காட்சிப்படிமம் - அன்றும் இன்றும்

 

முனைவர் மணி.கணேசன              

 

 

பல்வேறு இயற்கைப் படிமங்கள்,வாழ்வியல் செய்திகள் ஆகியவற்றின் களஞ்சியங்களாகச் சங்க இலக்கியம் காணப்படுகிறது.பண்டைத் தமிழர் வாழ்வின் காலக் கண்ணாடியாகவும் இது திகழ்கிறது.இவ்விலக்கியங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு சொல்லாட்சிகள்,சொற்றொடர்கள்,உவமைகள்,கருத்துகள் போன்றன அடிபிறழாமல் அவ்வக்கால இலக்கியங்களிலும் அதன் பிறகு உருவான இலக்கியங்களிலும் கையாளப்படுவதென்பது உலக வழக்காக உள்ளது.படைப்பாளிகளின் சிந்தனைகள் நாடு,மொழி,இனம் போன்றவை கடந்து சிலவிடங்களில் ஒத்துள்ளன.இது அதிசயிக்கத் தக்கது.

 

மேலும்,இவற்றை ஒப்பியல் நோக்கில் ஆராயும்போது எண்ணற்ற புதிய செய்திகள் பலவற்றை நாம் அறியமுடியும்.இது தவிர,ஓர் இலக்கியத்தின் தாக்கம் காரணமாகவும் புதியதோர் இலக்கியம் தோன்றுகின்றது.எப்படியிருப்பினும் இலக்கியத்தின் உயரிய குறிக்கோள்களாக விளங்கும் அழகியல் இன்பம்,அறநெறிகள்,மொழியியல் கூறுகள் முதலானவை நல்ல இலக்கியங்களின் அடிப்படைப் பண்புகளாக உள்ளன.அதுபோல்,சங்க இலக்கியம் நவீனத்துவக்கூறுகள் பலவற்றை உள்ளடக்கியதாக இருக்கின்றது.

 

தற்காலத்தில் பரவலாகப் பேசப்பட்டுவரும் படைப்பிலக்கியத்தின் நவீன உத்திகளான படிமம்,குறியீடு ஆகியவை மேலைநாட்டார் கொள்கைகள் என்று நவீனத் தமிழ்ச் சமுதாயத்தினரால் போற்றப்பட்டாலும் சங்ககாலத்தில் அவை உள்ளுறை உவமம்,இறைச்சியென பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.இதனை அறிந்துகொள்ளுதல் காலத்தின் கடமையாகும்.அதுபோல்,படிமம் எனும் சொல்லாட்சி,
 

அருஞ்சமம் கடந்து படிமம் வவ்விய(அகம்:149:12)

 

 

என்பதில் கையாளப்பட்டுள்ளது எண்ணத்தக்கது.காட்சியின்பத்தைப் புலன்களுள் உண்டாக்கவல்ல ஒப்புவமையே படிமம் என்பதாகும்.இருவேறு காட்சிகளை ஒப்பிட்டுப் புலக்காட்சியினைத் தோற்றுவிக்கும் படிமத்தைக் காட்சிப் படிமம் என்கிறோம்.இக்காட்சிப் படிமம் சங்க இலக்கியத்தில் விரவிக் காணப்பட்டாலும்,அதன் காட்சித் தொடர்ச்சி அண்மைக்காலக் கவிதைகளிலும் பொருண்மை மாறாமல் எழுதப்பட்டு வருவது வியப்பைத் தருவதாக உள்ளது.

 

சான்றாக,பெரிய கையினையும் பிளந்த வாயினையும் கொண்ட ஆண் கரடியொன்று, இருளைத் துணித்து வைத்தாற்போல் கருமயிரடர்ந்த குட்டியுடனும் திறங்கிய முலையினையுடைய தன் பெண் கரடியுடனும் கூடி மகிழ்ந்திருப்பதாகப் பின்வரும் அகநானூற்றுப் பாடலில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

 

இருள் துணிந்தன்ன குவவுமயிர்க் குருளை(அகம்:201:17)

 

அடர்த்திமிக்க கருமைநிறத்துடன் காணப்படும் குட்டிக்கரடியின் தோற்றத்தை இருளோடு ஒப்புமைச் செய்யப்பட்ட இச்சங்ககாலக் காட்சிப்படிமமானது,தற்கால நவீனக் கவிஞர் ஒருவரின் ஒத்த சிந்தனைப் போக்குடன் ஒத்திருப்பதையும் புதுமைநோக்கில் அது காட்சிப்படுத்தப்படும் விதத்தையும் இப்போது காண்போம்.

 

இருட்டைப் பிழிந்து வைத்திருந்தாற்போல்
படுத்துக் கிடந்தது

ஆடு.

 

இங்கு இருட்டுடன் கரியநிற ஆடானது ஒப்பிடப்பட்டுள்ளது.இவ்விரு கவிதைகளிலும் இருளும் இருளையொத்த விலங்குகளும் ஒப்புமைப்படுத்தப்பட்டுக் காட்சிப் படிமங்களாக்கப்பட்டுள்ளன.இருவேறு காட்சிகள் ஒத்தப் பண்பு காரணமாகக் காட்சி உவமைப்படுத்தப்பட்ட உத்தியால் படிப்போர் மனத்தில் நீங்கா இடம்பிடித்து விடுகிறது.இதுபோன்ற தழுவலும் போலச் செய்தலும் இலக்கியத்தில் தவிர்க்க இயலாதவையாகும்.இவைதாம்,இலக்கியத்தில் எளிதில் புரிந்துக்கொள்ள இயலாதக் கடினத் தன்மையினைக் களைந்து கவிதையிலக்கியத்தின்மீது எல்லோருக்கும் நல்ல புரிதலை ஏற்படுத்தி அவ்விலக்கியத்தை மக்கள் மத்தியில் பரவலாக்கப்படுத்துகின்றன.அந்த வகையில் மேற்சுட்டப்பெற்ற கவிதைகள் இலக்கியத்தின்மீது தணியாக் காதல் கொண்டோருக்கு நல்விருந்தளித்துள்ளன எனலாம்.

 

 

முனைவர் மணி.கணேசன்,

11-2,ராஜிவ்காந்தி நகர்,

மன்னார்குடி-614001,

செல்பேசி:9442965431.

 

maniganesanmaha@gmail.com