் முறையே அகத்திணைக்குப் புறம்பாகக் கூறி, அவர்
இவ்விரண்டையும் இயைபுபடுத்தியுள்ளார்.
புறத்திணையியலின் முதல் நூற்பா,
அகத்திணை மருங்கின் அரில்தப
உணர்ந்தோர்
புறத்திணை இலக்கணம் திறம்படக் கிளப்பின்
வெட்சி தானே குறிஞ்சியது புறனே
உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே.
என்று அகத்திணை என்றே தொடங்குகின்றது. அகத்திணை இலக்கியத்தைக் குற்றமற
முழுமையாகக் கற்றவர்கள் புறத்திணையின் இலக்கணத்தை விளக்கும்போது இவ்வாறு
அகம், புறம் இரண்டையும் முறையே ஒப்பிட்டுக் காண்பர் என்பதை இந்
நூற்பாவால் அறியலாம். இதனால் தமிழின் சிறப்புத் தன்மையான அகப்பொருளுக்கு
இணையாகப் புறப்பொருளையும் முன்னோர் கருதியமை புலனாகும். வெட்சி, வஞ்சி,
உழிஞை, தும்பை, வாகை, காஞ்சி , பாடாண் என்னும் ஏழு புறத் திணைகளுள் முன்
நான்கும் போர் பற்றியும் பின்னவை போரோடு பொது வாழ்வியலையும்
விளக்குகின்றன. ஆறாவதாக அமைந்துள்ள காஞ்சித் திணை பழந்தமிழர் கண்ட
நிலையாமை/ மாற்றக் கொள்கையை உரைப்பதான மனிதவள மேம்பாட்டு விழுமியமாக
அமைந்துள்ளது. காஞ்சித் திணை பற்றித் தொல்காப்பியர் கூறியுள்ள கருத்துகளை
முதலில் காணலாம்.
பெருந்திணைக்குப் புறம்பான காஞ்சித் திணை நிலையற்ற உலகத்தைப்
பற்றிய கருத்துகளைக் கூறுவதாகும். புறத்திணையியலின் 18ஆம் நூற்பா,
பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும்
நில்லா உலகம் புல்லிய நெறித்தே.
என்று இதன் அடிக்கருத்தைப் புலப்படுத்தியுள்ளது. இது குறித்துக் கூறும்
தமிழண்ணல்
“ போரில் ஏற்படும் நிலையாமையை மட்டுமன்றி உலகப் பொது நிலையாமையையும்
கூறும் விழுமிய நோக்குடன் இது படைக்கப்பட்டுள்ளது”
என்று பாராட்டியுள்ளார். எனவே இது தமிழர் படைத்த வாழ்க்கை விழுமியங்களுள்
ஒன்றாகக் கருதத்தக்கது. காஞ்சித் திணையின் துறைகளை 10+10 என்று இரண்டாகப்
பிரித்துத் தொல்காப்பியர் மொத்தம் 20 துறைகளைக் கூறியுள்ளார்.
காஞ்சித் திணையின் துறைகள் சுட்டும் கருத்துகளாகப்
பின்வருவனற்றைத் தொல்காப்பியப் புறத்திணையியல் 19ஆம் நூற்பா
விளம்புகிறது. அவற்றுள் போர் தொடர்பானவை:
1.
மாற்றுவதற்கரிய கூற்றுவனின் கொடுமையைக் கூறுவது பெருங்காஞ்சி.
2. இளமை கழிந்த முதிய வீரர்கள் மற்றவர்க்குக் கூறிய அறிவுரை
முதுகாஞ்சி.
3.
மறப் பண்பு கருதித் தன்மேற்பட்ட புண் கிழித்துச் சாவது
மறக் காஞ்சி.
4.
போற்றுவாரின்றிப் புண்பட்டுப் போர்க்களத்தே கிடந்தோனைப் பேய்கள்
பாதுகாப்பது
பேய்க்காஞ்சி.
5,
இறந்த வீரனது இயல்புகளைக் கூறி இரங்குவது மன்னைக் காஞ்சி.
6. சூளுரை கூறுவது வஞ்சினக் காஞ்சி.
7.
மனைவி புண்பட்ட கணவனைப் பேய் தொடாதவாறு காத்தது தொடாக் காஞ்சி.
8.
கணவனைக் கொன்ற வேலினால் மனைவி தன்னையும் மாய்த்துக் கொள்வது ஆஞ்சிக்
காஞ்சி.
9.
பகையரசனுக்கு மகள் கொடுக்க மறுப்பது மகற்பாற் காஞ்சி.
10.
இறந்த வீரனது மனைவி அவனது தலையோடு தன் தலையை மோதி இறத்தல்.
இனி வருவன போருக்கு மட்டுமன்றிப் பொதுவானவை.
1.
மிக்க புகழுடன் இறந்த வீர மகனைச் சுற்றத்தார் சுற்றி நின்று, அவன்
பெருமைகளைச் சொல்லிப் புலம்புதல்.
2. யாருமின்றித் தானே தனித்து நின்று தன் கணவன் இறந்து கிடப்பதைக் கண்டு
அழுகின்ற தாங்குதற்கரிய துன்பம்.
3. ஒரு மனைவி தன் கணவனோடு இறந்து கிடந்த துன்பத்தைப் பார்த்து அவ் வழிச்
செல்வோர் கூறிய மூதானந்தம்.
4.
மிக்க வெப்பமுள்ள பாலை வழியில், கணவனையிழந்த ஒரு பெண்
தன்னந்தனியாளாய்ப் புலம்புகின்ற முதுபாலை.
5.
இறந்தவரைப் பற்றிப் பலர் கூடிப் பெருந்துன்பப்பட்டுப் புலம்பும்
கையறுநிலை.
6.
காதலியை இழந்த கணவனின் தபுதாரநிலை.
7.
காதலனை இழந்த மனைவியின் தவநிலை தாபதநிலை.
8.
கற்பினள் தன் அவலத்தைச் சொல்லிக் கணவனுடன் எரியும் நெருப்பில் விழுந்து
மடியும் பாலைநிலை.
9.
போரில் மடிந்த புகழுடைய தன் மகனுடன் தாயும் மடிந்த தலைப்பெயல்நிலை.
10.
தொடர்ந்து பலரை உலகை விட்டுக் கொண்டுபோகும் சுடுகாட்டை வாழ்த்தும்
காடு வாழ்த்து.
இது
குறித்து விளக்கும் க. வெள்ளைவாரணனார்,
‘மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமை’
என்பது முதலாக அமைந்துள்ள
முதல் பத்துத் துறைகளும் இவ் உலகில் அருஞ்சிறப்பினைப்
பெறவேண்டும்
என்னும் வேணவாவைப் புலப்படுத்துவன. ‘பூசல் மயக்கம்’
முதலாக
அமைந்துள்ள அடுத்த பத்துத் துறைகளும் நில்லாத உலகியலைப்
பற்றியொழுகுந் துன்பியல் நிகழ்ச்சிகளைப் புலப்படுத்துவன. இவ்வாறு
காஞ்சித் திணைக்குரிய துறைகள் மக்கள் உள்ளத்தை ஒருவழிப்பட
நிறுத்தும் அருஞ்சிறப்பினையுடைய இருவகை நிலைகளைக் குறித்தலால்
‘நின்ற அருஞ்சிறப்பின் துறை இரண்டுடைத்து’
என்றார் ஆசிரியர். இவ்விரு
வகைத் துறைகளையும் முறையே விழுப்ப வகை எனவும் விழும வகை எனவும்
இரு திறமாகப் பகுத்து விளக்குவர் நாவலர் சோமசுந்தர பாரதியார்
என்று கூறியிருப்பது கருதத்தக்கதாகும்.
மேலும் மேற்கூறிய இருபது துறைகளுள்
பெருங்காஞ்சி, முதுகாஞ்சி, வஞ்சினக் காஞ்சி,
மூதானந்தம்,
முதுபாலை, கையறுநிலை போன்றவற்றில் நிலையாமைக் கருத்துகள்,
நிலைபேறுடைய மானிட மதிப்புகளாகக் கூறப்பட்டுள்ளதை உணரலாம். இவை ‘எதுவும்
மாற்றத்திற்குட்பட்டது ; உலகின் இந்த நிலையாமையை அறிந்து ஏற்று நடந்தால்
ஏமாற்றத்தைத் தவிர்க்கலாம்’
என்னும் அறநெறியை உணர்த்துவனவாக உள்ளன.
நிலையாமை: ஒரு விளக்கம்
இந்த உலகத்தில் காலம், இடம், பொருள், பணி போன்றவை ஒரு மனிதனின்
வாழ்க்கையை வளப்படுத்தத் தேவையான கூறுகளாகும். மனிதன் பண்டங்களையும்
பணிகளையும் நுகர்வதன் மூலம் அவற்றின் பயன்பாட்டைப் பெறுகிறான். மனிதனின்
தேவைகள், விருப்பங்கள், எதிர்பார்ப்புகள் ஆகியவை எண்ணற்றவையாகும். மேலும்
அவை நிலையானவையல்ல; மாறிக்கொண்டே இருப்பவை. இவற்றை நிறைவுறுத்த
மனிதனுக்குப் பொருட்களும் ஆட்களும் தேவைப்படுகின்றனர். இவற்றின்
பயன்பாட்டையடைய மனிதனுக்கு வருவாய் தேவை. ஆனால் அவனுடைய வருமானமோ,
குறைவாகவோ
அல்லது
வரம்புக்குட்பட்டதாகவோ
அமைகின்றது. மனிதன் அதிகமாக ஈட்டும்போதுதான் மிகுதியாக நுகரவும்
விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும். எனவே வருவாய்க்குத்
தக்கவாறே அவனுடைய நிறைவேற்ற முயற்சிகளும் அமையவேண்டும். இருந்தாலும்
கிடைப்பருமை காரணமாகச் சிலவற்றை மனிதனால் எளிதில் அடைய முடிவதில்லை.
அப்போது அவன் விரக்தியடைகிறான். இந்த ஏமாற்றத்தைத் தவிர்க்க மாற்றக்
கோட்பாடு துணையாகின்றது.
தேவை என்பது மனித விருப்பம் அல்லது வேட்கையிலிருந்து தோன்றும்
ஒரு மனநிலையாகும். மனிதனுடைய பெரும்பான்மையான செயல்பாடுகள்
விருப்பங்கள்-
முயற்சிகள்
–
மனநிறைவு
ஆகிய மூன்றையும் மையமாகக் கொண்டுள்ளன. இதைப் பின்வரும் படம் விளக்கும்.
முயற்சிகள்
விருப்பங்கள் = எண்ணற்றவை
முயற்சிகள் = தொடர்ச்சியானவை
வருமானம் = வரையறைக்குட்பட்டது
வளங்கள் = கிடைப்பருமையன
மனநிறைவு = பயன்பாட்டை
உச்சமாக்குதல்
விருப்பங்கள்
மனநிறைவு
தேவையைப் பொருளியல் கண்ணோட்டத்துடன் அணுகுவது இங்குத் தெளிவை
உண்டாக்கும். பண்டங்களையும் பணிகளையும் வாங்கி நுகர்ந்திட விரும்பும்
விழைவு தேவை எனபதாகும். போதிய வாங்கும் சக்தியைப் பின்புலமாகக் கொண்ட
வாங்கும் விருப்பத்தையும், வாங்கவேண்டும் என்னும் அறுதி முடிவு
மேற்கொள்ளுதலையும் பொருளியல் தேவை என்று குறிப்பிடப்படுகின்றனர். ஆனால்
விலை, கிடைப்பருமை, காலம் போன்ற காரணங்களால் தேவை நிறைவேற்றம் மாறுபடும்.
மேற்கூறிய செய்திகளால் மனித வாழ்க்கை தேவையையும் தேவை நிறைவேற்றத்தையும்
அடிப்படையாகக் கொண்டது என்பதும் இவை இரண்டும் ஆளுக்காள் மாறுபடக்கூடியவை;
நிலைத்துநில்லாதவை என்பதும் பெறப்படுகின்றன.
மேலும் ஓரளவு அடிப்படைத் தேவைகள் நிறைவேறியபின், மனிதன் கூடுதல்
தேவையையும் ஏற்படுத்திக்கொள்கிறான். இதற்கு அடங்காத பேராசை
காரணமாகின்றது.
தேவையேற்பு நோக்கில் ஏற்படும் கருத்து மாறுபாடுகளால், மனிதர்களுக்குள்
பல்வேறு கருத்து வேறுபாடுகள், பூசல்கள் போன்றவை தோன்றுகின்றன. புகழ்
வேட்கையும் வீரச் செறிவும் போரையும் உண்டாக்கிவிடுகின்றன. அதனால் ஒருவனை
ஒருவன் அடுதலும் தொலைதலும் உலகத்தியற்கை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆனால் இந்த எண்ணங்களும் முன்னவற்றைப் போலவே நிலையானவையல்ல. இத்தகைய
கருத்துகளை எடுத்துரைப்பது காஞ்சித் திணையின் அடிக்கருத்தாக அமைகின்றது.
மதுரைக் காஞ்சி
:
பத்துப்பாட்டுள் ஆறாவதாகவும் 782 அடிகளில் இயன்ற நெடும்பாட்டாகவும்
அமைந்துள்ள மதுரைக் காஞ்சியும் நிலையாமை என்னும் மாற்றத் தத்துவத்தைத்
தொல்காப்பிய மரபுப்படி சுட்டிக்காட்டுகிறது. பின்வரும் இறுதிப் பகுதி
கூர்ந்துநோக்கத்தக்கது.
பல்சாலை முதுகுடுமியின்
நல்வேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர்
புணர்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்
நிலந்தரு திருவி னெடியோன் போல
வியப்புஞ் சால்புஞ் செம்மை சான்றோர்
பலர்வாய்ப் புகரறு சிறப்பிற் றோன்றி
அரியதந்து குடியகற்றிப்
பெரியகற் றிசைவிளக்கி
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன்மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கிப்
பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப்
பெரும்பெயர் மாறன் தலைவ னாகக்
கடந்தடு வாய்வாள் இளம்பல் கோசர்
இயனெறி மரபினின் வாய்மொழி கேட்பப்
பொலம்பூண் ஐவர் உட்படப் புகழ்ந்த
மறமிகு சிறப்பிற் குறுநில மன்ன
ரவரும் பிறரும் துவன்றிப்
பொற்பு விளங்கு புகழவை நிற்புகழ்ந் தேத்த
இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்தினி துறைமதி பெரும
வரைந்துநீ பெற்ற நல்லூ ழியையே (
759 - 782 )
பாண்டியன் நெடுஞ்செழியன் இளமையிலேயே முடிபுனைந்து போர்த்திறம்
உடையவனாக விளங்கினான். இவன் வெற்றியையும் வீரத்தையும் புலவர் மாங்குடி
மருதனார் கண்டு போற்றினராயினும், போர்ச் செயலின் கொடுமை அவரை வாட்டியது.
புகழ்வார் போன்று மன்னனுக்கு நிலையாமையை உணர்த்தினார். அப்போது மாயத்
தத்துவத்தைக் கூறாமல்,
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு ( 21 )
என்னும் குறட்கருத்தைப் போலவே, நிலையற்றவற்றை மறுந்துவிட்டு
நிலையானவற்றில் கருத்துச் செலுத்துக என்று நெறிப்படுத்தியுள்ளார்.
பல்யாகசாலை முதுகுடுமி போலவும், சிறப்புமிக்க புலவர்களைப் போற்றிய
தமிழ்ச் சங்கம் புரந்த ஓங்குபுகழ் படைத்த நிலந்தரு திருவினெடியோன்
போன்றும் நீயும் புகழுறுக; அதற்குரிய நற்செயல்களை ஆற்றுக; போரியலில்
மட்டும் கருத்துக் கொள்ளற்க என்று முன்னோர் புகழ் கூறி
ஆற்றுப்படுத்துகிறார். மேலும் இங்குப் பயின்றுவரும்
குடியகற்றுதல், இசைவிளக்குதல், பொய்யா நல்லிசை நிறுத்த பெரும்பெயர்
மாறன், பெரியகற்று
போன்ற தொடர்கள் நற்பெயர் பெற்றுப் புகழைப் பெருக்கும் வழிகளைக்
கூறுகின்றன என்பதை அறியலாம்.
நாட்டிற்கரிய பொருளாயவற்றை வேற்றுப் புலங்களினின்றும் கொணர்ந்து
எல்லார்க்கும் வழங்கி நின் குடிமக்களைச் செங்கோன்மையால்
வளப்படுத்துப்
பெருக்கி, மெய்ந்நூல்களை ஓதி நின் புகழையழியாது நிலைநிறுத்தி,
ஞாயிறு
போன்றும் நிறைவெண்டிங்கள் போன்றும் சுற்றத்தாரோடு இனிது
விளங்கிப்
பெரும்பெயரை உடைய பழையனைத் தலைவனாக உடையராய்ப் பகைவரை
வெல்லும் இளம்பல் கோசர் நின்னேவல் கேட்டு ஒழுக இனிதுறைமதி!
என்று மாங்குடி மருதனார் உரைத்துள்ளார். இங்குக் கூறப்படும் செயல்கள்
அவரவர் நிலைமைக்கேற்ப எல்லாராலும் ஒழுகத்தக்கன; அவ்வாறு நடப்பின் அவை
நற்புகழை ஈட்டித் தருவனவாகும். எனவே இவற்றை நிலைபேறுடைய மானிட
மதிப்புகளாக,
மனிதவள மேம்பாட்டு விழுமியங்களாக ஏற்றுப் பரப்பலாம்.
முதுமொழிக்காஞ்சி
மதுரைக் காஞ்சியைப் போலவே பதினெண்கீழ்க்கணக்கில் மூதுரை அற
இலக்கிய வகைமை நூலான முதுமொழிக்காஞ்சியும் வாழ்வியல் விழுமியங்களை, மனிதவள
மேம்பாட்டுக் கருத்துகளை உரைத்துள்ளது. தொல்காப்பியப் புறத்திணை சுட்டிய
‘ ஊரொடு தோற்றம்’,
‘
குழவி மருங்கினும் கிழவதாகும்’
போன்ற துறைகள் தனிச் சிற்றிலக்கியங்களாக வளர்ந்ததைப் போலக் காஞ்சித்
திணையின் துறைகளில் ஒன்றான முதுகாஞ்சித் துறை மற்றும் புறப்பொருள்
வெண்பாமாலை சுட்டும் முதுமொழிக்காஞ்சி ஆகியவற்றையொட்டிய இலக்கிய
விளக்கமாக, அதே துறைப் பெயருடன் முப்பொருளையும் விளக்குவதாக நூறு
செய்யுள்களில் இது அமைக்கப்பட்டுள்ளது. பத்து அதிகாரங்களில் முறையே
பத்துச் செய்யுள்கள் என்று படைக்கப்பட்டுள்ளது. இதன் ஒவ்வொரு செய்யுளும்
ஒரு முதுமொழியை உரைப்பதாகவும் கருத்து நிலையில் முன்னோர் மொழியைப்
போற்றியும் படைக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் அதிகாரத்தின் முதற் செய்யுளும் “
ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்”
என்று தொடங்கும் குறள் வெண்செந்துறையிலும் மற்ற ஒன்பதும் தனித்தனிக்
குறட்டாழிசையிலும் ஆக்கப்பட்டுள்ளன. மனித வாழ்க்கை பிறப்புக்கும்
இறப்புக்கும் இடைப்பட்டது. இதில் முதுமை தவிர்க்கமுடியாத இயற்கை
நிகழ்வாகும். அதைச் சீராக அமைத்துத் தனது கால்வழியினரும் சமூக
உறுப்பினர்களும் மேலுற அறிவுரை வழங்குவதோடு அதற்கேற்ப முதியோரும்
வாழ்ந்துகாட்ட வேண்டும். பிறர் அன்பு பாராட்டும்படி வாழ்வதோடு, பிறருடைய
மதிப்பிற்குரியவராகவும் விளங்கவேண்டும். பரந்த கல்வியறிவு, அதற்கேற்ற
பண்பாளுமை போன்றன புகழ்சார் வாழ்வுக்கு அடிப்படையானவை. திறமைகள்
இருந்தாலும் சாதனை படைக்கும் வன்மையில்லாவிட்டால் பயனில்லை. எவ்வளவு
காலம் வாழ்ந்தான் என்பதைவிடவும் எத்தகைய சாதனைகள் செய்துள்ளான் என்பதைக்
கொண்டே மனிதன் மதிப்பிடப்படுவான். ஆள்வினையுடைமையே ஆளுமையின் அடிப்படை
என்பதை “ சீருடை ஆண்மை செய்கையின் அறிப”
( 40 ) என்று இது எடுத்துரைக்கின்றது. இத்தகைய செயல் ஆளுமையை மேன்மையான
குணங்களும் அவற்றிற்குக் காரணமான ஆக்கப்பூர்வமான எண்ணங்களும்
அமைக்கின்றன. அதனால் உள்ளத்தால் உண்மையான ஊக்கத்தையும் செயல்பாட்டுச்
சீர்மையையும் பயிற்சியால் முயற்சித்து அமைத்துக்கொள்ளவேண்டும்.
விருந்தோம்பல், உறவினர்களைப் பேணல், சமூக மேம்பாட்டுச் சிந்தனை
போன்றவற்றில் அவரவர் நிலைக்குத் தக ஒழுகலாம். கொடை உயர்ந்த
நல்லெண்ணத்தின் அடிப்படையில் செய்யப்படவேண்டும் என்று மதுரைக் கூடலூர்க்
கிழார் ( 22, 48, 49, 71 ) சுட்டியுள்ளார். இத்தகைய வண்மை ஒருவனுக்கு
விண்ணாடு புகும் நுழைவுச் சீட்டாக அமையும்.
மனிதம் நலமுற நாநலம் தேவை என்பது கிழாரின் உள்ளக் கிடக்கை. சமூக
விலங்கான மனிதன் கூடிவாழும் இயல்புடையவன். தனி மனிதனும் ஒட்டுமொத்தச்
சமுதாயமும் உயர்ந்து விளங்க மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.
தற்பழி தரும் தீமைக்கு அஞ்சி(06), தன்னை மேம்படுத்தி (09), அருள்ளத்துடன்
விளங்கி (12), போலி கலவாத உள்ளன்போடு நட்பாடி(13), கீழ்மைச் சிறுமைகளைப்
புறக்கணித்து(30), இரவாமல் ஈந்து(59), அல்லினத்தை விலக்கி(90) நன்மை
செய்வோரைப் போற்றி, நாளும் உயர்வை ஓங்குவித்து(91), பிறர் குறிப்பறிந்து
ஒழுகி(100) சிறக்கும் சமூக விழிப்புணர்வை இந் நூல் வலியுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு மனிதனும் பகுத்தறிவை வளர்த்து, அறிவியல் மனப்பான்மையைக்
கைக்கொண்டு, தன்னிலை விழிப்புணர்ச்சி பெற்று வையத்துள் வாழ்வாங்கு
வாழ்ந்து சிறந்தால் மேன்மையடையலாம் என்பது கிழாரின் வழிகாட்டுதல்.
குறிக்கோளின்றிக் கெட்டேன் என்று அப்பர் புலம்பியதைப் போல வாழத்
தெரியாமல் வருந்துவோரே அதிகம். அறிவுடைமை, வாய்மை, வண்மை, நாவன்மை, ஈகை,
கால மற்றும் உணர்ச்சி மேலாண்மை போன்ற பண்புகளைக் கொண்டால் வானுயர்
வாழ்க்கை வசமாகும். நிலையாமையை மட்டும் கூறாமல், வளமான நல்வாழ்வுக்கு
வழிகாட்டும் வாழ்திறன் ஆளுமைக் கோட்பாடுகளின் பெட்டகமாக முதுமொழிக்காஞ்சி
திகழ்கின்றது.
புறநானூறு
புறநானூற்றில் வரும் ‘மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர், தம் புகழ்
நிறீஇத் தாமாய்ந்தனரே’(165)
இன்னா தம்மவிவ் வுலகம், இனிய காண்கவிதன் இயல்புணர்ந்தோரே ( 197) போன்ற
கூற்றுகளும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’(192)
போன்ற பொருண்மொழிக்காஞ்சித் துறையில் அமைந்த 17 பாடல்களும் இவ்வாறே வளமான
நல்வாழ்வுக்கு வழிகாட்டும் வாழ்திறன் ஆளுமைக் கோட்பாடுகளைக் கூறுகின்றன.
திருக்குறள்
வான்மறையான வள்ளுவம் நிலையாமை அதிகாரத்தில் கூறும்,
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை ( 331 )
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல் ( 333 )
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாளது உணர்வார்ப் பெறின் ( 334
)
போன்ற குறட்பாக்களும், மேலும்,
ஊடற்கண்
சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதென் நெஞ்சு (
1284 )
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சம் துணயல் வழி ( 1299 )
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும் ( 1327
)
ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின் ( 1330 )
என்னும் குறள் மொழிகளும் நிலையாமை உணர்வை வெளிப்படுத்துவன. பொருள்,
செல்வம், காலம், உணர்ச்சிகள், மனநிலை போன்றவை நிலையாக நில்லாமல் மாறி
வருவதை இவை அறிவுறுத்தியும் பதிவுசெய்தும் நல்வாழ்வுக்கு வழிகாட்டிச்
செல்கின்றன.
பிறவற்றில்
இந்தியச் சமயங்கள் மனித வாழ்க்கையில் பொருளில்லை; இறைவனே அதற்குப் பொருள்
உண்டாக்குவான் என்னும் மாயைத் தத்துவத்தை முன்வைத்துக் கொள்கைகளை
உருவாக்கியிருக்கின்றன. ஆனால் மேலை நாட்டில் தோன்றிய சமயங்கள் மனித
வாழ்க்கை பொருளுடையது என்னும் உடன்பாட்டுப் பாங்கை அடிப்படையாகக்
கொண்டுள்ளன. ஆயினும் பொதுநிலையில் இவை நிலையாமைத் தத்துவத்தை
வலியுறுத்துகின்றன.
அறிவியலிலும் மாற்றக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. திரவம்
திடப்பொருளாவதும், திடப்பொருள் திரவமாவதும், முழுமை பகுதியாவதும், பகுதி
முழுமையாவதும் கண்கூடு. உளவியலிலும் மனத்தின் இயல்பு மாற்றத்தை
ஏற்றுக்கொண்டுள்ளனர். மனத்தைக் குரங்காக உருவகிப்பது இதனாலேயே.
புறப்பொருள் வெண்பாமாலை காஞ்சித் திணையைப் போர்த் திணையாகக் கூறி,
பொதுவியற்படலத்தில் சிறப்பிற் பொதுவியற்பால, காஞ்சிப் பொதுவியற்பால
என்னும் பகுதிகளில் மாற்றத் தத்துவத்தைப் பதிவுசெய்துள்ளது.
தொகுப்புரை
உள்ளது சிறத்தல் உயிர்களின் பண்பு. அதற்கேற்ப அனைத்து
நிலைகளிலும் சிறந்தோங்க வழிகாட்டுவதாகக் காஞ்சித் திணை அமைந்துள்ளது. இது
எடுத்துரைக்கும் நிலையாமை/ மாற்றத் தத்துவம் உலகின் இயல்பை
விண்டுரைக்கும் உயர்விளக்கம். இதை மதுரைக்காஞ்சி,
முதுமொழிக்காஞ்சி, திருக்கறள் முதலிய இலக்கியங்களும் வழிமொழிந்துள்ளன.
இதன் உண்மையை அறிந்து புகழீட்டினால் ஒவ்வொரு மனிதனும் உயர் வாழ்க்கையை
வசமாக்கலாம். அதனால் காஞ்சித் திணையைப் பண்டைத் தமிழர் கண்ட வாழ்வியல்
விழுமியமாக ஏற்கலாம்.
துணைநின்றவை
க. வெள்ளவாரணன்(ஆய்வுரை), தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 1983.
தமிழண்ணல்(உரை.), தொல்காப்பியம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2008.
பொருளியல் கோட்பாடுகள், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம், 2005.
புலியூர்க் கேசிகன்(உரை.), திருக்குறள், பூம்புகார் பதிப்பகம், சென்னை,
2007.
அற இலக்கியங்கள், தமிழ்ப் பிரிவு, தொ.க. இயக்கம், அண்ணாமலைப்
பல்கலைக்கழகம், 2007.
கூகுல் இணையச் செய்திகள்.
&
கட்டுரையாளர் இலக்கண, தத்துவ, உளவியல், பொருளியல் துறைப்
பேராசிரியர்களோடு
2010 சனவரி முதல் வாரத்தில் நடத்திய கலந்துரையாடல்.
--------------------------------------------------
muthubilla2@gmail.com
|