தமிழ்ப் பொருண்மையியல் வளம்
முனைவர் ப. கொழந்தசாமி,
உயர்தனிச் செம்மொழியான தமிழ்மொழி இலக்கண இலக்கிய வளம் பெற்றிருப்பதோடு
இவற்றின் பல்வேறு கோணங்களையும் உள்ளடக்கியதாகவும் மிளிர்கின்றது. இன்று
கிடைக்கும் இலக்கண நூல்களுள் தொன்மையானதான தொல்காப்பியம் எழுத்து, சொல்,
பொருள் என்னும் மூன்று அதிகாரங்களில் மொழி மற்றும் இலக்கிய அமைப்பு
விளக்கங்களையும் பொருண்மையியல் கொள்கைகளையும்
தெளிவுறுத்தியுள்ளது. தொல்காப்பியத்தில் கூறப்பட்ட எழுத்து, சொல், அகம்,
புறம், யாப்பு, அணி, வண்ணம், பாட்டியல் முதலிய இலக்கணச் செய்திகள்
பிற்காலத்தில் தனிநூல்களாக வளர்ந்தது போலப் பொருண்மையியல் தனித்
துறையாக வளரவில்லை; ஆயினும் அனைத்து இலக்கண நூல்களிலும் இலக்கண
இலக்கிய உரைகளிலும் மொழிப் பொருண்மையியல் செய்திகள் இலக்கண
விளக்கத்தின் ஒரு கூறாக ஆங்காங்கே சுட்டப்பட்டுள்ளன. இந்தச்
செய்திகளை உரையாசிரியர்கள் விரிவாக விளக்கியுள்ளனர். சான்றாக,
தொல்காப்பியச் சொல்லதிகாரம் கிளவியாக்கத்தின்
முன்னுரையில் உரையாசிரியர்கள் தந்துள்ள விளக்கங்கள் சிலவற்றைக்
காட்டலாம். அவை வருமாறு:
“ சொல்லென்பது எழுத்தொடு புணர்ந்து பொருள் அறிவுறுக்கும் ஓசை.
அதிகாரம் என்பது முறைமை”
( இளம்.), “ சொல்லாவது எழுத்தோடு
ஒருபுடையான் ஒற்றுமையுடைத்தாய்ப் பொருள் குறித்து வருவது”
(சேனா.),
“ சொல்லென்றது எழுத்தினான் ஆக்கப்பட்டு இருதிணைப்
பொருட்டன்மையும்
ஒருவன் உணர்தற்குக் கருவியாம் ஓசையை”
(நச்சர்),
“ சொற்றான் இரண்டு வகைப்படும். தனிமொழியும் தொடர்மொழியும்
என.
அவற்றுள், தனிமொழியாவது, சமய ஆற்றலால் பொருள்
விளக்குவது.
தொடர்மொழியாவது, அவாய்நிலையானும் தகுதியானும்
அண்மைநிலை-
யானும் இயைந்து பொருள் விளக்குந் தனிமொழி ஈட்டம்”
(சேனா.),
“ அதிகாரம் என்னும் சொற்குப் பொருள் பல உளவேனும்,
ஈண்டு அதிகாரம்
என்றது ஒரு பொருள் நுதலிவரும் பல ஓத்தினது தொகுதியை
”
(சேனா.),
“ அதிகாரம் என்ற பொருண்மை என்னையெனின், முறைமை”
(
கல்லாடனார்)
“ வழுக் களைந்து சொற்களை ஆக்கிக்கொண்டமையான், இவ்வோத்துக்
கிளவியாக்கம் ஆயிற்று. ஆக்கம்- அமைத்துக் கோடல்; நொய்யும்
நுறுங்கும்
களைந்து அரிசி அமைத்தாரை, அரிசியாக்கினார் என்பவாகலின். சொற்கள்
பொருள்கள் மேல் ஆமாறு உணர்த்தினமையால் கிளவியாக்கம் ஆயிற்று எனினும்
அமையும். பொதுவகையாற் ‘கிளவி’
என்றமையால், தனிமொழியும் தொடர்மொழியும்
கொள்ளப்படும். கிளவி, சொல். மொழி என்னுந்
தொடக்கத்தனவெல்லாம்
ஒருபொருட் கிளவி
”(சேனா.),
இவற்றால் அவர்தம் பொருண்மையறிவு புலனாகிறது. இத்தகைய பொருள் பற்றிய
விளக்கங்கள் இன்றைய மொழிப் பொருண்மையியல் (
SEMANTICS
)
கொள்கைகளோடு பெரும்பான்மையும் பொருந்துவனவாக அமைந்துள்ளன. சான்றாக
“கிளவி, சொல். மொழி என்னுந் தொடக்கத்தனவெல்லாம் ஒருபொருட் கிளவி”
என்னும் மேற்கூறிய சேனாவரையரின் விளக்கத்தினைக் கூறலாம். ஒரு பொருளைக்
குறிக்கப் பல சொற்கள் வழங்குமானல், அவை ஒருபொருட் பன்மொழிகள் (synonyms)
எனப்படுகின்றன. இதன் நுட்பத்தையுணர்ந்து மேற்கூறியவாறு சேனாவரையர்
விளக்கம் தந்துள்ளார். இத்தகைய சொல் விளக்கங்களைத் தொகுத்து
இளங்குமரனார்
உரையாசிரியர்கள்
கண்ட சொற்பொருள் நுண்மை விளக்கம் என்னும்
நூலை
உருவாக்கியுள்ளார். இதனால் தொல்பழங்காலத்திலேயே தமிழர் மொழிப்
பொருண்மையியல் கொள்கைகளைத் தெளிவாக அறிந்திருந்தமை புலனாகும். ஆனாலும்
பிற இலக்கணச் செய்திகள் கால வளர்ச்சியில் தனி நூல்களாக வளர்ந்தது போலப்
பொருண்மையியல் வளரவில்லை; ஆயினும் நன்னூல், யாப்பருங்கலம்,
தண்டியலங்காரம், பாட்டியல் நூல்கள் போன்றவற்றிலும் இலக்கண இலக்கிய
உரைகளிலும் பொருண்மையியல் கொள்கைகள் ஆங்காங்கே சுட்டப்பட்டுள்ளன.
இவற்றால் தமிழின் பொருண்மை வளத்தை அறியமுடிகிறது.
தொல்காப்பியத்தில்
: தமிழில் எந்தவோர் ஆய்வானாலும் அது தொல்காப்பியத்திலிருந்தே தொடங்குவது
மரபு. அந்த அளவுக்குத் தொல்காப்பியத்தில் இலக்கண, இலக்கியக்
கொள்கைகளுக்கான ஆய்வுக் களம் பரந்து கிடக்கின்றது. ஒல்காப் புகழ்த்
தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று
அதிகாரங்களிலும் பொருண்மையியல் செய்திகள் பேசப்பட்டுள்ளன. எழுத்து என்பது
பொருள் தரக்கூடிய, ஒரு மொழியின் நுண்ணலகு என்னும் கொள்கை
தொல்காப்பியத்தில் புதைந்து கிடக்கிறது. எழுத்துகளை முதல், சார்பு என்று
இரண்டாக வகைப்படுத்தி, முதலை உயிர், மெய் என்று வகைப்படுத்தியது
பொருண்மைச் சார்புடையதாகும். இலக்கணச் செய்திகளைக் காரணப் பெயர்களாக
அமைந்த கலைச்சொற்களால் விளக்கியுள்ளமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
மேலும் என்ப, என்மனார் முதலிய சொற்களால்
தனக்கு முன்னிருந்த இலக்கண மரபையும் வெளிப்படுத்தியுள்ளமை பொருண்மைச்
செய்தியாகும். அதனால் தொல்காப்பியம் என்னும் தொடரை தொல் + காப்பு +
இயம் என்று பிரித்து, பழமையைக் காத்து இயம்பும் நூல் என்று
போற்றுவார் ச.வே. சுப்பிரமணியன்1.
இனி, தொல்காப்பியத்தின் ஒவ்வோர் அதிகாரத்திலும் காணப்படும் பொருண்மையியல்
சார்ந்த செய்திகளைக் காணலாம். தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் பாடிய
பாயிரம்,
வழக்கும்
செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி ( அடிகள் 4,
5 )
என்று, தொல்காப்பியர் உலக வழக்கையும் செய்யுள் வழக்கையும் முறைப்படி
ஒருங்கே ஆராய்ந்து இலக்கணம் சமைத்தார் என்று கூறும்போது “பொருளும்”
என்று பொருளதிகாரத்தைக் கருதிக் கூறியிருப்பினும் மொழிப்பொருள்
என்று அதற்குக் கூடுதல் பொருள் கொள்ளவும் வாய்ப்புள்ளது.
எழுத்ததிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில் முதல் நான்கும் கருவி;
பின்னைந்தும் செய்கை என இளம்பூரணர் கூறியுள்ளமை பொருண்மைச்
சார்பானதாகும். இது குறித்து விளக்கும் தமிழண்ணல்,
செய்கை
என்பது செய்து பார்ப்பது: கருவி முன்னதாக அங்ஙனம் புணர்த்துச்
சொல்லும்
தொடருமாய் அமைவனவற்றிற்குரிய அடிப்படையான எழுத்துகளின்
தன்மைகளையும்
அவை நிற்குமிடம், சேரும் நெறிமுறை போல்வனவற்றையும் விளக்குவது.
இவற்றிலிருந்து எழுத்திலக்கணம் என்பது தனியெழுத்துகளின்
தன்மைகளை விளக்கி,
அவை சொல்லிடையே அமையும்போதும் சொற்கள் பல தொடர்ந்து புணரும்போதும்
அமையும் விதங்களையும் விளக்குகிறது என்பது புலனாகிறது2
என்று சுட்டியுள்ளமை கருதத்தக்கது. எனவே அதிகார\இயல் அமைப்பு, பொருள்
நோக்கில் திட்டமிட்டு அமைக்கப்பட்டமை தெளிவாகும்.
தொல்காப்பியர் எழுத்துகளை முதல், சார்பு என்று இரண்டாகப் பிரித்து,
முதலெழுத்துகளை உயிர், மெய் என்று வகைப்படுத்தியது பொருண்மைச்
சார்புடையதாகும். முதலெழுத்துகள் எனப்பட்ட முப்பதும் தனித்தனி
ஒலியன்களாகும். அதாவது தனி ஒலிப்பு முறையும் வருகையும் உடையவை; ஆய்தம்
தவிர்ந்த சார்பெழுத்துகளோ மாற்றொலிகள். இந்த அடிப்படையில் முதலெழுத்துகள்
பாகுபடுத்தப்பட்டன. அடுத்து உயிரெழுத்துகளை ஒலிப்புக் கால அளவின்
அடிப்படையில் குறில், நெடில் என்று பிரித்து, அவை பொருள்
மாறுபாட்டையுண்டாக்கும்
தனித்தனி ஒலியன்கள்
என்பதை ஆசிரியர் உணர்த்தியுள்ளார். இது போலவே மெய்யும் உயிரும் சேர்ந்த
எழுத்துச் சேர்க்கைக்குப் பெயரிடும்போது, தலைமை நோக்கி
உயிர்மெய் என்று பெயரிட்டமை பொருண்மைச் சார்பானதாகும். ஓசை
நீட்டத்திற்காக அளபெடை அமையும்போது நெடிலுடன் ஒத்த குற்றெழுத்து இணைத்து
[ஆஅடு] எழுதிக் காட்டப்படும். ஆனால் ஆய்தம்
அளபெடுக்கும்போது எழுத்தில் எழுதிக்காட்டப்பட மாட்டாது என்பதை,
உருவினும் இசையினும் அருகித் தோன்றும்
மொழிக்குறிப் பெல்லாம் எழுத்தின் இயலா
ஆய்தம் அஃகாக் காலை யான ( மொழி மரபு, நூற்பா 40 )
என்னும் நூற்பாவில் ஆசிரியர் குறித்துக் காட்டியுள்ளார். இதில்
நிறத்தையும் ஓசையையும் குறித்துவரும் ‘கஃறெனும்’
முதலிய ஆய்த எழுத்துடைச் சொற்களை இத்தகைய ஒலிக்குறிப்பால்
பொருளுணரும் முறையைச் சுட்டியுள்ளார்.
ஒரு சொல்லிலுள்ள எழுத்துகளின் அடிப்படையில் சொற்களை
ஓரெழுத்தொரு மொழி
[ஆ, ஈ], ஈரெழுத்தொரு மொழி [ ஆடு, எடு ], தொடர்மொழி [ஆட்டு,
ஈட்டம், காட்டினான்......] என்று பாகுபடுத்தியுள்ளார்3.
நெடுங்கணக்கில் ஓரெழுத்துத் தனியாக ஒலிக்கும்போது [அ, ஆ.......]
சொல்லாகாது; தொடரின் உறுப்பாக [ ஆ வந்தது. ] அமையும்போது
மட்டுமே சொல்லாகும். செய்யுளில் சில சொற்களில் போலி எழுத்துகள்
அமைந்தாலும்[ போலும்> போன்ம்] அவை பொருள் மாற்றத்தை ஏற்படுத்தா.
அது போலவே எழுத்துகளோடு சாரியைகள் சேர்ந்து வந்தாலும் [ அகரம் = அ]
எழுத்தின் பொருளியல்பு மாறாது. அ, இ, உ என்னும் மூன்று சுட்டெழுத்துகளும்
முறையே சேய்மை, அண்மை, இடைமை ஆகியவற்றைச் சுட்டி வருதலையும்; ஆ, ஏ, ஓ
என்னும் மூன்றெழுத்துகளும் வினாப் பொருளை ஏற்படுத்துதலையும்
தொல்காப்பியர் வெளிப்படுத்தியுள்ளார்4.
எனவே அப்பா என்பதைச் சூழல்நோக்கிப் பொருள் உணரவேண்டும்.
மொழிப் பயன்பாட்டில் தனிச் சொல்லைவிடவும் தொடரின் பயன்பாடே மிகுதி. எனவே
தமிழ்மொழி அமைப்பில் புணர்ச்சிக்கு முதமையான இடம் உண்டு. தொல்காப்பிய
எழுத்ததிகாரத்தில் உள்ள ஒன்பது இயல்களில் புணரியல், தொகைமரபு, உருபியல்,
உயிர்மயங்கியல், புள்ளிமயங்கியல், குற்றியலுகரப் புணரியல் என்னும் ஆறு
இயல்கள் புணர்ச்சி குறித்து விளக்குகின்றன. மொழி முதல்\ இறுதி
எழுத்துகளைப் பட்டியலிட்டு, புணர்ச்சியில் உயிர்மெய்யீறு உயிரீறாக
நிற்கும் என்று சுட்டி, சொற்கள் தம்முள் புணருமாற்றை நிலை\ வரு
மொழிகளின் இலக்கணப் பிரிவின் அடிப்படையில் நான்கு அமைப்புகளாக,
நிறுத்த
சொல்லின் ஈறாகு எழுத்தொடு
குறித்துவரு கிளவி முதலெழுத்து இயையப்
பெயரொடு பெயரைப் புணக்குங் காலும்
பெயரொடு தொழிலைப் புணக்குங் காலும்
தொழிலொடு பெயரைப் புணக்குங் காலும்
தொழிலொடு தொழிலைப் புணக்குங் காலும்
மூன்றே திரிபுஇடன் ஒன்றே இயல்பென
ஆங்கந் நான்கே மொழிபுணர் இயல்பே (புணரியல், நூற்பா 108 )
என்னும் நூற்பாவில் அறிமுகப்படுத்தியுள்ளார். ஒரு சொல்லின் ஒலி\வரி
வடிவம் அது தனித்து நிற்கும்போதை விடவும் புணர்ச்சியில் வேறுபட
வாய்ப்புள்ளது [என்+தந்தை > எந்தை, பொன்+பூ> பொலம்பூ]. சொற்பொருள்
உணர்தலில் புணர்நிலை மாற்றங்கள் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அவை
நோக்கற்குரியன என்னும் கருத்தில் புணர்ச்சி இலக்கணத்தைத் தொல்காப்பியர்
விரிவாக வெளிப்படுத்தியுள்ளார். புணர்ச்சி இயல்பாகவும் [ நல்ல பையன்]
ஒலித் திரிபுடனும் நடக்கலாம். அத்தகைய திரிபுக்கான வாய்ப்புகளை
மேற்குறித்த 108ஆம் நூற்பாவில் “மூன்றே திரிபு”
என்று கூறி, அடுத்த நூற்பாவில், மெய் பிறிதாதல் [ கடல்+கரை>
கடற்கரை], மிகுதல் [வர+சொல்>வரச்சொல்], குன்றல்
[மரம்+வேர்> மரவேர்] என்னும் மூன்று திரிபுகளைக் கூறியுள்ளார். தொடர்ந்து
111ஆம் நூற்பாவில் மரூஉச் சொற்களும் [ஆந்தை, எந்தை] மூலச்
சொற்களைப் போலவே புணரும் என்று வகுத்துள்ளார். அதோடு புணர்ச்சியின்
பொருளடிப்படையில் வேற்றுமை, அல்வழி என்னும் பெருந்தாக்கத்தை
ஏற்படுத்தும் இரண்டு நிலைகளைக் காட்டியுள்ளார். புணர்ச்சியில் எழுத்து\
சாரியை மிக வாய்ப்புண்டு.5 ஆனால் இவை பெரும்பாலும்
பொருள் மாற்றத்தை ஏற்படுத்தா. பேச்சு மொழியில் ஒலிப்பு முறை [தாமரை, தா
மரை] தொடரின் பொருளை மாறுபடுத்தும். இவற்றைக் குறிப்பினால் பொருளுணர
வேண்டும்.6
நீ, தாம், நாம் போன்ற பதிலிப்பெயர்ச் சொற்கள் வேற்றுமை ஏற்கும்போது
திரியும்.7
பல,
சில ஆகியனவும் புணர்ச்சியில் உருமாறும். இவையும் பொருள் மாற்றத்தை
ஏற்படுத்தா. ஒருபொருட் பன்மொழிகளின்[ஒடு, உதி] குறிப்பிட்ட
சூழல்பொருளுக்கேற்பப் புணர்ச்சியமையும். இவ்வாறு பொருள் தொடர்புடைய
புணர்ச்சி விதிகளைக் கூறி, புள்ளி மயங்கியலின் இறுதி நூற்பாவிலும்
எழுத்ததிகாரத்தின் இறுதி நூற்பாவான புறனடை நூற்பாவிலும், இதுகாறும்
கூறியவற்றைக் கொண்டு மொழியியல்பையும் வழக்கையும் பொருந்துமாறு
எண்ணிப் பிற முடிபுகளை அமைக்க என்று வழிகாட்டி, மேலாராய்ச்சி
வளர்ச்சிக்கு வாய்ப்பளித்துள்ளார்.
தொல்காப்பியச் சொல்லதிகாரத்திலும் உரைகளிலும் பொருண்மையியல்
குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தல்,
சொல் தன்னையும் பொருளையும் அறிவித்தல், குறிப்பாகவும் வெளிப்படையாகவும்
பொருளுணர்த்தல் [ஒப்புக: ஆக்டன் ரிச்சர்ட்ஸ் பொருள் முக்கோணம்], திணைபால்
பகுப்பும் இயைபும், வினாவிடையாக அமையும்\ வணிகக் கருத்தாடல் மரபுகள்,
தகுதி வழக்கும் இயல்பு வழக்கும், இனச்சுட்டிலாப் பண்படைப் பெயர், இயற்கை\
செயற்கைப் பொருட்களைக் கூறும் முறை, வண்ணச் சினைச்சொல், இரட்டைக் கிளவி,
இனஞ்செப்பல், வேற்றுமை\ மயக்கம், பெயருக்கு ஒட்டாக வேற்றுமை வரல், பெயர்
காலங்காட்டாமை, வினை காலங்காட்டி வேற்றுமையேலாமை, வாய்பாடுகளால் இலக்கணம்
சுட்டியமை போன்றவை பொருண்மையியல் விளக்கங்களாகும். இடையியலிலும்
உரியியலிலும் தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களும் தொல்காப்பிய
எச்சவியலும் சுட்டியுள்ளவை தமிழ்ப் பொருண்மையியல் கோட்பாடுகளாக
ஏற்கத்தக்கன. இவை குறித்துக் கட்டுரைகளும் நூல்களும் வெளிவந்திருத்தலின்
இட அருமை கருதி இங்கு விளக்கப்படவில்லை.
தொல்காப்பியப் பொருளதிகாரத்திலும் பிற பொருளிலக்கண நூல்களிலும்
இலக்கியங்களிலும் தொல்காப்பிய எச்சவியலிலும் இவற்றின் உரைகளிலும் தமிழ்
இலக்கியப் பொருண்மையியல் கோட்பாடுகள் புதைந்து கிடக்கின்றன; இவற்றில்
கூறப்பட்டுள்ள பொருண்மையியல் பற்றி விரிவான ஆய்வுகள்
வெளிவரவில்லை. க. பாலசுப்பிரமணியம், செ.வை. சண்முகம், ப. கொழந்தசாமி
போன்றோர் அண்மையில் அடிப்படை ஆய்வுகள் சிலவற்றை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்ப் பொருண்மையியலுக்கு ஆய்வளிப்பைத் தந்துவரும் க. பாலசுப்பிரமணியம்,
தொல்காப்பியரின் மொழி இலக்கண மாதிரிப் படிவம் என்ன என்பதைப்
புரிந்துகொள்ளுதல், அதனுள் பொருண்மையியல் அமைப்பையும் அதன்மூலம்
பொருண்மையியல்
கோட்பாட்டையும் புரிந்துகொள்ள உதவும்.
வரைவு
கடாதல், படை இயங்கு அரவம் போன்ற தொடர்களாலும் பின்வா
என்றல் போன்ற வாக்கிய அமைப்புகளலும் விளக்கும் கருத்துருவாக்கம்
அது.
இக் கருத்துருவாக்கத்தின் அடிப்படையிலான மொழிப் பொருண்மையமைப்பு
இதுவரை மொழியியலாளரால் ஆராய்ந்து வரையறுக்கப்படவில்லை. இலக்கணப்
பொருண்மை
சொற்பொருண்மையிலிருந்து
வேறுபட்ட மொழிப் பொருண்மை அமைப்பிற்கு ஒரு கட்டமைப்பினைத் தொல்காப்பியர்
பொருளதிகாரத்தில் வகுத்துள்ளார். இவ் அமைப்பின் கூறுகள் இன்னும் விரிவாக
ஆராயப்பெற்றால் அவ் அடிப்படையில் இன்றைய மொழியை ஆய்வதற்கும் பொருத்தமான
விளக்கமாதிரிப் படிவத்தை உருவாக்கமுடியும். இது மொழிப் பொருண்மையியல்
வளர்ச்சிக்கு, தொல்காப்பியத்தின் தமிழ் இலக்கண மரபின் கொடையாயமையும்8
என்று கருத்துரைத்துள்ளார். இவர் பொருளதிகாரத்தின் பொருண்மையியலை
வெளிப்படுத்தி இதற்கான மேலாய்வு வாய்ப்புகளையும் இக் கட்டுரையில்
எடுத்துரைத்துள்ளார். தனக்கெனத் தனி மரபினை உருவாக்கிப் போற்றிய தமிழ்ப்
பண்பாட்டின் தலைநாட் காலத்தே தோன்றிய தொல்காப்பியத்தின் மூன்றாவது
அதிகாரமாகிய இலக்கணப் புதுமையான, பொருளதிகாரம் இலக்கியத்
திறனாய்வாக அமைந்து இலக்கியப் பாடுபொருள், வகைமை, வடிவம், உணர்ச்சிகள்,
மரபுகள் போன்றவற்றை எடுத்துரைக்கின்றது. அகத்தையும் புறத்தையும்
தொல்காப்பியர் ஏழு ஏழு திணைகளாகப் பாகுபடுத்தியுள்ளார். பாடுபொருள்
அடிப்படையில் குறிக்கோள் சார்ந்த காமவியல் பாடல்களை அகம் என்றும் பிற
எல்லாவற்றையும் புறம் என்றும் அடையாளப்படுத்தியுள்ளார். இங்குப்
பயின்றுவரும் அகம், புறம், திணை, துறை, கைகோள், களவு, கற்பு, அறத்தொடு
நிற்றல், உடன்போக்கு, உள்ளுறை, இறைச்சி போன்ற கலைச்சொற்கள் \ துறைச்
சொற்கள் மற்றும் கதைமாந்தர் பெயர்கள் பொருளாழமும் நுட்பமும் மிக்கவை.
சான்றாக, களவு = காதல் வாழ்க்கை; கற்பு= இல்லற வாழ்க்கை;
இறைச்சி= குறிப்புப் பொருள்; அறத்தொடு நிற்றல்= தலைமக்களின்
காதலை முறைப்படி வெளிப்படுத்துதல் முதலிய பதிவுகளைக் கூறலாம்.
மேலும் அக இலக்கியக் கொள்கைப்படியே அகப் பாடல்களுக்குப் பொருள்
காணவேண்டும்; இல்லையெனில் பொருட்குழப்பம் ஏற்பட்டுவிடும். சான்றாகக்
குறுந்தொகையின் (பா 2) இறையனார் பாடலின் அடிக்கருத்தைப் பொருண்மையியல்
அடிப்படையில் அணுகினால், அது சுட்டுவது பெண்ணின் கூந்தலுக்கு
மணமுண்டா? என்னும் விவாதத்தையல்ல; இயற்கைப் புணர்ச்சியால் கிடைத்த
மனநிறைவையே என்பது தெளிவாகும். இவ்வாறே கலித்தாழிசை ஒரு கருத்தைப்
பல கோணங்களில் எடுத்துரைக்கும்\ வலியுறுத்தும் பாங்கினது
என்பதையறியலாம். பொருண்மையியல் அடிப்படையிலான பொருளதிகார ஆய்வால் இலக்கண
இலக்கியப் புரிதிறன் மேம்படுவதோடு தமிழ் இலக்கியப் பொருண்மை வளமும்
வெளியாகும். யாப்பு, அணி, பாட்டியல் ஆகிய நூல்களிலும் பொருண்மைச்
செய்திகள் புதைந்துகிடக்கின்றன.
சான்றாக, தண்டி கூறும் “பாவிகம் என்பது காப்பியப் பண்பே”
( நூ. 91 ) என்னும் நூற்பாவும் இதன் உரை விளக்கமும் சிறப்பாகக்
கருதத்தக்கன. அணியிலக்கணச் செய்திகளான பின்வருநிலையணி, ஒட்டணி, இரட்டுற
மொழிதல் போன்றனவும் பாட்டியல் கூறும் இலக்கிய வகைமைச் செய்திகளும் உரை
விளக்கங்களும் தமிழ்ப் பொருண்மைக் கொள்கைகளாகும். இவற்றால்
தமிழ்ப் பொருண்மை வளம் புலனாகின்றது. திருக்குறள், கம்பராமாயணம் போன்ற
தமிழ் இலக்கியங்களிலும் பொருண்மைச் செய்திகள் சில காணப்படுகின்றன. எனவே
மற்ற இலக்கணப் பெருமைகள் போலவே நிறைவான
பொருண்மை வளமும்
(பழந்)தமிழரின் அறிவுத் திறத்திற்கும் தமிழுக்கும் கூடுதல் புகழ்
சேர்ப்பதோடு, உலகளாவிய நிலையில் பொருண்மையியல் கொள்கைகளை மேலும்
நிறைவாக்கவும் பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது.
குறிப்புகள்
1.
ச.வே. சுப்பிரமணியன், “ தொல்காப்பியத்தில் பெயர் வகைப்பாகுபாடு”,
தொல்காப்பிய இலக்கண மொழியியல் கோட்பாடுகள்,
ப. 124.
2. தமிழண்ணல்(உரை.), தொல்காப்பியம் எழுத்ததிகாரம், ப. 09.
3. தொல்காப்பியம், மொழி மரபு, நூற்பா 45.
4. மேற்படி, நூன் மரபு, நூற்பாக்கள் 31,32.
5. மேற்படி, புணரியல், நூற்பா 112.
6. மேற்படி, நூற்பாக்கள் 141, 142.
7. மேற்படி, உருபியல், நூற்பாக்கள் 179,187.
8. பாலசுப்பிரமணியம், க., “ தொல்காப்பியரின் பொருண்மையியல் கோட்பாடு”
தொல்காப்பிய இலக்கண மொழியியல் கோட்பாடுகள்,
பக். 186- 199.
துணைநூற் பட்டியல்
1. கொழந்தசாமி,ப., திருக்குறள் உரைகள் காட்டும் பொருள்நெறி,
சென்னை; பாரதி புத்தகாலயம், 2002.
2. சிவலிங்கனார்,ஆ.,( பதிப்.), தொல்காப்பியம் உரைவளம்
கிளவியாக்கம்,
சென்னை;
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1982.
3. சுப்பிரமணிய தேசிகர், (உரை.), தண்டியலங்காரம், சென்னை; கழகம்,
1956, 5ஆம் பதிப்பு.
4. தமிழண்ணல்(உரை.), தொல்காப்பிய எழுத்ததிகாரம், சென்னை;மணிவாசகர்
பதிப்பகம், 2009, 5ஆம் பதிப்பு.
5. ஜீன் லாறன்ஸ்,செ., ( பதிப்.), தொல்காப்பிய இலக்கண மொழியியல்
கோட்பாடுகள்,
----------------------------------- நிறைவு
------------------------------------------------
|